”இராமேசம்” கட்டுரையை ஒருவழி முடித்ததாகவே முதலிற் கருதினேன். ஆனால் அது முடியவில்லையென்று தோன்றியது. 2 காரணங்கள். 1. சேதுவும் கோடியும் வடமொழியெனச் சிலர் சொன்னது. 2. ”இராமேசத்தில்” இன்னும் நான் தோய்ந்தது. முதற்கூற்றிற்கு விடை சொல்வதும், 2 ஆவதைப் பதிவு செய்வதும் தேவை. அதனாற்றான் இத்தொடர்ச்சி.
முதலில் ”வடமொழி” ஆட்டையைப் பார்ப்போம். ”சேரே திரட்சி” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரியியலின் 65 ஆம் நூற்பா. சேரிற் பிறந்த சொற்கள் மிகப்பல. அச்சொற்கள் பிறக்கையில், சில வற்றில் ரகரம் வெளித் தெரிவதும், சிலவற்றில் கரந்துறைவதும் உண்டு. இன்னும் சில சொற்களில் ரகரந் திரிந்து வேற்றொலிகள் ஆவதுமுண்டு. மொழிவளர்ச்சி, இது போன்ற சொற்றிரிவுகளாலேயே ஏற்படுகிறது. ஈன் (gene) வெளிப்பாட்டு மாற்றங்களால் (mutations) எப்படி உயிரினங்கள் உலகிற் பெருகினவோ, அது போல் சொல் திரிவுகளால் மொழிச் சொற்கள் பெருகின. அதே பொழுது, கண்டமேனிக்கு மொழிச்சொற்கள் திரிவதுங் கிடையாது, அவற்றின் மாற்றங்களில் வியக்கத் தக்க ஒழுங்கும், விதிமுறைகளுமுண்டு.
குருமிய (chromosomes) ஒழுங்கு முறைகளையும், மாற்றங்களையும் எப்படி ஈனியல் கண்டுபிடிக்கிறதோ, அதுபோல் தான் சொற்றொகுதிகளின் ஒழுங்கு முறைகளையும், திரிவுகளையுஞ் சொற்பிறப்பியல் கண்டுபிடிக்கிறது. இற்றை ஈனியல் எப்படியோர் அறிவியலோ, அதுபோற் சொற்பிறப்பியலும் அறிவியல் தான். (தமிழரின் போகூழாய் இணையத்தில் தமிழ்சொற்பிறப்பியல் பற்றிய இனம்புரியாக் குழப்பம் உள்ளது. ”பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே” என்பார் பெரியோர். தமிழ்ச்சொல் பலவும் சங்கதக் கடன் எனும் பொய்யைக் காலங் காலமாய்க் கேட்டு வந்ததால், நம்மேலேயே நமக்கு நம்பிக்கையிலாது போனது போலும். தமிழர்களே! அருள் கூர்ந்து விழிப்புறுங்கள்..
இங்கே சேரையும், அதனோடு தொடர்புடைய, சேருக்கு முந்தைய, ’சால்’, ’சார்’ தொடர்பான சொற்களையும் பார்க்கிறோம். (இவற்றிலும் திரிவுகளுண்டு.) சாகார/சேகாரச் சொற்களை மட்டுமே பட்டியலிடுகிறேன். இவற்றின் சொற் பொருள்களுள் கூட்டம், திரட்சி, பிணைப்பு என்பன, தெளிவாக வெளிப்படும். முதலில் சாகாரச் சொற்களைக் காண்போம். ரகரம் வெளியில் தெரிவதையும், கரந்துறைவதையும், திரிவதையும் சேர்த்தே தருகிறேன்.
சார்= கூடுகை, பக்கம், அணைக்கரை (3ஆம் பொருள் முகன்மை), தாழ்வாரம்; சார் கொடுத்தல்= அணுகவிடல்; சார்ச்சி= தொடர்பு, சேருகை; சார்த்தல்= இணைத்தல், சாரச் செய்தல்; சார்த்து வகை= சார்பு வகையால் கூறும் முறை; சார்த்துவரி= பாட்டுடைத் தலைவனை இடம், பேரோடு சார்த்திப் பாடும் வரிப்பாட்டு; சார்தல்; சார்ந்தவர்= சுற்றத்தார், நண்பர்; சார்ப்பு= ஆதாரம்; சார்பறுத்தல்= துறத்தல்; சார்பு; சார்பெழுத்து; சார்மனை; சார்மானம்; சார் வணை= சாய்தற்குரிய அணை; சார்வு; சாரி= கூட்டம்; சாரியை= சார்ந்து வரும் இடைச்சொல்; சாரை= அடுத்தடுத்து வருவது; சால்= நிறைவு; சால்தல் = நிறை தல், பொருந்தல்; சாலம்= கூட்டம்; சாலை= நிறையுமிடம், கூடம், கொட்டில், மண்டபம், மரஞ்செறிந்த பாதை; சாவகன்= சார்ந்திருப்பவன் வேதமறுப்பு நெறிகளில் பழகுஞ் சொல், அறிவரைச் சார்ந்தவர்; சா(ர்)வடி = சாரும் இடம், தங்குமிடம்; சார்>சாறுதல் = பெருக்கல்; சாறு = பெருகிய கூட்டம் சேரும் திருவிழா,
இனிச் சேகாரத்தில். ரகரம் வெளித்திரிவதையும், கரந்துறைவதையும், திரிவதையும் தனிப் பட்டியல்களில் காட்டுகிறேன். முதலில் ரகரம் வெளித் தெரியுஞ் சொற்கள்: சேர்க்கை= திரள்கை, கூடுகை; சேர்கட்டல்= தானியம் அளந்து நெற்கட்டி விடல்; சேர்கால்= தளைகால்; சேர்த்தல்= இயைத்தல், தொடுத்தல், கலத்தல், புணரச்செய்தல், கூட்டிக் கொள்ளல், கட்டல், இடைச் செருகல், ஈட்டல், தனதாக்கல், அடைவித்தல்; (சேதுப்பொருளறிய முகன்மைத் தொழிற்பெயர் சேர்த்தல்.); சேர்த்தி; சேர்தல்; சேர்ப்பு= வாழ்விடம், கடற்கரை; சேர்பு= வாழ்விடம்; சேர்மானம்= இணைப்பு, கூடுகை; சேர்விடம்; சேர்வு; சேர்வை; சேர= கூட; சேரக்கட்டுதல்; சேரி= ஊர். இச்சொற்களின் எல்லாப் பொருள்களையும் இங்கு பட்டியலிடவில்லை. அடுத்து ரகரம் கரந்துறையும் சொற்கள்:
சே(ர்)க்காளி= தோழன்; சே(ர்)க்குப் புள்ளி= உறவினரற்றுத் திரிந்தவன்; சே(ர்)க்கை= மக்கட் படுக்கை, விலங்குப் படுக்கை, தங்குமிடம், பறவைக்கூடு; சே(ர்)க்கைப்பள்ளி= படுக்கை; சே(ர் )கண்டி= காவலர் உறைவிடம்; சே(ர்)கரம்= கூட்டம்; சே(ர்)து= செய்கரை, நீரணை, பாலம் (இவற்றின் விளக்கம் கீழே. செய்வதும் சேர்ப்பதும் தொடர்புள்ளவை) சேது பந்தனம்= அணைக்கட்டு (சங்கதமெனத் தெரியுஞ் சொல். பந்தனம், பந்தத்தில் உருவானது. பல்+து>பற்று தமிழானால், பல்+ந்+து= பந்தும் தமிழே. இந்தையிரோப்பியனில் bind ஆகும். உடையெலும்பு ஒட்டுக்குக் கட்டும் மட்டையை நுட வித்தகர்(வைத்யர்) பற்று> பற்றை>பத்தை என்பார். பத்தையில் ரகரஞ் சேர்க்க bridge ஆவது புரியும்); சே(ர்)வகம்= ஊழியம்; சே(ர்)வனை= ஊழியத் தொழில்; சே(ர்)வித்தல்= பணி செய்தல், வணங்கல் (சேவித்தலில்லாப் பெருமாள்கோயில் உண்டோ?); சேவுகம்= ஊழியம்; சேவை= தொண்டு (சேவையின்றிப் பொருளியல் இயங்குமோ?) அடுத்து ரகரம் றகரமாகிய, டகரமாகிய காட்டுகள்: சேறு= சகதி, குழம்பு, சாரம்; சேடு= திரட்சி.
மேலிருக்கும் பல்வேறு சொற்களையும், கூட்டுச்சொற்களையும் ஆழ்ந்து பார்த்தால் சேது, தமிழ்ச்சொல்லே. அதைச் சங்கதம் என்பது அறியாக் கூற்று. (சேது சங்கதமெனில், மேலே உள்ள எல்லாச் சொற்களுக்கும் சங்கதப் பின்புலம் சொல்ல வேண்டுமே? ஒப்புவீர்களா?) ”அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெலாம் பேய்” என்பார். ஒரு சிலருக்குக் கண்டதெலாம் வடமொழி என்பதே வாடிக்கை ஆகிறது.
2 இடங்களை, 2 பொழுதுகளை, 2 மாந்தரைச் சேர்த்தலும் தமிழ்தானே? விற் கோடி ஒருமுனை, மன்னார் இன்னொரு முனை எனில். இவற்றைச் சேர்ப்பது சே(ர்)து. இதை (மாந்தர்) செ(ய்)தது எனும் தொன்மத்தை இற்றையறிவியல் உறுதி செய்யவில்லை. ஆனால் 2 முனைகளைச் சேது சேர்ப்பது உண்மை. தவிரச் : மேற்கூறிய ”சாரின்” பொருளான அணைக்கரையையும், ’சார்வணை’யையும் பாருங்கள். ’சாரை’ உறுதி செய்வது போல் ’பார்’ என்ற சொல்லும் நெய்தலிலுண்டு. “வரம்பு, அணை” என்று பொருள் சொல்வர். பார்க் கட்டல்= வரம்பு கட்டல். உள்ளே அலை வராதிருக்கக் கட்டுவது. பாரோடு தொடர்பு உள்ளதே பல்>பால்>பாலம். (பத்தைக்குச் சொன்ன பல்லே இதற்கும் வேர். பாலத் தூண்கள் பல் போலக் கீழ்நிலம் பற்றும்.) இதற்கு ”நீர் அணைச் சுவர்” என்றும், ”நீர் கடக்கும் கட்டுமானம்” என்றும் பொருள். இனி சங்கதம் சொல்லும் கருத்திற்கு வருவோம். மோனியர் வில்லியம்சில், setu என்பதற்கு,
(H1) sétu [p= 1246,1] [L=252089] mfn. (fr. √1. si) binding , who or what binds or fetters RV.
(H1B) sétu [L=252090] m. a bond , fetter ib.
(H1B) sétu [L=252091] m. a ridge of earth , mound , bank , causeway , dike , dam , bridge , any raised piece of ground separating fields (serving as a boundary or as a passage during inundations) RV. &c
(H1B) sétu [L=252092] m. rāma's bridge (» setubandha) BhP.
(H1B) sétu [L=252093] m. a landmark , boundary , limit (also fig. = " barrier , bounds ") Mn. MBh. &c
(H1B) sétu [L=252094] m. a help to the understanding of a text , an explanatory commentary (also N. of various commentaries) Cat.
(H1B) sétu [L=252095] m. an established institution , fixed rule MW.
(H1B) sétu [L=252096] m. the praṇava or sacred syllable Om (which is said to be mantrāṇāṃ setuḥ) Ka1lP.
(H1B) sétu [L=252097] m. Crataeva Roxburghii or Tapia Crataeva (= varaṇa , varuṇa) L.
(H1B) sétu [L=252098] m. N. of a son of druhyu and brother of babhru Hariv.
(H1B) sétu [L=252099] m. of a son of babhru Pur.
(H1B) sétu [L=252100] m. of a place MW.
என்று போட்டிருப்பர். இதன் வேராக si காட்டப்படும். அதையுந் துழாய்ந்தால், Westergaard Dhatupatha links: 27.2, 31.5, Whitney Roots links: sA1 என்பது சொல்லி,
(H1) si 1 [p= 1213,1] [p= 1212,3] [L=243722] (cf. √4. sā) cl.5.9. P. A1. ( Dha1tup. xxvii , 2 ; xxxi , 5) sinoti , sinute ; sinā́ti , sinite (really occurring only in pres. sinā́ti , impf. asinot ; pf. siṣāya RV. ; aor. [?] siṣet ib. ; asaiṣīt , aseṣṭa Gr. ; fut. setā ib. ; siṣyati MBh. ; seṣyati , °te Gr. ; inf. sétave AV. ; setum Gr.) , to bind , tie , fetter RV. AV. VS. Pa1rGr2. Kat2hUp. : Caus. sāyayati (aor. asīṣayat) Gr.: Desid. sisīṣati , °te ib. : Intens. seṣīyate , seṣayīti , seṣetiib. [cf. Gk. á¼±-Î¼Î¬Ï , á¼±-μονία ; Lett. sinu , " to bind " ; Angl.Sax. sa7l ; Germ. Seil.]
(H1) si 2 [L=243729] (» sāyaka , senā) , to hurl , cast.
(H1) si 3 என்ற விளக்கமும் வரும். ஸேது, சங்கமன என்பன பாலத்திற்கான பாலிச் சொற்கள். சேது என்பது பாகதத்திலும் உண்டு.
ஆணிவேரின் பொருள் பந்துதலே. சேது என்பது பந்தமென்ற பொருளிலேயே பருப்பொருள் குறியாது, கருத்துப் பொருளில் இருக்குவேதத்தில் ஆளப்பட்டது. பொதுவாகக் கருத்துப் பொருள் குறிக்கும் சொற்கள் முதற் சொற்களாய்ச் சொல்ல முடியாது. இன்னும் ஆய்வு தேவை. பருப்பொருளில் முதன்முதல் குறித்தது பாகவத புராணமே (இது தென்னக உருவாக்கம். நம்மூர் ஆழ்வார் காலத்தது.) அடுத்து மாபாரதம். அங்கும் எக் களத்தில் இது சொல்லப்பட்டது என்று தெரியவில்லை. மாபாரதம் இறுதி செய்யப்பட்டது பொ.உ.400 இல். சேதுவுக்கு முந்தைய, மேலே காட்டிய, பல தமிழ்ச் சொற்கள் சங்க இலக்கியத்தில் உண்டு. சேது அதில் இல்லை தான். ஆனால் சேது பற்றிய பருப்பொருட் குறிப்பு ஆழ்வார் பாசுரங்களிற்றான் முதலில் வருகிறது போலும். .
சேர் என்ற சொல் கூட்டுப்பொருளில் சுள்> செள்> செரு> சேர் என்று உருவானதாய்த் தமிழ்ச்சொற்பிறப்பியல் சொல்லும். சுள்> செரு> செறி = கூடு; சுல்> (சொல்)> சோலை, சொல்> சொது> சொதை = குழாம், கூட்டம்; சார்> சார்த்து> சாத்து = வணிகக்கூட்டம், சுல்> சொல்> சோல்> சால்> சாலுதல் = நிறைதல்; சால் = மிக; சான்றோர் = நற்குணம் நிறைந்தோர்; சான்றாண்மை = நற்குணங்கள் நிறைந்து அவற்றை ஆளுந்தன்மை; சுள்> செள்> செழு> செழுத்தல்> செழித்தல் = மிகுதல்; செழியன் = பாண்டியனின் குடும்பப் பெயர்; செய் = நிலம்; செய் = கை;
இனி இன்னும் ஒன்று மீந்திருக்கிறது. இராமேசத்தில் ஈசத்தின் பொரூள் பார்த்தோம். இராமத்தின் பொருளென்ன? ஏன் இலங்கையோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்?
அன்புடன்,
இராம.கி.