ஒருமுறை cash என்ற சொல்லுக்கான தமிழ்ச்சொல் பற்றிக் கேட்டார். முதலில் கொஞ்சம் பொருளியலையும், ஒரு சில வரலாற்றுச் செய்திகளையும் மனத்திற் கொள்ளவேண்டும். ”பணம் - ஒரு பால பாடம்” என்ற கட்டுரையை மே 20, 2004 இல் திண்ணை வலையிதழில் வெளியிட்டேன். 2014 ஆகத்தில் அதை என் வலைப் பதிவில் சேமித்தேன். அதில் பணம் = money என்பது பற்றி விவரித்தேன். இங்கு நானிடும் இடுகையைப் படிக்குமுன் அக் கட்டுரையை ஒரு முறை படிப்பது நல்லது. சிவகங்கைப் பேச்சு வழக்கில் அந்தக்கட்டுரை உள்ளது.
http://valavu.blogspot.in/2014/08/blog-post_29.html
M0 என்பது 15 நாள் கணக்குக் கொண்டது. 15 நாட்களுக்குக் காத்திராது, 24 மணி நேரத்தில் எவ்வளவு பணம் கொண்டுவர முடியுமோ அதையே cash என்பர். instant cash என்பது இக் கணமே புரட்டக் கூடிய பணம். இன்றைக்குப் பணம் என்பது தாளிலும், நாணயத்திலும் புழங்கினாலும், 2000 ஆண்டுகளுக்கு முன் தாள்ப் பணம் கிடையாது. நாணயம் என்பது முத்து, பவளம், தங்க/ வெள்ளி/ செம்பு/ மணிக் கட்டிகளே இருந்து வந்தன. அவை மொத்தத்தையும் பணமென்பார். ஏனெனில் பழங்கால நகரத்தில் அவற்றை எளிதாக நாணயமாக மாற்றிவிட முடியும். ஆனாலும் நாணயமாக எவ்வளவு கைவயம் இருந்ததோ, அதை மட்டுமே instant cash என அன்றுஞ் சொல்வர்.
பொன்னோ, வெள்ளியோ, செம்போ காய்ச்சியெடுத்த உலோகத்தைத் தட்டையாக்கிச் சதுரமாகவோ, வட்டமாகவோ வெட்டி, குறிப்பிட்ட அரசதிகாரியின் இலச்சினையோடு வெளிவந்த நாணயங்களே அன்றுஞ் செலாவணியில் இருந்தன. காய்ச்சி எடுத்து முத்திரைபதித்த உலோக நாணயங்கள் என்ற பொருளில் காய்ச்சு>காசு என்ற சொல் தமிழரிடம் பரவியது. காய்ச்சுதல் என்பது கருக்குதல் என்றுஞ் சொல்லப்படும். காய்ச்சுதலும், கருக்குதலும் ஆகிய இருசொற்கள் பிணைந்து வடக்கே கர்ஷித என்று பரவியதால் காசுப்பணம் என்ற சொல் வடக்கே மகதத்தில் கர்ஷ பண என்றாகியது. அருத்த சாற்றம் படித்தால் கர்ஷ பணம் பற்றி விளங்கும். அற்றைப் பொருளியல் அறிய கட்டாயமாய் அருத்த சாற்றம் படிக்க வேண்டும்.
தங்கமும், முத்தும், பவளமும், மணிகளும் மோரியருக்கு முன் தமிழரிடமே பெரும்பாலும் இருந்ததால் இந்திய நாட்டின் பொருளியலை மோரியர் காலம் வரை தமிழரே நிருணயித்தார். மோரியரின் மகதம் தமிழர் மேற் படை யெடுத்து (அசோகனின் தந்தை பிந்துசாரன் காலத்தில்) இற்றை கருநாடகத்தை (அற்றையில் இது வட கொங்கு என அறியப்பட்டது. வட கொங்கர் கங்கர் என்று அறியப்பட்டார்) தமிழரசரிடமிருந்து பிடித்தது. வடகொங்கு தமிழரின் கையை விட்டுப் போனதும் தங்கவூற்றும் நம்மை விட்டுப் போயிற்று. தென்கொங்கில் மீந்தபோன மணிகளும் (பொருந்தல், கொடுமணம் போன்ற இடங்களை எண்ணிப் பாருங்கள்), பாண்டிய நாட்டில் முத்தும், சோழநாட்டில் பவளமும் மட்டுமே நம்மிடம் எஞ்சின. பிந்துசாரன் படையெடுப்பால் தமிழருக்கு ஒரு பெரிய இறக்கம் ஏற்பட்டது.
பொதுவாகக் காசென்பது தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் (நமக்குத் தெ.கி. ஆசியாவிலிருந்து ஈயம் கிடைத்தது.) என எதுவாக வேண்டுமானாலும், கலப்பாகவுங் கூடவும் இருக்கலாம். ஆனால் மேலை நாடுகளில் தங்கம் கிடைப்பது அரிதாய் இருந்தது. கிரேக்கத்திலும், உரோம நாட்டிலும் வெள்ளியே பெரிதானது. நம்மூரிலும் தங்கத்தின் கிடைப்புக் குறையக் குறைய வெள்ளிப் பணம் கூடியது. காசு என்ற சொல்லை விட, வெள்ளியைக் குறிக்கும் அருக்கம்/ உருக்கம், உருவம் போன்ற சொற்களே நாணயம் குறிக்கலாயின. உருவத்திற்கு இன்னொரு பொருளாய் figure என்றும் பொருள்கொண்டார். உருவா>உருபா என்ற சொல் முகலாயர் காலத்தில் இந்தியாவெங்கும் பரவியது.
ஆங்கிலத்தில் சொல்லப்படும் argentine (adj.) என்பது mid-15c., "silver-colored;" c. 1500, "of or resembling silver," from Old French argentin (12c.), from Latin argentinus "of silver," from argentum "silver," from PIE root *arg- "to shine; white," hence "silver" as the shining or white metal என்ற பொருள் கொள்ளும். தமிழில் ஒளி என்ற சொல் உல்>உள்>ஒள்>ஒளி என்றே சொற்பிறப்பு காட்டும். உல்> அல்> அர்> அரி என்ற சொல் சூரியனையும் ஒளியையுங் குறிக்கும்.. உல்> எல்> எரி என்பது எரிக்கும் கதிரொளியைக் குறிக்கும். பொதுவாகக் கதிரொளி வெண்மையானதென்றே சொல்வர். உல்> உள்>உரு>உருக்கம் என்பது வெள்ளொளி காட்டும் வெள்ளிமாழையைக் குறித்தது. அரிக்கம்>அருக்கம் என்பதும் வெள்ளி தான். தமிழ் உருக்கு தெலுங்கில் முதலெழுத்தைத் தொலைத்து ருக்கு, ரொக்கு என்றாகும். விசயநகர அரசின் ஆளுமையால் தெலுங்குச் சொல்லில் அம் சேர்த்து ரொக்கம் என்று சொல்லத் தொடங்கினார். ரொக்கத்தை உருக்கம்/உருக்கப்பணம் என்றே சொல்லலாம்.
காசுப் பணம் என்பது 2000/2500 ஆண்டு காலப் பண்டைச்சொல். (சிலர் அதை காசென்று சுருக்கியுஞ் சொல்வர்.) உருக்கப் பணம் என்பது 500 ஆண்டு காலச் சொல். உங்களுக்கு எது பிடிக்கிறதோ, அதைப் பயிலுங்கள். கைப்பணம் என்பது காசுப்பணத்திலும் குறைவானது. அது நம் சட்டைப்பையிலோ, காற்சட்டைப் பையிலோ, பணப் பைக்குள்ளோ இருக்கும் பணம்.
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment