Wednesday, August 26, 2009

தமிழ்மணம் பற்றிக் காசி கேட்டதும் என் மறுமொழியும்

தமிழ்மணம் திரட்டி ஐந்தாண்டு நிறைவு செய்வதையொட்டி, கீழே வரும் கேள்விகளைக் காசி எனக்கு அனுப்பி மறுமொழிக்கச் சொல்ல, அதற்கு மறுமொழிகளை நான் அவருக்கு அனுப்பி ஒரு மாதம் இருக்கும். இப்பொழுது, ”உங்கள் பதிவிலேயே போடுங்களேன்” என்ற அவர் யோசனையை ஏற்று என் வலைப்பதிவில் இடுகிறேன். இந்தக் கருத்துப் பரிமாற்றத்தில் என்னைப் பங்கு கொள்ளச் செய்த காசிக்கு நன்றி.

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

1.1. இணையத் தமிழ் உள்ளடக்கங்கள் வெவ்வேறு குறியேற்றங்களில் (TAB, TAM, TSCII, ISCII, Srilipi, Bamini, unicode,....) .உள்ளன. ஒன்றில் இருந்து இன்னொன்றிற்கு மாற்றிப் புரிவதற்குள் “தாவு” தீர்ந்து விடுகிறது. “அடச்சே, இந்தத் தொந்தரவு வேண்டுமா?” என்ற அயர்வில், ஆங்கில உள்ளடக்கங்களுக்கே நம்மில் பலரும் ஓடுகிறோம். வலைத்தளங்களுக்கு வருபவர் அங்கிருப்பதை வெட்டி, ஒட்டிக் கவர்வது போலவும், எனவே சொத்தைக் காப்பாற்றுதல் முகன்மை போலவும், வலைத்தளக்காரர் எண்ணிப் ”பொதுக் குறியேற்றத்திற்கு வரமாட்டேம்” என்று அடம் பிடிக்கிறார்கள். இதன் விளைவாய் இணையத்தில் ஒரு தமிழுக்கு மாறாய், ஓராயிரம் தமிழ்கள் இருக்கின்றன. வளர்ச்சிக்கு உகந்ததில்லை என்று எவ்வளவு மன்றாடினாலும், ”ஒற்றுமையா? வீசை என்ன விலை?” என்று கேட்கும் தமிழ்க் குமுகாயம் இதை மாற்றாதிருக்கிறது. [வெட்டி ஒட்டும் வேலையில் சரியும், தவறும் இருக்கின்றன. அதைத் தடுத்து நிறுத்தவும் நுட்பங்கள் இருக்கின்றன. அவற்றை விடுத்து, தனித்தனிக் குறியேற்றங்களில் வலைத்தளங்கள் செய்வது தமிழரிடையே கருத்துப் பரிமாற்றத்தையே குலைக்கிறது.]

அதிகமாய்த் தமிழில் புழங்கவேண்டுமானால், எல்லோரும் ஒரே குறியேற்றத்திற்கு வரவேண்டும். இன்றைக்குப் பரவலான ஒருங்குறியில் இது அமையுமானால் எனக்கு
ஒப்புதலே. (அதே பொழுது, ஒருங்குறியை நான் குறை சொல்வது ஏனென்று வலையில் குறியேற்றம் பற்றி உரையாடுகிறவர்களுக்குத் தெரியும். நான் பெரிதும் விழைகின்ற, தேர்ந்த கணி வல்லுநர்களால் அரசாணைக்குப் பரிந்துரைக்கப் பட்ட, 16 மடை TANE/TACE குறியேற்றம் இற்றைத் தமிழக அரசின் மேலிடத்திற்கு நெருங்கியவர்களிடம் தூங்கிக் கொண்டிருக்கிறது. அன்றாட அரசியலே குறியாகிப் போன நிலையில், ”TANE/TACE புழக்கத்திற்கு வருமா?” என்று நான் அறியேன்.) அதற்கிடையில், குறியேற்றங்கள் மூலம் தமிழில் தனிப்பாத்தி கட்டும் வலை அவலங்களைப் பல்வேறு களங்களில் எடுத்துச் சொல்லி, நாம் ஓர் இயக்கமாய் மாறி, ஒருங்குறி நோக்கி ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்.

1.2. தமிழில் கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம், வெட்டியரசியல், மொக்கை எழுதுவதைக் குறைத்துக் கொண்டு, [யாரும் சண்டைக்கு வராதீர்கள்; அது நம்மில் கூட இருக்கிறது என்றே சொல்கிறேன்.] மற்ற துறைசார்ந்த உள்ளடக்கங்களைப் பெருக்க வேண்டும். ”கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம், வெட்டியரசியல், மொக்கை” க்கு மட்டுமே தமிழ், மற்றதற்கெல்லாம் ஆங்கிலம் என்ற நிலை தொடர்ந்தால், தமிழ்ப் பயன்பாடு எதிர்காலத்தில் அருகிப் போகும். தமிழை எல்லாத் துறைகளிலும் கணிவழி பயன்படுத்த என்று நாம் முன்வருவோம்? பாட்டன், முப்பாட்டன்..... இப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகள் தமிழைக் காப்பாற்றி நடந்த தொடரோட்டத்தில் நம்மிடம் கொடுத்த பொறுப்புக்களை நாம் ஏன் தட்டிக் கழிக்கிறோம்?

1.3. ஒருபக்கம் தமிழ் உள்ளடக்கங்களைக் கூட்டச் சொல்கிறோம். இன்னொரு பக்கம், தமிழ்நாட்டில், 4000 சொச்சம் மடிக்குழைப் பள்ளிகள் (matriculation schools) ”தமிழைச் சொல்லிக் கொடுக்க மாட்டேம்” என்று வல்வழக்குச் செய்து தமிழ்க்கல்விக்கே கண்ணிவெடி
வைக்கின்றன. தமிழக அரசும் இதற்குத் துணைபோகிறது. பெரும் சூழ்ச்சிகளால் இளையரைத்
தமிழாளுமையில் இருந்து பிரித்துத் தமிழ்ப் பயன்பாடு குறைக்கப் படுகிறது. இதுபற்றிய புரிந்துணர்வைக் கூட இணையத்தில் எழுதமாட்டேம் என்கிறோம். சூடறியாத் தவளை, வெதுப்பு நீரில் சொகம் காண்பதாய், நாம் இருக்கிறோம். வெறும் அச்சிதழ்கள், தொலைக்காட்சி ஓடைகள் போலவே செயற்பட்டு, பின்னூட்டு மாயையிற் சிக்கி, தமிங்கில நடையே இணையத்திற் பயன்படுத்தினால் அப்புறம் தமிழ் உள்ளடக்கம் இருக்குமா? தமிங்கிலம் தான் இருக்கும். கட்டுப்பாட்டோடு இயக்கமாய்ச் செயற்பட்டு நாம் மாறினால், நம்மைச் சுற்றியுள்ளோரும் மாறுவர். அச்சிதழ்கள், தொலைக்காட்சி ஓடைகளும் மாறும். அரசியல்வாதிகளும் மாறுவர். வலைப்பதிவர் தமிங்கிலத்தைக் குறைத்துக் கொண்டால் என்ன?

1.4. தமிழ் உள்ளடக்கத்திற்கு முன்னோடி தமிழை உள்ளிடச் சொல்லிக் கொடுப்பதே. 8 கோடித் தமிழரில், சிறாரை ஒதுக்கி மற்றோர் குறைந்தது 4 கோடி தேறுவர். இவர்களில் கணி, இணைய வசதியுள்ளவர் 50 இலக்கமாவது இருப்பர். [சொந்தமாய் வசதி வேண்டாம். ஓர் உலாவி நடுவம் (browsing centre) போக வாய்ப்பிருந்தால் போதும்.] ஆனாலும், தமிழ் வலைத்தளங்கள், வலைப்பதிவுகள், ஊடாடுவோர், மின்வணிகத்திற்கு முனைவோர், மின் - அரசாளுமை பயன்படுத்துவோர், என்று பார்த்தால் 50000 தேறுவரா என்பது கேள்விக் குறியே!. குறைந்த செலவில் (அன்றி எந்தக் காசும் செலவழிக்காமலே) கணிக்குள் தமிழை உள்ளிடச் சொல்லிக் கொடுக்க இன்று ஆட்கள் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வு மண்டபம் அருகே நடத்திய வலைப்பதிவர் பட்டறை இன்னும் நினைவில் நிற்கிறது. கொஞ்சநாள் அங்கும் இங்கும் தொடர் முயற்சிகள் மற்ற ஊர்களில் நடந்தன. பின் முற்றிலும் நின்றுவிட்டது. இப்பொழுது புதுவைத் தமிழ்ப் பேராசிரியர் மு.இளங்கோவன் மட்டும் சில ஊர்களில், நடத்துகிறார். பாராட்ட வேண்டும்; இதெல்லாம் பற்றுமோ?. மீண்டும் இயக்கமாய் மாறி, “தமிழ் உள்ளிடுவதைச்” சொல்லிக் கொடுக்கும் பட்டறைகள் நடத்த மாட்டோமோ? தமிழ் வலைத்தளங்கள் குறைந்தது ஓரிலக்கம் ஆக வேண்டாமோ? எல்லோரும் அவரவர் வேலைகளுக்குள் ஆட்பட்டுப் போய்விட்டோம். ஆர்வலர் இன்றி தமிழ் உள்ளடக்கங்கள் எழாது. எப்பொழுது நாம் திரளுவோம்?

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்)இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

2.1. உள்ளுரும நுட்பத்தின் (information technology) முழுப் பயனையும் தமிழ்க் குமுகாயம் துய்க்கவில்லை. இன்னும் கணி, இணையங்களின் பயன்பாடு மேற்தட்டு, நடுத்தட்டுக்காரருக்கு மட்டுமே கிடைக்கிறது. மடிக்கணி விலையோ யானை விலையாய் இருக்கிறது. பரிச் சொவ்வறைகள் (free softwares) எளிதாய்க் கிடைக்க வேண்டும். கணியைத் தமிழால் அணுக முடியும் என்பது பலருக்கு விளங்க வேண்டும். இன்னும் “மூட மந்திரமாய்க்” கணி காட்டிப் பணம் பறிக்கும் வேலை தொடர்கிறது. குறைந்த காசில் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாது இருக்கிறது. மின்னஞ்சல் கூடியிருந்தால், “courier" கொள்ளை கூடுமோ? இந்திய அஞ்சல் துறை படுத்து நெடுநாட்கள் ஆகிவிட்டன.

2.2. இப்பொழுது கைபேசிகள் பெருகியும், ”அவற்றின் வழி தமிழ்க் குறுஞ்செய்திகள் அனுப்ப ஏலாது” என்றே பலரும் அறிவுறுத்தப் படுகிறார்கள். கைபேசிச் சேவைக் குழுமங்களும் (cellphone service companies), இதைச் செயற்படுத்த முட்டாள்தனமாய் மறுக்கிறார்கள். தமிழ்ப் பயன்பாட்டை வலியூட்ட சில செயல்களை அவர்கள் செய்யவேண்டும். காசு செலவழிக்க வேண்டும். இருப்பதை வைத்தே மீன்பிடித்து, கீழ்த்தட்டு மக்களிடையே தேவை ஏற்படுத்தி அரைகுறை ஆங்கிலத்தைக் கற்க வைத்தால் பின்னால் ஆங்கிலவழி அதிகாரம் நீடிக்கும் என்றே நடைமுறைகள் இருக்கின்றன. எல்லாம் மடிக்குழைத் (matriculation) தந்திரம் தான். அகில இந்திய மாறுகடை (all India market) என்ற கானல் நீரைக் காட்டி, மாநில மொழிகளில் நடத்த வேண்டிய சேவைகளை எங்குமே ஒழிக்கிறார்கள். தமிழில் மின்னரட்டை செய்பவர்களும் குறைச்சலே. மின்னஞ்சல் செய்யத் தெரியாதவர்கள் மின்னரட்டை எப்படிச் செய்வார்கள்?

2.3. அனைத்திந்திய மாறுகடையைக் கட்டி, இன்றைய ஆளும் வருக்கத்தின் இரும்புப் பிடியை இறுக்குதற்காய், குமுகாயம் எங்கணும் ஒய்யாரமாய் ஆங்கிலம் பேசுபவர் தொகையைக் கூட்டும் வண்ணமே பல செயல்கள் நடக்கின்றன. நாமோ, பெரும் ஏமாளிகளாய் இருக்கிறோம். ”தமிழினத்தை ஒழிக்கத் தமிழை ஒழிக்க வேண்டும்; தமிழைப் பயனற்றது என்று ஆக்க வேண்டும்” என்ற குறிக்கோளே நம்மைச் சுற்றிலும் இருக்கிறது. எந்த அரசு அலுவம், தனியார் அலுவத்திற்குப் போனாலும், தமிழிற் பேசினால் சீந்துவார் இல்லை, ஆங்கிலத்தில் ஏதேனும் பரட்டினால் “yes sir yes sir three bags full" என்ற குழைவு உடனே கிடைக்கிறது. அப்புறம் தமிழிளையர் எதிர்காலத்தில் தமிழ் உள்ளடக்கங்களுக்கு வருவார்களோ?

2.4. மின்வணிகம்: பக்கத்தில் தெருமூலையில் இருக்கும் அண்ணாச்சி கடையில் இன்று கணியும், அச்சியும் (printer) இருக்கின்றன. ஆனால் ”என்ன வாங்கினோம்?” என்பதற்கான பெறுதிச் சீட்டு (receipt) ஆங்கிலத்திலேயே தருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் கணக்கீட்டுச் சொவ்வறையும் (accounting software) ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. இதன் விளைவாய் ஆங்கிலம் தெரிந்த பெண்/பையன் கல்லாவில் வேலைசெய்கிறாள்/ன். நாலாவது ஐந்தாவது படித்த பெண்/பையன் பண்டங்களை எடுத்து வைக்கிறாள்/ன். மீண்டும் ஒரு சாதிப் பாகுபாடு கணித் துணையோடு வேறு உருவத்தில் அமைகிறது. ஆங்கிலம் படித்தவன் பத்தாயிரக் கணக்கிலும், தமிழ் படித்தவன் ஆயிரக்கணக்கிலும் கூலி பெறுகிறான். ”வாங்கிய பொருளும், பெறுதியில் அச்சடித்திருப்பதும் விலை, எண்ணுதியில் (numerical) ஒன்றுதானா? ஏமாற்று நடந்திருக்கிறதா?” என்று ஆங்கிலம் தெரியாதோர் கவைத்துப் பார்க்க (check - சரிபார்க்க) முடியாது. ஒரு பெரிய ஏப்பம் தான். தமிழகத்தில் இருக்கும் பல்லாயிரக் கடைகளில் தமிழில் பெறுதி கொடுக்கும் வழக்கம் ஒழிந்தே போனது. நம் கண்ணெதிரே தமிழ் வாணிகம் அழிகிறது. முன்பு மொத்த வாணிகத்தில் (wholesale) தமிழ் இல்லை; இப்போது சில்லறை (retail) வாணிகத்திலும் தமிழ் அழிகிறது. வெறும் வாயளவில் உசாவத் தமிங்கிலம் பயில்கிறார்கள்.

2.5. இது போலவே இருள்வாய் (railway) நிலையங்களில் தரும் பயணச்சீட்டு முற்றிலும் ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் இருக்கிறது. தமிழைக் காணோம். எந்த இணையக் கடை தமிழில் இருக்கிறது (ஒன்றிரண்டு தவிர) சொல்லுங்கள்? இவற்றிலும் உள்ளீட்டுச் சிக்கல் ஈயென்று இளித்து நிற்கிறது.

2.6. கட்டணம் செலுத்தல்: அன்றைக்கு ஒருநாள் சென்னை மாநகரக் குடிநீர் வாரியம்
(metrowater), தமிழக மின்சார வாரியம் (TNEB) போன்றவற்றில் நுகர்வுக்குத் தக்கப் பணம் கட்டி வருகிறேன். பெறுதிச் சீட்டுகள் எல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. உண்மையில் தமிழ்க் குடிமக்களை சுற்றியிருக்கும் அரசு/ தனியார் நிர்வாகத்தினர் “தமிழைத் தொலை, தமிழைத் தொலை” என்று அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வளவு ஏன்? பெரிய தனியார் நிறுவனமான குத்தகைப் பேருந்து உரிமையாளர் “KPN travels" ஆங்கிலத்தில் தான் பயணச் சீட்டுக் கொடுக்கின்றனர். சில அரசுப் பேருந்துக் குழுமங்களும் அவர்களின் நடத்துநர் கைகளில் உள்ள நகர் அச்சிகளின் (mobile printers) மூலம் ஆங்கிலத்தில் தான் பயணச்சீட்டு அச்சடித்துக் கொடுக்கிறார்கள். இதனால் நம் பேரிளம்பெண்கள் கூட ABCD ....என்று எழுத்துக் கூட்டிப் படிக்கத் தள்ளப்படுகிறார்கள். பின் ஏன் தங்கள் பேரப்பிள்ளைகளை இங்கிலிப்பீசுப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க கிழவிகள் முயல மாட்டார்கள்? நம்மைச் சுற்றிலும் ”ஆங்கிலம் படி, ஆங்கிலம் படி” என்று சூழல் வலியுறுத்தும் போது, அப்புறம் தமிழாவது ஒன்றாவது? நண்பரே! மனம் சலித்துப் போகிறது. ஒரு பெரும் பேயிடத்தில் தமிழினம் மாட்டிக் கிடக்கிறது. மாட்டியதை உணரக்கூட நமக்கு வக்கு இல்லை.

2.7. அரசாணைகள் தமிழில் வருகின்றன. ஆனால் அவை உப்புக்குச் சப்பாணிகளே. ஆங்கில
G.O தான் இடைப்பரட்டில் (interpretation) முன்னுரிமை பெறுகிறது. தமிழக அரசுச் செயலகத்திற்குள் போய்ப் பாருங்கள், உப்புக்குச் சப்பாணி வேலை எவ்வளவு நடக்கிறதென்று தெரியும். [வேதிப் பொறியியல் நிர்வாகம் செய்த காலத்தில் தமிழக அரசுச் செயலகத்துள் 7,8 ஆண்டுகளாவது மேலிருந்து கீழ்வரை புகுந்து வெளியே வந்திருக்கிறேன். ”தமிழ் முதல்” என்று ஆட்சியாளர் சொல்லுவதெல்லாம் படம் காட்டுதலே.] அரசு அங்கங்களிடம் தமிழில் சேவை பெற்றால், நடுவே இருக்கும் இடைத்தரகர்கள் (brokers) எல்லாம் ஒழிந்து போவார்கள். எனவே ஒருநாளும் தமிழ்ச்சேவை தமிழகத்திற் பெருகாது. அரசை ஒட்டி எத்தனை முகவர் (agents), இடைத்தரகர் இருக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்கள்?

(ஞாய விலைக் கடைகளில் பண்டங்கள் வாங்குதற்கான குடும்ப அட்டை பெறுவதில் கூட ஏராளமாய் இடைத்தரகர், முகவர் இருக்கிறார்கள். எல்லாம் ஆங்கிலப் படிவம் தான். அந்த அலுவங்களுக்கு முன்னால் மரத்தடியில், காசைக் கொடுத்து ஆங்கிலப் படிவம் நிரப்பிக் கொள்ளும் மக்கள் எத்தனை பேர்? அரசின் சலுகைகளைப் பெற்றுத் தருவது ஓர் ”ஒருங்கிணைந்த வியாபாரம்”) நண்பரே! இங்கெல்லாம் கணிவழி தமிழ் நுழைந்தால் அப்புறம் அத்தனை பேரும் “காலி”. ”தமிழை உள்ளே விடாதே” என்பது தான் அரசு ஒட்டுண்ணிகளின் தாரக மந்திரம். கட்சி அரசியலும் இடைத்தரகர், ஒட்டுண்ணிகளிடம் தான் உள்ளது. அரசியல் மேடைகளில் ”தமிழ், தமிழ்” என்று நாயாய்க் கத்துவார்கள். அரசின் செயற்பாட்டுக்குள் ”தமிழை ஒதுக்கினால் தான்” இவர் எல்லோரும் பிழைக்க முடியும். இதில் இரண்டு பெருங்கட்சிகளும் ஒன்று போலத் தான். இந்தச் சூழ்க்குமம் அறியாத சாத்தாரக் குடிமகனுக்குப் புகலிடமே கிடையாது. அப்புறம் எங்கே தமிழில் உள்ளுரும நுட்பப் ”புரச்சி”? ஒட்டுண்ணிகள் இருக்கும் வரை தமிழைக் கணி வழி நுழைய விடவே மாட்டார்கள். அப்படி நுழைய அடிமுதல் நுனிவரை மாற்றம் வேண்டும். நம் அரசு நிர்வாகம் பெரிதும் புரையோடிப் போய் இருக்கிறது. எனவே இது நடக்காது.

2.8. இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்) பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். குறியேற்றச் சிக்கல் பெரும்பாலான செய்தி, இலக்கிய இதழ்களுக்கு உண்டு. வலை இதழ்களில் ஒருசிலவே ஒருங்குறியில் இருக்கின்றன. குறும்பதிவு தமிழில் இப்பொழுது செய்யமுடியும். ஆனால் அவ்வளவு பரவலாய்ப் பலருக்கும் தெரியவில்லை. வெப் 2.0 மிடையங்கள் பற்றி எனக்கும் தெரியாது. .

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

3.1. இவ்வளவு தொலைவு கணிமைக்குள் தமிழ் நுழைந்ததே தன்னார்வலர்களால் தான். ஈழத்தில் நடக்கும் இன அழிப்பால், 1983-2009 வரை 26 ஆண்டுகளில் ஈழத் தமிழர் குடும்பங்கள் உலகெங்கும் பிரிந்தன. தமிழ் மின்னஞ்சலும், மடலாடற் குழுமங்களும், வலைத்தளங்களும் இவர்களுக்குத் தேவைப்பட்டன. எனவே வளர்ந்தன. தமிழகத் தமிழர்களும், மற்றையோரும் சேர்ந்து கொண்டார்கள். குறியேற்றம், தரப்பாடு, சொவ்வறைகள் என ஒவ்வொன்றாய்ச் செய்யப்பட்டன. மொத்தத்தில் மாறுகடைகளே புதுக்குகளை உருவாக்குகின்றன. (markets create the products.) உண்மை சிலபொழுது சுடும். மற்ற தமிழர் அளவிற்கு ஆங்கிலம் அன்று அறியாத கரணியத்தால், தமிழே பெரிதும் தெரிந்த அடித்தட்டு ஈழத் தமிழ்க் கூட்டம் உலகிற் சிதறுண்டு போனதால் இந்தத் தேவை ஏற்பட்டது. [அவர்களிலும் ஆங்கிலத்தைக் காட்டி மேற்தட்டார் பம்மாத்து செய்தது முற்காலம்.] அந்தத் தேவைகளை நிறைவு செய்யும் முகமாய் தமிழ்க் கணிமைப் புதுக்குகள் ஏற்பட்டன. தமிழகத் தமிழரை ஆங்கில மாயையில் சிக்க வைப்பது 1970 களிலேயே தொடங்கி விட்டது. [அந்தச் சோகக் கதை நீளமானது.] ஆங்கிலத்தின் மூலம் எல்லாம் கட்டுப்படுத்த விழையும் அதிகார வருக்கம் இதுவரைத் தமிழ்க் கணிமைக்கு தமிழகத்தில் என்ன செய்தது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். தமிழ்க் கணிமையில் எங்குமே தமிழக அரசு நிர்வாகம் தலைமை நிலை எடுத்து முன்நடத்திப் போகவில்லை. தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதும், ஓடும் மாட்டைத் தடுத்து நிறுத்துவதும் தான் நடந்திருக்கிறது. “இதில் எனக்கு என்ன வருமானம்?” என்ற பார்க்கத் தொடங்கியபின், அப்புறம் தமிழ்க் கணிமையாவது ஒன்றாவது?

3.2. விக்கிப்பீடியா என்பது நல்ல பங்களிப்பே. ஆனால் அதைத் தற்பொழுது இரண்டு குழுவினர் வேறு விதமாய்ப் பார்க்கிறார்கள். முதற்குழுவினர் காலங் காலமாய் தமிழ்க் குமுகாயத்தில் அதிகாரம் ஓச்சியவர்கள். இப்பொழுது நல்ல தமிழில் அங்கு கட்டுரைகள் சேருவதைப் பார்த்து [”விக்கி நிருவாகத்தினர் தனித்தமிழ்த் தாலிபான்கள்; கிரந்த எழுந்தை அனுமதிக்க மறுக்கிறார்கள், அதைத் திருத்துகிறார்கள், இதைத் திருத்துகிறார்கள்” என்று] இல்லாததும், பொல்லாததுமாய் இவர்கள் புறங்கூறுவது ஒருபக்கம். இன்னொரு குழுவினர் கட்சியரசியல் பார்த்து, ”அவர்கள் அதைச் செய்கிறார்கள், இதைச் செய்கிறார்கள்” என்று கோவங் கொண்டு, ”யாரோடு வழக்குச் செய்கிறோம்” என்று புரிதல் இல்லாமல், வெறுமே உணர்ச்சிவயப் பட்டு விக்கிப் பீடியாவில் இருந்து விலகி நிற்கிறார்கள். ஒற்றுமைப் படாத இரண்டு போக்குமே தவறானவை. விக்கிப்பீடியா நிருவாகமும் சற்று நீக்குப் போக்கோடு,
எல்லோரையும் அணைத்து, முன் நகரவேண்டும். விக்கிப்பீடியாவின் பங்களிப்பைக் கூட்ட வேண்டும். அதற்கு மன மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

3.3. என் பார்வையில் விக்கிப்பீடியாவிற்கு உறுப்பினராய்ச் சேர்பவர் கூடவேண்டும். குறைந்தது ஆற்றுவமாய்ப் பங்களிக்க 500 பேராவது சேரவேண்டும். இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் ஓரிலக்கம் தலைப்புக்களில் கட்டுரைகள் அங்கு எழ வேண்டும். அதே போலத் தமிழ் விக்சனரியிலும் பங்களிப்பு கூட வேண்டும். பல்வேறு தமிழ் அகரமுதலிகளும் எந்தக் கட்டணமும் இல்லாமல் இணையத்தில் உசாத்துணையாய் அமையவேண்டும். இதற்குத் தமிழகப் பல்கலைக் கழகங்களும் உதவ வேண்டும். இணையத்தில் உள்ளோருக்கும், தமிழகப் பல்கலைக் கழகங்களுக்கும் நடுவில் ஏகப்பட்ட இடைவெளி இருக்கிறது. அது மறைய வேண்டும்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்ன வகையிலான தமிழ்ப் பயன்பாட்டு browsing விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

வாயால் கேட்கிறீர்கள்! சொல்லுதற்குக் காசா, பணமா? எனக்குத் தோன்றுவதைச் சொல்கிறேன். குப்பைத் தொட்டிக்குத் தான் முடிவிற் போகக் கூடும். இருந்தாலும் சொல்லுகிறேன். :-)

4.1. ”ஏம்ப்பா, அந்த TANE/TACE முன்னீடு எங்கேப்பா? அதை எடுத்தாங்க” என்று கேட்டு வாங்கி, “முதல்வர் ஐயா, இந்த அரசாணையை உடனே போடணும் ஐயா” என்று வலியுறுத்துவேன்.

4.2. சொவ்வறைக் குழுமங்களையும் (Microsoft, Apple, Oracle, Adobe etc....) இணையவெளிக் குழுமங்களையும் (Google, Yahoo, Microsoft....etc.) கூப்பிட்டு, TANE/TACE குறியேற்றத்திற்கு ஆதரவு தரச்சொல்லிக் கேட்டுக் கொள்வேன். அப்படித் தரும் குழுமத்துக்குத் தான் அரசாங்கச் சொவ்வறை ஒழுகுகள் (orders) கிடைக்கும் என்றும் சொல்லுவேன். அதே போல திறவூற்றுச் சொவ்வறை (open source software) எழுதுபவர்களையும் TANE/TACE க்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்வேன்.

4.3. தமிழ்நாட்டில் விற்கும் அத்தனை கணிகளும் “Tamil enabled Computer" - என்றால் தான் விற்க முடியும் என்று கட்டளை பிறப்பிக்கச் சொல்லுவேன். இதே போலத் தமிழ்நாட்டில் விற்கும், பயன்பாட்டில் இருக்கும் எந்தச் சொவ்வறையும் ”Tamil enabled" என்றால்தான் விற்க முடியும், செயற்பட முடியும் என்று ஆக்குவேன்.

4.4 தமிழக அரசு அங்கங்களும், தமிழகத்தில் இருக்கும் நடுவண் அரசு அங்கங்களும், குடிமக்களோடு ஊடாடும் செயற்பாடுகளும், படிவங்களும் 90 நாட்களுக்குள் “Tamil enabled" ஆக வேண்டும் என்று கட்டளையிடுவேன். நடுவண் அரசு அங்கங்கள் அதை மறுத்தால் உரிய வழக்குத் தொடருவேன்.

4.5 தமிழகத்தின் எல்லா இணைய உலாவி மையங்களில் உள்ள கணிகள் “Tamil enabled" ஆக வழி செய்ய வேண்டும் இல்லையேல் அவர்களின் உரிமம் பறிக்கப் படும் என்று ஆணையிடுவேன்.

4.6 தமிழகப் பல்கலைக் கழகங்களை தொடர்பு கொள்ளும் மாணவர்களும், ஆசிரியர்களும், கல்லூரிகளும் தமிழில் தொடர்பு கொண்டால் தான் மறுமொழி அளிக்க முடியும் என்று
அரசின் மூலம் பரிந்துரைப்பேன். அதே போல பட்ட மேற்படிப்பு ஏடுகளில் (thesis, project works etc.....) என்ன துறையாய் இருந்தாலும் குறைந்தது ஐந்து பக்கத்திற்குத் தமிழ்ச் சுருக்கம் இருந்தால் தான் உயர்பட்டங்கள் கிடைக்கும் என்று ஆணையிடச் சொல்லுவேன். இதே போல, எந்தப் பட்டமேற்படிப்பாளனும் , தான் செய்த புறத்திட்டு (project), அல்லது ஆய்வை (thesis) அரைமணி நேரம் தமிழ்படித்தோர் அவையில் சொல்லத் தெரியவேண்டும் என்று வலியுறுத்துவேன். தமிழில் உள்ளடக்கம் வேண்டுமானால் இவை நடக்க வேண்டும்.

4.7 தமிழ்மொழி படிக்காமல் எந்த உயர்நிலைப் பள்ளிப் படிப்பையும் முடிக்க முடியாது என்று தமிழக அரசுக் கல்வித்துறை மூலம் சட்டங் கொண்டு வர ஒத்துழைப்பேன்.

4.8 தமிழ்நாட்டில் பள்ளியிறுதித் தேர்வுகளை இணையம் மூலமாய் ஒரே நேரத்தில் நடத்த கல்வித் துறைக்கு வேண்டிய உதவிகள் செய்வேன். எழுதி முடித்த பத்தே நாட்களுக்குள் முடிவுகள் தெரியும் படியும் வகை செய்வேன்.

4.9 தமிழறியாமல் தமிழ்நாட்டில் இயங்கமுடியாது என்ற நிலையைக் கொண்டுவர இணைய வழியும், தமிழ்க்கணிமை வழியும், பாடுபடுவேன்.

இப்பொழுது நனவுலகத்திற்கு வருவோமா? இதில் 10 விழுக்காடு நடந்தாலே மிகவும் பெரிது. ஏனென்றால் இன்றைய அதிகார வர்க்கமும், அரசியலாளர்களும், முன்னாற் சொன்ன ஒட்டுண்ணிகளும், அகில இந்திய மாறுகடையை வேண்டி நிற்கும் பெருமுதலாளிகளும், இதைச் செய்ய விடவே மாட்டார்கள். அவர்களின் இருப்பையே ஆட்டிவிடும் அல்லவா? 800
பவுண்டு கொரில்லாவைத் தங்களுக்குப் பக்கத்தில் யாராவது வைத்துக் கொள்வார்களோ?

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக
வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?


5.1. புதிதாய் வரும் பலரும் ஆர்வமாய் இருக்கிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் மொக்கைகளுக்குள்ளேயே 100க்கு 90 பேர் போய்ச் சேருகிறார்கள். சிற்பம் செய்யக்கூடிய உளியை வைத்து அம்மியும் ஆட்டுக்கல்லும் பொளிந்தால் எப்படி? ”மகிழுங்கள், கொண்டாடுங்கள், சத்தம் போடுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை.”. ஆனால், நீங்கள் எழுதுவது 6 மாதங்கள் கழித்து யார் படித்தாலும் பயனுள்ளதாய் இருக்க வேண்டும் என்று எண்ணி எழுதுங்கள். கவிதை, கதை, துணுக்கு, திரைப்படம், அரசியல் எழுதக் கூடாது என்று ஒருநாளும் நான் சொல்ல மாட்டேன். மற்றவற்றையும் எழுதுங்கள் என்றே சொல்லுகிறேன். நாளாவட்டத்தில் கவிதை, கதை, துணுக்கு, திரைப்படம், அரசியல் என்பது மொத்தப் பங்களிப்பில் மூன்றில் ஒருபங்கு இருந்தால் நல்லது. நாம் எதில் குறைந்திருக்கிறோமோ, அதை ஈடு செய்வோமே?

5.2. முகமூடி உரையாடல், தனிமாந்தத் தூற்றல்கள், சிண்டு முடிச்சு வேலைகள் - இவை
யாருக்கும் நல்லதில்லை. வலைப்பதிவை அரசியலாக்காதீர்கள். இதைச் சரி செய்யவே நேரமும் பொழுதும் போய்விடும். இதன் விளைவாய் ஒரு புது மிடையம் (medium) பயனில்லாது போய்விடும். பழைய அச்சிதழ், தொலைக்காட்சி ஓடைகளுக்கு உல்லாசமாய்ப் போய்விடும். மீண்டும் செக்குமாடு வேலை தான். இது தேவையா? நமக்குள் ஒரு தற்கட்டுப்பாடு வேண்டும்.

5.3. கொஞ்சம் தமிழ் - தமிழ், தமிழ் - ஆங்கிலம் அகரமுதலிகளை வாங்கி வைத்துக் கொண்டு உங்கள் சொற்குவையைக் கூட்டிக் கொள்ளுங்கள். வெறுமே 3000, 4000
தமிழ்ச்சொற்களை வைத்துக் கொண்டு, ஆங்காங்கு ஆங்கிலம் விரவி வலைப்பதிவில் தமிங்கிலம் பயிலாதீர்கள். உங்கள் சிந்தனை தடைப்பட்டுப் போகும். ஒருமுறை எழுதியதைத் திருப்பிப் படியுங்கள். கூடிய மட்டும் வாக்கியப் பிழைகள், சொற்பிழைகள், எழுத்துப் பிழைகள், ஒற்றுப்பிழைகளைக் குறையுங்கள். அலுவத்தில் ஓர் ஆங்கில மடல் எழுத எவ்வளவு முயற்சி எடுத்துக் கொள்ளுகிறீர்கள்? முடிந்தால் Wren and Martin வைத்தோ, இன்னொருவரை வைத்தோ, பிழைதிருத்தி ஒய்யார ஆங்கிலநடை தேடுகிறீர்கள் அல்லவா, அதில் 80 விழுக்காடு தமிழுக்குக் காட்டக் கூடாதா? “எனக்குத் தெரியாத தமிழா?” என்ற பெருமிதத்தில் எத்தனை கணக்கற்ற மொழிப் பிழைகளைச்செய்கிறோம்? இதைத்தானே நம் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்போம்? அவர்கள் இன்னும் கூடிய பிழைகளைச் செய்வார்கள். கொஞ்சங் கொஞ்சமாய் மூன்று நான்கு தலைமுறைகளில் தமிழ்நடை முற்றிலும் குலைந்து, எல்லாம் ஆங்கிலத்தில் வந்துசேரும். ஆங்கிலமும் சரியாய்த் தெரியாமல், தமிழையும் தொலைத்துப் தமிழ் இளையர் தடுமாறுவதை கண்முன்னே காண மிக வருத்தமாய் இருக்கிறது.’

5.4. ஏதொன்றையும் ஆவணப் படுத்துங்கள். தமிழ் விக்கிப்பீடியாவிற்குள் நுழையுங்கள். அங்கு உங்கள் பங்களிப்பைக் கூட்டுங்கள். 500, 1000 பேர் சேர்ந்தால் தான் கிடுகு மதுகை (critical mass) வந்து சேரும். அதனால், மடக்க வேகத்தில் (exponential speed) கட்டுரைகள் பெருகும். மின்னுலகில் தமிழ் உள்ளடக்கம் கூடும். இணையத்தில் தமிழ் உள்ளடக்கம் இன்றுள்ளதைப் போல் 100 மடங்கு கூடவேண்டும். அது உங்கள் கையில் உள்ளது. ஓரிலக்கம் வலைப்பதிவர்களாவது ஏற்படவேண்டும். அந்தப் பணியும் உங்கள் கையிற் தான் இருக்கிறது.

5.5. பின்னூட்டுக்களில் இடுகைக்குப் பொருந்தியதைக் கேளுங்கள். அரட்டைகளே அதிற் தொடர்ந்தால் அப்புறம் வெறும் வெள்ளோசைகளாய் (white noice) ஆகிப் போகும். எந்த அலைபரப்பிலும் வெள்ளோசை/உள்ளடக்க விகிதம் மிகக் குறைந்து இருக்கவேண்டும் என்பது மின்னணுவியலில் உள்ள அறிவுறுத்தல்.

6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

6.1. தமிழ்மணத்தின் திரட்டிச் சேவையில்லையென்றால் இவ்வளவு வலைப்பதிவுகளையும், நண்பர்களையும் நான் அறிந்திருக்க மாட்டேன். இது ஒரு புது மிடையம். இன்னும் உருக்கொள்ள வேண்டும். என்னைப் போன்றோர் இன்னும் எழுத்திலேயே இருக்கிறோம்.
படங்கள், காணொளி போன்றவற்றை ஊடுறுத்திக் காட்டும் நுட்பம் என்னைப் போன்றோர் கைவரப் பெறவில்லை. புதியவர்கள் இந்த நுட்பத்தைக் கைவரப் பெற்றவர்கள் ஆகுக.

6.2. மற்ற மொழிகள் பற்றிய செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டு, தமிழை மட்டுமே ஒருமுகமாய்ப் பார்க்கும் காலம் வந்திருக்கிறது. எதிர்காலத்தில் வலைப்பதிவுகள் 10 மடங்கு, 100 மடங்கு பெருகி 10000 வலைப்பதிவுகள் ஆகும் போது ஆற்றுவங்கள் கூடிப் போகும். அதைக் கையாள வலைத்திரட்டிகளின் கொண்மைத்திறம் (capacity) கூட வேண்டும். கிட்டத்தட்ட google போன்ற ஒரு தேடுபொறி இந்தத் திரட்டிக்குள் இருக்க வேண்டும். திரட்டியின் கட்டுமானம் ஒரு தேடுபொறியாய் மாறவும் செய்யலாம்.

6.3. இராம.கி. என்று கொடுத்தால், வலைப்பதிவுகளில் என்னைப் பற்றி எங்கு பேசியிருந்தாலும் அதைத் தேடியெடுத்துக் கொடுக்கும் நிலைக்கு திரட்டிகள் மாறவேண்டும்.

6.4. இனிமேலும் ஆர்வலர்களை மட்டுமே வைத்து திரட்டி நிர்வாகம் செய்யமுடியுமா என்று தெரியவில்லை. எனவே முழு நேர அலுவலாய், ஆட்களை வேலைக்கு வைக்கும் நிலைக்குத் தமிழ்மணம் வந்துவிட்டது என்றே எண்ணுகிறேன். அப்பொழுது இத்தனை செயற்பாடுகளுக்கும் பண வருமானம் வேண்டும். செலவு நடைகளைப் பார்க்க வேண்டும். அதை நோக்கி நிருவாகத்தார் சிந்திக்க வேண்டும். எப்படிச் செய்வது என்பது பெருங்கேள்வி. google, yahoo போன்றவை எப்படிச் செய்கின்றன என்று ஆய்ந்து சிலவற்றைச் செய்துபார்க்கும் காலம் வந்துவிட்டது என்றே நான் எண்ணுகிறேன்.

6.5. திரட்டிகளும், வலைப்பதிவு மனைவழங்கிகளும் (blog hosters) இணைந்து செயலாற்றும் காலம் வந்திருக்கிறதா? தெரியவில்லை. ஆனால் தமிழ்மணத்தின் தனியாளுமையை விட்டுக் கொடுக்காதீர்கள். அப்புறம் எல்லாம் கரைந்து போகும்.

அன்புடன்,
இராம.கி.

4 comments:

செல்வநாயகி said...

இராம.கி. ஐயா,

என்ன சொல்வதென்று தெரியவில்லை, எவ்வள‌வு சிந்தித்திருக்கிறீர்கள்!! பிரமிப்பும், நன்றியும். இதை நான் அச்சுநகல் எடுத்துவைத்து விநியோகிக்கப் போகிறேன்.

kolakka said...

ஆழ்ந்து சிந்தித்து எழுதப்பட்ட பதிவு. தங்கள் சேவை தொடரட்டும்.

திரட்டிகளைப்பற்றி தாங்கள் எழுதியிருந்தது
பற்றி- இப்போதே இணையத்தில்
"இராம.கி" என்று தட்டினால் 36400 பதிவுகள் கிடைக்கின்றனவே!

Dhanapal said...

/////
இப்போதைக்குக் கிடைத்திருக்கும் தரவுகளின் பேரில் நாரன்>நாரணன் (= நீரில் உறைபவன்)தமிழ்ச்சொல் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் முற்றிலும் முடிவு செய்யும் சான்றுக்கு (clinching evidence) நான் காத்திருப்பேன்.
/////

ஐயா, என் ஆராய்ச்சியில் இது சரியே. நான் தமிழ் சித்தர்களின் பாடல்களிலும் வள்ளலார் அவர்களின் பாடல்களிலும் மிகுந்த பற்று கொண்டவன். இது போன்ற பல ஆன்மிகம் தொடர்பான சொற்களை பற்றிய விவரங்கள் சேகரித்தேன்.

நமது உடம்பில் இறைவன் எங்கு இருக்கிறான் என்பதை மிக ரகசியமாகவே விட்டு சென்று விட்டார்கள் நம் முன்னோர்கள். அதை எதோ முன் பிறவி புண்ணியத்தால் வள்ளலார் வழி வந்த ஞானிகள் மூலம் அறிந்து கொண்டேன். அந்த தேடலில் கிடைத்த விளக்கம் இது.

நமது உடம்பில் நீரும் நெருப்பும் ஒன்றாய் உள்ள இடம் ஒன்று இருக்கிறது. நீர் இருந்தால் நெருப்பு அணைந்து விடும். ஆனால் அணையாத நெருப்பு ஒரு இடத்தில் உள்ளது. அதையே சிவவாக்கியர் ஒரு பாடலில் சொல்லுவார்.
"நீரும் நெருப்பும் உம்முள்ளே நினைந்து பார்க்க ஒண்ணுமே" என்பதை
போல ஒரு பாடல் வரும்.

நாராயணன் என்ற சொல் இந்த நீரை அடிப்படையாக வைத்து தான் பிறந்தது. நாராயணன் பாற்கடலில் துயில்வதாக புராணம் உண்டு. இந்த பாற்கடலும் நீரோடு சம்பந்தப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம்.

N. said...

இராம.கி

வழக்கம் போல் உங்கள் அறிவுத்திறம் பகலும் அருமையான பதிவு.

எங்களுடன் நீங்கள் இருப்பதுவே பெரிய தெம்பு! (பாக்கியம்)