Monday, November 27, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 5

(பேச்சுநடையில் எழுதினால் புரியாது போய்விடுகிறது என்று சிலர் கூறியதால் இங்கு நடையை மாற்றிக் கொள்ளுகிறேன்.)

தொல்காப்பியம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த நாம் இடையில் கல்வெட்டு எழுத்துக்கள் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. என்னை மன்னியுங்கள், ஏனென்றால் குறியேற்றங்கள் பற்றி ஆர்வம் கொண்டவர்கள், அதுவும் ஒருங்குறி, ஒருங்குறி என்று தொங்கிக் கொண்டிருக்கிறவர்களில் பலர், ஒரு தவறான தேற்றத்தைப் (theory) பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். "அகரமேறிய மெய்யில் பல்வேறு குறியீடுகளைச் சேர்த்துத் தான் தமிழ் உயிர்மெய் எழுத்துக்கள் எழுந்தன" என்றும், "இந்தக் குறியீடுகள் எல்லாம் vowel maathra" என்றும் ஒரு புதுத் தேற்றைக் கொண்டு வந்து ஒருங்குறிக்கு ஓர் அடிவாரம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். (அடிவாரம் என்ற தமிழ்ச்சொல் தான் அட்டிவாரம் என்று நமக்குச் சற்று வடபுலத்தில் ஆகிப் பின் இன்னும் வடக்கே போய், கங்கைச் சமவெளியில் டகரம் மெலிந்து தகரம் ஆகி, முடிவில் அஸ்திவாரமும் ஆயிற்று. தமிழ் மூலம் தொலைத்த சொற்களில் இதுவும் ஒன்று. காலப் போக்கில் எப்படி எல்லாம் தமிழர்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லி மாளாது.)

தமிழ்க் குறியேற்றக்காரர்களுக்குக் கொஞ்சம் வரலாற்றைச் சொல்லும் முகமாக இந்தப் பகுதிக்கு வருகிறேன்.

சென்ற இருபதாம் நூற்றாண்டில், பழைய கால எழுத்து முறை, கல்வெட்டு போன்றவை அவ்வளவாகப் பலருக்கும் தெரியாது இருந்தன. இவை பற்றிய தரவுகளும் பெரிதும் பரவாமலே இருந்தன. தொல்காப்பியம் படித்து, அதற்கு விளக்கம் எல்லாம் சொன்ன, அந்த நூற்றாண்டின் முன்பாதியில் இருந்த, பெரும்பாலான தமிழறிஞர்களுக்கு அப்பொழுது தெரிந்தது எல்லாம் ஓலைச் சுவடிகளில் எழுதியிருந்ததும், ஓரளவு வட்டெழுத்தும், இன்னும் அதிகம் போனால் பேரரசுச் சோழர் (imperial chozAs) கால எழுத்துக்களும் தான். மேலும் கொஞ்சம் ஆர்வம் கொண்டவர்களுக்கு வேண்டுமானால், பல்லவர் கால எழுத்தமைப்பு தெரிந்திருக்கும். பல்லவர்களுக்கும் முந்திய தமிழ்க் கல்வெட்டுக்கள் 1930களில் இருந்தே கண்டு பிடிக்கப் பட்டிருந்தாலும், அதைப் படித்துப் புரிந்து கொண்டவர்கள் அரிது. ஆய்வு செய்தவர்கள் இன்னும் அரிது. அந்தத் தமிழறிஞர்களில் பலரும் வட்டெழுத்தே தமிழ் எழுத்தின் தொடக்கம் என்றும், தாங்கள் ஓலைகளில் படித்த முறையில் தான் தொடக்க காலத் தமிழ் எழுத்துக்கள் இருந்திருக்கும் என்றும் எண்ணினார்கள். ஆனால் கல்வெட்டு எழுத்துக்கள் பற்றிய ஆய்வு பின்னால் சென்ற முறையோ வேறு. அதுவரை இருந்த புரிதல்களை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போடும் நிலைக்கு இன்று வந்திருக்கிறோம்.

இந்த நிலைக்கு வந்த வகையில், அந்தக் காலத்திய வரலாற்றுப் பார்வை பற்றியும் நான் சொல்ல வேண்டும். இந்திய வரலாற்றையும், மற்றப் பண்பாட்டுச் செய்திகளையும் சரியாக அறிய விடாது தடுத்ததில், ஒரு மூடத் தனத்திற்குப் பெரும் பங்குண்டு. "வேதத்தை மிஞ்சியது எதுவும், எங்கும் இல்லை; சங்கதம் தான் அதன் வெளிப்பாடு" என்ற எண்ணத்தால், தங்களின் பெற்றோர்-குருமாரின் ஆழ்ந்த அழுத்தத்தால், எங்கும், எதிலும், அந்தப் பின்புலத்தையே படித்தவர்கள் (குறிப்பாகப் படித்தவர்களில் பெரும்பாலோரான பெருமானர்கள்) தேடிக் கொண்டிருந்தார்கள். இந்தப் படித்தவர்களைப் பெருமை செய்த மற்றவர்களும் அதையே நம்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்த எண்ணம் மணிப்பவள நடை பெருகிய 15ம் நூற்றாண்டுகளில் இருந்தே தென்னகத்தில் இருந்து வந்தது. மேல்நாட்டார் நம்மை ஆட்சி செய்த போதும், இந்த எண்ணம் மேல்நாட்டார் இடையே புகுத்தப் பட்டது. ஏதொன்றையும் சங்கத ஆடி (mirror) வழியே தான் படித்தவர்கள் பார்த்து வந்தார்கள். "திறந்த மனத்தோடு, எந்தவித முன்கருத்தும் இல்லாமல், தரவுகளைச் சேகரித்து, பின் அதனுள் இருக்கும் ஓரிமையை (uniformity), அந்தத் தரவுகள் கிடைத்த இடங்களின் பின்புலம் (background) வழியே, பார்ப்போம்" என்ற எண்ணமே எழாமல், குழம்பிக் கொண்டே ஒரு ஐந்நூறு ஆண்டுகள் இருந்திருக்கிறார்கள். இது, இந்திய ஆய்வாளார் ஆனாலும் சரி, வெள்ளைக்காரர் ஆனாலும் சரி, நடைமுறை பிறழாமல் இருந்திருக்கிறது.

"அதெப்படி வெள்ளைக்காரர் புரியாமல் இருந்தார்?" என்று கேட்டால், "ஒவ்வொரு வெள்ளைக்காரருக்கும் பின்னால், சங்கதப் பின்புலத்திற்கு ஆட்பட்ட இந்தியப் பண்டிதர் பலர் அருகில் இருந்தார்கள்; துபாசிகள் என்பவர்கள் இந்தப் பண்டிதர்கள் தானே?" என்ற உண்மையை மறுமொழியாகச் சொல்லவேண்டும். இதன் விளைவாக, எல்லாமே இந்தியத் துணைக்கண்டத்தில் வேத மயமாய்ச் சங்கதத்தின் வழி பார்க்கப் பட்டன; இந்தப் பார்வைக்கு, அதுநாள் வரை இட்டுக் கட்டிய கதைகளும் கூடப் பெரிதாக உதவின. இவற்றிற்கு மாறாய், அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் புறனடைப் பின்புலங்கள் (background of exceptions) அரிதாகவே அமைந்தன. இன்றைக்கும் கூட இந்தப் பின்புலக் குழப்பங்களைச் (obscurantism) சரியாக உணராத ஓர் ஆய்வாளர், இந்திய வரலாற்றில் உருப்படியான வேலைகளைச் செய்ய முடியாது. உண்மையிற் சொல்லப் போனால், எல்லாவற்றையும் சங்கதம் வழியாகவே பார்க்கும் மூடப்பார்வை என்று குறைகிறதோ, அன்று தான் இந்தியாவைப் பற்றிய வரலாற்றுத் தெளிவு ஆய்வாளர்களுக்குப் பிறக்கும். இந்தியா என்பது சங்கதத்தையும் மீறியது; பரந்தது; ஆழமானது. சங்கதம் என்பது அதற்குத் தடைக்கல்லாக ஆகிவிடக் கூடாது.

(வேடிக்கை என்னவென்றால், பண்டிதர் என்ற சொல்வளர்ச்சியிலும் கூடச் சங்கதப் பார்வையைத் தான் பெரும்பாலான படித்தோர் கொண்டு வருகிறார்கள். அந்தச் சொல்லின் தமிழ்ப் பின்புலம் என்பது கடைசி வரை இவர்களுக்குப் புரிவதில்லை.

பட்டது என்பது வாழ்ந்து அறிந்தது. பட்டு அறிந்ததை (அநுபவித்ததை) இன்றைக்குப் பட்டறிவு என்று நாம் சொன்னாலும், பட்டுவித்தல்>பட்டித்தல் என்பதைப் பட்டு உணர்வது என்றே அன்று புரிந்து கொண்டார்கள். பட்டித்தலில் இருந்தே படித்தல் என்ற வினைச்சொல் வந்திருக்க வேண்டும்; அதாவது படித்தலின் மூலம், தமிழ் மாந்தராகிய நாம், நம் முன்னோர் முன்னால் உணர்ந்த, முன்னால் அறிந்த, பழையதைத் தெரிந்து கொள்ளுகிறோம். பட்டித்தல்>பண்டித்தல்>பண்டிதர் என்ற வளர்ச்சி இயல்பானதே. பண்டை என்ற சொல்லுக்கே அறிவு என்ற ஒரு பொருளைத் தமிழ் அகரமுதலிகள் கூறும். பழையதை, நாம் பட்டுத்தானே அறிந்து கொள்ளுகிறோம்?)

எத்தனையோ குழப்ப வாதிகளுக்கு நடுவே, "தமிழ்நாட்டில் கிடைத்த பழைய பெருமிக் கல்வெட்டுக்கள் தமிழைத் தான் குறிக்கின்றன; அவற்றைப் பாகதமாகப் படிப்பது தவறு; அந்தக் கல்வெட்டுக்களுக்குள் தமிழுக்கென்ற சில விதப்பான குறியீடுகள் இருக்கின்றன" என்று முதலில் சொன்னவர் கே.வி.சுப்பிரமணிய அய்யர். அவரில்லை என்றால் அப்போது புதுத் தெளிவு ஏற்பட்டிருக்காது. (பெருமிக் கல்வெட்டுக்கள் பல்லவருக்கும் முந்தியவையாகக் கிடைத்திருக்கின்றன; அதே போலத் தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களும் கிடைத்திருக்கின்றன. இந்தியத் துணைக் கண்டத்தில் கிடைக்கும் இது போன்ற கல்வெட்டுக்களைப் பிரம்மி என்று வடமொழிப் பலுக்கலோடு சொல்லுவது தேவையில்லை. தஞ்சைப் பெருவுடையாரைப் பிரகதீசர் என்று வடமொழிப் படுத்துவது போல் பெருமி என்பது தான் பிரம்மி என்று வடமொழிப் படுத்தப் படுகிறது. கூடவே "பிரம்மன் தோற்றுவித்த எழுத்து" என்று சொல்லும் பெருமானக் கட்டுக் கதைகளை எல்லாம் நாம் நம்ப வேண்டியதில்லை. இதே போல "ஆடல் அரசனான இறைவன் தமருகம் உருட்டினான், 51 எழுத்துக்கள் பிறந்தன; அவற்றில் 33 யைத் தமிழர்கள் வைத்துக் கொண்டார்கள்" என்பது போன்ற தமிழ்நாட்டு வேதச் சிவநெறியில் ஆழப் பதிந்திருக்கிற கதைகளையும் நாம் ஒதுக்கிவிடலாம். அவையெல்லாம் சமய நெறிகளால் கொள்ளும் நம்பிக்கைகள். இது போன்ற சங்கத உயர்ச்சிக் கதைகள் நாம் செய்யும் ஆய்வை முன்னே செல்லவிடாமல் தடுக்கும் வலிமை கொண்டவை. இதற்கு மாறாக, "பெருமி என்பது பெரிதாகி வந்தது, முந்தியது" என்ற பொதுமைப் பொருளைப் புரிந்து கொண்டால் போதும். அதாவது "எழுத்து பெருமி; மொழி பெருகதம் அல்லது பாகதம்" என்று புரிதல் நமக்குப் போதும்.)

பெருமியையை முதலில் எழுந்த வரியெழுத்தாகக் கொண்டு, தமிழ்நாட்டுக் கல்வெட்டில் இருந்த பழைய எழுத்துக்களையும் தமிழ்பிரம்மி என்று சொன்னவர்கள் பலர் உண்டு. "அசோகன் பிரம்மி தான் தொடக்கம், அது செமிட்டிக் எழுத்துக்களை மாதிரியாய்க் கொண்டு உருவாக்கப் பட்டது. அசோகன் பிரம்மியில் இருந்து தான் தமிழ்பிரம்மி வந்தது" என்று அவர்கள் சொல்வார்கள். கே.வி.சுப்பிரமணியருக்கு அடுத்து, "பெருமி எழுத்தும் தமிழ் எழுத்தும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு உடையவை" என்றும், "பெருமி என்று சொல்லப் பட்டுவந்த எழுத்து, தமிழ் போன்ற மொழிக்கு என முதலில் எழுந்து, பின்னால் வடபுலத்தில் அசோகர் போன்ற பேரரசர்களால் பரவியிருக்கலாம்" என்றும், எழுத்துப் பிறப்பு வரலாற்றையே தலை கீழாகப் புரட்டிப் போட்டவர் திரு. தி.நா.சுப்பிரமணியன். இவர் நம்மூர் கல்வெட்டியலின் ஒரு முன்னோடி. இதே போன்ற கருத்தை இலங்கையில் பெற்ற அகழாய்வுச் செய்திகளும் உறுதிப் படுத்துகின்றன. அசோகருக்கும் முன்னால் கி.மு. 500/600 ஆண்டுகளைச் சேர்ந்த பெருமிக் கல்வெட்டுக்கள் அங்கு கிடைத்துள்ளன. தமிழ்நாட்டிலும் இதே அளவு காலப் பழமை கொண்டு எழுத்துப் பொறிப்புகள் கொடுமணலும், ஆதிச்ச நல்லூரிலும் அண்மையில் கிடைத்துள்ளன. இந்திய எழுத்து என்பது தெற்கே பிறந்து வடக்கே போயிருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லும் வகையில் இன்று தரவுகள் கிடைத்திருக்கின்றன.

இந்தக் காலத்தில் தமிழ் பிராம்மி என்று சொல்லுவதைக் காட்டிலும், மாறாகத் தமிழி என்றே பலரும் பழந்தமிழ் எழுத்துக்களைச் சொல்லிவருகிறார்கள். (இந்தச் சொல் ஒரு மீட்டுருவாக்கம் தான். 'லலித விஸ்தாரம்' என்ற புத்த நூலிலும், 'பன்னவனசுதா' என்ற சமண நூலிலும் "திராவிடி" என்ற தனித்த எழுத்து முறை சொல்லப் படுகிறது. எப்படித் தமிழ என்பது தமிள, தமிட, திராமிட, திராவிட என்று திரிந்ததுவோ, அதே செயலாக்கத்தின் படி தமிழி என்பதுதான் திராவிடி என்று ஆயிருக்க முடியும் என்று உய்த்து உணருகிறோம்.)

தமிழி எழுத்துக் கீற்றுப் படிப்பில் தி.நா.சு.விற்கு அப்புறம் பெரும் பங்கு ஆற்றியவர் திரு. ஐராவதம் மகாதேவன். (அவருடைய அண்மைக்காலப் பொத்தகமான "Early Tamil Epigraphy: from the earliest times to the sixth century A.D" என்பது கட்டாயமாகப் படிக்க வெண்டிய நூல்.) இவர்களுக்குப் பின்னால், இரா.நாகசாமி, நடன.காசிநாதன், கிவ்ட் சிரோமணி, கே.வி.ரமேஷ், கே.வி.ராமன், சு.இராஜவேல், கா, ராஜன் எனப் பலரும் கல்வெட்டியலுக்குப் பங்காற்றியிருக்கிறார்கள். இவர்களுடைய பலவாறான பங்குகளை விவரித்துக் கொண்டு போகாமல், முகன்மையான செய்திகளை மட்டும் இங்கு கூறுகிறேன்.

திரு. தி.நா.சுப்பிரமணியனுக்கு அப்புறம், அவருக்கு ஆதரவாய் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் புள்ளியியல் பேராசிரியர் கிவ்ட் சிரோமணி "தமிழி எழுத்து பெருமிக்கு முந்தியதாக இருக்க வாய்ப்புக்கள் உண்டு" என்று தன்னுடைய முன்னீட்டைச் சொல்லியிருக்கிறார். தவிரப் புள்ளி என்ற குறியீடு பிற்காலக் கல்வெட்டுக்களில் வந்ததையும், அதைக் கணக்கில் கொள்ளாமல் இருந்தது தவறு என்றும் உணர்த்தியவர் கிவ்ட் சிரோமணி. முன்னாள் தமிழக அகழாய்வுத் துறை நெறியாளர் நாகசாமி "தமிழி எழுத்து பெருமிக்கு முந்தியதாக இருக்கலாம்" என்பதை ஒப்பவில்லை. பெருமியே முந்தியது என்பார். திரு. ஐராவதம் மகாதேவனும் பெருமியே முந்தியது என்பார். ஆனால், நாகசாமிக்கு அடுத்து வந்த தமிழக அகழாய்வுத் துறை நெறியாளார் நடன.காசிநாதன் "தமிழி பெருமிக்கு முந்தியதாகலாம்" என்ற கருத்து உடையவர்.

இதே கருத்தை கே.வி.ரமேஷ், கே.வி.ராமன், சு.இராஜவேல், கா, ராஜன் ஆகியோரும், அதே போல "சிங்களத்தில்/ஈழத்தில் கிடைக்கும் பெருகதக் கல்வெட்டுக்கள் அசோகன் பெருமிக்கும் முந்தியவை" என்று பரமு. புஸ்பரட்ணம் போன்ற அறிஞர்களும் கருதுகிறார்கள்.

ஆனாலும் தமிழை அப்படி எழுத்தில் உயர்வு காணுவதை மாற்றுக் கருத்து ஆய்வாளர்கள் ஒப்ப மாட்டார்கள். அதன் விளைவாக, இனி அடுத்த தடத்திற்கு வாதம் போகும். "இலங்கையில் இருக்கும் பெருகதப் பொறிப்புக்கள், ஆதிச்சநல்லூருக்கும் முந்தியவை, எனவே அவை பாடலியில் இருந்து நேரடியாகப் பெற்றவை" என்று வாதம் வைப்பார்கள். மறுபடியும் வாதம் தொடரும். இந்தச் சுற்று நமக்கு வாய்த்ததாய் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். வத்தல குண்டுவுக்கு அருகில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்களைக் கண்டுபிடித்த செய்தி வந்தவுடம் மீண்டும் ஓயாத வாதம் தொடங்கிவிட்டது. இரண்டு சாராரின் வாதங்களும் அறிவின் பாற்பட்டதாய் இருக்கும் வரை சரி என்று விட்டுவிடலாம்; கொஞ்சம் உணர்வு கலந்த வாதங்களும் அடியூன்றுகளும் கூடிவரும் போது தடுமாறிப் போகிறோம்.

கிடைத்துள்ள தமிழிப் பொறிப்புகளில் ஐந்து வகைத் தமிழியை இதுவரை இனங் கண்டிருக்கிறார்கள்.
ஐந்துவிதமான எழுத்து முறைகள் பின் வருமாறு: (இங்கே படத்தைப் போட முடியாமல் இருக்கிறது. அடுத்த பதிவில் முயலுவேன்.)

1. முதல் முறை என்பது உயிர்மெய்களுக்கு இடையில் ஒரு சில இடங்களில் உயிரையும் மெய்யையும் தனித்து எழுதிக் காட்டிய முறை. இப்படி இருக்கும் கல்வெட்டுக்களில் ஒரே எழுத்து மெய்யாகவும், உயிர்மெய் அகரம், உயிர்மெய் ஆகாரமாகவும் தோற்றமளிக்கலாம். இடம்பார்த்து அவற்றில் மெய் எது என்று கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. இந்த முறையில் மெய், உயிர்மெய் அகரம், உயிர்மெய் ஆகாரம் ஆகியவற்றின் இடையே வேற்றுமை காண்பது சரவலாய் இருக்கிறது.

2. இரண்டாவது முறையில் மெய்யெழுத்து புள்ளியில்லாமல் இருக்கும். அடுத்து, மெய்யெழுத்தின் மேல் ஒட்டினாற் போல் ஒரு சிறு கோடு கொண்டு உயிர்மெய் அகரத்தையும், ஆகாரத்தையும், ஒரே தோற்றம் கொண்டு இருப்பதாய்க் காட்டுவார்கள். இந்த முறையில் "கல்" என்பதற்கும் "கால்" என்பதற்கும் வேற்றுமை காணமுடியாது. அதாவது ககரத்திற்கும், காகாரத்திற்கும் வேறுபாடு தெரியாது; அவற்றை இடம் பார்த்துப் பொருள் புரிந்து கொள்ள வேண்டும்.

3. பட்டிப்போரலு முறை.
இந்த முறையிலும் மெய்யெழுத்து புள்ளியில்லாமல் இருக்கும். அடுத்து, மெய்யெழுத்தின் மேல் ஒட்டினாற் போல் ஒரு சிறு கோடு கொண்டு உயிர்மெய் அகரத்தைக் குறிப்பார்கள்; உயிர்மெய் ஆகாரத்தில், மேலே சொன்ன சிறுகோடு, செங்குத்தாக கீழ்நோக்கி வளைந்து, இன்னொரு சிறுகோட்டையும் ஒட்டிக் காட்டும். இந்த முறையில் மெய்யெழுத்து, அகரமேறிய மெய், ஆகாரம் ஏறிய மெய் ஆகிய மூன்றிற்கும் உரிய வேறுபாடு இருக்கும். கல்வெட்டில் ஒரு குழப்பம் இருக்காது; ஆனாலும் இந்த முறை ஏனோ பரவாமல் போய்விட்டது. அதைப் பற்றிப் பின்னால் பார்ப்போம்.

4. பெருமி /தமிழி முறை:
இந்த முறையில் மெய்யெழுத்திற்கும், அகரமேறிய மெய்க்கும் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியாகக் காட்டிக் கொண்டிருக்கும். மெய்யெழுத்தின் மேல் ஒட்டினாற் போல் ஒரு சிறு கோடு கொண்டு தோற்றம் காட்டுவது உயிர்மெய் ஆகாரத்திற்கு மட்டுமே அமையும். தமிழ் போன்ற மொழியில் இப்படி மெய்யெழுத்துக்கும், அகரமேறிய மெய்க்கும் ஒரே எழுத்து அமைந்தது அவ்வளவாகக் குழப்பம் தராது, ஏனென்றால் மெய்ம்மயக்கம் என்ற ஒழுங்கு இந்த மொழியில் இருந்தது. மாணிக்கம் என்ற சொல்லில் வரும் க் என்னும் மெய்யெழுத்துக்குப் புள்ளி இல்லாமல் இருக்கிறதென்று வையுங்கள். இருந்தாலும் படித்துவிடுவோம். ஏன்? க்க என்ற கூட்டில் முதலில் வருவது மெய் என்றும் அடுத்து வருவது அகரமேறிய மெய் என்றும் நமக்குப் புரிந்துவிடும். இனித் தஙகம் என்ற சொல்லில் வரும் ககரம் அகரமேறிய ககர என்றும், அதற்கு முன்னால் வருவது ஙகர மெய் என்றும் புரியும். இதே முறையில் க்க, ங்க, ட்க, ண்க, ம்க, ய்க, ர்க, ல்க, ழ்க, ள்க, ற்க, ன்க என்ற மெய்க்கூட்டுக்களில் பின்னால் வருவது உயிர்மெய் தான், மெய்யல்ல என்பது புரிந்துவிடும்.

இனிச் சக என்று தோற்றம் காட்டுவதில், தமிழ்மொழி என்ற காரணத்தால், அதை ச்க என்று படித்துவிட முடியாது. சக் என்பது சரியா என்றால் அடுத்து மூன்றாவதாய் வரும் உயிர்மெய் க என இருந்தால் சரி, வேறு உயிர்மெய்யாக இருந்தால் சரியல்ல. இதே போல, மூன்றாம் எழுத்து க என இருந்தால், கக், சக், டக், ணக், தக், நக், பக், மக், யக், ரக், லக், வக், ழக், ளக், றக், னக் என்ற எழுத்துக் கூட்டுக்கள் சரியாகும். மொத்தத்தில் தமிழ்ச்சொற்கள் மட்டுமே பயிலும் போது, வடபுலத்துக் கடன்சொற்கள் புழங்காத போது, மெய்யெழுத்தும் அகரமேறிய மெய்யெழுத்தும் ஒரே போல் தோற்றம் அளித்தாலும், அவ்வளவு சரவல் தமிழுக்குத் தராது. ஆனால் கடன் சொற்கள், குறிப்பாகப் பெருகதச் சொற்கள், கூடிவரும் போது, தமிழ் வரிகளைப் படிப்பது கடினமாகிக் கொண்டே வந்தது.

5. தொல்காப்பிய எழுத்துமுறை
இந்த நிலையில் தான் ஐந்தாவது முறை வந்தது. இந்த முறை வந்த போது பெருகதச் சொற்கள் தமிழுக்குள் வந்து கொண்டிருந்திருக்க வேண்டும். இது போன்ற குழப்பத்தைத் தவிர்க்க, இந்த ஐந்தாவது முறையில் மெய்யெழுத்தைக் குறிக்கப் புள்ளியிட்டார்கள்; புள்ளியில்லாத, வேறு குறியீடுகள் தொட்டிருக்காத எழுத்து அகரமேறிய மெய் என்று ஆயிற்று, அதே போல, மேலே சிறு கோடு கொண்ட எழுத்து ஆகாரம் ஏறிய மெய்யாகக் கொள்ளப் பட்டது. இந்த ஐந்தாவது முறையைத் தமிழ்ப் புலவோர் அறிமுகப் படுத்தினார்கள். அதைத் தொல்காப்பியர் ஆவணப் படுத்தினார்.

ஐந்து முறைகளும் ஒன்றின் பின்னால் ஒன்று எழுந்தவை அல்ல. அவற்றில் ஒரு சில சம காலத்தில் ஒன்றோடு ஒன்று இழைந்து இருந்தன. முடிவில் கொஞ்சம் கொஞ்சமாய் மற்றவை குறைந்து சங்க கால இறுதியில் தான் ஐந்தாம் முறை மட்டும் நிலைத்தது. இதில் முதல்வகை கி.மு. 1000 யை ஓட்டியது என்றும், இரண்டாவது வகை அதற்கு ஓரிரு நூற்றாண்டுகள் கழிந்தது என்றும். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது வகைகள் கி.மு.500, 600 களைச் சேர்ந்தது என்றும், கடைசி மூன்றும் தொல்லியல் (archeology) ஆய்வுகளின் படி பார்த்தால் சம காலத்திலேயே இருந்திருக்கலாம் என்றும், தமிழை முன்வைத்துப் பேசும் ஆய்வாளர்கள் (இராசவேலு, நடன.காசிநாதன், இராசன் போன்றோர்) சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில் தொல்காப்பிய காலம் (கி.மு.700-500) என்பது மூன்றாம் வகைத் தமிழியின் காலத்தோடு ஒத்து வருகிறது.

அன்புடன்,
இராம.கி.

No comments: