Friday, November 10, 2006

சோதிடம், நிமித்தகம், ஆரூடம்

"சோதிடம், நிமித்தகம், ஆரூடம் இவை மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை என்ன?" என்று ஒரு நண்பர் அண்மையில் என்னுடைய வேறொரு பதிவிற்கான பின்னூட்டில் கேட்டிருந்தார். அதற்கான மறுமொழி அவ்வளவு சுருக்கமாகச் சொல்லக் கூடியது அல்ல. தவிரவும் இக் கேள்வி பலருக்கும் பொதுமையானது என்பதால் என் மறுமொழியை தனிப்பதிவாகவே இடுகிறேன். (இதுபோன்ற மற்ற சில பின்னூட்டுக் கேள்விகளுக்கு இன்னும் மறுமொழி சொல்லாமல் இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது சொல்வேன்.)

முதலில் சோதிடம் என்பதைப் பார்ப்போம்.

சொல்+தி = சொல்தி>சோதி = ஒளிவிடுகிற நெருப்பு. சோதி என்ற இந்தச் சொல் தமிழில் ஒளி, சொலிப்பு, நெருப்பு என்று பொதுவாகக் குறித்தாலும் (பார்க்க: கொன்றையும் பொன்னும் என்ற இராம.கி. கட்டுரை), விதப்பாக, வானில் சொலிக்கின்ற கோள்களையும், விண்மீன்களையும் குறிக்கிறது. (அதே நேரத்தில் சொலிப்பு என்ற தமிழ்ச்சொல்லையே ஜொலிப்பெனப் பலுக்கும் அளவிற்கு நம்மில் சிலரின் வடமொழி விருப்பம் போயுள்ளது.)

சோதியின் வழிச்சொல்லான சோதியம் (விண்ணில் ஒளிவிட்டிருக்கும் விண்மீன்கள், கோள்களை வைத்துக் கணித்தல்) என்பது முதலில் வான நூலையே (Astronomy) குறித்தது. காட்டாக, புறநானூற்றில் 30-ஆவது பாட்டு, சோதியம் எனும் வானியலையே குறிக்கிறது.

செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழந்த மண்டிலுமும்
வளிதிரிதரு திசையும்
வரிது நிலைஇய காயமும் என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே
(புறம் 30)

(தமிழரறிந்த வானவியல் பற்றிய தொடரைக் ”காலங்கள்” என்ற தலைப்பில் முன் மடற்குழுக்களில் எழுதத் தொடங்கினேன். இவ்வலைப்பதிவின் தொடக்க காலத்திற் கூட, அத்தொடர் தகுதரத்தில் (TSCII) மீள்பதிப்பாய் வெளியானது; என் தனிக் காரணத்தால் பாதியோடு நின்றுபோன அத் தொடரை என்று முடிப்பேன் என்று இப்போது சொல்ல முடியவில்லை.)

சோதியம் என்ற தமிழ்ச் சொல்லே வடக்கே சோதிஷம்> ஜோதிஷம்> ஜ்யோதிஷம் என்றாகிப் பின் மீண்டும் தமிழில் சோதிடமாக வந்துசேர்ந்தது. ஒருகாலத்தில் வானியல் என்ற அறிவியலாய் நின்ற சோதியம், பின் நிமித்திகத்தோடு சேர்ந்து, "கோள்நிலை, கோள்களுக்குப் பின் நிற்கும் விண்மீன்கள் நிலை ஆகியவற்றை வைத்து, மாந்தருக்கு வருங்காலத்தில் என்ன நடக்கும்?" என்று சொல்லும் கலையாக, வான்நிமித்திகமாக (astrology) அது உருமாறிப் போனது. (இப்படி அந்நூலின் குறிக்கோளே மாறிய பின்னும் கூடச் சோதிடம் என்ற சொல்லே புழக்கத்தில் இருந்தது. தொடக்க காலத்தில் அது வான்நூலைக் குறித்ததெனில் இன்று பலரும் வியக்கவே செய்வர். அதே நேரத்தில், சோதியம் என்ற சொல்லையே மூடநம்பிக்கை எனவுணர்ந்து அதனுள் இருக்கும் பழந்தமிழர்/இந்திய வானியல் அறிவை பெரும்பாலோர் புறக்கணிக்கிறோம்.)

இந்திய வானியல் என்பது, இன்று பெரிதும் வடமொழிக் கலைச்சொற்களால் குறிக்கப் பட்டு, தன் கருதுகோள்கள், கணக்கெடுப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. [அது குத்தர்(குப்தர்) காலத்தில் ஓர் இயக்கமாகவே, தமிழ் போன்ற வழக்கு மொழிகளிலிருந்து வடமொழி என்ற படிப்பு மொழிக்குப் பெயர்ப்புச் செய்ததால் உருவான விளைவு.] அதே பொழுது, சங்க இலக்கியங்களில் அறிவர் / கணியர் / வள்ளுவர் என்ற வல்லுநர் (திருக்குறள் எழுதிய வள்ளுவர் பற்றிய அடையாளக் கேள்வி சட்டென எழலாம்; இப்போதைக்கு அதைத் தேக்கி வையுங்கள்; பின் ஒருமுறை பார்க்கலாம்.) பற்றியும், அவருடைய வானியல் அறிவைப் பற்றியும், அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் குறிப்புக்கள் பரக்கவுள்ளன. கூடவே, வடமொழியில் உள்ள வானியற் கலைச்சொற்களை அலசிப் பார்த்து அவற்றின் வேரைத் தேடினோம் எனில், வடமொழி வேர்கள் ஏற்கும் படியாய்க் கிடைக்காததும், ஆழப் பார்க்கையில் தமிழ்வேர்களே கிடைப்பதும் நம்மை வியக்க வைக்கும்.

இந்த அறிவர் / கணியர் / வள்ளுவரின் மெய்யியலாக, அவருக்குப் பின்னால் அறுவிகம் (ஆசீவிகம்) என்ற தமிழ்நெறி இருப்பதும் கூர்ந்து அறியத் தக்கது. (இன்றைக்கு அறுவிக நெறி அழிந்து போயிருப்பினும், அவற்றின் மிச்சசொச்சம் செயின நெறி, சிவ நெறி, விண்ணவ நெறிகளில் ஓரளவு கலந்தே கிடக்கின்றன. ஆசீவிகத்தின் பங்களிப்பை முற்றிலும் மறைத்து ஆசீவிகப் பள்ளிகளையும், அவர்களின் ஆக்கங்களையும் செயினரின் பங்களிப்பாகவும், சமணர் என்ற பொதுச்சொல்லில் அவரை ஆட்படுத்துவதும் கால காலமாய் நடந்துள்ளது.) பொதுவாக, 

அணுவியம் (atomism), 
ஊழியல் எனப்படும் நியதிக் கொள்கை (determinism), 
வினைமறுப்பியம் (முற்பிறவியின் தாக்கம் இப்பிறவிக்கு உண்டு என்ற கருமத்தை மறுப்பது) 

எனும் 3 கொள்கைகளின் வழி ஆசீவிகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். சங்க காலத்தில் இக்கொள்கைகள் பரவி யிருந்ததற்குச் சான்றாக பல பாடல்களைக் கூறமுடியும். (அதைச் சொன்னால் இங்கு நீண்டு போகும். எனவே அதற்குள் நான் போகவில்லை.)

அற்றுவிகக் கொள்கைகளில் முகன்மையானது நியதிக் கொள்கை. அக் கொள்கையின் படி, "இவ்வுலகம் ஓர் ஒழுங்கின்பால் கட்டுப்பட்டது. இந்த ஒழுங்கும் கூட, நமக்கு முன்னே கட்டப்பட்டது (pre-ordained)". 

இக் கட்டுதலை, இயற்கை  தானாகக் கட்டியதா, அன்றி கடவுளெனும் ஒரு கருத்தா கட்டியதா என்ற கேள்விக்குள் நாம் போகவேண்டியதில்லை (இரு வேறுபட்ட கருத்தாளர் இருந்திருக்கிறார். 

ஆசீவிகம் கடவுள் மறுப்பாக இருந்துள்ளது. மாறாக அதிலிருந்து, முன் சொன்னது போல், கடவுளை நம்பும் மதங்களும் இச்சிந்தனையை எடுத்தாண்டுள்ளன.) "ஏற்கனெவே எல்லாம் ஒழுங்கு செய்யப்பட்ட பிறகு, நடப்பது நடந்தே தீரும்" என்ற நிலையை, நியதி என்று சொல்வார். "ஊழில் பெருந்தக்க யாவுள" என்ற குறட்கருத்து ஆசீவிகத்தின் அடிப்படை உள்ளதே. "ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்" என்பது சிலம்பின் அடிக்கருத்துகளில் ஒன்றும் அப்ப்டியனதே. (சிலம்பைச் சமண நூல் என்பதா என்ற கேள்வி எழுவது ஊழ்வினைக் காரணம் பற்றியே.) 

பொதுவாக, ஊழ்வினையை முற்பிறப்பு வினை என்று பொருள் கொள்வது பிறழ்ச்சியானது. ஊழ்வினை என்பது pre-ordained action என்பதையே குறிக்கும். அதற்கும் முற்பிறப்பிற்கும் தொடர்பில்லை. ஆசீவிகம் ஊழோடு வினைமறுப்பையும் சேர்த்தே சொல்லும்.

இக்கால அறிவியல், நுட்பியற்காரருக்கு கணிதவழி சொன்னால் ஊழ், நியதிக் கொள்கை இன்னும் புரியக் கூடும். நியதிக் கொள்கை என்பது கலன (calculus) நூலில் தொடக்க மதிப்புப் புதிரிகளைப் (initial value problems) போன்றது. 

ஒரு வருதையான வகைப்புச் சமன்பாட்டையும் (ordinary differential equation), அதன் தொடக்க மதிப்பையும் (initial value) கொடுத்துவிடின், கால காலத்திற்கும் ஓர் இயக்கம் நடந்துகொண்டே இருக்குமென்று கலனவியலின் வழி புரிந்து கொள்வோம் அல்லவா? 

காட்டாக, மக்கள்தொகைப் பெருக்கத்தின் ஓர் எளிய மாதிரியாக (simple model)

dx/dt = kx; x(0)= a

என்ற சமன்பாட்டைச் சொல்வார். அதாவது, பெருகு வளர்ச்சியின் கண நேர வீதம் (instantaneous rate of growth), அந்தப் பொழுதில் ஏற்கனவே வளர்ந்துள்ள தொகையைப் பொறுத்தது என்று இச்சமன்பாட்டின் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இச்சமன்பாட்டை வழக்கமான தொகைக் கலன (integral calculus) முறையில் இனம் பிரித்து தொகையேற்றிச் (if integrated) சுளுவி எடுத்தால் (solve)

x = a*exp (kt)

என்ற சமன்பாடு கிடைக்கும். இதில் exp(kt) என்பது kt என்பதன் இயல் மடக்கைக் (natural exponentiation or exponentiation of the number e) குறிக்கும். மேலும், k என்ற புறமதிப்பை (parameter) அல்லது நிலையெண்ணைப் (constant) பொறுத்து, a என்னும் தொடக்க மக்கள் தொகை, மடங்கி மடங்கிப் (exponential) பெருத்துக் கொண்டே போகும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால், நியதி அல்லது ஊழ்க்கொள்கையின் அடிப்படை புரியும்.

"இன்றைக்கு இருக்கும் உலக நிலை, நடப்புக்கள் என்பவை என்றோ தீர்மானிக்கப் பட்டவை. உலகத்தில் இருக்கும் ஒவ்வொன்றின் வளர்ச்சியும் கோள்நிலைகளையே பொறுத்தது (அதாவது k என்ற புறமதிப்பைப் - paramter -போல.) என்று நியதிக் கொள்கை கருதிக் கொள்கிறது. அதன் விளைவால், எந்தவொரு மாந்தனும் பிறக்கும் போது இருந்த கோள்நிலைகளைக் கணித்து வைத்துக் கொண்டால், அவன் வாழ்க்கையின் வெவ்வேறு கால நிலைகளில் "குறிப்பிட்ட நிகழ்வுகள் நடக்குமா, நடக்காதா?" என்று சொல்லிவிடலாமாம்.

அதே நேரத்தில், இதழுக்கும், கோப்பைக்கும் நடுவில் எவ்வளவோ துளிகள் சிந்தலாம் என்ற மொழிப்படி, இது போன்ற நியதிக் கொள்கையை மீறி எத்தனையோ நடக்கலாம் என்றும் நமக்குத் தோன்றுகிறது; (அது சரிதான் நியதிக் கொள்கை ஆசீவிகத்தின் ஒரு பகுதி. அதுவே முழுப்பகுதியும் அல்ல. நான் ஆசீவிகத்தை வேறொரு தொடரில் விளக்குவதாய்ச் சொல்லி வந்துள்ளேன். செய்வேன். சற்று பொறுங்கள்)  ஆனாலும் நியதிக் கொள்கை மாந்த வரலாற்றை வெகுகாலம் நடத்தியிருக்கிறது. 

அண்மையில் இழுனாச் செயற்பாடுகளைப் (non-linear processes) பற்றியும், கசகு (chaos) பற்றியும், வண்ணத்துப்பூச்சி விளைவு (butterfly effect) பற்றியும், இன்னும் இது போன்றவை பற்றியும் அறியாத மட்டும், அறிவியலின் முகன்மைப் பகுதியான பூதியல் கூட நியதிக் கொள்கையின் படிதான் பல இடங்களில் வேலை செய்து கொண்டிருந்தது. (இக் கட்டுரையில் நியதி பற்றியே பேசுகிறேன்.)

இந்திய நியதிக் கொள்கையின் படி, ஊழ் என்பது நான்கு நிலைகளில் இயங்குமாம். (கீழே வரும் செய்திகள் தமிழக ஆய்வரண் வெளியிட்ட வெங்காலூர் குணா எழுதிய ”வள்ளுவத்தின் வீழ்ச்சி” என்ற நூலை ஒட்டியது. இந்திய மெய்யறிவியல் பற்றிய, குறிப்பாக ஆசீவிகம், விதப்பியம் (வைஷேடிகம்) பற்றிய, அருமையான நூல் அது. நூல் கிடைக்குமிடம்: பஃறுளி பதிப்பகம், 183, வேங்கடரங்கம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.)

அவை
------------------------
ஆவதாம் (அதுவாம் அது)
ஆமாங்காம் (அதுவாம் வகை)
ஆந்துணையாம் (அதுவாம் துணை)
ஆங்காலத்தாம் (அதுவாம் பொழுது)

ஒரு சினை (முட்டை) கருவாகி, அக்கரு குழந்தையாகி, குழந்தை அரிவை யாகும் (20 முதல் 25 அகவையாகும் பெண்) எவ்வளர்ச்சி (evolution), ஈன்களில் (genes) அமைந்துள்ள செய்திக் கோவையின் (message) படி ஏற்படும் இயற்கையைத் தான் "அதுவாம் அது (this is it)" என்று கூற்று சுட்டிக் காட்டுகிறது.

"இந்தச் சினை பின்னால் ஓர் அரிவைப் பெண்ணாகும், இன்னொரு சினை அப்படிப் பெண்ணாகாது" என்று வகைப்பதும் இயற்கையே (அதுவாம் வகை - classification).

"ஓர் அரிவையாக வேண்டுமானால் இவ்வளவு திரட்சி, இன்னின்ன சூழ்நிலைகள் இதற்கு இருக்க வேண்டும்" என்று தேவைப்படும் துணைகளை விதிப்பதும் இயற்கையே (அதுவாம் துணை - auxiliary conditions).

அரிவையாவது இன்ன பருவத்தில் என்பதும் இயற்கையே (அதுவாம் பொழுது - timing).
---------------------------------
நிமித்திகத்தின் அடித்தளமும் கூட இதுதான். அதாவது நியதிக் கொள்கை (determinism). "நியந்து கொள்ளப் பட்ட உலகில் ஓரளவு தான் நீங்கள் உங்கள் வாழ்வை மாற்ற முடியும்" என்ற புரிதல் நியதிக் கொள்கையின் வழியாய் அறியப் படுவது. இன்றைய அறிவியலின் படி நியதிக் கொள்கையைப் பல கேள்விகளுக்கு உள்ளாக்க முடியும்.

வான்நிமித்திகத்தின் படி, நாம் பிறந்த போது இருந்த கோள்கள் நிலையை வான நூலின் படி ஒரு படமாகப் பிடித்து, ஒரேவிதமான படப்பிடிப்புகளை எல்லாம் ஒரு தனி வகையாகப் பார்த்து, அந்த வகையில் இருப்பவருக்கு இன்ன விதமான வாழ்க்கை இருக்கும் என்று சொல்லுவது வான்நிமித்திகம். 

[அந்தப் படப்பிடிப்பைத் தான் சூல்தகம்>*சொல்தகம்>சாதகம் என்று சொல்வார். சூல்தல் = கருவுறுதல். சூல்த்தல் = கருவாக்குதல் (பிறவினை); சூலி, சூற்பெண்டு = கருவுற்ற பெண். கரு வளர்ச்சியுற்றுப் பிறக்கும் செயலை சூனித்தல்>சினைத்தல் என்று சொல்வார். இதேபோல கனித்தல் என்ற சொல்லும் பருவநிலை எய்தி உருவாதலைக் குறிக்கும். கனித்தல் / ஈனித்தல் / சினைத்தல் என மூன்று வினைகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. சினை என்ற சொல் பொதுவாக அஃறிணையில் கன்று, மகவு என்பதைக் குறிக்க, சூனு என்ற சொல் வடமொழியிலும், sun/sonne என்ற சொற்கள் இந்தையிரோப்பிய மொழிகளிலும் மகனைக் குறிக்கப் பயன்படும். இதேபோல, சூல்த்தம்> சூத்தம்> சூத்ரம் = சொல்ல வருவதை சுருக்கமாய், எல்லாம் அடங்கிய கருப் போலச் சொல்லுதல்.]

இனி நிமித்தம் என்பதைப் பார்ப்போம். நிமித்தம் என்பதற்குக் காரணம், சகுனம் என்று பலபொருள் சொல்வார். தொல்காப்பியத்தில் சில இடங்களில் இச்சொல் ஆளப்படுகிறது. குறிப்பாக, அகத் திணையியலில் உரிப்பொருள் பற்றிப் பேசும்பொழுது 960 ம் நூற்பாவில்,

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊட்ல் இவற்றின் நிமித்தம் என்று இவை
தேருங் காலை திணைக்கு உரிப் பொருளே

என்று வரும். இங்கே நிமித்தம் என்பதற்குக் காரணம் என்ற முதற்பொருள் குறிக்கப் பெறும். இதே போல 1037ம் நூற்பாவில்,

நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலங் கண்ணிய ஓம்படை உளப்பட
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பில்
காலம் மூன்றொடு கண்ணிய வருமே.

இதில் சகுனம் என்ற பொருள் குறிக்கப் படும். மேலும், 1050 ம் நூற்பாவில் "பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப" என்னும் போது காரணம் என்ற பொருளும், 1123ம் நூற்பாவில், "ஆவொடு பாட நிமித்தம் கூறலும்" என்னும் போது,   மீண்டும் சகுனம் என்ற பொருளும் வரும். தொல்காப்பியத்திற்குப் பிறகு வந்த சங்க நூல்களிலும் கூட இச்சொல் காரணம், சகுனம் என்று பொருள்களில் ஆளப்பட்டிருக்கிறது.

நிமித்தம் என்ற சொல்லாட்சி வடமொழியில் இருந்தே வந்திருக்க வேண்டும் என்று பலரும் எண்ணுகிறார். ஆனால் நிமித்த என்பதின் சொற்பிறப்பு அறிய மோனியர் வில்லியம்சு வடமொழி சொற்பிறப்பு அகரமுதலிக்குப் போனால், வழக்கம் போல சொல்லை உடைத்து, நி-மித்த என்று பிரித்து, மித்த என்னும் பகுதி மா என்னும் வேரில் இருந்து எழுந்திருக்கலாம் என்று ஊகமாகச் சொல்வார். விளக்கம் முழுதும் படித்தால் நம்மால் ஏற்கமுடிய வில்லை. "சரி, தமிழில் பிறந்து திரிந்து கிடக்குமோ?" என்ற ஐயம் உடன் எழுகிறது.

நிமித்தம் என்பதற்கு, திவாகரத்தில் நிபம், பொருட்டு, ஏது, திறன், வாயில் என்று சொற்களை இணையாகக் கொடுத்து "காரணந் தெரிசொல்" என்று பொருள் சொல்வார். [பின்வரும் நிகண்டுகளில் நிபம் என்ற சொல்லையே காணோம்.]

காரணம் என்பது கரு என்னும் சொல்லடியிற் பிறந்ததென்று  சொல்லறிஞர் ப.அருளியார் கருதுவார். கருவின் அணம் காரணம் என்றாகும். அதாவது கருவிற்கு நெருங்கியது காரணம். கருத்தல் என்பது தோன்றுதல் பொருளைக் குறிக்கும். காரணம் தமிழாக இருக்கையில், ”கரு”வில் ஏற்பட்ட காரியமோ ஓர் இருபிறப்பிச் சொல் என்பார். ”கருமம்” அதற்கு இணையான தமிழ்ச்சொல்.

இதே போல இயல் எனும் சொல்லடியில் பிறந்த வினைச்சொல் இயல்தல்; இதற்குப் பொருள் ஏற்படுதல், உண்டாகுதல் என்பதாகும். இயல்தலின் திரிவு ஏல்தல். ஏல் எனும் அடியில் கிளைத்ததே ஏற்படல் என்ற கூட்டு வினைச்சொல். இனி, ஏல்து என்னும் சொல்லடி ஏல்து>ஏது என்றாகும். ஏது என்ற சொல் காரணப் பொருளைத் தருவது இப்படித்தான். ஏதுசாற்றம் என்ற கூட்டுச்சொல் hethusAsthra என வடமொழியில் திரியும். Logic என்பது இதன் பொருள். இதைக் கற்கக் காஞ்சிபுரத்திற்கு புத்தர் காலத்தில் வந்திருக்கிற செய்தி புத்த நூல்களில் தெரிகிறது.

காரணத்தோடு தொடர்புடைய பொருட்டு என்ற சொல்லை 2,3 வகையாய்ப் பயன்படுத்துகிறோம். "எதன் பொருட்டு இவர் இப்படிக் கத்துகிறார்?" எனும் போது காரணம் என்ற பொருளும், "அப்படி எல்லாம் அவர் நினைத்தால் எனக்குப் பொருட்டில்லை" என்னும் போது "மதிப்பிற்குரியது" என்ற பொருளும் காணப்படுகிறது.

"ஒன்றின் வாயிலாய் இன்னொன்று பிறக்கும்" எனும் போது, வாயில் என்ற சொல்லும் காரணப் பொருளைப் பெறுகிறது. திறவு/திறன் என்ற சொல்லும் கூட வாயில்/கதவு என்ற பொருளின் வழியாகக் காரணத்தை உணர்த்துகிறது.

இனி நிமித்தத்திற்கு வருவோம். தமிழில் தன்வினைச் சொல்லான நிற்றல் என்பதன் பொருளை நாம் அறிவோம். அதைப் பிறவினையாக்கும் போது நிருவுதல்> நிறுவுதல், நிருமுதல்> நிருமித்தல், நிற்பு+ஆட்டுதல் = நிற்பாட்டுதல்> நிப்பாட்டுதல் என்றெல்லாம் வட்டாரத்திற்கு ஏற்பச் சொற்கள் எழும். இவை எல்லாவற்றிற்கும் நிற்கவைத்தல் என்றே பொருள் கொள்கிறோம். இதே பொருட்பாட்டில் தான் ஏல் + படுதல் = ஏற்படுதல் என்ற கூட்டு வினைச்சொல் எழும். ஏற்படுதல் என்பது தன்வினையாகும் போது, அதன் பிறவினையாய் ஏற்படுத்தல் என்ற சொல் எழும். நிருமித்தல் என்பதும் ஏற்படுத்தல் என்பதும் ஒரே பொருட்பாடு உடையவையே.

ஒன்றை ஏற்படுத்தினால், இன்னொன்று விளையும் என்ற பொருளில் ஏற்பாடு என்ற சொல் காரணமாயும், ஏற்படுவது விளைவாயும் கொள்ளப் படுகிறது. சில போது இவ்விளைவை நிருமானம்> நிருமாணம் என்கிறோம். நிருமித்தம், ஏற்பாடு போன்ற சொற்களுக்குக் காரணப்பொருள் உண்டாவதை மேற்கூறிய கருத்துக்களின் வழி புரிந்து கொள்ளலாம். . இனி பெருநை> பெண்ணை என்று ஆவதுபோல, பெருமான்> பெம்மான் என்று ஆவது போல, நிருமித்தம் என்பது நிம்மித்தம்>நிமித்தம் என்று திரியும். [நிருவுதல் என்பதன் வழியாக, நிருபா தானம் = முதற் காரணம் இன்மை, நிருபாதி = காரணம் இன்மை, நிருபாதிகம் = காரணம் அற்றது என்ற இருபிறப்பிச் சொற்களும் உருவாகி இருக்கின்றன.]

வாழ்வின் ஒவ்வொரு விளைவுகளுக்கும் நிமித்தம்(=காரணம்) கண்டுபிடித்துச் சொல்வதும், இந்நிமித்தம் ஏற்பட்டுவதால், இன்னது விளையும் என்பதும் நிமித்திகத்தின் புலனமாகும். இந்நிமித்திகத்தில் செய்கணம் (=சகுனம்) என்பதும் ஆழ்ந்து பார்க்கப் படுகிறது. எப்படி இலக்கியத்திற்கு இலக்கணம் ஆதாரமோ, எப்படிக் கருமத்திற்குக் காரணம் ஆதாரமோ, அதே போல செய்கைக்கு அணம் செய்கணம்> செகுணம்> செகுனம்> சகுனம் ஆதாரம் என்று முன்னோர் நம்பினார். (இச் செகுனம் என்பது இற்றை அறிவியலில் signal என்று சொல்லப்படும்.) பல நேரம் இது அறிவியலின் படி இருந்தாலும், ஓரோ வழி மூட நம்பிக்கையாயும் இது அமைந்து விடுவதுண்டு.

மேகம் கருத்தால், மழை வரும் என்பது பட்டறிவு. இதில் மழை என்பது செய்கை. கருத்த மேகம் என்பது செய்கணம் அல்லது நிமித்தம். கருத்த மேகத்தைப் பார்த்து மழைவரும் என்று சொல்வது நிமித்திகம். 

இன்னொரு எடுத்துக்காட்டையும் கூறமுடியும். ஒரு இடத்தில் பெரும் நில அதிர்வு ஏற்படப் போகிறது; அந்த அதிர்வு ஓர் அலையுயரம் (amplitude), அல்லது பருவெண்ணைக் (frequency) காட்டினால் தான் மாந்தரால் அறியமுடிகிறது. அதற்குள் பெரும் அழிவுகள் ஏற்பட்டுவிடக் கூடும். மாறாக ஒரு சில பறவைகள் (புள்கள்), நுண்ணுயிரிகள், குறுவிலங்குகள் போன்றவை, மிகச் சிறிய அதிர்வுகளால் கூட அங்குமிங்கும் ஓடத்தொடங்கும் அல்லது பறக்கத் தொடங்கும். அதைக் கவனித்து இன்னும் இத்தனை மணி நேரத்தில் பெரிய நில அதிர்வு ஏற்படப் போகிறது என்று சொல்வதும் நிமித்திகம் தான். அதே போல மழை வரப் போகிறது என்று கணித்துச் சொல்லுவது, இம்முறை வெய்யில் அதிகமாய்  வாட்டும் என்று முன்கூட்டிச் சொல்வது, கடல் பொங்கும் என்று ஆருடம் சொல்வது என்பவை எல்லாமே நிமித்திகம் தான்.

நாளாவட்டத்தில், பல்லி கவுளி சொல்லுவது, பூனை குறுக்கே போவது என்று மூடநம்பிக்கைகளுக்குப் போய்ச் சேரினும். தொடக்கத்தில் நிமித்திகத்தில், இயற்கையைக் கூர்ந்து கவனிக்கும் ஈடுபாடே இருந்தது புலப்படுகிறது.

நிமித்திகத்திற்குப் பக்க வலுவாக சோதியத்தைச் சேர்த்து வான்நிமித்திகம் வந்தது எப்பொழுது என்று தெரிந்துகொள்ள முடியவில்லை; ஆனால் சங்க காலத்தில் இக்கலை ஏற்பட்டு விட்டது என்பது பல பாடல்களால் தெரிகிறது. காட்டாக, "எரிமீன் விழுந்தது; சேர அரசன் இறக்கப் போகிறான்" என்று நிமித்திகம் கூறும் புறநானூற்றின் 229ம் பாடல்,

ஆடியல் அழற்குட்டத்து
ஆரிருள் அரைஇரவில்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயங்காயப்
பங்குனிஉயர் அழுவத்துத்
தலைநாள்மீன் நிலைதிரிய
நிலைநாள்மீன் அதன் எதிர் ஏர்தரத்
தொல்நாள்மீன் துறைபடியப்
பாசிச் செல்லாது ஊசி முன்னாது
அளக்கர்த் திணை விளக்காகக்
கனைஎரி பரப்பக் காலெதிர்பு பொங்கி
ஒரு மீன் விழுந்தன்றால் விசும்பி னானே
(புறம் 229)

வழியாக, வான்நிமித்திகத்தின் தாக்கம் சங்க காலத்தில் இருந்ததைத் தெளிவாகவே அறிகிறோம். இதுபோன்ற பாடல்களில் இருக்கும் வானியல் அறிவு ஒருபக்கம் நம்மை வியக்க வைக்கும் போது, இன்னொரு பக்கம் நிமித்திகத்தின் ஊடுருவலையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

இனி மூன்றாம் சொல்லுக்கு வருவோம். ஆரூடம் என்ற சொல்லிற்கும் வடமொழியில் வேரில்லை, ஆரூடம் என்பது முதலில் வான்நிமித்திகத்தின் விதப்பான முறையாகவே உணரப்பட்டது. அதாவது சூல்தகம் (=சாதகம்) பார்க்காமல், கேட்க வரும் நேரத்தில் "ஓரைகள் (ராசிகள்) எந்த அளவிற்கு உச்சம் பெற்றிருக்கின்றன; இந்நேரத்தில் கோள்கள் எப்படிப் பாதிக்கும்?" என்று கணித்து நிமித்திகம் சொல்வதே ஆரூடம் என்று அறியப் பட்டது.

நாளாவட்டத்தில் எல்லாவிதமான ஊக வேலைகளையும் (guesswork) கூட ஆரூடம் என்று சொல்லத் தொடங்கினார். எண்சோதிடம் கூட இன்னொரு கிளையாகப் பிரிந்தது. ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலனைச் சொல்லி, அவ் எண்களுக்குக் கோள்நிலைகளோடு தொடர்புறுத்தி, எண்களை தாயக் கட்டைகள், சோழிகள் மூலம் போட வைத்து, மொத்தத்தில் பெரிய ஊக வேலைகள் இங்கு நடந்து கொண்டிருந்தன.

ஆரூடம் என்பதை ஆர்+ஊடம் என்ற கூட்டுச் சொல்லாகப் பிரித்தே சரியான சொற்பிறப்பு காண்கிறார். ஏர்தல்>ஏறுதல், ஊர்தல் = ஏறி நகருதல்; ஏகாரம்/ஊகாரம் போன்றவை ஆகாரமாய்த் திரிவது தமிழில் இயற்கையே. ஏறிவந்து ஒருவர் நிமித்திகரிடம் ஆரூடம் கேட்கும் போது, கோள்கள் ஓரைகளின் உச்ச நிலையில் இருப்பதை ஒட்டி, அதனூடாகப் பலன் சொல்வது ஏரூடம்> ஆரூடம் ஆகும். இதைப் ப்ரசன்ன சோதிடம் என்றும் வடமொழிப் படுத்திச் சொல்வார். அண்மையில் கேரளாவில் அய்யப்பன் கோவிலில் சோழிகளைப் போட்டு ப்ரசன்னம் பார்த்த குழப்பம் செய்தித் தாளில் படித்திருப்போமே? இந்த ஆரூடம், ப்ரசன்னம் பார்ப்பது கேரளத்தில் மிகுதியானது. தமிழகத்தில் குறைவு.

இப்படிச் சோதியம், நிமித்திகம், ஆரூடம் போன்றவை சற்றே வேறுபட்டாலும், எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஒன்றிற்கு மாற்றாக இன்னொரு சொல் புழங்குவது இன்று வழக்கமாகிப் போனது.

இக்கட்டுரை நெடுகிலும், நிமித்திகம், ஆரூடம் போன்றவை சரியா, மூட நம்பிக்கையா என்ற கேள்விக்குள் நான் போகவில்லை. இதை மறந்து விடாதீர்.

அன்புடன்,
இராம.கி.

7 comments:

Anonymous said...

நல்ல பதிவு இராமகி. கணக்கிலையும் நீங்கள் புலிபோல இருக்கே.. அதையும் சொல்லித்தரக்கூடாதா? :-(

நண்பர் இராமகி நீங்கள் எழுதிய தமிழர் அறிந்த வானவியல் ஆக்கத்தை எங்குபோய்ப் பார்க்கலாம்?

நண்பர் தாங்கள் 20 - 25 வயதுக்குட்பட்ட பெண்களை அரிவை என்கிறீர்.. அதை அ'றி'வை என்றுதான் யாம் கற்ற ஞாபகம் உள்ளது... அரிவை என்பதில் இருந்து அறிவை வந்ததா? எது சரியான பதம்?

நன்றி நண்பரே.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்ல, பயனுள்ள சொல்லாராய்ச்சி இராம.கி ஐயா!
நிமித்தகம் என்பதற்கு உண்டான தமிழ் மூலத்தை மிகச் சுவையாக விளக்கி உள்ளீர்கள்!

அதுவும் differential equation உடன் தொடர்புறுத்தி விளக்கியது அருமை!
கணிதச் சுவை எனக்கும் மிகவும் பிடிக்கும்!

மனமார்ந்த பாராட்டுதல்கள்!

Machi said...

ஐயா பதிவுக்கு பாராட்டுகள். உங்கள் எல்லா பதிவும் புதிய செய்திகளை எனக்கு தருகிறது.

"வள்ளுவன் வாக்கு தப்பாது" என்பது சொல்வழக்கு இங்கு வரும் வள்ளுவன் என்பது திருக்குறளை இயற்றிய ஐயன் வள்ளுவன் கிடையாது
//இந்த அறிவர்கள் / கணியர்கள் / வள்ளுவர்களின் மெய்யியலாக// நீங்கள் கூறியது போல் சோதிட/ வானியல் வல்லுனர்கள் ஆன வள்ளுவனையே குறிக்கும் என்று கருதுகிறேன்.

இராம.கி said...

அன்பிற்குரிய மேரு நாட்டான்,

ஒவ்வொரு முறையும் வெவ்வேறு புனைப்பெயரில் வருகிறீர்கள் :-)

உங்கள் கனிவிற்கு நன்றி. கணக்கில் ஆர்வம் கூட உண்டுதான்.

வானவியல் பற்றிய என் கட்டுரைத்தொடர் (காலங்கள்) இந்த வலைப்பதிவில் தொடக்க் காலத்தில் உண்டு. தகுதரக் (TSCII) குறியேற்றத்தில் இருக்கும்.

அரிவை என்பது தான் சரியான பலுக்கு (spelling); ஏதேனும் அகரமுதலியைப் பாருங்கள்.

அன்பிற்குரிய நவிசங்கர்,

தங்கள் பாராட்டிற்கு நன்றி.

அன்பிற்குரிய குறும்பன்,

பாராட்டிற்கு நன்றி.

வள்ளுவன் பற்றிய செய்திகளை நாஞ்சில் நாட்டாரும், குமரி மாவட்டத்தாரும் பேச வேண்டும். வள்ளுவன் பற்றிய என் கருத்தைப் பின்னொருநாள் சொல்லுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

//அன்பிற்குரிய மேரு நாட்டான்,

ஒவ்வொரு முறையும் வெவ்வேறு புனைப்பெயரில் வருகிறீர்கள் :-)// என்ன செய்வது எனக்கு இயற்கையிலே பல பெயர்கள் உண்டாகிற்று :( ('ஆடு' 'ஆ' ஆகி, 'ஆ'வும் 'அ' ஆன மாதிரி) அதனால் இணையத்திலும் பலபெயர்களில் நாட்டம் வந்துவிட்டது. என்றாலும் பெயரில்லாமல் பின்னூட்டுபவர்களை 'அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு' என்று நீங்கள் அழைப்பது அறிவுமிக்க நகைச்சுவை. :D பலமுறை வாசித்துச் சிரித்துள்ளேன். (நல்ல வகையில்தான் நண்பரே).

//வள்ளுவன் பற்றிய செய்திகளை நாஞ்சில் நாட்டாரும், குமரி மாவட்டத்தாரும் பேச வேண்டும்.// வள்ளுவர் சென்னையைச் சேர்ந்தவரா இல்லை மதுரைக்காரரா அல்லது குமரியக்காரரா? வள்ளுவன் என்ற பெயர் ஒரு குடியைக் குறித்த சொல்லா இல்லை ஒருத்தரைக் குறித்த பெயரா?

குமரி மாவட்டம் முழுதும் நாஞ்சில் நாடா .. இல்லை ஒருபகுதி மட்டும்தான் நாஞ்சில் நாடா? நன்றி நண்பரே

Anonymous said...

//அன்பிற்குரிய மேரு நாட்டான்,

ஒவ்வொரு முறையும் வெவ்வேறு புனைப்பெயரில் வருகிறீர்கள் :-)// என்ன செய்வது எனக்கு இயற்கையிலே பல பெயர்கள் உண்டாகிற்று :( ('ஆடு' 'ஆ' ஆகி, 'ஆ'வும் 'அ' ஆன மாதிரி) அதனால் இணையத்திலும் பலபெயர்களில் நாட்டம் வந்துவிட்டது. என்றாலும் பெயரில்லாமல் பின்னூட்டுபவர்களை 'அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு' என்று நீங்கள் அழைப்பது அறிவுமிக்க நகைச்சுவை. :D பலமுறை வாசித்துச் சிரித்துள்ளேன். (நல்ல வகையில்தான் நண்பரே).

//வள்ளுவன் பற்றிய செய்திகளை நாஞ்சில் நாட்டாரும், குமரி மாவட்டத்தாரும் பேச வேண்டும்.// வள்ளுவர் சென்னையைச் சேர்ந்தவரா இல்லை மதுரைக்காரரா அல்லது குமரியக்காரரா? வள்ளுவன் என்ற பெயர் ஒரு குடியைக் குறித்த சொல்லா இல்லை ஒருத்தரைக் குறித்த பெயரா?

குமரி மாவட்டம் முழுதும் நாஞ்சில் நாடா .. இல்லை ஒருபகுதி மட்டும்தான் நாஞ்சில் நாடா? நன்றி நண்பரே

Anonymous said...

அறிவை என்றால், பெண்கள் அந்த வயதில் அறிவுபூர்வமாக நடப்பதைக் குறிக்கும் என்று நான் எண்ணினேன்.. இப்ப அரிவை என்கிறீர்கள் (ஒருவகையில் சந்தோசம்தான் hநாந) ஆனால் அரிவை என்றால் என்ன பொருள் தரும் இராமகி? நன்றி