Tuesday, October 06, 2020

அனைத்தும், எல்லாம்

“இவ்விரு சொற்களுடையே ஏதேனும் பொருள் வேறுபாடு உள்ளதா?" என்று தமிழ்ச்சொல்லாய்வுக் குழுவில் ஒரு கேள்வி எழுந்தது. இரண்டும் ஒன்றல்ல. சற்று நுணுகிய வேறுபாடு இவற்றிடையே உண்டு, அதேபொழுது அகரமுதலிகள் அவ்வேறுபாட்டை நேரடியாய்ச் சொல்வதில்லை. ஒன்றை இன்னொன்றிற்குச் சமமாகவே கொடுத்திருப்பர். சற்று நுணுகிய தேடல் இருந்தால் மட்டுமே வேறுபாடு புலப்படும்.

“அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப,

என்ன, மான, என்றவை எனாஅ-

ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க ,

என்ற, வியப்ப, என்றவை எனாஅ-

எள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப,

கள்ள, கடுப்ப, ஆங்கவை எனாஅ-

காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள,

மாற்ற, மறுப்ப, ஆங்கவை எனாஅ-

புல்ல, பொருவ, பொற்ப, போல,

வெல்ல, வீழ, ஆங்கவை எனாஅ-

நாட, நளிய, நடுங்க, நந்த,

ஓட, புரைய, என்றவை எனாஅ-

ஆறு-ஆறு அவையும், அன்ன பிறவும்,

கூறும் காலைப் பல் குறிப்பினவே ”

என்று தொல்காப்பியம் உவம இயலில் 11 ஆம் நூற்பா சொல்லும்.  ”அன்ன” என்னும் உவம உருபில் தொடங்கினவே அ(ன்)னைத்து, அ(ன்)னைய, அ(ன்)னையன், அ(ன்)னையள், அ(ன்)னையர், அனைவர் போன்ற சொற்களாகும். ஒன்றைப் போல் (அன்ன) உள்ள இன்னொன்று, சிலதைப் போன்ற மற்றவை, ஒருவன்/ ஒருத்தி/ ஒருவர் போல் இன்னொருவர்/ இன்னொருத்தி/ இன்னொருவர் என்ற ஒக்குமை வகுப்பிற்கு (equivalence class) உள்ள சொற்பயனாக்கம் ”அனைத்து, அனைய, அனையன், அனையள், அனையர், அனைவர்” என்பதாகும். இந்த ஒக்குமை வகுப்பை சொல்லப்படும் உவமம் பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும். அதற்குக் கொஞ்சம் ஓர்மம் வேண்டும். யாரார் ஒக்குமை என்பது மெய்யியல், பொது அறிவு, நாகரிகம் சார்ந்து அமையும். சிந்தனையின்றி இதைச் சொல்லமுடியாது. ஒக்குமை இல்லாதவர் யாரும் இந்த ”அனைக்கும்” வகுப்பில் வரமாட்டார். எனக்கு ”அனைப்பு” என்பது உங்களுக்கு ”அனைப்பு” ஆகாது போகலாம். சிலபோது நாம்கொண்ட கருத்தாக்கம் (idealogy) கூட ஊடுவரலாம்.

ஆனால் எல்லா என்பது ஒக்குமை பார்க்காத ஒரு விளிப்பெயர். எ/ஏலா, எ/ஏலே, எ/ஏலி, எ/ஏடா, எ/ஏடே, எ/ஏடி, ஏய் என்று தென்பாண்டியில் சொல்வது ஒக்குமை பார்த்தா வருகிறது? இதன் தொடர்பாய் இந்தையிரோப்பியனில் பழகும் hello, hey, hi என்பதிலும் கூட யாரும் ஒக்குமை பார்ப்பதில்லை. அது ஒரு விளிப்பெயர்.  அவ்வளவுதான். கூப்பிடலாமா, கூப்பிடக் கூடாதா என்றெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. வெறும் மாந்தநேயம் நமக்கு இருந்தால் போதும், கூப்பிட்டுவிடுவோம். கூப்பிடப்படுபவன்/ள்/ர்/து/வை எந்தப் பால் என்று மட்டும் பார்த்துக் கூப்பிட்டு விடுவோம். ஆங்கிலத்தில் இதை to yell என்று வினையாக்குவார். தமிழிலும் எல்லுவது ”விளி-த்தல்” என்று சொல்லப்படும்.   ”எல்லா, எல்லாம், எல்லார், எல்லீர், எல்லோர்” என்ற சொற்களுக்குத் தரம் பார்க்கும் தேவையில்லை. ஆழ்ந்த மாந்த நேயம் நமக்கிருந்தால் போதும்,  

[ஆங்கிலத்தில் வரும் all கூட நம் எல்லா, எல்லாம், எல்லார், எல்லீர், எல்லோர் கூடத் தொடர்புள்ளது என்று சொன்னால் யார் கேட்க அணியமாயுள்ளார் சொல்லுங்கள்? இந்த இராம.கி.க்கு வேறு வேலையில்லை என்று நகர்ந்து விடுவார். அனைத்து என்பது ஆங்கிலத்தில் எங்கெல்லாம் inter என்று வருகிறதோ, அங்கு பயன்பாட்டில் கட்டாயம் வரும்.]  

அனைத்தும் என்பது சற்று வெளித்தள்ளும் தன்மை கொண்டது (exculsive). எல்லாம் என்பது முற்றிலும் உட்கொள்ளும் தன்மை கொண்டது (inclusive). வேறுபாடு இப்போது புரிந்ததா?

அன்புடன்,

இராம.கி.     .


No comments: