Wednesday, November 29, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 6


முன்னால் சொன்ன வெவ்வேறு எழுத்து முறைகளுக்கு அணைவாக ஒரு படத்தை மேலே கொடுத்திருக்கிறேன். படத்தில் உள்ள வரிசைப்படி இனிக் கீழே பார்ப்போம்.

1. முதலாம் எழுத்து முறை:

இந்த எழுத்து முறைக்குக் காட்டாக, தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்து மாங்குளம் கல்வெட்டைச் சொல்ல முடியும். (காண்க பக்கம் 314, Early Tamil Epigraphy: From the earliest times to the sixth century A.D., Iravatham Mahadevan, published by Crea-A, Chennai, India and The Department of Sanskrit and Indian Studies, Harward University, USA) கல்வெட்டை அப்படியே பெயர்த்து இங்கு எழுதாமல், அதில் பழகியிருக்கும் முறைப்படி "சாத்தன்" என்ற சொல்லைக் குறித்துக் காட்டியிருக்கிறேன்.

இந்த எழுத்து முறையில் "சாத்தன்" என்ற சொல்லின் சில இடங்களில் இருக்கும் உயிர்மெய்யை உடைத்து மெய்யையும் உயிரையும் தனித்துக் காட்டியும், இன்னும் சில இடங்களில், நெடில் உயிர்மெய்யை உடைத்து அதற்குப் பகரமாக (substitute) குறில் உயிர்மெய்யும், அடுத்து ஓர் உயிரும் வருமாறு காட்டியும் "ச அ த் த் அ ன்" என்று எழுதியிருக்கிறது. பொதுவாக இந்த முறையில் ச், ச, சா, போன்றவற்றிற்கு இடையே ஓர் ஒழுங்கு இன்றிருப்பது போல் அல்லாமல், ஒரு குழப்ப நிலையே இருந்திருக்கிறது. காட்டாக, இங்கே சாத்தன் என்று எழுதியதில் முதல் எழுத்தாகச் ச என்ற குறில் உயிர்மெய்யும், அடுத்து ஓர் அகரமும் வருவதைப் பார்க்கலாம்; இரண்டையும் கூட்டி சா என்று படிக்க வேண்டும். இதே போல, நாலாவது எழுத்தான த் என்பதையும், ஐந்தாவது வரும் அகரத்தையும் கூட்டி, த என்ற உயிர்மெய்க் குறிலாகப் படிக்க வேண்டும். இன்னுஞ் சில இடங்களில் மேலே சிறு கோடு கொண்ட எழுத்து மெய்யெழுத்தைக் குறிப்பதாகவும் வரலாம். இது போன்ற குழறுபடிகள் கல்வெட்டை எழுதிய சிற்பியின் குறைந்த எழுத்தறிவு காரணமாகவும் ஏற்படலாம். இருந்தாலும், எழுத்து முறையில் தட்டுத் தடுமாறிக் (trial and error) குழப்பங்கள் இருந்து, பின்னால் எங்கும் ஓரிமை (uniformity) ஏற்பட்டுத் தீர்வுகள் கண்டு, சரி செய்யப்பட்டன என்று அறியவேண்டும். ஓர் இயல்மொழிக்கு எழுத்துருவ வளர்ப்பு என்பது இப்படித்தான் அமையும். தமிழ் எழுத்துமுறையைக் கடனாக வாங்கியிருக்க வாய்ப்புக்கள் குறைவு என்றும் இந்த வளர்ப்பைப் பார்த்துச் சொல்லுகிறோம்.

2. இரண்டாம் எழுத்து முறை:

இந்த இரண்டாம் எழுத்து முறைக்கான காட்டாக, இரும்பொறைச் சேரர் காலத்துப் புகழூர்க் கல்வெட்டைச் சொல்ல முடியும். (காண்க பக்கம் 405, Early Tamil Epigraphy: From the earliest times to the sixth century A.D., Iravatham Mahadevan, published by Crea-A, Chennai, India and The Department of Sanskrit and Indian Studies, Harward University, USA) இங்கும் கல்வெட்டை அப்படியே பெயர்த்து எழுதாமல், அதில் பழகியிருக்கும் முறைப்படி சாத்தன் என்ற சொல்லைக் குறித்துக் காட்டியிருக்கிறேன்.

இந்த எழுத்து முறையில் மேலே படத்தில் உள்ளதை "சா த் த ன்" என்றே நான்கு எழுத்தாகப் படிக்க வேண்டும். மூன்றாவதாக வரும் புள்ளியில்லாத அடிப்படைத் தகர வடிவு இங்கே மெய்யெழுத்தையே குறிக்கிறது. சா என்பதற்கும், த என்பதற்கும் ஒன்றே போல ஒரு சிறுகோட்டை மேலே போட்டிருப்பதையும் கவனியுங்கள். அந்தக் கோடு ஓரிடத்தில் ஆகாரத்தையும், இன்னொரு இடத்தில் அகரத்தையும் உணர்த்துகிறது.

மேலே காட்டிய முதல் இரு எழுத்து முறைகளிலும் அகர உயிர்மெய்க்கும், ஆகார உயிர்மெய்க்கும், மேலே ஒரு சிறுகோட்டைக் காட்டும் ஒரே உருவம் அமைந்து இருக்கலாம்; இப்படி ஒரே உருவம் அமைவதால், கல், கால் போன்று பொருள் தரும் வகையில் உள்ள தமிழ்ச் சொற்களைப் படிப்பதில் குழப்பம் ஏற்படும். இந்தக் குழப்பத்தைத் தீர்க்கும் முகமாகத் தமிழ் எழுத்துமுறையில் சில மாற்றங்கள் எழுந்தன. அவற்றைக் கீழே பார்ப்போம்.

அதே பொழுது, காலத்தால் முந்திய இந்த இரு எழுத்து முறைகளின் மூலம், முகன்மையாக உணரவேண்டிய ஓர் உண்மையும் இருக்கிறது. அதாவது, தொடக்கத்தில் பல தமிழ்க் கல்வெட்டுக்களில் புள்ளியில்லாமலே தான் மெய்யெழுத்தை ஓர் அடிப்படை உருவத்தின் வழியாகக் குறிக்கும் வழக்கம் நெடுக இருந்திருக்கிறது. (புள்ளி என்பது இந்த எழுத்து முறைக்களுக்குப் பின் ஓரிரு நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.) அந்த அடிப்படை வடிவின் மேலும், கீழும், பக்கவாட்டிலுமாய் ஒன்று அல்லது இரண்டு சிறு கோடுகளை இழுத்து உயிர்மெய் எழுத்துக்களைக் காட்டியிருக்கிறார்கள்.

"மெய்யெழுத்தில் இருந்து தான் உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகி இருக்கின்றனவே ஒழிய, அகர உயிர்மெய்களில் இருந்து அல்ல" என்ற அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ளா விட்டால், இந்த முதலிரு முறைகளின் அடிப்படையையும், பின்னால் எழுந்த மாற்றங்களையும், தீர்வுகளையும் சரியானபடி புரிந்து கொள்ள முடியாது; பெருமிக்கும் தமிழிக்கும் உள்ள வேறுபாட்டையும் கூடச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாது.

3. மூன்றாம் எழுத்து முறை:

இந்த மூன்றாம் எழுத்து முறைக்கான காட்டாக, அதியமான் நெடுமான் அஞ்சி காலத்து ஜம்பைக் கல்வெட்டைச் சொல்ல முடியும். (காண்க பக்கம் 398, Early Tamil Epigraphy: From the earliest times to the sixth century A.D., Iravatham Mahadevan, published by Crea-A, Chennai, India and The Department of Sanskrit and Indian Studies, Harward University, USA) இதிலுமே கல்வெட்டை அப்படியே பெயர்த்து எழுதாமல், அதில் பழகியிருக்கும் முறைப்படி சாத்தன் என்ற சொல்லைக் குறித்துக் காட்டியிருக்கிறேன்.

மேலே சிறு கோடு கொண்ட அடிப்படை உருவத்தை ஆகார உயிர்மெய்க்கு வைத்துக் கொண்டு, ஒரே அடிப்படை உருவத்தை மெய்யெழுத்திற்கும், அகர உயிர்மெய்க்குமாய் கையாண்ட பெருமி/தமிழி முறையே இந்த முறை. தமிழி முறையில் "சா த் த ன்" என்று படிக்கும் போது, இரண்டாவது, மூன்றாவது எழுத்துக்கள் ஒரே மாதிரியாக, புள்ளியில்லாத அடிப்படைத் தகர வடிவைக் காட்டுவதைக் கவனியுங்கள். முதல் தகரம் மெய்யெழுத்தையும், இரண்டாவது தகரம் அகர உயிர்மெய்யையும் குறிக்கிறது. (தமிழ் போன்ற மொழிகளில் தமிழ்ச் சொற்களுக்கு இடையே இருக்கும் மெய்ம்மயக்க ஒழுங்குகளால் இது சரியானபடி விளங்கிக் கொள்ளப் படும்.) ஆனால் பெருமியிலோ மெய்யெழுத்தே இல்லாமல் எல்லாமே உயிர்மெய்யாய்க் கொண்டு, இது "சாததன" என்று படிக்கப்படும்.

இரண்டு வேறுபட்ட பழக்கங்களைக் கொண்ட மொழிகள் ஒரே எழுத்து முறையைப் பயன்படுத்தும் போது, தனித் தனி இடங்களில் இருக்கும் வரை குழப்பம் இல்லை. என்றைக்கு இரண்டு விதமான மெய்ம்மயக்க ஒழுங்கு கொண்ட இந்த இரு மொழிகள் (தமிழும், பெருகதமும்) ஒன்றை ஒன்று ஒரே இடத்தில் ஊடுறுவத் துவங்கியதோ, அன்றைக்குத்தான் "எப்படிப் படிப்பது?" என்ற குழப்பம் விளையும். மேலும் மெய்யெழுத்திற்கும், அகர உயிர்மெய்க்கும் ஒரே வடிவம் காட்டியதால், "அகர உயிர்மெய்யே அடிப்படை; அதில் வெவ்வேறு குறியீடுகளைச் சேர்த்து மற்ற உயிர்மெய்களை உருவாக்குகிறோம்" என்று ஒரு தவறான புரிதலும் வடபுலத்தில் எழுந்திருக்கிறது. [முன்னால் சொன்ன, காலத்தால் முன்னெழுந்த, முதலிரு முறைகள் வடபுலத்தில் கையாளப் படவே இல்லை. தென்னகத்தில் மட்டுமே இருந்த அந்த முந்தைய முறைகளை அறிந்திருந்தால், "மெய்யெழுத்தோடு பல்வேறு குறியீடுகள் சேர்த்துத் தான் உயிர்மெய்கள் எழுந்தன" என்று வடபுலத்தார் அறிந்திருப்பார்கள்.]

4. நான்காம் எழுத்து முறை:

மூன்றாம் எழுத்து முறையில் ஏற்பட்ட குழப்பத்திற்குத் தீர்வாக இன்னும் மூன்று முறைகள் எழுந்திருக்கின்றன. முதல் வகைத் தீர்வு ஆந்திரத்தில் எழுந்த பட்டிப் போரலு முறை. இந்த முறையில் அடிப்படை உருவத்தையே மெய்யெழுத்தாய் வைத்துக் கொண்டு, அடிப்படை உருவத்தில் மேல் உள்ள சிறு கோடு சேர்ப்பதை அகர உயிர்மெய் என வைத்துக் கொண்டு, அடிப்படை உருவத்தின் மேல் உள்ள சிறுகோட்டை இன்னும் கொஞ்சம் நீட்டி ஒடிந்தாற் போல கீழ் நோக்கி வளைத்து இன்னொரு சிறுகோட்டை காட்டுவது ஆகார உயிர்மெய்யைக் குறிப்பதாகவும் ஆக்கி, மூன்று வகைகளுக்கும் வேறுபாடு காட்டுவது இந்த முறையின் வழக்கமாய் இருக்கிறது. (பார்க்க, மேலே உள்ள படத்தில் 4 வது வரி, குறிப்பாகச் சா என்ற எழுத்தைப் பாருங்கள். மெய், அகர உயிர்மெய், ஆகார உயிர்மெய் ஆகியவை நன்கு வேறுபடுத்தப் பட்டு சற்றும் குழப்பம் இல்லாத முறையாகப் பட்டிப் போரலு முறை இருந்திருக்கிறது; இந்த முறையானது இரண்டாவது எழுத்து முறையிலும், மூன்றாவது எழுத்து முறையிலும் இருக்கும் குழப்பங்களைப் புள்ளியில்லாமலேயே தீர்க்கிறது. [ஆனாலும் இந்த முறை வளராது போனதின் காரணம் ஏதென்று தெரியவில்லை.] ஒரு வேளை பட்டிப் போரலு முறை இந்தக் காலத்திற்கும் வளர்ந்திருக்குமானால்,

க, க| கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ

என்று தோற்றம் காட்டியிருக்கும். "மெய்யெழுத்தை அடிப்படையாக வைத்துத்தான் உயிர்மெய் எழுத்துக்களின் வடிவங்கள் எழுந்தன, அகர உயிர்மெய்யை வைத்து அல்ல" என்ற உண்மையும் நமக்கு ஆணித்தரமாகப் புரியும். அப்படிப் புரிந்த நிலையில், முட்டாள் தனமான புது இலக்கணமெல்லாம் ஒருங்குறிக்காரர்கள் கொண்டு வந்து காட்டிக் கொண்டு இருக்க மாட்டார்கள்.)

5. ஐந்தாம் எழுத்து முறை:

இந்த முறை தான் வடபுலத்து முறை என்னும் இரண்டாம் வகைத் தீர்வு. இது அசோகன் காலத்தில் ஏற்படவில்லை; எழுத்துக்கள் ஓரளவு திரிந்த பொழுது, குத்தர் (குப்தர்) காலத்தில் தான் ஏற்பட்டது; இருந்தாலும் சொல்ல வந்த எழுத்து முறை புரிய வேண்டும் என்று பழைய பெருமி எழுத்துக்களை வைத்தே இங்கு காட்டியிருக்கிறேன். மேலே உள்ள படத்தில் ஐந்தாவது வரியை நோக்குங்கள். இந்த முறையை இந்தக்கால நகரி எழுத்திலும், நம்மூர் கிரந்த எழுத்துக்களிலும் பரவலாகப் பார்க்கிறோம். எங்கெல்லாம் மெய்யும், இன்னொரு உயிர்மெய்யும் சேர்ந்து வருகின்றனவோ, அப்பொழுது ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதுவதே இந்தத் தீர்வு ஆகும்.

காட்டாக தஙக என்ற சொல்லை எழுதும் போது, ங வை எழுதி அதற்குக் கீழே க வை எழுதிக் கூட்டெழுத்தாகக் காட்ட வேண்டும். அப்படி எழுதிய கூட்டெழுத்தில் மேலே உள்ள ஙகரத்தை ங் என்னும் மெய்யெழுத்தாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதே போல மந்தி என்பதை எழுத, நகரத்தையும் தகரத்தையும் ஒன்றின் கீழ் ஒன்றாய் எழுதிப் பின்னால் இகரத்தைச் சுட்டிக் காட்டக் கீழ் நோக்கி ஒரு சிறு கோட்டைக் காட்ட வேண்டும். இதில் கூட்டெழுத்தின் மேல் உள்ள நகரம் ந் என்னும் மெய்யெழுத்து என்றும், அதன் கீழ் உள்ளது தி என்றும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த முறை சொல்லின் கடையில் வரும் மெய்யெழுத்தைத் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் வேலை செய்யும். கடையில் வரும் மெய்யெழுத்தைக் குறிக்க வேறு உத்தி பயன்படும். ஏனென்றால், வடபால் மொழிகளில் மகரமே பெரிதும் சொல்லின் கடையில் வரும் மெய்யெழுத்தாய் அமையும். அதற்கு ஒரு தனிக் குறியீட்டைப் போட்டு நிலையைச் சரி செய்து கொள்ளுவார்கள்.

6. ஆறாம் எழுத்து முறை:

இந்த எழுத்து முறைதான் தொல்காப்பியத்தில் சுட்டிக் காட்டிய முறை; அதாவது மூன்றாம் எழுத்து முறையில் இருந்த சிக்கலுக்கு மூன்றாம் வகைத் தீர்வு. மேலே உள்ள படத்தில் ஆறாவது வரியைப் படியுங்கள். இதில் அடிப்படை உருவத்தின் மேல் சிறு கோடு போடுவதை ஆகார உயிர்மெய்யாய் வைத்துக் கொண்டு, அடிப்படை உருவத்தை அகர உயிர்மெய்யாய் வைத்துக் கொண்டு, அடிப்படை உருவத்தின் மேல் புள்ளியிடுவதை மெய்யெழுத்தாய் வைத்துக் கொண்டு, தீர்வு காண்பார்கள். (இப்படித் தீர்வு கண்டதாலேயே உயிர்மெய் எழுத்துக்கள் மெய்யெழுத்தின் திரிவாகப் பிறந்தன என்ற அடிப்படை உண்மை மாறி அகர உயிர்மெய் எழுத்தில் இருந்து தான் மற்ற உயிர்மெய் எழுத்துக்கள் உருவாயின என்று பிழைபடப் புரிந்து கொள்ளக் கூடாது. [ஆங்கிலத்தில் சொல்வது போல, what has been attempted is a local solution for a local problem and one should not interpret this as a global solution of a different imagined problem ; local optimum should not be confused with a global optimum]

இந்த எழுத்து முறையானது, வழக்கமான மெய்ம்மயக்கங்கள் மட்டும் அல்லாது, பாகதச் சொற்கள் தமிழில் ஊடுறுவியதால் ஏற்பட்ட புதுவித மெய்ம்மயக்கங்களையும் குழப்பம் இல்லாது படிப்பதற்காக எழுந்த ஒரு தீர்வு. இதே தீர்வை எகர - ஏகாரங்களுக்கும், ஒகர - ஓகாரங்களுக்கும், மகர எழுத்தின் உருவத்திற்குமாய்ப் பிற்காலத்தில் பயன்படுத்தினார்கள். இந்த மூன்றாம் வகைத்தீர்வில் புள்ளியை வைத்ததாலேயே, எழுத்துக்களின் அடிப்படை மாறிவிடாது.

இவ்வளவு ஆழமாக கல்வெட்டியல் வழி அன்றைய எழுத்து வளர்ச்சியை அறிந்த பின்னால், தொல்காப்பியத்திற்குள் மீண்டும் போக வேளை வந்துவிட்டது. (ஒருசிலர் கல்வெட்டியல் உண்மைகளை உணரத் தலைப்படாமலே தொல்காப்பியத்தைக் கொண்டுவந்து பிழைபடப் புரிந்து கொள்லுகிறார்கள்.]

தொல்காப்பியர் காலம், கி.மு. 700-500க்குள் இருக்க வேண்டும் என்று தான் ஆய்வின் வழி தோன்றுகிறது. அந்தக் காலத்தில் வேதம், சமணம், புத்தம் ஆகிய சமய நெறிகள் தெற்கே பரவத் தொடங்கியிருக்க வேண்டும். நம்மூர் உலகாய்தமும், ஆசீவகமும் வடபால் போய்ச் சேர்ந்திருக்கின்றன. இந்தப் பரவல்களின் காரணமாய்க் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகதமும், (பின்னால் சங்கதமும்), தமிழும் உறவாடத் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரை எழுதுபொருள் என்பது கல்லும், உளியும் மட்டுமல்லாது, பானையும் ஆணியும், தாழை மடலும் பித்தியும், பனை ஓலையும் எழுத்தாணியும் என விரிந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

தொல்காப்பியர் தனக்கு முன்னால் ஏற்கனவே இருந்த எழுத்து முறையை அவருடைய இலக்கண நூலில் விவரிக்கவே இல்லை; எது எதில் மாற்றம் எழப் புலவோர் வழி வகுத்தாரோ, அதை மட்டுமே சொல்லுகிறார். இப்போது, 14-ஆம் நூற்பாவிலிருந்து மீண்டும் அடுத்த பகுதியில் தொடங்குவோம்.

அன்புடன்,
இராம.கி.

3 comments:

Anonymous said...

அய்யா, தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

Frequency என்ற சொல்லுக்கு நல்ல தமிழ்ச் சொல் ஏதும் உள்ளதா?

How frequently it happens? என்பதை தமிழில் எவ்வாறு கூறலாம்.

அதிர்வெண் என்ற சொல்லை அறிவியல் பாட நூல்களில் பயன்படுத்துகிறார்கள். இதைவிட நல்ல சொல் உள்ளதா?

அன்பன்,
சுரேஷ் ஜீவானந்தம்.

Anonymous said...

அய்யா, தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

...
அய்யா நான் தற்பொழுதுதான் தமிழ் மொழி பற்றி மேலும் அறியும் ஆர்வத்தில் இணைய தளத்தில் நுழைந்தேன்.எனவே தங்களிடம் சில கேள்விகள் கேட்டு தெளிவு பெற விழைகிறேன்.
ஹராப்பாவிள் உள்ள கல் வெட்டுக்கள் எல்லாம் தமிழ் எழுத்துக்களா ? அல்லது தேவநகரி எழுத்துக்களா? தேவநகரி எழுத்துக்களுக்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன ?
நன்றி வணக்கம்.
வாழ்க தமிழ் , வளர்க இவ்வையகம்.

kaniyanbalan. said...

ஐயா,பட்டிபோரலு எழுத்து,தமிழ் மொழிதானே.அதன் முழு விளக்கத்தையும் வழங்கவும்
சிலர் அதனை வேறு மொழி எழுத்து என்கின்றனர்.அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதையும் சொல்லவும்.
- கணியன்பாலன்