பாவம், பாவி ஆகியவை வடசொற்களென்று முகநூல் “தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில்” சொன்னார். இதுபோல் பலரும் சொல்லியுள்ளார். (நானுங்கூட இப்படி ஒரு காலம் நினைத்ததுண்டு. இப்பொழுது மாறியிருக்கிறேன்.) முன்னோர் உரைகளை மட்டும் வைத்து, சங்கதவழிப் பக்கம் ஆயாமலே, எப்படி நம்மவருக்கு இதுபோற் சொல்லமுடிகிறது? புரியவில்லை. சங்கதத்தில் ”பாப” என்றே பயில்வர். பாவம் என அம் ஈற்றில் முடிவது தமிழ்முறை. தவிர, ”பாப”வின் இரண்டாம் ”ப”, தமிழ்ப் பலுக்கலில், ba என அதிரொலி பெறும். அது வேண்டாமென்று தான், பாவம் என்று தமிழில் பயிலுகிறோம். மற்ற இந்தையிரோப்பிய மொழிகளில் பாப எனும் சங்கதச் சொல்லுக்கான இணைச் சொற்கள் யாவை? - என்றுங் கேட்கத் தோன்றுகிறது.
மோனியர் வில்லியம்சில் இதன் தாதுவை காணோமே? ஏன்? - என்பது இன்னொரு கேள்வி. சங்கத வாக்கிய அமைப்பில், ”பாப” எனும் பெயர்ச் சொல்லோடு, துணைவினை சேர்ப்பது ஏன்? - என்பது மேலும் ஒரு கேள்வி. ”பாப” என்பது சங்கதமெனில், அடிப்படையான வினைச்சொல் அங்கு இல்லையே? ஏன்? இப்படிச் சரமாரியாகக் கேள்வி கேட்டுப் பழகுங்கள். தமிழெனில் கேள்வி கேட்கிறீர்களே? தமிழில் 10 கேட்டால், அங்கு 2,3 கேள்விகளாவது வேண்டாமா? நல்வினை (புண்ணியம்), தீவினை (பாவம்) ஆகியவை அடிப்படையில் வேதநெறி சார்ந்தவை அல்ல. அற்றுவிகம். செயினம், புத்தம் எனும் சமண நெறிகளில் தான் இக்கருத்துகள் முதலில் எழுந்தன. வேதகால ஆரியருக்கு பூருவ மீமாஞ்சையின் படி, மறுபிறப்பு பற்றிக் கேள்வியே கிடையாது. பொ.உ. மு. 800 களுக்கு அப்புறமே உத்தர மீமாஞ்சைக் காலத்தில் தான் அவருக்கு இச் சிந்தனை எழுந்தது.
ஊழை நம்பும் அற்றுவிகத்தில் பிறவிச்சுழற்சியில் எழும் வினைத்தொகுப்பு கிடையாது. பிறவிச்சுழற்சி தாண்டி வினைத்தொகுப்பு உண்டெனச் செயினம் சொல்லும். இதை மறுத்தும், மறுக்காதும் புத்தம் இருக்கும். இதுபோல் ஒரு கொள்கை தமக்கும் வேண்டுமெனும் எழுச்சியில், வினைத்தொகுதி பற்றி உவநிற்றங்களில் (upanishads) பேசினார். புண்ணியம் தமிழெனச் சொற்பிறப்பியல் அகரமுதலி சொல்கையில் (அதையும் தேடுங்கள்), பாவத்தை ஏன் ஒதுக்கினார்? இப்படிக் கேள்விகள் நிறையவுண்டு. மோனியர் வில்லியம்சில் paapa என்பதற்கு,
1) Pāpa (पाप):—mf(ī older than ā; cf. [Pāṇini 4-1, 30]) ([Śatapatha-brāhmaṇa xiv,] also pāpa) n. bad, vicious, wicked, evil, wretched, vile, low, [Ṛg-veda] etc. etc.
2) (in [astrology]) boding evil, inauspicious, [Varāha-mihira]
3) m. a wicked man, wretch, villain, [Ṛg-veda] etc., etc.
4) Name of the profligate in a drama, [Catalogue(s)]
5) of a hell, [Viṣṇu-purāṇa]
6) Pāpā (पापा):—[from pāpa] f. a beast of prey or a witch, [Hemādri’s Caturvarga-cintāmaṇi]
7) Pāpa (पाप):—n. (ifc. f(ā). ) evil, misfortune, ill-luck, trouble, mischief, harm, [Atharva-veda] etc. etc. (often śāntam pāpam, ‘heaven forefend that evil’ [Rāmāyaṇa; Mṛcchakaṭikā; Kāl idem]etc.)
8) n. sin, vice, crime, guilt, [Brāhmaṇa; Manu-smṛti; Mahābhārata] etc.
மேலுள்ள பொருள்களைச் சொல்வார். இவை எல்லாமே கெடுதிப் பொருள் சார்ந்தே அமையும். பாழ் எனில் கெடுதி தான். தீவினை தான். பொதுவாய், நாட்பட்டவை பழுதுபடும். பழமையில் இருந்து பழுதுக் கருத்து எழும். பழமனை = இடிந்து பாழான வீடு. பாழ்-தல் = அழிதல். இதன் பிறவினை பாழ்-த்தல் = பயனறுத்தல். “பாழ்த்த பிறப்பு” என்று திருவாசகம் 5:16. இல் வரும்.
பாவத்தின் தொடர்பான பாழ்-த்தல் என்ற வினையைக் காட்டுதற்கு முகனச் சான்று, கம்ப இராமாயணம், அயோத்தியா காண்டம் கங்கை காண் படலத்தில், பரதன் கைகேயியைக் குகனுக்கு அறிமுகம் செய்வதாய் வரும் 69 ஆம் பாட்டில் உள்ளது. ”பாவி” என்ற தன்னை ஈன்ற வயிற்றைக் கூறும் முகத்தான் ”பாழ்த்த பாவிக் குடர்” என்ற சொற்றொடர் வரும். இந்தப் பாடல் மட்டும் இல்லையெனில், பாவத்தின் வினையடி பாழ் என்பது நமக்குத் தெரியாமலே போயிருக்கும். கம்பன்தான் தன் சொல்லாட்சியால் பாவத்தின் சொற்பிறப்பை நமக்கு உணர்த்துகிறான். கொஞ்சம் முழுப் பாடலையும், அதன் பொழிப்புரையையும் படிப்போம்.
படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும்
செவிலியை, தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங் காலம் கிடந்தேற்கும்
உயிர்ப் பாரம் குறைந்து தேய,
உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும்
உலகத்தே, ஒருத்தி அன்றே,
இடர் இலா முகத்தாளை, அறிந்திலையேல்,
இந் நின்றாள் என்னை ஈன்றாள்.’
’படர்எலாம் படைத்தாளை = துன்பங்களை எல்லாம் உண்டாக்கியவளை;
பழிவளர்க்கும் செவிலியை = உலக நிந்தை என்கின்ற பழியாகிய குழந்தைக்கு வளர்ப்புத் தாயை;
தன் பாழ்த்த பாவிக் குடரிலே = தனது பாழான தீவினையுடைய வயிற்றில்;
நெடுங்காலம் கிடந்தேற்கும் = நீண்டநாள் (பத்துத் திங்கள்) தங்கியிருந்த எனக்கும்;
உயிர்ப்பாரம் குறைந்து தேய = உயிர்ச்சுமை குறைந்து தேயும்படி;
உடர் எலாம் உயிரிலாஎனத் தோன்றும் உலகத்தே = உடல்களெல்லாம் உயிரில்லாதன எனத் தோன்றும்படியுள்ள உலகத்தின்கண்;
ஒருத்தி அன்றே இடரிலா முகத்தாளை = இவ் ஒருத்தி மட்டும் அல்லவா துன்பமே இல்லாத முகமுடையவள்;
இவளை, அறிந்திலையேல் = (இவ்வளவு நேரம் முகத்தைக் கண்டே அறிந்து கொண்டிருக்கவேண்டும், அப்படி) இவளை அறியவில்லையானால்;
இந் நின்றாள் = இதோ இருக்கின்றவள்;
என்னை ஈன்றாள் = என்னைப் பெற்ற கைகேயியாவாள்,’
பாழ்த்து என்ற சொல் கம்பர் காலத்தில் புதிதாய் ஏற்பட்டதில்லை. அது சங்க காலத்தில் குறுந்தொகை 124 ஆம் பாட்டின் முதலடியிலேயே வருகிறது. பாழ்-த்தலுக்கு குறைந்தது 2000 ஆண்டு அகவை இருக்கிறது. ”ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு” என்பது குறு 124/2. பாழ்த்தல் என்பது பாழ்வுதல், பாழ்வி-த்தல் என்றும் திரிந்து வேறு சொற்களை உண்டாக்கலாம். இதில் பிறந்த இன்னொரு பெயர்ச்சொல் தான் பாழ்வு = கெட்டுப்போன நிலை, தீவினை. (பழி என்பதையும் தீவினைப் பொருளில் நாம் கையாளுகிறோம்.) அது பேச்சு வழக்கில் பாவு, பாவம் ஆகிய சொற்களை உருவாக்கும். பாவம் என்பது சங்கம் மருவிய காலத்தில் உண்டாகியிருக்கலாம். இது தான் குமுக நீதி பற்றி நம் ஊரில் பெரிதும் பேசிய காலம். ”நாவலோ நாவல்” என்று சமயங்கள் அடித்துக் கொண்ட காலம். எல்லாச் சமண நெறிகளும் வேத நெறியோடு மோதியதில் தடுமாறிப் போயின. பாவம் என்ற சொல் சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதினெண் கணக்கு நூல்களில் 15 இடங்களில் வரும்.
தவத்தின் முன் நில்லாதாம் பாவம் விளக்கு நெய் - நாலடி:6 1/2
நச்சுவார் சேரும் பகை பழி பாவம் என்று - நாலடி:9 2/3
அறித இடத்தும் அறியாராம் பாவம் செறிந்த உடம்பினவர் - நாலடி:38 10/3,4
பழித்துழி நிற்பது பாவம் அழித்து - நான்மணி:28/2
கயம் பெருகின் பாவம் பெரிது - நான்மணி:90/4
என் மெலிய வீங்கினவே பாவம் என்று என் மெலிவிற்கு - திணை150:21/2
பகை பாவம் அச்சம் பழி என நான்கும் - குறள்:15 6/1
செய்யான் பழி பாவம் சேரான் புறமொழியும் - சிறுபஞ்:1/3
கட்டு எறிந்த பாவம் கருது - சிறுபஞ்:68/4
பாற்பட்டார் உண்ணார் பழி பாவம் பாற்பட்டார் - சிறுபஞ்:82/2
பாவம் பழி பகை சாக்காடே கேடு அச்சம் - ஏலாதி:60/3
வமும் ஏனை பழியும் பட வருவ - நாலடி:30 5/1
பாவமும் அஞ்சாராய் பற்றும் தொழில் மொழி - இனிய40:23/3
இம்மை பழியும் மறுமைக்கு பாவமும்
தம்மை பிரியார் தமர் போல் அடைந்தாரின் - பழ:188/1,2
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று - குறள்:17 8/1
இன்மை என ஒரு பாவி மறுமையும் - குறள்:105 2/1
பாவத்தின் சொற்பிறப்பை ஐயப்படுவோருக்கு இன்னொரு சொல்லைச் சொல்கிறேன். தாள்>தாழ்>தாழ்வு என்பது உங்களுக்குத் தெரியும் தானே? தாழ்வு>தாவு என்றாகித் தங்கும் இடத்தைக் குறிக்கும். (isotope இல் tope என்று வருகிறதே? அது தாவோடு தொடர்புற்றது.) தாமசம் என்ற சொல் மலையாளத்தில் உண்டு. தாவு>தாவளம் என்பது நீண்ட பயணத்தில் தங்கும் சத்திரங்களைக் குறிக்கும். தாழ்வில் இருந்து தாவளம் உருவாகுமெனில் பாழ்விலிருந்து பாவம் உருவாகக் கூடாதோ? அதையேன் சங்கதம் என்கிறோம்?
அன்புடன்,
இராம.கி
1 comment:
பாழ்>பாழ்வு>பாவு>பாவம்.
ஏரண முறையிலும், கம்பராமாயணப் பாடல் வழியிலும் இது தமிழ்ச்சொல் என்று அறிந்தேன் ஐயா. நன்றி.
பெஞ்சமின் பிராங்கிளின்
Post a Comment