Saturday, November 11, 2006

பின்னூட்டுக் கேள்விகள் - 1

என்னுடைய வலைப்பதிவில் compiler பற்றிய ஒரு நண்பரின் கேள்வி:

1985 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் தமிழ் கொம்பைலர் (கொம்பைலருக்குத் தமிழ் என்ன? ) ஒன்றைத் தொடங்கியதாம். அதன்மூலம் தமிழில் சிறுசிறு கணக்குகளைச் செய்யும் வகையிலும் அந்தக் 'கொம்பைலர்' அமைக்கப்பட்டதாம். பின்னர் அந்தத் திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் கைவிட்டதாம். இது உண்மையா? அந்தக் கைவிடப்பட்ட தமிழ்க் கொம்பைலரை எங்காவது பெறமுடியுமா? சில தமிழ் ஆர்வலர்கள் அதைத் தேடிக்கொண்டுள்ளனர்.
--------------------------------
இராம.கி.யின் மறுமொழி:

அண்ணா பல்கலைக் கழகத்தின் அந்த compiler பற்றிய செய்தி எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் இந்த நண்பருக்கு விடை சொல்லுங்கள்.

நான் compiler என்பதற்கான இணைச்சொல்லை இங்கு தர முயலுகிறேன்.

compiler என்பதற்கு அண்ணா பல்கலைக் கழக, வளர்தமிழ் மன்ற வெளியீடான "கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி"யில் 'தொகுப்பி' என்று போட்டிருக்கிறார்கள். "அப்படியானால் integrater க்கு என்ன சொல்வது?" என்று பார்த்தால் 'ஒருங்கிணை' என்று போட்டிருக்கிறார்கள். "அப்படியானால் make it uniform என்பதை எப்படிச் சொல்வது?" என்று தொடர்ச்சியான கேள்விகள் அடுத்தடுத்து எழுகின்றன. பொதுவாக, differentiation என்பதற்கு வகைப்பு என்றும், integration என்பதற்கு தொகை/தொகுப்பு என்றே 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் அறிவியல் கட்டுரைகளில் பலரும் சொல்லி வருகிறோம். (வளர்தமிழ் மற வெளியீட்டிலேயே integration என்பதற்குத் தொகுப்பு என்று போட்டிருக்கிறார்கள்.) எனவே compile என்ற சொல்லிற்கு தொகுப்பி என்று சொல்லாமல் வேறு சரியான சொல்லைப் பரிந்துரைக்க வேண்டியிருக்கிறது.

compile என்பது com+pile என்ற இருசொற்களின் கூட்டுச் சொல். com என்பது குவிதல் என்ற பொருளைக் காட்டும். குவித்த pile, compile. தமிழில் சொல் தேடும் போது பெரும்பாலும் இந்த com என்னும் முன்னொட்டைத் தவிர்த்தாலும் பொருள் குறையாது.

pile என்பதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. ஒன்று கட்டடங்கள் கட்டும் போது போடும் கடைகால். [பெரிய பெரிய உறுதிபெறு கற்காரை(reinforced concrete)களால் ஆன ஊன்றுகோல்களின் மேல் தான் பெரிய கட்டடங்கள் நிற்கின்றன. தமிழில் பொல்லு என்றாலே தடி, ஊன்றுகோல் என்றுதான் பொருள். பொல்லின் பெரியதைப் பொல்லம் என்று சொல்லலாம். எனவே பொல்லங்களின் மேல் கட்டடங்கள் நிற்கின்றன என்று சொல்லும் போது பொரூல் குறைவதில்லை.]

pile என்பதற்கு இன்னொரு பொருள் a tidy heap, esp. as made of a number of things of the same kind placed on top of each other என்பதாகும். இங்கே இந்தப் பொருளை ஒட்டித்தான் compile என்பதற்குப் பரிந்துரைக்க வேண்டும்.

பொல் என்னும் வேரடிக்கு பெருகுதல், அதிகப்படுதல், மிகுதல் என்ற பொருள்கள் உண்டு. பொல்லுதல் என்பதும் இந்தப் பொருள்களே கொள்ளும். மிகுதலின் இன்னொரு பரிமானமாய் இணைத்தல், சேர்த்தல், தைத்தல் என்ற பொருட்பாடுகளும் எழும். பொல்லம் என்ற சொல் தைக்கை, இணைக்கை, சேர்த்துத் தைக்க உதவும் சிறுதுண்டு ஆகியவற்றைக் குறிக்கும். பொலுகுதல் என்பதும் அதிகப்படுதல் என்றே பொருள் கொள்ளும். பொலுவு என்பது profit. பொலிசை என்பது வட்டித்துப் பெருகும் தொகை [interest என்னும் சொல்லுக்கு இணையாய் கல்வெட்டுக்களில் பயிலும் சொல்.] "பொலியோ பொலி" என்பது அறுவடையான நாளில் கதிரில் இருந்து கூலங்களைப்(grains) பிரித்து அளக்கும் போது, விளைச்சல் பெருக்கத்தைக் களத்து மேட்டில் கொண்டாடும் முகமாய் உழவர்கள் முழங்கும் சொலவம் (slogan). பொலிதல் என்பது செல்வ வளத்துடன் இருத்தல், உடல் நலத்தோடு இருத்தல் என்ற நிலையில் பெருகிய தன்மையையே குறிக்கும். பொலிதலின் திரிவான பொழிதலும், மிகுதியாகத் திரண்டு கொட்டுவதைக் குறிக்கும். "மழை பொழிகிறது". மரங்களின் திரட்சி செறிந்து கிடக்கும் போது அந்த இடத்தை, சோலையை, பொழில் என்றே சொல்லுவோம்.

இனிப் பெருகியது பொல்தியது என்று சொல்லப் படும். பொல்தில் இருந்து விளைந்தது பொது என்னும் சொல். பொல்து>பொது. மக்கள் கூட்டத்தைப் பொதுமக்கள் என்று சொல்லும் போது திரண்ட மக்கள் என்றே நாம் பொருள் கொள்ளுகிறோம். பொது என்ற சொல் இ என்னும் ஈற்றைச் சேர்த்துக் கொண்டு பொதி என்ற இன்னொரு சொல்லை உருவாக்கும். மூட்டை, குவியல், திரட்சி என்ற பொருள்கள் கிடைக்கும். body என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாய் இதைத் தான் கையாளுகிறோம். [ஏனென்றால் பொதிதல் என்ற வினைச்சொல்லிற்கு மிகுதியின் நீட்சியாய் நிறைதல் என்ற பொருள் வந்துவிடும். "ஆள் பொதி பொதி என்று இருக்கான் பார்த்தியா?" என்ற சொல்லாட்சியை உன்னித்து நோக்குங்கள்.] பொதி கூடிப் போய் அதிக எடையோடு ஊதிப் போய் இருப்பவனை பொதுக்கை (obese) என்று சொல்லுகிறோம். facist என்பவரைக் கூட பொருள்நீட்சி கருதி பொதுக்கையர் என்று சொல்லலாம்.

பொதுக்கை என்ற சொல் சற்றே திரிந்து பதுக்கை என்று ஆகி கற்குவியல் என்ற பொருள் கொள்ளும். இன்றையச் சேலம், தருமபுரி, திருவண்ணாமலைப் பக்கங்களில் பெருங்கற்காலப் புதை குழிகளைத் தொல்லியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த புதைகுழிகளின் மேல், பெரிய கற்பாளத்தை வைத்து மூடி அதற்கும் மேல் கற்குவியலைக் கொட்டி வைத்திருப்பார்கள். இந்த விதமான புதைகுழிகளைப் பதுக்கை என்று சங்கப் பாடல்கள் குறிக்கும்.

பொது என்னும் அடியில் இருந்து நெருங்குதல், நிறைதல், தழைத்தல் என்ற பொருளில் பொதுளுதல் என்ற வினை பிறக்கும். பொதுளித்தல் என்பது செறிவூட்டுதல் என்ற பொரூளில் செறிவு (concentration) கூடிய நிலையைக் குறிக்கும். பொதுளி என்ற பெயர்ச்சொல் செறிவுற்றது, செறிவூட்டு என்ற பொருள் கொள்ளும். பொதுவில் இருந்து இன்னொரு நீட்சியாய் பொதும்பு என்ற சொல் மரச்சோலையையும், பொதை என்ற சொல் செடிப்புதர்களையும் குறிக்கும்.

பொல் எனும் வேரில் இருந்து உருவான பொதுளி என்ற சொல்லையே இங்கு compiler என்ற சொல்லுக்கு இணையாகப் பரிந்துரை செய்கிறேன். மரச்செறிவைப் போல நிரல் ஆணைகளின் செறிவை ஏற்படுத்துவது பொதுளி.

அன்புடன்,
இராம.கி.

11 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

நன்றி!
பொதுளிப்பணியை ஆற்றுபவரை(one who compiles)எவ்வாறு அழைப்பது?

Anonymous said...

நன்றி, பொதுளி நல்ல சொல்லே.

நண்பர் நீங்கள் மாதிரிக்கு தந்த வேரைவிட இன்னொரு மொழிப்பிறப்பியலாளர் ஒரு வேர் தந்தார். செல்வி சிவமாலா அவர்களின் கூற்றின்படி சுண்ணாம்பு மாவில் உருவங்களைத் திரிந்து பின்னர் ஒன்றை ஒத்ததான கருத்திற்கு இயம்ப அச்சொல் வளர்ந்ததாம் என்றார். அவர் கூறியதின் சரியான வடிவம் உணர்வுகள் களத்தில் அழிந்துவிட்டது. அவர் அதனை மீண்டும் பதியும்போது இங்கு சுட்டிவிடுகிறேன்.

மா+திரி (மாவால் திரித்தல்) போன்ற கருத்தோடு அவர் கூறினார்.

அந்தமாதிரி என்று யாழ்ப்பாணத்தில் நாம்கூறுவது நெடுநாள் வழக்கம் நண்பரே.

நன்றி

Sridhar V said...

மிக நன்றாக இருக்கின்றது!

compiler - பொதுளி
Interpreter - என்னவென்று கொள்வது?

//
பொல்லின் பெரியதைப் பொல்லம் என்று சொல்லலாம். எனவே பொல்லங்களின் மேல் கட்டடங்கள் நிற்கின்றன என்று சொல்லும் போது பொரூல் குறைவதில்லை
//

"பொருள்" என்றல்லவா இருக்க வேண்டும்?

Anonymous said...

compiler க்கு 'இருமையாக்கி' என்று இணையத்தில் யாரோ பாவித்திருந்தார்கள்

Anonymous said...

ஐயா, சிங்களத்தில் "வட்டி" எனும் சொல்லுக்கு "பொலி" என்று தான் கூறுவார்கள்

இராம.கி said...

அன்பிற்குரிய திரு.சிவஞானம்,

பொதுளுதல் என்பது வினைச்சொல் = to compile. பொதுளுவது ஒரு கருவி என்னும் போது பொதுளி என்றும், அது ஒரு மாந்தன் என்றால் பொதுளர் என்றும் சொல்லல்லாம். பொதுவாகச் சொல்லும் போது பொதுளிவேலை எனலாம்.

அன்பிற்குரிய கோயிற்பெருச்சாளி,

மாதிரி என்ற சொல்லை மா+திரி என்று பிரித்துப் பொருள் சொல்லும் முறை பலநேரம் சரிவருவதில்லை. கூட்டுச் சொல்லெனக் கொள்ளுவதற்கு முன் பலவற்றைப் பார்க்க வேண்டும். மட்டம், மட்டுதல் எனப் பல சொற்கள் மாத்தலோடு தொடர்புற்றவை. வெறுமே மா + திரி என்று பிரித்துச் சொல்லும் இந்த உன்னிப்பு முறையை folk etymology என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்; இதைத் திரு. சாத்தூர் சேகரனும் பயன்படுத்துவார். எனக்கு இந்த முறையில் ஒப்புதல் இல்லை.

சிவமாலாவின் (Forumhub) பல சொற்பிறப்பியல் வழிமுறைகளோடு நான் வேறுபடுபவன். அதற்காக அவர் கூறிய எல்லாவற்ரையும் புறக்கணைப்பவனும் இல்லை.

யாழ்ப்பாணத்தில் அப்படிக் கூறுவதை நான் இப்பொழுது அறிந்து கொள்ளுகிறேன்.

அன்பிற்குரிய சிரீதர் வெங்கட்,

interpreter = இடைப்பரலி
(பரலுதல் என்பது சொல்லுதல். கிளி பரலுகிறது என்று சொல்லுவார்கள்.பரட்டுதல் என்ற வினையும் தொடர்பு கொண்டது தான். பரயுதல் என்ற பழந்தமிழ் -இந்தக் கால மலையாள - வினையும் இதை ஒட்டி எழுந்தது தான்.

பொரூல் என்று வந்தது தட்டச்சுப் பிழை. பொதுவாக எழுதியதைப் படித்துப் பிழைகளைச் சரி செய்து அனுப்ப முயற்சிப்பேன். மீறியும் சில போது இப்படிப் பிழைகள் நேர்ந்தது உண்டு. மன்னியுங்கள்.

அன்பிற்குரிய இரு பெயரில்லாதவர்களுக்க்,

இருமையாக்கி என்பது நாம் எழுதிய் நிரல் வரிகளை மாகன மொழியில் (machine language) இருமைக் குறியீட்டில் (binary coding) மாற்றுவதைக் குறிப்பிடுகிறது போலும். இது அளவிற்கு மீறிய விதப்பாக்கம் (specialization).இது கணித்துறைக்கு வேண்டுமானால் விதப்பாகப் பயன்படக்கூடும். ஆனால், அறிவியலில் பல சொற்கள் துறை விட்டுத் துறை போய் பயன்படக் கூடியவை. அவற்றைக் கூடியமட்டும் பொதுமையாக வைப்பது நல்லது. ஆங்கிலத்தில் அப்படித்தான் இருக்கிறது. பல தரவுகளை ஒரு ஆளிடம் கொடுத்து "would you please compile it?" என்று சொல்ல மாட்டோமா? அவர் கணியைப் பயன்படுத்தாமலே பொதுளித்து வைக்க முடியுமே? கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.

இனிச் சிங்களத்தில் வட்டி என்பதாற்குப் பொலி என்ற சொல்லைப் பாவிப்பது அறிந்து வியப்புற்றேன். நாம் எண்ணுவதற்கும் மேலே சிங்களத்திற்கும் நம் தமிழுக்கும் தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பை அவர்களும் ஒப்பாமல், நாமும் தேடாமல் ஏதோ இந்தோ ஆரியன் தொடர்பையே பெரிது படுத்திக் கொண்டு ...... இரண்டாயிரமாண்டுகளாய் ஒரு ஏமாற்று, அவலம், கொடுமை.

ஆரியம் என்று சொன்னால் உயர்ச்சி என்று அவர்கள் கருதிக் கொள்ளுகிறார்கள். இந்திய நாட்டிலும் கருதிக் கொள்ளுகிறார்கள். மண்னாங் கட்டி.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

//சிவமாலாவின் (Forumhub) பல சொற்பிறப்பியல் வழிமுறைகளோடு நான் வேறுபடுபவன். அதற்காக அவர் கூறிய எல்லாவற்ரையும் புறக்கணைப்பவனும் இல்லை.// அப்படியென்றால் அங்கு இருந்த f.s.g. காந்தி தாங்கள்தானே?...

//யாழ்ப்பாணத்தில் அப்படிக் கூறுவதை நான் இப்பொழுது அறிந்து கொள்ளுகிறேன்.// இராமகியின் சொற்பிறப்பியல் விளக்கம் அந்தமாதிரி(நன்றாக இருக்கு) என்று சொல்லுவோம்.

அதே நேரத்தில், ஓ அவன் அந்த மாதிரியோ என்று மறைபொருளாகவும் பேசுவோம். அப்படிப்பட்டது, அப்படியானது, அதுபோன்றது, சிறந்தது என்று 'அந்தமாதிரி' பொருள்படும். ஆங்கிலத்தில் சூப்பர் என்று சொல்வதுபோலவும் அந்தமாதிரி யாழ்ப்பணத்தவரால் பாவிக்கப்படுகின்றது.

//ஆரியம் என்று சொன்னால் உயர்ச்சி என்று அவர்கள் கருதிக் கொள்ளுகிறார்கள். இந்திய நாட்டிலும் கருதிக் கொள்ளுகிறார்கள். மண்னாங் கட்டி. //
வெள்ளைத்தோல் பின்னால் தமிழர் விளைந்தால் ஆரியம் உள்ளத்தில் தளைத்தோம்புமாம். ஆரியமொழி என்று அழைக்கப்படும் சங்கத மொழியின் மூலங்கள் தமிழிலே உள்ளன. அவற்றை அறியாது, தமிழனைத், தமிழைத் தரைக்குறைவாகப் பார்ப்பதும் கருப்புத் தோலை அழகல்ல என்று எண்ணுவதும் தமிழருக்கும், அவர்தம் வழிவந்தோருக்கும் மூளை சூழைக்குச்(செங்கல் சூழை) சென்றதைப் புலப்படுத்தும்.

ஆரியன் என்ற சொல் தமிழ் அறிவு என்பதில் இருந்து வந்ததுதானே இராமகி?

-----------------------------------
ஈழத்தீவில் சிங்களவர் என்ற இனமே இருந்ததில்லை. அங்கு தமிழர்தான் இருந்தார்கள். தேவநம்பிய ஈசன் (தீசன்) தந்தையின் பெயர் மூத்த சிவன். மூத்த சிவன் காலத்தில் அசோகப் பேரரசன் ஈழத்திற்குப் புத்தமதத்தைப் பரப்ப முயன்றான். அதற்கு மூத்தசிவன் மறுப்புத் தெரிவித்தார்.

மூத்தசிவனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவன் மகன் தேவநம்பிய ஈசனை வாழ்த்துவதற்கு அசோகனின் மகனுடனான புத்த மதக் குழு ஈழம் வந்தது. அங்கு பெளத்தத்தைப் பரப்ப அவர்கள் முயன்றனர். அதற்கு நேரடியாக ஆதரவளிக்காவிட்டாலும், அவர்களை ஈழத்தில் உள்ள மலைகளில் வாழத் தேவநம்பிய ஈசன் (தீசன்) அனுமதித்தான்.

பிறகொரு நாள் புத்த குருமார் தங்கியிருந்த மலைப்பகுதிக்குச் சென்ற தேவநம்பிய ஈசன் அவர்களின் வாழ்வுமுறையால் ஈர்க்கப்பெற்றான். அதனால் அவர்கள் அநுராதபுரத்தில் மற்றும் பிற நகரங்களில் தங்கியிருக்க அனுமதித்தான்.

காலப்போக்கில் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் தமிழர் பெளத்தத்துக்கு மதமாறினார்கள். அதன்விளைவாக பாலி மொழியின் தாக்கம் ஈழத்தில் உணரப்பட்டது. மதப்பிளவுப் போர்கள் நாயன்மார், ஆழ்வார் காலத்தில் வலுப்பெற்றன.

தமிழ் அரசர்கள் மதம்மாறிய போது பல புத்த குருமார்கள் கழுகேற்றப்பட்டார்கள். அதுபோன்றே சிவனிய மாலியத் தமிழரும் புத்த மதத்தைச் சார்ந்த தமிழரால் கொல்லப்பெற்றனர்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் தமிழ்நாட்டில் பெளத்த சமண செல்வாக்கை அழித்துவிட்டனர். ஆனால் ஈழத்தில் வடக்குக் கிழக்கில் வாழ்ந்த தமிழர் மட்டும் சிவனிய மாலியர் மற்றும் இயற்கைத் தெய்வ வழிபாட்டில் இருந்தனர்.

தென்புலத்தோர் பெளத்தத்துக்கு முழுமையாக மாறிவிட்டனர். இருந்தாலும் அவர்கள் தமது தமிழ்ப் பண்பாட்டை மறக்கமால் இருந்தனர். அவர்கள் மொழியில் தமிழ் முதன்மைதர்கியது. ஐரோப்பியர் காலத்தில்கூட தமிழ்தெரியாத ஈழத்தவர் பெரிதாக இல்லை.

சிங்கள எழுத்துவடிவம் ஐரோப்பியர் காலத்தின் பின்னர்தான் வலுப்பெற்றது. ஐரோப்பியர் காலத்தில் தமிழ் வன்னிமைகளில் வாழ்ந்தவர்கள் கண்டிச் சிங்களவர்களுடன் ஒன்றினைந்து சுமார் 300 ஆண்டு வாழவேண்டியதாகிப்போனது. அதன்விளைவாக அவர்களில் பலர் சிங்களவராகினர். அதனால்தான் சிங்களவரின் சனத்தொகை கூடியது.

பின்னர் இடம்பெற்ற சிங்களவரின் நில ஆதிக்கத்தாலும் பல தமிழர் சிங்களவராகினர். காட்டாக ஒரே நாளில் தென் ஈழத்தில் இருந்த 150 பாடசாலைகள் சிங்களமாகின.. காரணம்? ஒரு பாதிரியார் சொன்னாராம், தமிழராக இருந்து பிரியோசனமில்லை சிங்களவராக மாறுங்கள் என்று ... (அது இலங்கை சுதந்திரமடையும் தறுவாயில் நடந்தது.. கிட்டத்தட்ட 50 ஆண்டுக்கு முன்னர்).

இவ்வாறு சூழலால் சிங்களவரின் சனத்தொகை கூடியதும். அறிவுமிக்க தமிழர் பதவிகள் வகிப்பது அவர்களுக்கு பொறாமையை வளர்த்துவிட்டது. அதன்விளைவாக இன்று அவர்கள் தமிழரை எதிர்க்கின்றனர். விஜயன் படகில் வந்ததையும் மகாவம்சத்தையும் கட்டிப்பிடித்து வாழ்கின்றனர்.

தாம் தமிழரின் வேர்கள் என்று அறிந்தால் தற்கொலை செய்தாலும் செய்வார்கள்.. அப்படி மோடர்களாக சிங்களவர்கள் மாறிவிட்டார்கள்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

எங்க ஊரில மஞ்சுவிரட்டுக்குப் போகும் காளைகளை பொலி காளை என்கிறார்கள்..இந்தப் பெயர் எப்படி வந்தது என அறிய ஆவல்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அறிவன், காரி என்று கிழமைப் பெயர்களை குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆனால், என்னால் விளங்கிக் கொள்ளவில்லை. இது குறித்து இடுகை ஏதும் எழுதி இருந்தால் இணைப்பு தாருங்களேன். இல்லாவிட்டால், இது குறித்து இடுகை போட்டால் நன்றாக இருக்கும். நன்றி

இராம.கி said...

பொலிதல் = பெருத்தல், கொழுத்தல்

பொலி காளை = பொலிந்த காளை, பெருத்த காளை, வளம் உள்ள காளை. இது போன்ற காளைகளே சினைக்குப் பயன்படும் எறு சொல்லுவார்கள்.

அன்புடன்,
இராம.கி.

வசந்தன்(Vasanthan) said...

பொதுளி என்ற சொல் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரின் பாடலொன்றில் வருகிறது.
'இலவு காத்த கிளி' என்ற பாடலை நான் பதிவாக்கியிருக்கிறேன்.
அதில் இரண்டாவது வரியில் வரும் பொதுளி என்ற சொல்லுக்கு 'நிறைந்து' என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. (பொருள் கொடுத்தவர் யாரென்று தெரியவில்லை)

'அந்த மாதிரி' என்றதை மிகச்சிறந்தது என்ற கருத்தில் நானும் வலைப்பதிவுகளில் பயன்படுத்தியிருக்கிறேன். சிலர் அதைத் தவறாக விளங்கிக்கொள்ளவே, அவர்களுக்கு விளக்கம் கொடுத்துச் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று. பின் ஈழத்தவர் வலைப்பதிவுகளில் மட்டும் அதைப்பயன்படுத்துகிறேன்.;-)

உங்களின் இப்பதிவில் எழுத்துக்கள் உடைந்துடைந்து தெரிகின்றன. பதிவை PDF ஆக்கி வாசித்தேன். பின்னூட்டங்களை வாசிப்பது கடினமாக இருந்தது.