Monday, March 24, 2008

ஏழு சுரங்கள் - 4

ஆறாவது சுரம் தைவதம். இதைத் தெய்வதம் என்று சொல்லித் தெய்வத்தோடு தொடுக்கும் சங்கத விளக்கம் தட்டையாகவே தெரிகிறது. அது எப்படி இந்தச் சுரம் மட்டும் தெய்வம் நாடுவதாய் இருக்க முடியும்? மற்றவை எல்லாம் தெய்வம் ஏற்காதவையா? "ஏழிசையாய், இசைப்பயனாய், இன்னமுதாய்......" என்றெலாம் பழம் பஞ்சுரப்பண்ணில், சுந்தரர் திருவாரூர் இறைவனை அழைத்திருக்கும் போது, எல்லாச் சுரமும் தெய்வத்தொடர்பு கொண்டவை என்றல்லவா சொல்ல வேண்டும்? இச்சிந்தனை தான், வெளிர்கருப்பு என்ற சொல்லாடல் வழி, என்னைத் துய் என்னும் தமிழ்ச் சொல்லை நோக்கித் தேட வைத்தது.

pure என்ற பொருட்பாட்டைக் குறிக்கும் தூய என்ற சொல் துய் என்ற வேரில் கிளைத்தது; அதற்கு வெண்மைப் பொருளும் உண்டு. வெள்ளைப் பஞ்சைத் துய் என்று சங்க இலக்கியம் சொல்லும். துய்யித்தல்/துய்வித்தல் என்பது to make it pure என்று வினையைக் காட்டும். துய்ய = கலப்பற்ற, துய்ய மல்லி = 4 முதல் 6 மாதங்களில் விளையக்கூடிய வெள்ளைச் சம்பா நெல், துய்ய பால் = நீர் கலக்காத பால், துய்யன் = வெள்ளி மணல் ஆகிய சொற்களையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

வெள்ளை நிறப் பருத்தியில் ஆன துணி துய்>துய்கு>துகு>துகில் என்று சொல்லப் படும். பருத்தித் துகிலை உலகிற்கு அறிமுகப் படுத்தியது இந்தியத் துணைக் கண்டமாகலாம் என்றே புதலியர் (botanists) கூறுகிறார். துகில் என்ற சொல்லுக்கும் textile என்ற மேலைச் சொல்லுக்கும் சொற்பிறப்புத் தொடர்பு உண்டு. அதன்காரணமாகத் தான் textile science ஐத் துகிலியலென இக்காலம்  சொல்கிறோம். [வேறு சிலர் textile யை தச்சுதலோடு தொடர்புறுத்துவார்; நான் அவரிலிருந்து மாறுபடுவேன். தச்சு வினையை techne என்பதோடு இணைத்துப் பார்ப்பதே பொருத்தமாகும்.]

துகிலில், மைக்குழம்பு கொண்டெழுதியது text. [ எழுதுபொருளின் வாயிலாய், எழுதிய உரைக்கு வந்த பெயர் துகில் - text. இப்படி ஓர் இயலுமை (possibility) இருந்தும், "சிந்து சமவெளி நாகரிகத்தாருக்கு எழுத்தே கிடையாது, அங்கு கிடைத்த கீற்றுகள் எல்லாம் மொழியையும் பேச்சையும் குறிப்பனவே அல்ல" என்று இக்காலத்தில் ஒரு மேலையாய்வாளர் குழு சொல்ல முற்படுகிறது. என்ன செய்வது? வெள்ளைப் பருத்தித் துணியோ, வெண்பட்டோ கால காலத்திற்கும் நிலைத்திருக்குமா என்ன, ஒரு தலைமுறையில் இற்றுப்போய் விடாதோ?] வெள்நூலைத் துகுநூலென்றும், வெண்பட்டைத் துகுலமென்றும்,  வெண்காரத்தை (borax) துடங்கணம் என்றும் நம் அகரமுதலிகள் குறித்து வைக்கின்றன.

துய்யின் திரிவாய்த் துல்>துலங்கு>துலக்கு என்ற சொல்லும், அழுக்கைப் போக்கும் வினையைக் குறிக்கும். துலம், துலவம் என்ற சொற்களும் பருத்தியையே குறிக்கின்றன. துல்>துங்கம் என்ற சொல் தூய்மையையும், வெள்ளையையும் குறிக்கிறது. வெள்நுரை பொங்கப் புரண்டெழுந்து வரும் [கன்ன பெருநையின் (River Krishna)] துணையாறு துங்கப் பெருநை>துங்கப் பெருதை>துங்க பெதுரை>துங்க பத்ரா என இன்று குறிக்கப் படுகிறது. [நாவலந்தீவின் ஆற்றுப் பெயர்களிற் பலவும் தமிழ்த் தொடர்பையே காட்டுகின்றன. ஆய்ந்து பார்க்கத் தான் ஆட்களைக் காணோம்.]

துய்ய நிறத்தில் (வெள்ளை நிறத்தில்) உள்ள நீர்மம் துய்த்தம்>துத்தம் என்றாகிப் பாலைக் குறிக்கும். அதேசொல் வடபுலத்தில் தூத் (dhuuth) என்று ஆகும். வெறுமே குடிக்கும் பால் மட்டும் தூத் என்று வடபுலத்திற் சொல்லப் படுவதில்லை. எங்கெல்லாம் பால்வடியும் மரங்களுக்குப் பாலை என்று நாம் சொல்கிறோமோ, அந்த மரங்களுக்கு dhuthi என்றே ஓர் ஒழுங்கு முறையில் அவர் சொல்கிறார். காட்டாக, பால்வடியும் பல்வேறு கள்ளிச் செடிகளும் அதே காரணத்தாற் தூதி என்றே வடபுலத்திற் சொல்லப் படும். இதேபோல குடசப் பாலை மரமும் துத்குரி, துதாரி என்று சொல்லப்படும். வெட்பாலை எனும் மரமும் dhudi என்றே சொல்லப் படுகிறது. ஆக, பால் / துத்தி>தூதி என்ற சொற்களிடையே நாவலந்தீவு முழுவதும் ஓர் ஒழுங்கிணை தென்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், துய்ப்பு>துப்பு>துப்பம் என்ற தமிழ்ச் சொற்கள் பாலில் கிடைக்கும் நெய்யைக் குறிக்கின்றன. துப்புருவும் (=சுத்தமாக்கும்) செயலில் விளையும் துப்புரவு என்ற பெயர்ச்சொல்லும் தூய்மை செய்தலையே குறிக்கிறது. போரில் பகைவரோடு பொருதும் வீரர்கள் அணிந்து கொள்ளும் சிறிய வெள்ளை நிறப் பூ நம் இலக்கியங்களில் தும்பைப் பூ என்றே சொல்லப்படும். துப்பு>தும்பு என்ற சொல் வெண்மையைக் குறிக்காமல் தும்பை என்ற பூப்பெயர் தோன்ற முடியுமா?

துத்தம் (=பால்) பற்றி இவ்வளவு விரிவாகப்பார்த்த நாம், அது பெயரடையாகப் (adjective) பயன்படும் விதயத்தை இனிப் பார்ப்போம். நாகம் என்ற சொல் இரும்பு தவிர்த்த கருநிற மாழைகளைக் (காட்டாக lead, zinc) குறிக்கும் ஒரு தமிழ்ச்சொல். பல்வேறு நாக மாழைகளில், கொஞ்சம் வெளிறிய கருப்புக் கொண்ட நாகத்தைத் துத்த நாகம் (=zinc) என்கிறோம். இதேபோல வெள்ளைப் படிகாரம் (copper sulphate) ஒன்று கொஞ்சங் கொஞ்சமாய் நீரேற, மயில் நிறம்ப் (=நீல நிறம்) பெற்றதால் மயில் துத்தம் (வெளிறிய நீலம்) எனப்படுகிறது.

இனி வெள்ளை நிறத்தைக் குறிக்கும் துய் என்ற வேரின் இன்னொரு திரிவாய், தய்யில் விளைந்த சொற்களைப் பார்க்கலாம். பாலிற் பிரை குத்திக் (பிரை குத்துதல் = to inoculate) குறிப்பிட்ட நேரம் நொதிக்க (to ferment) வைத்தபின் உருவாகும் பொருள் இன்னும் அதிக வெள்ளை நிறம் பெற்றுத் தயிர் என்றே குறிக்கப் படும். எயிர்>எகிர் ஆவது போல, வயிர்>வகிர் ஆவது போல வடபுலத்தில் இச்சொல் தயிர்>தகிர்>dhahi என்றாகி ஒலிக்கும். ஆனாலும் வெள்ளை நிறப் பொருள் என்ற உண்மை உள்ளே நிறைந்து நிற்கும்.

தய் என்னும் சொல் வெள்ளை நிறம் குறிப்பதை இன்னொரு இலக்கியச் சான்றின் வழியும் பார்க்கலாம். முன்னே "சிலம்பில் வரலாறு' என்ற கட்டுரையில், வெள்ளைச் சாம்பலை (திருநீறாய்ப்) பூசிக்கொள்வதும், மாலை அணிவதும் ஆகிய பழக்கங்கள் தமிழர்போலவே ஆத்திரேலியப் பழங்குடியினருக்கு உண்டென்பதையும், ஆத்திரேலியப் பழங்குடியினருக்கும், வரலாற்றுப் பழந்தமிழருக்கு முந்திய நிலையில் இருந்த குடியினருக்கும் இடையே இருக்கக் கூடும் ஈனியல் ஓரிமை (genetic uniformity) பற்றியும், மேலோட்டமாய்ச் சொல்லியிருந்தேன். இந்தப் பின்புலத்தோடு, அரக்கர், அசுரர் என்பவரை வடபுலத்துத் தொன்மங்கள் சிவநெறியாளராயும், திருநீற்றுச் சாம்பல் பூசியவராயும் காட்டுவதைப் பொருத்திப் பார்த்தால், ஒரு சில மாந்தவியற் தொடர்புகள் விளங்கும். காட்டாக, கந்த புராணம், தட்ச காண்டம், கயமுகன் உற்பத்திப் படலத்தின் 43 ஆம் பாடலில் மகரந்தம் பொருந்திய பூமாலை அணிந்து, வெள்ளைச் சாம்பலைப் பூசிக் கொண்ட அரக்கரின் தலைவனைக் குறிக்கும் படி,

"தாதுலாந் தெரிய லாகத் தயித்தியர்க்கு இறைபால் எய்தி"

என்ற ஓரடி பயிலும். இதில் அரக்கர்/அசுரர், தயித்தியர் என்றே கூறப் படுவார். அடிப்படையில் அரக்குநிறம் கொண்ட அரக்கர் தம் உடலின் பல பகுதிகளில் சாம்பலைப் பூசியிருந்தால் ஒழிய, வேறு எப்படி தயித்தியர் ஆக முடியும்?

ஆக விளிரிய தாரத்தில், தாரம் தவிர்த்து விளரி என்றானது போல், இங்கு நிஷாதம் தவிர்த்து தய்வதம் என்று ஆனது போலும். தய்வதம் = விளர்த்தது, வெளிறியது.

கடைசியாக நிஷாதம். இதற்கான வடமொழி விளக்கம், 'ஆறு சுரங்களும் படிப்படியாய் உயர்ந்து தன்னிடம் சேரப் பெற்றது' என்ற சுற்றி வளைத்து அமையும். சட்டென்று உப-நி-ஷத் என்ற சொல்லும், 'உடன் - கீழ் - இருத்தல்' என்ற அதன் பொருளும் நமக்கு நினைவு வரலாம். இங்கே நி-ஷாத என்பதை, மற்றவைகளைக் "கீழே இருக்க வைத்த" என்ற வகையில் பிறவினையாகப் பொருள்கொள்ள வேண்டும் போலும்! ஆனாலும் அதன் பொருந்தாமை நம்மை ஓர்ந்துபார்க்க வைக்கிறது. இப்படிச் சொற்களை உடைத்துக் கூறுகள் ஆக்கி, அவற்றைப் பின் அலசிப் பெருஞ்சொல்லுக்குப் பொருள் காண்பது மோனியர் வில்லிம்சுக்கும், பாணினி வழியாருக்கும் விடாதுள்ள வழக்கம். தமிழில் சொற்களை உடைத்துப் பார்க்கும் வழக்கம் பெரும்பாலுமில்லை. பொதுவாய், உள்ளே துலங்கும் வினைச்சொல் என்ன என்று பார்ப்போம். அடுத்து, உட்பொருள் மாறாமல் பலுக்கத் திரிவு ஏற்படுவதையும், திரிவுக்குப் பின் பொருள்நீட்சி ஏற்படுவதையும் கவனிப்போம்.

காட்டாகத் தருவது என்னும் வினை உருவாக்கும் பெயர்ச்சொல் தார். (வாழைத் தாரை இங்கு எண்ணிக் கொள்ளுங்கள்.) தருவது என்னும் வினை முன்னே தருவது, மேலே தருவது என்று இருவகைப் படும். தாரின் நீட்சியான தாரம் என்ற சொல் உச்சம், ஏற்றம் என்ற பொருட்பாடுகளை நேரடியாகக் காட்டும். இன்னும் நீளுதலில், ஏறி உயர்ந்து நிற்கும் தாரகை (star), தாரணி>தரணி (= ஏற்றம் பெற்ற உலகு) என்ற சொற்கள் ஏற்றப் பொருளைச் சரியாகவே குறிப்பதைப் பார்க்கலாம்.

நிஷாத என்பதை நி-ஷாத என நறுக்கிப் பார்க்காமல், நிவதம்> நியதம்> நியாதம்>நிஷாதம் என்று பார்க்க முயன்றால் சட்டென்று உட்பொருள் விளங்கிவிடும்.

கோயில்களில் மூலத் திருமேனிக்கு முன் குருக்கள்மார் படையலை எடுத்துக் காட்டுகிறார் அல்லவா? அதை வடமொழிப் பலுக்கில் நைவேத்யம் என்று சொல்வார். உண்மையில் நிவதம் எனும் நல்ல தமிழ்ச்சொல் அங்கே திரிந்து ஒலிக்கிறது.

நிவதல் = உயர்தல்; நிவத்தல் = உயர்த்தல். "மாக்கடல் நிவந்து எழுதருஞ் செஞ்ஞாயிற்றுக் கவினை" என்பது சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பரணர் பாடிய புறநானூறு 4 ஆம் பாடலில் வரும் ஒரு வரி. இது கடலிருந்து உயர்ந்து வரும் செஞ்ஞாயிற்றின் அழகைக் குறிக்கிறது. இதே போல நீரின் மேலே வரும் தோற்றத்தைக் குறிக்கும் முகமாக "இருஞ்சேற்று ஈர் அளை அலவன் நிவப்ப வழங்குநர் இன்மையிற் பாடு ஆன்றன்றே" என்பது சேந்தன் கண்ணனார் பாடிய அகநானூறு 350 ல் வரும் வரி (நிவப்ப என்பது நீப்ப என்று பாட வேறுபாடாய் வருவதும் உண்டு.) "பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்" என்பது கயமனார் பாடிய குறுந்தொகை 9 ஆம் பாட்டு (பச்சை இலைகளுக்கு மேல் உயர்ந்து தோன்றும் திரண்ட காம்புடைய நெய்தற் பூ). "கான யானை கைவிடு பசுங்கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும்" என்பது மீனெறி தூண்டிலார் பாடிய குறுந்தொகை 54 (கான் யானை கைவிட்ட பச்சை மூங்கில் மீன் எறி தூண்டிலைக் காட்டிலும் உயரும்). இன்னும் சிலம்பு, பரிபாடல் போன்ற நூல்களும் உயர்ந்து என்னும் பொருளில் நிவந்து என்ற சொல்லைப் புழங்குகின்றன.

ஆக நிவத்தல் என்பது நல்ல தமிழே. இனி, நிவந்தது நிவதம் எனப் பெயர்ச் சொல்லாய் மாறும். இன்னும் திரிந்து, வடபுலத்தார் நாவில் நிவதம்> நிவத்தம்>நிவத்யம்>நிவேத்யம்>நைவேத்யம் என்று திரியும். நாமும் அதைக் கோயில்களில் கேட்டு, இனம் தெரியாமல் மருண்டு, 'நம் குருக்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்' என்று வெள்ளந்தியாக ஏற்று, இன்னொரு தமிழ்ச் சொல்லை இழந்துநிற்போம். இப்படி வடமொழிப் பலுக்கற் திரிவில் தொலைத்த தமிழ்ச் சொற்கள் ஏராளம் ஏராளம்.

இவ்வளவு இலக்கியச் சொல்லாட்சிகளை மேலே பார்த்ததுபோக, உயர்ச்சிப் பொருளில் இசையியலிலேயே ஒன்றைப் பார்க்கலாம். தாளத்தைக் குறிக்கும் எழுவகைத் தூக்குகளில், நிவப்புத் தூக்கு என்ற ஒன்று தமிழிசையில் உண்டு. சிலம்பின் அரங்கேற்று காதையில் வரும் 16 ஆம் வரிக்கு, அடியார்க்கு நல்லார் கொடுக்கும் உரையில், கீழ்வரும் பாடலைச் சொல்லுவார்.

ஒருசீர் செந்தூக்கு இருசீர் மதலை
முச்சீர் துணிபு நாற்சீர் கோயில்
ஐஞ்சீர் நிவப்பு அறுசீர் கழாஅலே
எழுசீர் நெடுந்தூக்கு என்மனார் புலவர்

- சிலம்பு 3.16 உரை

நிவப்பு, நிவதம் என்ற இரு பெயர்ச்சொற்களும் நிவத்தல் என்ற ஒரே வினையில் இருந்து கிளைத்த இருவேறு சொற்கள். நிவப்பு என்பது உயர்ச்சிப் பொருளில் ஒருவகைத் தாளத்தைக் குறிக்கிறது நிவதம் என்பது ஏழாம் சுரத்தைக் குறிக்க முடியும்.

இனி கோவில் என்பது கோயில் என்று திரியுமாப் போல, கயிறு என்பது கவுறு என்றும் சொல்லப் படுமாப் போல, நிவதம் என்பது நியதம் என்றும் திரியும். பின்னால், வடமொழித் திரிவில் நியதம்>நியாதம்>நிஷாதம் என்று ஆவது நடக்கக் கூடியதே. ஆனாலும், உயர்ச்சிப் பொருள் இந்தச் சொல்லுக்கு அடித்தளமாய் இருப்பதை உன்னித்து அறியலாம்.

ஆக இந்த நான்கு பகுதியில் சொன்னதைத் தொகுத்துச் சொன்னால்

குரல் என்பது அடி ஒலி
குரலுக்குத் துத்தம் உயர் ஒலி
குரலுக்குக் கய்க்கிளை (குரலொடு காய்ந்த கிளை) பகையொலி
குரலுக்கு உழை, பக்க ஒலி (அதாவது நள்ளிய ஒலி).
குரலுக்கு இளி இணங்கிய ஒலி
தாரத்திற்கு விளரி வெளிரிய ஒலி
தாரம் குரலுக்கு நீண்ட ஒலி

இதே கருத்து இன்னொரு விதமாய் மணிப்பவள நடையில், சங்கதத்துள் நுழைந்துள்ளது.

குரல் = சத்தம்>சக்தம்>சக்சம்>சக்ஷம்>சட்சம்
துத்தம் = உயர் ஒலி = பெரு ஒலி = விடை ஒலி, விடைமம்>விடமம்>வ்ரிஷமம்>ரிஷபம்
கய்க்கிளை > காய்க் கிளை = பகை யொலி = காய்ந்த ஆரம் = காய்ந்தாரம் > காந்தாரம்
உழை = உள் ஒலி = நட்டுமம் > மத்திமம்,
இளி = இணங்கும் ஒலி = பொஞ்சும் ஒலி = பொஞ்சுமம் > பஞ்சுமம்
விளரி = விளர் ஒலி = தய்வத ஒலி = தய்வதம்
தாரம் = உச்ச ஒலி = நிவந்த ஒலி = நிவதம்>நியதம்>நியாதம்>நிஷாதம்

தமிழிசை பற்றிய வேறு செய்திகளை முனைவர் வீ.பா.க. சுந்தரத்தின் நூல்களில் பார்த்து அறியுமாறு வேண்டுகிறேன். எனக்கு வேறு சிந்தனைகள் உருவாகும் பொழுது மீண்டும் தமிழிசைக்குள் வரக் கூடும்.

அதுவரை அன்புடன்,
இராம.கி.

2 comments:

Anonymous said...

Hi, How to say Association in Tamil? I read in one of your post where you said Organization is ஒருங்கம், but I don't know the correct word for Association.

They say 'சங்கம்' and 'அமைப்பு' denote Association, but I believe there could be another direct word in Tamil. Please help Iraamaki.

பூங்குழலி said...

பதிவுக்கு நன்றி..

அதனால் தான் ஏதேனும் குறை கண்டால் நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறோம் போல....