Friday, August 28, 2009

நாரணன்

ஒருமுறை நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் ”நாரணன்” என்ற சொல்லின் சொற்பிறப்பு பற்றிக் கேட்டிருந்தார். உடனடியாக அவருக்கு மறுமொழிக்க இயலாது போனது. வேறொரு நண்பர் கேட்டுக் கொண்ட வேலையில் சில நாட்கள் ஆழ்ந்து போனதாலும், என் “பழந்தமிழர் நீட்டளவை”த் தொடரை முடிக்கும் முயற்சிகளில் இருந்ததாலும், 108 திருப்பதிகளைக் காணும் விழைவின் பகுதியாய் மலைநாட்டு 13 பதிகளைக் காண ஒருவாரம் சேரலம் சென்றதிலும் காலம் கழிந்து போயிற்று. பின்னால் செய்திகளைச் சேகரித்து வந்தேன்.
---------------------------

வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரணப் பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

என்ற நாச்சியார் திருமொழி. 6.1 ஆம் பாடலைக் கண்டு மயங்காதார் மிகக் குறைவு. அதே பொழுது, ”வாரணம்” என்ற சொல்லை ஒழுங்காய்ப் புரிந்து கொண்டவரும் மிகக் குறைவு. ”யானை, பன்றி, தடை, மறைப்பு, கவசம், சட்டை, காப்பு, கேடகம், நீங்குகை, உன்மத்தம், கோழி, உறையூர்” போன்று அகராதியிற் சொல்லியிருக்கும் எந்தப் பொருளும் இங்கு சரிவராது. ”வரி வரியாய்க் கிளர்ந்தெழும் வரிச்சங்கை இங்கு முன்னே கொண்டுவந்து பொருள் சொன்னால் தான் சரிவரும். நம் அகரமுதலிகள் ”சங்கத்தையும்” வாரணத்திற்குப் பொருளாய்ச் சொல்லுகின்றன. ஆனாலும் தென்பாண்டித் தமிழ்மரபு, பழக்கவழக்கம் தெரியாதோர், சங்கென்ற பொருளுக்குச் சட்டென வரவும் மாட்டார்.

பாட்டு, மாப்பிள்ளை அழைப்பு பற்றிச் சொல்கிறது. நாரண நம்பி மெதுவாய் அசைந்து மணமண்டபம் நோக்கி நடந்து வருகிறான். தென்பாண்டி நாட்டில், இந்த அழைப்பில் சங்கு முழங்கி ஊரைக் கூட்டி, சுற்றம் சூழ, எல்லோரும் போய், மாப்பிள்ளையை அம்பலத்தில் இருந்து மண்டபத்திற்கு அழைத்து வருவார். இன்றுங்கூடச் சங்கொலியில்லாமல் எங்களூர்ப் பக்கம் மாப்பிள்ளை அழைக்கும் மரபில்லை. மாப்பிள்ளை மணமண்டபத்திற்கு வரும்போது, ஆங்காங்கு சங்கொலி கேட்கவேண்டும். அதைக்கேட்டு, அவர் வரும் பாதையின் முக்கு, முனங்குகளில் ஊர்மக்கள், குறிப்பாகப் பெண் மக்கள், திரண்டுவந்து மாப்பிள்ளை பார்க்கக் கூடுவர். அந்த இடங்களில் தோரணமும் கட்டப்பட்டிருக்கும். பெண்மக்கள் பூரண கும்ப ”மரியாதை” [கும்பம் + தேங்காய், பனம்பாளை அல்லது தென்னம் பாளை] செய்வதும், ஆலத்தி எடுப்பதும் [குங்கும நிறத்தில் ஆலத்தி கரைத்து வைத்திருப்பதும் ஒரு கலை.] ஆங்காங்கு இருக்கும் முறை. [இன்றைக்குத் தென்பாண்டியில் தேர்தலுக்கு வரும் தலைவருக்கெல்லாம் பூரண கும்பமும், ஆலத்தியும் சங்கொலியோடு சக்கை போடுகிறது.]

”நம்மூர்ப் பெண்ணுக்கு இவன் ஏற்றவனா?” என்று தெரிய வேண்டாமா? பெண்வீட்டுக்காரரும் ஊராரிடம், “பார்த்துக்குங்கப்பா, எங்க வீட்டு மாப்பிள்ளை இவர்தான், எங்கபெண்ணு நல்ல இடத்துலே தான் வாக்கப் படுறா!” என்று சொல்லாமற் சொல்ல வேண்டாமா? அதற்கு ஒரேவழி இந்தச் சங்கொலி தான். நாகசுரம், மேளம் - அது இதெல்லாம் அப்புறம் வந்தது. முதலில் அறதப் பழங்காலத்திற் சங்கே பயன்பட்டது. [இக்காலத்தில் band - உம், வேட்டும் கூடச் சில இடங்களிற் சேர்ந்து கொள்கிறது.] சங்கொலி மங்கலமானது என்ற நம்பிக்கை தென்பாண்டி நாட்டில் மிகுதியாய் உண்டு. சங்கும் முத்தும் குளித்தெடுத்தவர் சங்கொலியைப் பெரிதாய்க் கருதத் தானே செய்வார்? எத்தனை முறை வெண்சங்கம் நாலாயிரப் பனுவலில் பேசப்படுகிறது? இங்கே ஆயிரம் சங்கொலி சூழ, மாப்பிள்ளை எழில்நடை போட்டு நடந்து வருகிறாராம்.(”நம்ம பொண்ணுக்கு இருக்குற ஆசையைப் பார்த்தீங்களா? ஒரு சங்கொலி இவளுக்குப் பத்தாதாம், ஆயிரஞ் சங்கு சுற்றி வந்தாப்புலெ ஒலிக்க, இவ ஆளு ”ராசா” கணக்கா நடந்து வரோணுமாம்.”) அப்படி வருபவரை வீதி நெடுகிலும் தோரணங் கட்டி, பூரணப் பொற்குடம் வைத்து பெண்மக்கள் எதிர்கொள்வதாய்க் கனாக் காண்கிறாளாம். ஆகத் தென்பாண்டிப் பெண் அவளுக்குத் தெரிந்தமாதிரிக் கனவு காண்கிறாள். வட்டாரப் பண்பாடு இப்பாட்டில் தூக்கிநிற்கிறது. இதை உணராமல், வெறும் எந்திரத்தனமாக, பல உரைகளில் ”ஆயிரம் யானைகள் சூழவந்தன” என்று சொன்னதையே கூறிக்கொண்டு இருக்கிறார். ”மாப்பிள்ளை அழைப்பின் போது எந்த ஊரில், யானையைக் கொண்டு வருகிறார்?” என்று நானும் ஓர்ந்து பார்க்கிறேன். கொஞ்சமும் தெரியவில்லை. அப்புறம் என்ன முறையிலாக் கற்பனை? அதே பொழுது, சங்கொலி இல்லாமல் மாப்பிள்ளை அழைப்பு இன்றும் தென்பாண்டிநாட்டில் இல்லை.

”வாரணம்” என்ற ஒரு சொல்லுக்கே இப்படிப் பல உரைகாரர் தடுமாறும் வேளையில், ”நாரண நம்பி” என்ற கூட்டுச்சொல்லுக்கு என்செய்வது? நாரணன் என்றசொல்லை 3 வகையில் அலசலாம். இதில் எது சரியென்று சொல்ல இதுவரை கிடைத்த தரவுகள் குறைவு தான். [நான் ஆன்மீகத் தரவுகளைச் சொல்லவில்லை. ஆன்மீக விளக்கங்கள் கால காலத்திற்கும் வந்து கொண்டே இருக்கும். அவை நம்பிக்கையின் பால் வருபவை.] இற்றை நிலையில் “இதுவே சொற்பிறப்பு வழி” என்று அழுத்தந் திருத்தமாய்ச் சொல்ல முடியவில்லை. ஆய்வுகள் தொடரவேண்டும். மேற்சொன்ன 3 வகைகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

1. நரனானவன் நாரணன். ஒலியெழுப்பைக் குறிக்கும் நரலெனும் வினை, தமிழ்ச்சொல்லே. நாரயணனெனும் வடசொல் இதில் பிறந்திருக்கலாம். ஆகுதல்/ஆயுதல் வழி ஆயுதல்> ஆயன் என்ற பெயர்ச்சொல் பிறக்கும். இனி, நார ஆயன் = நாராயன்>நாராயண் என்று ஆகும். வடமொழிக்குப் போன சொற்களை மீண்டும் தமிழ் திருப்பி வாங்கும் போது இன்னொரு விகுதி சேர்ப்பது நடந்துள்ளது. பெருமான்>பெருமன்>ப்ரம்மன்>ப்ராம்மன்> ப்ராம்மண்>ப்ராம்மணன் என்பது போல், நாராயன்> நாராயண்> நாராயணன் ஆகும். இதுபற்றி 9 ஆண்டுகளுக்கு முன் 2000 ஆண்டில் ஆகத்து மாதம் 24 ஆம் தேதி, அகத்தியர் குழுமத்தில் “நாரி” என்ற சொல்லைப் பற்றிக் கீழுள்ளது போல் எழுதினேன்.

----------------------------
From poo@... Thu Aug 24 06:36:13 2000
To: agathiyar@egroups.com
Subject: Re: [agathiyar] Re: was (family portal need your help) Naari

At 04:52 AM 8/24/00 +0000, you wrote:
>வாசன்,
>
>நாரி என்பது இந்திய மொழியைச் சேர்ந்ததுதான் (அது என்ன "இந்திய மொழி" என்று என்னிடம் கேட்காதீர்கள்)

வேர் மட்டும் தமிழ்; விளைவு பாகத மொழிகள் எல்லாவற்றிலுமே இருக்கிறது.

நரலுதல் - ஒலி எழுப்புதல்
நரல்வது - ஒலியெழுப்புவது. (நர நர எனப் பல்லைக் கடித்தான்)
நரலை - ஒலி; ஒலி எழுப்பும் கடல்
நரற்றுதல் - ஒலி எழுப்புதல்
நருமுதல் - பல்லால் கடித்தல்
நாராசம் - கேட்க முடியாத கொடுமையான ஒலி
நரி - ஒரு விதமாக ஊளை (ஒலி)யிடும் விலங்கு
நரலும் குரங்கு அதாவது 'நரன்' - மனிதன்
நரசிங்கன் - மனிதனும் சிங்கமும் சேர்ந்த தோற்றம் உள்ளவன்
நாரணன் - மனிதனாய் தோற்றரவு (அவதாரம்) எடுத்த திருமால் (நரன் ஆனவன் நாரணன்); இதை வடமொழியில் நீட்டி நாராயணன் என்றும் சொல்லுவதுண்டு.
நாரணி - நாரணனின் தங்கை
நாரி/நாரிகை - மனிதனின் பெண்பால் (சொல் அமைப்பு பாகத மொழிகளின் அமைப்பின் படி இருக்கிறது) இப்படிப் பட்ட சொற்கள் எல்லாம் அடிப்படையில் தமிழாய் இருந்து வடமொழிப் படி வழக்கிற்கு வந்தவை.
நாரதன் - இசை எழுப்புவன் (தொன்மங்களில் வரும் நாரதர் மட்டுமல்ல; சங்க இலக்கியங்களில் இசைக்கருவிகளோடு வரும் பாணர்களுக்கான வடமொழிப் பதமும் கூட)
நரம்பு - வில்லில் கட்டிய, ஓசை எழுப்பும், நாண்
நார் - ஒலி எழுப்பும் நாண்; (இதிலிருந்து எல்லாவித இயற்கை, செயற்கையான கயிற்றிழைகளுக்கு எல்லாம் பயன்படத் தொடங்கியது)
நருமதை - ஓவென்று பேரிரைச்சல் போட்டுக் கொண்டு வேகமாக ஓடும் ஆறு. இதை மட்டுமே பண்டைக் காலத்தில் ஆண்யாறு என்று சொல்வதுண்டு. இதன் வேகமும், நீரின் அளவும் அவ்வளவு பெரியதாம்.

இப்படி 'நர' என்னும் அடியை ஒட்டிய பல சொற்கள் தமிழில் இருக்கின்றன.
எல்லாவற்றையும் வட மொழிக்கண் கொண்டே பார்த்தால் எப்படி?

அன்புடன்,
இராம.கி.
----------------------

மேலே சொன்னது போல், எல்லா இடத்தும் நாரணனை ”நரன் ஆனவன்” என்று சொல்லமுடியாது. ஏனெனில் ஆண்டாளே தன் நாச்சியார் திருமொழி 2.1 இல், “நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே” என்றுசொல்லி நாராயணன், நரன் என்ற பெயர்களை அடுத்தடுத்து இட்டு நாராயணனுக்கு இன்னொரு பொருள் தேடுவதை உணர்த்தியிருப்பாள். ஆனாலும் சிலர் ”நரன் ஆனவன் நாரணன்” என்பதை வலிந்து ஏற்படுத்திக் கொண்டு,

“வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும் பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடு உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

என்ற பெரிய திருமொழியில் நாராயண மந்திரத்திற்கு, “நாரங்களுக்கு அயனமாய் இருப்பவன், நாரங்களை தனக்கு இருப்பிடமாய்க் கொண்டவன். நாரம் = ஜீவான்மாவின் கூட்டம்” என்று ஆன்மீக விளக்கஞ் சொல்வார். [நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - மூலமும் விளக்கவுரையும் மூன்றாம் தொகுதி 948 ஆம் பாட்டு, பக் 1304. டாக்டர் இரா.வ. கமலக் கண்ணன், வர்த்தமானன் பதிப்பகம். பல்வேறு உரைகாரரும் இதுபோலச் சொல்லி யிருக்கிறார்.] ஜீவான்மா என்ற பொருள்நீட்சி எப்படி ஏற்பட்டது? - என்று நமக்கு விளங்க வில்லை. தமிழ், சங்கதம் இரண்டிலும் நரன் என்பது மாந்தனைக் குறிக்கிறதே அன்றி, உய்வு (=ஜீவ) ஆன்மாவைக் குறிப்பதாய் எந்த அகரமுதலியிலும் கண்டதில்லை. குட்டிக்கரணம் போட்டாலும், பொருளைச் சவ்வாய் இழுத்தாலும், நாரம் என்பது உய்வான்மாவைக் குறிக்குமோ? அறியேன். [நரன் ஆன்மா உய்வான்மாவாய் இருக்கலாம். ஆனால் எல்லா உய்வான்மாவும் நரன் ஆன்மாவோ? அன்றி, நரன் தவிர்த்த பிற பிறப்புக்களுக்கு உய்வான்மாவே கிடையாதா? இது ஏரணப்பிழை அல்லவா? விண்ணவப் புரிதலின்படியும் இது தவறல்லவா? இப்படிச் சில ஆன்மீக விளக்கங்கள் நாம் எண்ணுவதையும் மீறும்போது, கைவிரிப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.]

2. இரண்டாம் முறையில் நாளன்>நாரன்>நாரனன்>நாரணன் என்று கருமையைக் கரணியம் காட்டிப் பொருள் சொல்வர். நண்பர் நாக.கணேசன் பல இடங்களிலும் இதுபோல் சொல்லியுள்ளார். [அவர் பெயரையும் நாள் நாரணன் என்பதையும் சேர்த்துக் கூகுளில் இழுத்துப் பார்த்தால், அவர் கூறியது கிட்டும். நல்>நள்>நாள் = இரவு, கருமை என்ற பொருள்களுண்டு. திருமாலின் பல பெயர்கள் கருமைநிறங் குறித்துவருவதால் இதையும் அப்படியே சொல்வார்.]

3. இந்த விளக்கம் நீரை அடிப்படையாக்கிச் சொல்லுவது. இவ்விளக்கமும் கருமைக் கருத்தில் உருவானதே. நீர் பற்றிய பல தமிழ்ச்சொற்களும் கருமையில் எழுந்தவை. யா எனும் கருமைக் கருத்து வேர்பற்றி சொல்லாய்வு அறிஞர் ப. அருளி ஒரு பொத்தகமே போட்டுள்ளார். [யா - விற்குப் பொருந்தற் கருத்தும், வினவற் கருத்தும் உண்டு. அந்த கருத்தெழுச்சிகளை நாம் இங்கு பார்க்காது, கருமைக் கருத்தை மட்டுமே பார்க்கிறோம்.]

அருளியாரின் ஆய்வு பலரும் படிக்கவேண்டியது. யா>ஞா>நா என்ற திரிவைப் பற்றியும் அதிற் பேசியிருப்பார். ”யா”வை நம்மில் சிலர் மூக்கொலி சேர்த்து ஞாகாரம், நாகாரமாய்ப் பலுக்குவர். [அத்திரிவை மொழியியல் அறிஞரின் கவனத்திற்கு முதலிற் கொண்டு வந்ததும் திரு.ப. அருளி தான்.] ஒரே சொற்பொருளில் யா, ஞா, நா என மூவரிசைச் சொற்களும், சிலவற்றில் இரு வரிசைகளும், சிலவற்றில் ஒருவரிசை மட்டும் பொதுவாய்ப் புழக்கத்தில் உள்ள இற்றைத் தமிழோடும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய தமிழிய மொழிகளையும், தமிழ்வட்டார வழக்குகளையும் பார்ப்பது நுணுகிய சொல்லுறவுகளைக் காட்டும். [காட்டு: நல் எனும் சொல்லடி இன்றும் தெலுங்கில் கருமையை உணர்த்தும். எரியும் விளக்கை ”நல்லா வை” என்று சிவகங்கைப் பக்கம் சொன்னால், ”விளக்கை அணை” என்று மங்கலமாய்ச் சொல்வதாகும். அதாவது “விளக்கைக் கருப்பாக்கு” என்று பொருள்.]

யா (=ஆச்சா மரம்), சாலம் (=யா), யானை, யாடு, யானம்>ஏனம், ஏனல், யாமம், நாள், நாம், யாந்தை>ஆந்தை, நாகம், நாவல், யாம்பு>ஆம்பி, யாம் = நீர், நீர், யாலம்>ஆலம் = நீர், யாம்>ஆம் = நீர், யாறு, நானம், யாமன்.யமன், யாயம்>ஆயம் = முகில், மறைவு, கமுக்கம், யாணம்> சாணம் ..... இப்படிப் பல சொற்களை அருளி அப்பொத்தகத்தில் காட்டுவார். அவர் பொத்தகத்தில் இருந்து இதற்கு முன்னும் பல செய்திகளை நான் என் முந்தையக் கட்டுரைகளில் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.]

ஆழநீர் கருப்பாய்த் தோற்றமளிக்கும். கடலில் 4,5 மீட்டர்கள் கீழே போனால், கதிரவன் ஒளிபுகாது இருள் சூழும். ஆழம்கூடிய பேராறு கருமைப் பொருளால் கங்கை யென்றாகும். [கல்ங்கை>கங்கை. இந்திய ஆற்றுப் பெயர் பலவும் தமிழ் மூலம் காட்டும். இதைச் சொன்னால் “ஓ, தமிழ்வெறியன்” என்று பலர் உரைக்கக் கூடும் :-). காலம் கெட்டுக்கிடக்கிறது. தமிழ் எழுந்துவிடக் கூடாது என்பதில் பலரும் கவனமாய் உள்ளார். தமிழர் தாம் விழிக்காது சோம்பல் உற்று உள்ளார். ] மெதுவாய்ப் போகும் ஆற்றில் பாசி, காளான், புதர் ஆகியவை ஆற்றுப்படுகையில் மண்டுவதால், இந்த ஆறு கருந்தோற்றம் காட்டிப் பெயர் கொள்ளும். கருநபெருநை> கண்ணபெருநை> க்ருஷ்ண பெண்ணை>  க்ருஷ்ணா என்ற பெயர் இப்படி எழுந்ததே. [எல்லா ஆற்றுப் பெயரும் கருமை அடித்தளம் கொண்டவையல்ல. கருமைக்கு மேலாக வேறு நிறங்களில் விளைந்தவை வெள்ளாறு - வெள்குவதி - வேகவதி> வேகை> வைகை, (இன்னும் 2 வெள்ளாறுகளும், காஞ்சிக்கு அருகில் இன்னொரு வெள்கவதி> வேகவதியும் உண்டு.), சுள்ளியம் பேராறு - silver river - பெரியாறு, செம்பாறு - copper river - தாம்ப பெருநை, பொன்னாறு - gold river - பொன்னி ஆகியவை யாகும். பல்வண்ண ஆற்றுப்பெயர்கள் தெற்கே மட்டுமின்றி வடக்கிலும் உண்டு. அவற்றை அலசினால் தமிழின வரலாற்று மூலம் கிட்டும்.]

அதேபொழுது, யா>யார்>யாரு>யாறு>ஆறு எனும் பொதுச்சொல் கருமையில் எழுந்ததே. ஒரே தடத்தில் போவதால் தடம், வழி, நெறி என்ற வழிநிலைப் பொருள்கள் யாறு என்ற சொல்லுக்குப் பின்னால் எழுந்தன. ஆனாலும் முதல்நிலைப் பொருள் கருமையே. பின் எப்படி வெள்ளாறு போன்ற வண்ண ஆற்றுப் பெயர்கள் எழுந்தன என்று கேட்டால், கடலை எண்ணெய் போலத்தான் சொல்ல வேண்டியுள்ளது. எப்படி எள்ளில் இருந்து எள்நெய் தோன்றி அதன் விதப்புப் பொருள் மறைந்து எண்ணெய் எனும் பொதுமை ஏற்பட்டதோ, அதேபோல யாற்றின் விதப்பான கருமை அழிந்து ”நீரோட்டம்” எனும் பொதுமை மிஞ்சியது. பின்னால் வெள்ளை, வெள்ளி, செம்பு, பொன் எனும் நிறங்கள் ஆறுகளுக்குப் பெயரடைகளாய் மாறின. ஆனாலும் யார்>ஆர்>ஆறு என்பது நீர்ப்பொதுமையே குறித்தது. இது யார்>ஆர்>ஆல் என மேலும் திரிந்து நீரைக் குறிக்கும். யா>யால்> யாலம்>ஆலம் என்ற வளர்ச்சியும் பெறும்.

வெப்பநாடான நம்மூரில் காலங்கெட்டு திடீரென்று, வானத்தின் தலைகீழ் மாற்றத்தால் ஆலங்கட்டி மழை பொழிவதைப் பார்த்திருக்கிறீரா? அது என்ன ஆலங்கட்டி? வேறு ஒன்றுமில்லை நீர்க்கட்டி/பனிக்கட்டி இதை hailstone என்று ஆங்கிலத்திற் சொல்வார். [க.து. ஆலிகல், ம. ஆலிப்பழம், குட.ஆலிகய், பட ஆனிகல்லு. க. ஆலி, ஆணி, ஆரி, பட. ஆனிகல்லு; கோத. அரகசு; தெ.குரு. மால், குட ஆலி; து ஆலிகல்லு, குவி, ஆஜி, பர் ஏதிர், ஏயிர் - ஆகத் தமிழிய மொழிகளில் எல்லாம் பரவலாய் உள்ள சொல்.] சிறு சிறு கற்களைப்போல வானத்தில் இருந்து நீர்க்கட்டி மழை கொட்டுகிறது. விழுந்த வேகத்தில் தரைச் சூட்டில் ஆல் [ஆலம், ஆலங்கட்டி, ஆலி] உருகிக் கரைந்து போகிறது. [ஆலித் தண் மழை - ஐங்குறுநூறு 437; ஆலஞ்சேர் கழனி தேவா.2.81.7 என்ற காட்டுக்களை இங்கு ஓர்ந்து பாருங்கள்.] ஆகப் ice/பனிக்கட்டியைத் தெரியக் குளிர்நாட்டில் வாழத் தேவையில்லை. வெப்ப நாடாயினும் தெரிந்து வைத்து, இலக்கியத்தில் நாம் பதிந்திருக்கிறோம். ஆல், ஆலம், ஆலி என்ற சொற்கள் குளிர்நீரையும், பனிக்கட்டியையும் குறித்தவையே. ஆலம் பால் என்ற சொல்லும் ஆலங்கட்டி நீரைக் குறிக்கும். ஆலு என்ற சொல் நீர்க்குடத்தைக் குறிக்கும். ஆலிஞ்சரம் என்பது நீர்ச்சாடியைக் குறிக்கும்.

ஆலம் என்பதன் திரிவாய் ஆயம்/அயம் என்பதும் தமிழில் நீரைக் குறிக்கும். [அயம் திகழ் சிலம்பு - ஐங்குறுநூறு 264.2] O.E. is "ice," from P.Gmc. *isa- (cf. O.N. iss, O.Fris. is, Du. ijs, Ger. Eis), with no certain cognates beyond Gmc. ஆலி என்பது ice-யைக் குறிக்கச் சங்க நூலில் பயன்பட்ட சொல். இன்றோ எல்லாவற்றிற்கும் பனி என்பதையே வைத்து dew, ice இவற்றிற்கு வேறுபாடு காட்டத் தெரியாமற் சுற்றிவந்து இந்த்க் காலம் கிளித்தட்டு ஆடிக் கொண்டிருக்கிறோம். ஆலிக் குழைவு = ice cream. என்று நாம் சொல்லக் கூடாதா? பனிக் காற்றும் ஆலி மழையும் வெவ்வேறு ஆனவை. ஆலி எனும் சொல் இக்கால அறிவியற் சிந்தனையைத் தமிழில் துல்லியமாய் விளக்கப் பயன்படும் சொல். ஆலி என்ற சொல் மீண்டும் புழக்கத்திற்கு வந்தால் நல்லது. (இது ஏதோ இராம.கி. படைத்ததல்ல. அப்படி எண்ணாதீர்கள்.)

”ஆலம்” என்பதற்கு கடல் பொருளுண்டு. (ம.ஆலம்) மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீரை ஆலமென்பார். ஆல் ஆற்றுதல்> ஆலாற்றுதல்> ஆலாத்துதல் = மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீரை ஒரு தலைவரின் முன்வைத்து மேலும் கீழுமாய்ச் சுற்றும் தென்பாண்டி வழக்கம் சோழநாட்டிலும் இருந்தது. ஆலிப் பொருள் நீண்டு கள்ளையும் குறிக்கும். ”தேனும் ஆலியும் தீமிசைச் சிந்தியே” என்ற தொடர்- கந்தபு. அசுரயாக. 71 - இல் வரும். புறம் 298 இன் ஆசிரியர் பெயரை ஆவியாரென ஒரு பாடமும், ஆலியாரென இன்னொரு பாடமும் உள்ளதாய் ஔவை சு. துரைசாமியார் சொல்வார்.

எமக்கே கலங்கல் தருமே தானே
தேறல் உண்ணும் மன்னே நன்றும்
இன்னான் மன்ற வேந்தே இனியே
நேரார் எயில் முற்றி
வாய்மடித்து உரறி நீ முந்தென் னானே!

எனும் கரந்தைப்பாட்டு அது. கள்பற்றிப் பேசி அரசனுக்கும் போர்வீரனுக்கும் இடையே இருக்கும் அக்கறையைப் புலவர் இங்கு பேசுவார். ஒருவேளை ஆலியார் என்ற பாடம் கள்ளை வைத்துப் பாடியதால் எழுந்ததோ, என்னவோ?

யாலி>யாளி>ஞாளி>நாளி என்ற வளர்ச்சியிலும் கள் என்ற பொருள் யாழ் அகராதியில் சொல்லப்பெறும். கள் எனும் பொருளில் ”ஞாளி” எனும் சொல்லை பிங்கல நிகண்டு பதிவுசெய்யும். திசைகள் எனும் என் கட்டுரைத் தொடரின் 4 ஆம் பகுதியில் தென்னை பற்றிச் சொல்லியிருப்பேன். பனை நம்மூர் மரம். தென்னை தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இறக்குமதியான மரம். பனையில் பனங்கள் போலவே, தென்னையிலும் கள்ளிறக்க முடியும். பனங்கள் சற்று கடுக்கும்; தென்னங்கள் அவ்வளவு கடுக்காது. கடுப்பெலாம் வெறியக் காடி - acetic acid பண்ணும் வேலை. தெல் = கள் என்பதால், தெல்ங்கு மரம் தெங்கு மரமாயிற்று; தெல்நை, தென்னையாயிற்று. ”கள்மரம் எனும் குறிப்பே, தென்னை நம்மிடம் இயல்பாய் எழுந்ததல்ல; இறக்குமதியான மரம்” என்று உணர்த்திவிடும். தெல்லிற்கு மாற்றாய் நாளியைப் பயன்படுத்தி நாளிகேரம் என்ற சொல்லை மலையாளத்தில் பயிலும். கள்ளேறும் மரம் நாளிகேறம்>நாளிகேரம். இது நம் தேவாரத்திலும் பயின்றிருக்கிறது. “வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை” தேவா. 106.5. நாளிகேளம், நாரிகேளம் என்றெல்லாம் விதம் விதமாய் இச்சொல் பலுக்கப் படும். ஆலியெனுஞ் சொல் எப்படியெல்லாம் திரிந்திருக்கிறது என்று பாருங்கள்.

நாலாயிரப் பனுவலில் ஆலிலை, ஆல், ஆலி என்பதை ”ஏழுலகமும் தன்னுள் அடக்கி ஆலிலைமேற் படுத்த கதையாய்” உரைகாரர் சொல்வார். [ஆலிலைக் கதைபற்றிய காட்டுக்கள் நாலாயிரப்பனுவலில் பரந்தன. அவை சொல்லி மாளாது.] அப்படிக் கருப்புவெளுப்பாய்ப் பலவிடத்தும் சொல்லலாமெனினும்  எல்லாவிடத்தும் முடியாதென்பது என் துணிபு. அதோடு ஆலிலையே நீர்ப் பரப்பைக் குறிக்கும் உருவகமென்ற ஓர்மையும் உண்டு. ஏனெனில் உலகம் அழிந்த பின் ஆல இலை ஏது? அதோடு, பாற்கடல், பால்வழி மண்டலத்தைக் (milky way) குறிக்கும் குறியீடு எனில், ஆலி அப் பால்வழியைக் குறிக்காதோ? ஆகாச கங்கை கூட பால்வழியையே குறிப்பிடுகிறது என்பார். பாற்கடலை ஆலி என்பதும், பாற்கடலில் இறைவன் பள்ளிகொண்ட இடம் ஆலிநகர் என்பதும் இன்னொரு வகை உருவகமாகும்.

அடுத்து, திருமங்கையாழ்வார் பிறந்த ஊர் பழஞ்சோழநாட்டின் சிறுபிரிவான ஆலிநாட்டைச் சேர்ந்தது. அது என்ன ஆலி நாடு? வேறொன்றும் இல்லை தண் நீர் சூழ்ந்த புனல் நாடு. காவிரி கடலைச் சேர்வதற்கு 50, 60 அயிர மாத்திரி (கிலோ மீட்டர்) முன்னே அதில் கிளையாறுகள் தோன்றிவிடும். ”காவிரிச் சமவெளி” என்கிறாரே, அப்புலம் இக்கிளையாறுகளால் தோன்றியது. கிளை யாறுகளில் இருந்து கால்வாய் வெட்டி வயலுக்கு நீர் கொண்டு போயிருப்பார். சில இடங்களில் குளங்கள், ஏரிகள், புழைகள் இப்படிப் பல நீர்நிலைகள் மாந்த முயற்சியில் கூடிக்கிடக்கும் என்பதால் நீர்நாடாயிற்று. நீர்நாடு = ஆலிநாடு.

ஆலிக்கு கலப்பைப் பொருளுமுண்டு. அதைக் குறிக்கும் பெயர் திருநாங்கூர். (நாங்கின் இன்னொரு திரிவு நாஞ்சு>நாஞ்சில். குமரி மாவட்டத்திலுள்ள பெயர்.) திருமங்கையாரின் சொந்த ஊருக்கருகில் திருநாங்கூர் இருந்ததால், அதைச்சுற்றி அவர் பெரிதும் பாடியுள்ளார். திருவாலி/திருநகரியில் அருள் பாலிப்பவன் திருவாலியம்மான். அங்கவன் கோலம் வீற்றது திருக்கோலம். திருநகரி, திருமங்கையார் பிறந்தவூர். (நாங்கூருக்கருகில் திருவெள்ளக்குளம் திருமங்கையாரின் மனைவி குமுதவல்லி தோன்றிய ஊர்.) திருவாலிநாடர் என்றபெயரும் திருமங்கையார்க்குண்டு. ”அணியாலி, திருவாலி, தென்னாலி, வயலாலி, புனலாலி, எழிலாலி” என்றெலாம் விதம் விதமாய் வண்ணிப்பார். முன்சொன்ன பாற்கடலின் ஆலிநகரும், ஆலிநாட்டு ஆலிநகரும் பிணைந்து கிடக்கும் பாசுரங்கள் பலவுண்டு. காட்டாக ஒன்றைக் கீழே கொடுக்கிறேன்.

நீலத் தடவரை மாமணி நிகழக் கிடந்ததது போல்
வேலைத் தலைக்கிடந்தாய் அடியேன் மனத்திருந்தாய்
சோலைத் தலைக்கண மாமயில் நடமாட மழைமுகில் போன்றெழுந்து எங்கும்
ஆலைப்புகை கமழும் அணியாலியம்மானே! பெரிய திருமொழி 3.5.2

இங்கே முதலிரண்டு வரிகளில் பாற்கடலும், பின்னிரு வரிகளில் திருவாலியும் பேசப்பெறும். “ஆலின் மேலால் அமர்ந்தான்” என்ற தொடருக்குப் பொருளாய், திவ். திருவாய். 9.10.1 க்கான ஆல் = நீர் என்ற பொருளை ஈடு உரை சொல்லும். இன்னும் 2 பாட்டுக்கள் பெருமாள் திருமொழியில் வரும்.

“ஆலியா அழையா அரங்கா என்று
மாலெழுந்தொழிந்தேன் என்றன் மாலுக்கே - பெருமாள் திருமொழி..3.2

அது என்ன ஆலியா? ஆலியன் = கூத்தாடி என உரைகாரர் சொல்வார். ஆனால் எந்த அகரமுதலியிலும் அப் பொருளை நான் காணவில்லை. ஆனால் ஆலி = கடல் உண்டு. இது பாற்கடலோனைக் குறிக்கலாம். திருவாலியம்மானையும் குறிக்கலாம். இன்னொரு பெருமாள் திருமொழியில் ஆலிலையும் பேசப்பெற்று, ஆலிநகர்க்கு அதிபதியே எனப் பிரித்தும் பேசப் பெறும்.

ஆலினிலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியைக் கொன்று அரசு இளைய வாணத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ - பெரு.8.7.

மேலே இவ்வளவு ஆழமாய் ஆலி, ஆலத்தைப் பார்த்ததற்குக் கரணியம் உண்டு. ஏனெனில் ரகர/லகரப் போலியில் ஆலம் ஆரத்தையும் குறிக்கும். இனி யாரம்>ஞாரம்>நாரம் எனும் திரிவைப் பார்ப்போம்.

யார்>யாரு>யாறு>ஆறு, யார்>ஆர்>ஆரு>ஆறு என்ற விளக்கத்தில் நீரோட்டம் பற்றி முன்னே பார்த்தோம். யார்>யாரம் என்பது கூட இன்னொரு இயலுமை தான். யாரத்தின் யகரம் நீத்த ஒலிப்பு ஆரம் ஆகும். ஆரம் என்பது கண்ணிலிருந்து வீழும் நீர்த்துளி என்ற பொருள் அகர முதலிகளில் உண்டு. அடுத்து சிப்பிகளின் நீர்த்துளியாய்த் தொடங்கிச் சுண்ணாம்பு சேரச் சேர உருவாகும் முத்து, ஆரம் எனப்பெறும். ஆரம் எனும் முத்திற்கு நீர்த்துளித் தொடர்பு இருப்பதாகவே சொற்பிறப்பு அகரமுதலி சொல்லுகிறது. ஆனால் ஞாரத்தை அகரமுதலிகளில் நான் காணவில்லை. நீர்ப்பொருளில் நாரம் உண்டு. “நார நின்றன போல் தோன்றி” என்ற கம்பரா. நட்பு .31 மேற்கோளும் உண்டு. நாரத்தை உள்ளிருத்திக் கொண்டது மேகம். அது நாரதம் எனும் இருபிறப்பிச் சொல்லால் சுட்டப்படுகிறது. (நாரதன் என்கிற பெயரும் இதன் தொடர்பே.) நாரநிதி என்ற சொல் நீர்மலையாகிய கடல் என்ற பொருளை உணர்த்தும். நாரன் = நீரைச் சேர்ந்தவன். நாரணன் = நீரோடு சேர்ந்தவன். நாராயணன் = நீரை இடமாகக் கொண்ட திருமால்.

அடுத்து ஒரு குழூஉக் குறிச்சொல்லாகத் தண்ணீர் விட்டான் கிழங்கிற்கு நாராயணி என்ற பெயர் உண்டு. இதைச் சதாமூலிக் கிழங்கு என்றும் சொல்வார் [Asparagus racemosus என்பது புதலியற் பெயர்.] இது தாறுமாறாகக் கொடிவிட்டுப் படரும் பூண்டுவகையைச் சேர்ந்தது. பித்தநோயைத் தீர்ப்பதற்குத் தண்ணீர் விட்டான் கிழங்கு கைகண்ட மருந்தாகும். இக்கிழங்கு நீளமாகவும் வெண்ணிறமாகவும், சதைப்பற்று மிக்கதாயும் இருக்கும். அம்மைநோய் அகல, இக்கிழங்கினைத் தண்ணீரில் ஊறவைத்துத் துகள் ஆக்கிப் பாலிற்கலந்து பருகுவர். நீரிழிவு, எலும்புருக்கி, கவட்டைச் சூடு, மிகுசளி முதலான அனைத்து நோய்களையும் போக்கி இக்கிழங்கு ஆண்மை பெருக்கும் என்று சாம்பசிவ மருத்துவ அகரமுதலி கூறும் - செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி நான்காம் மடலம் முதற் பாகம்] நீர்க்கிழங்கு நாராயணியானது ஒரு முகன்மைக்குறிப்புத் தானே?

சிவனும் மாலும் ஒருவருக்கொருவர் எதிர்மறை என்று எண்ணிப் பார்த்தால் ஒருவர் நெருப்பு, இன்னொருவர் நீர் என்பதும், ஒருவர் சிவப்பு, இன்னொருவர் கருப்பு என்பதும், இது போன்ற பல்வேறு உருவகங்களும் நாரம் = நீர் என்ற பொருளை நாம் ஏற்க வைக்கின்றன. இப்போதைக்குக் கிடைத்திருக்கும் தரவுகளின் பேரில் நாரன்>நாரணன் (= நீரில் உறைபவன்)தமிழ்ச்சொல் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் முற்றிலும் முடிவு செய்யும் சான்றுக்கு (clinching evidence) நான் காத்திருப்பேன்.


அன்புடன்,
இராம.கி.

33 comments:

sarath said...

அய்யா,
தங்கள் பதிவு நீரோடை போன்ற சீர்மையுடன் ஒரு நல்ல ஆய்வு கட்டுரையாக உள்ளது.

மேலும் இதைப் பற்றி படிக்க தோன்றுகிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமை இராம.கி. ஐயா!
இருங்க, ஒவ்வொன்னா வருகிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மாப்பிள்ளை அழைப்பின் போது எந்த ஊரில், யானையைக் கொண்டு வருகிறார்கள்?” என்று நானும் ஓர்ந்து பார்க்கிறேன். கொஞ்சமும் தெரியவில்லை//

ஹா ஹா ஹா
அதுவும் ஒரு யானை இல்ல! ஆயிரம் யானைகள்! கல்யாணப் பந்தியில் ஒருத்தனும் சாப்பிட முடியாது! எல்லாம் யானைக்கே சரியாப் போயீரும்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திருமணங்களில் சங்கு முழங்கல் என்பது மங்கல வழக்கம்!
இப்ப தான் சங்கு-ன்னா வேற மாதிரி பொருளாகி விட்டது!

வாரணம் ஆயிரம்-ன்னு பலரும் சொல்லி சொல்லி அது யானை-ன்னே ஆயிரிச்சி இல்லையா?
சங்கு முழக்கம் என்பது மிகவும் புதுமையா, இயல்பா பொருந்தி வருது இராம.கி. ஐயா!

காதல் நோன்புக்கு கூடச் சங்கு முழங்கலைத் தான் தோழி கோதையும் சொல்கிறாளே! = போல்வன சங்கங்கள் போய்ப் பாடு உடையனவே!
அதுவும் பெண்களே சங்கு ஊதுகிறார்கள்!

பாவேந்தரும் சங்கே முழங்கு என்கிறார்! போருக்கு மட்டும் சங்கு அல்ல! வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு-ன்னு வாழ்வுக்கும் வளத்துக்கும் கூட சங்கு முழக்கம் இருக்குல்ல?

சங்கு ஊதல்-ன்னாலே எதிரிகளை/துஷ்ட சக்திகளை விரட்ட மட்டுமே-ன்னு அன்புடன் பாலா பதிவில் ஒரு விவாதம் வந்து, அதை நான் மறுத்துச் சொன்ன ஞாபகம் தான் வருது! :)

நீங்க வாரணம்=சங்கு-ன்னு சொன்னப்பறம் தான் சிலப்பதிகாரத்தில் தேடினேன்! இந்திர விழாவில் வருது!

புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வாய்ச் சங்கம் முறைமுறை ஆர்ப்ப!

ஆனால் இளங்கோவடிகள், வாரணத்து முள்வாய்ச் சங்கம்-ன்னு சொல்வது உவமையாகச் சொல்கிறாரா இல்லை சங்கையே குறிப்பிடுகிறாரா-ன்னு தெரியலை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒலியெழுப்புதலைக் குறிக்கும் நரல் என்னும் வினைச்சொல் தமிழ்ச்சொல்லே. நாரயணன் என்னும் வடசொல் இதிலிருந்து பிறந்திருக்கலாம். ஆகுதல்/ஆயுதல் வழி ஆயுதல்> ஆயன் என்ற பெயர்ச்சொல் பிறக்கும்//

உம்...இப்படி யோசிச்சிப் பார்க்கவே இல்லை ஐயா!
* "ஓசை", உலகெலாம் ஆனாய் நீயே
* ஆதியிலே தேவன் "வார்த்தையாய்" இருந்தார்
* "நாத" விந்து கலாதீ
என்று ஒலியைத் தான் தோற்றத்தின் தோற்றுவாயாகக் காட்டும்!
நீங்க சொல்லும் நரல்-ஒலி->நர+ஆயுனன் என்பது இக் கருத்துக்கு இன்னும் வலிவு சேர்க்கிறது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாரம் என்பது உய்வான்மாவைக் குறிக்குமோ? அறியேன்//

நாரம் என்பதை ஒட்டுமொத்த நரங்களின் திரள் என்று ஆன்மீகத்தில் பொருள் கொள்ளுவாய்ங்க!

ஆன்மீக விளக்கங்கள் பலவும் சொல்லாராய்ச்சியைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை! அதான் எனக்கு பெருத்த வருத்தம்! ஆன்மீக விளக்கமாய்ச் சொல்வதைப் பற்றி தப்பில்லை! ஆனால் சொல்லும் பொருள், சொல்லுக்கு இயைந்த வரணுமே என்கிற அக்கறையும் வேணும்!

//நரன் ஆன்மா உய்வான்மாவாய் இருக்கலாம். ஆனால் எல்லா உய்வான்மாவும் நரன் ஆன்மாவோ?//

இல்லை!
நரன் மட்டுமே உய்ய முடியும் என்று சொல்லுதல் ஆன்மீக அடிப்படையான கருணைக்கே ஏலாத ஒன்று!

//அன்றி, நரனைத் தவிர்த்த பிறபிறப்புக்களுக்கு உய்வான்மாவே கிடையாதா?//

அனைத்து பிற பிறப்புக்களுக்கும் உய்வான்மா உண்டு!
நாரம் = என்பது அனைத்து பிறப்புகளுமான ஆன்மாக்களை உள்ளடக்கியதே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இரண்டாம் முறையில் நாளன்>நாரன்>நாரனன்>நாரணன் என்று கருமையைக் கரணியம் காட்டிப் பொருள் சொல்வர். நண்பர் நாக.கணேசன்//

உம்...மாயோனை ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்று அதிர்ந்து, கருமையாகவே காட்டுகிறாள்! கணேசன் ஐயா சொல்லித் தான் இந்த நாளன்->நாரன் விளக்கமே எனக்குத் தெரியும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//[கல்ங்கை>கங்கை. இந்திய ஆற்றுப் பெயர்கள் பலவும் தமிழ் மூலம் காட்டும். இதைச் சொன்னால் “ஓ, தமிழ்வெறியன்” என்று பலர் உரைக்கக்கூடும் :-)]//

ஹா ஹா ஹா
பின்னே?
வள்ளுவரே ஆதி, பகவன்-ன்னு வடமொழிச் சொல்லை வச்சி தானே துவங்கறாரு!
அப்படின்னு சொன்னா அது வெறியில்லை! சாத்வீகம்! :)
நீங்களும் நானும் சொன்னா அது வெறி! :)

* வேதங்களை ஒலிக்க யாக்ஞவல்கியரே வர வேண்டும் என்று அதே வாய் பேசுமா?
* சூத்திரங்களை விளக்க பதஞ்சலியே வர வேண்டும் என்று அதே வாய் பேசுமா?
* பாஷ்யத்தைப் பிரஸ்தாபிக்க சங்கரரே வர வேண்டும் என்று அதே வாய் பேசுமா?
* ஆனால் தேவார மூவர் வந்தா தான் தேவார அறையைத் தொறப்போம்-ன்னு அதே வாய் பேசும்! :))

சத்யம் ஏவ! பிரம்ம சத்யம் ஜகன் மித்யா-ன்னு எழுதி வச்சிட்டு, அதை இவர்களே மீறுவது தான், இன்னும் வேடிக்கை! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// பாற்கடலை ஆலி என்பதும், பாற்கடலில் இறைவன் பள்ளிகொண்ட இடம் ஆலிநகர் என்று சொல்வதும் இன்னொருவகை உருவகமாகும்.

அடுத்து, திருமங்கையாழ்வார் பிறந்த ஊர் பழைய சோழநாட்டின் சிறுபிரிவான ஆலிநாட்டைச் சேர்ந்தது.//

இந்த ஆலி விளக்கம் மிக அருமை ஐயா! அணியாலி, திருவாலி, தென்னாலி, வயலாலி, புனலாலி, எழிலாலி-ன்னு எத்தனை எத்தனை விதமாய் ஆலியைக் காட்டி இருப்பார்! ஆலி->ஆலங் கட்டி மழையைத் தொடர்பு காட்டியமை, இன்னும் நல்லாப் புரிஞ்சுது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாரநிதி என்ற சொல் நீர்மலையாகிய கடல் என்ற பொருளை உணர்த்தும்.

நாரன் = நீரைச் சேர்ந்தவன்.
நாரணன் = நீரோடு சேர்ந்தவன்.
நாராயணன் = நீரை இடமாகக் கொண்ட திருமால்//

//நாரம் = நீர் என்ற பொருள் கொள்ள வைக்கின்றன. இப்போதைக்குக் கிடைத்திருக்கும் தரவுகளின் பேரில் நாரன்>நாரணன் (= நீரில் உறைபவன்)தமிழ்ச்சொல் என்றே எண்ணத் தோன்றுகிறது//

//முற்றிலும் முடிவு செய்யும் சான்றுக்கு (clinching evidence) நான் காத்திருப்பேன்//

இந்த இடுகையின் பின்னுள்ள உழைப்பு கோடி பெறும் இராம.கி. ஐயா!
அடியேன், சின்னப் பையனின் வேண்டுகோளையும் பொருட்டா ஏற்று, இவ்வளவு நுட்பமா, அதே சமயம் பிராக்டிக்கலா தண்ணீர் விட்டான் கிழங்கு முதலாக எடுத்துச் சொன்ன உங்கள் பான்மைக்கு, மிகவும் நன்றி!

எல்லாம் கடந்த இறைவனை, வெறுமனே மொழிக் குறுகலுக்குள் அடைப்பது நம் நோக்கம் இல்லை!

ஆனால் ஆன்மீகம் எப்படி முக்கியமோ, அதே போல் மொழியும், அதைச் சார்ந்த இனமும், அங்கு இறையியல் எப்படித் தோன்றி வளர்ந்தது என்பதும் முக்கியம்!

நம் தமிழில், நம் இறையியல் என்ன? என்பதான வேர்களைத் தேடும் முயற்சி சிறக்க யாண்டும் வேண்டுவோம்!

குமரன் (Kumaran) said...

வாரணம் என்பதற்கு சங்கம் என்ற பொருள் தென்பாண்டி வழக்கின் படி பொருத்தமான பொருளாகத் தான் இருக்கிறது இராம.கி. ஐயா. ஆனால் பாசுர வரியினைப் பார்க்கும் போது ஒரு ஐயம் எழுகிறது. மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத என்று இன்னொரு இடத்தில் சொன்ன இந்த தென்பாண்டிநாட்டுப் பெண் ஏன் இங்கே மட்டும் ஊத என்று சொல்லாமல் சூழ என்று சொன்னாள்? வாரணம் ஆயிரம் சூழ என்னும் போது ஆயிரம் யானைகள் சூழ என்று சேரலத்துப் பண்பாட்டைப் பேசுகிறாளோ இவள் என்று தான் தோன்றுகிறது. வாரணம் ஆயிரம் ஊத என்று பாடியிருந்தாலெனில் தென்பாண்டி வழக்கம் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

ஜீவ என்ற பதத்திற்கு உய்வு என்ற சொல் எந்த வகையில் பொருந்துகிறது என்று விளங்கவில்லை. விளக்குங்கள் ஐயா.

கூகுளில் தேடிப் பார்த்தல் என்று சொல்லாமல் இழுத்துப் பார்த்தல் என்று சொன்னதன் பொருளும் விளங்கவில்லை. விளக்குங்கள் ஐயா.

Dew என்பதற்கு 'பனி' என்ற சொல்லும் ice என்பதற்கு 'ஆலம்' என்ற சொல்லும் தங்கள் பரிந்துரைகளா? நினைவிலிருத்தி இனி மேல் புழங்க வேண்டும். Snow என்பதற்கு தங்களின் பரிந்துரை என்ன? Snowfall என்பதற்கு ஆலிமழை பொருந்தவில்லையோ என்று தோன்றுகிறது.

மூன்று வித விளக்கங்களும் அருமை ஐயா. மிக்க நன்றி.

இராம.கி said...

அன்பிற்குரிய சரத்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

அன்பிற்குரிய இரவிசங்கர்,

ஆயிரம் யானைகள் என்றால் அவை யானை மட்டுமல்ல. குடிலரின் அர்த்த சாற்றத்தில் ஒரு யானையைச் சுற்றி 5 குதிரையும் குதிரைவீரர்களும், ஒவ்வொரு குதிரைக்கு முன் 3 காவலாளியும், பின்னால் 3 காவலாளியுமாய் இருந்தாற் தான் ஒழுங்காய் இவற்றைக் கவனிக்கமுடியும் என்று அந்தக்காலப் பட்டறிவைச் சொல்லியிருப்பார். அதாவது ஒரு யானைக்கு 35 ஆட்கள் [ 5 குதிரை வீரர் + 6*5 காவலாட்கள்] என்றால் 35000 ஆட்கள் இந்த 1000 யானைகளை மேய்த்துக் கொண்டு வரவேண்டும். மாப்பிள்ளை அழைப்பில் 1000 யானை சூழ வந்ததாய்க் கொண்டால், கூடவே 35000 வீரர் சூழ வருவதாயும் கொள்ளவேண்டும்.

இதுபோக மற்ற விருந்தினர் எவ்வளவு இருந்திருப்பர்? அந்த மாப்பிள்ளை அழைப்பு 5 தண்டச் சாலையில் (அதாவது 55 அடிச்சாலையில்; இதற்கும் பெரியசாலை அந்தப் பழங்காலத்தில்
இருந்ததாய் எந்த நூலும் சொல்லவில்லை.) நெடுநேரம் போய்க் கொண்டிருந்திருக்க வேண்டும்.

சிந்திக்கச் சிந்திக்க நடைமுறைச் சிக்கல்கள் பெரிதாகத் தெரிகின்றன. யானைகளுக்கு வெப்ப காலம் ஆகாது. அவற்றில் வேர்வை விடும் பெருமுச்சும், கிட்டத்தட்ட அந்தக் காலத்தில் அரைப்பார்வை அடைந்துவிடுவதாயும் பல விலங்கு நூல் விவரங்கள் சொல்லுகின்றன. எனவே ஆயிரம் யானைகள் சூழ வந்திருந்தால் திருமணம் ஆவணி அல்லது தையைத் தவிர்த்து
வேறு மாதங்களில் நடந்திருக்க வாய்ப்பில்லை. கோதை தன் திருமணம் எப்பொழுது நடந்தது என்று குறிப்புக் கொடுத்திருகிறாளா என்று பார்க்க வேண்டும்.

ஆயிரம் யானை என்பது எனக்கென்னவோ தவறான புரிதலாகவே தென்படுகிறது. ஆயிரம் சங்கு என்பது, மாபெருங் கூட்டத்தைக் கொண்டுவராது. ஆயிரம் யானையைச் சீரங்கம்
[அங்குதானே மாப்பிள்ளை அழைப்பும் திருமணமும் நடந்தன.] நேர்கொண்டிருக்குமா? சங்கை எளிதில் நேர்கொள்ள முடியும்.
..........

பாண்வாய் வண்டு நோதிறம் பாடக்
காண்வரு குவளைக் கண்மலர் விரிப்பப்
புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வாய்ச் சங்கம் முறைமுறை யார்ப்ப

என்ற இளங்கோவின் கூற்று அந்திமாலைச் சிறப்புசெய் காதையில் 77-78 ஆம் வரிகளில் வருகிறது. இது கிட்டத்தட்ட திருப்பள்ளியெழுச்சி விவரிப்பைப் போன்றது. இதுபற்றி முன்னால் என்னுடைய ”கண்ணகியும் கரடிப்பொம்மையும்” என்ற பதிவில்

http://valavu.blogspot.com/2006/06/2.html

பேசியிருக்கிறேன். அதை ஒருமுறை படித்துப் பாருங்கள். குவளை மலர்கள் விழிப்பதற்காகப் பாடுகின்ற வாய் (=பாண் வாய்) கொண்ட வண்டு நோதிறம் பாடுகிறதாம். (இங்கே குவளை மலர்கள் விண்ணவனைக் குறிக்கலாம்.); காலை முரசு முழங்கினவாம்; புள்ளிமயிர்ச் சேவல்கள் துள்ளிக் கூவினவாம்; சங்குகள் முறைமுறையாய் எங்கும் பொங்கி ஆரவாரித்தன. எல்லாமே பெருமாள் கோயில் திருப்பள்ளி எழுச்சித் தாக்கம் காட்டும் செய்திகள். இந்தப் பொருளை அப்படியே ஔவை. சு.துரைசாமியார் உரையில் இருந்து என் பதிவில் முன்னே சேர்த்திருந்தேன்.

ஆனால் இதற்கு மாற்றான ஒரு பொருளும் சொல்ல இயலுந்தான். [அதற்கு முன்னே, முதல் விளக்கம் பற்றிய சில குறிப்புகள். பொறிமயிர் வாரணம் என்பது சேவலைக் குறிக்கிறது. முள்வாய்ச் சங்கம் என்பது வழுவழுப்பில்லாத முதுகுவிரல் கொண்ட சங்கு. நாம் இதைப் பிடிக்கும் போது விரல்களுக்கு நடுவில் முள் முள்ளாய் கிளம்பி நிற்கும் சங்கு விரல்கள் உண்டு. இது போன்ற சங்குகள் முழங்குவதற்குப் பயன்படும். எங்கள் வீட்டில் அப்படி ஒரு முள்வாய்ச் சங்கும், வழுவழுப்பான சங்குமாய் இரண்டு உண்டு. குமரிக் கடற்கரையிலும், சென்னைக்கருகில் மாமல்லைக் கடற்கரையிலும் விற்பார்கள்.]

முன்னே சொன்னது போல் முள்வாய்ச் சங்கம் என்பதற்கு கடற்சங்கைக் குறிக்காமல், சேவலின் கழுத்துப்பகுதி வைத்தும் பார்க்கலாம். [அதையும் சங்கு என்றே சொல்லுவார்கள். ஏனென்றால் ஒலியெழுப்புகிறது அல்லவா? “சங்கு அறுத்துவிடுவேன்” என்று அரட்டர்கள் மிரட்டுவது இந்தத் தொண்டைச் சங்கைத் தான்.] இந்தச் சங்கு சேவலில் முள்கொண்டு சுரசுர என்றுதான் வெளியில் இருக்கும்.

எந்த வகைப் பொருள் சரியென்று உங்கள் உகப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

.............

நரலுகிறவன் நரன் என்பது அடிப்படையான கருத்து. நாரம் =அனைத்துப் பிறப்புக்களுக்குமான ஆண்மாக்களை உள்ளடக்கிய கூட்டம் என்ற பொருள் எப்படி ஏற்படுகிறது? எனக்குப் புரியவில்லை.
...........

தமிழ்வெறியன் பற்றிச் சொன்னதோடு அருகில் சிரிப்பு ஓவத்தைப் (icon) போட்டுக் கொள்ளுங்கள். வலையுலகில் சிலர் அப்படித்தான் என்னைப் பற்றி எண்ணிக் கொள்கிறார்கள்.

...............

ஆலியை அவ்வளவு விளக்கினால் தான் நாரத்தின் தமிழ்மை புரியும் என்று சொன்னேன்.

எனக்கு ஆன்மீகமும், மொழியும், இனமும், அறிவியலும், மெய்யியலும் இன்ன பிறவும் முகன்மையானவை.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய குமரன்,

நாச்சியார் திருமொழி, ஆறாம் திருமொழியின் ஆறாம் பாட்டில் ”வரிசங்கம் நீன்றூத” என்று சொன்ன கோதை அதே ஆறாம் திருமொழியின் முதற்பாடலில் ”வாரணம் ஆயிரம் சூழ” என்று சொல்லுவாளா? - என்று கேட்டிருக்கிறீர்கள்.

சங்கு ஊதுதல் என்பது ஒரு காலத்தில் மங்கல வழக்குத் தான். இப்பொழுது சில இடங்களில் அமங்கல வழக்காய்த் தோன்றலாம்.

இந்தத் திருமொழியின் முதற்பாடல் மாப்பிள்ளை அழைப்பைப் பற்றிய அவள் கனவைக் குறிக்கிறது. இரண்டாம் பாட்டு மாப்பிளை அழைப்பு முடிந்து மணப்பந்தல் அமைந்த செய்தியையும், அதில் இந்தக் காளை புகுவதைப் பற்றிய கனாவைக் குறிக்கிறது. பொதுவாய் மாப்பிள்ளை அழைப்புக்குப் பின்னால், கைப்பிடிக்கும் சடங்கிற்கு முன்னால், மணமகனுக்குக் காப்புக் கட்டுவார்கள். அதற்காகவே அவன் பந்தல் புகுகிறான். இரண்டாம் பாட்டு அதைத்தான் சொல்லுகிறது. மூன்றாம் பாட்டு, மணப்பெண்ணுக்கு மணமகனின் தாயோ, உடன்பிறந்தாளோ, கூறைப்புடவை கொடுக்கும் கதை பேசப்படுகிறது. நாலாம் பாட்டு மணமகள் கூறைப்புடைவை உடுத்தி மனையில் அமர்ந்திருக்க, அவளுக்கு காப்புக் கட்டும் நிகழ்வைச் சொல்லுகிறது.

ஐந்தாம் பாட்டு, திருமணச்சடங்கின் முகன்மை நிகழ்வுக்காக, அதாவது மணமகளைக் கைப்பிடிக்கும் நிகழ்வுக்காக, பெண்வீட்டார் கொடுத்த கூறைவேட்டி, துண்டை அணிந்த நிலையில் மணமகன் மணப்பந்தலில் மீண்டும் புகும் நிகழ்வு சொல்லப்படுகிறது. ஆறாம் பாடலில்,

”மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன், தோழீ நான்”

எனும் வரிகளால், திருமணநிகழ்வு விவரிக்கப் படுகிறது. [இது அப்படியே பார்ப்பனரின் மணவினைச் சடங்கு. ”கன்னிகா தானம்” முடிந்தபின் நடக்கும் சடங்கு கைத்தலம் பற்றுதலாகும். பெண்ணின் தந்தை பெண்ணைக் கொடுத்து மாப்பிள்ளையைக் கைத்தலம் பற்றச் சொல்லுகிறார். தாலிகட்டுதல் என்பது பார்ப்பனருக்குக் கட்டாயச் சடங்கல்ல. விருப்பச் சடங்கு.] [இந்தத் திருமொழியில் ஒவ்வொரு பாட்டும் அடுத்தடுத்த மண நிகழ்ச்சிகளைக் கனவாய்ச் சொல்லுகின்றன.] இந்த நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட சங்கு முழங்க முடியாது. பெண்வீட்டின் பூசையறையில் வைக்கப்பட்டிருக்கும் பெண்வீட்டார் சங்கைக் கொண்டு பெண்வீட்டுப் பெண்ணொருத்தி மணமக்கள் கைப்பிடிக்கும் நேரத்தில் முழங்குவாள். இந்தச் சடங்கு இன்றும் பார்ப்பனர் அல்லா வீடுகளில் தாலிகட்டும் போது உண்டு; மத்தளம் கொட்டுவது இன்றும் தமிழ்நாட்டில் நடக்கிறது. தாலிகட்டும் நேரத்தில் “கெட்டிமேளம், கெட்டிமேளம்” என்று எல்லோரும் கூக்குரல் இட்டு மேளக்காரருக்கு உணர்த்துவார்கள். சங்கும், மேளமும் தான் இந்த நேரத்தில் முகன்மை, நாதசுர ஓசை ஓர் அலங்கார ஓசை. அதில் வெறும் கூவலே இருக்கும். பண்ணோ, இசையோ இருக்காது.

”முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தர்” என்னும் போது ”மேலே விண்மீண்கள் இலங்கும் வானப் பந்தரே” சொல்லப்படுகிறது. இந்தத் திருமணம் இரவில் நடக்கிறது. இற்றைநாள் போலப் பகலில் அல்ல. 150 ஆண்டுகளுக்கும் முன்னால் நம்மூரில் திருமணங்கள் இரவிலேயே நடந்தன. பகலில் மாறியதெல்லாம் அப்புறம் நடந்த கூத்து.

மாப்பிள்ளை அழைப்பு என்பது “இவன் தான் மணமகன்” என்று பெண்வீட்டார் தம் ஊராரிடம் பீற்றிக் கொள்ளும் ஓர் ஊர்வலம். அதில் ஆயிரம் சங்கு முழங்குவது ஒருவகை ஆடம்பரம். கைப்பிடிக்கும் நேரத்தில் ஒரு சங்கால் ஊதுவது சடங்கு. ஆடம்பரம் எப்பொழுதும் சூழ வரும். சடங்கு விடாது கடைப்பிடிக்கப் படும். அதில் ஆடம்பரம் சேரலாம், சேராமலும் போகலாம். ஆனால் அடிப்படை இருந்தே தீரவேண்டும். அடிப்படை ஒரு சங்கம் தான்.

ஏழாம் பாட்டிலிருந்து இன்னும் அடுத்துள்ள தீவலம், அம்மிமிதித்தல், பொரிகளை அள்ளிப் பரிமாறுதல், திருமஞ்சனம் ஆடுதல் ஆகிய திருமணச் சடங்குகள் (இவற்றில் சில பார்ப்பனருக்கு மட்டுமே உரியவை) விவரிக்கப்பெறும்.

இந்த நிகழ்ச்சிகளைத் தொடராய்ப் பார்த்தால், வாரணம் என்று முதற்பாட்டில் கூறுவது யானையாய் இருக்கமுடியாது என்பதே என் புரிதல். சேரலத்தில் திருமணத்தின் போது யானை வருகிறதா என்று அறியேன். அதோடு தென்பாண்டிப் பார்ப்பனப் பெண்ணுக்குச் சேரலமுறைத் திருமணம் செய்து பார்ப்பார்களா என்ன?

உங்களுடைய மற்ற கேள்விகளுக்கு மறுமொழிக்கிறேன். பொறுத்திருங்கள்

அன்புடன்,
இராம.கி.

குமரன் (Kumaran) said...

'வாரணம் ஆயிரம்' பாசுர வரிகளின் விளக்கத்திற்கு நன்றி ஐயா. மதுரையில் இன்றைக்கும் பல சமூகத்தவர் திருமணங்களில் மாப்பிள்ளை அழைப்பின் போது யானை முன் செல்கிறது. என் திருமணத்திலும் கோவில் யானை அலங்கரித்து முன் சென்றது. அவ்வழக்கம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. என் போன்ற சாத்தாரன் ஒரு யானை முன் நடக்க ஊர்வலம் செல்லும் போது உலக நாயகன் ஆயிரம் யானைகள் சூழ வலம் செய்தான் என்று கோதை கனவு கண்டிருக்கலாம் அன்றோ? அதுவும் ஆயிரம் சங்குகள் சூழ்வதைப் போல் ஆடம்பரமாகக் கொள்ளலாம் அன்றோ?

வாரணம் என்பதற்கு இங்கே சங்கம் என்ற பொருள் கொள்வதில் எனக்கு ஏற்பு உண்டு. ஆனால் மற்ற உரைகாரர் சொன்னதை உடனே தள்ளிவிட மனம் ஏற்கவில்லை; அதனாலேயே இவ்வளவு கேள்விகள்.

இராம.கி said...

அன்பிற்குரிய குமரன்,

முன்னால் உய்யப்பணம் என்ற தலைப்பில்

http://valavu.blogspot.com/2006/04/blog-post_09.html

ஒரு பதிவு இட்டிருக்கிறேன். அதைப் படியுங்கள். உய்தல், உய்வான்மா என்ற சொற்கள் பிறப்பு உடனே உங்களுக்குப் புலப்பட்டுப் போகும். bio என்னும் முன்னொட்டிற்கான ஆங்கிலச் சொற்பிறப்பு விளக்கத்தையும் படியுங்கள்.

bio-
from Gk. bio-, comb. form of bios "life, course or way of living" (as opposed to zoe "animal life, organic life"), from PIE base *gweie- "to live" (cf. Skt. jivah "alive, living;" O.E. cwic "alive;" L. vivus "living, alive," vita "life;" M.Pers. zhiwak "alive;" O.C.S. zivo "to live;" Lith. gyvas "living, alive;" O.Ir. bethu "life," bith "age;" Welsh byd "world"). The correct usage is that in biography, but in modern science it has been extended to mean "organic life."

biology என்பதைச் சரியாக உயிரியல் என்று தானே சொல்லுகிறோம்? உயிரின் வினைச்சொல் உய்தல் தான்.

எந்தப் பெயர்ச்சொல்லைப் பார்த்தாலும், அதனுள் ஒளிந்து நிற்கும் வினைச்சொல்லைத் தேடுங்கள். ஒரு வினைச்சொல் 10, 100 பெயர்ச்சொற்களைக் கூட உருவாக்க முடியும். தமிழாக்க முயற்சிகளில் இந்த வினைச்சொல்லைக் காணமுடியாமல் தான் எங்கெங்கோ சுற்றித் தடுமாற்றம் அடைகிறோம்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய குமரன்,

கூகுளில் தேடிப்பார்த்தல் என்று சொல்லுதற்கு மாறாய் மூன்று சொற்களை அடுத்தடுத்துக் கொடுத்து இழுத்துப் பாருங்கள் (to drag and see) என்று வேறுவகையிற் சொல்லிப் பார்த்தேன். தேடிப் பார்த்தலைத்தான் சொல்லுகிறேன் என்று உங்களுக்குப் புரிந்துவிட்டதல்லவா?

அன்புடன்,
இராம.கி.

குமரன் (Kumaran) said...

உய்யப்பணம் இடுகையைக் குறித்து வைத்துக் கொண்டேன் ஐயா. விரைவில் படிக்கிறேன். நன்றி.

இராம.கி said...

அன்பிற்குரிய குமரன்,

மதுரைப் பக்கம் பலரின் திருமணங்களில் (உங்கள் திருமணத்திலும்) மாப்பிள்ளை அழைப்பில் யானை முன்னே நடந்து போனது என்று சொல்லியிருக்கிறீர்கள். அது போல ஆயிரம் யானை கோதை திருமணத்தில் ஆடம்பரமாய் நடக்கக் கூடாதா? - என்று கேட்டிருக்கிறீர்கள்.

இது ஆடம்பரமல்ல, பெருத்த நடைமுறைச் சிக்கல். இந்தியாவின் வரலாற்றிலேயே பெரும் பரப்பில் பேரரசாய்த் திகழ்ந்தது சந்திரகுத்த மோரியனின் அரசாகும். அவனுக்கு இருந்த படை 6,00,000 ஆட்கள் என்று சொல்லி அதிலிருந்து கணக்குப் போட்டு அவன் 9000 யானைகள் வைத்திருந்தான் என்பார்கள். எல்லா படையானைகளையும் போருக்குக் கொண்டு போய் விடமாட்டார்கள். இதில் பாதியோ, மூன்றில் ஒரு பங்கையோ தான் ஒரு சமருக்குக் (battle) கொண்டுபோக முடியும். மற்றவை பின்னால், அடுத்த இடத்திலோ, அடுத்த பொழுதிலோ, பயன்பட ஏதுவாக இருத்தி வைத்திருக்க வேண்டும். ஆக மோரியனே 3000, அல்லது 4500 யானைகளைத்தான் ஒரு பெருஞ்சமரில் பயன்படுத்தியிருப்பான். இது போக, ஓர் பேரரசன் இன்னொரு அரசனுக்கு அன்பளிப்பாய்க் கொடுத்ததாய், சந்திரகுத்தன், அவன் எல்லையில் இருந்து கிரேக்க அரசனுக்கு (செலுக்கசோ, அண்டியாக்கசோ, யாரோ ஒருவன்) 500 யானைகளைக் கொடுப்பான். சிலம்பின் காட்சிக் காதையில் நூற்றுவர் கன்னர் செங்குட்டுவனின் வடபுலப்போருக்குக் காணிக்கையாய் 500 யானைகளையே கொடுப்பர். [அந்தக் காலப் பட்டறிவில் 500 என்பதே பெரிது. இதற்கும் குறைவாகவே பல கோட்டைத் தகர்ப்புச் சண்டைகள் நடத்தப் பட்டிருக்கின்றன.]

நமக்கு பொருத்தப்பாடு பற்றிய புரிதல் (sense of proportions) இருக்கவேண்டும். 1000 யானைகள் என்பது ஒரு மாப்பிள்ளை அழைப்புக்கு மிகப் பெரிய தொகை.

ஒரு யானை அல்லது 2,3 யானைகள் என்றால் ஒரு மாதிரி அவற்றை நடத்திக் கொண்டு போய்விடலாம். உங்களுக்குத் தெரியுமா? பூர விழாவிற்குத் திருச்சூரில் வடக்கன் அம்பலத்தில் 20, 30 யானைகளைக் கொண்டு வந்தாலே யானைப்பாகர்களும், பணியாட்களும், நிருவாகத்தாரும் ஆடிப் போய்விடுவார்கள். இத்தனைக்கும் அந்த அம்பலத்தைச் சுற்றிலும் மிகப் பெரிய வெளி கொண்டது. ஊருக்கு நடுவானது. ஏதேனும் ஒரு யானைக்கு மதமோ, ஊறோ, நோயோ, வராமல் இருந்து, முழுவிழாவும் சிறப்பாய் நடைபெறுவதற்குள் பெருஞ்சிக்கலாய்ப் போய்விடும். யானைகளுக்கு நடுவில் ஒரு சின்ன வெடியோ, ஒரு வேற் குத்தோ, ஒரு ”களேபாரமோ” நடந்துவிட்டால் அப்புறம் மிகச் சரவலாகிப் போகும்.

இருபக்கமும் மக்கள் கூட்டம் அணிவகுத்திருக்கும் 55 அடிச்சாலையில் ஒற்றைச்சாரையில் நடைபோடும் 1000 யானைகளிடையே இந்தச் சிக்கல் இன்னும் பெரிது. தவிர இவற்றை அடக்குவதற்கும், வழிநடத்துவதற்கும், முன்னே ரவிசங்கருக்குச் சொன்ன மறுமொழியில் 35000 பேர் என்று சொல்லியிருந்தேன். கூடவே 1000 யானைப்பாகர் சேர்த்தால் 36000 பேர். இந்தக் கூட்டம் ஆடம்பரத்திற்காக, மாப்பிள்ளை அழைப்பினூடே வரப்போகும் கூட்டம். [இவ்வளவும் கடந்து செல்ல 6, 7 மணிகள் பிடிக்கும்.] மாப்பிள்ளை அழைப்பு மொத்தத்தில் சவ்வாய் இழுத்து நோவாகிப் போகும். சட்டுப் புட்டென்று முடியாது. யாராவது ஒரு மணநிகழ்ச்சியில் இது போன்ற ”இக்கை” (risk) கூட அழைத்துச் சொல்வார்களோ?

நண்பரே,

நான் அந்த மணநிகழ்வு நீர்வாகம் செய்தால், 1000 யானைகள் என்ற இயலுமையைத் தவிர்க்கவே செய்வேன். அது தேவையில்லாத இக்கு. ”ஆயிரம் சங்கா? ஓடிவந்து சூழ்ந்து கொள்ளுங்கள்” என்றே சொல்லுவேன்.

முன்னோர் உரையைக் குறைசொல்லுவது என் வேலையல்ல. பொதுவாய்ச் சொல்லமாட்டேன். என் ஆசான்கள் அவர்கள். அவர்கள் அன்றி நான் இத்தனை புரிந்து கொண்டிருக்கமாட்டேன். அதே பொழுது, அவர்கள் உரைகளில் இருக்கும் இடர்களைச் சொல்லி என் ஐயத்தை எழுப்பாது இருந்தால், என் பின்னோருக்குப் பிழைசெய்தவன் ஆவேன்.

அன்புடன்,
இராம.கி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆயிரம் ஆனைகளா? ஆயிரம் சங்குகளா?
தனி மடல்களில் நானும், தொழன் ராகவனும், தம்பி பாலாஜியும், குமரனும் உரையாடிக் கொண்டிருந்தோம்! :)

நானும் நேற்று வரை ஆயிரம் யானை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன்!
ஆனால் Logic என்னும் ஏரணுமும் கொண்டு இலக்கியத்தைப் பார்த்தால், இன்னொன்றும் எனக்குப் புலனாகிறது!

என் தோழி ஆண்டாளில் மிகவும் நட்புரிமையோடு தோய்பவன் அடியேன்! வாடீ, போடீ என்றெல்லாம் கூட எழுதி இருக்கேன்!

அவள் ஆயிரம் யானைகளை ஒரு "கல்யாண கம்பீரத்துக்கு"ச் சொல்கிறாள் என்றே தற்சமயம் வைத்துக் கொள்வோம்!
Magnum Opus of Kothai's Wedding! இன்றைய அரசியல்வாதிகள் திருமணங்களில் ஆயிரம் கார்கள் பவனி வருவது போல-ன்னு கூட நண்பன் சொன்னான்! ஆனால் முக்கியமாக அடுத்த அடியைப் பாருங்கள்!

* வாரணம் ஆயிரம் சூழ
* வலம் செய்து
* நாரணன் நம்பி "நடக்கின்றார்" என்றெதில்
* பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

ஆக நாரணன் நம்பி யானை மேல் வரவில்லை!
அவன் நடந்து வருகிறான்! "நடக்கின்றார்" என்றெதில்!

எப்படி நடக்கிறான்? திருமண இல்லத்தை வலம் செய்து நடக்கிறான்! அவனோடு சூழ்ந்து வருகிறார்கள் கலசங்கள் ஏந்தி!

இப்போ Logic கொண்டு வாங்க!
* வில்லிபுத்தூர் கிராமத்து ஒரு திருமண இல்லத்தில்,
* அவனே கருடனை எல்லாம் விட்டு விட்டு,
* "நடந்து" வருகிறான்! வீட்டை வலம் செய்கிறான்!
* அப்படியிருக்க ஆயிரம் யானைகள் எப்படி ஒரு வீட்டையோ, தெருவையோ வலம் செய்ய முடியும்? :)))

தொலைக்காட்சியில் பார்க்கிறோமே! கேரளப் பூரம் விழாவில், அவ்வளவு பெரிய மைதானத்திலேயே, பத்து பதினைந்து யானைகளுக்கு மேல் காணோம்!
இந்த வில்லிபுத்தூர் கிராமத்தில் ஆயிரம் யானைகள், வெளியில் கூட கட்டி வைக்கப்படவில்லை! திருமண வீட்டைச் "சூழ வலம் செய்யுதாம்"! இது முடியுமா? வில்லிபுத்தூர் வீடு தாங்குமா? :))

கல்யாணப் பந்திக்குச் சாப்பாட்டுக்குச் செஞ்சி வச்சிருந்த அத்தனையும், ஆயிரம் யானைகளுக்கு கொடுத்தே மாளாது! நமக்கெல்லாம் பந்தியில் ஒன்னும் மிச்சம் இருக்காது :)))

தமிழ் said...

தங்களின் பல ஐயங்களுக்கான தெளிவை தீர்த்து வைக்கிறது.
இன்னும் ஆழமாக அறிந்துக் கொள்ள உதவுகிறது.

இங்கே வாரணம் என்பதற்கு யானை என்று பொருள் கொள்வதை விட வேறு ஒரு அருத்தத்தில் வருகிறது என்பதே சரியாக உள்ளது.

யா‍ -‍ நா - ஞா இம்மூன்றுக்கும் தொடர்புண்டு என்று விளங்கிறது.

யா - யாடு - யாதவர்

விவிலியத்தில் கூட யோர்(Yor) என்னும் சொல் ஆற்றைக் குறிக்கிறது.

யா ‍யாத்திரை இதுவும் நீர் தொடர்பான சொல் என்றே சொல்ல தோன்றுகிறது.கன்னடத்தில் ஜாத்திரையாகி ஊர்த்திருவிழா ஆகிவிடுகிறது.

/தெல் = கள் என்பதால், தெல்ங்கு மரம் தெங்கு மரமாயிற்று; தெல்நை, தென்னையாயிற்று./

உண்மைதான்

தென்னி என்றால் வாழை என்று பொருளுண்டு.

தேறல்,தேன் எல்லாம் தெள் கள் என்னும் சொல் வழியாக பிறந்தவையே.

யா என்பதற்கு தெற்கு என்னும் பொருள் உண்டோ என்னும் ஐயம் வருகிறது.

யாமியம் தெற்கு
யமுனை நதி , தென்முனை
யாமன் தென் திசை
யாத்திரை தென் திசை நோக்கிய பயணம்

நரல் என்பதற்கு ஒலி என்றால்

நரவை, நரி இந்த இரு சொற்களும் ஒலியின் அடிப்படையில் பிறந்ததா ???????

வெள்ளம் என்னும் சொல் இருவேறு பொருளில் வழங்குவதைப் பார்க்கின்றோம். கால வெள்ளத்தால் ஏற்பட்ட மாற்றமா????????? அல்லது ஒரு இனம் மக்கள் தொடர்பு அற்று போகும் போது உண்டாகும் மாற்றமா ????????

நீர் என்பதை ரெய்ன் என்னும் சொல்லுடன் தொடர்பு படுத்தி நோக்கும்போது ஐயத்தை உண்டு பண்ணுகிறது.

விஷ்ணு கரந்தை என்பதை நாரணம்செடி என்றும் அரச மரத்தை நாராயணம் என்னும் சொல்வதுண்டு.

பாவணர் அவர்களின் பொத்தகத்தில்
ஒருமுறை நாரம்+ அயனன் = நாராயனன் ‍நாராயணன்
என்று படித்தாக நினைவு.

அன்புடன்
திகழ்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சரி, இப்போ, ஆயிரம் சங்குக்கு வருவோம்!
யானைக்கு மட்டும் லாஜிக் அப்ளை பண்ணிட்டு, சங்குக்கு பண்ணலீன்னா எப்படி? :)

ஆயிரம் சங்கை ஒரு திருமண வீட்டில் ஊதினா என்ன ஆகும்?
காது கிழிஞ்சி டமாரம் ஆக வேண்டியது தான்! :))

ஆனால் பாட்டைக் கவனியுங்கள்!
வாரணம் ஆயிரம் ஊத-ன்னு சொல்லலை! வாரணம் ஆயிரம் சூழ-ன்னு தான் சொல்லுறா!

ஆக,
* ஆயிரம் சங்குகள் வரிசைத் தட்டுகளில் புடை சூழ
* திருமண வீட்டை வலம் செய்து
* நாரணன் நம்பி "நடக்கின்றான்"! நடந்து வருகிறான்!
* அவனுக்குப் பூரண பொற்குடம் எடுக்கிறார்கள்!

இது இயல்பாகப் பொருந்துகிறது அல்லவா?

சங்கு மங்கலப் பொருள்! அதான் வரிசைகளில் வைக்கிறார்கள் போலும்! இன்றைய கல்யாண வரவேற்பில் இருபத்தியோரு தட்டு வரிசை என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா? அது போல் ஆயிரம் தட்டு சங்குகள் சூழ வரிசை! இதுவும் Magnum Opus என்னும் கல்யாணக் கம்பீரம் தானே?

அத்தனை சங்குகளையும் ஊதினால் காது டமாரம் என்று சொல்லலாம்!
ஆனால் ஊதவில்லை! சூழ வரிசை வருகிறது! அவ்வளவு தான்!

இராம.கி. ஐயா குறிப்பிட்ட, தென்பாண்டி வீட்டுத் திருமணங்களில், சங்கு ஊதும் வழக்கம், நான் இதுவரை நேரில் பார்த்ததில்லை! அதனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை!

ஆனால் ஐயா இதைச் சொன்ன போது, படீரென்று இன்னொன்னு ஞாபகத்துக்கு வந்துச்சி! கோயில் கல்யாண உற்சவங்களில் சங்கு முழக்கம் கேட்டு இருக்கேன்! எனவே சங்கு முழக்கம் என்பது திருமணத்தில் அன்னியம் அல்ல!

* ஆயிரம் சங்கு "சூழ" வரிசை!
* மணமகன் நடக்கின்றான் என்றெதிர்
* அதில் ஒவ்வொரு சங்காக பின்னர் "ஊதி" இருக்கலாம்!
* ஆயிரமும் ஒவ்வொன்றாக ஊதினால் விடிஞ்சிரும் என்றும் சொல்ல முடியாது! ஏனென்றால் அந்நாளைய திருமணங்கள் ஐந்து நாள் நடக்கும்!
* இல்லை ஆயிரமும் ஒவ்வொன்றாக ஊதாமல், சிலது மட்டும் ஊதியும் இருக்கலாம்!
* எது எப்படியோ, பாட்டில், "ஊத" என்று வரவில்லை! "சூழ" என்று தான் வருகிறது!

எனவே "ஆயிரம் சங்குகள் சூழ" என்பது லாஜிக்படி, ஏரணப்படி, இன்னும் பொருத்தமாக இருக்கு!

நானும் இம்புட்டு நாள் ஆயிரம் யானை என்று தான் எண்ணிக் கொண்டிருந்தேன்!
ஆனால் லாஜிக் பிடிபட்டவுடன், பழைய கருத்தை விடாப்பிடியாகப் பிடித்துத் தொங்க வேண்டும் என்று அவசியம் இல்லை!
என் கருத்தை மாற்றிக் கொள்வதில் வெட்கமும் இல்லை! :)

"முன்னம் எழுதினான் ஓலை பழுது"-ன்னு நாலடியார் சொல்லும் போல!
ஓலையில் கைத்தவறலா, தப்பா எழுதிட்டா, அதை மாற்றிக் கொள்ள ஓலைநாயகர்கள் தயங்க மாட்டார்களாம்! அதுவே தமிழ்ப் பண்பாடு!

அது வாரணமோ, நாரணமோ, உண்மையுடன் கூடிய ஏரணமே முக்கியம்! :))

என் தோழி கோதை கருத்து நேர்மை கொண்டவள்!
அவள் தோழன் நானும் அவளைப் போலவே இருக்க விரும்புகிறேன்! :)


உன் கல்யாணத்துல ஆயிரம் சங்கு தாண்டி வரிசையில்! என்சாய் மாடி கோதை! நான் பந்தியில் போய் சாப்பிட்டு போட்டு வாரேன்! அப்பாலிக்கா மாப்பிள்ளை பையன் காது கிட்டக்க சங்கு ஊதி கலாய்க்கலாம்! :)))

Vijayakumar Subburaj said...

> வாரணம் ஆயிரம் சூழ

கனவில் சரியாக கணக்கு போட முடியாது. ஆயிரம்ன்னா நிறைய என்று கூட இருக்கலாம். 999ம் இல்லை, 1001ம் இல்லை, ஆனால் சரியாக 1000 என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை.

Vijayakumar Subburaj said...

> நல் என்னும் சொல்லடி இன்றும் தெலுங்கில்
> கருமையை உணர்த்தும். எரியும் விளக்கை
> ”நல்லா வை” என்று சிவகங்கைப் பக்கம்
> சொன்னால், ”விளக்கை அணை” என்று
> மங்கலமாய்ச் சொல்வதாகும். அதாவது
> “விளக்கைக் கருப்பாக்கு” என்று பொருள்.

NULL, NIL

http://en.wiktionary.org/wiki/Null
http://de.wiktionary.org/wiki/Null
http://en.wiktionary.org/wiki/Zero

Vijayakumar Subburaj said...

> யமுனை நதி , தென்முனை

யாரோ யமுனைக்கும் வடக்கிலிருந்தவர்கள்தான் இவ்வாறு பெயரிட்டிருக்க வேண்டும். இதிலிருந்து, யமுனைக்கும் வடக்கில் தமிழ் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.

தமிழன்-கறுப்பி... said...

நன்றி...

இராம.கி said...

அன்பிற்குரிய குமரன்,

”Dew என்பதற்கு 'பனி' என்ற சொல்லும் ice என்பதற்கு 'ஆலம்' என்ற சொல்லும் தங்கள் பரிந்துரைகளா? Snow என்பதற்கு தங்களின் பரிந்துரை என்ன? Snowfall என்பதற்கு ஆலிமழை பொருந்தவில்லையோ என்று தோன்றுகிறது.”

என்று கேட்டிருந்தீர்கள். உங்களுக்காகவே, என் கருத்துக்களை ஒன்று சேர்த்துப் பலருக்கும் பயன்படும் வண்ணம் “குளிர்ச்சொற்கள்” என்ற தலைப்பில் புது இடுகை ஒன்று இட்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

snowfall = சிந்து பொழிவு
hailstorm = ஆலங்கட்டி மழை, ஆலிமழை.

அன்புடன்,
இராம.கி.

குமரன் (Kumaran) said...

படிக்கிறேன் ஐயா. நன்றி.

வினோத் ராஜன் said...

வாரணங்கள் கூவ வரிவண்டு இசைபாடப்
பேரிகையுஞ் சங்கும் பிறதூரியமு ழங்கத்
தாரணியும் பிண்டிநிழல் தாமரையின் மீதிருந்த
வீரியனார் பாடேலோ வீதிதொறும் கேட்டிலையோ
காரிகையாய் நீஇன்னம் கண்கள் விழித்திலையோ
பாரீச பட்டர்மேல் பாசமும் இத்தனையோ
மாரனொடு காலனை முன்வாரா மலேகாய்ந்த
ஈறேழ் புவிக்கு இறையைப் பாடேலோர் எம்பாவாய்.

http://www.youtube.com/watch?v=Z6Pg96HEE6s

யானைகள் கூவுமோ :-) ?

இராம.கி said...

அன்பிற்குரிய திகழ்,

உங்கள் கருத்திற்கு நன்றி.

யா என்ற சொல்லிற்கு தெற்கென்னும் பொருள் உண்டா என்று கேட்டிருக்கிறீர்கள். நேரடியாக அப்படிச் சொல்லமுடியாது. என்னுடைய திசைகள் என்னுந் தொடரில் 4 ஆம் பகுதியை,

http://valavu.blogspot.com/2008/04/4.html

படியுங்கள். அதில் என் கருத்தைச் சொல்லியிருக்கிறேன். யமுனை ஆறு என்பதை நான் ஓர்ந்து பார்க்கவில்லை. [பல சான்றுகளைப் பார்க்கவேண்டும்.] தொழுனை யாறு என்றே பழந்தமிழிலக்கியங்களில் அது குறிக்கப் பட்டிருக்கிறது. யாத்திரை என்பது தென் திசைப் பயணமாய் மட்டுமே இருக்கத் தேவையில்லையே? இந்தச் சொல்லையும் ஆழ்ந்து பார்க்கவேண்டும். சட்டென்று என்னால் சொல்ல இயலாது.

நரி என்றசொல் ஊளையிடுவதை ஒட்டியே பிறந்தது என்பார்கள். நரலுக்கும் அதற்கும் தொடர்பிருக்கலாம்.

"வெள்ளம் என்னும் சொல் இருவேறு பொருளில் வழங்குவதைப் பார்க்கின்றோம். கால வெள்ளத்தால் ஏற்பட்ட மாற்றமா????????? அல்லது ஒரு இனம் மக்கள் தொடர்பு அற்று போகும் போது உண்டாகும் மாற்றமா ????????" என்று நீங்கள் சொல்லுவது என்ன என்று எனக்கு விளங்கவில்லை.

நீருக்கும் rain என்பதற்குமான உறவு அருளியாரின் ”யா” என்னும் நூலைப் படித்தால் புலப்படக்கூடும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய விஜயகுமார் சுப்புராஜ்,

1000 என்பது ஒரு பெரிய எண் என்ற அளவிலே பார்த்தாலும், நான் கூறிய சங்கு என்னும் பொருள் யானையைக் காட்டிலும் சரியாகப் பொருந்தும் என்பதே என் துணிபு.

Null என்பதற்கும் இந்த நல் = கருப்பு என்பதற்கும் தொடர்பு உள்ளதா என்பது எனக்குத் தெரியாது. ஆய்ந்து பார்க்க வேண்டும்.

”யாரோ யமுனைக்கும் வடக்கிலிருந்தவர்கள்தான் இவ்வாறு பெயரிட்டிருக்க வேண்டும். இதிலிருந்து, யமுனைக்கும் வடக்கில் தமிழ் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. “ உங்களின் இந்தக் கூற்று பற்றியும் என்னால் எதுவும் சொல்லத் தெரியவில்லை. சான்றுகள் ஏதென்று எனக்குத் தெரியவில்லை.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய தமிழன் - கறுப்பி,

உங்கள் வருகைக்கு நன்றி.

அன்பிற்குரிய வினோத்,

அவிரோதி ஆழ்வாரின் செயினப் பாவைப் பாடலை இங்கு இட்டதற்கு நன்றி. இவருடய எல்லாப் பாடல்களையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். பலருக்கும் இவை போன்ற பாடல்கள் புதிது.

அன்புடன்,
இராம.கி.

ச கோகிலன் said...

மிக்க நன்றி ஐயா, ஒன்றைத் தேடப்போய்த் தேவையான சிலவும் தாமே கையில் கிடைத்துள்ளன.
ஆலிக்குழைவு, அயிர மாத்திரி......
எடுத்துக் கொள்கிறேன் ஐயா மிக்க நன்றி.

வேந்தன் அரசு said...

பொறிமயிர் வாரணம் எனில் கோழி. 'கோழி கூவுவதை சங்கு முழக்கம் , மற்ற புள்ளினம் ஒலிப்பது முரசு முழக்கம்' போல.