Thursday, September 30, 2021

சருக்கரை

சருக்கரை, சக்கரம் போன்றவை தமிழல்ல என்று சிலர் கூறுவார். ஆனால் அது சரியல்ல. ஆழ ஆய்ந்தால் சருக்கரை பற்றிய நுட்பியல் பெரும்பாலும் இந்தியாவின் தெற்கிலிருந்தே தொடங்கியிருக்கலாம் என்ற முடிவிற்கு வரலாம்.  இந் நுட்பியல் தொடர்பான பல சொற்களுக்குள் தமிழே ஆழமாய் உள்ளது. குப்தர் காலச் சங்கதம் இவற்றை மொழிபெயர்த்ததாலும், தமிழ் இலக்கியங்களை மேலையரிற் பலர் இன்றும் அறியாததாலும், சங்கத மொழிபெயர்ப்பின் முன் எது இருந்ததென்று இன்னும் அறியாதிருக்கிறார். ஆங்கில விக்கிப்பீடியாவில் சங்கத வழிப் பாடங்களே பெரிதுஞ் சொல்லப் பெறுவதால், நம்மூர் ஆட்களும் மூலம் ஏதென்று தெரியாது தடுமாறுகிறார். 

சுல் எனும் வளைவுக்கருத்து வேரில் சாய்வு, வளைவு, கோணல், வட்டம், உருண்டை, முட்டை, உருளை எனப் பல கருத்துச் சொற்கள் எழுந்தன. பாவாணர் நூல்களைப் படித்தால் இவற்றைத் தெளியலாம். குறிப்பாக ”வேர்ச்சொற் கட்டுரைகள்” நூலில் (தமிழ்மண் பதிப்பகம், 2000) பக் 102 - 117 வரை படியுங்கள். இவற்றை மீண்டுமிங்கே நான் சொல்வதைக் காட்டிலும் பாவாணரை நேரே படிப்பது நல்லது. பாவாணரிலிருந்து நான் சற்று வேறு படுவேன். ஆனாற் பெரிதும் அவரையே தழுவுவேன்.. 

இங்கே சக்கரம்> சருக்கரம்> சருக்கரை> சர்க்கரை> சக்கரை என்ற சொற்கள் அடிப்படையில் வட்டத்தைக் குறிக்கின்றன. படிகமாகிய சருக்கரைச் சாற்றுக் கலவையை வடிகட்டிய பிறகு கிடைக்கும் பாகை, வட்ட அச்சுகளில் ஊற்றிக் காயவைப்பர். அப்போது கிடைக்குங் கட்டி, சருக்கரைக் கட்டியானது. நாளா வட்டத்தில் கூட்டுச்சொல் பிரிந்து சருக்கரை என்றாலும் கட்டி என்றாலுமே sugar எனப் புரிந்து கொள்ளப் பட்டன. கட்டிக்கு இன்னொரு பெயர் கண்டம். இதுவும் வடக்கே பரவி, khanda என்றாகி, மேலையரிடம் அது பரவிக் candy என்றானது. சருக்கரையே jaggery எனத் திரிந்தது. 

தொடக்க காலத்தில் கருப்பஞ்சாறு கரும்பிலிருந்து எடுக்கப்படவில்லை. பனஞ்சாற்றிலிருந்தே எடுக்கப்பட்டது. பனை தமிழ்நாட்டிற் தோற்றங் கொண்டது. பனஞ்சாற்றின் பின் தான், அதியமான் காலத்தில் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து கரும்பு பெறப்பட்டுச் சாறெடுக்கப்பட்டது. பனஞ்சாற்றில் பெறுவது கருப்பட்டி. கருப்பென்ற தாவர நிறமே கரும்பிற்குப் பெயராகியது. கருப்பஞ் சாற்றைக் காயவைத்து, நீரை ஆவியாக்கி, சாற்றிலிருந்து சருக்கரையைப் படிகமாக்குவர். சருக்கரைப் படிகத்தை வடிகட்டிய பிறகு இருக்குஞ் சாறு, அதன் வழுவழுப்பின் (=மொழுமொழுப்பின்) காரணமாய் மொழுகு> மெழுகு (molasses) எனப்பட்டது.  இவையெல்லாஞ் செய்த இடம் ஆலையெனப் பட்டது. இத்தனை விவரங்களும் நம் சங்க இலக்கியத்தில் குறிப்பாகவுள்ளன. ஒரு சில கலைச்சொற்கள் அவற்றில் இல்லாது போகலாம். ஆனால் நுட்பந் தொடர்பான மற்ற கலைச் சொற்கள் உள்ளன. 

கருநிறங் காரணமாய் கருநல்>கன்னல் என்ற பெயரும் சருக்கரைக்குண்டு. கரும்பை இயந்திரங்களினூடே கொடுத்துச் சாறு பிழிவதால் இயந்திரத்தின் இன்னொரு பெயரான விசையால் விசையம்>விசயம் என்றும் சருக்கரைக்கு பெயர் ஏற்பட்டது. வட்டக்குழிகளில் பாகை ஊற்றுதற்கு மாறாய் குளிகை போல் கோளமாக்குவதால் குளம் என்ற பெயரும் சருக்கரைக்குண்டு. குள்>குளிகை. குள்>கொள்>கோள்>கோளம் என்ற சொற்கள் எழும். தவிர, சகரமுதற் சொற்கள் சகரந் தொலைத்து அகரமுதற் சொற்களாகி மக்கள் வழக்கில் இடம் பெறும். சக்கரம்> சக்காரம்> அக்காரம். அக்கார வடிசில் = சருக்கரைப் பொங்கல்.  

நுட்பியல் வளர்ச்சியில் மிகுநாள் கழித்து, கருப்பஞ் சாற்றொடு சுண்ணநீர் (Calcium Hydroxide) சேர்த்து, அதில் கரிப்புகையும் உள்ளனுப்பி நுரைக்கவிட்டால், கரிமவேற்றம் (carbonation) ஏற்படும். இதனாற் சாற்றிற் கிடக்கும் புரதங்களைத் (proteins) திரள வைத்து (coagulates), அதே பொழுது கலவைக்குள் உண்டான சுண்ணாம்புத் தூள்களின் (calcium carbonte) மேல், சாற்றிற் கரைந்துள்ள கெழுவங்களைப் (colourants) பரப்பொற்றிப் (adsorb) பிரித்து, பின் திண்மக் கழிவுகளை (solid residues) வடிகட்டி, வெள்ளைச் சருக்கரைச் சாற்றை பெற முடியும். இதற்கப்புறம் வெள்ளைச் சாற்றைப் படிமாக்கினால் வெள்ளைச் சருக்கரைக் குருணைகள் (granules) கிடைக்கும். வெள்ளைச்சருக்கரை வெல்லமென்றுஞ் சொல்லப் பெறும். இங்கும் வெள்ளைச் சருக்கரையை வடிகட்டிப் பிடித்துக் கிடைக்கும் நீர்மம் மெழுகென்றே சொல்லப் பெறும். சுண்ண நீர் சேர்ந்து அயனச்செறிவு (pH) 7 க்கும் மேல் உயர்த்தப்படுவதால் களரிமை (Alkalinity) கூடிக் குளுக்கோசு, விரக்டோசு போன்ற சில ஒற்றைச் சருக்கரைகள் (monosaccharide) சிறிதளவு சிதையலாம். 

வெள்ளைச் சருக்கரை செய்யும் நுட்பம், யுவான் சுவாங் தெற்கே வந்தபிறகு அதன் மூலம் வடக்கே பரவி பின் சீனத்திற்கும் பரவியது. சீனத்தில் வெள்ளைச் சருக்கரையே பெரிதும் விரும்பப் பட்டது. நாளடைவில் இப் புழக்கம் நம்மூரிலும் பரவி வெள்ளைச் சருக்கரையே சீனச் சருக்கரை>சீனி என்றும் சொல்லப்படலாயிற்று.    

 


உடன் இணைத்துள்ள படத்தில் சருக்கரை எங்கு புழங்கியது கண்டம் எங்கு புழங்கியது, சீனி எங்கு புழங்கியது என்பதும் விளங்கும்.

 (https://www.facebook.com/numbers.lk/posts/pfbid0Bvt3ArXhj74Boc8wvogZn7F85ron5WfPbGbHTC9HrurkaRyo3Q1Av8Sz8rLTFbuil) இந்த இடுகையில் பஞ்சாறை பற்றிய விளக்கம் தவறானது. 

பஞ்சாறை என்பது பனஞ்சாறை >ப(ன)ஞ்சாறை என்று புழங்கிய சொல் மலையாளத்தில் நின்று போனது. (பனை மரத்தின் வழியே சருக்கரை பெற்றதை நாம் அறிந்துகொள்ள இன்று மலையாளமே எடுத்துக் காட்டுகிறது. (Essence possessing the five essential qualities; sweetness,                  solbility, smoothness, coolness, and whiteness - என்று கருத்து முதல் காரணம் கூறுவது அறியாமையின் பட்டதாகும். கருப்பட்டிச் சருக்கரை வடவருக்குத் தெரியாது.

சொற்பிறப்பியலில் இது போன்ற அறியாமைக் கூற்றுகள் மிக அதிகம். தமிழைத் தவிர்ப்பதால் ஏற்ப்படும் தடுமாற்றம் இது.   




சேக்கிழான்

"சேக்கிழான் என்ற சொல்லின் பொருளென்ன?" என்று திரு.Karunakaran என்பார் தமிழ்ச்சொல்லாய்வுக் குழுவில் கேட்டிருந்தார். அதற்கு மறுமொழியாய், திரு தாமரைச்செல்வன்,  https://ta.wikipedia.org/s/69i என்ற பதிவினைச் சுட்டி விடை யிறுத்தார், "சே என்பதற்கு காளை என்றும் சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று பொருள் தருவதாகும். வெள்ளாளர்களில் காளையை வைத்து உழவுத் தொழில் செய்து வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால் இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக அறியப்படுகிறது" என்று விக்கிப் பீடியாவில் சொல்வதற்கு ஆதாரமில்லை. அங்கு இக்கட்டுரையை எடுவிப்பு (edition) செய்தவரே ”சான்று தேவை” என அருகில் எழுதியிருக்கிறார் - என்று நான் சொன்னேன்

-------------------------

மாறாக சுள்>செள்>சேள்* என்ற முன்னொட்டை எண்ணிப் பார்க்கலாம். சேள்*>சேளு*>சேடு என்பதும், சேள்*>சேண் என்பதுவும் ”பெருமை, திரட்சி, உயரம்” போன்ற பொருட்பாடுகளைக் குறிக்கும். சேட்டன் = தமையன், பெரியோன், சேட்சி = தொலைவு; சேட்டம் = மேன்மை; சேட்ட தேவி = மூத்த தேவி; சேட்டி = தமக்கை; சேட்டை = மூத்தவள்; சேட்படுதல் = தொலைவாதல்; சேட்புலம் = தொலைவிலுள்ள புலம்; சேடம் = பெருமை; சேடன் = பெரியோன், தோழன், சேடி= தோழி; சேடு= தோழமை; சேணம் = உயரம், துறக்கம், மெத்தை, குதிரையின் மேல் இடப்படும் தோலாசனம்; சேணி = ஏணி; சேணியர் = உயர் உலகிலுள்ள தேவர்; சேணோன்= உயரத்தில் இருப்பவன்; இத்தனை சொற்களையும் நீங்கள் அகரமுதலிகளில் பார்க்கலாம்.

பல நாட்டுப்புற ஊர்களில் இன்றும் ஒரு பெரிய தனக்காரரும் (பெரிய வீட்டுக் காரரும்). சிறிய தனக்காரரும் (சிறியவீட்டுக்காரர். இவர் முன்னவரின் தம்பியாய்க் கூட இருக்கலாம்) இருப்பது வழமை தான். சில வட்டாரங்களில் பெரிய பண்ணை, சிறிய பண்ணை என்பார். (தேவர்மகன் திரைப்படம் நினைவுக்கு வருகிறதா?) இருவருக்கும் சண்டை வரவேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் சில முரண்களும், போட்டிகளும் இவரிடை இருக்கும். (இக்காலக் கட்சிகள், கழகங்கள் போல் இது நீறுபூத்த நெருப்பாய் இருக்கும்).பெரியது, சிறியது என்பதை சேள், அனு என்றும் இன்னொரு வகையில் சொல்லலாம். மலையாளத்தில் அண்ணனைச் சேட்டன் என்றும், தம்பியை அனுயன் என்றும் சொல்வர். ”அனுயன்” என்பான் சங்கதத்தில் அனுஜ என்றாவான். குன்றத்தூரில் சேள்+கிழார் = சேட்கிழார்> சேக்கிழார் குடும்பம் அண்ணன்காரக் குடும்பமாயும், அவரின் தம்பி, அல்லது சிற்றப்பா குடும்பம் அனுக்கிழார் குடும்பமும் ஆகலாம். இச் செய்தியை உறுதிசெய்ய அவர் காலத்துக் கல்வெட்டுகளை அங்குள்ள சுற்று வட்டாரக் கோயில்களில் தேட வேண்டும். 

இப்படிப் புரிந்துகொள்வது எனக்கு இயல்பானதாய்த் தோன்றுகிறது. ஒரு பண்ணையார் அல்லது கிழார் ஏராளம் காளைகள் வைத்திருந்தது, விதப்பான செய்தியாய் எனக்குத் தோற்ற வில்லை. எல்லாப் பண்ணயாரும் அக்காலத்தில் காளைகள் வைத்திருப்பார் தானே? அது தான் அக்குமுகாய இயல்பு. செல்வம் ஒரு காலத்தில் மாடுகளால் அளக்கப்பட்டது. ஊரில் பெருங்கிழார் என்பது அப்படியல்ல. அதிகாரம் கொண்ட குடும்பம் என்பது அதில் முகன்மையான செய்தி. இவர் முதலமைச்சர் ஆகுமளவிற்குப் பெரியவராய் இருந்துள்ளார். தொண்டை மண்டலத்தில், நிலவுடைமைக் குமுகாயத்தில், இவர் குடி பெரிதும் மதித்துப் போற்றப் பட்ட குடி எனவே சேக்கிழார் என ஒரு பெயர் இருந்ததில் வியப்பில்லை.

நான் இங்கு சொன்னது ஒரு முன்னீடே. முதலிரு குலோத்துங்கர் காலத்துக் கல்வெட்டுக்களை ஆழ்ந்து படிக்கவேண்டும். ஆதாரம் தேடவேண்டும். கல்வெட்டியலில் ஆர்வமுள்ளோர் இந்த முன்னீடு சரியா என்ற ஆய்வைச் செய்யலாம். . 

------------------------------

இதற்கு மறுமொழியாய், திரு .Karunakaran திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள ஆடையூர் செக்குக் கல்வெட்டில் உள்ள ”காட்டாம் பூண்டி: சகர ஆண்டு 877(கி.பி 955) வாணகோப்பாடி பெந்ணை வடகரைக்கு காட்டாம் பூண்டி உடைய சேக்கிழான் உலகளந்தான் வீரட்டன் இட்ட செக்கு இதிரெட்டினேன் தேவனார் கொருமுறள் யெண்ணை” என்ற வாசகத்தை வெளிப் படுத்தினார், இதுபோல் இன்னும் பல கல்வெட்டுக்களைத் தேடவேண்டும். சேக்கிழான் என்பது விதப்பான பெயரல்ல. ”ஊரில் இருக்கும் பெருங்கிழார்” என்று இக்கல்வெட்டில் பொருள் வருகிறது. எனவே சேக்கிழார் என்பது ஊர்மக்கள் கொடுக்கும் ஒரு title என்பது விளங்கும். தவிர இக்கல்வெட்டு கி.பி.955 இல் அமைச்சர் சேக்கிழாருக்கு 200 ஆண்டுகள் முன்னேயே இருக்கும் கல்வெட்டு,. அப்படி யெனில் சேக்கிழார் என்னும் பெருங்குடி விளிப்பெயர், ”மழவராயர், பழுவேட்டரையர்” போல்  நாட்பட்டதாகலாம். 

நாம் அறியாத, ஆயாத செய்திகள் வரலாற்றில் இன்னும் உள்ளன போலும்.  

அன்புடன்,

இராம.கி.  

             


காசுப் பணம்

ஒருமுறை cash என்ற சொல்லுக்கான தமிழ்ச்சொல் பற்றிக் கேட்டார். முதலில் கொஞ்சம் பொருளியலையும், ஒரு சில வரலாற்றுச் செய்திகளையும் மனத்திற் கொள்ளவேண்டும். ”பணம் - ஒரு பால பாடம்” என்ற கட்டுரையை மே 20, 2004 இல் திண்ணை வலையிதழில் வெளியிட்டேன். 2014 ஆகத்தில் அதை என் வலைப் பதிவில் சேமித்தேன். அதில் பணம் = money என்பது பற்றி விவரித்தேன். இங்கு நானிடும் இடுகையைப் படிக்குமுன் அக் கட்டுரையை ஒரு முறை படிப்பது நல்லது. சிவகங்கைப் பேச்சு வழக்கில் அந்தக்கட்டுரை உள்ளது. 

http://valavu.blogspot.in/2014/08/blog-post_29.html 

M0 என்பது 15 நாள் கணக்குக் கொண்டது. 15 நாட்களுக்குக் காத்திராது, 24 மணி நேரத்தில் எவ்வளவு பணம் கொண்டுவர முடியுமோ அதையே cash என்பர். instant cash என்பது இக் கணமே புரட்டக் கூடிய பணம். இன்றைக்குப் பணம் என்பது தாளிலும், நாணயத்திலும் புழங்கினாலும், 2000 ஆண்டுகளுக்கு முன் தாள்ப் பணம் கிடையாது. நாணயம் என்பது முத்து, பவளம், தங்க/ வெள்ளி/ செம்பு/ மணிக் கட்டிகளே இருந்து வந்தன. அவை மொத்தத்தையும் பணமென்பார். ஏனெனில் பழங்கால நகரத்தில் அவற்றை எளிதாக நாணயமாக மாற்றிவிட முடியும். ஆனாலும் நாணயமாக எவ்வளவு கைவயம் இருந்ததோ, அதை மட்டுமே instant cash என அன்றுஞ் சொல்வர். 

பொன்னோ, வெள்ளியோ, செம்போ காய்ச்சியெடுத்த உலோகத்தைத் தட்டையாக்கிச் சதுரமாகவோ, வட்டமாகவோ வெட்டி, குறிப்பிட்ட அரசதிகாரியின் இலச்சினையோடு வெளிவந்த நாணயங்களே அன்றுஞ் செலாவணியில் இருந்தன. காய்ச்சி எடுத்து முத்திரைபதித்த உலோக நாணயங்கள் என்ற பொருளில் காய்ச்சு>காசு என்ற சொல் தமிழரிடம் பரவியது. காய்ச்சுதல் என்பது கருக்குதல் என்றுஞ் சொல்லப்படும். காய்ச்சுதலும், கருக்குதலும் ஆகிய இருசொற்கள் பிணைந்து வடக்கே கர்ஷித என்று பரவியதால் காசுப்பணம் என்ற சொல் வடக்கே மகதத்தில் கர்ஷ பண என்றாகியது. அருத்த சாற்றம் படித்தால் கர்ஷ பணம் பற்றி விளங்கும். அற்றைப் பொருளியல் அறிய கட்டாயமாய் அருத்த சாற்றம் படிக்க வேண்டும்.  

தங்கமும், முத்தும், பவளமும், மணிகளும் மோரியருக்கு முன் தமிழரிடமே பெரும்பாலும் இருந்ததால் இந்திய நாட்டின் பொருளியலை மோரியர் காலம் வரை தமிழரே நிருணயித்தார். மோரியரின் மகதம் தமிழர் மேற் படை யெடுத்து (அசோகனின் தந்தை பிந்துசாரன் காலத்தில்) இற்றை கருநாடகத்தை (அற்றையில் இது வட கொங்கு என அறியப்பட்டது. வட கொங்கர் கங்கர் என்று அறியப்பட்டார்) தமிழரசரிடமிருந்து பிடித்தது. வடகொங்கு தமிழரின் கையை விட்டுப் போனதும் தங்கவூற்றும் நம்மை விட்டுப் போயிற்று. தென்கொங்கில் மீந்தபோன மணிகளும் (பொருந்தல், கொடுமணம் போன்ற இடங்களை எண்ணிப் பாருங்கள்), பாண்டிய நாட்டில் முத்தும், சோழநாட்டில் பவளமும் மட்டுமே நம்மிடம் எஞ்சின. பிந்துசாரன் படையெடுப்பால் தமிழருக்கு ஒரு பெரிய இறக்கம் ஏற்பட்டது. 

பொதுவாகக் காசென்பது தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் (நமக்குத் தெ.கி. ஆசியாவிலிருந்து ஈயம் கிடைத்தது.) என எதுவாக வேண்டுமானாலும், கலப்பாகவுங் கூடவும் இருக்கலாம். ஆனால் மேலை நாடுகளில் தங்கம் கிடைப்பது அரிதாய் இருந்தது. கிரேக்கத்திலும், உரோம நாட்டிலும் வெள்ளியே பெரிதானது. நம்மூரிலும் தங்கத்தின் கிடைப்புக் குறையக் குறைய வெள்ளிப் பணம் கூடியது. காசு என்ற சொல்லை விட, வெள்ளியைக் குறிக்கும் அருக்கம்/ உருக்கம், உருவம் போன்ற சொற்களே நாணயம் குறிக்கலாயின. உருவத்திற்கு இன்னொரு பொருளாய் figure என்றும் பொருள்கொண்டார். உருவா>உருபா என்ற சொல் முகலாயர் காலத்தில் இந்தியாவெங்கும் பரவியது.  

ஆங்கிலத்தில் சொல்லப்படும்   argentine (adj.) என்பது mid-15c., "silver-colored;" c. 1500, "of or resembling silver," from Old French argentin (12c.), from Latin argentinus "of silver," from argentum "silver," from PIE root *arg- "to shine; white," hence "silver" as the shining or white metal என்ற பொருள் கொள்ளும். தமிழில் ஒளி என்ற சொல் உல்>உள்>ஒள்>ஒளி என்றே சொற்பிறப்பு காட்டும். உல்> அல்> அர்> அரி என்ற சொல் சூரியனையும் ஒளியையுங் குறிக்கும்.. உல்> எல்> எரி என்பது எரிக்கும் கதிரொளியைக் குறிக்கும். பொதுவாகக் கதிரொளி வெண்மையானதென்றே சொல்வர். உல்> உள்>உரு>உருக்கம் என்பது வெள்ளொளி காட்டும் வெள்ளிமாழையைக் குறித்தது. அரிக்கம்>அருக்கம் என்பதும் வெள்ளி தான். தமிழ் உருக்கு தெலுங்கில் முதலெழுத்தைத் தொலைத்து ருக்கு, ரொக்கு என்றாகும். விசயநகர அரசின் ஆளுமையால் தெலுங்குச் சொல்லில் அம் சேர்த்து ரொக்கம் என்று சொல்லத் தொடங்கினார். ரொக்கத்தை உருக்கம்/உருக்கப்பணம் என்றே சொல்லலாம்.

காசுப் பணம் என்பது 2000/2500 ஆண்டு காலப் பண்டைச்சொல். (சிலர் அதை காசென்று சுருக்கியுஞ் சொல்வர்.) உருக்கப் பணம் என்பது 500 ஆண்டு காலச் சொல். உங்களுக்கு எது பிடிக்கிறதோ, அதைப் பயிலுங்கள். கைப்பணம் என்பது காசுப்பணத்திலும் குறைவானது. அது நம் சட்டைப்பையிலோ, காற்சட்டைப் பையிலோ, பணப் பைக்குள்ளோ இருக்கும் பணம்.

அன்புடன்,

இராம.கி. 


”சங்கம்” பற்றிய என் கட்டுரைத் தொடர் எழக் காரணம்

"ஐயா, அறிந்து கொள்வதற்காக கேட்கிறேன், முனிதல் வேண்டா. சங்கப் பாடல்களில் சஙகு என்ற பொருள் வலம்புரி ( அகம் 201, புறம் 225, 397) என்ற சொல்லாலும் வளை என்ற சொல்லாலும் (புறம் 56) குறிக்கப் பெறுகிறது. தூக்கணாங் குருவிக் கூடு போல என்ற அழகான உவமையையும் சொல்லிச் செல்கிறான் கவி. ஆனால் சங்கு என்ற பொருள் சங்கு என்ற சொல்லாலே சங்கத்தில் எங்கேனும் வழங்கப் படுகிறதா என்று அறிய விழைகிறேன். உதவுக" என்று எழுத்தாளர் மாலன் ஒரு முறை “சொல்லாய்வுக் குழுவில் (தமிழ்ச் சொல்லாய்வுக்  குழுவல்ல)” கேட்டார். இந்த உரையாடலின் காலம் எனக்கு நினைவில்லை. ஆனால் உரையாடல் நினைவிருக்கிறது. நான் அவருக்கு அளித்த விடை இம்மடலில் உள்ளது. இதை இப்போது என் வலைப்பதிவில் சேர்க்கிறேன்.

------------------------- 

அன்பிற்குரிய மாலன், 

நான் ஏன் முனிந்துகொள்ளவேண்டும்? ஒருசொல் தமிழெனில், ”சங்க இலக்கியத்தில் இது வந்துள்ளதா?” என விடாது கேட்கும் விந்தைப் பழக்கஞ் சிலரிடமுண்டு. அப்படிக் கேட்பது தவறு இல்லை. ஆனால் இதே மாதிரிக் கேள்வியை ”நாலு வேதங்களில் இச்சொல் உண்டா?” எனச் சங்கதம் நோக்கிப் பலர் கேட்டு நான் பார்த்ததில்லை. இருக்கு வேதம் தொடங்கி பொ.உ. 400 வரை வந்த சங்கிதை (ஸம்ஹித); ஆரணம் (ஆரண்யக), பெருமானம் (ப்ராஹ்மண), உள்வநிற்றம் (உபநிஷத) ஆகிய எல்லா நூல்களையும் தொகுதி ஆக்கி (இதை வேத இலக்கியம் என்பார்), மகாபாரதம், இராமாயணம், காளிதாசம், புராணங்களையுங் கூடச் (14 ஆம் நூற்றாண்டு வரை) சேர்த்துக் ”குறித்த சொல்” எங்கு வந்தாலும் அதைச் சங்கதமென்று ஏற்றுக் கொள்வார். 

பெரும்’பக்தி’யிற் சங்கத இலக்கியப் பரப்பை இப்படி அகட்டுவது பற்றிக் கேள்வியே எழாது. ஆனால் சங்க இலக்கியங்களுக்கு மட்டும் பெருத்த மனத்தடை எழும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அதன் காலப் பரப்பைக் குறைத்துத் தொடங்கும் காலத்தையும் பின் நகர்த்துவார்; சங்க இலக்கியத்தில் ஒரு சொல் இல்லையென்றால், “அஃகஃகா, தமிழில்லை, பாருங்கள்” என்று  அந்தக் கால ம.கோ. இரா. (MGR) படத்தில் வரும் வீரப்பா பாணியிற் விதந்து சிரித்துக் கொள்வார். இதற்குக் கல்வெட்டு, பானைப் பொறிப்புக்களை உடனழைப்பார். ஒப்பிலக்கிய ஆய்வு பார்க்கலாமென்றால் அதுவும் இவரிடம் எடுபடாது. ”சங்கதத்திலிருந்தே தமிழ் copy செய்தது” எனக் காரணமின்றிச் சொல்லிச் சண்டித்தனம் செய்வார்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு மறுமொழி என்பது சங்கநூல் என்பதை எப்படி நீங்கள் வரையறுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. . 

“நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்

மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய

செய்குறிக் கூட்டம் கழிப்பிய வழிமுறை” 

எனும் கீரந்தையாரின் பரிபாடல் 2, 13-15 ஆம் வரிகளைச் சிலர் தம் கணக்கில் சேர்க்கமாட்டார். ஏனெனில் பரிபாடல் சங்கநூலில் சேர்த்தியில்லையாம். 

பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணாது

இருங்கடன் மூழ்குவார் தங்கை - இருங்கடலுள்

முத்தன்ன வெண்முறூவல் கண்டுருகி நைவார்க்கே

ஒத்தனம் யாமே யுளம்.

எனும் கணிமேதாவியாரின் திணைமாலை நூற்றைம்பது 33. ஆம் பாடலைச் சிலர் சேர்க்க மாட்டார். அதெல்லாம் சங்கம் மருவிய நூலாம். 

”பகையணங்காழியும் பால்வெண்சங்கமும், பணில வெண்குடை” என்ற சிலம்பு 11:43 ஆம் வரியையும், “விளங்குகொடி நந்தின் வீங்கிசை” என்ற சிலம்பு 26:203 ஆம் வரியையும் சேர்க்கமாட்டார். எவ்வளவு தான் வரலாற்றாய்வின் வழி சிலம்பின் காலம் கி.மு.75 என்று சொன்னாலும் “தூக்கியெறி, அது 5 ஆம் நூற்றாண்டு” என்று வையாபுரியாரின் “பிளேட்டையே” திரும்பப் போடுவார். வையாபுரியாரோடு தமிழ் வரலாற்று ஆய்வு நின்று போனதல்லவா?!. என்ன சொல்கிறீர்கள்? ”சங்குழு தொகுப்பின் முத்துவிளை கழனி” என்பதையும் (மணிமேகலை 8:5-6) கூடச் சிலர் சேர்க்கமாட்டார். (நானே அதை கி.பி. 4 ஆம் நூற்றாண்டு என்று சொல்வேன்.)

தமிழிலக்கியம் பற்றி உரையாடும் எல்லா இடங்களிலும் இதைப் பார்த்து விட்டேன். கிட்டத்தட்ட 100 ஆண்டுகாலமாய் எங்கும் அரைத்த மாவே அரைக்கப் படுகிறது. (சங்கம் தமிழ்ச்சொல்லா என்பது அதிலொன்று. சங்கு தமிழெனில் சங்கம் தமிழென நான் சொல்லிவிட்டேனல்லவா? எனவே இப்பொழுது சங்கைப் பிடித்துக்கொண்டீர்கள்.) இருவேறு கருத்தியலார் அதே புளித்துப் போன கேள்விகளைத் திரும்பத் திரும்ப எழுப்பிக் கொண்டுள்ளார். ஆட்கள் தாம் வேறுபடுவர். இப்பொழுது நீங்களும் நானும் இங்கு இதைப் பேசுகிறோம். 

இச்சொல்லாய்வுக் குழுவிற்கு 8 மாதங்கள் முன், நண்பர் சுந்தர் இலக்குவன் என்னை அழைத்து வந்தபோது, ”ஏதோவொரு புதியது நடக்கிறது. நம்மால் முடிந்ததைச் செய்வோம்”. என்று வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்தபிறகு பெரும் ஏமாற்றமே எனக்கு வந்தது. ”பழைய கள்ளு புதிய மொந்தை” தான் இங்கும் நடக்கிறது. ”தமிழில் இது கிடையாது, அது கிடையாது, இது கடன், அது கடன், இது தமிழில்லை. அது தமிழில்லை. எல்லாமே சங்கதம்” என்ற மோதல் தான் இங்கும் நடக்கிறது. இதற்கு எதற்கு இந்தக் குழு? 

எனக்குத் தோன்றுவது இது தான். பேசாமல் நாமெல்லோரும் தமிங்கிலம் பேசிக் களிக்கலாமே? இன்றுள்ள நூறாயிரக் கணக்கான அறிவியற் சொற்களை உருவாக்குவதற்கு தனித்தமிழ் அன்பர் தான் முனைப்போடு இருந்துள்ளார். அவரில்லாது போனால் 100 ஆண்டுகளில் இவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டிருக்காது. இன்னும் ”சர்வகலாசாலையையும் அக்ராசனரையும்” பிடித்துத் தொங்கி நாம் கூத்தாடியிருப்போம். தமிழரின் செயலின்மையைக் காட்டி, ”அது முடியாது, இது முடியாது” என்பதற்கு 1600 பேர் ஏன் இங்கு கூட வேண்டும்? சங்கம் தமிழில்லை என்று சொல்லி விட்டால் எத்தனை பேரின் மனங்கள் குளிர்ந்து போகும்? ”சங்கத்தையே” இல்லையென்று சொல்லி விடுவது எவ்வளவு பெரிய "achievement"? ஒற்றை இந்தியா, ஒரு மொழி, ஒரு கட்சி, இனி உறுதியாய் மலர்ந்து விடுமே? ஏன் அப்படிச் செய்யக்கூடாது?!!!!

அன்புடன்,

இராம.கி.

(பி.கு. சங்கம் தமிழ் தான். மின்தமிழில் நடந்த ஓர் உரையாடலுக்குப் பின் ஒரு கட்டுரைத் தொடர் எழுதி இன்னும் முடியாது என் கணிக்குள் கிடக்கிறது. எனக்கும் அகவை கூடுகிறது. முடியாது கிடக்கும் கட்டுரைகளை இறைவன் அருளிருந்தால் என்றோவொரு நாள் முடிக்கலாம். இப்பொழுது உங்கள் கேள்வி வந்ததற்கு அப்புறம் கணிக்குள் தேடிக் கண்டுபிடித்தேன். உங்களுக்காகவாவது இதை ஒரு நாள் முடிப்பேனா? தெரியவில்லை.)  

---------------------------

நல்ல வேளையாக, இந்த மடலுக்கு அப்புறம் சங்கம் என்ற தொடரை முயன்று முடித்தேன், அது என் வலைப்பதிவில் உள்ளது. தொடரின் தொடக்கம்,  https://valavu.blogspot.com/2018/08/1.html அந்தத் தொடரை முடித்ததற்கு, திரு. மாலனுக்குத் தான் நான் நன்றி சொல்லவேண்டும். 


Sunday, September 26, 2021

bakery = வேக்கை

bake (v.) Old English bacan "to bake, to cook by dry heat in a closed place or on a heated surface," from Proto-Germanic *bakan "to bake" (source also of Old Norse baka, Middle Dutch backen, Old High German bahhan, German backen), from PIE *bheg- (source also of Greek phogein "to roast"), extended form of root *bhē- "to warm" (see bath). 

அடிப்படையில் வெள்+கு->வெட்கு->வெக்கு- என்பது dry heat இல் ஏதோவொரு பொருளை (அது ஏனமாயும் இருக்கலாம், ஏனத்தோடு உணவுப் பொருள் ஆகலாம், அல்லது ஏனமில்லாது சுடுதலாயும் இருக்கலாம்.) சுடவைப்பது தான். bread, cake போன்றவற்றைச் சூளை போன்ற bakery இல் தான் செய்கிறார். வெக்குதல், வெக்கை. வெக்காடு, வெக்காளம், வெங்கை,  வேகுதல், வேக்காடு,  போன்ற கணக்கற்ற சொற்கள் தமிழில்  சூடாகுவதைக் குறிக்கும். நம் வெக்குதலோடு தொடர்புடைய பல சொற்கள் Burrow and Emineau வின் DED 4540 இல்  பட்டியலிடப் பட்டுள்ளன. கன்னடம் போன்ற சில தமிழிய மொழிகளில் இது  be எனத் தொடங்கலாம். ”வெ” யில் தொடங்கும் பல தமிழியச் சொற்கள் இந்தையிரோப்பியனிற்குப் போகும் போது, இதுபோல் be இல் தொடங்கும். 

நம் வெக்குதலும் to bake என்பதும் தொடர்புடையன என்பதே என் கருத்து. ஆயினும் இவ்வுறவுமுறையை  மறுக்கும் அறிஞர் மிளகுத்தண்ணியையும். கட்டுமரத்தையும் தவிர்த்துத் தமிழுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் தொடர்பேயில்லை என்று தலைமேல் அடித்துச் சாதிப்பார். என்னைப் போல் உறவு சொல்வோரையும் கேலி செய்வார். இம்மறுதலிப்பை வேதவாக்கு என்று தம் தலைமேல் எடுத்துக்கொண்ட சில சொல்லாக்கர், “நமக்கு எதுக்குப் பொல்லாப்பு?” என்று அச்சமுற்று, அடுதல் = சுடுதல் வழி உருவான ”அடுமனையை” bakery க்கு ஈடாய்ச் சொல்வார். சுள் என்பதிலிருந்து சூளை என்ற சொல் தமிழில் உருவாகலாமெனில் வெக்கு என்பதிலிருந்து வேக்கை என்ற சொல் bakery க்கு இணையாய் உருவாகலாம். Nostratic theory யே எமக்குப் பிடிக்கவில்லை என்று தீண்டாமை காண்போர் தம் விருப்பு வெறுப்பில் இதை ஒதுக்கலாம். (தமிழையும் தமிழிய மொழிகளயும் கொண்டு போய் இந்தையிரோப்பியனுக்கு அருகில் வைக்கலாமோ?”) 

ஆனால் உள்ளார்ந்த உறவு மறைந்துவிடாது. என் பரிந்துரை bakery = வேக்கை  

வீரம்

 வீரம் என்ற சொல் நான் புரிந்துகொண்டவரை தமிழே. எல்லாவற்றையும் சங்கதமென்று சொல்லி ஏன் இப்படித் தொலைக்கிறோமோ தெரியவில்லை. அந்த அளவிற்கு மேலையரும், 19 ஆம் நூற்றாண்டுத் துபாசிகளின் ஆய்வும் நம்மை வழிகாட்டிக்கொண்டா இருக்கின்றார்/றன? சங்கத வழிபாட்டை நாம் என்று தான் நிறுத்துவோம்?

வல்லென்ற வேர்வழிப் பிறந்த பலசொற்களுக்கு strength, power என்ற பொருட்பாடுகளும் ability, capacity, talent, skill என்ற பொருட்பாடுகளுமுண்டு. ஓர் உயிரி இன்னோர் உயிரியோடு (விலங்கோ, மாந்தனோ) மோதும் போது, ஒருவர் தன் வலிமையால் இன்னொரு வலிமையோடு பொருதுகிறார். இதைப் போரில் வலி காட்டுதலெனச் சொல்கிறோம். ஆங்கிலத்தில் வலியை valour/valor என்பார். etymonline.com என்ற வலைத்தளத்தில் valor (n.) c. 1300, "value, worth," from Old French valor, valour "valor, moral worth, merit, courage, virtue" (12c.), from Late Latin valorem (nominative valor) "value, worth" (in Medieval Latin "strength, valor"), from stem of Latin valere "be strong, be worth" (from PIE root *wal- "to be strong"). The meaning "courage" is first recorded 1580s, from Italian valore, from the same Late Latin word. (The Middle English word also had a sense of "worth or worthiness in respect of manly qualities"). என்று போட்டிருப்பர். மேலை மொழிகளுக்கும் தமிழுக்குமான இணையை இதைப் படித்த பிறகாவது சரியாக உணரலாம்.
போர்வலியிற் கூடவருவது ஒருவிதமான பரபரப்பு, விருவிருப்பு (விறுவிறுப்பு). இதை நம் உடம்பினுள் நடக்கும் விரைவுச் செயலாயும் கொள்ளமுடியும். பர்பர்>பரபர= உடம்பை அரித்தற் குறிப்பு, பரபரத்தல், விர்>விரு>விருவிருத்தல், விர்>விரு>விருட்டு, விர்> விரு>விர>விரை, விரைதல், விரைத்தல், விரசுதல், விறுவிறெனல் ஆகிய சொற்களை போர்வலி காட்டும் போது உணர்வோம். இந்த விர்>விரு எனும் ஒலிக் குறிப்பில் தோன்றியதே வீர்>வீரம் என்னும் சொல். விறல், விறலோன் என்ற சொற்கள் கூட வீரத்திற்கு இணையாக உண்டு. விறல் மிண்ட நாயனார் என்பாரும் இருந்தார். இதேபோல் சுர்>சுரு, சரேல், சுர்> சுர> சுரணை= குத்தும் மானவுணர்ச்சி, சுர்>சுரி>சூரி= குத்துங் கத்தி, சுர்>சூர்>சூரன், துர்>துரு>துர>துரத்தல் போன்ற சொற்களெல்லாம் போர்வலி காட்டும்போது வெளிப்படும் ஒலிக்குறிப்புகளும் அவற்றால் எழுந்த செயற்பாடுகளும் ஆகும். இவ்வளவு சொற்கள் இருக்கின்ற போது நாம் வீரத்தைக் கடன்வாங்க வேண்டிய தேவையென்ன?
ஆனாலும் வீரம் நம்மிடம் உள்ளது. அதன் பொருள் என்ன? வீரம் தமிழ்ச்சொல் என்று தானே பொருள்?. அதே பொழுது சங்கதத்திலும் வீர் என்ற சொல்லுண்டு. பாணினியின் தாது பாடத்தில் (DhAtup. 35 49) to be powerful or valiant, display heroism என்ற பொருளில் இச்சொல்லைக் காட்டுவர். இச்சொல் இருக்கு வேதத்திற் பயின்றதாகவுஞ் சொல்வர். இரு மொழிகளில் இருப்பதால் சங்கத வேர் தமிழுக்குக் கடன்வந்தது என்று சொல்வதிற் பொருளில்லை. அதற்கான சான்றுகள் இல்லை. வேண்டுமெனில் இரண்டிலும் இந்த வேர் உள்ளதென்று மட்டுமே சொல்ல முடியும். தவிர இன்னொரு பொருளிலும் வீர் என்ற பயன்பாடு இரு மொழிகளிலும் வரும். தமிழில் பிள்>பீள்>பீர்>பீறுதல்= கிழித்தல், பிளத்தல், பிராண்டுதல் என்ற பொருளில் ஒரு சொல்லும், வகர வழக்கில் விள்>வீள்>வீர்>வீறுதல்= கிழித்தல், கீறுதல், பிளத்தல் என்ற பொருளிலும் வரும். இதே பொருளில் மோனியர் வில்லியம்சில், சங்கதச் சொல்லான viir என்பதற்கு to split, break into pieces, tear open, divide asunder என்ற பொருள் போட்டிருப்பர்.
மொழித் தோற்றம் வியப்பானது. இப்போதைக்கு இரு மொழிகளுக்கும் பொதுவான சொற்கள் என்று வேண்டுமானால் சிலவற்றைக் குறிக்கலாம். 10, 15 ஆண்டுகளாகவே திராவிடமொழிக் குடும்பிற்கும், இந்தையிரொப்பிய மொழிக் குடும்பிற்கும் ஏதோ வொரு உறவிருப்பதை நான் விடாது சொல்லி வருகிறேன். நம்புவதற்குத் தான் இன்னும் பலர் தயங்குகிறார். என்ன இருந்தாலும், வில்லியம் சோன்சும், மாக்சுமுல்லரும், மோனியர் வில்லிம்சும், கால்டுவெல்லும், எமெனோவும், பர்ரோவும் இந்திய அறிஞரை விடப் பெரியவர்களல்லவா? என்ன நான் சொல்லுவது :-00000000
ஆமாம், எத்தனை காலம் மாற்றார் பாவாணரைத் தூக்கிக் கடாசிக்கொண்டே இருப்பார்? நாமும் வாய்மூடி மோனிகளாய் இருப்போம்?
அன்புடன்,
இராம.கி.

Saturday, September 25, 2021

ஆவி - ஆதன் - ஆன்மா

 வாய்திறந்து மூச்சுவெளிவிடுதலை ”ஆவென மூச்சுவிட்டான்” என்போம். ஆவுதலின் வழிப்பிறந்த பெயர்ச்சொல் ஆவி. முக்கால்/வாயால் வெளிவிடுங் காற்றைக் குறிக்கும். ஆவி தமிழே. உள்ளிழுக்கும் செயலை உய்தலென்றும், வெளிவிடுஞ் செயலை ஆதல்/ஆவுதல் என்றுஞ்சொல்வோம். இதற்கு உண்டாதல், நிகழ்தல், ஒப்பாதல், அமைதல் வளர்தல் போன்ற அசைவுப் பொருள் காட்டுவோம். உய்தலிற் பிறந்தபெயர் உயிரானது போல். ஆதலிற் பிறந்தது ஆவி. ஆவிக்குப் பகரி ஆதன். விலங்காண்டி மாந்தருக்கு உயிரெனும் கருத்துப்பொருள் புரியாவிடினும், மூக்கால்/வாயால் உள்ளிழுப்பதும் வெளி விடுவதும் நின்றுபோயின், ”ஆள் இறந்துபட்டான்” என்பது பட்டறிவால் தெரியும். காற்றெனும் பருப்பொருளை வைத்தே கருத்துப் பொருள் அறிந்தார். கொட்டாவி என்பது சட்டென்று தனையறியாது மாந்தர் வாயால் வெளிவிடும் காற்று. வாய்க்காற்றுக்கு வாயுவென்றும் பெயருண்டு. வாயுவும் தமிழே. (பலவற்றைச் சங்கதத்திற்கு ஈந்து ஏமாளியாய்த் தமிழிருக்கிறது.) ’ஆ’வெனும் ஓரெழுத்து மொழிக்கு உயிரென்ற பொருளுமுண்டு. உடலசைவிற்கு ஆதன் காரணமென எண்ணத் தொடங்கினார். ’ஆ’னும் மா (=விலங்கு) ஆன்மா ஆயிற்று. இந்தையிரோப்பியனிலும் ஆ-வென்பது மூச்சு விடுதலே. 

அதன் ஆங்கில வரையறையைப் பாருங்கள். animal (n.) early 14c., "any sentient living creature" (including humans), from Latin animale "living being, being which breathes," noun use of neuter of animalis (adj.) "animate, living; of the air," from anima "breath, soul; a current of air" (from PIE root *ane- "to breathe;" compare deer). A rare word in English before c. 1600, and not in KJV (1611). Commonly only of non-human creatures. It drove out the older beast in common usage. Used derisively of brutish humans (in which the "animal," or non-rational, non-spiritual nature is ascendant) from 1580s. உயிருள்ள விலங்கு ஆன்மாவாகிப் பின் உயிருக்கென விதப்பான பெயராயிற்று. ஆதல், ஆகுதல், ஆயுதல், ஆவுதல், ஆனுதல் எனும் எல்லாவற்றிற்கும் தமிழில் ஒரே பொருள் தான். ’ஆ’தும் மா ஆத்மா. இது சங்கதம் போன்ற வடபுல மொழிகளில் புழங்கியது. தமிழில் ஆதனும் உண்டு, ஆன்மாவும் உண்டு. ஆத்மாவை ஒதுக்குவார். ஏனெனில் ஆதுமா என்பது ஆத்மா எனவொலிக்கும்போது தமிழில் பழகா ஒலியாய்த் தோற்றும். எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆவெனும் ஒலியே. உயிரும் ஆதனும் ஒன்றே.  


ஆதன் அவனி

 இந்தத் தலைப்பில் கூகுளில் தேடிக்கொண்டிருந்தேன். 

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF

என்பது கிடைத்தது. அதில், “வெளிவிடும் காற்று, அவிந்த காற்று. எரிந்தது அவிந்தால் கரி. அதனால் வெளிவிடும் காற்றைக் கரி+அமில வாயு என்பர். தமிழ் அவிந்த காற்றை அவினி என்று குறிப்பிடுகிறது” என்று எழுதியிருந்தது. இதுபோல் எங்கு குறிப்பிட்டுள்ளார்? - என்பதற்கு அங்கு ஆதாரம் தர வில்லை. பெரும்பாலான அகராதிகளில் தேடிப் பார்த்துவிட்டேன். எங்கும் இச்சொல் தனிப்படக் கொடுக்கப்படவில்லை. மீறினால் அபின் என்பதோடு தொடர்பு உறுத்தப் படுகிறது. தமிழ் விக்கிப் பீடியாவில் இருக்கும் விளக்கத்திற்கு சான்று கொடுக்க மறந்தாரா? அன்றேல் அங்கு கொடுத்துள்ளது,  இடுகை இட்டவரின் சொந்த விளக்கமா? - என்று தெரியவில்லை.

அதைப் படித்தபோது இன்னொன்றும் எனக்கு விளங்கவில்லை. ”ஆதன் அவினி” என்று இடுகை இட்டவர் எப்படி இப்பெயரை முறைப்படுத்திக் கொண்டார்? ”வாழி ஆதன் வாழி அவினி” என்று தான் அங்கு ஓர் அடி இருக்கிறது. ஐங்குறு நூற்றின் முதல் பத்தில் ஆதன் முதலில் வருவதைக் கொண்டு ஆதன் அவினி என்றாரா? அவன் சேர அரசன் எனும் போது ”அவினியாதன்” என்ற பெயராயும் அது இருக்கலாமே? ஏன் ”ஆதன் அவினி”?- என்பதற்கு =விளக்கமில்லை. ஐங்குறுநூறு எனும் நூல் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை காலத்தில் பாடப்பட்டுத் தொகுக்கப் பெற்றது என்பார். இதில் வரும் பாட்டுத் தலைவர் எல்லோருமே அரசகுலத்தைச் சேர்ந்தவரே! அப்படியெனின் அவினியாதன் என்பான் பெரும்பாலும் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் காலத்தைச் சேர்ந்த ஓர் அரச குலத்தான் என்று ஆகமுடியும். (என் கணக்குப் படி ஐங்குறு நூற்றை கி.மு.75-50 அருகில் சேர்ப்பேன்.)

மூன்றாவதாய் ஒன்றும் விளங்கவில்லை. “அவனி என்ற சொல் தமிழில்லை” என்று செந்தமிழ்ச் பேரகரமுதலி தவிர்த்துள்ளது. மோனியர் வில்லியம்சோ ”அவனி என்ற சொல் ஆற்றுப்படுகை, ஆறு ஆகிய வற்றைக் குறிப்பதாய் இருக்கு வேதம் வழியும், பூமி, பூமியிலுள்ள இடங்கள் என்று குறிப்பதாய் சங்கத நிகண்டு வழியும், வால்மீகி இராமாயணம் வழியும், பஞ்சராத்திர ஆகமம் வழியும்” சொல்வது கண்டு, சற்று தடுமாறிப் போகிறோம். அவல் என்பது தமிழ் தான். ”அவலா கொன்றோ. மிசையா கொன்றோ” என்று புறம் 187 இல் கி.மு. 150  ஐச் சேர்ந்த ஔவை பாடுவாள். மூவுலகுத் தொன்மத்தில், சொக்கம் என்பது மேலுலகம் என்றும். பூமி என்பது கீழுலகம் என்றும். பாழ்தலம் என்பது பூமிக்கும் கீழ் என்றும் கொள்ளப் பெறும். அப்படியாகின், அவல்நன் = பூமியை ஆளும் தலைவன். அவல்நி = பூமி என்பதும் இயல்பான தமிழ்ச்சொற்களாகவே சொல் எழ முடியும். ஐங்குறுநூற்றின் முதல் நூற்றுத் தலைவன் ”அவனியாதன்” என்றே கொண்டால் அதில் என்ன பிழை ஏற்படும்? ”அவனிக்குத் தலைவன்” என்று, தமிழில் ஒழுங்கான பொருள் வருகிறதே? 

இதை ஏற்பதற்கு முன் 2 கேள்விகள் நம்முன் எழுகின்றன.

1. அவினியா? அவனியா? பாடவேறுபாடுகள் எங்கேணும் ஐங்குறு நூற்றிற்குக் கொடுக்கப் பட்டுள்ளனவா? அல்லது இதுவும் சுவடியின் படியெடுப்புப் பிழையா?

2. செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் ”அவலை” ஏற்றவர், “அவல்நம்>அவனம், அவல்நி> அவனி” போன்றவற்றை ஏன் ஒதுக்கினார்?

அன்புடன்,

இராம.கி.

Ammonia - நீர்க்காலகை

நம் மூக்கால் உறிஞ்சி நுரையீரலுக்குள் புகும்படி இழுக்கும் காற்று அடிப்படையில் ஒரு வளிக்கலவை ஆகும். இதிலுள்ள ஈரம், நுண்ணளவு வளிகள் ஆகியவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், ஏறத்தாழ 21% பங்கு அஃககமும் (oxygen), 79% பங்கு nitrogen உம் இக்காற்றிலுண்டு. அஃககமின்றி நாம் உயிர் வாழவே முடியாது. அதே பொழுதில்  nitrogen இன் இருப்பைக் காற்றில் தவிர்க்கவும் முடியாது. (nitrogen ஐ அமைதிக் கொலையாளி - silent killer - என்றும் சொல்வர்.) ஆங்கிலத்தில் தென்னமெரிக்கச் சிலியில் கிடைத்த Nitre எனும் உப்பிலிருந்து இவ்வளி முதலில் பெறப்பட்டதால் இதை Nitrogen (நைட்டரில் கன்றியது) என்றார்.  பிரெஞ்சு மொழியில் இதற்கு Azote - Inert Air என்ற பெயருண்டு. ”அசையாத, வினைசெய்யாத, ” என்று  பிரஞ்சுச் சொல்லின் பொருளமையும். 

தமிழில் இதற்குப் பெயர் தேடும்போது, பிரஞ்சைப் பின்பற்றிக் காலகம் (கால் = அசையாத காற்று) என்ற பெயரை 1969 இல் பரிந்துரைத்தேன். ஆங்கிலப் பெயரின் காரணத்தை அவ்வளவு பொருளுள்ளதாக அப்போது என்னால் ஏற்கமுடியவில்லை. (1969 இல் பல தனிமங்களுக்குத் தமிழ்ப்பெயர் உரைத்துத் எளிமங்களின் முறைப் பட்டியல் ஒன்றை உருவாக்கினேன். அதைச் சீர்படுத்தி வரும் நாட்களில் இணையத்தில் வெளியிடுவேன்.) நீரகம் என்பது முதல் எளிமமான Hydrogen ஐக் குறிக்கும். “நீரினை உண்டாக்கும் வளியம்” என்று அதற்குப் பொருள் தரும் hydro எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து இப்பெயர் ஏற்பட்டது. இதேபொருளில் தான் நாம் அதை ”நீரகம்” என்கிறோம்.

இற்றை வேதியலில் 1 பங்கு காலகத்தையும், 3 பங்கு நீரகத்தையும் சேர்த்து குறிப்பிட்ட வேதிவினை செய்து ammonia என்ற பொருளை உருவாக்குவர். வேளாண்மையில், அம்மோனியா பெரிதும் பயன்படுகிறது. நம்நாட்டில் பல்வேறிடங்களிலுள்ள உரத் திணைக்களங்களில் (fertilizer plants; நமக்குத் தூத்துக்குடியிலும், சென்னையிலுமுள்ள உரக் கும்பணிகளில்) அமோனியாவும், உமரி (urea)யும் வேறு பல உரங்களும் மானுறுத்தப் (manufacture) படுகின்றன,  அமோனியா திணைக்களம் அந்தக் கும்பணிகளில் பென்னம் பெரியது.

அமோனியா என்ற பெயர் எழுந்த விதம் விதப்பானது. Ammon என்ற கிரேக்க, உரோமச் சொல் எகுபதியரின் சூரியத் தெய்வமான அமுனைக் (இருளில் மறைந்துள்ளவன்) குறிக்கும். [கிரேக்கத்தில் இதேசொல் வியாழனைக் (அப்போலோ) குறித்தது.] பழங்கால எகுப்தில் அமென் ரா (Amen-Ra) என்றும் சூரியக் கடவுளைச் சொல்வர். இச்சொல்லின் வழியே அம்மோனியா என்ற பெயர் அமுன்>அமோன்>அமோனியா என்ற வ்ளர்ச்சியின் படி இடுகுறியாய் எழுந்தது. எளிதில் ஆவியாகக் கூடிய அம்மோனியா வேதிவினைகளில் இது களரியாய் (alkali) நடந்து கொள்ளும்.  அமோனியாவை நுகரும் போது சட்டென மூக்கில் குத்துவது போல் ஒரு நெடி தூக்கும். இந் நெடி வராத உரக் கும்பணிகள் உலகில் கிடையா. 1799 இல் சுவீடன் நாட்டு வேதியலார் Torbern Bergman என்பார்,  லிபியாவில், வியாழக் கடவுளின் கோயிலுக்கு அருகில்,  ammonium chloride உப்புப் படிவங்களிலிருந்து (sal ammoniac என்பதைச் சாரம் என்றும் தமிழில் சொல்லி யுள்ளார்) பெற்ற வளி இதுவாகும்.  

அமோனியா என்ற இடுகுறிப்பெயரை விரும்பாது,  ”நீர்க்காலகை” எனும் காரணப் பெயரை நான் 1969 இல் பரித்துரைத்தேன்.  நீர்க்காலகக் களரி, காடி(acid)யோடு வினைசெய்தபின் ammonium என்ற பொதியகத்தை (cation) உருவாகும். இதை ”நீர்க்காலய-” என்று சொன்னேன். நீர்க்காலகை, நீர்காலய  என்பனவற்றைப் பயன்படுத்துவதில் இதுவரை எச் சிக்கலையும் நான் காண வில்லை. மேற்சொன்ன தனிமங்களின் முறைப்பட்டியலில் "யம்" என முடிந்தால் மாழை என்றும், கம் என்று முடிந்தால் மாழையல்லாதது என்றும் வழக்கம் கொண்டிருந்தேன்.

அலங்க வேதியலில் (organic chemistry) அம்மோனியாவின் ஒரு நீரக அணுவைப் பிரித்து அவ்விடத்தில் ஒரு நீரகக் கரிம வேரியைச் (hydrocarbon radical) செருகினால் ஏற்படுவது நீர்க்காலனை எனப்படும். [amine "compound in which one of the hydrogen atoms of ammonia is replaced by a hydrocarbon radical," 1863]. அமோனியாவில் ஒரு நீரகத்தை எடுத்துவிட்டு, அங்கு ஓர் எளிமத்தையோ, அல்லது இன்னொரு வேரியையோ (radical) பொருத்தினால் வருவது நீர்காலதை (-amide; 1850, word-forming element denoting a compound obtained by replacing one hydrogen atom in ammonia with an element or radical). அதேபோல் imide ஐ நீர்க்காலசை எனலாம்.

அன்புடன்,

இராம.கி. 


Thursday, September 23, 2021

தமணி

" தமனி ( = blood vessel) எனுஞ் சொல்லின் சொற்பிறப்பென்ன? தமிழின் தும்பு, வடமொழி தமணி என்ற சொற்களோடு தொடர்பிருக்கலாமா?" என்று தமிழ்ச் சொல்லாய்வுத் தளத்தில் கேள்வி எழுந்தது. இதற்கு விடைதருமுன்,  ”குருதயமும் (heart) குருதியும் (blood)” என்ற தொடரைப் படியுங்கள்.  முழுதும் முடியவில்லை எனில், நாலாம் பகுதியையாவது படியுங்கள். 

https://valavu.blogspot.com/2020/12/heart-blood-1.html

https://valavu.blogspot.com/2020/12/heart-blood-2.html

https://valavu.blogspot.com/2020/12/heart-blood-3.html

https://valavu.blogspot.com/2021/01/heart-blood-4.html

குருதய இயக்கம் என்பது ஓர் 2 தகை (stage) இறைப்பியின் (pump) இயக்கம் போன்றது. இதன் முதல் தகையில். உடலின் பாகங்களிலிருந்து வரும் கெட்ட (அதாவது அஃககம்/oxygen குறைந்த) குருதி, உள்ளகக் குவி வழிநத்தின் (interior vena cava) மூலமும், உம்பர்க் குவி வழிநத்தின் (Superior Vena cava) மூலமுமாய்,  குருதயத்தின்  வலது அட்டத்துள் (right atrium. அட்டம்= மேல்/முன் அறை) நுழைந்து,  முக்குயப்பு வாவி (Tricuspid valve) மூலம், வலது வளைக்குள்  ( right ventricle) நுழைந்து, குருதியழுத்தம் கூடியபின், புழைமுறு வாவி (pulmonary valve) வழியாகப் புழைமுறு எழுதைக்குள் (Pulmonary Artery) புகுந்து, நுரையீரலை அடையும். நுரையீரலில் அஃககம் ஏறிய குருதி, 2 ஆம் தகையில், புழைமுறு வழிநம் (Pulmonary vein) மூலம்  இடது அட்டத்துள் (Left Atrium) நுழைந்து, மிடை வாவி (Mitral valve) மூலம் இடது வளைக்குள் (Left venticle) நுழைந்து, முடிவில் குருதியழுத்தங் கூடி, எழுதை வாவி (Aortic valve) மூலம், எழுதத்துள் (Aorta) நுழைந்து, வெவ்வேறு உடற்பாகங்களுக்கு நாளங்கள் வழி இறைக்கப் படும்.  (மேற்சொன்ன 4 ஆம் பகுதியில் இதயப்படம் இருக்கிறது. அதையும் சேர்த்துப் பார்த்தால், இந்தப் பத்தி புரியும்.) 

மேலே உயிரியல் பார்வையில் இதய இறைப்பி பற்றிச் சொன்னதைப் பொறியியல் பார்வையிலும் விவரிக்கலாம். பொதுவாய் எல்லா இறைப்பிகளுக்கும் உறிஞ்சு தூம்பு (suction tube), வெளித்தள்ளு தூம்பு (discharge tube) என 2 நாளங்கள் உண்டு.   முதல் தகையில்,  சேரை (பேச்சுவழக்கில் சிரை) எனும் உறிஞ்சு  (suction) தூம்பின் வழியாக, வலது வளைக்குள் கெட்ட குருதி நுழைந்து, அங்கு அழுத்தம் கூடிய பின், தமணி எனும் வெளித்தள்ளு (discharge) தூம்பின் வழியாக, நுரையீரலுக்குப் போகும். இரண்டாம் தகையில். நல்ல குருதி சிரையின் வழி இடது வளைக்குள் நுழைந்து, குருதியழுத்தம் கூடியபின் வெவ்வேறு உடற்பாகங்களுக்குத் தமணி (discharge) வழியே போகும். 

ஆக, வெளித்தள்ளும் தூம்பைத் தமணி என்றும், உறிஞ்சு தூம்பைச் சிரை என்றும் அழைக்கிறோம். இனி சொற்பிறப்பிற்குள் போவோம். தமிழில்  தருதல் என்பது கொடையைக் குறிக்கும். (ஈ,தா, கொடு) இதயத்திலிருந்து கூடிய அழுத்தத்தில், வெளித்தள்ளுதல் என்பதும் அதுவே.  தேவையான அழுத்தம் இருந்தால் தான், உடலின் எல்லா இடங்களுக்கும் குருதி போகும்.  தரு/தா எனும் வினையடி, தள் எனும் வேரில் கிளைத்தது. இதயத்திற்கே கூடத் ”தருபொறி” என்ற சொல்லை சூடாமணி நிகண்டு காட்டும். அதாவது உடம்பின் எல்லா இடங்களுக்கும் குருதியைத் ”தரும் பொறி” இதயமாகும். வரை, இறை என்ற சொற்களும் கூட இதயத்திற்குண்டு.  அணி என்பது, வெவ்வேறு உடலுறுப்புகளுக்கு குருதியைக் கொண்டுசேர்க்கும் நாளக் கட்டுமானம். ”தரும் அணி” என்பது ஒருபக்கம் இதயத்திலும், இன்னொரு பக்கம் குருதி வேண்டும் உடலுறுப்பிலும் இணைக்கும் அணி. (அணிவகுப்பு என்று படைகளின் களப் அமைப்பைச் சொல்கிறோமே, அதையும் இங்கு எண்ணிப் பாருங்கள்.) உடலுறுப்பில் பயன்பட்டு இதயத்திற்கு மீண்டும் கொண்டு சேர்க்கும் கட்டுமானம் சேரை அல்லது சிரை எனப்படும்.  

இனித் தருமணி என்பது பேச்சுவழக்கில் தம்மணி>தமணி>தமனி என்றமையும். வடபால் மொழிகளில் தமணி (வடக்கே டண்ணகரமே பயில்வர். றன்னகரம் பயில்வது தவறான பலுக்கல்.)  

என்றே சொற்பிறப்பு அறியாமல் பயிலுவர். ரும என்பது ம்ம என்றாவது தமிழிலும் உண்டு. (கருமம்>கம்மம்>கம்மாளர், மருமம்> மம்மம், உருநம்>உண்ணம், கருநன்>கண்ணன் இப்படிப் பல சொற்களைச் சொல்லலாம். புள்ளி மயங்கிய பலுக்கலே பாகதம், பாலி மொழிகளில் பயிலும். இந்தப் பாகதச் சொல் தான் சங்கதம்  போனது. 

Dhamanī (धमनी, “arteries”) are the channels which carry blood forcefully (pulsating) from heart to different organs. Sirā (‘veins’) are those which bring blood back to heart slowly. Between these two are keśikā (‘capillaries’) which spread like minute webs and through which, rasa (‘nutrient material or serum’) oozes to the tissues என்று பாகத வழிப் பொருள் சொல்வர். அடுத்து சங்கத வீளக்கத்திற்கு, மோனியர் வில்லியம்சு போகலாம்

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary

1) Dhamani (धमनि):—[from dhmā] f. the act of blowing or piping, [Ṛg-veda ii, 11, 8]

2) [v.s. ...] (also nī) a pipe or tube, ([especially]) a canal of the human body, any tubular vessel, as a vein, nerve etc., [Atharva-veda; Chāndogya-upaniṣad; Mahābhārata; Suśruta] etc. (24 t° vessels starting from the heart or from the navel are supposed to carry the raca or chyle through the body)

3) [v.s. ...] the throat, neck, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

4) [v.s. ...] Name of Hrāda’s wife (the mother of Vātāpi and Ilvala), [Bhāgavata-purāṇa]

5) Dhamanī (धमनी):—[from dhamani > dhmā] f. a sort of perfume, [Bhāvaprakāśa]

6) [v.s. ...] turmeric or Hemionitis Cordifolia, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

7) Dhāmanī (धामनी):—[from dhāmanikā] f. Hemionitis Cordifolia, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

8) [v.s. ...] any tubular vessel of the body (= dhamani), [ib.]

தமணியின் சொற்பிறப்புத் தமிழ் வழியிலேயே எந்தச் சிக்கலுமின்றிக் காணமுடிகிறது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் கூறப்படுவது தவறான விளக்கம். அந்தப்  பேரகரமுதலியில் சரி செய்யவேண்டியது நிறைய உள்ளது.

அன்புடன், 

இராம.கி.

பி கு: குருதித் தூம்புகளாயன்றி நரம்பிற்கும் கூடச் சிரை. நாடி என்ற பெயருண்டு.          


Saturday, September 11, 2021

பன்றி

பல வகைப் பன்றிகளுக்கு ஒரு சோடிப் பல் யானைத் தந்தம் போல் முன்வந்து நிற்கும். அந்த பன்றி இரை தேடும்பொழுது, முன்வந்துள்ள பல்லும் (அதைக் கொம்பு என்றுஞ் சொல்லுவர்) முகனப் பங்கு வகிக்கும். பல்+து = பற்று>பற்று-தல் = பிடி-த்தல். பன்றி என்னும் விலங்கு தன் பல்லால் இரையைப் பிடித்துக் கொள்ளும். ஆறறிவு மாந்தனோ் தன் கையாலும், பல்லாலும் பருப் பொருள்களைப் பிடித்துக் கொள்வான். உயர்திணையில் பற்றலுக்கு ஏற்படும் பொருள் வளர்ச்சி இது.

பல்+நு = பன்னு>பன்னு-தல் = பற்று-தலைப் பலுக்கையில் ஏற்படும் மெல் ஒலிப்புத் திரிவு.

இரண்டிற்கும் இடையில் மெல்வலியாகப் பன்று-தல் என்றும் சொல்லலாம். பன்று + இ = பன்றி. பல்லால் இரையைப் பிடிக்கும் விலங்கு. ஊர்ப்பன்றி, காட்டுப்பன்றி, நாட்டுப்பன்றி, கடற்பன்றி, முள்ளம்பன்றி சீனப்பன்றி, சீமைப் பன்றி, அந்தமான் பன்றி, மூக்கம் பன்றி என்று வெவ்வேறு பன்றி வகைகளைச் சொல்கிறார்.

பன்றி, பன்னி என்னும் பெயர்கள் பரவிய நிலையில் பற்றி என்ற சொல் இந்தப் பொருளில் நிலைக்கவே இல்லை.

Monday, September 06, 2021

பாவம்

பாவம், பாவி ஆகியவை வடசொற்களென்று முகநூல் “தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில்” சொன்னார். இதுபோல் பலரும் சொல்லியுள்ளார். (நானுங்கூட இப்படி ஒரு காலம் நினைத்ததுண்டு. இப்பொழுது மாறியிருக்கிறேன்.) முன்னோர் உரைகளை மட்டும் வைத்து, சங்கதவழிப் பக்கம் ஆயாமலே,  எப்படி நம்மவருக்கு இதுபோற் சொல்லமுடிகிறது? புரியவில்லை. சங்கதத்தில் ”பாப” என்றே பயில்வர். பாவம் என அம் ஈற்றில் முடிவது தமிழ்முறை. தவிர, ”பாப”வின் இரண்டாம் ”ப”, தமிழ்ப் பலுக்கலில், ba என அதிரொலி பெறும்.  அது வேண்டாமென்று தான், பாவம் என்று தமிழில் பயிலுகிறோம்.  மற்ற இந்தையிரோப்பிய மொழிகளில் பாப எனும் சங்கதச் சொல்லுக்கான இணைச் சொற்கள் யாவை? - என்றுங் கேட்கத் தோன்றுகிறது. 

மோனியர் வில்லியம்சில் இதன் தாதுவை காணோமே? ஏன்? - என்பது இன்னொரு கேள்வி. சங்கத வாக்கிய அமைப்பில், ”பாப” எனும் பெயர்ச் சொல்லோடு,  துணைவினை சேர்ப்பது ஏன்? - என்பது மேலும் ஒரு கேள்வி. ”பாப” என்பது சங்கதமெனில், அடிப்படையான வினைச்சொல் அங்கு இல்லையே? ஏன்? இப்படிச் சரமாரியாகக் கேள்வி கேட்டுப் பழகுங்கள். தமிழெனில் கேள்வி கேட்கிறீர்களே? தமிழில் 10 கேட்டால், அங்கு 2,3 கேள்விகளாவது வேண்டாமா? நல்வினை (புண்ணியம்), தீவினை (பாவம்) ஆகியவை அடிப்படையில் வேதநெறி சார்ந்தவை அல்ல. அற்றுவிகம். செயினம், புத்தம் எனும் சமண நெறிகளில் தான் இக்கருத்துகள் முதலில் எழுந்தன. வேதகால ஆரியருக்கு பூருவ மீமாஞ்சையின் படி, மறுபிறப்பு பற்றிக் கேள்வியே கிடையாது. பொ.உ. மு. 800 களுக்கு அப்புறமே உத்தர மீமாஞ்சைக் காலத்தில் தான் அவருக்கு இச் சிந்தனை எழுந்தது. 

ஊழை நம்பும் அற்றுவிகத்தில் பிறவிச்சுழற்சியில் எழும் வினைத்தொகுப்பு கிடையாது. பிறவிச்சுழற்சி தாண்டி வினைத்தொகுப்பு உண்டெனச் செயினம் சொல்லும். இதை மறுத்தும், மறுக்காதும் புத்தம் இருக்கும். இதுபோல் ஒரு கொள்கை தமக்கும் வேண்டுமெனும் எழுச்சியில், வினைத்தொகுதி பற்றி உவநிற்றங்களில் (upanishads) பேசினார். புண்ணியம் தமிழெனச் சொற்பிறப்பியல் அகரமுதலி சொல்கையில் (அதையும் தேடுங்கள்), பாவத்தை ஏன் ஒதுக்கினார்? இப்படிக் கேள்விகள் நிறையவுண்டு.  மோனியர் வில்லியம்சில் paapa என்பதற்கு, 

1) Pāpa (पाप):—mf(ī older than ā; cf. [Pāṇini 4-1, 30]) ([Śatapatha-brāhmaṇa xiv,] also pāpa) n. bad, vicious, wicked, evil, wretched, vile, low, [Ṛg-veda] etc. etc.

2) (in [astrology]) boding evil, inauspicious, [Varāha-mihira]

3) m. a wicked man, wretch, villain, [Ṛg-veda] etc., etc.

4) Name of the profligate in a drama, [Catalogue(s)]

5) of a hell, [Viṣṇu-purāṇa]

6) Pāpā (पापा):—[from pāpa] f. a beast of prey or a witch, [Hemādri’s Caturvarga-cintāmaṇi]

7) Pāpa (पाप):—n. (ifc. f(ā). ) evil, misfortune, ill-luck, trouble, mischief, harm, [Atharva-veda] etc. etc. (often śāntam pāpam, ‘heaven forefend that evil’ [Rāmāyaṇa; Mṛcchakaṭikā; Kāl idem]etc.)

8) n. sin, vice, crime, guilt, [Brāhmaṇa; Manu-smṛti; Mahābhārata] etc.

மேலுள்ள பொருள்களைச் சொல்வார். இவை எல்லாமே கெடுதிப் பொருள் சார்ந்தே அமையும்.  பாழ் எனில் கெடுதி தான். தீவினை தான். பொதுவாய், நாட்பட்டவை பழுதுபடும். பழமையில் இருந்து பழுதுக் கருத்து எழும். பழமனை = இடிந்து பாழான வீடு. பாழ்-தல் = அழிதல். இதன் பிறவினை பாழ்-த்தல் = பயனறுத்தல். “பாழ்த்த பிறப்பு” என்று திருவாசகம் 5:16. இல் வரும். 

பாவத்தின் தொடர்பான பாழ்-த்தல் என்ற வினையைக் காட்டுதற்கு முகனச் சான்று, கம்ப இராமாயணம், அயோத்தியா காண்டம்  கங்கை காண் படலத்தில், பரதன் கைகேயியைக் குகனுக்கு அறிமுகம் செய்வதாய் வரும் 69 ஆம் பாட்டில்  உள்ளது. ”பாவி” என்ற தன்னை ஈன்ற வயிற்றைக் கூறும் முகத்தான் ”பாழ்த்த பாவிக் குடர்” என்ற சொற்றொடர் வரும். இந்தப் பாடல் மட்டும் இல்லையெனில்,  பாவத்தின் வினையடி பாழ் என்பது நமக்குத் தெரியாமலே போயிருக்கும். கம்பன்தான் தன் சொல்லாட்சியால் பாவத்தின் சொற்பிறப்பை நமக்கு உணர்த்துகிறான். கொஞ்சம் முழுப் பாடலையும், அதன் பொழிப்புரையையும் படிப்போம்.  

படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும்

     செவிலியை, தன் பாழ்த்த பாவிக்

குடரிலே நெடுங் காலம் கிடந்தேற்கும்

     உயிர்ப் பாரம் குறைந்து தேய,

உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும்

     உலகத்தே, ஒருத்தி அன்றே,

இடர் இலா முகத்தாளை, அறிந்திலையேல்,

     இந் நின்றாள் என்னை ஈன்றாள்.’

’படர்எலாம் படைத்தாளை = துன்பங்களை எல்லாம் உண்டாக்கியவளை;  

பழிவளர்க்கும் செவிலியை = உலக நிந்தை என்கின்ற பழியாகிய குழந்தைக்கு வளர்ப்புத் தாயை; 

தன் பாழ்த்த பாவிக் குடரிலே = தனது பாழான தீவினையுடைய வயிற்றில்; 

நெடுங்காலம் கிடந்தேற்கும் = நீண்டநாள் (பத்துத் திங்கள்) தங்கியிருந்த எனக்கும்; 

உயிர்ப்பாரம் குறைந்து தேய = உயிர்ச்சுமை குறைந்து தேயும்படி;  

உடர் எலாம் உயிரிலாஎனத் தோன்றும் உலகத்தே = உடல்களெல்லாம் உயிரில்லாதன எனத் தோன்றும்படியுள்ள உலகத்தின்கண்; 

ஒருத்தி அன்றே இடரிலா முகத்தாளை = இவ் ஒருத்தி மட்டும் அல்லவா துன்பமே இல்லாத முகமுடையவள்; 

இவளை, அறிந்திலையேல் = (இவ்வளவு நேரம் முகத்தைக் கண்டே அறிந்து கொண்டிருக்கவேண்டும்,  அப்படி) இவளை அறியவில்லையானால்; 

இந் நின்றாள் = இதோ இருக்கின்றவள்; 

என்னை ஈன்றாள் = என்னைப் பெற்ற கைகேயியாவாள்,’

பாழ்த்து என்ற சொல் கம்பர் காலத்தில் புதிதாய் ஏற்பட்டதில்லை. அது சங்க காலத்தில் குறுந்தொகை 124 ஆம் பாட்டின் முதலடியிலேயே வருகிறது. பாழ்-த்தலுக்கு குறைந்தது 2000 ஆண்டு அகவை இருக்கிறது. ”ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு” என்பது குறு 124/2.  பாழ்த்தல் என்பது பாழ்வுதல், பாழ்வி-த்தல் என்றும் திரிந்து வேறு சொற்களை உண்டாக்கலாம். இதில் பிறந்த இன்னொரு பெயர்ச்சொல் தான் பாழ்வு = கெட்டுப்போன நிலை, தீவினை. (பழி என்பதையும் தீவினைப் பொருளில் நாம் கையாளுகிறோம்.) அது பேச்சு வழக்கில் பாவு, பாவம் ஆகிய சொற்களை உருவாக்கும். பாவம் என்பது சங்கம் மருவிய காலத்தில் உண்டாகியிருக்கலாம். இது தான் குமுக நீதி பற்றி நம் ஊரில் பெரிதும் பேசிய காலம். ”நாவலோ நாவல்” என்று சமயங்கள் அடித்துக் கொண்ட காலம். எல்லாச் சமண நெறிகளும் வேத நெறியோடு மோதியதில் தடுமாறிப் போயின. பாவம் என்ற சொல் சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதினெண் கணக்கு நூல்களில் 15 இடங்களில் வரும். 

தவத்தின் முன் நில்லாதாம் பாவம் விளக்கு நெய் - நாலடி:6 1/2

நச்சுவார் சேரும் பகை பழி பாவம் என்று - நாலடி:9 2/3

அறித இடத்தும் அறியாராம் பாவம் செறிந்த உடம்பினவர் - நாலடி:38 10/3,4

பழித்துழி நிற்பது பாவம் அழித்து - நான்மணி:28/2

கயம் பெருகின் பாவம் பெரிது - நான்மணி:90/4

என் மெலிய வீங்கினவே பாவம் என்று என் மெலிவிற்கு - திணை150:21/2

பகை பாவம் அச்சம் பழி என நான்கும் - குறள்:15 6/1

செய்யான் பழி பாவம் சேரான் புறமொழியும் - சிறுபஞ்:1/3

கட்டு எறிந்த பாவம் கருது - சிறுபஞ்:68/4

பாற்பட்டார் உண்ணார் பழி பாவம் பாற்பட்டார் - சிறுபஞ்:82/2

பாவம் பழி பகை சாக்காடே கேடு அச்சம் - ஏலாதி:60/3

வமும் ஏனை பழியும் பட வருவ - நாலடி:30 5/1

பாவமும் அஞ்சாராய் பற்றும் தொழில் மொழி - இனிய40:23/3

இம்மை பழியும் மறுமைக்கு பாவமும்

   தம்மை பிரியார் தமர் போல் அடைந்தாரின் - பழ:188/1,2

அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று - குறள்:17 8/1

இன்மை என ஒரு பாவி மறுமையும் - குறள்:105 2/1

பாவத்தின் சொற்பிறப்பை ஐயப்படுவோருக்கு இன்னொரு சொல்லைச் சொல்கிறேன். தாள்>தாழ்>தாழ்வு என்பது உங்களுக்குத் தெரியும் தானே? தாழ்வு>தாவு என்றாகித் தங்கும் இடத்தைக் குறிக்கும். (isotope இல் tope என்று வருகிறதே?  அது தாவோடு தொடர்புற்றது.) தாமசம் என்ற சொல் மலையாளத்தில் உண்டு. தாவு>தாவளம் என்பது நீண்ட பயணத்தில் தங்கும் சத்திரங்களைக் குறிக்கும். தாழ்வில் இருந்து தாவளம் உருவாகுமெனில் பாழ்விலிருந்து பாவம் உருவாகக் கூடாதோ? அதையேன் சங்கதம் என்கிறோம்?

அன்புடன், 

இராம.கி      




Friday, September 03, 2021

வாதம்

வாதம் வாதி என்பவை தமிழ்ச்சொற்களா? என்று ஒருமுறை  கேட்கப்பட்டது. இச்சொற்களோடு, வாய், வாயு, வாயித்தல், வாக்கு, வாக்கியம், வாகீசன், வாசித்தல், வாசகம், வாயாடல், வாது, வார்த்தல், வார்த்தை போன்ற சொற்களையும் பார்க்கவேண்டும். இவை தமிழ்வழிப்பிறந்த சொற்கள் என்றால் உடனே மறுத்து அவை சங்கதமென்று சொல்பவரே தமிழரில் மிகுதியாயுள்ளார். இந்த எந்த அளவிற்கு எனில், வாய் தவிர்த்து மேலுள்ள மற்ற சொற்களைச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியே கூட ஒதுக்கும் அளவிற்குப் போயுள்ளது. பேரகரமுதலியைத் தொகுத்தவரே தடுமாறிப் போனார் போலும். ஆழ்ந்து பார்த்தால் அப்படித் தடுமாறியிருக்கவேண்டாம். 

சரி, இவை சங்கதமா என்று பார்க்கப்போனால், vad என்பது பாணினியின் Dhaatupaatam xxiii 40 இலும், vac என்பது Dhatupaatam xxiv 55 இலும் குறிப்பிடப்படும். (இத் தாதுபாடத்தில் ஏறத்தாழ 2200 வேர்ச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. vad, vac என்ற இரண்டு வேர்ச்சொற்களுக்கும் speak, say, tell, utter என்று ஒரே பொருள் கொடுத்திருப்பர். இதைப் படித்தவுடன், ”ஒரே பொருளில் ஏன் இருவேறு வேர்ச் சொற்கள்?” என்ற கேள்வியெழும். (2200 வேர்ச்சொற்களின் இயலுமையைக் கிடுக்கி அலசிய ஒரு நூலைக் கூட நான் இதுவரை பார்க்கவில்லை. ஆயினும் பலரிதைக் கேள்வி கேட்கவியலா வேதநூல் போலப் பார்க்கிறார். 2200 வேர்ச்சொற்கள் ஓர் இயல்மொழியில் இருக்கமுடியுமா என்பதும் ஒரு கேள்வி.) 

பேசுதல், சொல்லுதல், கூறுதல், வெளிப்படுத்தலென்ற கருத்துமுதல் வினைச் சொற்கள் எப்படியெழுந்தன? இவற்றிற்கான பொருள்முதல் அடிப்படை என்ன? சங்கதம் பேசிய தொடக்கநிலை மாந்தனுக்கு இதுபோல் கருத்துமுதல் வினைகள் எப்படித் தோன்றின? (ஒரு தமிழ்மாந்தனுக்கு ’நலம்’ என்ற கருத்துமுதற் சொல் முதலில் தோன்றுமா? நெல் எனும் பொருள்முதற் சொல்லிலிருந்து. நெல்லம்>நல்லம்> நலம் எழுந்தது. சாப்பிடக் குறை இலாதவன் நலமோடுள்ளானென்றே நம்மரபில் பொருள்கொள்வோம்.) vad, vac என்ற இரு வேர்ச்சொற்களிலும் வாய் எனும் பேச்சுப் புலன்கருவி சங்கதத்தில் வரவே இல்லையே? வாயிலாது பேச்சுவினைகள் நடக்குமா? தெரியவில்லை. 

சங்கதத்தில் aas எனில் வாய். (அதுவும் ஆசனவாய். முகவாயில்லை) mukha, mukham எனில் முகமென்றும், வாயென்றும் பொருளுண்டு. (தமிழிலும் முகம் உண்டு. தமிழ்முறையில் தலையில் முன்னுவது முகம்.) வக்த்ரம் (vaktram), வதன (vadana) என்ற சொற்களும் முகம், வாயையே குறிக்கும். இச்சொற்களுக்கு வேர்ச் சொல் எதையும் மோனியர் வில்லிம்சு கொடுக்கவில்லை. வாய்க்குத் தனிச் சொல் இல்லாததாற்றான் mukha, mukham, vaktram, vadana போன்ற முகச் சொற்கள் வாய்க்குப் பயன்பட்டனவோ என்ற ஐயமெழும். இதைப் பார்க்காது எப்படிச் சிலர் வாக்கு, வாக்கியம், வாகீசன், வாசகம், வாசித்தல், வாது, வார்த்தல், வாயு போன்றவற்றைச் சங்கதமெனச் சொன்னாரோ தெரியாது. சங்கதமெனில் கேட்பாடு இல்லை போலும். தமிழெனில் எங்களால் முடிந்தவரை மறுமொழி சொல்வோம்.    

இன்னொரு விதமாயும் இச்சிக்கலை அணுகமுடியும். ஒருபக்கம் வக், வத் என்ற வேர்ச்சொற்கள் சுருக்கமாயிருக்க அவற்றைக் கையாளும் புலன்கருவிச் சொல்லோ ஏதோவொன்றின் வழிச்சொல் போல நீளமாயிருப்பது சற்று முரணாய்த் தோற்றுகிறது. (கருவிச்சொல்லான கை/செய் தமிழில் சிறிதாகவும் செய்கை, செய்தலென்ற வழிச்சொற்கள் பெரிதாகவும் இருக்கும். அதுவே இயல்மொழிகளில் வழக்கம்.) வாயெனும் தமிழ்மூலச் சொல்லிலிருந்தே (சங்கதத்தில் இல்லாத அதன் வேர்ச்சொல் விரிவைக் கீழே பார்ப்போம்.) வாய், வாயு, வாயித்தல், வாக்கு, வாக்கியம், வாகீசன், வாசித்தல், வாசகம், வாயாடல், வாது, வார்த்தல், வார்த்தை என்ற எல்லாச் சொற்களையும் சொற்பிறப்பியல் முறையில் நன்றாகவே இனங்காட்டலாம். இப்படிச்சொல்வதற்கு ஓர் ஏரணமும் உண்டு. ஒருமாந்தன் காற்றை உள்ளிழுப்பதும் வெளிவிடுவதும் மூக்காலும், வாயாலுந்தான். பேச்சென்பது வாய்வழிக் காற்றால் வருவது. நம்முடைய முந்தை நூலான தொல்காப்பியத்தில் 

உந்தி முதலா முந்துவளி தோன்றித்

தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்

பல்லும் இதழும் நாவும் மூக்கும்

அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்

உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி

எல்லா எழுத்தும் சொல்லும் காலை

என்ற வரிகளின் வழி, ”உந்தியின் (உதரவிதானம். நன்றி: கனடா நாட்டு இளம் முனைவர் பல்மருத்துவர் மேரிகியூரி பாலின் அருமையான விளக்கம் https://www.youtube.com/watch?v=LU866aw5Ac8 ) அதிர்வால் நுரையீரல் விரிந்து சுருங்கி, முந்துவளி தோன்றி, தலை, தொண்டை, நெஞ்சில் (நுரையீரல்) நிலைத்து (பல், இதழ், நா, அண்ணம் சேர்ந்த) வாயாலும் மூக்காலும் உளப்பட்டு 8 வித முறைகளால் உறுப்புற்று, நெறிப்பட நாடி, எல்லா எழுத்தும் சொல்லப்பட்டன” என்பதால் சொல்வதற்கு வாய் கட்டாயம் தேவை என்ற இலக்கணம் விளங்கும். 

வளிக்கு இன்னொரு சொல் வாயு. வாயால் வருவது வாயு (இதையும் பல தமிழர் சங்கதமென்று எண்ணுகிறார்.). வாயித்தல்= வாயு வெளிப்பட்டு அமையும் ஒலிச் செய்கை. ”வாய்திறந்து பேசு, வாய்க்குள் முணகாதே” என்று பிள்ளைகளுக்குச் சொல்கிறோமே? வாயித்தல் என்பது பேச்சு வழக்கில் வா(ய்)கித்தல், வாசித்தலாகும். ககரமும், சகரமும் யகரத்தின் போலிகள். வாயால் காற்றை ஊதுகையில் ”வாஃக், வாஃக்” என்றே ஒலிப்போம். இருமும் போதும் இதேயொலி எழும். வாகித்தலின் பெயர்ச்சொல் வாக்கு. பொருள் நிறைந்து இயம்பின வாக்கு, வாக்கியமாகும். வாகித்தலில் பிறந்த இன்னொரு பெயர்ச்சொல் வா(க்)கீசன். (வாக்கிற்கு ஈசன்). சிவநெறியின் சமயக்குரவர் திருநாவுக்கரசருக்கு இதுவொரு சிறப்புப்பெயர். வாகு*>வாசு* = வாய்வழிக் காற்றோசை; (மூசுதலில் பிறந்த மூச்சுப்போல் வாசு என்பதும் சகரவோசை ஈறு கொள்ளும்.) வாசு+அகம் = வாசகம்; வாசித்தல் = எழுத்திலுள்ளதைப் படித்து ஒலியெழுப்புதல். வாயாடுதல் = வாயால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுதல். வாயாட்டு = வாயாடலின் பெயர்ச்சொல். அவள் ஒரு வாயாடி. வாயாட்டு> வாயாது> வாய்து> வாது = இருவேறு மாந்தர் ஒருவருக்கொருவர் வாயாடிக் கொள்வது வாது. வாதின் நீட்சி வாதம். வாயில் நீர் வடிவது/ வெளிப் படுதலை வார்த்தல் என்பார். ஒலிகளை நீராய் உருவகஞ் செய்து வார்ப்பது வார்த்தை. வார்த்தைகள் தொடர்வது வாக்கு. சுறறிச் சுற்றி வாயை ஒட்டியே இத்தனை சொற்கள்.       

இனி வாய் என்ற சொல் எப்படி வந்ததென்று பார்ப்போம். முகத்தில் இருப்பது மட்டும் வாயல்ல. எங்கெலாம் பிளவு தெரிகிறதோ, அதையெல்லாம் வாய் என்போம். ஆசனவாய், புண்வாய், மலைவாய், கணவாய், ஆற்றுவாய் இப்படிப் பல பிளவுகள் உண்டு. வள்ளுதல் என்ற வினை பிரித்தலைக் குறிக்கும். வெட்டுக்காயத்தின் வாயை இணைத்து தைக்கிறோம்/மருந்து போடுகிறோம். அவ்விடத்தில் புதுச் சில்கள் ஏற்பட்டு தோல் சேர்ந்துகொள்ளும் என்று முயல்கிறோம். வள்>வய்>வாய். வள்ளும் கருவி வாள் எனப்படுகிறது. வள்>வழி என்றாகிறது. ஒரு சில பிளவுகள் நீண்டுபோய் வழிகளை உருவாக்கலாம். சில பிளவுற்று ஓரளவில் நின்று போகலாம். பிளவு இயற்கையாலும், மாந்தனாலும் ஏற்படலாம். வள்ளுதலில் பிறந்த சொல் வாய். இந்தப் பொதுமையைச் சங்கதச் சொல் காட்டாது. தமிழில் இயல்பாய்க் காட்டமுடியும். 

வாய்வழி வேறு இந்தையொரோப்பியன் மொழிகளிலும் சில சொற்கள் இருக்கின்றன. காட்டு: voice (n.) late 13c., "sound made by the human mouth," from Old French voiz "voice, speech; word, saying, rumor, report" (Modern French voix), from Latin vocem (nominative vox) "voice, sound, utterance, cry, call, speech, sentence, language, word" (source also of Italian voce, Spanish voz), related to vocare "to call," from PIE root *wekw- "to speak." இன்னும் vocal, vocation, vociferous, vowel, vow, vote எனப் பல சொற்களைக் காட்டமுடியும். (இங்கே ஆங்கிலச் சொற்களைப் பட்டியலிட்டதற்கு வேறு காரணம் ஏதுமில்லை. படித்த தமிழருக்குச் சட்டென்று விளங்குமென்று அப்படிக்கொடுக்கிறேன். மற்ற இந்தையிரோப்பிய மொழிகளிலும் இருந்து கொடுக்கமுடியும். அதுபோல் வட இந்திய மொழிகளிலும் இருந்தும் கொடுக்கமுடியும். ஒரு கருத்தைப் புரிந்து கொள்ள ஒரு சொல் என்று நின்றுகொள்கிறேன்.. பானைச்சோறு வெந்ததற்கு ஒரு சோறு பதம்.)   

வாய் என்ற சொல்லே இல்லாத சங்கதத்திலிருந்து வாக்கு, வாக்கியம், வாகீசன், வாசகம், வாசித்தல், வாது, வார்த்தல், வாயு போன்ற சொற்கள் எழுந்தன என்பது அந்தரத்தில் கோட்டை கட்டுவதாகும். 

இராம.கி.