Monday, July 09, 2007

எற்றி நகரல்

டிங்டாங் டிங்டாங் டிங்டாங் கென்றே
திண்'னுன்னு கிணுக்குது கோயில்மணி;
எங்கள் பேரனோ எற்றி நகர்கிறான்,
எங்கள் வளவினில் வலமாக!

தாவி விழுகிறான்; மீண்டு எழுகிறான்;
தந்தனத் தந்தனச் ச(ல)ங்கையொலி;
கூவி அழைக்கிறேன் "இனிய, வா!"வென;
குடுகுடு என்றே காலசைப்பு;

கூறுவோர்களை குமிண்சி ரிப்பினால்
கொள்ளை கொள்கிறான்; என்ன,இது?
ஏறும் மடியினில், மீறி இரங்கலும்
எத்தனை முறைதான் செய்திடுவான்?

வாவிக் கொள்கிறேன்; விரல்க டிக்கிறான்;
வலிக்க வில்லையே? என்ன,இது?
நா,வி தழ்களும் நனையும் அண்ணமும்,
நக்கி உணருதல் எதனாலே?

ஊறும் எச்சிலில் ஒத்தை விரலையே
உறிஞ்சிச் சப்புவ தெதனாலே?
தேறும் பொதியெலாம் தேடி மெல்வதும்,
தெளிந்து அறிந்திட முயலுவதோ?

ஐம்பு லன்களால் உலகம் அறிவதில்,
ஆகும் ஊறு.ஒளி, சுவைக்காலம்;
செய்ம்பு லன்களில் ஓசை, நாற்றமோ,
சேரக் கூர்ந்திடும் வருங்காலம்!

அன்புடன்,
இராம.கி.

7 comments:

கொடிப்பொடி said...

உங்கள் பேரனுக்கு எத்தனை வயது இராமகி.

இளமையில் செய்த குறும்புகள் ஞாவகத்திற்கு வந்தது இந்தப் பாடலைப் படித்தபோது :-)

இராம.கி said...

இந்தப் பா எழுதும் போது, ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.

அன்புடன்,
இராம.கி.

suthesan said...

"குமிண்சி ரிப்பினால்
கொள்ளை கொள்கிறான்; என்ன,இது?
ஏறும் மடியினில், மீறி இரங்கலும்
எத்தனை முறைதான் செய்திடுவான்"

நீங்கள் கொஞ்சி மகிழ்வது தமிழோடல்லவா...

Anonymous said...

எற்றி நகரல் என்றால் என்ன?

SA Narayanan said...

Wonderful kavithai - just reminded me of my two grand daughters. Both are one year old now and their actions and smiles are ditto to those of your grandson.

I am a 66 year old retired man living in Chennai and I post blogs re my granddaughters in ENGLISH. I would very much wish to post these in Tamil. Will you please tell me where can I get the Tamil-typing software / editor?

Yours
SA Narayanan
rajappa41@gmail.com

இராம.கி said...

அன்பிற்குரிய சுதீசன்,

தமிழால் கொஞ்சுகிறேன், என் பேரனுடன் தான்.

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

எற்றி நகரும் பருவம் தவழ்வதற்கு முந்திய பருவம். பொதுவாக இது 6 ல் இருந்து 7 மாதங்களில் நடக்கும். குப்புறக் கிடக்கும் பிள்ளையின் எடை வயிற்றின் வழியாக புவியோடு தொடர்புற்று இருக்கும் நிலையில், இந்தக் குழ்ந்தை தன் குண்டியைச் சற்று தூக்க முயற்சி செய்யும். அப்பொழுது எடை கொஞ்சம் கொஞ்சமாய் முழங்கால் வழி உணரப்படும். இந்த நிலையில் உடம்பைச் சற்றி தூக்கி முன்னோங்கி நகர முற்படும். நெடுநேரம் தன் எடையை முழங்காலுக்கு மாற்ற முடியாமல், தொபுக்கடீர் என்று விழுந்து, மீண்டும் வயிறு தரையைத் தொடுவதாக வந்து முடியும். மாறி மாறி எடையை முழங்காலுக்கும் வயிற்றுக்கும் மாற்றும் நிலையில் குழந்தை முன்னோக்கியோ, பின்னோக்கியோ நகர முற்படும். இது இடைவிடாத முயற்சி. இப்படி நகர்வதைத்தான் எற்றி நகரல் என்று சொல்லிவோம். (பேச்சு வழக்கில் எற்றுதல் என்பது எக்குதல், எத்துதல் என்று ஆகும். கால்பந்தில் பந்தை அடிப்பதும் ஓர் எற்றுதல் தான். எடையை ஒரு காலுக்கு முற்றிலும் மாற்றி மற்றொரு காலை உயர வைத்து பந்தை எற்றுகிறோம்.)

எற்றி நகரலுக்கு அடுத்த பருவமாய், தவழும் பருவம் அமையும். இதில் தன் முழு எடையையும், வயிற்றில் தாங்குவதற்கு மாறாய், ஒரு குழந்தை தன் உள்ளங்கைகளிலும், முழங்கால்களிலுமாய் தாங்க வேண்டும். இந்த நகர்ச்சி நாலு கால்களில் நடப்பது போல் அமையும்.

எற்றி நகரும் பருவத்தில் இரண்டு முழங்கால், ஒரு வயிறு என முன்று ஆதாரத்தில் எடையைக் குழந்தை தாங்க வேண்டும். இந்தப் பருவத்தில் பெரியவர்கள், கூட இருந்து பிள்ளைக்குக் கற்றுக் கொடுப்பதும், அது மீண்டும் மீண்டும் விழும்போது, வலிதெரியாமல் மகிழ்வூட்டி விளையாட்டுக் காண்பித்துச் சொல்லிக் கொடுப்பதும் தேவையான ஒன்று.

நண்பரே! குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மகிழ்வான அயர்ச்சி.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

Dear Mr.Narayanan,

Thank you for your nice words about my poetry. Blogging in Tamil is easy. In fact, just yesterday, there was an interesting workshop (for newbies) held at University of Madras, Tamil Dept, Marina Campus conducted by interested enthusiasts of Tamil Blogging. Nearly 400 participants, both new and old, were there. The meet was reported in today's Indian Express also.

As for keying Tamil, there is a free software (most popular one) called e - Kalappai. This is available in the following URL
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

with two different input methods. One is called Anjal [where you type like 'ammaa' to get equivalent Tamil representation].

eKalappai 2.0b(Anjal)

Still better method is called Tamilnet99 approved by the Govt. of Tamilnadu. Here keys are assigned suitably as uyir and mey. With just 31 keys you would be able to generate the entire gamut of Tamil Letters/Characters.

eKalappai 2.0b (tamilnet99)

Please try any one that you may like. Within minutes, you would simply love to proceed with Tamil blogging and post your poems on your grand daughters..

As for blogging, I would suggest that you go to an aggregator like http://www.thamizmanam.com/ and start following the various facilities available there. Age is no bar for blogging. In general, Tamil blogging community is very young around 25 years.

In case you have problems, please let me know.

With regards,
iraama.ki