Thursday, September 30, 2021

”சங்கம்” பற்றிய என் கட்டுரைத் தொடர் எழக் காரணம்

"ஐயா, அறிந்து கொள்வதற்காக கேட்கிறேன், முனிதல் வேண்டா. சங்கப் பாடல்களில் சஙகு என்ற பொருள் வலம்புரி ( அகம் 201, புறம் 225, 397) என்ற சொல்லாலும் வளை என்ற சொல்லாலும் (புறம் 56) குறிக்கப் பெறுகிறது. தூக்கணாங் குருவிக் கூடு போல என்ற அழகான உவமையையும் சொல்லிச் செல்கிறான் கவி. ஆனால் சங்கு என்ற பொருள் சங்கு என்ற சொல்லாலே சங்கத்தில் எங்கேனும் வழங்கப் படுகிறதா என்று அறிய விழைகிறேன். உதவுக" என்று எழுத்தாளர் மாலன் ஒரு முறை “சொல்லாய்வுக் குழுவில் (தமிழ்ச் சொல்லாய்வுக்  குழுவல்ல)” கேட்டார். இந்த உரையாடலின் காலம் எனக்கு நினைவில்லை. ஆனால் உரையாடல் நினைவிருக்கிறது. நான் அவருக்கு அளித்த விடை இம்மடலில் உள்ளது. இதை இப்போது என் வலைப்பதிவில் சேர்க்கிறேன்.

------------------------- 

அன்பிற்குரிய மாலன், 

நான் ஏன் முனிந்துகொள்ளவேண்டும்? ஒருசொல் தமிழெனில், ”சங்க இலக்கியத்தில் இது வந்துள்ளதா?” என விடாது கேட்கும் விந்தைப் பழக்கஞ் சிலரிடமுண்டு. அப்படிக் கேட்பது தவறு இல்லை. ஆனால் இதே மாதிரிக் கேள்வியை ”நாலு வேதங்களில் இச்சொல் உண்டா?” எனச் சங்கதம் நோக்கிப் பலர் கேட்டு நான் பார்த்ததில்லை. இருக்கு வேதம் தொடங்கி பொ.உ. 400 வரை வந்த சங்கிதை (ஸம்ஹித); ஆரணம் (ஆரண்யக), பெருமானம் (ப்ராஹ்மண), உள்வநிற்றம் (உபநிஷத) ஆகிய எல்லா நூல்களையும் தொகுதி ஆக்கி (இதை வேத இலக்கியம் என்பார்), மகாபாரதம், இராமாயணம், காளிதாசம், புராணங்களையுங் கூடச் (14 ஆம் நூற்றாண்டு வரை) சேர்த்துக் ”குறித்த சொல்” எங்கு வந்தாலும் அதைச் சங்கதமென்று ஏற்றுக் கொள்வார். 

பெரும்’பக்தி’யிற் சங்கத இலக்கியப் பரப்பை இப்படி அகட்டுவது பற்றிக் கேள்வியே எழாது. ஆனால் சங்க இலக்கியங்களுக்கு மட்டும் பெருத்த மனத்தடை எழும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அதன் காலப் பரப்பைக் குறைத்துத் தொடங்கும் காலத்தையும் பின் நகர்த்துவார்; சங்க இலக்கியத்தில் ஒரு சொல் இல்லையென்றால், “அஃகஃகா, தமிழில்லை, பாருங்கள்” என்று  அந்தக் கால ம.கோ. இரா. (MGR) படத்தில் வரும் வீரப்பா பாணியிற் விதந்து சிரித்துக் கொள்வார். இதற்குக் கல்வெட்டு, பானைப் பொறிப்புக்களை உடனழைப்பார். ஒப்பிலக்கிய ஆய்வு பார்க்கலாமென்றால் அதுவும் இவரிடம் எடுபடாது. ”சங்கதத்திலிருந்தே தமிழ் copy செய்தது” எனக் காரணமின்றிச் சொல்லிச் சண்டித்தனம் செய்வார்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு மறுமொழி என்பது சங்கநூல் என்பதை எப்படி நீங்கள் வரையறுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. . 

“நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்

மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய

செய்குறிக் கூட்டம் கழிப்பிய வழிமுறை” 

எனும் கீரந்தையாரின் பரிபாடல் 2, 13-15 ஆம் வரிகளைச் சிலர் தம் கணக்கில் சேர்க்கமாட்டார். ஏனெனில் பரிபாடல் சங்கநூலில் சேர்த்தியில்லையாம். 

பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணாது

இருங்கடன் மூழ்குவார் தங்கை - இருங்கடலுள்

முத்தன்ன வெண்முறூவல் கண்டுருகி நைவார்க்கே

ஒத்தனம் யாமே யுளம்.

எனும் கணிமேதாவியாரின் திணைமாலை நூற்றைம்பது 33. ஆம் பாடலைச் சிலர் சேர்க்க மாட்டார். அதெல்லாம் சங்கம் மருவிய நூலாம். 

”பகையணங்காழியும் பால்வெண்சங்கமும், பணில வெண்குடை” என்ற சிலம்பு 11:43 ஆம் வரியையும், “விளங்குகொடி நந்தின் வீங்கிசை” என்ற சிலம்பு 26:203 ஆம் வரியையும் சேர்க்கமாட்டார். எவ்வளவு தான் வரலாற்றாய்வின் வழி சிலம்பின் காலம் கி.மு.75 என்று சொன்னாலும் “தூக்கியெறி, அது 5 ஆம் நூற்றாண்டு” என்று வையாபுரியாரின் “பிளேட்டையே” திரும்பப் போடுவார். வையாபுரியாரோடு தமிழ் வரலாற்று ஆய்வு நின்று போனதல்லவா?!. என்ன சொல்கிறீர்கள்? ”சங்குழு தொகுப்பின் முத்துவிளை கழனி” என்பதையும் (மணிமேகலை 8:5-6) கூடச் சிலர் சேர்க்கமாட்டார். (நானே அதை கி.பி. 4 ஆம் நூற்றாண்டு என்று சொல்வேன்.)

தமிழிலக்கியம் பற்றி உரையாடும் எல்லா இடங்களிலும் இதைப் பார்த்து விட்டேன். கிட்டத்தட்ட 100 ஆண்டுகாலமாய் எங்கும் அரைத்த மாவே அரைக்கப் படுகிறது. (சங்கம் தமிழ்ச்சொல்லா என்பது அதிலொன்று. சங்கு தமிழெனில் சங்கம் தமிழென நான் சொல்லிவிட்டேனல்லவா? எனவே இப்பொழுது சங்கைப் பிடித்துக்கொண்டீர்கள்.) இருவேறு கருத்தியலார் அதே புளித்துப் போன கேள்விகளைத் திரும்பத் திரும்ப எழுப்பிக் கொண்டுள்ளார். ஆட்கள் தாம் வேறுபடுவர். இப்பொழுது நீங்களும் நானும் இங்கு இதைப் பேசுகிறோம். 

இச்சொல்லாய்வுக் குழுவிற்கு 8 மாதங்கள் முன், நண்பர் சுந்தர் இலக்குவன் என்னை அழைத்து வந்தபோது, ”ஏதோவொரு புதியது நடக்கிறது. நம்மால் முடிந்ததைச் செய்வோம்”. என்று வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்தபிறகு பெரும் ஏமாற்றமே எனக்கு வந்தது. ”பழைய கள்ளு புதிய மொந்தை” தான் இங்கும் நடக்கிறது. ”தமிழில் இது கிடையாது, அது கிடையாது, இது கடன், அது கடன், இது தமிழில்லை. அது தமிழில்லை. எல்லாமே சங்கதம்” என்ற மோதல் தான் இங்கும் நடக்கிறது. இதற்கு எதற்கு இந்தக் குழு? 

எனக்குத் தோன்றுவது இது தான். பேசாமல் நாமெல்லோரும் தமிங்கிலம் பேசிக் களிக்கலாமே? இன்றுள்ள நூறாயிரக் கணக்கான அறிவியற் சொற்களை உருவாக்குவதற்கு தனித்தமிழ் அன்பர் தான் முனைப்போடு இருந்துள்ளார். அவரில்லாது போனால் 100 ஆண்டுகளில் இவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டிருக்காது. இன்னும் ”சர்வகலாசாலையையும் அக்ராசனரையும்” பிடித்துத் தொங்கி நாம் கூத்தாடியிருப்போம். தமிழரின் செயலின்மையைக் காட்டி, ”அது முடியாது, இது முடியாது” என்பதற்கு 1600 பேர் ஏன் இங்கு கூட வேண்டும்? சங்கம் தமிழில்லை என்று சொல்லி விட்டால் எத்தனை பேரின் மனங்கள் குளிர்ந்து போகும்? ”சங்கத்தையே” இல்லையென்று சொல்லி விடுவது எவ்வளவு பெரிய "achievement"? ஒற்றை இந்தியா, ஒரு மொழி, ஒரு கட்சி, இனி உறுதியாய் மலர்ந்து விடுமே? ஏன் அப்படிச் செய்யக்கூடாது?!!!!

அன்புடன்,

இராம.கி.

(பி.கு. சங்கம் தமிழ் தான். மின்தமிழில் நடந்த ஓர் உரையாடலுக்குப் பின் ஒரு கட்டுரைத் தொடர் எழுதி இன்னும் முடியாது என் கணிக்குள் கிடக்கிறது. எனக்கும் அகவை கூடுகிறது. முடியாது கிடக்கும் கட்டுரைகளை இறைவன் அருளிருந்தால் என்றோவொரு நாள் முடிக்கலாம். இப்பொழுது உங்கள் கேள்வி வந்ததற்கு அப்புறம் கணிக்குள் தேடிக் கண்டுபிடித்தேன். உங்களுக்காகவாவது இதை ஒரு நாள் முடிப்பேனா? தெரியவில்லை.)  

---------------------------

நல்ல வேளையாக, இந்த மடலுக்கு அப்புறம் சங்கம் என்ற தொடரை முயன்று முடித்தேன், அது என் வலைப்பதிவில் உள்ளது. தொடரின் தொடக்கம்,  https://valavu.blogspot.com/2018/08/1.html அந்தத் தொடரை முடித்ததற்கு, திரு. மாலனுக்குத் தான் நான் நன்றி சொல்லவேண்டும். 


No comments: