Wednesday, August 08, 2007

வேங்கடத்து நெடியோன் - 1

அண்மையில் வேங்கடமுடையானின் இற்றைக் காலப் பெயரான "சீனிவாசனைத் தமிழில் சொல்ல முடியாதா?" என்பது பற்றிய உரையாடல் திரு. கண்ணபிரான் ரவிசங்கரின் வலைப்பதிவில் எழுந்தது. அந்தப் பதிவையும், அதில் வந்த பின்னூட்டுக்களையும் படித்த போது, "உடனடியாக எழுதாது, கொஞ்சம் ஆற அமரச் சரிபார்த்து, உறுதி செய்து, பின் எழுதலாம்" என முன்னிகை தருவதைத் தவிர்த்தேன். அச் சரிபார்ப்பு இப்பொழுது ஓரளவு முடிந்த நிலையில், சொல்லாய்வு, முற்கால வரலாறு ஆகியவை சேர்த்து, இந்தப் பதிவில் சொல்கிறேன்.

நமக்குக் கிடைத்த தரவுகளில், வேங்கடத்தை  முதலில் குறிப்பிட்ட சான்று தொல்காப்பியத்தில் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுகத்து" என்று தொடங்கும் பனம்பாரனாரின் சிறப்புப் பாயிரத்தில் உள்ளது. இதில் வேங்கடம், மலையை மட்டும் குறித்ததா என உறுதி சொல்ல முடியாது. ஏனெனில் தமிழ்நாட்டு வடஎல்லையில் இன்றுள்ள வேங்கடமலை ஆயின், அது வடகிழக்கில் மீச்சிறிய இடங்குறித்ததாய் அமையும். தவிர, இற்றை வட எல்லையே சங்க காலத்தில், அதற்கு முந்தைய தொல்காப்பியக் காலத்தில் இருந்ததாய்ச் சொல்ல முடியாது. மாமூலனாரையும், காரவேலன் கல்வெட்டையும் படித்தால், அற்றை வட எல்லை இன்னும் வடக்கே என்றே தோன்றுகிறது. இதுவரை செய்த என்னாய்வில் அது எதுவென என்னால் சொல்ல முடியவில்லை. 

வட எல்லை வடகிழக்கிலுள்ள மீச்சிறு எல்லையைக் குறிக்காது கிழக்கிருந்து மேற்கு வரை ஓர் அகண்ட பட்டையைக் குறித்தால் வட எல்லை என்பதில் நல்ல பொருளுண்டு. தொல்காப்பிய உரை எழுதிய இளம்பூரணர் (11 ஆம் நூ.) தன் உரையில் என்ன காரணத்தாலோ, வேங்கடத்தைத் திருமாலோடு பொருத்திச் சொல்லார். ஆனால் 14 ஆம் நூ. நச்சினார்க்கினியரோ நிலங்கடந்த நெடுமுடி அண்ணலாகிய திருமால் உறையும் மலையாக வேங்கட மலையைக் கூறுவார். 19, 20 ஆம் ஆண்டு உரையாசிரியரும், தமிழாசிரியரும் நச்சினார்க்கினியர் அளவிற்கு இளம்பூரணரை ஓதாக் காரணத்தால் நெடியோன், திருமாலாய் மட்டுமே எண்ணப்படுகிறான். 

திருமாலை மட்டுமின்றி, சிவன், அனுமன், ஏன் சாத்தார நெட்டையன்,  உருவகத்தால் நெடிதுயர்ந்த குன்று-மலை என ‘நெடியோன்’ குறிக்கலாம். சிவனை மதுரைக் காஞ்சி , “மழுவாள் நெடியோன்” என்று சொல்லும். அவனை மாதேவன், பெருந்தேவன் என்பது கூட அவனின் நெடுமையாலும், , பெருமையாலும் ஆகலாம். 

வேங்கடம் என்பதைச், சங்கப் பாடல்களில் 14 இடங்களில் (அகம் 27, 61, 83, 141, 209, 211, 213, 265, 393, புறம் 381, 385, 389, 391) காணலாம். உரையாசிரியர்களின் கூற்றுகளைத் தவிர்த்து, பொருள்களை ஓர்ந்து பார்த்தால், இற்றைத்  திருமலை மட்டுமின்றி, வேறொரு  மலைத் தொடரையும், அதை ஒட்டிய பகுதிகளையும் குறித்திருக்கலாம். 

அதாவது வேங்கடம் என்பது மலை, தொடர், அதைச்சுற்றிய பகுதிகள் என விரிந்தே பொருள்கொள்ள வேண்டும். அப்பகுதிகள் எவ்வளவு தொலைவு இருக்கும் என்பது அடுத்த கேள்வி. இற்றை வேங்கடப் பகுதிகள் சங்க காலத்தில் (கி.மு. 600 - கி.பி. 300) நமக்குத் தெரிந்தவரை அங்கொன்றும் இங்கொன்றுமாய், திரையனுக்குக் கீழும் (இவன் தொண்டைமான் இளந்திரையனுக்கு முன்னோனாய் இருக்கலாம்), மாவண் புல்லி என்ற குறுநில அரசனுக்குக் கீழாயும், ஆதனுங்கனுக்குக் கீழாயும் (இவன் மோரிய அரசன் பிந்துசாரனின் படையெடுப்புக் காலத்தில் இருந்துள்ளான். இவன் பற்றிய செய்தி அறதப் பழைய காலம்.) இருந்ததாக அடையாளப் படுகின்றன. இக் குறுநில மன்னரின் தொடர்ச்சிவரிசை நமக்குக் கிட்டவில்லை. எனினும், இப் பகுதிகள் தமிழ்பேசும் பகுதிகளாய் இருந்தன என்றே அறிகிறோம்.

இந்தப் 14 பாடல்களிலும், ஓரிடத்தில் கூட, வேங்கடத்தின் திருமால், திருமால் கோயில் ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லப் படாதது வியப்பையே அளிக்கிறது. "பரங்குன்றைக் குறிக்கும் போதெல்லாம், விட்டு விடாது, முருகனைச் சேர்த்துக் குறிக்கும் சங்கப் பாடல்கள், வேங்கடத்தைச் சொல்லும் போது மட்டும், கூடவே திருமால், திருமால் கோயிலைக் குறிக்காது போனது ஏன்?" - என்பது நமக்குக் கேள்விக் குறியாய் இருக்கிறது. இத்தனைக்கும் வேறு பல இடங்களில் சங்கப் பாடல்கள் மாயோனையும், வாலியோனையும் அழுத்தமாகக் குறிக்கின்றன. முல்லைநிலத் தெய்வம் மாயோன் தானே? (வாலியோன் மாயோனின் அண்ணன்; இவனைக் குறிப்பிடும் வழக்கம் சங்க இலக்கியத்தில் கொஞ்சம் அதிகம் தான். வாலியோனை வழிபாட்டிற் சிறப்பிப்பது பழந்தமிழகமும், இன்றைய ஒரிசாவும் தான்.)

பொதுவாகச் சங்க இலக்கியத்தில் பாலைத்திணையில் (சங்க இலக்கியத்தில் இந்தத் திணைப் பாட்டுக்கள் மிகுதியாய் உள்ளன.) பொருள்வயின் பிரிதலைக் குறிக்கும் எல்லா இடங்களிலும், சிலம்பில் (11:63-67) சொல்லப் படுவது போல்,

"வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலம் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்"

என்ற அளவில் முல்லையும் குறிஞ்சியும் திரிந்த இடமே பாலை என்பதாக ஒரு தமிழ் நாட்டு வரையறையைக் குறிப்பதாகக் கொள்ள முடியவில்லை. அவை வேறு ஏதோ ஒரு நிலைத்த இடத்தை, அதுவும் தமிழ்கூறும் உலகைத் தவிர்த்து, ஒரு மொழிபெயர் தேயமாகவே, குறிப்பதைக் கவனிக்க முடியும். அதோடு வேங்கடம் என்ற சொல், வெறும் மலையை மட்டும் அல்லாது, வெய்யிலில் வேகும் பகுதியையே முதலில் குறித்திருக்க வேண்டுமோ என்றும் ஐயுற வேண்டியிருக்கிறது.

(இயற்பொருளின் படி, வேகும் கடம் என்பது, வெய்யிலால் சுட்டெரிக்கும் இடம் என்பது, வேங்கடம் என்றாகும்; கடம் என்பதற்கு பாவம் என்ற பொருள் கூறி சமய உணர்வில் விளக்கப் பார்ப்பது வேண்டாத வேலை. எல்லாவற்றிற்கும் சமயத் திருகையே - twist - விளக்கமாய் அளித்துக் கொண்டிருந்தால் வரலாறு என்பது சரியாய் விளங்காமல் போகும். பாவம் - புண்ணியம் போன்ற கருத்துக்கள் எல்லாம் மெய்யியல் வழியாக வந்தவை. மெய்யியற் சிந்தனை தமிழ்க் குமுகாயத்தில் அழுந்தியது கி.மு. 200 களுக்கு அப்புறமே. தொடக்க காலத்தில் தெய்வ வழிபாடு இருந்தது; ஆனாற் சமய நெறி கிடையாது. 2300-2500 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இடப்பெயர்கள் பெரும்பாலும் இயற்கையை ஒட்டியே அமைந்திருப்பதை நாவலந்தீவின் பல இடங்களின் பெயர்களில் பார்க்கலாம்.)

தென்னிந்தியாவிலேயே கோடைகாலத்தில் மிகுந்து வேகும் பகுதி ஆந்திரத்தில் இருக்கும் இராயலசீமைப் பகுதியே ஆகும். ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், சங்க இலக்கியத்தில் பாலையாகக் குறிப்பிடப்படும் வேங்கடப் பகுதி, ஒரு பெரிய நிலப்பரப்பாய், குறிப்பாகக் கண்ண பெண்ணை (கிருட்டிணா) ஆற்றில் இருந்து வட பெண்ணை ஆறு வரைக்கும் இருக்கும் இந்தக் கால இராயல சீமைப் பகுதியாகவே இருந்திருக்க வாய்ப்புண்டு என்று சில ஆய்வாளர்கள் குறிப்பார்கள். இது மொழிபெயர் தேயம். தமிழும் வடுகும் ஒன்றிற்கொன்று ஊடுறுவிய பகுதி.

தவிரப் பொருள்வயின் பிரிவது என்பதை "வணிகம் கருதியே பிரிந்திருக்க வேண்டும்" என்று கொண்டால், அந்த வணிகம் நிலம்வழி நடந்தது என்றால், அது வடக்கு நோக்கி இருந்திருக்கவே வாய்ப்புண்டு. அந்த வணிகத்தில் வடவெல்லை மகதமாகவே கி.மு.600-400 களில் அமைந்திருக்கலாம். மகதத்திற்கும், தமிழ்கூறு உலகத்திற்கும், பிந்துசாரன் (= மோரிய அரசன் அசோகனின் தந்தை) காலம் தவிர்த்து, நந்தர், மோரியர் என்று வரும் காலங்களில் கனிவான உறவு குறைபடாமலே இருந்திருக்கிறது. தவிர, அந்தக் கால மொழிபெயர் தேயமாய் தமிழகத்திற்கு அடுத்தாற்போல இருந்தவை, வட மேற்கே இருந்த நூற்றுவ கன்னரின் (= சாதவ கன்னரின்) அரசும், வடகிழக்கே இருந்த கலிங்க அரசுமே ஆகும்.

நூற்றுவர் கன்னரை தோழமை கொண்ட தமிழரசர் என்றே சிலம்பு பேசுகிறது. கலிங்க அரசன் காரவேலனின் கல்வெட்டும், தமிழ் மூவேந்தரின் நீண்ட காலக் கூட்டணியைப் பகைமை இல்லாமலேயே குறிக்கிறது. எனவே நூற்றுவர் கன்னர் அரசின் வழியாகவும், கலிங்க அரசின் வழியாகவும் மகதம் வரை செல்லும் வாணிகம் நடந்திருக்க வேண்டும். குடிலரின் (=கௌடில்யரின்) பொருள்நூல் (=அர்த்த சாத்திரம்) தெரிவிக்கும் ஒரு சில வணிகப் பண்டங்கள் தெற்கிருந்து போனவையாகவே தெரிகின்றன. பொதுவாகச் சங்க இலக்கியங்களில் கிடைக்கும் நந்தரின் அரசுச் செய்திகளும் மகதத்திற்கும் தமிழகத்திற்குமான உறவு மேம்பட்டே இருந்திருப்பதை உறுதிப் படுத்துகின்றன.

பழந் தமிழகத்தில் இருந்து (இது இன்றையத் தமிழகமும், கேரளமும், தென்கன்னடமும் சேர்ந்த ஒருபகுதி.) வடக்கே போக இரண்டு வழிகள் தான் உண்டு. ஒருவழியில், எருமைநாட்டைக் கடந்து (= மைசூர் நாடு; அதுவும் அன்று முழுமையாய்த் தமிழ் பேசி இருந்த நிலம் தான். இன்றையத் தென்கன்னட நாடு முழுமையும் அன்றைக்குத் தமிழ் பேசும் நிலமாய்த் தான் இருந்தது. இதைக் கல்வெட்டுக்களும், கன்னட மொழி வளர்ந்த நிலையும், கன்னட இலக்கியங்கள் பிறந்த வரலாறும் தெளிவாகவே உணர வைக்கின்றன.) சமண வெள்ளைக்குளம் (=ஸ்ரவண பெலகுளா) வழியாக இன்றைய ஔரங்காபாதிற்கு அருகில் கோதாவரி ஆற்றின் வடகரையில் இருக்கும் நூற்றுவர் கன்னரின் முதல் தலைநகரான படித்தானம் போய் அங்கிருந்து மகத அரசின் தக்கணப் பாதையைப் பிடிக்க வேண்டும். (படித்தானம்>பயித்தானம்>பைத்தான்; நம்மூரில் ஆற்றங்கரையின் அருகில் உள்ள துறையை இருக்கிறது. படித்தானத்திற்குச் சற்று அருகில் தான் எல்லோரா மற்றும் அசந்தா மலைக் குகைகளும் இருக்கின்றன.)

மகத அரசின் தக்கணப் பாதை கோதாவரியின் வடகரையில் இருக்கும் படித்தானத்தில் தொடங்கி, அசந்தா, எல்லோரா வழியாக, வடக்கே நகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையில் இருக்கும் மகேசருக்கு வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) இருக்கும் கோனாதா வந்து, அப்புறம் உஞ்சைக்குப் (உச்செயினி) போய், மேலே பில்சா வந்து, பின்னால் நேர்வடக்கே திரும்பி, தொழுனை (=யமுனை) ஆற்றின் கரையில் இருக்கும் கோசாம்பிக்கு வந்து, அதற்கு அப்புறம் அயோத்தி என்ற சாகேதத்தில் (Fyzaabaad) வந்து முடிவில் சாவத்தியில் சேரும். (சாவத்தி என்பது கோசலத்தின் தலைநகர். கோசலமும், மகதமும் கி.மு. 6ம் நூற்றாண்டில் ஒன்றிற்கொன்று போட்டி போட்டிருந்த நாடுகள். இராமாயணக் கதையில் வரும் கோசலம் இராமனின் தாய் பிறந்த நாடு. மகத அரசின் பேர்பெற்ற முதலரசன் பிம்பிசாரன்; அவனுடைய மைத்துனன் ஒரு கோசலத்து மன்னன் தான். மகத்திற்கும் கோசலத்திற்கும் இருந்த உறவு 18 ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் சேதுச் சீமைக்கும், சிவகங்கைச் சீமைக்கும் இடையே இருந்த மாமன் - மச்சான் உறவு போன்றுதான்; ஒருசமயம் இழைந்து கொள்ளுவார்கள்; மறுசமயம் அடித்துக் கொள்ளுவார்கள்.)

தெற்கிருந்து வடக்கே போவதற்கு இன்னொரு வழி, வேனிற் காலத்தில் வெப்பம் மிகுந்த வேங்கடப் பகுதியைக் கடந்து அமராவதி வந்து (புத்த நெறியின் தென்பகுதித் தலைமைப் பீடம் போன்றது.) அங்கிருந்து கலிங்கம் வழியாக மகதத்துள் வந்து சேருவது. அமராவதியில் இருந்து படித்தானத்திற்குக் குறுக்கில் ஒரு கிடைப் பாதையும் உண்டு.

பழங்கால நாகரிக வளர்ச்சியையும், அரசர்கள் படையெடுத்ததையும், வணிகப் போக்கையும் புரிந்து கொள்ள எண்ணுகிறவர்கள் இந்தப் பாதைகள் போன போக்கைப் புரிந்து கொள்ள வேண்டும்; இல்லையென்றால், ஒழுங்காக இந்திய வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியாது.

சங்க கால வேந்தர்களும், பின்னால் பேரரசுச் சோழர்களும் கொங்கு நாட்டையும் (>கங்க நாடு), அதிகன் நாட்டையும் (அசோகனின் கல்வெட்டில் குறிக்கப் படும் சத்திய புத்த நாடு) கைக்குள் வைத்துக் கொள்ளாத பொழுது, இந்த வேந்தர்கள் நாட்டு வணிகர்கள், இரண்டாவது வழியான வேங்கடப் பகுதி வழியாகக் கலிங்கம் போய்த்தான் மகதம் செல்ல நேரிடும். நாட்டில் செல்வம் கொழிக்க விரும்பிய தமிழக அரசருக்கு மாராட்டியம், கலிங்கம் ஆகிய இரண்டில் யாரோ ஒருவர் இவர்கள் பக்கம் சார்ந்து இருக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும். மகதத்தை நோக்கிய வணிகம் இல்லாமால் தமிழ்நாட்டு அரசுகள் நெடுங்காலம் தரிக்க முடியாது.

முன்பு சொன்னது போல், வேங்கடப் பகுதியின் வடக்கு என்பது இன்றையத் தெற்கு ஆந்திரத்தையே, அதாவது வடுகு மொழி பெரிதும் பேசும் தேயத்தையே குறிப்பதாகத் தோற்றுகிறது. அந்தக் கால வடுகு என்பது நமக்கு வடக்கில் உள்ள மொழி என்றே புரிந்து கொள்ளப் பட்டது; அதே பொழுது, பாகத மொழி பேசிய நூற்றுவர் கன்னருக்கு அது தெனுகு (தெற்கு) மொழியாய் ஆனது. தெனுகு (=தெலுகு; தெனுங்கு; தெலுங்கு) பேசும் இடத்திலும் தமிழ் மொழி அங்கங்கே ஊடாகப் விரவி இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நூற்றுவர் கன்னர்கள் தங்கள் காசுகளின் ஒருபக்கம் தமிழிலும் பொறித்திருக்க மாட்டார்கள் அல்லவா? வேங்கடம் என்பது தமிழ் கூறும் உலகிற்கு எல்லையாக இருக்குமானால், அந்தப் பெயரையே வைத்து எல்லை ஒட்டிய பகுதிகளையும் குறிப்பது மாந்தருக்கு இருக்கும் வழக்கம் தான். இது எப்படியென்றால், இன்றைக்கும் தெலுங்கர்கள் தமிழர்களை அரவமாடு என்று குறிப்பதைப் போல என்று கொள்ள வேண்டும்.

[தமிழ்நாட்டின் வடபகுதி மண்டலங்களாய் அருவா நாடு, அருவா வடதலை நாடு என்று இரண்டைப் பழங்காலத்தில் குறிப்பார்கள். பழைய ஆர்கா நாடு>அருகா நாடு (>அருவா நாடு) தான் இன்றைய வட ஆர்க்காடும், தென் ஆர்க்காடும் சேர்ந்த நிலப்பரப்பு ஆகும். ஆர்கா நாடு>ஆர்க்காடு என்று ஆனது. அருவா வடதலை என்பது இன்றைய ஆந்திர மாநிலம் சேர்ந்த சித்தூர், நெல்லூர் மாவட்டங்களாகும். (அவை இரண்டும் பெரும்பான்மையர் தமிழ் பேசிய இடங்களாய்த் தான் 1956/57 வரை இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்ட குழப்பத்தில் இந்த மாவட்டங்களையும், இது போல கன்னடமாநிலத்திற்கும், கேரள மாநிலத்திற்கும் நாம் இழந்த பகுதிகளும் உண்டு. இப்படிப் பெரிதும் ஏமாளிகளாய் இருந்தாலும், தமிழர் ஏதோ இந்திய இறையாண்மையில் ஒன்று படாதவர்கள் போலவே சித்தரிக்கும் கூத்தும் அவ்வப்பொழுது நடந்து கொண்டுதான் இருக்கிறது.)

அருவா நாடு, அருவா வடதலை நாடு ஆகிய இரண்டுமே தெலுங்கருக்கு அண்மையில் இருந்த காரணத்தால், அருவாளர் என்ற சொல் (அருவம் ஆடு>அரவம் ஆடு = அரவமாடு; ஆடும் ஆளும் ஒரே பொருள் கொண்ட சொற்கள் தான். ஒன்று தெலுங்கிலும், இன்னொன்று தமிழிலும் பரவலாகிப் போனது.) மொத்தத் தமிழரையும் குறிப்பிடும் சொல்லாய் ஆனது. இதே போல தென்கேரளத்தில் பாண்டி என்ற சொல் மொத்தத் தமிழரையும் குறிக்கும் சொல்லாக அமையும்; திகிளர் என்ற சொல் கன்னடத்தில் மொத்தத் தமிழரையும் குறிப்பதாக அமையும். பொதுவாக எல்லைப் புறத்துச் சொல், மொத்தப் பரப்பாளரையும் குறிப்பதாக அமைவது குமுகவியல், மாந்தவியலில் இயற்கையே.]

அப்பொழுது வேங்கடம் என்பது பகுதிதானா. மலை இல்லையா என்றால், இரண்டும் தான் என்றே விடை சொல்ல வேண்டியிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

23 comments:

குமரன் (Kumaran) said...

ஐயா.

வடவேங்கடம் என்பது மலையும் மலைத்தொடரையும் அது சார்ந்த நிலப்பகுதியும் என்று நன்கு விளக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

அரவாடு என்று தெலுங்கர்கள் தமிழர்களை ஏன் அழைக்கிறார்கள் என்ற கேள்வி எனக்கு நெடுநாட்களாக இருந்தது. இப்போது புரிகிறது. எல்லைப் புறத்துச் சொல் மொத்தப் பரப்பாளரையும் குறிப்பது பல நாட்களாக நடப்பது தான். இந்து மதம் என்று இந்திய சமயங்களுக்கு பெயர் வந்ததும் இது போல் தான் என்று படித்திருக்கிறேன். வடுகர் தெலுங்கர் ஆனதும் எப்படி என்று இன்று அறிந்து கொண்டேன்.

கோசலைதன் திருக்குமரன் என்பதால் இராமனின் தாய் பிறந்த நாடு கோசலை என்று கூறுகிறீர்களா? இராமாயணத்தின் படி அது தசரதன், இக்ஷ்வாகு முதலிய இரகுகுல அரசர்களின் நாடல்லவா? விளக்கம் வேண்டுகிறேன்.

வேங்கடம் என்ற சொல் வரும் அகம், புறம் பாடல்களின் எண்களைக் கொடுத்ததற்கு நன்றி. அந்தப் பாடல்களைத் தேடிப் படிக்க முயல்கிறேன். இந்தப் பதினான்கு பாடல்களிலும் திருமாலைக் குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும் சிலப்பதிகாரத்தில் (பரிபாடலிலுமா? ) மிகத் தெளிவாக வடவேங்கடத்தைத் திருமாலுடன் இணைத்து வருகிறதே? சங்கம் மருவிய காலத்தில் தான் அந்த தொடர்பு ஏற்பட்டிருக்கும் என்று கருதுகிறீர்களா?

வாலியோன் (பலராமன்) வழிபாடு பழந்தமிழகத்தில் இவ்வளவு சிறப்பாக இருந்தது எனக்கு வியப்பாக இருக்கிறது. என்ன காரணமாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்? ஏன் அந்த பலராமன் வழிபாடு இன்றைக்கு இல்லாமல் போனது? கலிங்கத்தில் மட்டுமே இன்றும் இருக்கிறது. திருமாலிருஞ்சோலையில் கூட பலராமனுக்குக் கோவில் இருந்ததாக இலக்கியம் சொல்கிறது என்று படித்திருக்கிறேன்.

பலராமனை வாலியோன் என்ற காரணம் என்ன?

பாகவதம் சொல்லும் கண்ணன் சங்கப்பாடல் சொல்லும் மாயோன் இல்லை என்று ஒரு பதிவுலக நண்பர் கருதுகிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

nayanan said...

//பழங்கால நாகரிக வளர்ச்சியையும், அரசர்கள் படையெடுத்ததையும், வணிகப் போக்கையும் புரிந்து கொள்ள எண்ணுகிறவர்கள் இந்தப் பாதைகள் போன போக்கைப் புரிந்து கொள்ள வேண்டும்; இல்லையென்றால், ஒழுங்காக இந்திய வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியாது.
//

அன்பின் ஐயா,

இந்த வரலாற்றுச் சங்கதிகள்
படிக்கப் படிக்க மனதில் நிற்க மாட்டேன்கிறதே, அடுத்த்தைப் படித்தால் அது ஒரு கோணம் தருகிறதே என்று பல நேரங்களில்
நான் குழம்புவது உண்டு :-). நீங்கள் சொன்ன கருத்து ஆழமான நல்ல செய்தி. இந்த அடிப்படைகள்
புரியாமல் படிக்கும் போது, சரியான
விதத்தில் புரிந்து கொள்ளப் படுவதில்லை.

வேங்கடம் பற்றி, நண்பர் கண்ணபிரான்
எழுதியிருந்ததைப் படித்தேன். கடம் என்பதற்குப் பாவம் என்ற பொருள் அவர் கூறியிருப்பதில் எனக்கும் ஒப்புமை இல்லாவிடினும், திருமந்திரச் செய்யுள் ஒன்று நினைவுக்கு வந்து போனது.

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகரறி யாதவர்
தாங்க வல்லாருயிர் தாம றியாரே.
(திருமந்திரம்: 190)

கடம் = உடல் என்ற பொருளில்,
உடலுக்குள்ளே சீவனாய் இருப்பவன் (ஊனாய் உயிராய்), அதாவது,
இல்லாமற் (வெந்து) போகக் கூடிய இந்த உடலிலேயே, சீவனாய் இருப்பவன் சிவன். இதை உணர்ந்தவரரால் ஆருயிரைஉணர்ந்தவராவார் என்று
பொருள் கிடைக்கிறது.

தாங்கள் சொல்வது போல, வேங்கடம் என்ற பெயர் இருப்பினும், மாயனைப் பற்றி சேதிகள் இல்லாமற் இருக்கையில்
வேங்கட நாதன் என்றால் அது சிவனையே குறிக்கிறது.

அதே நேரத்தில் சிலம்பில்
கற்புக் கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்
என்று காவுந்தியார் சொல்வார்.

இங்கு கடம் என்பது நெறி அல்லது
பண்பு போன்ற ஒரு தனமையை
குறிக்கிறது.

நெறிக்கும் நாதனாகவும், இந்த உடம்பினுள்ளேயும் சீவனாகவும் இருக்கும் நாதன் வாழும் மலை வேங்கட மலை - அதாவது கயிலை மலையாக இருக்குமோ என்ற எண்ணம்
ஏற்பட்டது.

தென்குமரி முதல் வடவேங்கடம் வரை ஆட்சி செய்யும் வேங்கட நாதன் சிவன்
என்று கொள்ளலாமோ என்று ஒரு எண்ணம் மனதில் ஓடியது.

இதை நான் உறுதியாகச் சொல்லவில்லை; பகிர்தலாக மட்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

வெற்றி said...

இராம கி ஐயா,
நல்ல பதிவு. மிக்க நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மிக அருமையான ஆய்வுக் கட்டுரை இராம.கி ஐயா!
பல தகவல்களை அள்ளித் தந்துள்ளீர்கள்!

நீங்கள் எண்ணிட்டுக் குறிப்பிட்டுள்ள சங்கப் பாடல்களைப் படித்துப் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது!

//பலராமன்-வாலியோன் வழிபாடு//

திராவிடமும் ஒரியமும் இந்த வழிபாட்டில் காட்டிய ஈடுபாட்டைப் பற்றி நல்ல நூல் ஏதேனும் உள்ளதா இராம.கி.ஐயா?
ஏறு தழுவுதல் விளையாட்டில் கண்ணன்-பலராமன் குறிப்புகள் பாடல்களில் பார்த்துள்ளேனே தவிர...வழிபாடு குறித்த செய்திகள் அறிந்ததில்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வேங்கடம் பற்றி, நண்பர் கண்ணபிரான்
எழுதியிருந்ததைப் படித்தேன். கடம் என்பதற்குப் பாவம் என்ற பொருள் அவர் கூறியிருப்பதில் எனக்கும் ஒப்புமை இல்லாவிடினும்//

நாக இளங்கோவன் ஐயா
நான் கடம் என்பதற்கு கடன் என்று தான் பொருள் கொண்டிருந்தேன். பாவம் என்று கொள்ளவில்லை!

மேலும் நீங்கள் தந்த திருமந்திரப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.
வேங்கடம் என்றே விரகரறி யாதவர்
தாங்க வல்லாருயிர்? - அருமை அருமை!

இராம.கி ஐயா
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விதுச்சீர் வேங்கடம்
என்று மாமூலனாரும் பாடுகிறாரே!
வெயிலில் வேகும் பகுதியாக இருப்பின் இத்துணை விழாக்கள் நடைபெறுமா? விழவுடை வேங்கடம் என்று சொல்வதால் ஆலயம் பற்றிய குறிப்பு உணர வாய்ப்புள்ளதா என்று நீங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்!

G.Ragavan said...

நல்ல தொடர். பலப்பல தகவல்கள் கிடைக்கின்றன.

இரண்டு வழி என்று நீங்கள் சொல்வதைப் படிக்கையில் சிலம்பு நினைவிற்கு வருகிறது. சேரன் சென்ற வழி மேற்கு வழி. உதகை ஏறி இறங்கி கன்னடம் வழியாக கன்னரைச் சென்றடைந்தான். அவரோடு சேர்ந்து கனக விஜயரைத் தோற்கடித்தான். மறுவழியில் நடந்த ஏதேனும் இதே போன்ற சிறப்பு மிக்க பயணங்கள் உளவா?

அரவாடு ஏன் வந்தது என்று இன்று தெரிந்தது. எங்களூர்ப்பக்கம்ம் அரவட்டு என்று சொல்வார்கள். அப்படிக் கேலி செய்கிறார்களோ என்ற்று நினைத்தேன். ஆனால் அரவட்டு காவட்டு என்ற சொற்களிலிருந்து அப்படி வந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தேன். இன்றைக்குத் தெளிவானது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஐயா

இன்னொரு பின்னூட்டமும் இட்டேனே! கிட்ட வில்லையா?
மாமூலனார் பாடலை அதில் இட்டிருந்தேன்!

bala said...

//அரவாடு என்று தெலுங்கர்கள் தமிழர்களை ஏன் அழைக்கிறார்கள் என்ற கேள்வி எனக்கு நெடுநாட்களாக இருந்தது. //

குமரன் அய்யா,
எனக்கும் ரொம்ப நாளாகவே இந்த சந்தேகம் இருந்து வந்தது.இந்த கொல்டிப் பசங்க எதுக்கு தமிழை அரவம் என்றும்,தமிழர்களை அரவாடு என்றும் சொல்றாங்கன்னு.என்னோட கொல்டி நண்பனைக் கேட்டேன்.அவன் சொன்னது எனக்கு அதிர்ச்சி அளித்தது.தெலுங்கில் அரவம் என்றால் சத்தம்,அதாவது கடமுடா சத்தம்.தமிழர்கள் பேசும் மொழி கேவலமான கடமுடா சத்தமாக இவங்க காதுக்கு கேட்பதால் அதை அரவம் என்று சொல்கிறார்களாம்.ஆனாக்க இங்க இருக்கற தமிழ் அறிஞர்கள் என்ன சொல்லிக்கொண்டு பீத்திக்கறாங்க?
தெலுங்கு,கன்னடம் எல்லாம் தமிழ்த்தாய் ஈன்ற குட்டிகளாம்.கொல்டிப்பசங்க என்ன நினைக்கிறாங்க?just opposite.

பாலா

G.Ragavan said...

// bala said...
//அரவாடு என்று தெலுங்கர்கள் தமிழர்களை ஏன் அழைக்கிறார்கள் என்ற கேள்வி எனக்கு நெடுநாட்களாக இருந்தது. //

குமரன் அய்யா,
எனக்கும் ரொம்ப நாளாகவே இந்த சந்தேகம் இருந்து வந்தது.இந்த கொல்டிப் பசங்க எதுக்கு தமிழை அரவம் என்றும்,தமிழர்களை அரவாடு என்றும் சொல்றாங்கன்னு.என்னோட கொல்டி நண்பனைக் கேட்டேன்.அவன் சொன்னது எனக்கு அதிர்ச்சி அளித்தது.தெலுங்கில் அரவம் என்றால் சத்தம்,அதாவது கடமுடா சத்தம்.தமிழர்கள் பேசும் மொழி கேவலமான கடமுடா சத்தமாக இவங்க காதுக்கு கேட்பதால் அதை அரவம் என்று சொல்கிறார்களாம்.ஆனாக்க இங்க இருக்கற தமிழ் அறிஞர்கள் என்ன சொல்லிக்கொண்டு பீத்திக்கறாங்க?
தெலுங்கு,கன்னடம் எல்லாம் தமிழ்த்தாய் ஈன்ற குட்டிகளாம்.கொல்டிப்பசங்க என்ன நினைக்கிறாங்க?just opposite.

பாலா //

அது சரி பாலா....தமிழறிஞர்கள் பீத்திக்கிறது இருக்கட்டும். அதை ஆந்திராக்காரர்கள் ஒப்புக்கொள்ளாதது இருக்கட்டும். நீங்க என்ன நெனைக்கிறீங்க? தமிழ்ல இருந்து மத்த திராவிட மொழிகள் வந்ததுன்னு நெனைக்கிறீங்களா? இல்ல வேற ஏதாவது நெனைக்கிறீங்களா? அதையும் சொல்லீருங்க.

இராம.கி said...

அன்பிற்குரிய குமரன்,

நான் வரலாறு பற்றிச் சொல்லுகிறேன்; நீங்கள் தொன்மத்தில் இருந்து கேட்கிறீர்கள். இருவருடைய கருத்தும் ஒன்றாக அமையாது போகலாம். இன்றைக்கு இருக்கும் நடைமுறைகள் பண்டைக் காலத்தில் அப்படியே இருக்காது என்பது வரலாற்றில் ஏற்படும் தெளிவு. இன்றைய நடைமுறைகளை பண்டைக் காலத்தில் பொருத்தி உருவாக்கப் படுவது தொன்மக் கதை. தொன்மத்தில் சொல்லவரும் அடிப்படைக் கருத்து முகன்மையானது. ஓரிமைகள் (consistency) முகன்மையல்ல. தொன்மமும் வரலாறும் தங்களின் அழுத்தத்தில் பெரிதும் வேறுபடுபவை.

இராமயணக் கதை கி.மு.800 க்கு அருகில் எழுந்திருக்கலாம் என்றே பல வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள். (இராமாயணக் கதையின் உள்ளே பொதிந்திருக்கும் வரலாற்றுக் கூறுகளை எழுத வேண்டுமானால் அதற்குத் தனிப் பதிவுத் தொடரே போடவேண்டும். இப்பொழுதைய நிலையில் என்னால் அது இயலாது.) ஏனென்றால், இராமாயணத்தில் கூறப்படும் ஊர்களும் / நாடுகளும் (அயோத்தி, சாவத்தி, மிதிலை, விதேகம்) கி.மு.1000 க்கு அப்புறம் தான் எழுந்திருக்க முடியும் என்பது வரலாற்றாசிரியர்கள் ஊகிக்கிறார்கள். அகழ்வாய்வுகளும் அப்படித்தான் உறுதிசெய்கின்றன. பஞ்சாப் பக்கத்து பழைய நகரங்கள் பீகார் பக்கத்து பழைய நகரங்களுக்கு காலத்தால் முந்தியவை. [இருந்தாலும் பாடலி பட்டணம் தான் வட இந்தியாவிலேயே ஒரு காலத்தில் - நந்தர், மோரியர் காலத்தில் - மிகவும் பெருத்த மாநகரம்.]

பொதுவாக வரலாற்றில் கோசலர்கள், மகதர்கள் என்று பன்மையிலேயே ஒரே சமயத்தில் இருந்தவர்களைப் பற்றிக் கூறியிருக்கிறார்கள். (நம் பக்கமும் ஒரே நேரத்தில் பல பாண்டியர்களும், சோழர்களும், சேரர்களும் இருந்திருக்கிறார்கள். நம் பக்கத்தில் இப்படி இருந்த இந்த வேந்தர்கள் (காட்டாகப் பாண்டியர்கள்) தங்களைப் பங்காளிகளாகக் கருதிக் கொண்டு, தங்களுக்குள் மண உறவு வைத்துக் கொள்ள மாட்டார்கள். சோழன் பாண்டியனிடம் பெண்ணெடுப்பான், சேரனிடம் பெண்ணெடுப்பான், வேளிரிடம் பெண்ணெடுப்பான்; ஆனால் பாண்டியருக்குள் பெண்ணெடுக்க மாட்டான். இது போன்று தவிர்க்கும் பழக்கம் அந்தக் காலத்தில் கோசலம், மகதம் ஆகிய பகுதிகளில் முற்றிலும் இருந்தது போல் தெரியவில்லை. அவர்களில் சற்று தூரத்தில் இருந்த பங்காளியர்களைத் தாயாதிகளாகவும் கருதினார்கள். எனவே சுற்றி வளைத்த முறையில், ஒன்றிரண்டு சுற்றத் தொலைவில் திருமண உறவும் இருந்திருப்பதாகத் தான் ஊகிக்க வேண்டியிருக்கிறது. அது கோசலையின் விதயத்திலேயே நடந்திருக்கலாம்.)

பொதுவாக ஓர் அரசனின் மகளுக்கு இருக்கும் இயற்பெயர் போக, இன்னாரின் மகள் என்ற படியும் ஒரு பெயர் வடபுலத்தில் ஏற்படுவது உண்டு. மிதிலையின் அரசனாய் இருந்த சனகனின் மகள் சானகையானாள்; மைதிலியும் ஆனாள்; இந்தக் கதை நடக்கும் போது, சனகன் விதேகத்தையும் கைப்பிடித்து வைத்திருந்ததால், அவள் வைதேகி என்றும் ஆனாள். அதே போல கேகேய நாட்டு அரசனின் மகள் கைகேயி ஆனாள். இன்னும் இது போல பெயர்கள் அமைவதைச் சொல்ல முடியும். கோசலையும் அப்படி அமைந்தது தான். கோசலையும் கோசல குலம்; தயரதனும் கோசல குலம்தான். கோசலர்கள் ஒரு குமுகமாய் இருந்தார்கள். (ஓரோ வழி அவர்களுக்குள் மண உறவு இருந்திருக்கலாம்.) சாவத்தியில் ஓர் அரசும், சாகேதத்தில் (அயோத்தியில்) ஓர் அரசும் இருந்தன. அவை கோசல அரசுகள் என்றே வரலாற்றில் அறியப் பட்டன. இது தவிர மிதிலை, விதேகம் எனப் பல அரசுகளும் அந்தப் பகுதியில் இருந்தன. மொத்தம் 16 சன பதங்கள் (குலக் கூட்டம்) அந்தப் பகுதியில் இருந்தன. நான் தக்கணப் பாதை பற்றிச் சொன்ன போது உத்தர பாதை பற்றிச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் இந்த அரசுகள் பற்றிச் சொல்ல வாய்ப்பு இருந்திருக்கும். வரலாற்றின் காரணமாகத்தான் பாரதக் கதை இராமாயணத்திற்கு முற்பட்டு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்; ஆனால் தொன்மம் தலைகீழாகச் சொல்லுகிறது. தொன்மப் புரிதலில் இராமாயணம் பாரதத்திற்கு முந்தியது.)

பல்வேறு கோசலர்கள் இருந்தது கொஞ்சம் கொஞ்சமாய் உறவு, போர், அமிழ்ந்து போதல் ஆகியவற்றால், குறைந்து, முடிவில் கி.மு. 600க்கு அண்மையில், புத்தர் காலத்தில், கோசலர்களின் ஒரே மன்னனாக ப்ரஸ்னேஜித் என்பவனும், மகதர்களின் பெருந்தலைவனாகப் பிம்பிசாரனும் எழுந்திருக்கிறார்கள். அதற்கு அப்புறம் கோசலம் என்ற நாடே மகதப் பேரரசில் கரைந்து போயிற்று.

சங்கம் மருவிய காலத்தில் நெடியோன் தொடர்பு ஏற்பட்டது என்று சொல்வதைக் காட்டிலும், நெடியோன் பற்றிய தொன்மங்கள் சிலம்பிற்குச் சற்று முன்னால் அதிகம் பரவியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. நெடியோனை வேங்கட மலையின் உச்சியோடு சேர்த்துச் சொல்லுவது கொஞ்சம் கொஞ்சமாகவே உறுதிப் பட்டிருக்கிறது. இன்னும் ஆய்வுகள் வேண்டும். குறிப்பாக விண்ணவன் வழிபாடு எப்பொழுது தமிழகத்தில் ஆழப்பட்டது என்பதே அடிப்படைக் கேள்வி.

வாலியோன் பற்றிய செய்திகள் சிலம்பிலும், பரிபாடலிலும் காண்பது ஒரு புதிர். விடை இன்னும் நான் காணவில்லை.

அவன் பலராமன் என்று சொல்லுவதே வடநாட்டில் (குறிப்பாக கலிங்கம், வங்கம் போன்ற இடங்களில்) வகரத்தை பகரமாக்கும் பலுக்கல் தெரிவு. தமிழில் வால் என்றால் வெள்ளை என்று பொருள். வாலியோன் = வெள்ளையோன். அவனுடைய சித்தரிப்பின் முழுப் பரிமானமும் தமிழ்வேர் வழி பார்த்தால் தான் புரிபடும். வால்/ வாலம் என்பது அப்படியே நேர்பொருளில் வெள்ளை நிறம் என்று புரிந்து கொள்ளக் கூடாது. கொஞ்சம் வெளுத்தவன் என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது, கண்ணனைப் பார்க்க இவன் வெளுத்தவன்; அவ்வளவு தான். இவனும் கருப்புத் தான். கொஞ்சம் வெளிரிய கருப்பு. தமிழ்நாட்டுப் பெண்கள் இன்றும் எப்படி நிறங்கள் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொள்ளுவார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

பாகவதம் சொல்லும் கண்ணனும், தமிழ் மாயோனும் ஒன்றா என்றால் சில அடிக்கூறுகள் பொருந்தியிருக்கின்றன என்று சொல்லுவேன். முற்றிலும் இல்லை. அதே பொழுது, ஒரேவிதமான கருத்தீடு இரண்டு வெவ்வேறு பகுதிகளில் காலவோட்டத்தில் வெவ்வேறு வகையில் வளர்த்தெடுக்க முடியாதோ?

ஒரு காட்டுக்குச் சொல்கிறேன். நாம் ராதை பற்றிச் சொல்லவே மாட்டோ ம். கண்ணனின் அம்மான் மகள் (யசோதையின் அண்ணன் மகள்) நப்பின்னை நமக்குப் பெரியதாய்த் தெரிவாள். அவர்களுக்கு நப்பின்னை என்றாலே தெரியாது. நப்பின்னை பற்றிய விவரிப்புக்கள் முழுதுமே தமிழ்த் தரவுகளில் இருந்து தோன்றியவை.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய நயனன்,

நந்தர், மோரியர், சாதவா கன்னர் ஆகியவர்களோடு பொருந்திய தமிழ்நாட்டின் சங்க காலம் பற்றி உணர்ந்து கொள்ள, இன்னும் பிற்கால அரசுகளின் வரலாறு புரிவதற்கும் கூட, உத்தரம், தக்கணம் ஆகிய இரண்டு பெருவழிப் பாதைகள் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றின் முகன்மையை நமக்கு வரலாறு சொல்லிக் கொடுக்கும் போது ஆசிரியர்கள் அழுத்தம் கொடுப்பதே இல்லை.

காட்டாக, சேரன் செங்குட்டுவன் தக்கணப் பாதைவழியாகத் தான் கண்ணகிக்குக் கல்லெடுக்கப் போய் இருக்கிறான் என்பது வஞ்சிக் காண்டம், கால்கோட் காதையின் வழியாகப் படித்து உணரமுடியும். ஆனால் எத்தனை பேர் அதை உணர்கிறோம்? அந்தப் படையெடுப்பையே ஒரு கட்டுக்கதை என்று சொல்ல முற்படும், இந்தியர்களும், அவர்களில் தமிழர்களும், உண்டு.

இந்தப் படையெடுப்புப் பற்றி ஒரு பதிவு நான் எழுதியது நெடுங்காலமாய் இன்னும் முடிக்கப் படாமலே மடிக்கணியில் தூங்குகிறது. என்றோ ஒரு நாள் அதை முழுமை செய்யவேண்டும். செங்குட்டுவன் வெற்றி கொண்ட கனகவிசயர், மற்ற அரசர்களான

உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன்
சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன்

பற்றியெல்லாம் கூடத் தமிழ் அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள், அடையாளம் காணவேண்டும். இன்னும் யாருமே செய்யவில்லை. சிலம்பில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட உங்களைப் போன்றவர்கள் கூட அதைச் செய்யலாம். We should all prove that this was a real expedition and not just an imaginary description of a Tamil Poet.

அடுத்து, நீங்கள் கூறிய திருமந்திரப் பாட்டு.

வேங்கட நாதனை, வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேம் கடம் என்றே விரகு அறியாதார்
தாங்கவல் ஆருயிர் தாம்அறி யாரே!

என்று நீங்கள் கொடுத்த பாட்டு, இந்தியப் பண்பாடு ஆராய்ச்சி நிறுவனம், முனைவர் சுப. அண்ணாமலையின் கருத்துரையோடு வெளியிட்ட பதிப்பின் படி, உயிர் நிலைபேறு என்னும் இயலில் வரும் 364 ஆம் பாட்டு ஆகும். இந்தப் பாட்டும், இதற்கு முந்திய 363 ஆம் பாட்டும் மூச்சுப் பயிற்சி பற்றி அழுத்திக் கூறுபவன.

திருமந்திர நூலின் பல இடங்களில் வருவது போலச் சொல்விளையாட்டு இந்தப் பாட்டில் பொதிந்திருக்கிறது. மூன்றுமுறை வேங்கடம் என்ற சொல் வெவ்வேறு பொருளில் வந்திருப்பதை ஓர்ந்து பாருங்கள். முதல் வரியில் வரும் வேங்கடம் வேகுதற்கான காடு (=சுடுகாடு) என்பதைக் குறிக்கிறது; இரண்டாவது வேங்கடம் மூச்சினால் வெந்து உசு உசு என்று உயிர்க்கிற சூடான உடம்பைக் குறிக்கிறது, மூன்றாவது வேங்கடத்தைக் கடம் வேம் என்று மாற்றிப் போட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். உடம்பு வெஃகும்>உடம்பு வேம் = உடம்பு விரும்பும் என்று பொருள். உடம்பு விரும்பும் அளவிற்கு மாற்றும் விரகு என்பது, மூச்சுக் காற்றைச் சுழுமுனை வழியாக மேலே ஏற்றி, நெற்றி மண்டலத்தில் குளிர்விக்கும் வழிமுறையைக் குறிக்கும். வேங்கடத்துள்ளே விளையாடும் நந்தி என்பது சிவனையே குறிக்கிறது. நந்தி என்ற சொல் பல இடங்களில் சிவனைக் குறிப்பதாய் திருமந்திரத்தில் வந்திருக்கிறது. திருமந்திரப் பாடல்களின் பொருளை ஆழப் புரிந்து கொள்ளுவது பொதுவாகச் சரவலானதே. முழுப் பொருளையும் கீழே தந்துள்ளேன்.

"சுடுகாட்டு நாதனை, வேதாந்தப் பொருளான கூத்தனை, வேகும் உடம்பிற்குள் விளையாடும் சிவனை, உடம்பு விரும்பும் வழிமுறையைத் தெரியாதவர், உடலில் தாங்கும் வலிமையுள்ள, நிறைந்த, உயிரை அறிய மாட்டார்."

சிவனை உடம்பு விரும்பும் வழிமுறை என்பது மூச்சுப் பயிற்சியாகும். [இந்த மூச்சுப் பயிற்சியின் தமிழ்வழி விளக்கத்தை இங்கு சொல்ல வேண்டும். உய் என்னும் மொழியற்ற வாயொலியின் பயனாய் (ஊய்தல் வினைச் சொல் வழியே) உயிர் என்னும் சொல் பிறந்தது போல், புர் என்னும் மொழியற்ற வாயொலியின் பயனாய் பூருதல் என்ற வினைச்சொல் ஊதுதல் என்ற பொருளை உள்நிறுத்தும். இது கொஞ்சம் திரிந்து, பூரித்தல் என்ற வினைச்சொல் தொனித்தல் என்ற பொருளிலும், மூச்சை உள்ளிழுத்தல் என்ற பொருளிலும் எழும். பூரி என்ற பெயர்ச்சொல் ஊது கருவியை அடையாளம் காட்டும். பூரிகை என்பதும் ஊதுகுழல் ஆகும். பூரகம் என்பது மூச்சை உள்ளிழுத்தல் என்ற பொருளைக் கொடுக்கும். பூருதல் என்ற வினைச்சொல் தமிழில் அவ்வளவு பயனாகாமல், வடமொழிக்குப் போய், பூரணித்து என்று திரிந்து பின் ப்ராணிக்கும் போது உயிர்மூச்சு இழுப்பதைக் குறிக்கும். ப்ராணன், ப்ராணி என்ற சொற்களெல்லாம் எழும். பூரணனைக் கட்டுப் படுத்தும் பயிற்சியை, வடமொழியில் "ப்ராணாயாமம்" என்றே சொல்லுகிறார்கள். பூரணன் என்பது உடலெங்கும் நிறைந்திருக்கும் உயிர். யாமம் என்பது கட்டுதல். (யாப்பு என்பதும் கட்டுதலே.) பூரணக் கட்டு என்பது மூச்சுப் பயிற்சியே.]

திருமந்திரம் 364 ஆம் பாட்டின் எந்த இடத்திலும் வேங்கடம் என்னும் தமிழ்நாட்டு இடப்பகுதி பேசப்படவில்லை. கயிலையும் பேசப்படவில்லை. இருந்தாலும் வேங்கடம் பற்றிய சொல்விளையாட்டுக்களை இங்கு கொணர்ந்தது நல்லதாய்ப் போயிற்று.

[இன்னொரு செய்தி, இராம நாதன் என்பதும், இராமசாமி என்பதும் ஒரே கடவுளைக் குறிக்கும் சொற்கள் அல்ல. இராமனுக்கு நாதன் என்னும் போது அது சிவனைக் குறிக்கும். இராமேசுவரத்தில் இருக்கும் மூலவர் இராம நாதன். இராமசாமி என்பது இராம அவதாரத்தில் வரும் திருமாலைக் குறிக்கும். விண்ணவர் இராம நாதன் என்ற பெயரை ஒருகாலும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அதே பொழுது, அல்லிருமைப் பார்ப்பனர் இராமநாதன், இராமசாமி என்று எந்தப் பெயரையும் வைத்துக் கொள்ளுவார்கள். இவன் சிவன், இவன் திருமால் என்று வேறுபாட்டை அல்லிருமைக்காரர்கள் பார்ப்பது இல்லை. பொதுவாய், வேங்கட நாதன் என்பது சிவனையும், வேங்கட சாமி என்பது திருமாலையும் குறிக்கும். நாதன் என்று வரும் போது கவனமாய் இருக்க வேண்டும். குழப்பத்தில் பயன்படுத்தக் கூடாது.]

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய வெற்றி,

வருகைக்கும் கனிவிர்கும் நன்றி

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய கண்ணபிரான் இரவி சங்கர்,

வாலியோனின் வழிபாடு பற்றிய நூல் எதுவும் அறிந்தேனில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சங்கப் பாடல்களில் படித்தது தான். ஒருங்கு சேர்த்து ஒரு கட்டுரையை யாராவது எழுதினால் நல்லது. உங்களைப் போன்றவர் எழுதலாமே? முயலுங்கள்.

அடுத்து,

கழல் புனை திருந்தடிக் களவர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்

என்று அகநானூறு 61 ஆம் பாடலின் 11-13 ஆம் வரிகளில் சொல்லுகின்ற விழவைக் கோயில் விழவு என்று சட்டென்று கொள்ள முடியாது. அது கோயில் விழவென்றால் நெடியோன் பெயர் அங்கு கூறப்படாது இருக்குமா? நெடியோன் கோயில் அங்கு மாமூலனார் காலத்தில் (அவர் மோரியர் காலத்தவர்) இருந்ததா? அதே பொழுது நரசிங்க, வாமன (திருவிக்கிரம) அவதாரக் கதைகள் தென்னகத்தில் தான் பெரிதும் பேசப் படுகின்றன என்னும் போது நெடியோன் பற்றிய தொன்மத்தை ஆழ்ந்து பார்க்கத் தோன்றுகிறது. தேடுதல் எனக்குத் தொடர்கிறது.

வேகும் இடத்தில் விழவு நடக்கக் கூடாது என்று இல்லை. அந்த இடங்களில் கதிரவன் மறைந்தற்கு அப்புறம் விழவுகள் இருக்கலாமே? நம்மூரில், ஒரு 150 ஆண்டுகளுக்கு முன்னால் கூட, திருமண விழவுகள் இரவில் தான் நடந்தன; பகலில் கிடையாது. ஆந்திரப் பகுதிகளில், குறிப்பாக வேகும் இராயல சீமையில், இன்றும் பல திருமணங்கள் இரவில் நடக்கின்றன. வெய்யில் பிளக்கும் திருச்சி, மதுரையில் கூட ஒரு காலத்தில் அப்படித்தான் நடந்தது. ஊருலவர் உலாவரும் திருவிழாக்கள், சாமி புறப்பாடுகள், எல்லாம் கூட நம்மூரில் இரவில் தானே நடக்கின்றன? கோடையிலும் விழாக்கள் நடக்கின்றனவே? வேகும் நிலைமையால் விழாக்கள் நடக்கக் கூடாது என்றில்லை.

இனி இன்னொரு கூற்று. மேலே உள்ள வரிகளை மீண்டும் படியுங்கள். புல்லி என்பவன் ஒரு களவர் கோமான்; அதாவது பாலை நிலத்தில் ஆறலைத்துத் (robberies) திரியும் கள்வர்களின் தலைவன். கள்வர்கள் என்பவர் சங்க இலக்கியத்தின் படி, அந்த வழியாகப் போகும் வணிகச் சாத்தினை ஆறலைத்துச் செல்வத்தை எடுத்துக் கொள்பவர்கள். அவர்களுக்கு ஆறலைத்துக் கொண்டாடும் நாட்களெல்லாம் விழவு தான்.

நீங்கள் காட்டிய வரிகள் என்னைக் கூர்ந்து பார்க்க வைத்தாலும், இன்னும் கருத்து மாறாமலேயே இருக்கிறேன். மேலும் ஓர்ந்து பார்ப்போம்.

நண்பரே! நான் நெடியோன் கோயில் சிலம்பிற்கும் முற்காலத்தில் இருந்திருக்கலாம் என்ற முன்னீட்டை நான் மறுக்கவில்லை. சான்றுகள் தேடிக் கொண்டிருக்கிறேன். அதே போல ஸ்ரீநிவாசன் என்ற பெயர் இருப்பதையும் மறுக்கவில்லை. ஆனால் அந்தப் பெயரின் பொருத்தம் திருமலைக்கு உண்டா? அந்தப் பெயர் எப்பொழுது திருமலையோடு சேர்த்துப் புழங்கப் பட்டது என்று தேடிப் பார்க்க விழைகிறேன். இந்த விழைவின் ஊடே தமிழ் மூலம் பார்க்கிறேன்.

தமிழ் மூலம் அன்றி ஆகம நெறிகளின் (சிவ, விண்ணவ நெறிகளின்) முழுப் பரப்பையும் உணர முடியாது என்பது என் கருத்து. தமிழரில் பலரும் தம்முடைய தமிழ்ப் பின்புலம், வரலாறு, ஆகியவை தெரியாது, வைக்கோலில் ஊசி தேடுவது போல், வேறு எங்கோ தேடிக் கொண்டு, இருக்கிறார்கள். எது நம்முடையதோ, அதில் பெருமிதம் கொள்ளவேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய இராகவன்,

இன்னொரு வழியில் கங்கைவரை ஒரு படையெடுப்பு போனது பேரரசுச் சோழர்கள் வழியில் இராசேந்திர சோழன் போனது தான். அவர்கள் மேற்கு வழியை எடுக்க முடியாத படி மேலைச் சாளுக்கியர்கள் அரசு இருந்தது; கீழைச் சாளுக்கியர்கள் (வேங்கி அரசு) இவர்களுக்கு மணவினை முறையில் உறவினராய் இருந்தனர். முடிவில் மகள் வயிற்றுப் பேரன் குலோத்துங்கன் தானே சோழ அரசின் வாரிசு ஆனான்? மேலைச் சாளுக்கியர் பல்லவர் காலத்தில் ஓங்கியதில் இருந்தே, தமிழருக்கு மேலைவழி அடைபட்டுப் போனது. கீழை வழியை ஒழுங்கு செய்யவும் பலகாலம் ஆனது. இடையில் மகதம் மற்ற கீழை அரசுகளும் வலிவு இழந்தன. கொஞ்சம் கொஞ்சமாய் வட இந்திய வரலாற்றின் நடுவாண்மை தில்லி, ஆக்ரா என்று நகர்ந்துவிட்டது.

பின்னூடங்களில் மட்டுமே இயங்கிவரும் பாலா.

"எலே பாண்டி" என்று 1968ல் எரணாகுளம் இருவுள் (Rail) நிலையத்தில் எவனோ ஒரு மலையாளி கூப்பிட்டதற்கு எப்படிக் கோவப் பட்டேனோ, அதே கோவம் கொல்ட்டி என்று தெலுங்கர்களை நீங்கள் அழைக்கும் போது எனக்கு வருகிறது. உங்களைப் போன்றவர்களைத் திருத்த முடியாது. ஆனாலும் நக்கல் அடித்துக் கொண்டே, பதிவு பதிவாய் பின்னூட்டம் போட்டுக் கொண்டே இருங்கள்!

அன்புடன்,
இராம.கி.

bala said...

//மிதிலையின் அரசனாய் இருந்த சனகனின் மகள் சானகையானாள்; மைதிலியும் ஆனாள்; இந்தக் கதை நடக்கும் போது, சனகன் விதேகத்தையும் கைப்பிடித்து வைத்திருந்ததால், அவள் வைதேகி என்றும் ஆனாள்.//

//இராம.கி அய்யா,

ஜானகி அம்மா சீதா(சீதை) என்று எப்படி ஆனாள்?இராமர் ஜானகி அம்மாவை மீட்டவுடன், சிதையில் மூழ்கி எழுந்துவா என்று சொல்லியதாலா?விளக்கமா சொன்னீங்கனா புரிஞ்சிக்குவோம்.
நீங்க சொல்றதைப் பாத்தா இந்த அம்புலிமாமாவில வேதாள கதை எழுதற பசங்க இதைக் காப்பி அடித்து தான்
"காந்தார நாட்டு மன்னன் காந்தாரவர்மனுக்கு,காந்தாரவர்மி என்று மகள் இருந்தாள்.." கதை சொல்ல ஆரம்பித்தாங்களோன்னு சந்தேகம் எழுகிறது.

//பின்னூடங்களில் மட்டுமே இயங்கிவரும் பாலா.

"எலே பாண்டி" என்று 1968ல் எரணாகுளம் இருவுள் (Rail) நிலையத்தில் எவனோ ஒரு மலையாளி கூப்பிட்டதற்கு எப்படிக் கோவப் பட்டேனோ, அதே கோவம் கொல்ட்டி என்று தெலுங்கர்களை நீங்கள் அழைக்கும் போது எனக்கு வருகிறது. உங்களைப் போன்றவர்களைத் திருத்த முடியாது. ஆனாலும் நக்கல் அடித்துக் கொண்டே, பதிவு பதிவாய் பின்னூட்டம் போட்டுக் கொண்டே இருங்கள்//

தப்புங்க இராம.கி அய்யா.நானே ஒரு கொல்ட்டி தான்,ஆனா தெலுங்கு ஓரளவுக்கு தான் தெரியும்(தமிழ் ரொம்ப தெரியுமான்னு கேக்காதீங்க).ஆனாக்க என்னை கொல்ட்டின்னு சொன்னாக்க கோவம் வருவதில்லை.அரவாடுன்னு சொன்னாக்கக் கூட கோவம் வருவதில்லை.
அது சரி, "எலே பாண்டின்னு" சொன்னாக்க நமக்கு ஏன் கோவம் வரணும்?புரியலயே?"எலே சோழா,எலே பல்லவான்னு" சொன்னாக்கூட கோவம் வரணுமா?அதுதான் இன, மான உணர்வா?சொல்லுங்கய்யா.இப்படி சொல்ற மல்லுக்களை நாம, "எலே சேரான்னு " சொல்லிடலாமா?உங்க அனுமதியை வேண்டுகிறேன்.

பாலா

nayanan said...

அன்பின் ஐயா,

காலத்தாழ்வான மறுமொழிக்கு வருந்துகிறேன்.

//
We should all prove that this was a real expedition and not just an imaginary description of a Tamil Poet.

நல்ல சொல் சொன்னீர்கள். நாம் எதிர்கொள்ளும் சவால்களில் இது மிகப் பெரிய ஒன்று.
அவசியம் என்னால் ஆனவற்றை செய்து கொண்டிருப்பேன். நன்றி.


//
வேங்கட நாதனை, வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேம் கடம் என்றே விரகு அறியாதார்
தாங்கவல் ஆருயிர் தாம்அறி யாரே!

என்று நீங்கள் கொடுத்த பாட்டு, இந்தியப் பண்பாடு ஆராய்ச்சி நிறுவனம், முனைவர் சுப. அண்ணாமலையின் கருத்துரையோடு வெளியிட்ட பதிப்பின் படி, உயிர் நிலைபேறு என்னும் இயலில் வரும் 364 ஆம் பாட்டு ஆகும். இந்தப் பாட்டும், இதற்கு முந்திய 363 ஆம் பாட்டும் மூச்சுப் பயிற்சி பற்றி அழுத்திக் கூறுபவன.
//

ஐயா, நான் புலவர் யி.வரதராசன் (G.varadharajan) என்பார் எழுதிய
உரையில் இருந்து எடுத்து எழுதினேன் (பழனியப்பா பதிப்பகம்). அதில்
இவ்வியலை முதலாம் தந்திரத்தின் பகுதியாக வைத்திருக்கிறார்கள். அதன்படி
190 என்று வரிசைப் படுத்தியிருக்கிறார்கள். வேறுபாடுகள் நிறைய
இருப்பது தெரிகிறது. இனி எழுதும்போது தந்திரம், இயல், பாடல் எண் என்று
முழுமையாக எழுதவேண்டிய அவசியம் புரிகிறது.

அருமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி.

//
இன்னொரு செய்தி, இராம நாதன் என்பதும், இராமசாமி என்பதும் ஒரே கடவுளைக் குறிக்கும் சொற்கள் அல்ல. இராமனுக்கு நாதன் என்னும் போது அது சிவனைக் குறிக்கும். இராமேசுவரத்தில் இருக்கும் மூலவர் இராம நாதன். இராமசாமி என்பது இராம அவதாரத்தில் வரும் திருமாலைக் குறிக்கும். விண்ணவர் இராம நாதன் என்ற பெயரை ஒருகாலும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அதே பொழுது, அல்லிருமைப் பார்ப்பனர் இராமநாதன், இராமசாமி என்று எந்தப் பெயரையும் வைத்துக் கொள்ளுவார்கள். இவன் சிவன், இவன் திருமால் என்று வேறுபாட்டை அல்லிருமைக்காரர்கள் பார்ப்பது இல்லை. பொதுவாய், வேங்கட நாதன் என்பது சிவனையும், வேங்கட சாமி என்பது திருமாலையும் குறிக்கும். நாதன் என்று வரும் போது கவனமாய் இருக்க வேண்டும். குழப்பத்தில் பயன்படுத்தக் கூடாது
//

இதுவும் வியக்க வைத்த ஒரு செய்தி.
இராமேச்சுர ஈசனை ஏன் இராமநாதர் என்று அழைக்கிறார்கள்
என்று நான் எண்ணியது உண்டு. தற்போது தெளிவடைந்தேன்.
மிக்க நன்றி.

அன்புடன்,
நாக.இளங்கோவன்

குமரன் (Kumaran) said...

ஐயா. உங்கள் இடுகைகளில் முன்னிகை, முன்னீடு, பின்னூட்டு என்றெல்லாம் சொல்கிறீர்கள். முன்னீடு என்பது Proposal என்று ஒரு இடத்தில் சொல்லியிருந்ததால் அதனை அந்தப் பொருளில் புழங்கத் தொடங்கியிருக்கிறேன். பின்னூட்டம் என்று பலர் புழங்குவதைத் தான் பின்னூட்டு என்று சொல்கிறீர்களா? பின்னூட்டத்திற்கும் பின்னூட்டிற்கும் என்ன பொருள் வேறுபாடு? சில இடங்களில் முன்னிகை என்று புழங்குகிறீர்கள். அதற்கு என்ன பொருள்? எந்த இடங்களில் புழங்க வேண்டும்?

விஷயம் என்பதற்கு கோவி.கண்ணன் பற்றியம் என்று புழங்குகிறார். அது தாங்கள் பரிந்துரைத்ததா? என்னையும் அந்த சொல் கவர்ந்ததால் நானும் சில இடங்களில் விஷயம் என்பதற்கு விதயம் என்றோ விடயம் என்றோ சொல்லாமல் பற்றியம் என்று புழங்குகிறேன். சரியானது தானா என்ற கேள்வி இருக்கிறது.

ஆதாரம் என்ற சொல்லைத் தான் தரவு என்கிறோமா? சொற்பிறப்பு விளக்கம் என்ன?


-------------------

ஐயா. மெய்யியல் சிந்தனை தமிழ் குமுகாயத்தில் அழுந்தியது கி.மு. 200க்கு அப்புறம் தான் என்று சொல்லியிருக்கிறீர்கள். தரவுகள் ஏதேனும் உண்டா? கி.மு.200 என்று சொன்னதற்கும் ஆரியர் தென்னகம் வந்ததாகக் குறிக்கப்படும் காலத்திற்கும் தொடர்பு உண்டா? மெய்யியல் சிந்தனை தமிழ் குமுகாயத்தில் அப்புறம் தான் அழுந்தியதா? மெய்யியல் சிந்தனைகள் தமிழ் குமுகாயத்தில் இருந்து தான் ஆரியருக்குள் சென்றிருக்க வேண்டும் என்பதோர் கருத்தும் இருப்பதைப் படித்திருக்கிறேன். தரவுகள் அடிப்படையில் தாங்கள் காண்பது என்ன என்று அறிய ஆவல்.

2300 - 2500 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இடப்பெயர்கள் பெரும்பாலும் இயற்கையை ஒட்டியே அமைந்துள்ளன என்று சொல்லியிருக்கிறீர்கள். நாலைந்து எடுத்துக்காட்டுகள் தாருங்கள்.

-------------------

//மகதத்தை நோக்கிய வணிகம் இல்லாமால் தமிழ்நாட்டு அரசுகள் நெடுங்காலம் தரிக்க முடியாது. //

மகதத்தை நோக்கிய வணிகத்தின் முக்கியத்துவத்தை மட்டும் தான் இந்த வரி குறிக்கின்றதா? கடல் வழி வாணிகமும் நன்கு நடந்ததாகப் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் இந்தக் கால கட்டத்தில் கடல் வழி வாணிகம் எப்படி நடந்தது? நன்கு நடந்திருந்தால் மகதத்தை நோக்கிய வணிகம் இல்லாமல் தமிழ்நாட்டு அரசுகள் தரித்திருக்கலாமே?

----------------

//விண்ணவர் இராம நாதன் என்ற பெயரை ஒருகாலும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அதே பொழுது, அல்லிருமைப் பார்ப்பனர் இராமநாதன், இராமசாமி என்று எந்தப் பெயரையும் வைத்துக் கொள்ளுவார்கள். இவன் சிவன், இவன் திருமால் என்று வேறுபாட்டை அல்லிருமைக்காரர்கள் பார்ப்பது இல்லை. பொதுவாய், வேங்கட நாதன் என்பது சிவனையும், வேங்கட சாமி என்பது திருமாலையும் குறிக்கும்.//

ஐயா.

அல்லிருமைக்காரர்கள் சிவன், திருமால் என்ற வேறுபாட்டைப் பாராதவர்கள் என்பதையும் வைணவர்கள் சிவனின் பெயரை ஒருக்காலும் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். இராமநாதன் என்ற பெயரில் அல்லிருமைக்காரர்களைப் பார்த்திருக்கிறேன்; விண்ணவர்களைப் பார்த்தத்தில்லை. ஆனால் விண்ணவர்களில் வேங்கடநாதன் என்ற பெயரைப் பார்த்திருக்கிறேன். தமிழக வைணவ ஆசிரியரான வேதாந்த தேசிகரின் இயற்பெயர் வேங்கடநாதன். மாத்துவ வைணவ ஆசிரியரான இராகவேந்திரரின் இயற்பெயர் வேங்கடநாதன். அதனால் வேங்கடநாதன் என்பது சிவனைக் குறிக்கும் பெயர் என்பதில் எனக்கு ஐயம் ஏற்படுகிறது.

-----------------

//வாலியோனின் வழிபாடு பற்றிய நூல் எதுவும் அறிந்தேனில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சங்கப் பாடல்களில் படித்தது தான். ஒருங்கு சேர்த்து ஒரு கட்டுரையை யாராவது எழுதினால் நல்லது. உங்களைப் போன்றவர் எழுதலாமே? முயலுங்கள். //

ஐயா,

நானோ இரவிசங்கரோ எழுதுவதில் தடையில்லை. நீங்கள் ஏற்கனவே எங்கெல்லாம் வாலியோனைக் குறிக்கும் பாடல்கள் இருக்கின்றன என்று தெரிந்து வைத்திருந்து அதை எங்களுக்குச் சொல்வது எளிதானால் சொல்லுங்கள். அவற்றைப் படித்து கட்டுரை வரைகிறோம்.

இராம.கி said...

அன்பிற்குரிய குமரன்,

முன்னீடு = proposal; முன்னால் இடுவது முன்னீடு. ஆங்கிலத்திலும் to pose in the front என்று தான் pro posal யைப் புரிந்து கொள்ளவேண்டும். அகரமுதலியைப் பாருங்கள்.

முன்னிகை = comment. முன்னுதல் = எண்ணுதல், கருதுதல். to mind என்பதும் முன்னுதல் தான். முன்னுதலில் விளைந்த பெயர்ச்சொற்கள் மனம், நினைவு போன்றவை ஆகும். com என்னும் முன்னொட்டு உடன் என்ற பொருளை உணர்த்தும். இங்கே முன்னிகை என்பது கருத்து என்ற பொருளில் வருகிறது.

பின்னூட்டு = feedback. ஊட்டுதல் = to feed; பின்னூட்டம் என்பது பெரிய பின்னூட்டு. அம் என்னும் ஈறு பெரிய தன்மையைக் கொண்டு சேர்க்கும். சின்னதைப் பின்னூட்டு என்றும், பெரியதைப் பின்னூட்டம் என்று சொல்லலாம். பலநேரம் இரண்டையும் ஒன்றுக்கு மாற்றாய்ப் பயிலும் குழப்பமும் உண்டு.

சொல்லப்படும் கருத்தை வெட்டியோ ஒட்டியோ தொடர்ந்தாற்போல சொல்லுவது பின்னூட்டு. பின்னூட்டு என்பதை இடுகையில் இருந்து பிரித்தால் பொருள் கிடைக்காது. மாறாகத் தற்சார்பாகத் தனித்து (stand alone) நம் கருத்தைச் சொல்லுவது முன்னிகை. ஆனாலும் வழக்கில் முன்னிகையையும், பின்னூட்டையும் மாறி மாறிப் பலரும் பயன்படுத்துவது உண்டு. கூடிய மட்டும் வேறுபாடு காட்டுவது நன்று.

விஷயம் என்பதை வெறுமே எழுத்துப் பெயர்ப்போடு விடயம் எனச் சொல்லுவதைக் காட்டிலும், மூலம் போய் விதயம் என்று சொல்லுவது நல்லது என்று கூறியிருந்தேன். விதத்தல் என்பது வேறுபடுத்திக் காட்டுதல் (to differentiate, to speciate, to classify) என்றே பொருள்படும். விதம் என்ற தன்வினைப் பெயர்ச்சொல்லைப் போல, விதயம் என்ற பிறவினைப் பெயர்ச்சொல்லும் கிளைக்கும்.

புலனம் என்பது புலத்தல் = தெளிவாக்குதல் என்ற வினையில் எழுந்தது. புலன் என்பது தெளிவாக்கும் கருவி. புலனம் என்பது தெளிவாக்குதலில் அறியும் செய்தி/கருத்து ஆகும். புலன் கருவி; புலனம் செயப்படுபொருள் ஆகும்.

தருதல் என்ற வினையில் இருந்து கிளைத்த சொல் தரவு. தரப்பட்டது தரவு. இந்தப் பெயர்ச்சொல் பட்டுவ வாக்கில் (passive voice) உருவான சொல்.

பற்றுதல் என்பது ஒன்றைப் பிடித்தல் என்ற பொருள் கொள்ளும். பற்று என்ற பெயர் பிடிப்பு என்ற பொருள் தரும். பற்றி > பத்தி > பக்தி இறைவன் மேல் ஏற்படும் பிடிதன்மை. அதைப் பற்றிப் பேசினேன் என்னும் போது அதைப் பிடித்து (=குறித்து)ப் பேசினேன் என்று பொருள். பற்றுதல் என்பதில் இருந்து பற்றியம் என்ற சொல்லை உருவாக்கலாம் தான். அதே பொழுது, பற்றி என்ற சொல் இறை பக்தி என்ற விதப்பான பொருளைக் குறிப்பதால், பற்றியம் என்ற அம் ஈற்றுச் சொல் வேறு பொருளைக் கொடுக்கலாம் என்று நான் தவிர்க்க முயல்கிறேன். இருந்தாலும், பல தமிழரும் பற்றியம் என்ற சொல்லை விஷயம் என்ற பொருளில் புழங்கினால், நான் என்ன தனித்தா நிற்பேன்? நண்பரே! எந்தச் சொல் நிலைக்கும், எது மறையும் என்று சொல்ல நான் ஆணத்தி (authority) அல்லன். என் பரிந்துரை விதயம். அதைப் புழங்குவதும் புழங்காததும் தமிழ்கூறு நல்லுலகின் உகப்பு.

ஆதாரம் என்பது அடியில் நிறைந்து கிடக்கும் விதயம் ஆகும். (base)

பெய்யியற் சிந்தனை என்பதைனொரு பின்னூட்டில் சொல்லிவிடமுடியாது. தமிழர் மெய்யியல் பற்றி பேரா. க.நெடுஞ்செழியன் எழுதியிருக்கிறார். என் கருத்தைப் பின்னொருமுறை சொல்லுவேன்.

மகத வணிகம் தமிழக அரசுகள் பற்றிய ஊடாட்டையும் நினைவில் கொள்ளுவேன். தனிப் பதிவு வேண்டும்.

வேங்கடநாதன் என்ற சொல் வேங்கட மலைக்குத் தலைவன் என்ற பொருளில் சரி தான். விண்ணவனைத் தான் அங்கு குறிக்கும். நாதன் = தலைவன். ஆனால் இராம நாதன் என்பது இராமனுக்குத் தலைவன் என்ற பொரூலில் விண்ணவனைக் குறிக்க முடியாது. நாதன் என்ற சொல்லுக்கும் சாமி என்ற சொல்லுக்கும் உள்ள பொருள் வேறுபாட்டைக் கவனியுங்கள்.

வாலியோன் பாடல்களை மதுரைத் திட்டம் மூலம் தேட முடியுமே? உங்களால் முடியவில்லையெனில் இன்னொரு முறை மார்க்கலாம்.

பல புலனங்களை இன்னும் முடிக்காமல் இருக்கிறேன். இறைவன் உள்ளம் எதுவோ, அது நடக்கும்.

அன்புடன்,
இராம.கி.

குமரன் (Kumaran) said...

ஐயா. விளக்கங்களுக்கு மிக்க நன்றி. குறிப்பெடுத்து வைத்துக் கொண்டேன்.

Veeraragavan said...

இன்றும் தமிழ் நாட்டின் வட எல்லையாக கும்மிடிப்பூண்டி உள்ளது,

சில காலங்களுக்கு முன்பு மிருகவதைத் தடைச்சட்டத்தினால் தடைசெய்யும்வரை கும்மிடிப்பூண்டியில் பாம்புத்தோல் வணிகம் கோலோச்சியிருந்தது. அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் நாகர்கள் இருளர்கள் ஆகியோர் இந்த பாம்புத்தோல் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். காஞ்சீபுரம் பல்லவர்களால் ஆளப்பட்டபோதும் அதற்கு வடக்கில் அதிகமாக இருந்தவர்கள் இருளர்கள்களே. இன்றும் இருளர்கள் பாம்பை பயமின்றி பிடித்துவிடுவார்கள்.

இருளர்கள் பேசிய மொழி தமிழ், பாம்புக்கு தமிழில் அரவம் என்றபெயரும் உண்டு. இருளர்களை தெலுங்கர்கள் நாகர்கள் என்றும், அரவர்கள் என்றும் அழைத்திருந்திருக்க வேண்டும். தெலுங்கர்கள் தங்கள் எல்லைக்கு தெற்கே உள்ளவர்களை அரவர்கள் என்றே அடையாளப்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் நாகர்கள் என்பது வடமொழிச்சொல், அரவர்கள் என்றால் தனித்தமிழ்ச் சொல்.

ஆக அரவர்கள் என்பது தெலுங்கில் அரவவாளு, அரவாடு என்று ஆகியிருக்கவேண்டும்.


https://in.answers.yahoo.com/question/index?qid=20100625054521AA06ex4

திருத்தம் said...

பனி பொதிந்த கயிலையிலிருந்து குளிர் தாளாது வெக்கை வேண்டி நகர்ந்த கூட்டம் அதே போன்ற உயரமான இடத்தை மீண்டும் வடவேங்கடம் என்ற தற்போதைய திருப்பதி மலையாகக் குறித்திருக்கலாம்.
வட-மொழி பழக்கத்திற்கு(உச்சரிக்க) கடினமான மொழி என்பது போல் குளிரான கயிலையிலிருத்து பழக்கத்திற்கு(தங்குவதற்கு) கடினமான வெக்கையான வேங்கடம் வட-வேங்கடம் என்றானது.எல்லைப் பகுதி இயற்கை சார்ந்தே தமிழனுக்கு இருந்தது.இருக்கிறது.

ந.குணபாலன் said...

«பூரகம் என்பது மூச்சை உள்ளிழுத்தல் என்ற பொருளைக் கொடுக்கும். பூருதல் என்ற வினைச்சொல் தமிழில் அவ்வளவு பயனாகாமல்….»

ஐயா!
உங்கள் வளவுக்குள் நான் பூர்ந்து உலாத்தின போது பலப்பல பேச்சுவழக்குச் சொற்களின் பூருவிகம் கண்டு விளங்கும் போது பெரிய புளுகமாய்(புளகமாய்) இருக்கின்றது. “புதுமனைப்புகுவிழா” என்பதைப் பேச்சுவழக்கில் “குடிபூரல், புதுவீடு குடிபூருதல்” என்றே தான் சொல்லுவோம். புகுதல் என்ற சொல்லை திரிபாக கொச்சையாக பூருதல் என்று சொல்கிறோமாக்கும் என்று நினைத்திருந்தேன்.

சில எடுத்துக்காட்டு:
“ ஆடு தோட்டத்துக்குள்ளை பூ(ர்)ந்து கத்தரிக் கண்டையெல்லாம் கடிச்சுப் போட்டுது.”
“ கதைக்க விடு. இடையிலை பூராதை”(பூராதே).

AAGGOO said...

முருகன்