Tuesday, March 18, 2008

ஏழு சுரங்கள் - 1

தொய்வில்லா நாரை ஒரு கவட்டையிற் கட்டி, வலிந்து இழுத்தால் சுர்ர்ர்.... என்று அதிருமே, கவனித்திருக்கிறீர்களா? அந்த அதிர்ச்சியை ஒரு மொழிசாரா ஒலிக்குறிப்பு என்பார்; (நார் என்ற சொல் கூட நுர்>நர்.... எனும் ஒலிக்குறிப்பில் கிளைத்தது தான்.) இது போன்று வெவ்வேறு நிகழ்வுகளில் ஏற்படும் ஒலிக் குறிப்புகளைக் கொண்டு இயல் மொழிகள், தம் இயல்புக்கு ஏற்ப, ஒலிப் பொருளை உணர்த்தி, விதப்பான சொற்களை அமைத்துள்ளன.

ஒரு நாரை வலித்து இழுப்பதைத் தெறித்தல் என்றும் சுண்டுதல் என்றும் சொல்கிறோம். தொல்காப்பியத்திற்கான இளம்பூரணரின் உரையும், தெறித்து அளத்தல் என்ற முறையைக் கூறும். ஒவ்வொரு சுண்டும் (அல்லது தெறிப்பும்) தெறிப்பு விசை (deflective force), நாரின் நீளம்,  நாரின் தந்தத் திகை (tensile stress of the wire) ஆகியவற்றைப் பொறுத்து, ஒரு விதப்பான ஒலியை உண்டாக்குகிறது.

[தந்தத் திகை என்ற சொற்கூட்டு நாம் பார்ப்பதற்குப் புதுத்தோற்றம் காட்டினும், உள்ளிருக்கும் செய்தி என்னவோ பழையது தான். 'திகையாக இருக்கு, இந்த நடைக்கே இப்படித் திகைஞ்சு போனா, எப்படி?' என்று தென் மாவட்டங்களில் stress-க்கு இணையாகத் திகையுறுதலைப் பயில்வார். (திகைக்கு இருக்கும் மற்ற பயன்பாடுகளை நானிங்கு குறிக்கவில்லை.) 

தந்து என்பது நூலையும், மெல்லிய கயிற்றையும் குறிக்கும். தந்தின் நீட்சியான தந்தி என்பது ஒரு மாழைக் கம்பியைக் (metal wire) குறிக்கும். கம்பு>கம்பி என்பது போல் தந்து> தந்தி என்பதைப் புரிந்து கொள்ளலாம். தந்தித்தல் என்பது நூற்றல் என்றாகும். நூற்பது என்பது நாம் கொடுக்கும் இழுவிசையால் - drawing force - ஏற்படுவது. 

இழுவிசை என்ற சொல் பொதுமையாக நாம் கொடுக்கும் விசையையும், தந்த விசை என்பது தந்தின் உள்ளே துலங்கும் விதப்பான tensile force ஐயும் குறிக்கும். சுருக்கமாய் tension என்பதைத் தந்தம் என்றே நாம் சொல்லலாம். தந்த விசைக்கு எதிரான compressive force ஐ நாம் அமுக்குவிசை என்கிறோம். ஒரு சிலர் பயன்படுத்துவது போல, tensile force என்பதை இழுவிசை என்பது ஒரு சரியான மொழியாக்கமாய் இருக்கமுடியாது. பொதுமைச் சொற்களை விதப்பு நிகழ்வுகளுக்குப் புழங்குவது தமிழை அறிவியல் மொழியாய் வளப்படுத்தாது; அது தமிழை மொண்ணையாகவே வைத்திருக்கும்.]

சுர் எனும் ஒலிக்குறிப்பு வேறு வகையிலும் ஏற்படும்; காய்ந்த இரும்பில் நீரைச் சுண்டும் போது எழும் ஒலிக்குறிப்பும் சுரீர் என்றே சொல்லப்படும். சொர் என்று தாரை/தாரையாக பெய்யும் மழையைச் 'சொரிகிறது' என்கிறோம். சுர்> சர் என்ற திரிவில் சரசர, சரேர், சரக் என்றும், ரகர/லகரத் திரிவில் சலசல, சலேல் என்றும், இன்னும் கலவையாய் சரேல் என்றும் கூட ஒலிக்குறிப்புச் சொற்கள் தமிழிலுண்டு. சர என்பதில் கிளைத்த சரகம் என்ற சொல் தேனீயையும், வண்டையும், அவை எழுப்பும் சர்ர்ர்.... எனும் ரீங்காரத்தையும் கூடக் குறிக்கும்.

சுர் எனும் குறிப்பில் கிளைத்த சுரல் வினை, சுரம் என்ற பெயர்ச் சொல்லை உருவாக்கும். (இதேபோலக் குரல் என்பதும், நரல் என்பதும் குர், நுர் எனும் ஒலிக்குறிப்புக்களில் உருவானவையே. 'கொர கொரப் பேச்சு, நரநரவென்று பல்லைக் கடித்தான்' என்கிறோமே?) 

இன்னொரு வகையில் சுரல், சுருதலாகி, சுருதி என்ற சொல்லை உருவாக்கும். மொழிப் பயன்பாட்டில், சுரம் பெரியது; சுருதி சிறியது. (இற்றை இசையியலில் சுருதி என்ற சொல் pitch இற்கு இணையாகவும் பயன்படுகிறது.) சுருதியைத் தொகுத்து வரும் ”சுதி”,  இன்னொரு வகையில் நீண்டு, வண்டைக் குறிக்கும் சூதவம் என்ற சொல்லை உருவாக்கும். இதே போல அரசன் புகழை இசையாற் பாடும் பாணர் சூதர் எனப்படுவார். சுருதலின் இன்னொரு நீட்சியாய்ச் சுரும்புதல், சுரும்பித்தல் என்ற வினைகளும் எழும். முடிவில் சுரும்பு என்ற பெயரும் கூட வண்டைக் குறிக்க எழும்.

கல்தல் வினை, கத்தலாகிக் கத்தம்>கதம் என்ற சொல்லை உருவாக்குவது போல (பா கதம் = பரந்த பேச்சு, நாவலந்தீவின் வடபுலத்திற் பெரிதும் பரவி யிருந்த பேச்சு, சம் கதம்>சங்கதம் = கலப்புப் பேச்சு = நாவலந்தீவின் பல மொழிகளில் இருந்தும் சொற்களையும் இலக்கணங்களையும் எடுத்துக் கலந்து புனைந்த பேச்சு, செங்கதம்>செம்மையான பேச்சு, standardized speech, 

செந்தமிழ் போல), சர்> சல் என்னும் திரிவில் சல்தல் வினை எழுந்து சத்தம் எனும் பெயரை உருவாக்கும். கல்தல்> கத்தல் தமிழென்றால், சல்தல்> சத்தல்> சத்தமும் தமிழ் தான். சரகமும் சத்தமும் ஒரே பொருள குறிக்கும் ஒலிச் சொற்கள். அதே போல சத்தத்தில் சகரம் தவிர்த்த அத்தம் என்ற சொல்லும் சுருதியைக் குறிக்கும் சொல் என்று சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் பூதியற் (physics) பேராசிரியர் வீரபாண்டியன் நிறுவுவார்.

http://www.musicresearch.in/categorywise.php?authid=12&flag=R

 மேலுமுள்ள தமிழ்த் திரிவில், சுர் என்பது சுல்>சில் என்றாகிச் சிலம்பல், சிலைத்தல் என்ற வினைச்சொற்களையும், அவையொட்டிய பெயர்ச் சொற்களையும் உருவாக்கும். சிள்வண்டைக் குறிக்கும் சில்லி (இது வடமொழியில் ஜில்லி ஆகும்), சில்லிடுதல், சில்லெனல், சில்லி, சில்லிகை (= சிள்வண்டு, வட மொழியில் ஜில்லிகா), சில்லூறு (= வண்டு) போன்ற சொற்களையும் கூட இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

இன்னும் வேறு வகையில், சுல்>சொல் எனும் திரிவையும் கூர்ந்து காணலாம். மொல்லும் ஓசை எப்படி மொழிதற் சொல்லை உருவாக்கியதோ, அது போல் சொல்லுதல் என்பதும் இங்கே உருவாகிறது. இன்னொரு வளர்ச்சியில் சொல்ந்தது சொன் என்றும் திரியும். 

இதே ஒலிப்பில் வரும் anglo norman சொல்லான soun, Latin சொல்லான sonus, சங்கதச் சொல்லான svan ஆகியவற்றையும் ஒப்பு நோக்கலாம். (இது போன்ற இந்தையிரோப்பியச் சொல்லிணைகளை நான் எடுத்துக் காட்டினால், அவற்றை ஏற்பதற்குப் பலரும் தயக்கம் காட்டுகிறார்; உயர்குடும்பச் சொற்களோடு, ”தாழ்ந்த” தமிழியச் சொற்களை ஒப்பிடலாமோ? என்ன ஓர் அவச்சாரம்? :-) என்று அந்த அளவிற்கு ஒரு மாயத்திரையால் நம் கண்ணைக் கட்டி வைத்திருக்கிறது இந்தச் சிந்தனை.)

சுல்>சல் எனும் திரிவில் திமிலைப் பறையைக் குறிக்கும் சல்லரியும், தாள ஒலியைக் குறிக்கும் சல்லகத்தையும் (வடமொழியில் ஜல்லகம்), சல்லரை என்னும் இசைக்கருவியையும் (சல்லரை, வடமொழிப் பலுக்கில் ஜால்ரா ஆகும்.) இனங்காட்ட முடியும்.

தவசங்களைக் குந்தாணியில் போட்டு உலக்கையால் குற்றும் பொழுது எழும் ஓசைக்குறிப்பு சலுக்கு மொலுக்கு என்று தமிழில் சொல்லப்படும். தவிர, சள்ளட்டி, சளப்பு (ஜ்ல்ப் என்று வடமொழியாகும்.), சளபுள, சளக்குப் புளக்கு (நீர் அசையும் போது ஏற்படும் ஒலி), சளசள (அருவி நீர் கீழே விழும்போது ஏற்படும் ஓசை) போன்ற ஒலிக்குறிப்புகளும் உண்டு. இந்த ஒலிக்குறிப்புகளின் வழியாகச் சரகம் (=தேனி, வண்டு), சலம் (=ஓசையிடும் நீர்; சலம் தமிழே, அதை ஜலம் என்று ஒருசிலர் தவறாகப் பலுக்குவதால், வடமொழியோ என்று பலரும் எண்ணிக் கொள்கிறார்கள்), சலங்கை (ஓசையிடும் காலணி), சலித்தல் (=ஒலித்தல்), சள்ளுவாயன் (=ஓயாது பேசுபவன்) என்ற சொற்களும் உருவாகும். அடுத்து லகரம் தகரமாகும் போலியில், சலங்கை சதங்கையாகவும் ஆகும். கிண்ணங்களில் நீரை நிரப்பி, அவற்றைக் கோல் கொண்டு தட்டி ஓசை எழுப்பும் சல தரங்கம் என்ற கருவியையும் (அதுவும் தமிழ் தான்) இங்கு எண்ணிக் கொள்ளுங்கள்,

சுர் எனும் ஒலிக்குறிப்பு இத்தோடு இருப்பதில்லை. இன்னும் நீட்சி பெற்று, சகரம் தவிர்த்த வினைச்சொல்லாய் உர்தல், உருமுதல், உரைத்தல் என்ற விதப்பான வினைச்சொற்களை எழுப்பும்.

இவ்வளவு சொற்களை நீட்டிச் சொன்னதற்குக் காரணம், 'சுரம், சுருதி என்பவை முற்றிலும் தமிழே' என்று நிறுவத் தான். ஒரு சிலர் ஸ்வரம், ஸ்ருதி என்று வடமொழிப் பலுக்கில் சொல்வதாலேயே அவை வடசொற்கள் ஆகிவிடா. [பல தமிழ்ச் சொற்களில் இப்படி வகரத்தையும் ரகரத்தையும் நடுவில் நுழைத்து, வேறு தோற்றம் காட்டி, நம்மை மழுங்கடித்து, வேண்டுமெனில் எழுதாக் கிளவியையும் கொண்டுவந்து மருட்டி, தமிழை இல்லை என்றாக்குவது நடந்து கொண்டே தான் உள்ளது. அதே பொழுது, பாகதத்தில் வகர, ரகர உள்நுழைவு பெரும்பாலும் ஏற்படாது. பாகதம் சங்கதத்திற்கு முந்தியது என்ற அடிப்படையையும் மூடி மறைத்து, 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்ற கொள்கையில் சங்கதத்தைத் தூக்கிவைப்பவர் எங்கிருந்தாலும் தம் வேலையைச் செய்து கொண்டிருப்பர். :-)]

சுரம் எனும் ஒலி முன்சொன்னது போல், தெறிப்பு விசை, நாரின் நீளம், நாரின் தந்தத் திகை ஆகியவற்றைப் பொறுத்து, ஒவ்வொரு தெறிப்பிற்கும், தன் அளவில் மாறு கொள்ளும். இருந்தாலும் அவற்றை 12 சுரங்களாயும், 7 சுரங்களாயும் பட்டறிவில் உணர்ந்து அடையாளம் காட்டுவது தமிழிசையின் மரபு. 

செவ்வியல் இசையில் சுருதி என்பதைச் சுரங்களைக் காட்டிலும் நுண்ணிய அளவீடாகக் குறிப்பார். சுருதி கூடுதலா, குறைச்சலா எனும் போது அதிர்ச்சியின் பருவெண் (frequency) கூடுதலா, குறைச்சலா என்றே பார்க்கிறோம். (பருவெண்ணைச் சிலர் அதிர்வெண் என்பார்; அது சரியல்ல. அதிர்ச்சி குறிக்காத பருவெண்களும் பல்லாயிரக் கணக்கில் அறிவியலில் உண்டு.)

இந்தியச் செவ்வியல் இசையில் எழு சுரங்கள் என்றவுடன் பலருக்கும் ச,ரி,க,ம,ப,த,நி என்ற குறியீடுகளே நினைவுக்கு வரும். (இதற்கு இணையான குறியீடுகளை ஆங்கிலத்தில் C,D,E,F,G,A,B என்றும், மேலைச் செவ்வியல் இசையில் Do, Re, Me, Fa, So, La, Ti என்றும் சொல்வார்.) 

இன்னும் ஆழமாய்க் கேட்டால், அக் குறியீடுகளுக்கு ஆன சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற சங்கதப் பெயர்களை எடுத்துச் சொல்வார் (இப் பெயர்களை ஆழப் பார்த்தால் அவை முழுதும் சங்கதம் அல்ல. சில தமிழாயும், சில இருபிறப்பியாயும் தோற்றமளிக்கின்றன. இருந்தாலும் பழக்கங் கருதி அவற்றைச் சங்கதப் பெயர்கள் என்றே சொல்கிறேன். இச்சுரங்களின் பெயர்களுக்கு இணையாய் மேலையிசையில் Tonic, Supertonic, Mediant. Subdominant, Dominant, Submediant, Leading notes என்றும் சொல்வார். அவை தமிழ்ப் பெயர்களோடு பெரிதும் பொருந்தியுள்ளன.) 

அதோடு, 

சட்ஜம் என்பதற்கு 'மேலும் 6 சுரம் பிறக்க ஏதுவானது' என்ற பொருளையும்,
ரிஷபம் என்பதற்கு காளைமாட்டின் ஒலி என்றும்,
காந்தரம் என்பதற்கு இன்பசுகம் தரும் காந்தர்வ ஒலி என்றும்,
மத்திமம் என்பதற்கு நடுவில் உள்ளது என்றும்,
பஞ்சமம் என்பதற்கு ஐந்தாவது என்றும்,
தைவதம் என்பதற்கு தெய்வத் தொடர்புடையது என்றும்,
நிஷாதம் என்பதற்கு '6 சுரங்கள் படிப்படி உயர்ந்து தன்னிற் சேரப்பெற்றன' என்றும்,

விளக்கம் சொல்லிப் பொருந்தப் புகல்வார். மோனியர் வில்லிம்சு அகர முதலியோ, இன்னும் மேலே போய், சட்ஜத்தை ஷட்ஜம் என்றே குறிக்கும். எந்தவொரு செவ்வியல் இசைக்காரரும் ஷ என்று சுரம்பாடி நான் கேட்டது இல்லை. ஆனாலும் அப்படித்தான் மோனியர் வில்லியம்சு குறிக்கிறது. தவிர ஷட்ஜம் என்பது 'நாக்கு, பல், அண்ணம், மூக்கு, தொண்டை, நெஞ்சு என்ற ஆறு உறுப்புக்கள் சேர்ந்தொலிக்கும் ஓசை' என்றும் அது குறிக்கிறது. "இப்படி ஆறு உறுப்புக்கள் சேராமலா மற்ற சுரங்களை ஒலிக்கிறோம்?" என்ற கேள்வியும் அதைப் படிக்கும் நமக்குச் சட்டென எழுகிறது.

ஷட்ஜத்தின் ஒலி மயில் அகவலையும், ரிஷப ஒலி காளைக் கத்தலையும், காந்தார ஒலி ஆட்டுக் கனைப்பையும், மத்யம ஒலி பெருங் கோட்டான், கொக்கு, நாரை போன்றவற்றின் ஒலிகளையும், பஞ்சம ஒலி குயிற் கூவுலையும், தைவத ஒலி குதிரைக் கனைப்பையும், நிஷாத ஒலி யானைப் பிளிறலையும் உணர்த்துவதாக மோனியர் வில்லிம்சு சொல்லும். 

வெவ்வேறு ஆசிரியர் இதுபோல் வெவ்வேறு உயிரின ஒலிகளை இச் சுரவொலிகளுக்கு ஈடாகச் சொல்வதுண்டு. அவற்றையெலாம் படிக்கும்போது தெளிவு கிடைப்பதற்கு மாறாய்க் குழப்பமே மிஞ்சும். மோனியர் வில்லியம்சு சொல்வது போலச் சுரக்குறியீடுகள் தம் முதலெழுத்தைக் குறிப்பதாயானால், ஷ, ரி, ga, ம, ப, தை, நி என்றல்லவோ இருந்திருக்க வேண்டும்? மாறாக, ச, ரி, க, ம, ப, த, நி என்றல்லோ நடைமுறையில் சொல்லப்படுகின்றன? (தைவதத்தை தய்வதம் என்றெழுதித் தகரக் குறியீடு எழுந்ததாகச் சொல்வதுமுண்டு. அதைக் கீழே பார்ப்போம்.) சுரங்களின் நடைமுறைக்கும் மோனியர் வில்லிம்சு விளக்கத்திற்கும் இடையே நெருடலும், தான்தோன்றித்தனமும் புலப்படும்.

இனி '6 சுரங்கள் பிறக்க ஏதுவானது சட்ஜம்' எனும் விளக்கத்தையும் அலசிப் பார்ப்போம். இராமகாதை நாயகனுக்கு, தசரதன் மகன் என்ற கருத்தில், தாசரதி என்றொரு பெயருண்டு. இதே போல் மா பாரதத்தில் பீஷ்மருக்கு கங்கை மகன் என்ற பொருளில் காங்கேயன் என்பார். இப்படிப் பெற்றோர், தாத்தன்/பாட்டி வழியிற் பிள்ளைகளுக்குப் பெயரிடுவது உலக வழக்கம் தான். 

இவ்வழக்கத்திற்கு மாறாய் 'நாலு மக்களைப் பெற ஏதுவானவன்' என்று தசரதனுக்குச்’ சதுரதி” என்று பெயரிடுவாரோ? அதே போல, பீஷ்மனைப் பெற்றவள் என்ற பொருளில் பீஷ்மை என்று கங்கைக்கு பெயரிடுவாரோ? அப்புறம் எப்படி '6 சுரங்கள் பிறக்க ஏதுவானது சட்ஜம்' என்கிறார்? மொத்தத்தில் சரியான பெயர்க் காரணம் அறியாது, தான்தோன்றி விளக்கமாய் இது இருக்கிறதே?

வேடிக்கை என்னவென்றால், இதுபோன்ற தான்தோன்றி விளக்கங்கள், காலங் காலமாய்ச் சொல்லப்பட்டு, அவையே நிலைத்து, மற்ற உருப்படியான விளக்கங்கள் மறைந்து போவதும் உலகிலுண்டு. காட்டாக, மரைக்காடு என்று ஊரின் பெயரை, சோழர் கழிக்கானப் (backwaters) பகுதியில் (அலையாத்திக் காடுகள் இருக்கும் பகுதி) யாரோ ஒருவர் தவறான எழுத்துக் கோவையில் மறைக்காடு என்று எழுதப்போக, அதை அப்படியே வேதாரண்யம் என மொழி பெயர்த்து, அப்பெயரும் நிலைபேறு கொண்டு, சமயக் குரவர் பாட்டுகளிலும் கூட ஆவணமாகி இருக்கிறது. "வேதங்கள் வந்து பூசித்த காரணத்தால் வேதாரண்யேஸ்வரர்" என்றெலாம் கதை கட்டுவதும் நாம் அறியாததல்ல. (இல்லை, மறைக்காடு என்பது வேறு பொருளில் எழுந்தது என்பாரும் உண்டு, நானே இந்த வேறு பொருள் காரன் தான்.)

மேற்கூறிய சுரங்களின் சங்கதப் பெயர்கள், நமக்கு இதுவரை கிடைத்த சான்றுகளின் படி, ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திர பல்லவனின் குடுமியான்மலைக் கல்வெட்டில் தான் முதன்முதலில் ஆவணப் பட்டன. கல்வெட்டுத் தவிர்த்து இதே கருத்தை, நமக்குக் கிடைத்த நூல்களில், 7- ஆம் நூற்றாண்டு நிகண்டான சேந்தன் திவாகரம் (இதை 8 ஆம் நூற்றாண்டு என்று சொல்லுவாரும் உண்டு),

சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும்
பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை
ஏழும் அவற்றின் எழுத்தே யாகும்

எனப் பதிவுசெய்யும். வடமொழி நூலான 'நாரத பரிவ்ராஜக உபநிடதம்' என்ற நூலில் (இது எந்த நூற்றாண்டுப் பொத்தகமென எனக்குத் தெரியவில்லை) முதன் முதலாக ச,ரி, க, ம, ப, த, நி என்ற சுரக்குறியீடுகள் குறிக்கப் பட்டதாக, 'சிலப்பதிகாரத்தில் இசைச் செல்வங்கள்' என்ற பொத்தகத்தில் சொல்லப் பட்டுள்ளது. (டாக்டர் சேலம் எஸ் செயலட்சுமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 2000 பக்கம் 288).

மேலும், 11 ஆம் நூற்றாண்டில் சிலம்பிற்கு எழுந்த அடியார்க்கு நல்லார் உரையில்,

சரிகம பதநிஎன்(று) ஏழெழுத்தால் தானம்
வரிபார்த்த கண்ணினாய் வைத்து - தெரிவரிய
ஏழிசையும் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாம் சுத்தத் துளை

என்ற வெண்பா (இது பஞ்ச மரபின் வங்கிய மரபு, குழலியல் வந்த முதல் வெண்பா) எடுத்துக்காட்டப் பட்டிருக்கும். இச்சொல்லாட்சியைக் குடுமியான் மலைக் கல்வெட்டோடு பொருத்திப்பார்த்தால், பஞ்சமரபு என்ற நூல் பெரும்பாலும் பல்லவர் காலத்திலிருந்த ஒரு பாண்டிய மன்னனை முன்னிறுத்தி எழுந்திருக்க வாய்ப்புண்டு என அறிகிறோம். (இக்காலக் குறிப்பிலும் சில இசையறிஞர் மாறுபடுவார்.)

இதற்கு மாறாய், சிலம்பின் மதுரைக் காண்டம் ஆய்ச்சியர் குரவையில் சங்கதப் பெயர்களை முன்னிறுத்தாது செந்தமிழ்ப் பெயர்களே இருக்கும். காட்டாக, ஆய்ச்சியர் குரவையில் ஏழு கன்னியரைக் குரவையில் நிறுத்தி அவருக்கு ஏழிசைப் பெயர்கள் இட்டுச் சொல்லும் இடத்தில், எடுத்துக் காட்டு என்னும் தலைப்பின் கீழ்,

குடமுதல் இடமுறையாக் குரல் துத்தம்
கைக்கிளை உழைஇளி விளரி தாரம் என
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே

என்ற வரிகளில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று ஏழு சுரங்களின் தமிழ்ப்பெயர் தரப்படும். இதே பெயரைப் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டும் (இதை 9 ஆம் நூற்றாண்டு என்பாரும் உண்டு),

குரலே துத்தம் கைக்கிளை உழையே
இளியே விளரி தாரம் என்றிவை
ஏழும் யாழின் இசைகெழு நரம்பே

என்று வரிசைப் படுத்தும். இதே சுரங்களுக்கு சரிகமபதநி என்று சொல்லாமல்,

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ வெனும்
இவ்வே ழெழுத்தும் ஏழிசைக் குரிய

என்று திவாகர நூற்பா பழைய குறியீடுகளைச் சுட்டிக்காட்டும். ஆகச் சங்க காலத்தில் இருந்த தமிழ்ப் பெயர்களும், அவற்றிற்கான குறியீடுகளும் பல்லவர் காலத்தில் முற்றிலும் மாறிப் போய்விட்டன என்றே கொள்ள வேண்டியுள்ளது.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முதற்கண்...
சங்கமம் தமிழ் வலைப்பூ விருது பெற்றமைக்கு, உளம் கனிந்த வாழ்த்துக்கள் இராம.கி ஐயா!

விருதின் நடுவராக மட்டும் இல்லாமல், உங்கள் வாசகராகவும், சக பதிவராகவும் கூட என் வாழ்த்துக்களைச் சொல்வதில் எனக்கு மகிழ்ச்சி!

வளவினால் தமிழை வளமாக்குங்கள்!
தமிழதை எங்கள் உளமாக்குங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இசை பற்றிய ஒரு பதிவை உங்க நட்சத்திர வாரத்தில் கொடுக்க முடியுமா-ன்னு கேட்டிருந்தேன்!
என் நட்சத்திர வாரத்தில் கொடுக்கறீங்க! :-)
மிக்க நன்றி!

நட்சத்திரப் பதிவை முடிச்சிட்டு வந்து, இங்கு முழுப் பதிவையும் வாசிக்கறேன்!