Thursday, March 06, 2008

சுழற்சி மீப்பேறு

அண்மையில் cyclical repair என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லுவது என்று தமிழுலகம் மடற்குழுவில் திரு. Jai Simman R. Rangasamy என்பவர் கேட்டிருந்தார். அதற்கு அளித்த மறுமொழி:

பொதுவாக repair என்பதைத் தமிழில் நேரடியாகச் சொல்லாமல், சுற்றிவளைத்துப் பழுது பார்த்தல் என்றே சொல்லுகிறார்கள். பழுது பார்த்தல் என்பது to rectify faults என்பதற்கே சரியாக வரும். பெரும்பாலான இடங்களில், repair என்பது to rectify faults என்ற பொருள் தான் கொள்ளும் என்றாலும், நாம் சுற்றி வளைத்துச் சொல்லுவதை உணர முடியும். இன்னொரு வகையில், to maintain என்பதைப் பேணுதல் என்றே சொல்லுகிறோம். (பராமரிப்பு என்ற இருபிறப்பிச் சொல்லையும் maintenance க்கு இணையாகச் சிலர் சொல்லுவார்கள். அதுபற்றிக் கீழே பார்ப்போம்.) ஏனென்றால், பழுது வராமலேயே, ஒரு கருவி அல்லது பொருளைப் பேணமுடியும். அப்படிச் செய்வதுதான், நுட்பியல் வரிதியில், நல்ல பேணுகை (maintenance) என்று சொல்லுவார்கள்.

அப்படியானால், repair என்பதற்கு ஈடாகத் தமிழில் நேரடியாக எப்படிச் சொல்லுவது? அதற்கு முன் repair உடன் தொடர்புடைய pare, parent, prepare போன்ற சொற்களின் பிறப்பையும் பார்த்துக் கொள்ளுவோம்.

முதலில் வருவது:

pare:
"to trim by cutting close," c.1320, from O.Fr. parer "arrange, prepare, trim," from L. parare "make ready," related to parere "produce, bring forth, give birth to," from PIE base *per- "to bring forward, bring forth" (cf. Lith. pariu "to brood," Gk. poris "calf, bull," O.H.G. farro, Ger. Farre "bullock," O.E. fearr "bull," Skt. prthukah "child, calf, young of an animal," Czech spratek "brat, urchin, premature calf"). Generalized meaning "to reduce something little by little" is from 1530.

மேலே குறிப்பிட்டிருப்பதில் PIE base *per- "to bring forward, bring forth" என்பதுதான் முகன்மையானது. தமிழில் பெறுதல்/பெறல் என்பது தன் வினையில் to obtain என்ற பொருள் கொள்ளும். அதே சொல் பிற வினையில் பெற்றுதல்/பெற்றல் என உருவங் கொண்டு to cause to obtain = to bring forward, bring forth என்ற பொருளை உணர்த்திக் காட்டும். பெற்றலின் பெயர்ச்சொல்லாய் எழும் பெற்றோன்/பெற்றோர் என்ற சொற்களை நாம் அனைவரும் அறிவோம். மேலைமொழிகளிலும் *per என்னும் PIE வேரே பெற்றோருக்கு இணையான சொல்லை ஏற்படுத்தும்.

parent:
1185, from O.Fr. parent (11c.), from L. parentem (nom. parens) "father or mother, ancestor," noun use of prp. of parere "bring forth, give birth to, produce," from PIE base *per- "to bring forth" (see pare). Began to replace native elder after c.1500. The verb is attested from 1663. The verbal noun parenting is first recorded 1959 (earlier term had been parentcraft, 1930).

தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் எப்பொழுதோ ஒரு காலத்தில் உறவு இருந்திருக்க வேண்டும் என்று நான் சொல்லுவதைப் பலரும் அவ நம்பிக்கையோடே பார்க்கின்றனர். ஆனாலும் என்கடன் பணி செய்து கிடப்பதே. ஆயிரத்திற்கும் மேல் பல இணைச் சொற்களைக் காட்டி வருகிறேன்; இன்னும் காட்டுவேன். (மேலே காட்டிய fault = பழுது என்பது கூட இன்னொரு இணை தான். இது போல வேரில் பழுத்துத் தொங்கும் பலாச்சுளைகள் பல; பலாவைப் பறிக்கத்தான் ஆளில்லை. அந்த அளவிற்கு வடமொழித் தாக்கம் காட்டும் மாக்சு முல்லரின் கருதுகோள் பலரையும் அலைக்கழிக்கிறது. வடமொழியா, இந்தையிரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது; தமிழிய மொழிகளா? ஊகூம்...... எவன் சொன்னான்?) நான் அறிந்தவரை, உறுதியாக *per>pare>parent என்பதற்கு இணையாகப் பெறு>பெற்று>பெற்றோர் என்ற தமிழ்ச் சொற்பிறப்பைச் சொல்ல முடியும்.

இந்த வரிசையில் அடுத்த சொல் prepare/preparation என்பதாகும்.

1390, "act of preparing," from L. praeparationem (nom. praeparatio) "a making ready," from praeparatus, pp. of praeparare "prepare," from prae- "before" + parare "make ready" (see pare). Meaning "a substance especially prepared" is from 1646. Verb prepare is attested from 1466, from M.Fr. preparer, from L. praeparare; slang shortening prep is from 1927. Preparatory is first recorded 1413, from L.L. praeparatorius, from L. praeparatus. Applied from 1822 to junior schools in which pupils are "prepared" for a higher school.

prae என்ற முன்னொட்டுக்கு இணை, அப்படியே புற என்ற தமிழ் முன்னொட்டோ டு பொருந்திவரும். நமக்கு முன்னால் இருப்பது புறத்தில் இருப்பதே. வீட்டிற்குப் புறத்தில் இருக்கும் பொருளைப் பேசும் நானூறு புற நானூறு. வீட்டிற்கு அகத்தில் (=உள்ளே) இருக்கும் பொருளைப் பேசும் நானூறு அக நானூறு.

இந்த நிலையில், புறப்பெற்றம் = preparation என்று சொல்லுதற்கு ஏதோ நாணிக் கொண்டு, "என்ன இது இராம.கி வெறுமே ட்ரான்ஸ்லிட்டெரேட் பண்ணி சொல்லைப் பரிந்துரைக்கிறார்?" என்று கேலியும் பேசிக் கொண்டு, தய்யார் செய்தல் என்று உருதுச் சொல்லைப் புழங்க முன்வருவோம். இந்த தேவையற்ற நாணத்தை மட்டும் தூக்கி எறிந்தால், தமிழின் அடிப்படை புலப்படும். (வடமொழி என்ற திரையும் நம்மிடமிருந்து விலகும்.) தமிழில் புழங்க ஒரு நல்ல சொல்லும் கிட்டும். (அதற்கு மேல் நான் சொல்ல ஒன்றுமில்லை.)

இனி அடுத்தது repair. இங்கே எழுத்துக் கூட்டு மாறினாலும், உள்ளே re-pare என்பது இனங் காட்டி நிற்கிறது.

"to mend, to put back in order," 1387, from O.Fr. reparer, from L. reparare "restore, put back in order," from re- "again" + parare "make ready, prepare" (see pare). The noun is attested from 1595.

மீள் பெற்றல் என்பது வினைச்சொல்லாகவும், மீள் பேறு>மீட்பேறு>மீப்பேறு என்பது பெயர்ச்சொல்லாகவும் அமையும்.

என் பரிந்துரையை முடிக்குமுன், பெற்றலின் தொடர்புடைய இன்னொரு வினையையும் கூறுகிறேன்.

பாரித்தல் = ஆயுத்தப் படுத்தல், to prepare "பாயியவெழுந்த வேங்கை பாரிக்கும் அளவில்" (சூளாமணி. துற.19)
பாரித்தல் = வளர்த்தல்; to foster. "பண்பின்மை பாரிக்கும் நோய்" (குறள்851)
பாரித்தல் = அமைத்துக் கொடுத்தல், to cause to be obtained, "பரமபதம் பாகவதர் அனைவருக்கும் பாரித்தானால்" (அரிசமய. பத்திசா.98)
பாரித்தல் = உண்டாக்குதல் to make, form, construct, create (வின்சுலோ அகராதி)

பராவரித்தல்>பராமரித்தல்>பராமரிப்பு என்ற இருபிறப்பிச் சொல் இந்தப் பாரித்தலின் வழியாகப் பிறந்தது தான். பராமரிப்பு என்பதன் இருபிறப்பியைத் தவிர்த்து, பாரிப்பு என்றே நல்ல தமிழில் சொல்லலாம். இந்தச் சொற்களின் அடிப்படையில் "மீண்டும் ஆயுத்தப் படுத்தலை, மீண்டும் அமைத்துக் கொடுத்தலை, மீண்டும் உண்டாக்குதலை, மீண்டும் வளர்த்தலை", மீள் பாரித்தல் என்று சொன்னாலும் தவறே இல்லை.

எனவே cyclical repair என்பதற்குச் சுழற்சி மீப்பேறு அல்லது சுழற்சி மீள்பாரிப்பு என்று எதை வேண்டுமானாலும் பயனாக்கலாம். தமிங்கிலமே கதியென்று இருப்பதால் சொல்லத் தயங்குபவர்கள், சுழற்சி ரிப்பேர் என்று பேஷிக் கொள்ளலாம். (:-))

அன்புடன்,
இராம.கி.

3 comments:

R. said...

இராம.கி அவர்களே,

மீள் பேறு
மீள் பாரிப்பு
அருமையான பயந்தரு சொல்.
வழங்கிய பாங்குக்கு பாராட்டு.

அன்புடன்
ராதாகிருஷ்ணன்

venkatramanan said...

அன்பிற்குரிய இராம.கி. ஐயா
நண்பர்களுடன் பேசும்போது வந்து விழுந்த சுவாரசியமான விஷயம் இது.
கீழ்வரும் எழுத்துக்கள் வரும் தமிழ் சொற்கள் உள்ளதா?

* ஞி,ஞீ, ஞு ஞூ ஞெ ஞே ஞொ ஞோ
மற்றும்
* ங வரிசை எழுத்துக்களில் ஒன்றாவது (ங் மெய்யெழுத்து தவிர) என் நண்பனுக்கு ஙூ எழுத்துக்கான வடிவமே மறந்து விட்டது!

எனக்கு தெரிந்தவர் சிலரிடம் கேட்டபோது எவருக்கும் தெரியவில்லை.
நீங்களாவது சொல்லுங்களேன் ஐயா.

அன்புடன்
வெங்கட்ரமணன்.

ILA(a)இளா said...

தலைப்பு: குறிஞ்சி - இலக்கியம், நூலியல், தமிழ் இணையம், தமிழ் வளர்ச்சி, மொழி ஆய்வு மற்றும் ஆன்மீகம்.
முதன்மை நடுவர்கள் -ஜி.ராகவன், துளசி, KRS.

தமிழ் வலைப்பூ விருது 2007- குறிஞ்சி-தமிழ் வளர்ச்சி, மொழி ஆய்வு, தமிழ் இணையம் ஆகியவற்றின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட இராம.கி அய்யாவின் (வலைப்பூ-வளவு)ற்கு- தமிழ் வலைப்பூ விருதுகள் 2007- குறிஞ்சி- விருதினை வழங்கி சங்கமம் பெருமைகொள்கிறது. அய்யாவின் சேவை மென்மேலும் தொடர சங்கமம் மற்றும் நடுவர் குழு சார்பாகவும் வாழ்த்துகின்றோம். .