திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (~ கி.பி.1230) செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பியால் இயற்றப்பட்டது. பிறவா யாக்கைப் பெரியோனின் 64 திருவிளையாடல்களை விவரிக்கும் நூல்களில் இதுவே தமிழில் முதலெழுந்ததாய்த் தெரிகிறது. நம்பியார் புராணத்தை ஏட்டுச்சுவடியிலிருந்து அச்சுநூலாக முதன்முதல் 1906 இல் வெளியிட்டவர் உ.வே.சா. ஆவார். அதன் மறுபதிப்பு உ.வே.சா. நூலகத்தால் 1972 இல் மீண்டும் வெளியிடப் பெற்றது. இதற்குமுன் முழுதாகவன்றி அங்குமிங்கும் உதிரி உதிரியாய்ச் சில செய்திகளைத், தேவாரம், கல்லாடம், திருவாசகம் போன்றவற்றில் அறியலாம். இதற்கப்புறம் எழுந்த பல நூல்களில் கி.பி. 1660 இல் எழுந்த பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணமும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதாகும்..
அது என்னவோ தெரியவில்லை. பின்னவர் நூலையே பலரும் இக்காலத்திற் பேசுவார். ஆனால் உள்ளீட்டைப் பார்த்தால், அக்காலச் செய்திகளை (குறிப்பாக பாண்டியன் கடுங்கோன், அவனுக்கும் முந்தைய களப்பாளர் காலச் செய்திகளை) அறிய பரஞ்சோதியார் நூலை விட நம்பியார் புராணமே பயன்படும். (இதன் pdf படியை ஒருமுறை முனைவர் ழான்லுக் செவ்வியார் எனக்கு அனுப்பி வைத்தார். மாணிக்கவாசகர் காலம் பற்றிய என்னாய்விற்கு இந்நூலே பெரிதும் உதவியது.) தமிழறிஞரில் மிகப் பலர் நம்பியார் புராணப் பயன்பாட்டை உணர மறுக்கிறார். என்னைக் கேட்டால் திருவாலவாயுடையார் புராணத்தை மீளாய்வு செய்வது பயன்தரும். உருப்படியாக ஆய்வு செய்யத் தான் நம்மூரில் ஆளில்லை. தமிழாய்வு பெரிதும் தளர்ந்துள்ளது.
நானிங்கே சொல்ல வருவது வேறு. உ.வே.சா. வெளியீட்டின் முகவுரையில் பாண்டி நாட்டுத் தேவாரத் தலங்களாய் 14 தலங்களைக் குறிப்பிடும் வெண்பாவொன்று வரும்..
கூடல் புனவாயில் குற்றால மாப்பனூ
ரேடகநெல் வேலி யிராமேச - மாடானை
தென்பரங்குன் றஞ்சுழிய றென்திருப்புத் தூர்கானை
வன்கொடுங்குன் றம்பூ வணம்
ஒருமுறை இப்பாடல் குறித்து மின்தமிழ் குழுவில் உரையாடலெழுந்தது. அப்போது, திரு.வேந்தன் அரசு “இராமேசத்தின் பழைய பெயரென்ன?” என்று கேட்டார். நல்ல கேள்வி. இதன் விடையோடு தொடர்புடைய மற்ற செய்திகள் பலருக்கும் பயன்படுமென எண்ணி இங்கு பதிகிறேன்.
முதலில் ஈசமென்ற சொல்லின் பொருளறிவோம். (சிவன் கோயில்கள் பலவும் ஈசமென்றே சொல்லப் படும்.) ஈசமென்பது திசை தொடர்பான சொல். திசைகள் பற்றிய என் பழந்தொடரின் 3 ஆம் பகுதியில் (http://valavu.blogspot.in/2008/04/3.html) ஈந்து> ஐந்து> ஐந்திரம் என்பது கிழக்குத் திசையைக் குறிக்குமென நிறுவினேன். ஈந்து> ஈத்தின் தொடர்பாய் ’ஈசம்’ என்ற சொல் எழுந்து, வடகிழக்கைக் குறிக்கும்.
ஈசன்/சிவன் வடகிழக்குத் திசைக்கு உரியனென்றே மனையடிநூலிற் சொல்வர். இந்தியப் பெருநிலத்தின் வடகிழக்கில் தான் குயிலாலுவ>கயிலாலுவ என்னும் மலையுள்ளது. சிவன் அம்மலையில் உள்ளதாகவே தமிழரிற் பலரும் தொன்மஞ் சொல்வர்.
கயிலாயமன்றி ஈசன் திருவுரு அமைந்த இடங்களும்/கோயில்களும் கூட ஈசமென்றே அழைக்கப்பட்டன. ”ஈசம்” என்னும் சொல்லிற்குள் வகரஞ் சேர்த்து சங்கதம் பழகுவோர் ஈஸ்வமாக்குவர். இதே போல் ஈசனை தமிழ் முறைப் படி மதிப்புக் கூட்டி ஈசராக்கி சங்கத முறைப்படி ஈஸ்வர் என்றும் ஆக்குவர். ஈஸ்வரிலிருந்து மீண்டும் தமிழ்முறைப் படி ஈஸ்வரம்>ஈச்சுரம் ஆகும். இப்படித் தமிழும் சங்கதமும் மாறிமாறி ஊடாடியே சிவன் கோயில்களுக்கான பெயர் எழுந்தது. சங்கதம் பழகவேண்டாமெனில் ”ஈசம்” என்பதே நமக்குப் போதும்.
சிவனுக்கு உரியதாய்ச் சொல்லப் படும் 12 சோதி இலிங்கங்களில்
இராமேசத்தைத் தமிழ்நாட்டிலும்,
சோமேசத்தைக் கூர்ச்சரத்திலும்,
நாகேசம், குசுமேசம் போன்றவற்றை மாராட்டத்திலும்,
விசுவேசத்தை உத்திரப் பிரதேசத்திலும்
பொருத்துவர். இவையத்தனையும் ஈசமென முடியுந் தலங்கள். அகரமும் ஈகாரமுஞ் சேர்ந்து வடமொழிப் புணர்ச்சியில் ஏகாரமாகும். இது போக,
வித்தநாதம் (வைத்யநாதம்),
வீமநாதம் (பீமநாதம்),
திரியம்பகமென 3 தலங்கள் மாராட்டத்திலும்,
திருப்பருப்பதம் (சிரீசைலம்) ஆந்திரத்திலும்,
ஓங்காரம், உஞ்சை (உச்செயினி) மத்தியப் பிரதேசத்திலும்,
கேதாரம் உத்திரப்பிரதேசத்திலும் காட்டப்படும்.
இராமேசத்தில் 2 இலிங்கங்கள் உண்டு, முன்னால் உள்ள இலிங்கம் மணலால் ஆனது. இரண்டாம் இலிங்கம் கல்லால் ஆனாது. முதலாவதைச் சீதை/ இராமன் பிடித்துவைத்தார் என்றும், 2 ஆவதை அனுமன் வடக்கிருந்து கொண்டு வந்தான் என்றுஞ் சொல்வர். (தொன்மக் கதைகள் எல்லாம் உண்மையா, இல்லையா என்ற சிக்கலுக்குள் நான் போகவில்லை. நம்புபவனுக்கு அவை உண்மை.)
இராமேசக் கோயில் தேவார காலத்தில் மீச்சிறிதே. இன்றுள்ள மண்டபங்கள், சுற்றாலைகள் எல்லாம் அன்றில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் கருவறையைச் சுற்றி ஒரு சுற்றாலை இருந்திருக்கும். 12 ஆம் நூறறாண்டில், பாண்டியரின் தாயாதிச் சண்டையில் ஒருவனுக்கு ஆதரவாய் ஊடுவந்த சிங்கள மாமன், மன்னன் பராக்கிரம பாகுவே பழங் கோயிலை இடித்து இற்றைக் கோயிலின் அடிப்படை அடவை உருவாக்கினான் என்பர்.
(நாம் விரும்பினாலும், விரும்பா விடினும், தமிழர்-சிங்களர் ஊடாட்டம் நம் வரலாற்றில் நெடுகவேயுண்டு. வரலாற்றில் அதைத் தவிர்க்கவே முடியாது. அவனுக்கு நாம் பெண் கொடுத்தோம், அவன் வீட்டில் பெண் எடுத்தோம். எனவே அது ஒரு தொடர்கதை.)
கோயில் இறைவர் பெயர் இராமநாதர் (மணல் இலிங்கத்திற்கு அதுவே பெயர்.). முன்னிருக்கும் கல் இலிங்கத்திற்கு இராமலிங்கமென்று பெயர்.
(எத்தனை பேருக்குத் தெரியுமென்று தெரிய வில்லை. இராமசாமியெனில் பெருமாளைக் குறிக்கும். இராமநாதனெனில் சிவனைக் குறிக்கும். இவன் ”ரம்மியம்” ஆனவனா? அன்றி இராமனுக்கு நாதனா? இராமத்தின் நாதனா? -என்பது பார்வையைப் பொறுத்தது. (நான் மூன்றாம் விளக்கத்தை நம்புபவன். கீழே பார்ப்போம்.)
இறைவியின் பெயர் மலைவளர் காதலி., (பருப்பத/பர்வத வர்த்தினி என்பது அதன் சங்கதவாக்கம்.). கோயிலுக்குள் உள்ள பல்வேறு நீர்நிலைகள் உப்புநீர் மேல் கூடியுள்ள நன்னீரால் ஏற்படுவன. இன்று நம்மூர் ஐயர்கள் இங்கு பூசகத்தில் பங்குறுவதில்லை. பண்டாக்கள் எனும் மராட்டியக் குருக்களே உண்டு. வரலாற்றில் வந்த விசயநகர, மராட்டிய, நாயக்கர் தாக்கம் இது என்று எண்ணுகிறேன். இற்றை மண்டபங்களெல்லாம் இவர்களாலும், பின்வந்த சேதுபதிகளாலும், எழுந்தவை. மூன்றாம் சுற்றாலை என்பது மிகப் பெரியது. இற்றைக் காலத்தில் கோயிலிற் காணப்படும் கூட்டம் சொல்லி மாளாது. ஒரே இரைச்சல். அங்குமிங்கும் பற்றர்களின் ஓட்டம். எங்கு பார்த்தாலும் நீர்ச்சகதி.
காசிக்கும், குமரிக்கும் (சோழர் காலக் கல்வெட்டுகள் அப்படிச் சொல்கின்றன) சொல்லப்பட்ட இடையுறவு எப்படியோ காசிக்கும், இராமேசத்திற்குமாய் மாறி விட்டது. எப்போது இப்படி மாறியது என்பது ஒரு சுவையான ஆய்வு. ஒரு வேளை பாண்டியராட்சி முடிந்த பின் விசயநகர ஆட்சியில் இது ஏற்பட்டதோ, என்னவோ? கோயிலுக்குள் இந்தியே இன்று அன்றாட மொழி. விரைவு வண்டிகளில் நம்மூர்க்காரரை விட வடவர் கூட்டமே மிகுத்துள்ளது.
கோயில் கிழக்கு வாசலுக்கு முன் நீராடுங் கடலில் குப்பைகளும், மாசுகளும் நிரவிக் கிடக்கின்றன. யாராவது இதைச் சரி செய்தால் என்ன? - என்று தோன்றுகிறது. ”ஸ்வட்ச் பாரத்” என்று சொல்வதெல்லாம் எங்கு போயிற்றென்று தெரியவில்லை. இன்னுங் கூட மரங்களை நட்டுத் தீவைச் சரி செய்யலாம். வறட்சி அங்கு பெரிதும் கூடிவருகிறது. நன்னீர்த் தட்டுப்பாடு அங்கு பெரிதாகவேயுள்ளது. கோயிலில் தெரிசனம் முடித்த பின், அப்துல் கலாம் நினைவகத்தில் கூட்டம் கூடுகிறது. தீவின் பொருளியல் வளர்ச்சியில் அதுவொரு மாற்றம்.
தேவார காலத்தில் இராமேசம் என்பது ஒரு தீவில்லை. (ஏனெனக் கீழே சொல்வேன்.) இராமநாதபுரத்திலிருந்து கடலுள் நீண்டு செல்லும் துருத்தியாகவே இதுவன்று இருந்திருக்கலாம். துருத்தியின் முடிவில் வில் வடிவத்தில் பாதி முழுகியும் மீதி முழுகாதும் படி நிலமிருந்து அது அந்தப்பக்கம் மன்னாரை இணைத்தது. இப்படி இணைத்த பாதையே சேது என்றார்.
மன்னாருக்கு அடுத்தது திருக்கேதீச்சுரம். வில்வடிவின் தொடக்கமான விற்கோடியை தனுஷ்கோடியென சங்கதத்தில் பெயர்த்துச் சொல்வார். (விற்கோடியைத் தொல்முதுகோடி எனச் சிலர் சொல்ல முற்படுவது வெறும் புரட்டு. அகநானூறு சொல்வது இந்த இடமில்லை. அது திருமறைக்காட்டிற்கு அருகிலுள்ள கோடிக்கரை. அதைப் பற்றி வேறிடங்களில் நெடுகப் பேசி உள்ளேன். மீண்டும் இங்கு பேசிப் பொரித்தெடுக்க வேண்டாம் என விடுக்கிறேன்.)
இன்று இராமேச்சுரத்திலிருந்து விற்கோடி வரை தமிழக அரசினர் உருப்படியான சாலை ஒன்றைப் போட்டுள்ளார். 2018 இல் இராமேசம் போனபோது இதைப் பார்த்தேன். வியந்து போனேன். இப்போது இராமேசம் வருவோர், ஒரு தானியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு விற்கோடி வரை போய் வருகிறார். அடுத்த முறை நீங்களும் போய் வாருங்கள். பார்த்து வியக்க வேண்டிய இடம்.
துருத்திக்குள் நடந்து சென்று இந்திய முனையைத் தொடும்போது, அங்கிருந்து வில் நீருக்கடியில் வளர்ந்து கிடப்பதை நன்றாகவே உணரமுடியும், நாசா வெளியிட்ட படத்திலும் இதைப் பார்க்கலாம். இது மாந்தன் செய்த சேது என்பதை மட்டும் நான் ஏற்கேன். வானம் தெளிவாகி, பார்வை கூர்ந்து, கையில் ஒரு தொலைப்பெருக்கியும் (telescope) இருக்குமானால், அந்தப் பக்கக் கோடியில் உள்ள நிலத்தையும் பார்க்கலாம்.
சம்பந்தர் காலத்தில், இன்றிருப்பதை விட 2,3 மீட்டர்கள் கடலாழம் குறைந்து இருக்கும். அதனால் துருத்தி இன்னும் ஒரு சில கிலோமீட்டர் நீண்டிருக்கும். வெகு எளிதில் இராமேசத் தீவில் இருந்தே தொலைபெருக்கி கொண்டு (வானம் தெளிவானால் வெறும் மாந்தக் கண் வழியாகவே தொலைபெருக்கி இல்லாது வெகேதீச்சுரத்தைப் பார்க்க முடியும். எனவே அந்தத் தொலைவிற்குப் சம்பந்தர் போயிருப்பார் என்று கூட நாம் கொள்ளலாம். இப்பக்கத்திலிருந்து திருக் கேதீச்சுர விமானத்தையே கூட சம்பந்தர் பார்த்திருக்கலாம். யார் கண்டார்?
இராமேசம் அன்று தீவில்லை என்று ஏன் சொன்னேன்? தீவாயிருந்தால், படகு வைத்தல்லவா சம்பந்தர் இராமேசம் கோயிலுக்குப் போயிருக்க முடியும்? பின்னால் அதே படகில் திருக்கேதீசம் வரை போக என்ன சிக்கல்? அவர் போகவில்லையே? இங்கிருந்தே கேதீசத்திற்கும் திரிகோண மலைக்கும் அவர் பதிகம் பாடியுள்ளாரே? இத்தனைக்கும் பாண்டிய அரசி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் அருகில் கூட இருந்தாரே?
அப்படி எனில் என்ன பொருள்? கேதீசத்தை விற்கோடியிலிருந்து சம்பந்தரால் பார்க்க முடிந்தது என்றுதானே நாம் கொள்ள முடியும்? இடையில் கடல். ”ஆளுடைப் பிள்ளையை” அருகில் வைத்துக் கொண்டு ஓர் இக்கை (risk) எடுக்க அரசியும், அமைச்சரும் விரும்பவில்லை. அதே பொழுது இராமநாதபுரத்தில் இருந்து எல்லோரும் நடந்தே, அல்லது ஊர்தி வழி நகர்ந்தே, இராமேசம் வர முடிந்தது என்றுதானே பொருள்? இவ் ஏரணத்தைச் சற்று ஆழ்ந்து உணருங்கள்.
மயிலை சீனி வேங்கடசாமியும், 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, குறிப்பிட்ட விழா நாட்களில் இராமேசத்து இராமலிங்க ஊருலவரைத் தூக்கிக் கொண்டு இராமநாதபுரம் அரண்மனையான இராமலிங்க விலாசம் வரை வந்து, ஒருநாள் அங்கு வைத்திருந்து மீண்டும் கோயிலுக்கு எடுத்துச்செல்வர் என்று தெளிவாக ஆதாரத்துடன் பதிவு செய்வார்.
ஆகப் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இராமேசம் என்பது ஒரு தீவல்ல. வெறும் துருத்தி. பார்த்தீர்களா? இவ்வளவு சொன்னேன். இராமேசத்தின் மறு பெயரைச் சொல்லாது விட்டேனே? ஒரு காலத்தில் எம் அரசர்களின் குடும்பப் பெயர் சேதுபதி. அவர் சேதுக்கு ”பதி”. சேதென முன் சொன்னேனே அது விற்கோடிக்கு அப்புறமுள்ள ஓர் இயற்கை இணை. சேது உள்ள ஊர் சேதூர். அவ்வூருக்குப் போகும் 2 விரைவு வண்டிகளில் ஒன்றின் பெயர் இராமேசுரம் விரைவி, இன்னொன்று சேது விரைவி. சேது தான் அவ்வூரின் மாற்றுப் பெயர். இராமநாதபுரச் சீமையில் யாரைக் கேட்டாலும் இந்த மாற்றுப் பெயரைச் சொல்வர்.
”சேதுவை மேடுறுத்தி வீதி செய்வோம்” என்றான் பாரதி. ”சேடனென்னப் பொலிந்தது சேதுவே” கம்பரா. சேதுப. 66. “சேதுவின் இராமநாதனை நிறுவிய காதை” என்பது சேதுபுராணம். அவை.1 “சேது காவலன் திருவணைக் காவலன்” என்பது கல்லாடம். “சேது புராணம்” என்பது 16 ஆம் நூற்றாண்டில் நிரம்ப அழகிய தேசிகரால் பாடப் பெற்ற இராமேசுரப் புராணம் ஆகும். இனி இராமேசம் என்ற பெயர் எப்படி எழுந்தது என்று பார்ப்போம்.
அன்புடன்,
இராம.கி.
1 comment:
kadal kadanthirunthaal saadhi neekam seithirupaaragal, aatdhalaal ungal kootru sariyendre padukirathu.Nandri.
Post a Comment