Wednesday, May 11, 2022

அளவு-தல், திறப்பி-த்தல். அளப்பி-த்தல்

 பேரா. தெய்வ சுந்தரம் நயினார், மே 8 இல் ”அளவு + சாப்பாடு -> அளவுச் சாப்பாடு ? அளவுசாப்பாடு? அளவு + திட்டம் -> அளவுத்திட்டம் ? அளவுதிட்டம்? அளவு + கோல் -> அளவுக்கோல்? அளவுகோல்? இந்த ஐயம் தொடர்பான இலக்கண விளக்கங்களை அளிப்பதில்  100 - க்குமேற்பட்ட கருத்துக்கள் பகிரப் பட்டுள்ளன. ஆனால் இறுதியான முடிவு  கிடைத்து விட்டதாகத் தெரியவில்லை. அளவுக்கோலா ? அளவுகோலா? “ என்ற வினாவைக் கேட்டிருந்தார்,

இதற்கான விடையை நாம் ”அள்ளுதலில்” தொடங்க வேண்டும். அள்(ளு)-தல் என்பது செறிதல், பொருந்தல் பொருள்களை உணர்த்தும் வினைச்சொல் ஆகும். அல்>அள-த்தல் என்பது பொருத்தல் பொருள் காட்டும் முதல் நீட்சி. இது, தானே பொருந்துவது அல்ல. மாந்தர் பொருத்துவது. அளத்தலின் பெயர்ச்சொல் வடிவம் அளக்கை. என்பதாகும் இத் தொழிற்பெயரை அளக்குதல் என்றும் சொல்லலாம். அளக்குதலின் அடுத்த திரிவு அளவுதல் என்றமையும். ஒவ்வொரு வினைச்சொல்லும்,  அதன்தொடர்பான இன்னொரு வினைச்சொல்லில் இருந்து நுண்ணிய வேறுபாடு காட்டும். பலநேரம் நாமிந்த நுண்வேறுபாடுகளைத் தவறவிடுகிறோம்.  அளவு-தல் என்னும் வினைச்சொல் அள-த்தல் (=பொரு-த்தல்) என்பதையும், அதற்கப்புறம் நடைபெறும் சில அலகு மாற்றங்களையும் சேர்த்துக் குறிக்கும். 

காட்டிற்கு ஒரு தெறுமமானியை (thermometer) எடுத்துக் கொள்க. எங்கு வெம்மையை (tenperature) அளக்கவேண்டுமோ, அங்கு தெறுமமானியை நாம் வைக்கிறோம். தெறுமமானிக்குள் இருக்கும் இதள் (mercury) சூட்டால் பருத்து, தெறுமமானியின் மயிரிழைத் தூம்பில் (capillary tube) நீள்கிறது. நாம் காணும் இந்த நீட்சியை எப்படி வெம்மைக்கு மாற்றுவது? இதில் தான் குழிவரை முகப்பு (calibration map) என்ற செயற்பாடு வருகிறது. அது என்ன குழிவரைப்பு? குண்டுக் கல்களுக்கும் குழிகளுக்கும் வருவோம்.

இயற்கையில் உருளைக் கற்கள் வெவ்வேறு அளவில் காணப்படுகின்றன. இவற்றின் விட்டங்களை ம் எப்படி அறிகிறோம்?  பல்வேறு வரையறுக்கப்பட்ட விட்டக்குழிகளை ஏற்படுத்தி ஏற்கனவே முற்றுமுழுக் கோளமான வெவ்வேறு (மாழை அலது கோலிக்) குண்டுகளைப் பொருத்திப்பார்த்து, மாட்டிக் கொள்ளாது எந்தப் பெரிய குண்டு போகிறதெனப் பார்த்து, ஒவ்வொரு குழிக்கு அருகிலும் குழிவரை விட்டத்தை எழுதிவைப்போம். இது குழிவிட்டத்திற்கும், குண்டுவிட்டத்திற்குமான முகப்பைப் பொறுத்தது இம்முகப்பை ஆங்கிலத்தில் calbration chart என்பார். தமிழில் குழிவரைப்புப் கட்டம் என்போம் இம்முகப்பை வைத்துத்தான். இயலுருளைகளை குழிகளில் பொருத்தி, எந்த விட்டக்குழியில் உருளை எளிதாய்ப் போகிறதோ அதையே இயலுருளை விட்டமாய்ச் சொல்வோம்.  

இதே போல் வெவ்வேறு வெம்மைகளில் தெறுமமானியை வைத்துப் பெறும் நீளங்களுக்கும்  வெம்மைகளுக்குமான முகப்பைச் (map) செய்து வைத்தால், அம் முகப்பின் மூலம், (வெம்மை தெரியாமல்) அளந்த நீளக்கோட்டை முகப்பில் பொருத்தி, இணையான வெம்மையை அறிகிறோம். அள-த்தல் denotes comparison. அளவு-தல் என்பதுதான் measurement. Every measurement involves not just the comparson mut also (sometimes many) maps invoving unit conversions, caibration, standard deviations, linearity etc. தமிழில் சொன்னால், ஒவ்வொரு அளவு-தலிலும் பொருத்தலும், அலகு மாற்ற முகப்புகளும், குழிவரைப்பும். செந்தர வேறாக்கங்களும், இழுனமும் எனப் பல்வேறு கருத்துகள் அடங்கியுள்ளன. இதளி நீளப் பொருத்தல் என்பது அள-த்தலையும்), அள-த்தலோடு, நீளம் - வெம்மைக்கான முகப்பும் சேர்ந்த வினை அளவு-தலையும் குறிக்கும்.  

அளவுதலின் வினைப்பகுதி அளவு. இது பெயர்ச்சொல்லாயும் இயங்கும். வினைப்பகுதியைத் தொடர்ந்து மூன்றுகால வினைகளும் அமையலாம். அளவிய, அளவுகிற, அளவும் என்றும் பெயரெச்சங்கள் அமையலாம். 

”புறத்திணை மருங்கில் பொருந்தின் அல்ல

அகத்திணை மருங்கில் அளவுதல் இலவே” 

என்னும் தொல்காப்பியம் பொருளியல், அகத்திணை 58 ஆம் நூற்பாவில் வரும் அளவுதலுக்கு, “விரவுதல், கலத்தல் என்று சொல்வர். என்னைக் கேட்டால் "measurement" என்ற பொருள் அழகாய்ப் பொருந்தும்.  புறத்திணையில் measurement செய்யலாம். அகத்திணை மருங்கில் measurement என்பது எப்படி முயன்றாலும் கிடையாது.

அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும். 

என்ற தொல் பொருள். கற். 5 அடியிலும் அளவிய என்ற சொல்லிற்கு measured என்று பொருள் சொல்லலாம்.  

அளவின் நீட்சியாய் அளவி என்ற சொல் அதே அளவுப் பொருளில் ”அளவியை யார்க்கும் அறிவரியோன்” என்று திருக்கோவையார் 1:10, இல் பயிலும். ,   

அளவு கருவி, அளவு காரன், அளவு கூடை, அளவு கோல், அளவு சாப்பாடு, அளவு சோறு, அளவு தடி, அளவு நாழி, அளவு படி, அளவு படை, அளவு அடி, அளவு வருக்கம்  அளசு இல், அளவு எண் முதலியன வினைத்தொகைகள்..

அளவுக்கல், அளவுக் கூறுபாடு, அளவுப்பதிவு, என்பன கூட்டுப்பெயர்கள் 

மேலே  .உள்ள கருத்துகளைக் கூறுமுன்,   

------------------------------

செயப்படுபொருள் குன்றிய வினை (in- transitive verb) - செயப்படுபொருள் குன்றா வினை (transitive verb) வகைக்கும் தன்வினை - பிறவினை வகைக்கும் வேறுபாடு உண்டு அல்லவா? இரண்டு வகைப்பாடுகளும் வேறு வேறுதானே. இங்கு திறவு - திறப்பு இரண்டுக்கும் வினையடி "திற" என்பதுமட்டும்தானே. இது செயப்படுபொருள் குன்றாவினை என்றுதானே அழைக்கப்படுகிறது? இதில் தன்வினை - பிறவினை வேறுபாட்டைக் கொண்டுவர இயலுமா? செ.பொ. குன்றாவினை - செ.பொ. குன்றிய வினை என்ற வேறுபாடு தொடரியலை (syntactic function) அடிப்படையாகக் கொண்டது; ஆனால் தன்வினை - பிறவினைப் பகுப்பானது சொல்லியலையும் பொருண்மையியலையும் (morphological and semantic functions) அடிப்படையாகக்கொண்டது. 'உடை' - உடைகிறேன், உடைந்தேன், உடைவேன் (செ.பொ, குன்றிய வினை) உடைக்கிறேன், உடைத்தேன், உடைப்பேன் (செ.பொ. குன்றாவினை) ; நட - நடத்து (தன்வினை - பிறவினை). இதுபோன்று திற, அள என்பவற்றிற்குப் பிறவினை வடிவம் ஏதும் உண்டா?

--------------------------------

என்று பேரா. தெய்வ சுந்தரம் நயினார் கேட்டிருந்தார். என் விடை கீழே/

===============================

திற-விற்கு உண்டு. அப்பரின் ஐந்தாம் திருமுறை 9 ஆம் பதிகம். இதில் 95 ஆம் பாடலில் மறைக்காட்டுக் கோயில் கருவறைக் கதவைத் திறக்க்கும் முகத்தான், ”இக்கதவம் திறப்பிம்மினே” என்று வரும். திறப்பி-த்தல் என்பது பிறவினை தான். இறைவனைக் கொண்டு திறக்கச் செய்வது. அல்லது அங்கிறுந்து முன்குடுமியரைக் கொண்டு திறக்கச் செய்வது என்று இரு விதமாய்ப் பொருள் கொள்ளலாம். எப்படிப் பார்த்தாலும் திறப்பி-த்தல் என்பது பிறவினை தான். இதே பதிகம் 101 ஆம் பாடலையும் படியுங்கள். https://valavu.blogspot.com/2018/09/7.html

--------------------------------

அடுத்து, “ஐயா, மிக்க நன்றி. இதுபோன்று அள என்ற சொல்லுக்கும் உண்டா என்பதுபற்றியும் தாங்கள் கூறினால் பயன் உள்ளதாக இருக்கும்” என்று பேரா, தெவசுந்தரம் கேட்டார். என் விடை:

-------------------------------

கூகுளில் ”அளப்பித்தல்” என்ற சொல்லைத் தேடினால், கீழ்க்கண்ட ஒரு முடிவு தென்பட்டது. இது இலங்கை அரசின் 728 பக்க ஆவணம். கீழே வரும் வாக்கியம் ஆவணத்துள் எந்த இடத்தில் வருகிறதென்று என்னால் சொல்ல முடியவில்லை. இதைக் கண்டுபிடிக்க. ஒரு search engine போட்டுத் தேடவேண்டும். அதற்கான ஏந்து என்னிடமில்லை. எனவே கூகுள் கொடுத்த வாக்கியத்தை அப்படியே தருகிறேன். கீழே கொடுக்கப் பட்டுள்ள வாக்கியத்தில் ”அளப்பித்தல்” என்பது பிறவினையின் வழி எழும் தொழிற் பெயரே!

------------------------------.

காணி நிர்வாகத் திணைக்களம்http://np.gov.lk › pdfPDF

29-Nov-2005 — அனுமதிச்சீட்டின் மேல். காணியை நில. தலைமையதிபதியினால். அளப்பித்தல் வேண்டும்.

728 pages

-------------------------------

என் பரிந்துரை:

அள-த்தல் என்பது தன்வினை.

அளப்பி-த்தல் என்பது இன்னொருவரை வைத்து அளக்கும் செயலைக் குறிப்பதால், பிறவினை.

1 comment:

ந.குணபாலன் said...

மெய்தான். ஒரு நில அளவையாளரைக் (Surveyor) கொண்டு காணியை அளப்பிக்க வேண்டும் என்றே சொல்லுகின்றோம்.