Thursday, August 09, 2007

வேங்கடத்து நெடியோன் - 2

வேங்கட மலையையும், அதில் திருமால் குடிகொண்டுள்ளதையும், அவன் பெயர் நெடியோன் என்பதையும் நமக்குக் கிடைத்தவற்றில் முதலில் பதிவு செய்த ஆவணம் சிலப்பதிகாரம் தான். நாம் கவனிக்க வேண்டியது நெடியோன் என்ற பெயர். [அந்தப் பெயரின் விளக்கம், "வாமனத்தின் முடிவில் எடுக்கும் திருவிக்கிரமத் அவதாரத்தால்" என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கதை தமிழ் இலக்கியங்களில் நெடுகவே பயின்று வந்திருக்கிறது. அப்படி ஒரு தாக்கம் ஏற்படவேண்டுமானால், அந்தத் தொன்மங்கள் இங்கு ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு உண்டு.] "நீள்நிலம் கடந்த நெடுமுடி அண்ணல்" என்று குறிப்பிட்டுக் காடுகாண் காதை 11:148 ல் சொல்லப்படும். இந்த அவதாரக் கதையில் வரும் மாவ(ல்)லி மன்னன் ஒரு சேர அரசனாய் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

(இன்றைக்கும் மாவல்லி ஒவ்வொரு ஓணத்தன்றும் கேரளத்தில் நினைவு கூரப்படுகிறான்.) அவன் அரக்கன் என்பது நிறம் கருதியே அன்றி வேறாய் இருக்க வாய்ப்பு இல்லை. அரக்கு நிறம் என்பதும் தமிழர் நிறம் தான். மாந்தளிர் நிறம் அரக்குத் தானே? சேரமான் மாவண் கோ, விளங்கில் மாவண் கடலன், மாவண் புல்லி, மாவண் கிள்ளி எனப் பல்வேறு அரசர்களும், வேந்தர்களும் சங்க காலத்தில் சொல்லப் படுகிறார்கள். இந்த மா என்னும் முன்னொட்டு அவன் தமிழ் அரசன் என்று உணர்த்திவிடுகிறது. மாவல்லியின் தாத்தன் பெருகலாதன் என்பதும் கூடப் பெருஞ்சேரலாதன்>பெருங்கேரலாதன்>பெருங்கலாதன்>பெருகலாதன் என்ற திரிவில் அமையக் கூடிய பெயரே. அப்படி அய்யுறுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று ஆதன் என்னும் பெயரீறு சேர அரசர் பலருக்கும் இருந்திருக்கிறது. இரண்டு, மாவலியின் வழியில் வந்தவன், சோழன் மாவண் கிள்ளிக்குப் பெண் கொடுத்ததாக மணிமேகலைக் காவியத்தில் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதையில் (16:53-55)

நீரிற் பெய்த மூரி வார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி என்னும் திருத்தேவி ------

என்று பதிவு செய்யப் படும். இதே மாவண் கிள்ளியைச் செங்குட்டுவனின் மைத்துனன் என்று சிலம்பில் இளங்கோவடிகளும் பதிவு செய்வார். செங்குட்டுவனின் தாய் ஞாயிற்றுச் சோழன் என்று சிலம்பில் காணப்படும். ஆனால், பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்திற்கான பதிகத்தில் "குடவர்கோன் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி மகள் ஈன்ற மகன்" என்று மணக்கிள்ளியாக "ஞாயிற்றுச் சோழன்" என்னும் செங்குட்டுவனின் தாய்வழித் தாத்தனை உணர்த்தும். இத்தகைய உறவு முறையால் மாவல்லி என்பவன் சேரனாய் இருக்கவே பெரிதும் வாய்ப்பு உண்டு.

நெடியோன் என்ற பெயர் திருமாலுக்கு சிலம்பின் பல இடங்களிலும் பயிலப்படுகிறது. சிலம்பின் இந்திர விழவூர் எடுத்த காதை 5: 169-174 ல், புகாரில் இருந்த பல்வேறு கோயில்களைப் பற்றிச் சொல்லும் போது

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வண்குடை மன்னவன் கோயிலும்

என்று நெடியோன் பெயரை இளங்கோவடிகள் பதிவு செய்வார். சிலம்பின் கடலாடு காதை 6: 28-31 வரிகளில்

சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்
உஞ்சயம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும், தாங்கா விளையுள்
காவிரி நாடும் காட்டி ---------

என்று சொல்லி வேங்கட மலையும் பதிவு செய்யப் படும். அடுத்து, சிலம்பு வேனிற்காதை 8:1-2 ல்,

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு

என்ற புகழ்பெற்ற வரிகளின் மூலம் வேங்கட மலை என்பது அந்த நெடியோனின் குன்றம் என்றும், சிலம்பின் காலத்தில் தமிழ் வரப்பைக் குறிப்பதில் நெடியோன் குன்றத்தின் பெயர் அழுத்தமாகவே பயன்படும். மேலே நாடுகாண் காதை 10: 9-10 ல்

அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டத்து வலஞ்செயாக் கழிந்து

என்று திருவரங்கத்தைப் பதிவு செய்ததோடு நில்லாமல், விரிவாகக் காடுகாண் காதை 11:41-51 ல், திரு வேங்கடமும், செங்கண் நெடியோனும் கீழ்வரும் வரிகளால் விரிவாகச் சொல்லப் படுவார்கள்.

வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி உடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

இந்த வரிகளில் மிக விரிவாக நெடியோனின் உருவம் வரையப் படுகிறது. வேங்கடத்தில் ஓர் அருவி இருந்ததாகச் சொல்லப் படுகிறது; (வேங்கடம் பற்றிய சங்கப் பாடல்கள் பலவற்றிலும் இந்த அருவி குறிப்பிட்டுச் சொல்லப் படுகிறது. ஆனால் இன்று அந்த அருவியைக் காணோம்.) மலையின் உச்சியில் கோயில் இருந்திருக்கிறது. ஒரு பக்கம் ஞாயிறும், இன்னொரு பக்கம் திங்களும் இருக்க, இடைநிலையில் மின்னல் எனும் கோடி உடுத்து, வில்லைப் பூண்டு, மேகம் நிற்பது போல சக்கரத்தையும் சங்கையும் தாமரைக் கைகளில் தாங்கி, மார்பில் ஆரம் அணிந்து, தங்க ஆடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் என்ற விவரிப்பைப் படிக்கும் போது, இன்றுள்ள பெருமாளின் திருமேனி அப்படியே நம் கண்முன் தோன்றுகிறது.

இந்தச் சொற்களைப் படிக்கும் போது திருமலையின் நெடியோன் திருமேனி திருவிக்கிரம அவதாரத்தைக் குறிக்கிறது என்றும் (செங்கண் மால் என்னும் குறிப்பு நரசிங்க அவதாரத்திலும், திருவிக்கிரம அவதாரத்திலும் ஆழமாய்க் குறிக்கப் படும் குறியீடுகள். திருமலையில் இருப்பவன் திருவிக்கிரமனே என்ற குறிப்பு சிலம்பில் ஆழவே வெளிப்படுகிறது. முதலாழ்வார் பாடல்களையும் கூர்ந்து படித்தால் இந்தச் செங்கண்மால் என்னும் குறியீடு புலப்படும்.), அந்த அவதாரத்தில் தாயார் உடன் வருவது இல்லை என்பதும் புலப்படும். சிலம்பில் துன்ப மாலை 18: 4 ல் "நெடுமால் அடி" என்ற சொல்லாட்சியும், அழற்படு காதை 22: 60 ல், "உரைசால் சிறப்பின் நெடியோன்" என்ற சொல்லாட்சியும் கூட "நெடியோன்" என்ற பெயரின் ஆழ்ந்த ஆட்சியை உறுதி செய்கின்றன. நெடியோன் என்று இல்லாமல், உயர்ந்தவன் என்ற பெயரில் ஊர்காண் காதை 14:8 ல், "உவணச் சேவல் உயர்ந்தோன் நியமம்" என்று வரும் கருத்து வேறு ஒரு பரிமானத்தைக் கொடுக்கும். நெடியோன் தவிர அந்தக் காலத்தில் பெரிதும் பயன்பட்ட பெயர்களை அடுக்கிச் சொல்லுவது ஆய்ச்சியர் குரவை 17: படர்க்கைப் பரவல் 2 ல் வரும் பாட்டாகும்.

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்யக்
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!

பெரியோன், மாயோன், விண்ணவன், கரியவன் என்ற பெயர்கள் எல்லாம் வேங்கட மலை பற்றி மட்டுமே சொல்லப் படுவதில்லை. ஆனால் நெடியோன் என்ற பெயர் தான் அங்கு விதப்பாகவே பேசப்படுகிறது.

அன்புடன்,
இராம.கி.

10 comments:

குமரன் (Kumaran) said...

அருமை ஐயா. சென்ற பதிவில் கேட்டிருந்த கேள்வி ஒன்றிற்கு இங்கே மிகச் செம்மையாகப் பதில் சொல்லிவிட்டீர்கள். வேங்கடவாணன் நெடியோன் திருவிக்கிரமனே என்று பலவிதங்களில் சான்றுடன் கூறியிருக்கிறீர்கள். இவற்றைப் படிக்கும் போது ஒரு குறட்பா நினைவிற்கு வந்தது.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாய தெல்லாம் ஒருங்கு.

குமரன் (Kumaran) said...

//இந்தக் கதை தமிழ் இலக்கியங்களில் நெடுகவே பயின்று வந்திருக்கிறது. அப்படி ஒரு தாக்கம் ஏற்படவேண்டுமானால், அந்தத் தொன்மங்கள் இங்கு ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு உண்டு//

ஆகா. இப்படித் தான் அண்மைக்காலமாக எனக்கும் தோன்றத் தொடங்கியிருக்கிறது. 'இலக்கியங்களில் இறை', 'கண்ணனும் தமிழ்க்கடவுளே' போன்ற தலைப்புகளில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் அண்மைக்காலமாக சங்க இலக்கியங்களையும் பழந்தமிழ் இலக்கியங்களையும் படிக்கத் துவங்கியிருக்கிறேன். படிக்க படிக்க பல தொன்மங்கள் இங்கே ஏற்பட்டு பின்னர் வடக்கே பரவியதோ என்று தோன்றுகிறது. அந்த எண்னத்திற்கு ஏற்ப பாகவத்திலும் தாமிரவருணிக்கரை மிகவும் புகழப்பட்டு அங்கிருந்தே பல அருளாளர்கள் காலம் காலமாகத் தோன்றுகிறார்கள்; இனியும் தோன்றுவார்கள் என்று தென்னகத்தைப் புகழும் வரிகள் வருகின்றன.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நீங்கள் சொல்லச் சொல்ல அப்படியே திருமலைக் காடுகளுக்கு போய் வந்த திருப்தி! நல்ல பதிவு இராம.கி ஐயா!

//அப்படி ஒரு தாக்கம் ஏற்படவேண்டுமானால், அந்தத் தொன்மங்கள் இங்கு ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு உண்டு//

கண்ணன்/மாயோன் குறித்த செய்திகளும் பாடல்களும் இன்னும் தேட ஆசை வருகிறது!

//வேங்கடம் பற்றிய சங்கப் பாடல்கள் பலவற்றிலும் இந்த அருவி குறிப்பிட்டுச் சொல்லப் படுகிறது. ஆனால் இன்று அந்த அருவியைக் காணோம்//

அருவி இருக்கு இராமகி ஐயா.
அதுவும் பல அருவிகள் உள்ளன
பாபநாசம், ஆகாசகங்கை, குமாரதாரை, அதோடு ஆழ்வார் தீர்த்தம் என்று பல அருவிகள் புதிய பெயர்களில் இருந்தாலும், பழந்தமிழ்ப் பெயர்கள் அவற்றுக்கும் இருக்க வேண்டும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய//

பொலம்பூ ஆடை = தங்கப் பூ ஆடையா?
ஏன் கேட்கிறேன் என்றால், இன்றளவும் பூலங்கி சேவை நடக்கிறது. பூக்களால் அங்கி போல நெய்கிறார்கள்.

//கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!//

அருமையான காதல் ரசம் சொட்டும் இளங்கோவின் கவிதை. இதை அப்படியே கரியவனை விட்டுக் காதலுக்கும் கூடப் பயன்படுத்திக் கொள்ளலாம்! நீ பாக்காமப் போனாலும் நான் பத்துக்கிட்டே தான் இருப்பேன் - என்ற தமிழ் சினிமாப் பாடல் நினைவுக்கு வருகிறது! :-)

வெற்றி said...

பல சங்கதிகளை அறிந்து கொண்டேன் ஐயா. மிக்க நன்றி.

nayanan said...

//
படிக்க படிக்க பல தொன்மங்கள் இங்கே ஏற்பட்டு பின்னர் வடக்கே பரவியதோ என்று தோன்றுகிறது.
//

நண்பர் குமரன் அவர்களின் இந்தக் கருத்து எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

இறை நெறிகள் மட்டுமின்றி, தேசிய அரசியல், தேசியம் என்ற சிந்தனையே
தமிழத்தில் இருந்து வடக்கே சென்றதுதான் என்று தமிழ் வரலாற்று அறிஞர்கள் வியக்கத் தகு வகையிலே
ஒரு பெரிய பரப்பினிலே நின்று நிறுவுகிறார்கள்.

ஆயினும், வடக்கு எழுதும் வரலாறுகள்
தெற்கைத் தீண்டத்தகாததாகக் கருதுவதாகவுமே அறிஞர்கள் கருதுகிறார்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

இராம.கி said...

அன்பிற்குரிய குமரன்,

பெரும்பாலும் நரசிங்க, வாமன அவதாரங்கள் தென்னகத்தோடு தொடர்புற்றிருக்க வாய்ப்புண்டு. மற்ற அவதாரங்கள் பற்றி உடனடியாகச் சொல்ல முடியவில்லை. உங்கள் தேடுதல் தொடரட்டும்.

அன்பிற்குரிய கண்ணபிரான் ரவிசங்கர்,

அங்கு அருவிகள் இருந்தன என்று அறிவேன். ஒருசில அருவிகள் திருமலை, திருப்பதி, திருச்சானூர் கோயில் கல்வெட்டுக்களில் குறிப்பிடவும் பட்டிருக்கின்றன. ஆனால் இன்று அவற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதாய் அறியவில்லை. எல்லாம் அருகிவிட்டதாகவே சொல்ல முடிகிறது. மேலே ஒரு மழை நீர்த்தேக்கத்தை கோயில் நிர்வாகம் உருவாக்கி வருவதை மட்டும் ஒரு விதிவிலக்காய்ச் சொல்லவேண்டும்.

பொலம்பூ ஆடை என்பது தங்க ஆடையாகவும் இருக்கலாம், மஞ்சள் பூ ஆடையாகவும் இருக்கலாம்.

அன்பிற்குரிய வெற்றி,

வருகைக்கு நன்றி.

அன்பிற்குரிய நயனன்,

தெற்கின் பங்கைக் குறைத்து மதிப்பிடுவது இன்று நேற்றா நடக்கிறது? தமிழரே தம்மைக் குறைத்து மதிப்பிடும் போது, மற்றவரைச் சொல்லி என்ன பலன்?

அன்புடன்,
இராம.கி.

குமரன் (Kumaran) said...

// அவன் அரக்கன் என்பது நிறம் கருதியே அன்றி வேறாய் இருக்க வாய்ப்பு இல்லை. அரக்கு நிறம் என்பதும் தமிழர் நிறம் தான். மாந்தளிர் நிறம் அரக்குத் தானே?//
முன்பே இதனைச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா. இன்று மீண்டும் படிக்கும் போது கண்ணில் படுகிறது. :-)
மாவலிச் சக்ரவர்த்தி சேரப் பேரரசனாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்று எனக்கும் தோன்றுகிறது ஐயா. அவன் திருமால் அடியவன் என்றே தொன்மம் சொல்கிறது. அதனையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதற்குரிய தரவுகள் இலக்கியங்களில் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.


//செங்கண் மால் என்னும் குறிப்பு நரசிங்க அவதாரத்திலும், திருவிக்கிரம அவதாரத்திலும் ஆழமாய்க் குறிக்கப் படும் குறியீடுகள். //
இதன் முக்கியத்துவம் என்ன என்று எண்ணுகிறீர்கள் ஐயா? வடமொழியாளர்கள் புண்டரீகாக்ஷன் என்ற தாமரைக்கண்ணனை மிக முக்கியமான குறிப்பாகச் சொல்லுவார்கள். புண்டரீகாக்ஷனாய் இருப்பதே பரம்பொருளின் அடையாளம் என்றும் வடமொழி தொன்மங்கள் சொல்லும்.

Sethu Subramanian said...

I am not sure if you monitor this blog now. Anyway let me ask. The word "vEngaDam"---what does it mean? I thought it was vEm = bamboo and kaDam = forest. It can have other meanings too such as vem=fire, kaDam= sin. But others point out part of the word came from Sanskrit. Can you verify it for sure whether it has Thamizh origin out and out or it had a mix from Sanskrit? Some claim that it was a hybrid from vEngai + aTa = vEnkaTam. vEngai for cheetah and aTa (Sanskrit) means "roam". Pl respond.

Anonymous said...

-------------------------
வீங்குநீர் அருவி வேங்கடம்
-------------------------
https://www.youtube.com/watch?v=N4OJN3pEDB0 - Tirumala Waterfalls After Heavy Rain
https://www.youtube.com/watch?v=D-hunUC1Wcc - Tirumala Waterfalls
https://www.youtube.com/results?search_query=tirumala+waterfalls