Sunday, February 24, 2008

தமிழில் இயற்பெயர் சூட்டுங்கள்

தமிழில் மூன்று விதமான பெயர்களைச் சொல்லுவார்கள். "நான், நீ, அவன், இவள், உது, இவர், அவை" போன்றவை சுட்டுப் பெயர்கள். (அவை தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று நிலைகளில் அமையும்.) "காலம், பந்து, மலர்" போன்றவை, பொருளைக் குறிப்பதால் பொருட் பெயர்கள். இவை தவிர, உடன் உய்யும் மாந்தர்களைக் குறிக்கும் படி, இராமன், இலக்குவன், இனியன், முகிலன் என்றும் பெயரிடுகிறோம்;

மூன்றாவதாய் உள்ளதை, இயற்பெயர் என்று இலக்கணத்தில் சொல்லுவார்கள். பேச்சு வழக்கில் இந்த இயற்பெயரும் இட்ட பெயர், கூப்பீட்டுப் பெயர் என்று இரண்டாக விரியும். "தமிழ்ச்செல்வன்" என்று பெயரிட்டு, வேறொரு பெயரால் கூப்பிடுவதும் நாட்டில் நடக்கிறது. தவிர ஒரு இயற்பெயரைச் சுருக்கியும் சிலர் அழைப்பதுண்டு, நாராயணன் என்பது நாணா என்று அழைக்கப் படுவதைப் போல. பொதுவாய், தமிழ் மரபில், தன் தந்தையின் பெயரை தன் மகனுக்கும், தாயின் பெயரைத் தன் மகளுக்கும் இடுவதே பழக்கம். இப்படிப் பெயரிடுவதால் தான் "பெயரன்/பெயர்த்தி" என்ற வழக்குகள் நம்மிடையே எழுந்தன. (தாய்வழிப் பாட்டன்/பாட்டியின் பெயர்களை இடுவதும் வழக்கம் தான்.)

பெயர்ச் சொல்லில் உள்ளுறையும் திணை மற்றும் பால் பார்த்தே தமிழ் வாக்கியங்களை முடிப்பதும் அமைகிறது. ஒரு வாக்கியத்தில் பல்வேறு வகைப் பட்ட பெயர்கள் ஒரு கொத்தாய்க் கலந்து வந்தால் அவற்றை விரவி வந்தவை என்று இலக்கணத்தில் சொல்லுவார்கள். விரவுதல் = to get mixed up. விரவுப் பெயர்கள் = வகை கலந்து கிடக்கும் பெயர்கள். "வடுகர், அருவாளர், கருநாடர், சுடுகாடு, பேய், எருமை ஆகிய இவை ஆறும்" என்று சொல்லும் போது திணை விரவிக் கிடக்கும் பெயர்ச்சொற்களைச் சொல்லுகிறோம். அது போல பால் விரவிய பெயர்ச்சொற்களும் ஒரு கொத்தில் அமையலாம். இனி, இன்னொரு விதமான விரவலைப் பார்ப்போமா?

நொபுரு கராசிமா, சூ லிங், விலி பிராண்ட், ழான் கார்ட்டிய, வான் மேர், ங்குரூமா, ஓ சீ மின்

இந்த இயற்பெயர்களை [அவர்களில் ஒரு சிலர் நன்கு பெருவலமானவர்கள் (ப்ரபலமானவர்கள்) என்பதை மறந்துவிட்டுப்] பார்த்தால், முதலில் வருபவர் ஒரு சப்பான்காரர், அடுத்தவர் சீனர், அடுத்தவர் செருமானியர், அதற்கும் அடுத்தவர் பிரஞ்சுக்காரர், அப்புறம் டச்சுக்காரர், அப்புறம் ஆப்பிரிக்கர், முடிவில் வியட்நாமியர் என்று ஓரளவாவது தடுமாறி அடையாளம் காணுவோம், இல்லையா? இனி இன்னொரு வரிசையைப் பார்போம்.

ஸ்ருதி, ஸ்வேதா, ஆதித்யா, ஆதர்ஷ்

இந்த வரிசைப் பெயர்களைப் படித்தால், உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இவர்கள் இந்தியர்களாய் இருக்கலாம் என்று தோன்றும். ஆனால் அதற்கு மேல் இந்தத் துணைக் கண்டத்தில் எந்தப் பகுதி என்று சொல்லுவது கடினம். ஒருவேளை, "இந்த வரிசையில் கொடுத்திருப்பவை முதற்பெயர்கள்; மாறாக, குடும்பப் பெயர் வரிசையைக் கூறினால், இந்தியாவின் எந்த மாநிலம்?" என்று ஓரளவு சொல்லக் கூடலாம். (இங்கே சாதிப் பெயர்களை நான் சொல்லவில்லை.) காட்டாக,

அகர்கர், தேசாய், பியாந்த் சிங், பிஸ்வால்

என்ற வரிசையில் மாராட்டியர், குசராத்தி, பஞ்சாபியர், வங்காளி அல்லது ஒரியா என்று ஓரளவாவது சொல்ல முடியும் தான். அதே பொழுது, குடும்பப் பெயர் என்பது இந்தியாவின் ஒருசில மாநிலங்களில் அவ்வளவாய் வழக்கம் இல்லை. காட்டாகத் தமிழ்நாடு. இங்கு குடும்பப்பெயர் என்பது ஒரு சில பண்ணைக்காரர்களுக்கு இருந்திருக்கிறதே ஒழிய (காட்டு: மழவராயர், வாண்டையார், வில்லவராயர், மூப்பனார்; இந்தப் பெயர்களெல்லாம் விசயாலனுக்கு அப்புறம் வந்த சோழப்பேரரசு காலத்தில் அரச முறைப் பழக்கத்தில் ஏற்பட்ட பெயர்கள்), 99.9 விழுக்காடு மக்களுக்கு இருந்தது கிடையாது. பெரும்பாலான ஊர்களில், ஒரு பெருங்கூட்டத்தில் தங்களை அடையாளம் சொல்ல ஊர்ப்பெயர், தன்பெயர், தந்தைப்பெயர், தேவைப்பட்டால் தாத்தன் பெயர் சேர்த்துச் சொல்லுவார்கள். இப்படிச் சொல்லுவதற்கு விலாசம் என்று பெயர். "குடும்பப் பெயர் என்றால் வீசை என்ன விலை?" என்று கேட்பதே நம்முடைய வழக்காறு. (வெளிநாட்டில் இருக்கும் தமிழர் அங்கு உள்ள ஆவணங்களில், தங்களுக்குக் குடும்பப்பெயரைச் சுட்ட முடியாமற் சரவற் படுவது வேறொரு பெருங்கதை.)

இந்த இடத்தில், கொஞ்சம் இடைவிலகலாக, இரோப்பாவில் குடும்பப்பெயர் கட்டாயமாக்கப் பட்ட கதையைச் சொல்ல வேண்டும். இரோப்பாவில் பல நாடுகளைப் பிடித்து நெப்போலியன் பிரஞ்சுப் பேரசை உருவாக்குவதற்கு முன்னால், குடிமைச் சட்டம், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு போன்றவை ஏற்பட்டதே இல்லை. அதுவரை, நம் சோழப் பேரரசு காலம் போலவே, அரசனின் ஆட்சிக்குத் துணையாய் இருந்த பெரும்பண்ணையார்களுக்கு மட்டுமே குடும்பப் பெயர்கள் இருந்தன. நெப்போலியனின் கணக்கெடுப்பு நடந்த போது, செருமனி, பெல்சியம், நெதர்லந்து, டென்மார்க் போன்ற மேற்கு இரோப்பிய நாடுகளின் குடிமக்கள் குடும்பப்பெயர் சூட்டிக் கொள்ளக் கட்டாயப் படுத்தப் பட்டார்கள். புதுவிதமான குடும்பப்பெயர்களும் இந்தக் கணக்கெடுப்பில் அவர்கள் மேல் திணிக்கப் பட்டன. காட்டாக, எனக்குத் தெரிந்த நெதர்லந்துப் பழக்கத்தை உரையாடலாய்ச் சொல்லுகிறேன்.

கணக்கெடுப்பு அதிகாரி: இந்தாப்பா, இங்கே வா, உன் பெயரென்ன?

பீட்டுங்க

எங்கேர்ந்து வர்றே?

மலைப்பக்கமுங்க

இன்னையிலேர்ந்து உன்பேரு. மலையில் வந்த பீட்; உம் பொஞ்சாதி, புள்ளைகள் எல்லாருக்கும் "மலையில் வந்த"ங்குற பின்னொட்டைச் சேர்த்துச் சேர்த்து எழுதோணும், சரியா?

சரிங்க, எசமான்

van den Berg என்ற குடும்பப்பெயர் அப்படித்தான் வந்தது. இதுபோல நகரத்தில் இருந்து வந்தவர் van den Burg என்று ஆனார். ஏரிக்கு அருகில் இருந்து வந்தவர் van Meer ஆனார், ஆற்றின் தடுப்பணைக்கு அருகில் இருந்து வந்தவர் van Dam என்று ஆனார். இப்படி இட வழியாக மட்டுமல்லாமல், தொழில் வழியாகவும் குடும்பப்பெயர்களை கணக்கெடுப்பாளர்கள் இட்டார்கள்; ஒரு துன்னகாரர் - தையற்காரர்- Schneider என்று ஆனார்; நான் சொல்லிக் கொண்டே போகலாம். இரோப்பில் நெப்போலியனின் தாக்கம் மிகப் பெரிது. இந்தக் கணக்கெடுப்பால், நம்மூர் குப்பன்/சுப்பனைப் போன்று பீட், மிகேல் என்று முதற்பெயர் மட்டுமே கொண்ட சாத்தர் (=commoner) கூட்டத்திற்கு வலிந்து குடும்பப் பெயர்கள் திணிக்கப் பட்டன. ஒரு பெயர்ப் புரட்சியே அங்கு நடந்தது.

[சாத்தர் என்ற சொல்லையும், சாதாரணன் என்ற சொல்லின் தமிழ்வேரையும் இங்கு அறிந்து கொள்ளுவது நல்லது. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசியில் ஆசீவக வாதச் சருக்கம் 683வது பாடலில், நீலகேசி ஓர் ஆசீவகத் துறவியிடம்

"ஆத்தன் அறிந்தன யாவையும் சொல்லலன் ஆய்விடின் இச்
சாத்தனும் யானும் அவன் தன்னில் சால இசையுடைய
நாத்தனை ஆட்டியோர்; நன்மை கண்டாலும் நினக்குரைத்தும்,
ஈத்தனம் உண்டு இருமைக்கும் ஏதும் இலம் பிறவோ?"

என்று சொல்லுவாள்: "தானறிந்ததைப் பிறருக்குச் சொல்லாமல் உன் ஆத்தன்(=தலைவன்) மோனம் கொள்வான் எனில், இதோ இங்கிருக்கும் சாத்தனும் (=சாதாரணனும்) யானும் மிகுந்த புகழுடையவர்கள்; ஏனென்றால், உயிரினங்களுக்கு நன்மை தருபவற்றைக் கூறியும், எம்மால் இயன்ற அளவு உணவு முதலியவற்றை ஈந்தும், இம்மைக்கும் மறுமைக்கும் ஆக்கம் தருமாறு ஆற்றுகின்றோம் அல்லவா?"

இந்தப் பாடல் மட்டும் கிடைத்திருக்கா விட்டால் சாத்தன் = commoner என்று அறுதியாகச் சொல்ல முடியாது. சார்ந்தது சாத்து (=கூட்டம்); கூட்டத்தைச் சார்ந்தவன் சாத்தன் (நேற்று ஒரு சந்திப்பில், பேரா. இல. மறைமலையும் நான் கொண்ட இந்தப் பொருளைச் சரியென்றே உறுதியளித்தார்.) பண்டன் என்பது பண்டாரன் ஆவது போலச் சாத்தன் என்பது சாத்தாரன் ஆவது தமிழில் உள்ள பழக்கம் தான். பின் சாத்தாரன் வெளிமொழியார் வழக்கில், இன்னும் நீண்டு சாத்தாரனன்>சாதாரணன் ஆகும். எப்படி அய்யன் (=பெரியவன்) பொருள் கொண்ட அந்தன் எனும் சொல் அந்தனன் என்று நீண்டு பின் அந்தணன் என்று திரிந்ததோ, அது போல, இரண்டாவது அன் சேருவது இயல்மொழி அல்லாதவரின் கொச்சைப் பேச்சு ஆகும். இதே வகையில் சாத்தாரன்>சாத்தாரனன்>சாதாரனன்>சாதாரணன் என்று ஆவது தமிழ்-வடமொழி ஊடாட்டில் நடக்கக் கூடியதே. (முடிவில் சாதாரணனின் தமிழ்வேரை மறந்து போய் அதை வடமொழியென்று வழக்கம் போல் சாதிப்போர் மிகப் பலர்.)]

இயற்பெயர் பற்றியல்லவா பேசிக் கொண்டிருந்தோம்?

இரோப்பியர் என்பவர் இன்றைக்கு ஒரே விதமான நாணயம் வைத்திருக்கிறார்கள், மேற்கு இரோப்பாவில் வசிக்கும் எல்லோரும் எங்கும் நுழைமதி (visa) தேவைப்படாமல் மேற்கு இரோப்பா முழுதும் போக முடிகிறது. மேற்கு இரோப்பாவில் நுழையும் நம்மைப் போன்றோர் "செங்கன்" என்ற ஒரே நுழைமதி எடுத்தால் மேற்கு இரோப்பா முழுக்கப் போக முடிகிறது. இந்த நாடுகள் எல்லாவற்றிலும் சுங்கமும் (customs duty)உல்கும் (excise duty) கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கின்றன. இந்த நாட்டுப் பொருளாதாரங்கள் தங்களுக்குள் பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டுப் பாராளுமன்றமும் இரோப்பியப் பாராளுமன்றத்தைப் பொருட்படுத்தாமல், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாத நிலைக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. இன்னும் மேற்கொண்டு உறவுகள் அவர்களிடையே இறுகிக் கொண்டு வருகின்றன. "இரோப்பிய ஒன்றிய நாடுகள் (United States of Europe)" என்ற மீநிலை ஒன்றியம் (supra union) அமையும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதே பொழுது, இந்த நாடுகளுக்கான தனிநிலைகளும் அழிந்து விடவில்லை. இன்னமும் செருமன்காரர், பிரெஞ்சுக்கார, டச்சுக் காரர்களின் பெயர்கள் ஏற்கனவே இருந்த படி, அவரவர் மரபில் தான் இருக்கின்றன. இரோப் என்று பொது அடையாளம் பெறுவதற்காகத் அவர்கள் தங்களின் தனி அடையாளத்தைத் துறக்கவில்லை.

இப்பொழுது இந்தியாவுக்கு வாருங்கள். விடுதலை பெற்ற போது இந்த நாடு இந்திய ஒன்றியம் என்ற பெயரைத்தான் எடுத்துக் கொண்டது. பின்னால் இந்திரா காந்தி காலத்தில் தான் இந்தியக் குடியரசு என்ற ஒற்றைமுகப் பெயரில் தன்னை வலிந்து மாற்றிக் கொண்டது. இருந்தாலும், ஒரு இயல்பான போக்கில், இந்த நாடு ஒரு பல்தேசியக் குடியரசாகத் தான் இன்றைக்கும் இருக்கிறது. ஒரு பெருங்கூட்டம் பல்தேசியப் பாங்கை முற்றிலும் ஒழித்து ஒற்றைப் பரிமானத்தைத் தந்து, இந்து-இந்தி-இந்துத்துவா என்று கொண்டுவர முயன்றாலும், இந்தியச் சாத்தர்கள் தங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்து பொதுச் சோதியில் கரைந்து கொள்ள இன்னும் அணியமாகவில்லை. அப்படி இருக்கும் போது, தமிழரின் முகவரியான தமிழ் அடையாளத்தை ஏன் நாம் துறக்க முற்படுகிறோம்?

ஸ்ருதி, ஸ்வேதா, ஆதித்யா, ஆதர்ஷ்

என்ற பெயர்கள் தமிழ்க்குழந்தைகளுக்கு ஏன் சூட்டப்படுகின்றன என்பது சற்றும் விளங்கவில்லை. நல்ல தமிழ்ப் பெயர்களை தம் பிள்ளைகளுக்கு இடாமல், யாரோ ஒரு சோதியன் சொல்லும் தூண்டலுக்கு ஆட்பட்டு, "இந்த எழுத்தில் தொடங்கும் பெயர், இந்த முடிப்பில் இருக்கும் பெயர்" என்று ஈர்ப்பில், தமிழர்கள் வட இந்திய, வடமொழிப் பெயர்களையே பெரிதும் சூட்டும் நிலைக்கு வந்திருக்கிறார்களே, அது ஏன்? இது நம் அடையாளத்தை முற்றிலும் அழிக்கும் போக்கு அல்லவா? இதற்கு நாம் இணங்கலாமோ? எங்கோ ஒரு கடலில் கரையும் பெருங்காயம் போல் நாம் ஆவதற்கே இது வழிவகுக்கும் அல்லவா? நாலு இந்தியர் கூடும் இடத்தில் தமிழன் என்னும் அடையாளம் தென்பட வேண்டாம் என்னுமாப் போல, வடபுலப் பெயர்களைச் சூட்டுவது ஒரு பெருமிதமான பழக்கம் ஆகுமோ?தமிழர் என்று நம்மைச் சொல்லிக் கொள்ளுவதில் நாம் ஏன் வெட்கம் அடைய வேண்டும்?

இந்தத் தமிழ்ப்பெயர் சூட்டலில், சிலர் சமய நெறிகளால் தயங்கலாம். என்னைக் கேட்டால், இங்கே சமயநெறி குறுக்கிடத் தேவையில்லை. சமயமும், தமிழ்மையும் ஒன்றிற்கொன்று எதிரானவை அல்ல. சிவ, விண்ணவ நெறிகளில் இருப்பவருக்கு எண்ணற்ற தமிழ்ப்பெயர்கள் அவர் தொழும் தெய்வத்தைக் குறிப்பதாகவும், அன்றி பொதுத் தமிழ்ப்பெயர்களுமாய் இருக்கின்றன. கிறித்துவ, இசுலாமிய மற்றும் பிற சமய நெறியாளர்கள் ஒரு சமயப் பெயரையும், ஒரு தமிழ்ப் பெயரையும் சேர்த்து வைத்துக் கொள்ளலாமே? தவறென்ன? காட்டாக, Joseph Raj என்பவர், வளன் அரசு என்று வைத்துக் கொள்ளாவிட்டாலும், குறைந்தது, ஜோசப் அரசு என்றாவது பெயரிட்டுக் கொள்ளலாமே? இதே போல இசுலாம் மற்றும் பிற சமய நெறியாளரும் விதப்பான பெயர்களை வைத்துக் கொள்ளலாமே? இதை அவர்கள் சமய நெறி தடுக்குமா, என்ன?

என் வேண்டுகோள்:

தமிழரே!, உங்கள் பிள்ளைகளுக்குத் தமிழில் இயற்பெயர் சூட்டுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

47 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல கருத்து. நீங்கள் சொல்வது போல் பல கிறித்தவர்கள் தமிழ்ப் பெயர்கள் கொண்டு தான் இருக்கிறார்கள். இன்னும் சில தமிழ்க் கிறித்தவர்களும் தமிழரல்லாத கிறித்தவர்களும் இந்திய அடையாளப் பெயரையும் கொண்டிருக்கிறார்கள்.

இது நாள் வரை சிற்றூர்களில் உள்ளவர்களாவது நல்ல தமிழ்ப்பெயர்களைச் சூட்டி வந்தார்கள். ஆனால், இப்போது தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வரும் நடிகர், நடிகையரின் பெயரைச் சூட்டத் தொடங்கி உள்ளார்கள் :( ஒரு வகையில், திராவிடக் கட்சிகளின் பெயர் சூட்டும் சடங்குகளில் தான் சில நல்ல தமிழ்ப் பெயர்கள் கிட்டுகின்றன.

இரோப்பா, நெதர்லந்து என்று அழைப்பதன் காரணம் அறியலாமா? deutsch, nederlands மொழிகளில் உள்ள இச்சொற்களின் ஒலிப்பு ஐரோப்பா, நீடர்லாண்ட்ஸ் என்பதை நெருங்கி வருகிறது என நினைக்கிறேன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நுழைமதி நல்ல சொல் - நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல கட்டுரை.... எத்தனையோ பேருக்கு நானும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன்.. கேட்கத்தான் யாரும் தயாரில்லை.

சுந்தரவடிவேல் said...

வெளிநாடுவாழ்த் தமிழர்கள் சுருக்கமான அழகிய தமிழ்ப் பெயர்களை வைக்க ஆர்வம் கொள்வதைக் காண்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நானறிந்த பல நண்பர்களின் பிள்ளைகளுக்கு அழகான பெயர்களிருக்கின்றன.
பதிவுக்கு நன்றி!

Thekkikattan|தெகா said...

அய்யா,

அவசிமானதொரு கட்டுரை... நிறைய தகவல்களுடன். நன்றி!

Anonymous said...

அவசியமில்லை - மற்ற மொழி சொற்களை/பெயர்களை தமிழர் பயன்படுத்தும் போது தமிழும், தமிழர் வாழ்வும் வளருமே தவிர, யாதொரு குறைவும் ஏற்படாது.
இது தேவையற்ற கலக்கம்.

Yogi said...

தூய தமிழ்ப்பெயர்கள் கொண்ட இணையத்தள்ம் எதாவது உள்ளதா? தெரிந்தால் சுட்டி கொடுங்கள். :)

Anonymous said...

there are iyengars who still choose tamil names for their children.blogger desikan has named his son as amuthan and daughter
as andal.nambi is a typical iyengar name.nachiyar,kothai
are typical iyengar names.

வினையூக்கி said...

கட்டுரைக்கு மிக்க நன்றி ஐயா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெளிநாட்டில் இருக்கும் தமிழர் அங்கு உள்ள ஆவணங்களில், தங்களுக்குக் குடும்பப்பெயரைச் சுட்ட முடியாமற் சரவற் படுவது வேறொரு பெருங்கதை//

மிகவும் உண்மை!
அதிலும் ஒரே குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு குடும்பப் பெயர்கள். இதை இவிங்க கிட்ட சொல்லி விளக்குவதற்குள், போதுமய்யா சாமீ :-)

//"மலையில் வந்த"ங்குற பின்னொட்டைச் சேர்த்துச் சேர்த்து எழுதோணும், சரியா?
Van den Berg என்ற குடும்பப்பெயர் அப்படித்தான் வந்தது//

ஹிஹி
நன்றி ஐயா! அலுவலகத்தில் ஒரு வேன் டென் பெர்க் இருக்காரு! நாளைக்கு அவரை ஓட்டித் தீர்த்திடுவோம்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பல நேரங்களில் குடும்பத்து மூத்தோர்களின் பெயரைக் குழந்தைக்கு வைக்க வேண்டிய சூழல் வந்து விடுகிறது!

என் நிலையிலும் அப்படியே ஆனது! அவாவினால் எத்துணை அழகுத் தமிழ்ப் பெயர்களை எண்ணி வைத்திருந்தாலும், முடிவில் வேறு பெயர்களை இட்டவர்களில் அடியேனும் ஒருவன்! இராம.கி ஐயாவின் இப்பதிவைப் படிக்குங்கால் ஆற்றாமை தான் மிஞ்சியது! இருப்பினும் செல்லப் பெயர்களில் தமிழ்ப் பெயரைச் சொல்லி ஓரளவுக்கேனும் உவகை பூக்கிறோம்!

//சமயமும், தமிழ்மையும் ஒன்றிற்கொன்று எதிரானவை அல்ல. சிவ, விண்ணவ நெறிகளில் இருப்பவருக்கு எண்ணற்ற தமிழ்ப்பெயர்கள் அவர் தொழும் தெய்வத்தைக் குறிப்பதாகவும், அன்றி பொதுத் தமிழ்ப்பெயர்களுமாய் இருக்கின்றன//

மிகவும் சரியாகச் சொன்னீர்கள் ஐயா!
கோயிலொழுகு நூலில் பணியாளர் ஒவ்வொருவருக்கும் அழகுத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்த நிகழ்வும் சொல்லப்பட்டிருக்கு!
கணக்காயர், கண்ணமுது, தோளுக்கினியான் என்று எண்ணற்ற சமயச் சொற்கள் புழங்கி வந்துள்ளன!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
nambi is a typical iyengar name.nachiyar,kothai
are typical iyengar names//

அனானி ஐயா
அவை வைணவப் பெயர்கள் என்று சொல்லலாமே? அய்யங்கார் அல்லாத பல வைணவர்களும், தமிழ் நெறியாளரும் கோதை போன்ற பெயர்களைச் சூட்டுகிறார்கள்!

@பொன்வண்டு
http://www.tamilnation.org/culture/tamilnames.htm
http://www.anbutamil.com/

nayanan said...

ஐயா, மிக உயர்ந்த கட்டுரை.
இந்தக் கட்டுரை பல கோடிகளையும்
எட்ட வேண்டும். மலையாளிகளை சில விதயங்களில் எனக்குப் பாராட்டத் தோன்றும். எனது நண்பர் ஒருவரின் பெயர் சலீம் குமார். அவரிடம் உசாவிய போது இப்பழக்கம் கேரளத்தில் பரவலாக உண்டு என்று சொன்னார்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

உங்கள் மகன், மகள், பேரன், பேத்திகளின் பெயர்களை தயவு செய்து பட்டியலிடவும். ஒரு எடுத்துக்காட்டுக்குத் தான்.

Anonymous said...

ஸ்வேதா-வை சுவேதா என்று பெயரிட்டால் அது தமிழ்ப்பெயராகி விடுமா?
வடமொழிச் சொற்களுக்கும் தமிழ் வேராகி இருக்கும்போது, எப்படி பெயர் வைத்தால் என்ன?
இந்த மாநிலத்தவர் என்று அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்படுவதைக் காட்டிலும், அப்படி ஒரு அடையாளம் இல்லமால் இந்தியனாய் இருப்பதையே விரும்புகிறேன்.

சதங்கா (Sathanga) said...

இராம. கி. ஐயா

மிக அருமையான ஒவ்வொரு தமிழரும் வாசிக்க வேண்டிய பதிவு.

தமிழ் பெயர் தவிர்த்து, மற்ற நிறைய அடையாளங்களையும் இழந்து வருகிறோம். அதைப் பற்றியும் நேரம் இருந்தால் எழுதுங்கள்.

Anonymous said...

Visa என்பதை விசைவு, இணங்கு குறி என்று அழைப்பது பற்றி ஐயா இராமகியின் கருத்து அறிய ஆவல்.

Passport என்பதை கடவு என்றே சுருக்கி அழைக்கலாமா?

ஆதித்யா தமிழில்லையா? ஆதித்த கரிகாலன் என்ற பெயர் உள்ளதே... ஆதித்தன் என்பதை ஆதித்யா என்று சொல்வது சங்கதமயமாக்கலா?

Anonymous said...

//உங்கள் மகன், மகள், பேரன், பேத்திகளின் பெயர்களை தயவு செய்து பட்டியலிடவும். ஒரு எடுத்துக்காட்டுக்குத் தான்.//
நரேந்திரன், வச்சீங்களே ஆப்பு!

Machi said...

அய்யா நன்றாக சொன்னீர்கள். என் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்டியுள்ளேன் என்பதற்காக பெருமைப்படுகிறேன். தமிழ் பெயர்கள் கொண்ட இணைய தளம் இல்லை என்பதே உண்மை. பல தளங்கள் தமிழர் பெயர்களை கொண்டுள்ளனவே தவிர தமிழ் பெயர்களை கொண்டிருக்கவில்லை.

துளசி கோபால் said...

கீழே இருக்கும் பகுதி மமுன்பு நான் எழுதிய ஃபிஜி நாட்டுத் தொடரில் உள்ளது.


வெள்ளையர்களின் கண்காணிப்பிலே இவர்கள் தங்கி இருந்தார்கள். அவர்களின் பெயர்களைப் பதிவு செய்தபோது, குடும்பப் பெயர்கள் கேட்கப்பட்டனவாம். வெள்ளையர்களுக்கு 'ஸர் நேம்' கட்டாயமல்லவா? நம் தமிழர்கள் அவரவர்கள் ஜாதிப் பெயர்களைச் சொல்லியிருக்கிறார்கள். சிலர் உண்மையையும் சிலர் அவர்கள் மனதுக்குத் தோன்றியதையும்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு பெயர்கள்கூடப் பதிவாகி விட்டதாம்! பிள்ளை, நாயுடு, முதலியார்,கவுண்டர் இப்படி!

இங்கேயுள்ள வட இந்திய சமூகத்தில், நிறைய பேருக்கு 'ஸர்நேம், மஹராஜ்'என்று பதிவாகியுள்ளது. அவர்கள் யாரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவாம். முதன் முதலில் வந்தவர்கள் வட இந்தியர்கள்தானே. அவர்கள் பெயரைப் பதிவு செய்தபோது, 'சர்நேம்' கேட்கப்பட்டபோது சம்பாஷணை இப்படி இருந்ததாகச் சொல்கின்றனர்.

பெயர் என்ன?

ராம்சேவக்

ஸர்நேம் என்ன?

ஜி, மஹராஜ்? ( என்னங்க? என்று ஹிந்தியில் கேட்டிருக்கிறார்கள்)

அதுவே அவர்கள் பெயராகிவிட்டிருக்கிறது. 'ராம்சேவக் மஹராஜ்'

இப்படியாக அங்கே எக்கச்சக்க மஹராஜ்கள்!!!!!

வெற்றி said...

கட்டாயம் அனைத்துத் தமிழரும் கடைப்பிடிக்க வேண்டிய அரிய கொள்கை.பதிவுக்கு நன்றி ஐயா.

எனக்கு இதில் உள்ள சிக்கல் என்னெண்டால், நான் தமிழ்ச் சொற்கள் எண்டு நினைக்கும் பல சொற்கள் வடமொழிச் சொற்கள்/ சமஸ்கிருதச் சொற்கள் என பலர் மூலம் அறிகிறேன். என்ரை சிக்கல், தமிழ்ச் சொற்களையும் பிற , குறிப்பாக வடமொழிச் சொற்களைப் பிரித்தறிய முடியாதது. இது எனக்குத் தெரிந்த பலருக்கும் உள்ள சிக்கல். எடுத்துக்காட்டாக, கருணாநிதி, பிரபாகரன் போன்ற பெயர்கள் எல்லாம் தமிழ்ச் சொற்கள் என நான் எண்ணியிருந்தேன். பின்னர் சிலர் இது வடமொழிச் சொற்கள் எனச் சொன்னார்கள்.

ஆக இச் சிக்கலால், சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்கிறோம் என்று நினைத்து வடமொழிச் சொல்லுகளில் பெயர் வைத்திருப்பதையும் அறிந்திருக்கிறேன்.

இது தமிழ் சொல்லா அல்லது வடமொழிச் சொல்லா என பிரித்தறிய முடியாதளவுக்கு பல வடமொழிச் சொற்கள் தமிழுக்குள் ஊடுருவி விட்டது என நினைக்கிறேன்.

தமிழ்ச் சொல்லுகளை வடமொழிச் சொல்லுகளில் இருந்து பிரித்தறிவதற்கு ஏதாவது வழிமுறைகள் , இலக்கண விதிகள் உண்டா ஐயா?

Anonymous said...

//
//உங்கள் மகன், மகள், பேரன், பேத்திகளின் பெயர்களை தயவு செய்து பட்டியலிடவும். ஒரு எடுத்துக்காட்டுக்குத் தான்.//
நரேந்திரன், வச்சீங்களே ஆப்பு!
//

இப்ப்டிப்பட்ட பெரிசுகள் ஊருக்குத்தான் உபதேசம் கொடுக்கும். தனக்குன்னு வரும் போது, நியூமராலஜி படி ஒரு நல்ல பெயரை வைத்துக் கொள்வார்கள். நாம் மட்டும் ஓரி, மாரி என்று தூய தமிழில் பெயர் வைத்துக் கொண்டு சர் நேம் எல்லாம் இல்லாமல் பாஸ்போர்டு வாங்கக்கூடக் கஷ்டப்படவேண்டும். ரிடையர்டு ஆன கிழ போல்டுகள் தொல்லை கொஞ்சம் ஓவர் தான்.

கோவை சிபி said...

நல்ல கட்டுரை.

இவன் said...

இராம.கி அய்யா அவர்களுக்கு. நீங்கள் இக்கட்டுரையில் சொன்னதுபோல் எனது மகளுக்கு சுத்தமான தமிழ் பெயர்தான் வைத்துள்ளேன். அவள் கருவில் எட்டு மாதமாக இருக்கும்பொழுதே "இலக்கியா" என்று பெயரை உறுதி செய்தாகிவிட்டது.

இது நியுமராலஜியோ, நாள் நட்சத்திரமோ பார்த்துவைத்த பெயர் அல்ல.

கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்களை ஆராய்ந்து இனியாள், இலக்கியா என இரு பெயர்கள் இறுதி செய்யப்பட்டது. என் மனைவியின் விருப்பத்திற்கு இனங்க என் மகள் பிறக்கும் முன்னே "இலக்கியா" என பெயரிடப்பட்டாள்.

எனது நண்பர் நம்பி.பா, அவரது மகனுக்கு "முகிலன்" என்று பெயரிட்டுள்ளார்.

எங்கள் இருவரின் பிள்ளைகளுக்கும் உள்ள ஒன்றுமை என்னவேன்றால் அவர்கள் பிற்க்கும் முன்னே அவர்களுக்கு பெயர் சூட்டப்பட்டதுதான்.

Anonymous said...

ஐயா, தாங்கள் பாராளுமன்றம் என்று கையாள்வது சரியா? இல்லை நாடாளுமன்றம் சரியா? நன்றி

Anonymous said...

//இப்ப்டிப்பட்ட பெரிசுகள் ஊருக்குத்தான் உபதேசம் கொடுக்கும். தனக்குன்னு வரும் போது, நியூமராலஜி படி ஒரு நல்ல பெயரை வைத்துக் கொள்வார்கள். //

நா அடங்கட்டும் நாரயணா!

எண்ணியல்(numerology) தமிழ் எழுத்திற்கு உள்ளதாகத் தெரியவில்லை, பெயரடிப்படையில். அப்படி வந்தால் பல போர் கொம்பற்று, விசியற்று, குற்றற்று திரிய வேண்டிய நிலை வரலாம்.

பெயரைத் தமிழில் வையுங்கள். அதன் பின்னர் எண்ணியல்படி உங்கள் பிள்ளையின் பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது நீட்டிக் கூட்டி எழுதுங்கள் சாமியோவ்! புரட்சித் தலைவி தனது பெயரின் இறுதியில் ஒரு 'a' இற்குப் பதிலாக இரண்டு 'a' வைக்கவில்லையா? (Jeyalalitha became Jeyalalithaa)

புரட்சித் தலைவியே புரட்சி செய்யும்போது அட கோவிந்தசாமி நீங்க எம்மாத்திரம்.

Prasath said...

தமிழனைப் போன்று ஒரு ஈனமான இனம் எங்கும் இருக்காது. இன்றைய தமிழர்களில் பெரும்பாலானோர் தாம் தமிழர் என்று கூறுவதற்கே தயங்குகிறார்கள். இறைவா, இவர்களது குருதியில் ஏன் அடிமைத்தனம் என்னும் நஞ்சைக் கலந்தாய்? எந்த ஒரு இனமும் எதற்காக தனது தனித்தன்மையை இழக்க வேண்டும்?
தமிழன் என்று சொல்லடா...
தலை நிமிர்ந்து நில்லடா...
இனிய எதிர்காலம் உருவாகும் என்ற நம்பிக்கையுடன்...
வாழ்க வளமுடன்.

அருண்மொழி said...

//யாரோ ஒரு சோதியன் சொல்லும் தூண்டலுக்கு ஆட்பட்டு//

சோதிடர் கூறினாலும் தமிழில் பெயர் சூட்டலாமே. அதற்கும் சோதிடத்திற்கும் என்ன சம்பந்தம்.

Anonymous said...

இந்திரலோகம் என்பது தமிழா ?


தமிழுக்கு அப்பா உண்டா ?

Balaji Chitra Ganesan said...

கொஞ்சம் தவறான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

குடும்பப் பெயர் முடிந்தவரை தவிர்க்க வேண்டியது. prejudices வளர்க்கவே இது உதவுகிறது. Abhayankar, Basu, Sharma, Munda என்று எடுத்தவுடனே சாதியை/வர்ணத்தை நினைவுபடுத்தும் surnames தவிர்க்கப் படவேண்டியவையே.

அப்படியே நல்ல பொருள்தரும் குடும்பப் பெயர் வைத்தாலும் அதில் sexism தவிர்ப்பது பெரும் பிரச்சனையே. ருசியா போன்று putin, putina என்று இருந்தாலும் தாய், தந்தை இருகுடும்பப் பெயரும் சேர்த்துக்கொள்ளாவிட்டால் அது sexismமே.

பெண்கள் கணவர் பெயரையோ, கணவரின் குடும்பப் பெயரையோ சேர்த்துக்கொள்ளும் அசிங்கத்தை விவரிக்கத்தேவையில்லை. மனைவி பெயர் சேர்க்கும் Manu Shraddhadeva போன்ற வேதகாலத்து பெயர்களும் Swaminathan Ankaleshwar Aiyar போன்ற தற்கால ஆண் பெயர்களும் விதிவிலக்கே.

ஒருவரின் பார்ம்பரியம் சார்ந்த பெயரையும் (given name) தாய், தந்தையரின் முதல் பெயர்களையும் (first names) சேர்த்து வைத்துக்கொள்வது எனக்கு சரியாகப் படுகிறது.

அதே போல வேதமதம் வழிவந்தவர்கள் ஆதித்யா, அஸ்வின் என்று வைத்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. அவர்கள் பாரம்பரியத்தை அவர்கள் பராமரிக்காவிட்டால் வேறு யார் பராமரிப்பார்கள்?

பாலாஜி என்ற என் பெயரை இகழ்பவர்களுக்கு நான் வழங்கும் விளக்கம் இதுதான்.

1. வேத மதம் வழிவந்த நான் வேதமுறையில் பூசை செய்யப்படும் கடவுளின் பெயரை வைத்துக்கொள்வதில் என்ன தவறு?
2. அந்தக்கடவுளே சிரமணமும் வேதமதமும் திராவிடமும் கலந்த கடவுள்தான் (perumal + bodhisattava + bala (அருகன் = ஆண்டி?) + vishnu) என்பது கூடுதல் சிறப்பே. நான் அத்வைத்தம் ஏற்றுக் கொள்ளும் நாத்திகன் என்பதும் பொருத்தமே!
3. ஜ உள்ளிட்ட கிரந்த எழுத்தெல்லாம் தமிழில்லை என்னும் விதண்டாவாதத்தையும் நான் நிராகரிக்கிறேன்!

இந்த மூன்றாவது கருத்தை எதிர்க்க முற்படுபவர்கள், பாம்பு எழுப்பும் இஸ், இஸ், சலங்கை ஏற்படுத்தும் ஜல், ஜல், பூச்சட்டி எழுப்பும் புஸ், நகைக்கும் போது எழும்பும் ஹாஹாரம் ஆகியவற்றை 'தமிழ்ல்' எழுதிக்காட்டிவிட்டு என்னோடு பேசலாம்.

இவண்,
பாலாஜி சித்ரா கணேசன்.

பி.கு. 1: நான் செவிடனில்லை. பாம்பு இசு, இசு என்றெல்லாம் ஒலி எழுப்பாது!

பி.கு 2: சித்ரா என்னும் என் அம்மாவின் பெயரை, '4 Months, 3 Weeks and 2 Days' என்னும் படம் பார்த்ததிலிருந்து என்பெயரில் சேர்த்துக்கொண்டேன்!

குமரன் (Kumaran) said...

சாத்தன் என்பதற்குச் சால் + தன் என்று பிரித்து சாற்றுபவன், சாலி என்று இன்னொரு இடத்தில் பொருள் விளக்கம் சொல்லியிருந்தீர்களே ஐயா. இங்கே சாதாரணன் என்ற பொருளைச் சொல்கிறீர்கள். நீங்கள் அந்தப் பொருளைச் சொல்லாமல் விட்டிருந்தால் ஏதோ ஒரு பூசாரியைப் பற்றித் தான் அந்தப் பாடல் பேசுகிறது என்று நினைத்திருப்பேன். இங்கே மட்டும் சாத்தன் என்பது சாதாரணன் என்று பொருள் கொள்ள வேண்டிய காரணம் என்ன?

இப்போதெல்லாம் ஷ், ஸ் போன்ற வடமொழி பலுக்கலில் வரும் பெயர்களை வைப்பது தான் புதுமை; நாகரிகம் என்ற எண்ணம் மிகுந்துவிட்டது. பொருள் புரியாமலேயே வடசொற்களில் பெயர்களை வைப்பவர்களைப் பார்க்கும் போது 'இவர்களை எல்லாம் என்ன செய்தால் தகும்?' என்று தோன்றும்.

வடக்கு மொழிகளில் ஒன்றினைத் தாய்மொழியாகக் கொண்ட நான் என் மக்கள் இருவரில் ஒருவருக்கு வடசொல்லில் பெயரும் மற்றவருக்குத் தமிழ்ப் பெயரும் இட்டிருக்கிறேன். ஆனால் இந்த வடசொற்பெயரைத் தமிழர்கள் எந்த வித தயக்கமும் இன்றி பலுக்குகிறார்கள். தமிழ்ப்பெயரைத் தான் பலுக்கத் தெரியாமல் குதறி எடுக்கிறார்கள்.

Anonymous said...

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0226-meet-on-tamil-as-official-language.html

Iraamaki aiyaa, please attend that meeting and suggest them better Tamil, they are already stubborn on using 'kaNhini' instead of 'kaNhi'

Vijayakumar Subburaj said...

> இந்த மூன்றாவது கருத்தை
> எதிர்க்க முற்படுபவர்கள், பாம்பு
> எழுப்பும் இஸ், இஸ்,
> சலங்கை ஏற்படுத்தும் ஜல், ஜல்,
> பூச்சட்டி எழுப்பும் புஸ், நகைக்கும்
> போது எழும்பும் ஹாஹாரம்
> ஆகியவற்றை 'தமிழ்ல்'
> எழுதிக்காட்டிவிட்டு என்னோடு
> பேசலாம்.

ஒரு மொழியில் எந்தெந்த ஒலிகளை ( எழுத்துக்களை ) எடுத்துக் கொள்ள வேண்டும், எவற்றை விட வேண்டும் என்று முடிவெடுப்பது என்பது அப்படியொன்றும் எளிதான செயல் இல்லையென்றே தோன்றுகிறது. ஒரு சில ஒலிகள் மொழியுள் எடுத்துக் கொள்ளப் பட்டு அவற்றிற்கு எழுத்துக்கள் தரப்பட்டன, ஏனயவை ஒதுக்கப்பட்டன. ஏன் இவ்வாறு என்று தெரிய வில்லை. ஒரு கேள்வியில் "ஏன்" இருந்தாலே பதிலளிப்பது கடினம். ;)

ஆங்கிலத்தில் கூட ஒலிகளுக்கு புதிய எழுத்துக்களை பயன்படுத்துகிறார்கள். காட்டாக, é ( Resumé ), ç ( Façade ) போன்றவற்றைக் கூறலாம். ஆங்கிலத்தில் இவ்வாறு செய்வதால், தமிழிலும் பிற எழுத்துக்களைப் பயன்படுத்தலாம் என்று கூற இயலாது.

கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவது ஒன்றும் பெரிய குற்றமல்ல, ஆனால் அவ்வாறு எழுதினால் அது தமிழும் அல்ல.

:)

இராம.கி said...

அன்பிற்குரிய ரவி சங்கர்,

வருகைக்கு நன்றி. தேவையில்லாமல், இகரத்தில் தொடங்கும் சில சொற்களுக்கு வடமொழியின் தாக்கத்தால் ஐகாரம் போடும் பழக்கம் நமக்கு வந்து சேர்ந்திருக்கிறது. (காட்டாக, சிவம் சைவமானது; விண்ணவம் வைணவமானது. நான் சொல்லிக் கொண்டே போகலாம். தமிழ்முறைப்படி இந்த வழக்கம் தேவையே இல்லை.) அதே போல அந்த நாட்டுக் காரர்கள் தங்களை இரோப், யுரோப் என்றுதான் சொல்லிக் கொள்ளும் போதும், நாம் தான் அதை ஐரோப்பா ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். எப்பொழுது ஐரோப்பா என்று இந்தியாவில் பலுக்கப்பட்டது என்று ஆய்ந்து பார்க்க வேண்டும். நானும் ஒருகாலத்தில் அப்படித்தான் தெரியாமல் சொல்லிக் கொண்டிருந்தேன். பின்னால் எண்ணிப் பார்த்தபின் தான், அந்த வழக்கத்தை மாற்றினேன்.

நெதர்லாந்து என்பது அந்த ஊர்க்காரர்களின் பலுக்கலே. nederlands என்பதை niederlands என்று சொல்லுவது செருமானியரின் பலுக்கல். டச்சு முறைக்கும் செருமமனியர் முறைக்கும் சற்று வேறுபாடு உண்டு. லெய்டனில் கேட்டுப் பாருங்கள், தெரியும். வேண்டுமானால், டச்சு அகரமுதலியில் உள்ள பலுக்கல் குறிப்புகளையும் தேடிப் பாருங்கள். நான் சொல்லுவது ஒரு 20/25 ஆண்டுகளுக்கு முன் கேட்டது. நானறிந்த வரை அது நேடர்லாண்ட்ஸ் தான். அதை அப்படிச் சொன்னபோது, டெல்வ்ட்டில் (Delft) இருந்த ஐந்தாண்டுக் காலம் முழுதும் யாரும் தப்பு என்று சொல்லவில்லை. தமிழுக்குத் தோதாக அதை நெதர்லாந்து என்று எழுத்துப் பெயர்த்து எழுதினேன். அவ்வளவு தான்.

நுழைமதி என்பது தமிழ் இணையம் மடற்குழுவில் பரிந்துரைத்தது. அந்தக் காலத்தில், தமிழ் இணையம், தமிழ் உலகம், அகத்தியர் போன்றவைத் தமிழுக்குச் செய்த பணி போற்றத் தக்கது. இப்பொழுது தமிழ் இணையம் குலைந்து போனாலும், மற்ற இரண்டும் இன்னமும் பணி செய்கின்றன. பங்கெடுக்கும் ஆட்கள் தான் மிகவும் குறைந்து போய்விட்டார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை. நுழைமதி போன்று பரிந்துரைத்துப் பலர்க்கும் மடற்குழுக்களில் பழகிப் போன தமிழ்க் கலைச்சொற்கள் ஏராளம்.

[http://groups-beta.google.com/group/tamil_wiktionary குழுவில் நீங்களும், மயூரனும் என் சொல்லாக்க முறை பற்றி எழுப்பிய கிடுக்கத்திற்கு நான் இன்னும் மறுமொழி சொல்லாமல் இருப்பது நினைவிற்கு வருகிறது. ஏதேனும் ஒரு நாள் செய்வேன்.]

Sunday, February 24, 2008 2:58:00 PM

அன்பிற்குரிய கயல்விழி முத்துலெட்சுமி,

பாராட்டிற்கு நன்றி. விடாது சொல்லுங்கள். அடிப்பார் அடித்தால் அம்மியும் நகரும்.

அன்பிற்குரிய சுந்தரவடிவேல்,
.
வருகைக்கும் குறிப்பிற்கும் நன்றி. பார்க்கும் நண்பர்களுக்கெல்லாம் சொல்லுங்கள், இது தமிழர் எல்லோரும் கடைப்பிடிக்கும் பழக்கமாய் மாறட்டும்.

அன்பிற்குரிய தெக்கிக் காட்டான்,

உங்கள் கனிவிற்கு நன்றி.

அன்பிற்குரிய அமுதன்,

உங்கள் கருத்து உங்களுக்கு. என் கருத்து எனக்கு. வேறுபடுகிறோம் என்று ஒப்புக் கொள்ளுவோமா? அமுதன் என்ற உங்கள் பெயர் சுவையாக இருக்கிறது. அண்மையில் பிறந்த என் பேரனுக்கு இந்தப் பெயரையும் பரிந்துரைத்தேன். என் மகனும், மருமகளும் வேறு ஒரு தமிழ்ப்பெயரை உகந்து எடுத்துக் கொண்டார்கள். இருந்தாலும் நானும் என் மனைவியும் அமுதனில் கொஞ்சம் ஆழ்ந்து கிடந்தோம்.

அன்பிற்குரிய பொன்வண்டு,

தூய தமிழ்ப்பெயர்கள் கொண்ட இணையத்தளங்கள் இருக்கின்றன. எனக்குச் சட்டென்று நினைவு வந்து சுட்டி கொடுக்கத் தெரியவில்லை. கூகுள் மூலம் தேடிப் பாருங்கள். கிடைக்கும். முன்னால் ஒருமுறை பார்த்திருக்கிறேன். மேலே ஒருவர்

http://www.tamilnation.org/culture/tamilnames.htm
http://www.anbutamil.com/

சுட்டி கொடுத்திருக்கிறாரே!

Dear Anonymous,

I have not said anything about caste here. I mentioned the topic, since it relates to all Tamils. I know many Brahmins who have chosen Tamil names. I have also congratulated Mr.Desikan for naming his son as Amuthan. Please read my comments in his blog. I don't know why you people have to have preconceived opinions. It is better to have a positive approach than a suspicion.

Incidentally, Poonkothai was a name I have suggested to my own Son for his child, had it been a grand daughter.

அன்பிற்குரிய வினையூக்கி,

கனிவிற்கு நன்றி.

அன்பிற்குரிய கண்ணபிரான்,

வெளிநாட்டில் உள்ள தமிழருக்கு ஏற்படும் குடும்பப்பெயர்ச் சிக்கல் பற்றி முடிந்தால் ஒருமுறை எழுதுங்கள். டச்சுக் குடும்பப் பெயர்களின் பிறப்புக் காரணம் அறிந்து வியந்து போனேன். பிறகுதான் நெப்போலியனின் தாக்கம் பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன்.

இதில் சமயப்பெயர்களையும், சாமி பெயர்களையும் நான் தவிர்க்கச் சொல்லவில்லையே? அதே போல, குடும்பத்தில் மூத்தோர் பெயர் வைக்க வேண்டிய சூழலையும் நான் மறுக்கச் சொல்லவில்லை. அதைச் செய்யுங்கள்; உங்கள் பெற்றோர் மனம் குளிரும். கூடவே முடியும் போதெல்லாம் தமிழ்ப்பெயரை அதோடு சேர்த்து வையுங்கள். அது ஒரு பழக்கமாய் நம்மிடம் அமையவேண்டும். நாளாவட்டத்தில், ஓரிரு தலைமுறைகளில் நல்ல தமிழ்ப்பெயரே பரவலாய் விளங்கும். தமிழ்க் குமுகாயத்திற்கு ஓர் அடையாளம் ஏற்படும். நான் சொல்லுவதைப் பொதிவான முறையில் பாருங்கள். அதை விடுத்து, சிலர் கச்சை கட்டிக் கொண்டு எதிர்த்துக் கொண்டு நிற்கிறார்கள் பாருங்கள், என்ன சொல்லுவது?

சிவன் கோயில், விண்ணவன் கோயிலெல்லாம் நல்ல தமிழ்ப்பெயர்களே இறைவனுக்கும், இறைவிக்கும் இடப்பட்டிருக்கின்றன. இந்தக் காலத்தில் தான் அதன் பொருண்மை புரியாமல், தப்பும் தவறுமாய் வடமொழிப் படுத்திக் கெடுத்து எழுதுகிறார்கள். மூலவர் பெயரையும், ஊருலவர் பெயரையும் இப்படித் தப்பும் தவறுமாய் வடமொழியில் எழுதிப்போட்டிருக்கிறோமே என்றுகூடப் பூசகர்கள் அறியாது இருக்கிறார்கள்.

அந்தப் பெயரில்லாதவருக்கு என் மறுமொழியை மேலே கொடுத்துள்ளேன். சாதி பற்றி நான் எங்குமே இந்தப் பதிவில் சொல்லவில்லை. அவர் ஏன் அப்படிப் பார்த்தார் என்று விளங்க வில்லை. விண்ணவப் பெயர்களில் எத்தனையோ நல்ல தமிழில் இருக்கின்றன. அதை வைக்க மனம் தான் வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய நயனன்,

பாராட்டிற்கு நன்றி. சலீம் குமார் என்றது போன்ற பழக்கம் நம் பக்கமும் உண்டு. நயினார் முகமது என்பது மேலே பார்க்க ஏதோ, உருது, தெலுங்கு போலத் தெரிந்தாலும் நாயனார்

என்பது தலைவர் என்ற பொருள் கொண்ட தமிழ்ப்பெயர் தான். நயினார் முகமது என்பது நாயனார் முகமது என்றால் அண்ணல் முகமதைக் குறிப்பால் உணர்த்துவது தான்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

திரு. நரேந்திரன் மற்றும் வழிப்போக்கன்,

"உங்கள் மகன், மகள், பேரன், பேத்திகளின் பெயர்களை தயவு செய்து பட்டியலிடவும். ஒரு எடுத்துக்காட்டுக்குத் தான்" என்று வாயில் விரல்வைத்தால் சூப்பத் தெரியாத குழந்தை போல்
வந்த ஒரு பின்னூட்டைப் பார்த்தவுடனேயே உள்ளே தொக்கி நிற்கும் ஊமைக் குசும்பு புரிந்தது. சரி, கொஞ்சம் நூல் விட்டுப் பிடிப்போம் என்று பேசாமல் இருந்தேன். உடனே சிறிது
நேரம் இடைவெளிவிட்டு, "நரேந்திரன், வச்சீங்களே ஆப்பு!" என்றும், "இப்ப்டிப்பட்ட பெரிசுகள் ஊருக்குத்தான் உபதேசம் கொடுக்கும். தனக்குன்னு வரும் போது, நியூமராலஜி படி ஒரு
நல்ல பெயரை வைத்துக் கொள்வார்கள். நாம் மட்டும் ஓரி, மாரி என்று தூய தமிழில் பெயர் வைத்துக் கொண்டு சர் நேம் எல்லாம் இல்லாமல் பாஸ்போர்டு வாங்கக்கூடக் கஷ்டப்படவேண்டும். ரிடையர்டு ஆன கிழ போல்டுகள் தொல்லை கொஞ்சம் ஓவர் தான்" என்று முதலாமவரின் முன்னிகையும் வந்தவுடன் விளங்கிவிட்டது.

அட, அறிவுகெட்ட முட்டாள்களா! நீங்கள் எல்லாம் படித்தவர்கள் தானா? வேலை மெனக்கெட்டுத் தமிழில் பெயர்வையுங்கள் என்று ஒருவன் பதிவு போடுகிறானே, அப்படி எழுதுவதற்கு முன் அடிப்படை நேர்மையில்லாமலா அவன் பதிவு போடுவான்? 'ஊருக்குத்தாண்டி உபதேசம், உனக்கும் எனக்கும் இல்லைடி' என்று அவன் சொல்லுவதாக எப்படிப் பொருள் கொள்ளலாம்? - என்றெல்லாம் கூடவா உங்களுக்குத் தெரியாது? தம்பிகளா! என் கருத்தை ஏற்பதும், ஏற்காததும் உங்கள் உகப்புப்பா. அதே பொழுது, பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு போகாது. இதுலே "பெரிசு, கிழ போல்டுகள்" என்று நக்கல்வேறு. முதல்லே பந்தை ஆடக் கத்துக்குங்கப்பா, பந்தாளியை ஆடாதீங்க. வழுன்னு சொல்லி ஆட்டத்தை விட்டு வெளியே நிறுத்திருவாங்க! நீங்களே ஏதோ ஒரு கற்பனை செய்து கொண்டு, அதையே உண்மை என்றும் நம்பிக் கொண்டு, சவடால் அடிக்கத் தெரிகிறது பாருங்கள், உருப்பட்டு விடுவீர்கள். வாலறுந்த நரி கதை தான் ஞாவகம் வருகிறது.

இனி வழிப்போக்கனுக்கு மட்டும்:

ஸ்வேதாவை சுவேதா என்றால் தமிழ்ப்பெயராகி விடாது. அதன் பொருளையும் தமிழ்ப்பெயரையும் கேட்டுக்க தம்பி, அப்புறம் பெயர் வை. வெள்ளச்சி என்ற பெயர் நாட்டுப் புறங்களில்
உள்ளது தான். எப்படித்தான் ஸ்வேதா என்று மறைத்துக் கொண்டாலும் வெள்ளச்சி என்ற பொருள் உள் நின்று மறையாது. ஆதிவராகன் என்று சொன்னாலும் "முதற்பன்றி" என்ற
பொருள் மறையாதது போல. வடமொழிச் சொற்களுக்கு தமிழ் வேராகி நிற்பது என்று சொல்லுவது என்னையே மடக்கும் தந்திரமோ? அட, வடிந்தெடுத்த அறிவுக் கொழுந்தே! எது
தமிழ்ப்பெயர், எது தமிழல்லாத பெயர், எது கலப்புப் பெயர், என்பது பார்த்தாலே, படித்தாலே தெரிந்துவிடும் அப்பா, அதற்கு வேரெல்லாம் பார்க்கத் தேவையில்லை. இயற்பெயரில் வேர் மட்டும் இல்லை, தோற்றமும் தமிழாய் இருக்க வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் அடிப்படைச் செய்தி. "இந்த மாநிலத்தவர் என்று அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்படுவதைக்
காட்டிலும், அப்படி ஒரு அடையாளம் இல்லமால் இந்தியனாய் இருப்பதையே விரும்புகிறேன்" என்று சொன்னாய் பார், நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். இந்தியச் சோதியில் நன்றாகக்
கரைந்து கொள். அது உன் உகப்பு.

இது நரேந்திரனுக்கு மட்டும்:

விவரங் கெட்ட பையா! நியூமராலஜி படி நல்ல பெயரை நான் என் மக்களுக்கு வைத்ததாக எங்கே சொன்னேன்? இது என்ன நிழல்சண்டையா? கட்டுரையைச் சரியாகப் படியப்பா! புதிது புதிதாகக் குண்டு விடாதே அப்பனே! "சர்நேம் இல்லாமல் பாஸ்போர்ட் வாங்கக் கஷ்டப்பட வேண்டுமா?" நீ தமிழ்நாட்டில் இருக்கிறாயா, அன்றி வேறு எந்த மாநிலத்திலுமா? அட முட்டாளே! கேள்வி என்ன. சொல்ல வந்தது என்ன, என்று கூடவா தெரியவில்லை. நான் தமிழில் தானே எழுதியிருக்கிறேன். சர்நேம் என்றெல்லாம் எழுதியதைப் பார்த்தால், நீ தமிங்கிலனாய் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படியானால், தமிழும் புரியாது, ஆங்கிலமும் புரியாது; இரண்டுமே அரைகுறைதான்.

"அப்பாலே கஸ்டம் தான், மாமு, இப்ப இன்னா பண்றது?"

இனி இருவருக்குமாகச் சொல்வது:

அட, போக்கற்ற பயல்களா, நான் என் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் என்ன பெயர் வைத்தேன், அது தமிழா, இல்லையா என்பது இந்தக் கட்டுரையிலேயே இருக்கிறது.
கூர்ந்து படித்தால் அகப்படும். அதை மீண்டும் நான் இங்கு சொல்லத் தேவையில்லை. என் மடியில் கனமில்லை; எனவே பயமில்லை.

முதலில் கற்பனையில் வாழுவதை ஒதுக்கி இந்த உலகத்திற்கு வாருங்கள் கண்ணுகளா! முன்கருதிய பார்வையிலேயே எதையும் இனி நோக்காதீர்கள். வாழ்க்கையில் தடுக்கி விழப் போகிறீர்கள்.

இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய சதங்கா,

தமிழ்ப்பெயர் தவிர்த்த சில அடையாளங்களையும் இழந்து வருவதை முன்னொரு கால் திரு. ஜெகத் தன் பதிவில் எழுதியிருந்தார். நேரம் இருப்பின் பின்னால் நானும் எழுத முயல்வேன்.

அன்பிற்குரிய கரிகாலன்,

visa என்பதை விசைவு என்றோ, இணங்கு குறி என்று சொல்லுவது பற்றி நானென்ன கருத்துச் சொல்ல முடியும்? அவை வேறு பரிந்துரைகள். அவற்றை ஏற்பதும், ஏற்காததும் தமிழ் கூறு நல்லுலகத்தின் புழக்கம் அல்லவா?

passport என்பதை எல்லாவிடத்தும் கடவு என்று சுருக்குவது சரியென்று தோன்றவில்லை. எத்தனையோ விதமான pass கள் இருக்கின்றனவே? அவற்றிற்கான பொதுமைச்சொல் ஒன்று வேண்டுமே? கடவு என்பதைப் பொதுமைச் சொல்லாக்கினால், passport என்பதைக் புகற் கடவு என்று விதப்பாகச் சொல்லத் தானே வேண்டும்? குழப்பம் இல்லாத இடத்தில் ஒரே ஆவணத்தில் வேண்டுமானால், மேலே புகற்கடவு என்று சொன்ன பிற்பாடு, அதையே கீழே குறிக்கும் போது சுருக்கமாய்க் கடவு என்று சொல்லலாம்.

ஆதித்யா என்பது இருபிறப்பிச் சொல். உள்ளே இருக்கும் தமிழ்வேரை இன்னொரு இடத்தில் சொல்லுகிறேன்.

அன்பிற்குரிய குறும்பன்,

கருத்திற்கு நன்றி.

அன்பிற்குரிய துளசி கோபால்,

தங்களுடைய விஜி நாட்டுத் தொடரை முழுதும் படித்தேன் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் படித்திருக்கிறேன். மன்னியுங்கள்.

இதே போல் சாதிப் பெயர்கள் குடும்பப்பெயர்களாயும், இன்னும் மற்ற வகையில் இயற்பெயர் ஏற்பட்டதும் ஜமைக்கா, சுரினாம், தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களில் தமிழருக்கு ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் விவரித்த நிகழ்ச்சி நிலையை நன்றாகத் தெரிவிக்கிறது.

அன்பிற்குரிய வெற்றி,

தமிழ்ச்சொற்களுக்கும் வட சொற்களுக்கும் உள்ள வேறுபாடு பழக்கத்தில் தான் தெரிகிறது. மேலும் தமிழ் பற்றிய அறிவு கூடக் கூடத்தான், தமிழ்ச் சொற்றொகுதி கூடக் கூடத்தான் இந்த அணுகுமை புலப்படும். கவலுறாதீர்கள். முயலுங்கள். நாளாவட்டத்தில் நீங்களே உணருவீர்கள். முதலடியை எடுத்து வையுங்கள். எது தமிழ், அது வடமொழி என்பதில் தமிழறிஞர்களின் பொட்தகங்கள், குறிப்பாகத் தனித்தமிழ் இயக்கத்தாரின் பொத்தகங்களைப் படியுங்கள், பாவணரின் நூல்களை ஆழ்ந்து படியுங்கள்.

கருணாநிதி, பிரபாகரன் போன்ற பெயர்கள் எல்லாம் இருபிறப்பிச் சொற்கள் தான்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய கோவை சிபி,

கனிவிற்கு நன்றி.

அன்பிற்குரிய இவன்,

இலக்கியா என்பது அழகிய பெயர். முகிலன் என்று தான் எங்களின் ஒரு பெயரனுக்கு இட்டோம். என் பெயரர்கள் பிறப்பதற்கு முன்னாலேயே, என் மக்களும் பெயர்களைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். பெயரன்/பெயர்த்தி என்று பெயர் குறித்து வைத்திருந்தார்கள். பெயர்த்தி பெயர்கள் பின்னால் இட வாய்ப்பில்லாமல் தங்கிவிட்டன

அன்பிற்குரிய "சத்தியமா நான் அவன் இல்லை"

நாடாளுமன்றம் தான் சரி என்று மூதறிஞர் இராசாசி சொன்னார். ஆனாலும் வழக்கில் இரண்டு சொற்களுமே உலவுகின்றன.

அன்பிற்குரிய இந்திரலோகத்து தமிழப்பன்,

இவர்களுக்கு நா அடங்காது நண்பரே! ஏனென்றால் இவர்கள் ஒரு நிகழ்ப்போடு வலைப்பதிவுகளில் திரிகிறார்கள். þó¾ô À¾¢Å¢ன் «ÊôÀ¨¼ì ¸Õ ±ýÉ ±ý§È புâ¡Áø ²§¾¡§¾¡ §Àº¢ô §À¡Ìõ Üð¼õ «ôÀÊò¾¡ý §ÀÍõ.

"எண்ணியல்(numerology) தமிழ் எழுத்திற்கு உள்ளதாகத் தெரியவில்லை, பெயரடிப்படையில். அப்படி வந்தால் பல போர் கொம்பற்று, விசியற்று, குற்றற்று திரிய வேண்டிய நிலை வரலாம்" என்று ºÃ¢Â¡¸த்தான் ¦º¡ýÉ£÷¸û, .

«ýÀ¢üÌâ À¡Ò,

¯í¸û ¯½÷Å¢üÌò ¾¨Ä Ží̸¢§Èý. ¯í¸¨Çô §À¡ýÈÅ÷¸û ´Õ§ºÃ ±Øó¾¡ø, þɢ ±¾¢÷¸¡Äõ ¯Ú¾¢Â¡¸ ¯ÕÅ¡Ìõ.

«ýÀ¢üÌâ «Õñ¦Á¡Æ¢,

§º¡¾¢Â÷ ÜȢɡÖõ, ÓÂýÈ¡ø ¾Á¢Æ¢ø ¦ÀÂ÷ Ýð¼Ä¡õ ¾¡ý. ¾üº¢ó¾¨É þøÄ¡Ð, §ÅÚ ²§¾¡ ´Õ ¸ÕòÐìÌ «Ê¨Á¡ÉÅ÷¸û இப்படித்தான் பேசுவார்கள். ¾¡§Á ¯½÷óÐ ¾¡ý þÅ÷¸û ¾¢Õó¾ §ÅñÎõ. ¸¡Äõ ÅÆ¢ ¸¡ðÎõ.

¿§Ãó¾¢Ãý,

þó¾¢Ã×ĸõ ±ýÈ ¸üÀ¨É ¾Á¢Æâý ¸Õò¾£ðÊÖõ þÕó¾Ð. «¨¾ Å¡ÉÅ÷ ¯Ä¸õ, þ¨ÁÂÅ÷ ¯Ä¸õ ±ýÚ «¨Æò¾¡÷¸û. þÐ §À¡ýÈ ¸Õò¾£Î¸û, ¯Ä¸¢ø ¦Åù§ÅÚ ÀÆíÌÊ¢Éâ¼Óõ, þÉìÌØì¸Ç¢¼Óõ þÕó¾É. ¦¸¡ïºõ Á¡ó¾Å¢Âø, ÀñÀ¡ðÊÂø, ¿¡ð¼¡÷ ÅÆ측üÈ¢Âø §À¡ýÈÅü¨Èô ÀÊòÐô À¡Õì¸û. ºí¸ þÄ츢Âò¨¾Ôõ ÀÊÔí¸û. ¿¡ý ¦º¡øÄ ÅÕÅÐ ÒâÔõ. þÐ §À¡ýÈ ¸Õò¾£Î¸û ¦À¡Ð¨Á¡ɨÅ; ¬É¡ø Å¢¾ôÀ¡¸ ¦Åù§ÅÚ ÌÊ¢Éâ¼õ ¦ÅÇ¢ôÀθ¢ýÈÉ. §Å¾ò¾¢ø ¯ûÇ ¦ÅÇ¢ôÀ¡Îõ µ÷ þÉìÌØÅ¢ý ¦ÅÇ¢ôÀ¡Î ¾¡ý. «Ð ´ýÚ ÁðΧÁ þó¾¢Âò Ш½ì¸ñ¼ò¾¢ý ¦ÅÇ¢ôÀ¡Î «øÄ. ±øÄ¡Åü¨ÈÔõ ż¦Á¡Æ¢, §Å¾õ ÅƢ¡¸§Å À¡÷òÐì ¦¸¡ñÎ þÕìÌõ ÅÆì¸ò¨¾ ´Ð츢ɡø «È¢× ¦¾Ç¢× ¦ÀÚõ.

"தமிழுக்கு அப்பா உண்டா ?" என்று கேட்டிருக்கிறீர்கள். ¾Á¢ØìÌ «ôÀ¡ ¯ñÎ ±ýÚ ¾¡ý º¢வ¦¿È¢Â¡Ç÷ போன்ற நம்பும் மதத்தார் சொல்லு¸¢È¡÷¸û. «Ð §À¡Ä ´ù¦Å¡Õ ºÁ¦¿È¢ì¸¡ÃÕõ ¾Á즸ýÚ Å¢¾ôÀ¡¸ ´ý¨Èì ¦¸¡ûÙ¸¢È¡÷¸û. (நம்பா மதத்தார் அதை மறுப்பார்கள்.) சிவநெறியார் கருத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு திரு எறும்பியூரைப் பற்றிய அப்பர் பாடல் ஆறாம் திருமுறை.

பன்னியசேந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
எண்ணேடு பண்ணிறைந்த கலைகள் ஆய
தன்னையும் தன் திறத்தறியாப் பொறியி லேனைத்
தன்திறமும் அறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென் எறும்பியூர் மலைமேல் மாணிக் கத்தைச்
செழுங்சுடரைச் சென்றடையப் பெற்றேன் தானே!

அத்தன் என்றால் அப்பன் என்று பொருள். அந்த அத்தன் தான் அச்சன் எனத் திரிந்து மலையாளத்தில் புழங்கும்.

அன்பிற்குரிய பாலாஜி சித்ரா கணேசன்,

அது என்ன கொஞ்சம் தவறு என்று புரியவில்லை. (அப்பொழுது கொஞ்சம் சரியா?)

சாதிப்பெயர் பற்றி நான் என் பதிவில் சொல்லவில்லை. குடும்பப் பெயரைத் தவிர்க்க முடியாது என்ற மற்ற மொழிக்காரர்கள் பலரும் சொல்லுகிறார்கள். நான் தமிழரில் மிகப் பெரும்பாலோருக்கு இல்லை என்று சொன்னேன். செகையியம் (sexism) பற்றியும் நான் சொல்லவில்லை. உங்கள் கருத்தையும், உங்கள் பெயரையும் ஆர்வத்தோடு பார்த்து அறிந்து கொண்டேன். இது போன்ற சிந்தனைகள் நம்மூரில் வளரட்டும்.

வேதநெறிப் பெயர்கள் பற்றியும் சொல்லுதற்கு எனக்கு ஒன்றுமில்லை. மற்ற சமயப்பெயர்கள் வரும் போது, இது வருவதில் என்ன முன்னிகை சொல்ல முடியும்? பாலாஜி என்ற பெயரின் சொற்பிறப்பிற்குள் நான் போகவில்லை. மேலோட்டமாகச் சொல்லுகிறேன். அது வேதப் பெயரில்லை. நீங்கள் சொன்னது போல் அதில் தமிழமும் (=அதுதாங்க, உங்க திராவிடம்) கலந்து இருக்கிறது. "அத்வைதம் ஏற்றுக் கொள்ளும் நாத்திகன்" என்ற தொடர் நல்ல அஃகுமுரண் (oxymoron). இருந்தாலும் அப்படிச் சொல்லிக் கொள்வது உங்கள் உகப்பாகவும் உரிமையாகவும் இருக்கலாம்.

அப்புறம் "ஜ உள்ளிட்ட கிரந்த எழுத்தெல்லாம் தமிழில்லை என்னும் விதண்டாவாதத்தையும் நான் நிராகரிக்கிறேன்." என்று சொல்லியிருக்கிறீர்கள் பாருங்கள்; அது விதண்டாவாதத்தின் உச்சம். உங்களுக்கு ஒலியன், எழுத்து இரண்டிற்குமான வேறுபாடு, உறவு தெரியவில்லை போலும். தயவு கூர்ந்து ஏதேனும் ஒரு அடிப்படை மொழியியல் பொத்தகத்தைப் படியுங்கள். உலகில் உள்ள எந்த ஒரு மொழியிலும், அவர்கள் எழுப்பும் ஒலியையெல்லாம் எழுதிக் காட்ட முடிவதில்லை. அப்படி எழுதிக் காட்டவேண்டுமானால், செயற்கையாகப் படைத்த International Phonetic Alphabet -ஆல் மட்டுமே செய்யமுடியும். It is an all inclusive set, while every other script represents only a subset of the phonemes included in the all inclusive international phonetic set. மொழியியலில் இது ஒரு பால பாடம். வேண்டுமானால், தொல்காப்பியர் என்பதை தேவநகரியிலும், தமிழ்மணம் என்பதை உரோமன் எழுத்திலும் எழுதிக் காட்டிவிட்டு நீங்கள் வந்தால், "பாம்பு எழுப்பும் இஸ், இஸ், சலங்கை ஏற்படுத்தும் ஜல், ஜல், பூச்சட்டி எழுப்பும் புஸ், நகைக்கும் போது எழும்பும் ஹாஹாரம் ஆகியவற்றை 'தமிழ்ல்' " நான் எழுதிக் காட்டுகிறேன்.

பி.கு. 1: நாங்களும் செவிடர்கள் இல்லை.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

ஐயா,

"ஐ"யும், "ஔ"வும் தமிழ் எழுத்துக்கள் தானே? பிறகு ஏன் இவைகளை பயன்படுத்த கூடாது?

Gershom Naphtali said...

வட மாநிலத்தவர் இந்தியர் என்பதை தேசிய அடையாளமாக சொல்லிக் கொண்டாலும் தம் குடும்பம் மற்றும் இன அடையாளத்தை கைவிட்டு விடவில்லை. நாம் மட்டும் ஏன் இழக்க வேண்டும்? நான் இந்தியன் என்பதினாலே என்ன நன்மை?
இதுவரை காலம் நான் இந்தியனாக பெற்றிருந்த நன்மைகளை இழந்து வரும் போது இந்தியன் / தமிழன் என்று சொல்லுவதில் எதில் ஆர்வமாய் இருப்பேன்.

இராம.கி said...

மேலே இந்திரலோத்து தமிழப்பன் என்பாருக்கு எழுதிய முன்னிகையில் ஒருங்குறியும் TSCII யும் கலந்து வந்துவிட்டது. அதை முற்றிலும் ஒருங்குறியில் கொண்டுவந்து இங்கு பதிக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

அன்பிற்குரிய இந்திரலோகத்து தமிழப்பன்,

இவர்களுக்கு நா அடங்காது நண்பரே! ஏனென்றால் இவர்கள் ஒரு நிகழ்ப்போடு வலைப்பதிவுகளில் திரிகிறார்கள். இந்தப் பதிவின் அடிப்படைக் கரு என்ன என்றே புரியாமல் ஏதோதோ பேசிப் போகும் கூட்டம் அப்படித்தான் பேசும்.

"எண்ணியல்(numerology) தமிழ் எழுத்திற்கு உள்ளதாகத் தெரியவில்லை, பெயரடிப்படையில். அப்படி வந்தால் பல போர் கொம்பற்று, விசியற்று, குற்றற்று திரிய வேண்டிய நிலை வரலாம்" என்று சரியாகத்தான் சொன்னீர்கள், .

அன்பிற்குரிய பாபு,

உங்கள் உணர்விற்குத் தலை வணங்குகிறேன். உங்களைப் போன்றவர்கள் ஒருசேர எழுந்தால், இனிய எதிர்காலம் உறுதியாக உருவாகும்.

அன்பிற்குரிய அருண்மொழி,

சோதியர் கூறினாலும், முயன்றால் தமிழில் பெயர் சூட்டலாம் தான். தற்சிந்தனை இல்லாது, வேறு ஏதோ ஒரு கருத்துக்கு அடிமையானவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். தாமே உணர்ந்து தான் இவர்கள் திருந்த வேண்டும். காலம் வழி காட்டும்.

நரேந்திரன்,

இந்திரவுலகம் என்ற கற்பனை தமிழரின் கருத்தீட்டிலும் இருந்தது. அதை வானவர் உலகம், இமையவர் உலகம் என்று அழைத்தார்கள். இது போன்ற கருத்தீடுகள், உலகில் வெவ்வேறு பழங்குடியினரிடமும், இனக்குழுக்களிடமும் இருந்தன. கொஞ்சம் மாந்தவியல், பண்பாட்டியல், நாட்டார் வழக்காற்றியல் போன்றவற்றைப் படித்துப் பாருக்கள். சங்க இலக்கியத்தையும் படியுங்கள். நான் சொல்ல வருவது புரியும். இது போன்ற கருத்தீடுகள் பொதுமையானவை; ஆனால் விதப்பாக வெவ்வேறு குடியினரிடம் வெளிப்படுகின்றன. வேதத்தில் உள்ள வெளிப்பாடும் ஓர் இனக்குழுவின் வெளிப்பாடு தான். அது ஒன்று மட்டுமே இந்தியத் துணைக்கண்டத்தின் வெளிப்பாடு அல்ல. எல்லாவற்றையும் வடமொழி, வேதம் வழியாகவே பார்த்துக் கொண்டு இருக்கும் வழக்கத்தை ஒதுக்கினால் அறிவு தெளிவு பெறும்.

"தமிழுக்கு அப்பா உண்டா ?" என்று கேட்டிருக்கிறீர்கள். தமிழுக்கு அப்பா உண்டு என்று தான் சிவநெறியாளர் போன்ற நம்பும் மதத்தார் சொல்லுகிறார்கள். அது போல ஒவ்வொரு சமயநெறிக்காரரும் தமக்கென்று விதப்பாக ஒன்றைக் கொள்ளுகிறார்கள். (நம்பா மதத்தார் அதை மறுப்பார்கள்.) சிவநெறியார் கருத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு திரு எறும்பியூரைப் பற்றிய அப்பர் பாடல் ஆறாம் திருமுறை.

பன்னியசேந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
எண்ணேடு பண்ணிறைந்த கலைகள் ஆய
தன்னையும் தன் திறத்தறியாப் பொறியி லேனைத்
தன்திறமும் அறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென் எறும்பியூர் மலைமேல் மாணிக் கத்தைச்
செழுங்சுடரைச் சென்றடையப் பெற்றேன் தானே!

அத்தன் என்றால் அப்பன் என்று பொருள். அந்த அத்தன் தான் அச்சன் எனத் திரிந்து மலையாளத்தில் புழங்கும்.

ந.குணபாலன் said...

நான் அறிஞ்சவரை எண்டைக்கு எண்சோதியம் எங்களுக்கு அறிமுகமாச்சோ அண்டைக்கு பிடிச்சது சனி. எங்கடை ஊரிலை ஒரு ஆசிரியை பேர் பிளசம் ரீச்சர் எண்டு சொல்லுவம். அவவின்ரை தேப்பன் ஆங்கில மயக்கத்திலை மேளுக்கு Blossom எண்டு பேர் வைச்சார். வடமொழிப்பேர் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் டானா,டீனா, டூனா விலை பேர் துவங்க வேணும் எண்டு பஞ்சாங்கம் பார்க்கிறவர் சொல்ல, இந்த எண் வரக்கூடியதாய் பேர் அவை எண்டு எண்சோதியம் சொல்ல எங்கடை சனம் தங்கடை பிள்ளைக்கு சின்னதா சுருக்கமா இனிமையா (short & sweet) பேர் வைக்கிறதெண்டு ஹ,ஜ,ஷ,ஸ,க்ஷ எண்ட ஒலிப்புகளோடை புதுப்பேரை அந்தப்பேருக்கு எதுவித அருத்தமும் இல்லாமல் வைக்கினம். இதுக்கிடையிலை தங்கடை பிள்ளையின்ரை பேர்போலை வேறை ஆரும் பேர் வைச்சிருக்கப்படாதாம். என்னைப்பொறுத்தவரை இலங்கையிலை கிறித்தவ, இசுலாமியப் பேர்களின் தாக்கம் தான் முன்னை சொன்ன ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ வரக்கூடியமாதிரி பேர் அமைஞ்ச காரணம். பலரை மனம் நோக வைச்சாலும் சில எடுத்துக்காட்டுக்களை நான் இஞ்சி வைக்கிறன்.
றஜீன்குமார்-றஜீன் எண்டால் என்ன கருத்து?
அக்‌ஷயா எண்டு ஆங்கில எழுத்திலை எழுதி வில்லங்கமான உச்சரிப்பாய் நோர்வே மொழியில் உச்சரிக்கப்பட இருந்த ஒரு பேரை நான் விளங்கப்படுத்தி தடுத்திருக்கிறன். எண்சாத்திரப்படி அந்தப்பேரை இப்படி எழுதினவை.
Aakshaya நோர்வே, டென்மார்க் மொழிகளில் aa எண்டு ரெண்டு a சேர்ந்து வந்தால் ஓ எண்டுதான் உச்சரிப்பாங்கள். நான் இருக்கிற குமுனத்தின்ரை(community) பேர் Ålesund இதை Aalesund எண்டும் எழுதலாம். ஓலசுண்ட் எண்டதுதான் சரியான உச்சரிப்பு. எக்கணம் Aakshaya எண்டதை இங்கினை எப்பிடி உச்சரிப்பாங்கள் எண்டு யோசிச்சுப்பிடியுங்கோவன்.
Lukshika? Thushan? Luksana? Dines?

Mukil said...

ஐயா வணக்கம். எம் குளவிக்கு "வேனிற் அதிரல்" எனும் பெண்பாற் பெயரை சூட்டியுள்ளோம். வேனில் அதிரலா வேனிற் அதிரலா என அறிய ஆவல். வேனில் அதிரல் வேய்ந்த நின் எனுஞ்சொற்றொடர் புறத்தில் உள்ளதாக படித்திருக்கிறேன். எது முறையானது? மிக்க நன்றி!

இராம.கி said...

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D

என்பதைப் படியுங்கள். வேனில் அதிரல் என்பது சரி. ஆனாலும் ”அதிரல்” என்பதே போதும். சுருக்கமாயும் பொருல் பொதிந்தும் இருக்கும். வேனில் என்று அடைகொடுப்பது அளவிற்கு மீறிய விவரிப்பு. அதிரல் என்ற பெயர் பெண்ணுக்கே பொருந்தும். பின்னாளில் பிள்ளைக்குப் பெயரின் பொருளைச் சொல்லுங்கள். முடிந்தால் பூவையும் காட்டுங்கள்.

Anonymous said...

ஆலோசனை சொன்னவன் ஓர் எழுத்தை a கூட்டுவதற்கு பதில் ஜாக்குலின் என்று பரிந்துரை கொடுத்தால் மாற்றியிருக்க மாட்டாரோ? காலங்கடந்து எழும் கேள்வி.

Mani Narayanan said...

முனைவர் இராம. கி அவர்களின்
அருமையான ஆராய்ச்சிப் பதிவுக்கு நன்றி!
தமிழன் ஏமாந்தான்!ஏமாந்து கொண்டிருக்கிறான்!இனியாகிலும் ஏமாராமல் இருக்கலாமே!தமிழில் பெயர் வைப்போம்!தமிழர் நலன், அடையாளம் காப்போம்!

Anonymous said...

கோ