Saturday, May 28, 2022

நொதுமல் (neutral)

”நொதுமலுக்கு neutral எனும் பொருள் எப்படி வந்தது? மென்மை என்பதாலா? ” என்று திரு. Baskaran Ranganathan அண்மையில் கேட்டிருந்தார். நொ + துமல் என்ற கூட்டுச்சொல் இதுவாகும். இதுபற்றிய ஆய்வின்றி செ.சொ. அகரமுதலியில் நொதுமலுக்கு நொது>நொதுமல் என்று நெகிழ்ச்சிப் பொருள் வழி சொற்பிறப்பு தருவார். கூடவே ”நட்பும் பகையும் இல்லாதவரை நொதுமலர் என்பது பழந்தமிழ் வழக்கு” என்றும் கொடுப்பார். ”எப்படி இவ்விளக்கம் சொற் பிறப்போடு சரியாகும்?” என்று அகரமுதலியில் இருக்காது. இதுபோல் நிலையில் பலசொற்கள், தவறான சொற்பிறப்போடு  அகரமுதலியில் உள்ளன. அகரமுதலியில் சரிசெய்ய வேண்டிய குறைகள் பல. (குறைகளைச் சொல்வதால் என்மேல் கோவங் கொள்ளாது.) நிருவாகத்தார் அகரமுதலியை மீள்பார்வை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன். மீள்பார்வை வழியாகத் தான் அகரமுதலியின் தரத்தைக் கூட்ட முடியும். என்னிடம் உதவிகள் கேட்டால் முடிந்ததைச் செய்ய அணியமாய் உள்ளேன்.. 

நுல்>நொல்>நொள்>நொய்>நொ>நோ; 

நொ>நொகு>நொகை; 

நொள்>நொள்வு>நொவ்வு>நோவு; 

நொய்>நை, 

போன்றவை குறைவு, மெலிவு, அழிதல், அற்றல் ஆகிய பொருள்களில் எழும் சொற்களாகும்.  negative என்ற பொருளும் நொகைக்கு உண்டு. அப்பொருளில் நெடுநாள் நான் பயன்படுத்துகிறேன். நம் ”நொ”வும் இந்தையிரோப்பிய ne யும் தொடர்புடையன. அடையாளங் காணத்தான் ஆட்களில்லை. 

துல்>துள்>துள்ந்து>துண்டு, 

துள்>துள்வு,>*துவ்வு = two, do, போன்ற சொற்களும், (வகரமும் மகரமும் தமிழில் போலிகளாதலால்), 

துண்மு>தும்மு>துமு>துமி (= வெட்டு, இரண்டாக்கு) என்ற சொற்களும் தொடர்புடையன. 

துமல் = இரண்டான நிலை. (நட்பு, பகை என்ற இருமை.) = இருமை = இரண்டன்மை. 

நொ துமல் = நட்பு, பகை என்ற இருமை அற்ற (=அழிந்த, குறைந்த, மெலிந்த, தளர்ந்த) நிலை  எனவே இரண்டுமில்லா நடுநிலை. இதேபொருளில் தான் இந்தையிரோப்பியனில் neuter,neutral போன்ற சொற்கள் வரும். காட்டாக ஆங்கிலத்தில், neuter (adj.) late 14c., neutre, in grammar, of nouns, pronouns, etc., "neither masculine nor feminine in gender," also of verbs, "having middle or reflexive meaning, neither active nor passive," from Latin neuter "of the neuter gender," literally "neither one nor the other," from ne- "not, no" (from PIE root *ne- "not") + uter "either (of two)" (see whether). The Latin word is probably a loan-translation of Greek oudeteros "neitr, neuter." From 1520s it also had the sense of "taking neither side" which now generally goes with neutral (adj.).

நொதுமலின் தொடர்பாய் சங்க இலக்கியத்தில் கீழுள்ளவை வருகின்றன.  

    நொதுமல் (5)

நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை - நற் 54/7

நொதுமல் கழறும் இ அழுங்கல் ஊரே - குறு 12/6

நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே - குறு 251/7

நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின் - அகம் 39/4

நொதுமல் விருந்தினம் போல இவள் - அகம் 112/18

    நொதுமலர் (6)

உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் - நற் 11/3

அழாஅதீமோ நொதுமலர் தலையே - நற் 13/2

இது மற்று எவனோ நொதுமலர் தலையே - குறு 171/4

நொதுமலர் போல கதுமென வந்து - குறு 294/3

நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்-கால் - கலி 59/19

நொதுமலர் போல பிரியின் கதுமென - அகம் 300/11

    நொதுமலாட்டிக்கு (1)

நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே - நற் 118/11

    நொதுமலாளர் (3)

நொதுமலாளர் கொள்ளார் இவையே - ஐங் 187/1

நொதுமலாளர் அது கண்ணோடாது - அகம் 398/16

நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது - புறம் 35/31

    நொதுமலாளன் (2)

நொதுமலாளன் கதுமென தாக்கலின் - நற் 50/5

நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என் - அகம் 17/8

    நொதுமலாளனை (1)

யாரையும் அல்லை நொதுமலாளனை/அனைத்தால் கொண்க நம் இடையே நினைப்பின் - நற் 395/2,3


Saturday, May 21, 2022

Specific to Generic

பலமுறை நான் எடுத்துரைக்கும் ஓர் அடிப்படைக் கருதுகோளை (basic hypothesis) மீண்டும் இங்கே சொல்ல விழைகிறேன். [இதை நான் அறிந்தது. காரைக்குடி செல்விப் பதிப்பகம் வாயிலாக T.பக்கிரிசாமி அவர்கள் வெளியிட்ட "சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு" என்னும் அருமையான பொத்தகம். என் சிந்தனை தெளிவுற, அதுவே வழிவகுத்தது.] 

”ஆதி மனிதனிடம் பருப்பொருள், இடப்பொருட் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவால் உணரவல்ல சொற்கள், கலைச்சொற்கள், பண்புச் சொற்கள் - இவை ஆதியில் இல்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) சொற்களும் இல்லை” - என்று திரு. பக்கிரிசாமி மேலே எடுத்துரைத்த அவர் நூலிற் சொல்லுவார். இதையே, சற்று மாறிய முறையில், "எந்தக் கருத்தும் முதலில் விதப்பான பயன்பாட்டில் இருந்து, பின்னரே பொதுமைக்கு வரும்" என்று நான் வரையறுப்பேன். (அதாவது specific to generic என்பதே என் புரிதல்.) 

நெய் என்ற பயன்பாட்டை, விலங்குக் கொழுப்பில் அறிந்த பழந்தமிழ் மாந்தன், பின் எள்ளைக் கடைந்து எடுத்த நெய்க்கு, எள்நெய் (=எண்ணெய்) என்றே பெயரிடடிருக்கிறான்; பின்னால், மற்ற வித்துக்களில் இருந்தும் நெய்யெடுக்க முடிந்த போது, எள்நெய் என்பது, எண்ணெய் எனும் பொதுமைச்சொல்லாய்த் திரிந்து, எள் அல்லாதவற்றில் இருந்து கிடைத்த எண்ணெய்களையும் குறித்திருக்கிறது. 

இதே போலக் "கீழிருக்கும் நிலம்" எனும் விதப்பான இந்தியப் புவிக்கிறுவ (geography) உண்மை "கிழக்குத் திசையைப்" பொதுமையாய்க் குறிக்க வந்திருக்கிறது. அதாவது, விதப்பான இடப்பொருளைக் குறிக்கும் கீழ் என்னும் சொல், நாளடைவில் கிழக்கு திசை என்னும் பொதுப்பொருளை பழக்கத்தாலே குறிக்கிறது. (எந்த மாந்தக் கூட்டத்தாரும் தாம் வாழும் புவிக்கிறுவின் கூறுகள், சூரியன் எழும்/சேரும் நகர்ச்சிகள் ஆகியவற்றை வைத்தே, திசை பற்றிய விதப்பான குறியீடுகளைத் தம்மிடையே புரிந்து கொள்ளுகிறார்கள்.) 

இனி பூதம் என்ற சொல் பிறந்த வகை பற்றிப் பார்ப்போம். முதலில் வடமொழியாளர் (குறிப்பாக இந்தாலசி மடற்குழுவில் இருப்போர்) கருத்தோடு எனக்குள்ள முரணைச் சொல்லவேண்டும். 

அளவையியலில் உள்ளெழுச்சி, வழியெழுச்சி (induction, deduction) என்ற இரண்டு முறைகள் உண்டு. அறிவியல் என்பது 100 க்கு 99 விழுக்காடு உள்ளெழுச்சி (induction) முறையில் தான் வளருகிறது. ஆனாலும் தெரியாதவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொடுக்கும் போது வழியெழுச்சி (deduction) முறையில் தெரிவிப்பது அறிவியலில் உள்ள பழக்கம். இந்த உள்ளெழுச்சி (induction) என்பது இயற்கையாக அறிவியல் வளரும் முறை. அதே போல பெரும்பாலும் விதப்பான (specialized) சிந்தனையில் இருந்து தான், பொதுமையான (generic) சிந்தனைக்கு அறிவியலில் போக முடியும். 'முதலில் விதப்பு - பின் பொதுமை - மறுபடியும் விதப்பு - மறுபடியும் பொதுமை' என்ற சுழற்சியில் தான் மனிதனின் சிந்தனை வளருகிறது. அதேபடி தான் கருத்துக்களும் சொற்களும் எல்லா மொழிகளிலும் உருவாகின்றன. 

இதை விளக்குமாப் போலத் தமிழில் ஒரு காட்டைப் பார்ப்போம். நெய் என்பது ஏற்கனவே விலங்கில் இருந்து பெறப்பட்ட கொழுப்பில் இருந்து உருக்கப் பட்டது. நெடுநாட்கள் இந்த விலங்குக் கொழுப்பு நெய் மட்டுமே தமிழ் மாந்தனுக்குத் தெரியும். பின்னாளில் நாகரிகம் வளர்ந்த நிலையில் வேறொரு முயற்சியில், எள்ளில் இருந்தும் நெய் போன்ற ஒரு பொருள் பெறப்பட்டது. இப்பொழுது, இதுவரை விதப்பான சொல்லாக இருந்த நெய் என்பது தன்னுடைய பொருளை மேலும் விரித்துப் பொதுமையாகிறது; அப்பொழுது எள்+நெய் = எண்ணெய் என்று ஆயிற்று; எண்ணெய்யும் ஒரு வகை நெய்தானே? அடுத்த சுற்றில், இன்னும் நாகரிக வளர்ச்சியில் எண்ணெய் என்ற விதப்பான சொல்லே மேலும் பொதுமையான சொல்லாகி கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மண்ணெண்ணெய் எனப் பல எண்ணெய்கள் கிளைக்கின்றன. அடுத்த வளர்ச்சியில், மண்ணெண்ணெய் என்ற விதப்புச்சொல் மீண்டும் பொதுவாகி, இந்திய மண்ணெண்ணெய், அரேபிய மண்ணெண்ணெய் என உட்பொதிகள் (composition) மாறிய வகையில் மீண்டும் ஒரு விதப்புச் சொற் கூட்டங்களைத் தோற்றுவிக்கிறது. சொற்கள் இப்படித் தான் ஒரு மொழியில் வளருகின்றன.

இனி இன்னொரு சொல்லைப் பார்ப்போம். ஞாலம் என்ற சொல் புவியைக் குறிக்கிறது. ஞாலம் என்றால் தொங்குவது என்று பொருள். இதை வைத்துக் கொண்டு 'ஆகாயத்தில் இந்தப் பூவுலகு தொங்கிக் கொண்டே இருக்கிறது. இதை அந்தக் காலத்திலேயே எங்கள் தமிழன் உய்த்துணர்ந்து விட்டான்', என்று நம்மில் ஒரு சிலர் தவறாகப் பொருள் கொண்டு, வீணே மார் தட்டிக் கொள்ளுகிறோம். அது சரியா என்று கொஞ்சம் ஓர்ந்து பார்த்தால் தவறு புரிந்து போகும். விலங்காண்டியாய் இருந்த பின் நாகரிகம் அடைந்து, குறிஞ்சி நிலத்தில் நடமாடிக் கொண்டு இருந்த ஆதி மாந்தன் பூமிக்கு வெளியில் இருந்து பார்த்தா, பூமி தொங்குவதைத் தெரிந்து கொள்வான்? அது அந்தக் கால அறிவு நிலைக்கு முற்றிலும் முரணானது அல்லவா? அவன் கொண்ட பட்டறிவின் வழியே அவனைச் சுற்றியுள்ள சூழலில் இருந்து தானே அவன் பேசிய சொல் வர முடியும்? நாம் மாந்தனுக்கு மீறிய செயலை நம்பவில்லையென்றால், அறிவியலின் பாற்பட்டு நின்றால், உலகாய்தத்தின் படி ஒழுகினால், "பூமி தொங்குகிறது-எனவே ஞாலம் என்ற பெயரிட்டான்" என்ற விளக்கத்தை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்? (ஆனால் இப்படிக் கருத்துமுதலாக விளக்கம் தரும் தமிழறிஞர்கள் (பாவாணரையும் சேர்த்து) இருக்கத்தான் செய்கிறார்கள்.) 

சரி, உண்மையான விளக்கம் என்ன? சொல்லறிஞர் ப. அருளி சொல்லுகிறார். இந்தியத் துணைக்கண்டம் எங்கும் பெரிதும் பரவிக் கிடந்த ஒரு மரம் ஆலமரம். அது புதலியற் (botany) தோற்றத்தின் படி பார்த்தால், இந்தியாவிற்கே சொந்தமானது. ஆலுதல் என்பதன் பொருள் தொங்குதல் தான். ஆனால் இங்கே எது தொங்குகிறது? ஆலமரத்தின் சிறப்பே அதன் தொங்கும் விழுதுகள் தான், இல்லையா? நாம் ஏதொன்றுக்கும் பெயர் வைக்கும் போது அதன் தனித்துத் தெரியும் குணத்தை வைத்துத் தானே பெயர் வைக்கிறோம்? அதனால் ஆலும் விழுதுகள் நிறைந்த மரம் ஆல் என்றே கூறப்பட்டது. ஆல்>ஆலம்>யாலம் என்று இந்தச் சொல் விரியும் போது ஆலங் காடுகளைக் குறிக்கலாயிற்று. ஆலமரம் பரவிக் கிடந்த நிலம் கூடக் பின்னால் "காடு" என்று சொல்லை போலவே "யாலம்" என்று சொல்லப் படலாயிற்று. முதலில் மரம், பின்னால் காடு முடிவில் காடுகள் உள்ள நிலம் என்ற பொருள் நீட்சி இயற்கையானதே. இனி அந்த யாலம் கூட சொற்பலுக்கில் திரிகிறது. தமிழில் ய>ஞ>ந என்ற ஒலி மாற்றம் ஏகப் பட்ட சொற்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. (அருளியின் "யா" என்ற பொத்தகத்தை படித்தால் பல்வேறு சொற்களை இந்த மாற்றத்திற்குக் காட்டாகக் காணலாம்.) யாலம்>ஞாலம் = ஆலமரங்கள் நிறைந்த இடம்; அதாவது பரந்த பூமி. அந்தக் கால மாந்தனுக்கு யாலம் நிறைந்த நாவலந்தீவே ஞாலம் என்ற பரந்த புவியாய்த் தெரிந்தது ஒன்றும் வியப்பில்லை. இதற்கு மாறாக, (புவி என்னும் ஞாலம் தொங்கிக் கொண்டு இருக்கிறது என்ற) இன்றையப் புரிதலை அன்றையச் சொல்லுக்கு ஏற்றிச் சொன்னால் எப்படி? அன்றைய மனிதனுக்கு பரவிக் கிடக்கிற ஆலங் காடே ஒருவகையில் ஞாலம் தான். இப்படிச் சொல்வேர் தேடும் போது அன்றைய அறிவுக்கு எட்டிய முறையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி வேர்ப் பொருள் காணும் போது தான் நமக்கு நம் நாட்டின் தொன்மை புரிகிறது. இங்கு ஆதி மாந்தன் வாழ்ந்திருப்பதற்கான நாகரிகக் கூறுகள் ஞாலம் போன்ற சொற்கள் மூலம் வெளிப்படுகிறது. (ஏனெனில் இந்தியத் துணைக் கண்டத்திற்கே உரிய ஆலமரத்தின் கூறு இங்கே உள்ளே பொதிந்து இருக்கிறது.)

திரு தி.பக்கிரிசாமி என்பவர் "சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு" (செல்வி பதிப்பகம், காரைக்குடி) என்ற பொத்தகத்தில் ஒரு அருமையான கருத்துச் சொல்லியிருந்தார். "ஐம்புலன் சொற்களே அறிவுக்கு அடித்தளம்; ஆதி மனிதனிடம் பருப் பொருள், இடப் பொருள் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவால் உணரவல்ல சொற்கள், கலைச் சொற்கள், பண்புச் சொற்கள் - இவை ஆதியில் இல்லை. மீவியற்கைச் (Supernatural) சொற்களும் இல்லை." இதைப் பற்றி நெடு நாட்களுக்கு முன் தமிழ் இணையத்தில் ஒரு மடல் எழுதியிருந்தேன். அதன் படி இப்பொழுது என்னிடம் இல்லை.

ஐம்புலன் சொற்களுக்கு ஒரு சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம். கை என்ற சொல் கரம் என்ற பருப் பொருளை உணர்த்தி பின் அஞ்சு என்ற கருத்துப் பொருளையும் உணர்த்தியது. இங்கு விதப்பில் இருந்து பொதுமை என்று கருத்து விரிகிறது. அதே போல பல் (வாயில் உள்ள tooth) என்பதில் இருந்தே பலது (many) என்ற கருத்துப் பிறந்தது என்று புலவர் இளங்குமரன் நிறுவுவார். அதே போல கவலை என்பது மரக்கிளை பிரியும் ஒரு மரப்பகுதி. அது கவடு, கவட்டை என்றெல்லாம் பேச்சுவழக்கில் திரியும். இதுவும் ஒரு பருப் பொருள் தான். இரண்டு, மூன்று பாதைகள் பிரிகிற அல்லது கூடுகிற இடமும் கவலை என்றே அறியப் படும். மரக்கிளைப் பிரிவு, பாதைப் பிரிவுகளுக்கு எனப் பொருள் நீளுகிறது. இந்தப் பொருளே பின்னால் மனக் கவலை என்ற வருத்தப் பொருளுக்கும் (முற்றிலும் கருத்துச் சார்ந்த ஒரு உணர்வு) பயனாகத் தொடங்குகிறது. ஆகப் பருப்பொருட் சொற்களே ஒரு வளர்ச்சியில் கருத்துச் சொற்களாகச் சேவை புரிகின்றன. இதுதான் முறையும் கூட.

இன்னொரு காட்டையும் பார்ப்போம். ஒருவனைப் பார்த்து, "அவன் நல்ல பையன்" என்கிறோம். இந்த "நல்ல" என்ற சொல் எப்படிப் பிறந்திருக்கக் கூடும்? மாந்தன் பெற்ற ஒரு பருப்பொருட் பயன்பாட்டை அது நமக்குச் சொல்ல வேண்டுமே? கொஞ்சம் ஓர்ந்து பார்த்தால் விடை கிடைக்கும். எல் என்பது ஒளி. ஒருவன் மேல் ஒளி பட்டால் அவன் பொலிவாக இருக்கிறான் என்று பொருள். ஏதொன்றும் பொலிவாக இருந்தால் அது நமக்குப் பிடிக்கிறது. எல்>யெல்>ஞெல்>நெல் என்று இந்தச் சொல் திரிவு படும். நாம் விளைக்கும் நெல் மஞ்சளாக ஒளிபட நிற்கிறது. தவிர, நெல் நம்முடைய பசியை ஆற்றுகிறது. ஆக, நமக்கு உறுதுணையாக இருக்கிறது. எனவே நெல்லவன் என்பவன் நல்லவன் ஆகிறான். இங்கே இரண்டு கருத்து வந்திருக்கிறது. அடிப்படைப் பொருள் ஒளி - விதப்பானது. அதனின்றும் விளைந்த சொல் நெல்; அதனிலும் விதப்பான இன்னொரு பொருள், அதன் பயன். இப்படி மற்றவருக்குப் பயன் தரக் கூடியவன் நல்லவன் எனப்படுகிறான். தமிழில் ஏகப்பட்ட "நெல்லூர்கள்", "நல்லூர்கள்" என்றே பொதுமக்கள் பலுக்கில் சொல்லப்படும்.

இதே போல ஆதித் தமிழனுக்கு, கொன்றை தெரியும், கோங்கு தெரியும், தேக்கு தெரியும். ஆனால் மரம் என்ற பொதுப் பொருள் தானாகச் சுயம்புவாக வர முடியாது அல்லவா? அப்படியானால் மரம் என்ற பொதுமைச்சொல் முதலில் எந்த விதப்புப் பொருளைக் குறித்தது? இந்த ஆய்வின் விளைவாக (கடம்பைக் குறிக்கும்) மரா என்ற விதப்பான சொல் மரம் என்ற பொதுமைக் கருத்தை உருவாக்கியது என்று உணர்ந்தேன். கடம்பவனம் பற்றித் தமிழரின் தொன்மம் நமக்குச் சொல்லுகிறது அல்லவா? இதை இன்னொரு சமயம் விளக்குவேன்.

இப்படிச் சிந்தனையில் வரக்கூடிய பருப் பொருள்கள் எல்லாம் அந்தக் காலத்து மனிதனை உணரக் கூடியவையாக இருக்க வேண்டும். பூ என்ற வேர்ச் சொல்லில் இருந்து, பூ என்னும் விதப்புப் பொருளைக் குறிக்காது, becoming, growing என்ற பொதுமைப் பொருளை நிலை நாட்டி, அதிலிருந்து பூதம் என்ற சொல் எழாது என்று நான் சொல்லுவதற்கு உரிய காரணங்களை இனி விளக்குவேன். பூ என்ற மலர் பூக்கலாம்; அப்படிச் சொல்லுவது இயற்கையான வளர்ச்சி; ஏனென்றால், பூ என்ற பருப் பொருளை நாம் உணர முடியும். யாலம் என்பது ஞாலம் என ஆகலாம்; ஏனென்றால் யாலம் என்ற பருப்பொருளை நாம் உணர முடியும். ஆனால் பூவில் இருந்து, எந்த ஒரு விதப்பான பொருளைக் குறிக்காது, வெறுமே becoming, growing என்ற தோன்றுதல் பொருளில், பூது>பூதம் என்ற என்ற ஒரு பொதுமைக் கருத்தீட்டை (generic concept) கொண்டு வருவது மிகக் கடினம் அய்யா, மிகக் கடினம் ! 

வடமொழியாளர், கருத்துக்கள் ஒன்றில் இருந்து ஒன்றாக எப்படிக் கிளைக்கும் என்று அடுத்தடுத்து ஐம்புலன் சொற்களாகப் பார்க்காமல், இலக்கணி பாணினியின் தாக்கத்தால் 200, 300 சந்த அடி வேர்களை வைத்துக் கொண்டு, கருத்துமுதல் வாதமாக, ஒரு generic concept - யை முதலில் வைத்து பின் அதோடு பல ஒட்டுக்களைச் சேர்த்து வழியெழுச்சி (deduction) ஆகக் காட்டுவார்கள். இவர்களின் வாதத்தைப் பார்த்து நான் பல நாட்கள் பெரிதும் குழம்பிப் போயிருக்கிறேன். Can a primitive man configure first a generic concept out of nowhere without any physically meaningful specific experience? It appears to me completely non-intuitive to start with a generic concept in the primitive days. வேண்டுமானால், வெறும் வழியெழுச்சியாக (deductive), வடமொழி போன்ற ஒரு செயற்கை மொழியில், ஏன் எசுபராந்தோவில் (Esperanto) வேண்டுமானால் உருவாக்க முடியும். ஆனால் தமிழ் போன்ற இயற்கை மொழியில் அது முடியாது. இங்கு தான் இந்தாலசிக்காரர்களுடன் நான் பெரிதும் முரண்படுகிறேன். 

பருப்பொருட் சொற்களே ஒரு வளர்ச்சியில் கருத்துச் சொற்களாகச் சேவை புரிகின்றன. இதுதான் முறையும் கூட.

http://valavu.blogspot.com/2005/04/physics-1.html

http://valavu.blogspot.com/2005/04/physics-2.html

http://valavu.blogspot.com/2005/04/physics-3.html

http://valavu.blogspot.com/2005/04/physics-4.html 

Tuesday, May 17, 2022

Resume - profile - curriculum vitae - biodata

நண்பர் நாக. இளங்கோவன் 2018 மேயில் அவருடைய முகநூல் பக்கத்தில் resume, profile, curriculum vitae, biodata என்ற 4 சொற்களுக்கான தமிழிணைச் சொற்களை பரிந்துரைத்தார். என் பரிந்துரைகள் கீழே:

 resume (n.)

also résumé, 1804, "a summary," from French résumé, noun use of past participle of Middle French resumer "to sum up," from Latin resumere (see resume (v.)). Meaning "biographical summary of a person's career" is 1940s.
இது சேரிகை.
profile (n.)
1650s, "a drawing of the outline of anything," from older Italian profilo "a drawing in outline," from profilare "to draw in outline," from pro "forth" (from PIE root *per- (1) "forward") + filare "draw out, spin," from Late Latin filare "to spin, draw out a line," from filum "thread" (from PIE root *gwhi- "thread, tendon"). Meaning "a side view" is from 1660s. Meaning "biographical sketch, character study" is from 1734.
இது கோட்டிழை.
curriculum vitae (n.)
"brief account of one's life and work," 1902, from Latin curriculum vitae, literally "course of one's life" (see curriculum). Abbreviated c.v..
இது வாழ்வோட்டம்.
bio-
word-forming element, especially in scientific compounds, meaning "life, life and," or "biology, biology and," or "biological, of or pertaining to living organisms or their constituents," from Greek bios "one's life, course or way of living, lifetime" (as opposed to zoe "animal life, organic life"), from PIE root *gwei- "to live." The correct usage is that in biography, but since c. 1800 in modern science it has been extended to mean "organic life," as zoo-, the better choice, is restricted in modern use to animal, as opposed to plant, life. Both are from the same PIE root. Compare biology.
biodata
இது வாழ்தரவு..
3
  • Like

Wednesday, May 11, 2022

அளவு-தல், திறப்பி-த்தல். அளப்பி-த்தல்

 பேரா. தெய்வ சுந்தரம் நயினார், மே 8 இல் ”அளவு + சாப்பாடு -> அளவுச் சாப்பாடு ? அளவுசாப்பாடு? அளவு + திட்டம் -> அளவுத்திட்டம் ? அளவுதிட்டம்? அளவு + கோல் -> அளவுக்கோல்? அளவுகோல்? இந்த ஐயம் தொடர்பான இலக்கண விளக்கங்களை அளிப்பதில்  100 - க்குமேற்பட்ட கருத்துக்கள் பகிரப் பட்டுள்ளன. ஆனால் இறுதியான முடிவு  கிடைத்து விட்டதாகத் தெரியவில்லை. அளவுக்கோலா ? அளவுகோலா? “ என்ற வினாவைக் கேட்டிருந்தார்,

இதற்கான விடையை நாம் ”அள்ளுதலில்” தொடங்க வேண்டும். அள்(ளு)-தல் என்பது செறிதல், பொருந்தல் பொருள்களை உணர்த்தும் வினைச்சொல் ஆகும். அல்>அள-த்தல் என்பது பொருத்தல் பொருள் காட்டும் முதல் நீட்சி. இது, தானே பொருந்துவது அல்ல. மாந்தர் பொருத்துவது. அளத்தலின் பெயர்ச்சொல் வடிவம் அளக்கை. என்பதாகும் இத் தொழிற்பெயரை அளக்குதல் என்றும் சொல்லலாம். அளக்குதலின் அடுத்த திரிவு அளவுதல் என்றமையும். ஒவ்வொரு வினைச்சொல்லும்,  அதன்தொடர்பான இன்னொரு வினைச்சொல்லில் இருந்து நுண்ணிய வேறுபாடு காட்டும். பலநேரம் நாமிந்த நுண்வேறுபாடுகளைத் தவறவிடுகிறோம்.  அளவு-தல் என்னும் வினைச்சொல் அள-த்தல் (=பொரு-த்தல்) என்பதையும், அதற்கப்புறம் நடைபெறும் சில அலகு மாற்றங்களையும் சேர்த்துக் குறிக்கும். 

காட்டிற்கு ஒரு தெறுமமானியை (thermometer) எடுத்துக் கொள்க. எங்கு வெம்மையை (tenperature) அளக்கவேண்டுமோ, அங்கு தெறுமமானியை நாம் வைக்கிறோம். தெறுமமானிக்குள் இருக்கும் இதள் (mercury) சூட்டால் பருத்து, தெறுமமானியின் மயிரிழைத் தூம்பில் (capillary tube) நீள்கிறது. நாம் காணும் இந்த நீட்சியை எப்படி வெம்மைக்கு மாற்றுவது? இதில் தான் குழிவரை முகப்பு (calibration map) என்ற செயற்பாடு வருகிறது. அது என்ன குழிவரைப்பு? குண்டுக் கல்களுக்கும் குழிகளுக்கும் வருவோம்.

இயற்கையில் உருளைக் கற்கள் வெவ்வேறு அளவில் காணப்படுகின்றன. இவற்றின் விட்டங்களை ம் எப்படி அறிகிறோம்?  பல்வேறு வரையறுக்கப்பட்ட விட்டக்குழிகளை ஏற்படுத்தி ஏற்கனவே முற்றுமுழுக் கோளமான வெவ்வேறு (மாழை அலது கோலிக்) குண்டுகளைப் பொருத்திப்பார்த்து, மாட்டிக் கொள்ளாது எந்தப் பெரிய குண்டு போகிறதெனப் பார்த்து, ஒவ்வொரு குழிக்கு அருகிலும் குழிவரை விட்டத்தை எழுதிவைப்போம். இது குழிவிட்டத்திற்கும், குண்டுவிட்டத்திற்குமான முகப்பைப் பொறுத்தது இம்முகப்பை ஆங்கிலத்தில் calbration chart என்பார். தமிழில் குழிவரைப்புப் கட்டம் என்போம் இம்முகப்பை வைத்துத்தான். இயலுருளைகளை குழிகளில் பொருத்தி, எந்த விட்டக்குழியில் உருளை எளிதாய்ப் போகிறதோ அதையே இயலுருளை விட்டமாய்ச் சொல்வோம்.  

இதே போல் வெவ்வேறு வெம்மைகளில் தெறுமமானியை வைத்துப் பெறும் நீளங்களுக்கும்  வெம்மைகளுக்குமான முகப்பைச் (map) செய்து வைத்தால், அம் முகப்பின் மூலம், (வெம்மை தெரியாமல்) அளந்த நீளக்கோட்டை முகப்பில் பொருத்தி, இணையான வெம்மையை அறிகிறோம். அள-த்தல் denotes comparison. அளவு-தல் என்பதுதான் measurement. Every measurement involves not just the comparson mut also (sometimes many) maps invoving unit conversions, caibration, standard deviations, linearity etc. தமிழில் சொன்னால், ஒவ்வொரு அளவு-தலிலும் பொருத்தலும், அலகு மாற்ற முகப்புகளும், குழிவரைப்பும். செந்தர வேறாக்கங்களும், இழுனமும் எனப் பல்வேறு கருத்துகள் அடங்கியுள்ளன. இதளி நீளப் பொருத்தல் என்பது அள-த்தலையும்), அள-த்தலோடு, நீளம் - வெம்மைக்கான முகப்பும் சேர்ந்த வினை அளவு-தலையும் குறிக்கும்.  

அளவுதலின் வினைப்பகுதி அளவு. இது பெயர்ச்சொல்லாயும் இயங்கும். வினைப்பகுதியைத் தொடர்ந்து மூன்றுகால வினைகளும் அமையலாம். அளவிய, அளவுகிற, அளவும் என்றும் பெயரெச்சங்கள் அமையலாம். 

”புறத்திணை மருங்கில் பொருந்தின் அல்ல

அகத்திணை மருங்கில் அளவுதல் இலவே” 

என்னும் தொல்காப்பியம் பொருளியல், அகத்திணை 58 ஆம் நூற்பாவில் வரும் அளவுதலுக்கு, “விரவுதல், கலத்தல் என்று சொல்வர். என்னைக் கேட்டால் "measurement" என்ற பொருள் அழகாய்ப் பொருந்தும்.  புறத்திணையில் measurement செய்யலாம். அகத்திணை மருங்கில் measurement என்பது எப்படி முயன்றாலும் கிடையாது.

அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும். 

என்ற தொல் பொருள். கற். 5 அடியிலும் அளவிய என்ற சொல்லிற்கு measured என்று பொருள் சொல்லலாம்.  

அளவின் நீட்சியாய் அளவி என்ற சொல் அதே அளவுப் பொருளில் ”அளவியை யார்க்கும் அறிவரியோன்” என்று திருக்கோவையார் 1:10, இல் பயிலும். ,   

அளவு கருவி, அளவு காரன், அளவு கூடை, அளவு கோல், அளவு சாப்பாடு, அளவு சோறு, அளவு தடி, அளவு நாழி, அளவு படி, அளவு படை, அளவு அடி, அளவு வருக்கம்  அளசு இல், அளவு எண் முதலியன வினைத்தொகைகள்..

அளவுக்கல், அளவுக் கூறுபாடு, அளவுப்பதிவு, என்பன கூட்டுப்பெயர்கள் 

மேலே  .உள்ள கருத்துகளைக் கூறுமுன்,   

------------------------------

செயப்படுபொருள் குன்றிய வினை (in- transitive verb) - செயப்படுபொருள் குன்றா வினை (transitive verb) வகைக்கும் தன்வினை - பிறவினை வகைக்கும் வேறுபாடு உண்டு அல்லவா? இரண்டு வகைப்பாடுகளும் வேறு வேறுதானே. இங்கு திறவு - திறப்பு இரண்டுக்கும் வினையடி "திற" என்பதுமட்டும்தானே. இது செயப்படுபொருள் குன்றாவினை என்றுதானே அழைக்கப்படுகிறது? இதில் தன்வினை - பிறவினை வேறுபாட்டைக் கொண்டுவர இயலுமா? செ.பொ. குன்றாவினை - செ.பொ. குன்றிய வினை என்ற வேறுபாடு தொடரியலை (syntactic function) அடிப்படையாகக் கொண்டது; ஆனால் தன்வினை - பிறவினைப் பகுப்பானது சொல்லியலையும் பொருண்மையியலையும் (morphological and semantic functions) அடிப்படையாகக்கொண்டது. 'உடை' - உடைகிறேன், உடைந்தேன், உடைவேன் (செ.பொ, குன்றிய வினை) உடைக்கிறேன், உடைத்தேன், உடைப்பேன் (செ.பொ. குன்றாவினை) ; நட - நடத்து (தன்வினை - பிறவினை). இதுபோன்று திற, அள என்பவற்றிற்குப் பிறவினை வடிவம் ஏதும் உண்டா?

--------------------------------

என்று பேரா. தெய்வ சுந்தரம் நயினார் கேட்டிருந்தார். என் விடை கீழே/

===============================

திற-விற்கு உண்டு. அப்பரின் ஐந்தாம் திருமுறை 9 ஆம் பதிகம். இதில் 95 ஆம் பாடலில் மறைக்காட்டுக் கோயில் கருவறைக் கதவைத் திறக்க்கும் முகத்தான், ”இக்கதவம் திறப்பிம்மினே” என்று வரும். திறப்பி-த்தல் என்பது பிறவினை தான். இறைவனைக் கொண்டு திறக்கச் செய்வது. அல்லது அங்கிறுந்து முன்குடுமியரைக் கொண்டு திறக்கச் செய்வது என்று இரு விதமாய்ப் பொருள் கொள்ளலாம். எப்படிப் பார்த்தாலும் திறப்பி-த்தல் என்பது பிறவினை தான். இதே பதிகம் 101 ஆம் பாடலையும் படியுங்கள். https://valavu.blogspot.com/2018/09/7.html

--------------------------------

அடுத்து, “ஐயா, மிக்க நன்றி. இதுபோன்று அள என்ற சொல்லுக்கும் உண்டா என்பதுபற்றியும் தாங்கள் கூறினால் பயன் உள்ளதாக இருக்கும்” என்று பேரா, தெவசுந்தரம் கேட்டார். என் விடை:

-------------------------------

கூகுளில் ”அளப்பித்தல்” என்ற சொல்லைத் தேடினால், கீழ்க்கண்ட ஒரு முடிவு தென்பட்டது. இது இலங்கை அரசின் 728 பக்க ஆவணம். கீழே வரும் வாக்கியம் ஆவணத்துள் எந்த இடத்தில் வருகிறதென்று என்னால் சொல்ல முடியவில்லை. இதைக் கண்டுபிடிக்க. ஒரு search engine போட்டுத் தேடவேண்டும். அதற்கான ஏந்து என்னிடமில்லை. எனவே கூகுள் கொடுத்த வாக்கியத்தை அப்படியே தருகிறேன். கீழே கொடுக்கப் பட்டுள்ள வாக்கியத்தில் ”அளப்பித்தல்” என்பது பிறவினையின் வழி எழும் தொழிற் பெயரே!

------------------------------.

காணி நிர்வாகத் திணைக்களம்http://np.gov.lk › pdfPDF

29-Nov-2005 — அனுமதிச்சீட்டின் மேல். காணியை நில. தலைமையதிபதியினால். அளப்பித்தல் வேண்டும்.

728 pages

-------------------------------

என் பரிந்துரை:

அள-த்தல் என்பது தன்வினை.

அளப்பி-த்தல் என்பது இன்னொருவரை வைத்து அளக்கும் செயலைக் குறிப்பதால், பிறவினை.

Thursday, May 05, 2022

காணொலியில் வரும் காண் பெயர்ச்சொல் அல்ல.

 ===================================

//காண் என்பது தமிழில் பெயர்ச்சொல்லாகவும் வரும் ஒரு சொல். தமிழ்ப்பேரகராதி சொல்வது:

_____________

  காண்² kāṇ , < காண்-. n. 1. Sight; காட்சி. காண்பிறந் தமைந்த காதல் (கம்பரா. திருவடிதொழு. 70). 2. Beauty; அழகு. காண்டக . . . முகனமர்ந்து (திரு முரு. 250). — int. Expletive of the 2nd pers. meaning behold; முன்னிலையில்வரும் ஓர் உரை யசை. துவ்வாய்காண் (குறள், 1294).

______________

வீடியோ (video) என்பதற்குக் காட்சியும் ஒலியும் என்னும் பொருளில் காணொலி என்னும் சொல் சாலவும் பொருத்தமான சொல்.//

====================================

என்ற பேரா. இரா. செல்வக்குமாரின் இடுகையை இன்று கண்டேன். :காணொலியை” நான் என்றும் ஏற்றதிலை. இந்த இடுகை, ”காண் எனுஞ் சொல் காட்சியைக் குறிக்கும் பெயர்ச்சொல்” என்பது பற்றியது. அந்தக் கூற்று தவறு. தவறுகளின் தொடர்ச்சியில் காண் = ஒரு பெயர்ச்சொல் என்று நம் அகராதிகளில் விடிந்துள்ளது. நம் அகராதிகளின் மேல் எனக்குள்ள கிடுக்கங்களில் இதுவும் ஒரு சான்று. ”காண்பிறந்தமைந்த காதல் (கம்பரா. திருவடிதொழு. 70)” என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதியில் கொடுத்திருப்பதும் பிழையான வரியே. 

http://www.tamilsurangam.in/literatures/kambar/ramayanam/thiruvaditholuthapadalam.html என்ற வலைத்தளத்தில் கொடுத்த  திருவடி தொழுத படலத்தின் படி 52 பாடல்களே தான் முறையான கம்பன் பாடல்களாகும். அதில்

11 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 17 பாட்டுகளும் 

12 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 1 பாட்டும், 

14 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 1 பாட்டும்,  

19 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 20 பாட்டுகளும்,  

23 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 1 பாட்டும், 

35 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 2 பாட்டுகளும், 

47 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 1 பாட்டும் 

49 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 5 பாட்டுகளும் 

மிகையாய் (இடைச்செருகலாய்) உள்ளன என்பது ஆய்ந்தோர் கூற்று. 35 ஆம் பாட்டு கீழே வருமாறு:

'இலங்கையை முழுதும் நாடி, இராவணன் இருக்கை எய்தி,

பொலங் குழையவரை எல்லாம் பொதுவுற நோக்கிப் போந்தேன்,

அலங்கு தண் சோலை புக்கேன்; அவ்வழி, அணங்கு அ(ன்)னாளை,

கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர்க் கடலில், கண்டேன். 35


இதில் சீதையைக் கண்டுவந்த செய்தியை அனுமன் இராமனுக்குத் தெரிவிக்கிறான். இதற்கடுத்த மிகைப்பாடல் தான் கீழே வருவது.

 

மாண்பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த

சேண்பிறந்து அமைந்த காதல், கண்களின் தெவிட்டி, தீராக்

காண்பிறந்த மையால், நீயே, கண்அகன் ஞாலம் தன்னுள்,

ஆண்பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே?


இதில் தான் ”காண்” என்ற சொல் வருகிறது.  இதில்தான் குழறுபடி நடந்துள்ளது. சென்னைப் பேரகராதியின் குறிப்பு முற்றிலும் தவறு. மேலே உள்ள மிகைப்பாடலைக் கூர்ந்து படியுங்கள்.  பாட்டைக் கீழ்க்கண்டபடி பிரித்தால் தான் அதன் சோகப் பொருள் வெளிப்படும். 


மாண்பு இறந்து அமைந்த, கற்பின் வாணுதல் நின்பால் வைத்த

சேண் பிறந்து அமைந்த காதல், கண்களின் தெவிட்டி, தீராக்

காண்பு இறந்தமையால், நீயே, கண் அகன் ஞாலம் தன்னுள்,

ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே


இங்கே ”கற்பின் வானுதல்” என்பது சீதைக்கான ஆகுபெயர். பொருள் காணும்போது “லற்பின் வாணுத;” எனும் தொடரைச் சீதை என்று புரிந்துகொள்க. அவள் அங்கு கண்ணிர் சிந்தச் சோகத்தில் ஆழ்ந்துள்ளாள்.  மிகைப்பாட்டின் பொருள் 

”நீயே, கண்ணகன்ற உலகத்தில் அந்நாளில் ஆளப்பிறந்த செல்வமாய் உண்டான” தீராக் காட்சி இறந்தைமையால் (அழிந்தமையால்)) நின்பால் வைத்த, உயர்நிலையில் பிறந்த காதல் அவள் கண்களில் தெவிட்டி, தன் மாட்சிமை குலைந்து அமைந்த சீதை 

பற்றி அனுமன் சொல்வதாய் பாட்டு அமையும். ”காண் பிறந்தமையால்” என்று பிரிப்பது முறையான சோகப் பொருளைக் கொடுக்காது ”சீதையின் காதற்காலத்தில் கண்ட பழைய காட்சி குலைந்தமையால்/ இறந்தமையால்” என்றால் தான் சோகக் காட்சியின் ஆழம் நமக்குப் புரியும். ”காண்பு  இறந்தமையால்” என்ற புணர்ச்சிப் பிரிப்பே பொருள் ஏரணப்படி சரி. யாரோ ஒரு உரையாசிரியரின் முறையற்ற புணர்ச்சிப் பிரிப்பைக் கொண்டு இந்த மிகைப் பாட்டின் பொருளையும் குலைத்தார். கூடவே தவறான சொல்லாய்க் காண் என்பதையும் பின்வந்தோர் அகராதியில் ஏற்றக் காறணமாயிற்று சென்னைப் பேரகராதியின் சறுக்கல்களில் இதுவும் ஒன்று.

அதைப்பிடித்துக் கொண்டு காணொலி சரி என்பது முறையற்றது    காண் என்பது காட்சி எனும் பொருளைக் குறிக்கும் பெயர்ச்சொல்  அல்ல.


Wednesday, May 04, 2022

Fresh

 ”fresh இதை தமிழில் எப்படி சொல்வது?” என்று சொல் எனும் குழுவில் கேட்டார். 

என்னைக் கேட்டால், புது என்னும் பெயரடையைப் பெயராக்கலாம். அது வேண்டாமெனில் புதியது என்பது கன்னடத்தில் பொசது என்றும் தமிழில் புதுசு என்றும் சொல்லப் படுவதை எண்ணிப் பார்க்கலாம். பலரும் புதிதின் கொச்சை வழக்குப் புதுசு என்று எண்ணிக் கொள்கிறார். அப்படியாகத் தேவையில்லை புதிது = new good என்றும் புதுசு = fresh என்றும் நாம் வேறு படுத்தலாம். அதில் குறையில்லை. இதுவும் வேண்டாமெனில் புதல் என்று சொல்லின் பொருளை நீட்டலாம். இப்போதுள்ள பொருள்: புதல் = அரும்பு bud பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை” பதிற்றுப் 66, 16. புல்>புது>புதல். என் பரிந்துரை புது என்பதே.

freshness புதுநை

freshening புதுநித்தது

fresherdom புதியர்கொற்றம்

freshwater புதுநீர்

freshened புத்தாகல்

freshener புத்தாக்கி

freshest புத்தம்புதிது

freshing புத்தாக்கியது

freshman புதியன்

freshmen புதியர்

freshed புதுவானது

freshen புத்தாக்கு

fresher புதுவர்

freshly புதுவாக


refreshening புதுவித்தல்

refreshingly புதுவிப்பாக

refreshment புதுவிமம் 

refreshened புதுவித்தாகல்

refreshing புதுவிப்பு

refresher புதுவிப்பர்

refreshen = புதுவி

refreshed புதுவிக்கப் பட்டது

Tuesday, May 03, 2022

நெருப்பிலே பூத்த நெகிழ்

”நெருப்பிலே பூத்த நெகிழ்” என்ற ஈற்றடிக்கு ஒருகாலத்தில் (ஏப்ரல் 8, 2006) எழுதிய இன்னிசை வெண்பா. அப்பொழுதெலாம் ஈற்றடிக்கு வெண்பாப் புனையும் விளையாட்டு இணையத்தில் நடந்துகொண்டிருந்தது. இப்பொழுது இதுபோல் நடக்கிறதாவென்று தெரியவில்லை. இன்று வேறெதற்கோ இணையத்தில் தேடியபொழுது இலவசக்கொத்தனாரின் வலைப்பதிவில் என் பதிவிருந்தது தெரிந்தது.. நானே இதுபற்றி மறந்துவிட்டேன். என் ஆக்கங்கள் இப்படித்தான் அங்குமிங்கும் சிதறிக் கிடக்கின்றன. பலவற்றை மறந்தும் விட்டேன். இது ஏதோ தன்னேர்ச்சியாய்த் திடிரென்று இன்று கிட்டியது. சரி, ஓரிடத்தில் சேர்த்துவைப்போமே? என்று என் முகநூல் பக்கத்திலும், வலைப்பதிவிலும், மடற்குழுக்களிலும் பதிகிறேன். இப்பாட்டில் அறுபடைவீட்டையும் ஊடே குறித்திருக்கிறேன்.

முருக்கன்; குமரன்; முளைச்சேயோன்; கந்தன்; 

கருப்பன் மருகன்; கடம்பிற் பரமன்;

செருத்தணியான்; செந்தில்; சிலம்பன்; இவனோ

நெருப்பிலே பூத்த நெகிழ்.


இனிப் பாட்டின் விளக்கம்.

முருக்கென்பது பலாசமரம் அல்லது புரசைமரம் எனப்படும். சென்னைப் புரசைவாக்கத்தை நினைவுகொள்ளுங்கள். புரசைவாக்கம் சிவன் கோயிலில் தலமரம் முருக்கமரமே; இது முள்முருக்கென்றும் சொல்லப்படும். Butea monosperma. இம்மரமே flame of the forest ஆகும். தீம்பிழம்பு போல முருக்கமரக்காடு பூக்கள் மலர்ந்த நிலையில் காட்சியளிக்குமாம். சிலர் புரியாமல் மயிற்கொன்றையை / குல்மொஹரை flame of the forest என்று சொல்வார். அது தவறு. மயிற்கொன்றை மொரிசியசிலிருந்து இங்கு இறங்கியது. தமிழ்நாட்டைச் சார்ந்ததில்லை. முருக்கம்பூவே நம்முடையது. புரசைப்பூ = முருக்கம்பூ =செக்கச்செவேலென்று சிவந்த பூ. சிவந்த நிறத்தின் காரணமாகவே முருக்கன்>முருகன் என்ற பெயர் எழுந்தது; அழகு, இளமை எல்லாம் பின்வந்த வழிப்பொருள்கள். முதற் பொருட்கள் அல்ல. பலாசமரம் நிறையவிருந்த இடம் பலாசி; பலாசி யுத்தமென இந்தியவரலாற்றில் படித்திருப்போமே? இராபர்ட் கிளைவிற்கும், வங்காள நவாபிற்கும் நடந்த சண்டை; அது புரசைமரக் காடுகளில் தான் நடந்தது. 

குமரன் = இளையோன்; தந்தைக்கு ஓமெனும் பொருளை உரைத்த கதை இக்காலத்தில் இதைச் சாமிமலையிற் புனைந்துசொல்வார்; ஆனால் ”இப்படைவீடு சரிதானா? திருவேரகமென்பது எது?” என்று திருமுருகாற்றுப் படையின் வழி உணரமுடியவில்லை.

முளைச்சேயோன்; முளை = தண்டாயுதம்; பழனி தண்டாயுதபாணியே இங்கே முளைச்சேயோன்

கந்து = மரத்தூண்; ஒவ்வொரு மரத்தூணிலும் முருகன் இருப்பதாக நம் முன்னோர் எண்ணினர்; அதனாற்றான் தூணிற்படரும் வள்ளிக்கொடியை அவன் மனையாளாய்க் கருதினர்.

கருப்பன் மருகன்: விளக்கம் சொல்லத் தேவையில்லை.

கடம்பிற் பரமன்: திருப்பரங்குன்றம் அக்காலத்தில் கடம்பவனம் என்ற பெயர்பெற்றது. மதுரைக்கும் ஒருகாலத்தில் கடம்பவனத் தொடர்பும், மருதவனத் தொடர்புமுண்டு. (பரிபாடலின் படி மருதையே மதுரையாயிற்று.) பரமன் = பரங்குன்றன் 

செருத்தணியான் = திருத்தணிகையான்

செந்து + இல் = செந்தில் = சிவந்தவன் இருக்கும் வீடு. அந்தவூர் மண்ணும் செக்கச்செவந்து இருக்கும். திருச்செந்தூரிலிருந்து குமரிவரை போனால் சிவந்த மண் நெடுகக் கிடக்கும். எல்லாம் அருமண் மாழைப் பூண்டுகள் (rare earth metal compounds) செய்யும் வேலை

சிலம்பாறும், அருவியும் பாயும் இடம் பழமுதிர்சோலை; அங்கு குடியிருப்பவன் சிலம்பன்.

நெகிழ்: மலர்தலென்பது இதழ்கள் நெகிழ்ந்துவிரிதலே; அவ்வகையில் நெகிழென்பது மலரெனும் பெயராயும் ஓரோவழி அமையும். 

நெருப்பிலே பூத்த நெகிழ் = சிவனுடைய நெற்றிக்கண் நெருப்பில் தோன்றி சரவணப் பொய்கையில் பூத்த மலர். 

அன்புடன்,

இராம.கி.