===================================
//காண் என்பது தமிழில் பெயர்ச்சொல்லாகவும் வரும் ஒரு சொல். தமிழ்ப்பேரகராதி சொல்வது:
_____________
காண்² kāṇ , < காண்-. n. 1. Sight; காட்சி. காண்பிறந் தமைந்த காதல் (கம்பரா. திருவடிதொழு. 70). 2. Beauty; அழகு. காண்டக . . . முகனமர்ந்து (திரு முரு. 250). — int. Expletive of the 2nd pers. meaning behold; முன்னிலையில்வரும் ஓர் உரை யசை. துவ்வாய்காண் (குறள், 1294).
______________
வீடியோ (video) என்பதற்குக் காட்சியும் ஒலியும் என்னும் பொருளில் காணொலி என்னும் சொல் சாலவும் பொருத்தமான சொல்.//
====================================
என்ற பேரா. இரா. செல்வக்குமாரின் இடுகையை இன்று கண்டேன். :காணொலியை” நான் என்றும் ஏற்றதிலை. இந்த இடுகை, ”காண் எனுஞ் சொல் காட்சியைக் குறிக்கும் பெயர்ச்சொல்” என்பது பற்றியது. அந்தக் கூற்று தவறு. தவறுகளின் தொடர்ச்சியில் காண் = ஒரு பெயர்ச்சொல் என்று நம் அகராதிகளில் விடிந்துள்ளது. நம் அகராதிகளின் மேல் எனக்குள்ள கிடுக்கங்களில் இதுவும் ஒரு சான்று. ”காண்பிறந்தமைந்த காதல் (கம்பரா. திருவடிதொழு. 70)” என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதியில் கொடுத்திருப்பதும் பிழையான வரியே.
http://www.tamilsurangam.in/literatures/kambar/ramayanam/thiruvaditholuthapadalam.html என்ற வலைத்தளத்தில் கொடுத்த திருவடி தொழுத படலத்தின் படி 52 பாடல்களே தான் முறையான கம்பன் பாடல்களாகும். அதில்
11 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 17 பாட்டுகளும்
12 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 1 பாட்டும்,
14 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 1 பாட்டும்,
19 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 20 பாட்டுகளும்,
23 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 1 பாட்டும்,
35 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 2 பாட்டுகளும்,
47 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 1 பாட்டும்
49 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 5 பாட்டுகளும்
மிகையாய் (இடைச்செருகலாய்) உள்ளன என்பது ஆய்ந்தோர் கூற்று. 35 ஆம் பாட்டு கீழே வருமாறு:
'இலங்கையை முழுதும் நாடி, இராவணன் இருக்கை எய்தி,
பொலங் குழையவரை எல்லாம் பொதுவுற நோக்கிப் போந்தேன்,
அலங்கு தண் சோலை புக்கேன்; அவ்வழி, அணங்கு அ(ன்)னாளை,
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர்க் கடலில், கண்டேன். 35
இதில் சீதையைக் கண்டுவந்த செய்தியை அனுமன் இராமனுக்குத் தெரிவிக்கிறான். இதற்கடுத்த மிகைப்பாடல் தான் கீழே வருவது.
மாண்பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த
சேண்பிறந்து அமைந்த காதல், கண்களின் தெவிட்டி, தீராக்
காண்பிறந்த மையால், நீயே, கண்அகன் ஞாலம் தன்னுள்,
ஆண்பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே?
இதில் தான் ”காண்” என்ற சொல் வருகிறது. இதில்தான் குழறுபடி நடந்துள்ளது. சென்னைப் பேரகராதியின் குறிப்பு முற்றிலும் தவறு. மேலே உள்ள மிகைப்பாடலைக் கூர்ந்து படியுங்கள். பாட்டைக் கீழ்க்கண்டபடி பிரித்தால் தான் அதன் சோகப் பொருள் வெளிப்படும்.
மாண்பு இறந்து அமைந்த, கற்பின் வாணுதல் நின்பால் வைத்த
சேண் பிறந்து அமைந்த காதல், கண்களின் தெவிட்டி, தீராக்
காண்பு இறந்தமையால், நீயே, கண் அகன் ஞாலம் தன்னுள்,
ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே
இங்கே ”கற்பின் வானுதல்” என்பது சீதைக்கான ஆகுபெயர். பொருள் காணும்போது “லற்பின் வாணுத;” எனும் தொடரைச் சீதை என்று புரிந்துகொள்க. அவள் அங்கு கண்ணிர் சிந்தச் சோகத்தில் ஆழ்ந்துள்ளாள். மிகைப்பாட்டின் பொருள்
”நீயே, கண்ணகன்ற உலகத்தில் அந்நாளில் ஆளப்பிறந்த செல்வமாய் உண்டான” தீராக் காட்சி இறந்தைமையால் (அழிந்தமையால்)) நின்பால் வைத்த, உயர்நிலையில் பிறந்த காதல் அவள் கண்களில் தெவிட்டி, தன் மாட்சிமை குலைந்து அமைந்த சீதை
பற்றி அனுமன் சொல்வதாய் பாட்டு அமையும். ”காண் பிறந்தமையால்” என்று பிரிப்பது முறையான சோகப் பொருளைக் கொடுக்காது ”சீதையின் காதற்காலத்தில் கண்ட பழைய காட்சி குலைந்தமையால்/ இறந்தமையால்” என்றால் தான் சோகக் காட்சியின் ஆழம் நமக்குப் புரியும். ”காண்பு இறந்தமையால்” என்ற புணர்ச்சிப் பிரிப்பே பொருள் ஏரணப்படி சரி. யாரோ ஒரு உரையாசிரியரின் முறையற்ற புணர்ச்சிப் பிரிப்பைக் கொண்டு இந்த மிகைப் பாட்டின் பொருளையும் குலைத்தார். கூடவே தவறான சொல்லாய்க் காண் என்பதையும் பின்வந்தோர் அகராதியில் ஏற்றக் காறணமாயிற்று சென்னைப் பேரகராதியின் சறுக்கல்களில் இதுவும் ஒன்று.
அதைப்பிடித்துக் கொண்டு காணொலி சரி என்பது முறையற்றது காண் என்பது காட்சி எனும் பொருளைக் குறிக்கும் பெயர்ச்சொல் அல்ல.
No comments:
Post a Comment