Wednesday, July 24, 2019

மாம வேவு.

அண்மையில் நண்பர் வினைதீர்த்தான் தன் பேர்த்தி வசந்தாவின் திருமணத்தில் மாம வேவு நடந்ததை ஒளிப்படங்கள் வழி தெரிவித்தார். அப்போது ஒரு நண்பர், 

“மாம வேவு என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்குத் திரு. வினைதீர்த்தான், ”மாம வேவு என்பது தாய்வீட்டுச் சீர்! மகள் வீட்டில் கல்யாணம் போன்ற முதல் சுப நிகழ்வுகளில் அந்தக் காலத்தில் ஓலைப்பெட்டியில் அரிசி, தேங்காய், கத்தரிக்காய் போன்றவற்றையும் பரங்கிக்காய், இலைக்கட்டு போன்ற கல்யாணத் தேவைக்கான பொருட்களையும் தர, அவற்றைப் பெண்வீட்டுப் பெண்பிள்ளைகள் பெற்றுக் கொண்டுள்ளார். தற்காலத்தில் அதன் குறீயீடாக வெள்ளிக் கடகத்தில் அரிசி கத்திரிக்காய், தேங்காய் வைத்து அதனை தாய் வீட்டுப் பங்காளி தலைப் பாகை கட்டி தலையில் வைத்து விளக்கினை நடுவில் வைத்து பெண் வீட்டார் அதனை இறக்கிக் கொள்கிறார். பொருட்களுக்காகத் தாய் வீட்டார் ஒரு தொகையும் கொடுக்கிறார். பதில் மரியாதை தாய் வீட்டாருக்கு மகள் வீட்டாரால் செய்யப்படுகிறது. 

கொடுத்தலும் கொள்ளலுமான மேன்மை உறவுக்கு முன்னோர் கண்ட வழிமுறை இம் மாம வேவு போன்றவையாகும். வேளென்ற வேர்ச்சொல்லும் கூறுகிறார். அறிஞர் திரு Krishnan Ramasamy மேல்விவரம் தரக்கூடும்” என்ற மறுமொழி அளித்தார்.

வினைதீர்த்தான் கேட்டதற்கான விளக்கத்தைச் சட்டெனச் சின்னஞ்சிறிதாய்ச் சொல்லிவிட முடியாது. சற்று நீளும். மாம வேவிற்கு மட்டுமின்றி (பல்வேறு குமுகங்கள் பின்பற்றிய, பொருள் விளங்காது சடங்கு ஆகிப் போன) பெரும் பாலான பழக்க வழக்கங்களுக்கும் விளக்கம் சொல்ல வேண்டின், சடங்குகள், மரபுகள், சொற்களென எல்லாம் சேர்த்துப் பார்த்தால் தான் அவற்றின் பொருள் விளங்கும். 

முதலில் நகரத்தாரில் உள்ள 23 வகுப்பினரின் ஈனியல் விதப்பையும், அதன் பின் தாய்மாமன் விதப்பையும் (இது நகரத்தாரில் மட்டுமல்ல, பெரும் பாலான தமிழரிடையேயும் உண்டு.) முடிவில் மாம வேவு எனுங் கூட்டுச் சொல்லிலுள்ள பொருளையும் ஆழமாய்ப் பார்ப்போம்.

ஒவ்வொரு மாந்த உயிர்ச் சில்களிலும் (cell) 23 குருமயச் சோடிகள் (Chromosome pairs குருமம்= நிறம்; குருமயம் = நிறப்பொருள்) உள்ளன. 23 ஆம் சோடியைப் பாற்குருமயச் சோடி (pair of sex chromosomes) என்பார். பாற்குருமயச் சோடி யமைவதில் பெண்ணுக்கும் ஆணுக்கும் வேறுபாடுண்டு. 

குழவிக்குத் தாய்வழி வருவதைப் X பாற்குருமயம் என்றும். தந்தைவழி வருவதை Y பாற்குருமயம்  என்றுஞ் சொல்வர். ஒரு பெண் குழந்தையின் பாற்குருமயச் சோடியில் தந்தைக்கென பங்களிப்பில்லை. எல்லாப் பெண்களுக்கும் தாயின் X-ஏ இருபடியாகி XX எனப் பாற்குருமயச் சோடியே அமையும். (அதே போது மற்ற 22 குருமயங்களில் தாயும் தந்தையும் வெவ்வேறு விகிதங்களில் பங்களிப்பது உண்மையே). இது தவிர, தாயிடம் இருந்து அவளின் எல்லாக் குழந்தைகளுக்கும் நீட்குன்றிப் (mitachondria) பொருளும் வந்து சேரும். குன்றி போல் தோற்றி, நீள்வட்ட நூலாய்க் காட்சியளிப்பது நீட்குன்றி ஆகும். இந் நீட்குன்றி நம் எல்லோருடைய சில்களிலும் உண்டு. வேதியல் அடிப்படையில் நீட்குன்றி என்பது ஒரு வித அஃகில் அரப நெற்றுக் காடி (அஃகில் நெக் காடி) [Deoxyribo Nucleic Acid (DNA)] ஆகும். (இவ் வேதியற் பொருளை இங்கு நீளமாய் விளக்கத் தேவையில்லை.)

மேற்சொன்ன பாற்குருமய அமைப்பிற்கு மாறாய் ஆண்குழந்தையின் பாற்குருமயச் சோடியில், தாய்க்கும், தந்தைக்கும் சமபங்குண்டு. எல்லா ஆண்களுக்கும் XY என்றே பாற்குருமயச் சோடியமையும். (அதேபோது மற்ற 22 குருமயங்களில் தாயும் தந்தையும் வெவ்வேறு விகிதங்களில் பங்களிப்பர் உண்டு.) ஒவ்வொரு ஆணுக்கும் அவன் தந்தை, தந்தையின் தந்தை (தாத்தன்/பாட்டன்), தந்தை வழிப் பாட்டனின் தந்தை (பூட்டன்), தந்தை வழிப் பூட்டனின் தந்தை (ஓட்டன்) என ஆண்குருமயமும் (Male Y chromosome), தாய், தாயின் தாய் (தாய்வழிப் பாட்டி), பாட்டியின் தாய் (தாய்வழிப் பாட்டியின் தாய்- பூட்டி), பூட்டியின் தாய் (தாய்வழிப் பூட்டியின் தாய் - ஓட்டி) என X பாற்குருமயமும், நீட்குன்றி அஃகில் நெக்காடியும் வந்து சேரும்.

நகரத்தாரில் 23 வகுப்பினரின் குருமயங்களை ஈனியல் வழி ஆராய்ந்த மதுரைப் பல்கலைப் பேராசிரியர் இராம. பிச்சப்பன் “ஆச்சி வந்தாச்சு” என்ற தமிழிலக்கிய மாதிகையில் 18 வகுப்பாரின் ஆண்குருமய அடையாளத்தையும், எக்காலத்தில் இவ்வகுப்பார் தமிழகம் சேர்ந்திருக்கலாம் எனும் விவரத்தையுங் கொடுத்தார். கவனங் கொள்க! ஈனியல் சொல்வது வரலாற்றுக்கு முற்பட்டது பற்றியாகும். [வரலாற்றுக் காலத்தில், பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் மகன் கோச்சடையன் காலத்தில் (பொ.உ.671-710) தான் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து நகரத்தார் பாண்டி நாடு புகுந்திருக்கலாம் என்பது வேறு ஆய்வுச் செய்தி.] காவிரிப் பூம்பட்டினத்திற்கும் முன்னால் தமிழகத்தில் நகரத்தார் எப்போது அடையாளங் கொண்டார்?- என்பதைத் தான் ஈனியல் இங்கு சொல்ல முற்படுகிறது. இவ்வாய்வின் வழி ”நகரத்தாருள் பல்வேறு கலப்புகள் பல்வேறு காலங்களில் எழுந்திருக்கலாம்” என்பதும் புலப்படுகிறது.

ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவில் முதலிற் குடியேறிய முகன மாந்தரான நெய்தலாரின் (coastal people) அடையாளங்களும் இவருள் விரவியுள்ளது. மேற்கு யூரேசியரின் (west Eurasian) கலப்பும் நகரத்தாரிடம் உள்ளது. ஆத்திரேலோ ஆசியர்களின் (Australo Asiatic. சங்க இலக்கியம் இவரை நாகர் என்னும்) கலப்பும் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மற்ற குமுகங்களுடனும் கூட நகரத்தாருக்கு ஓர் ஒருமை காணப்படுகிறது. கொஞ்சங் கொஞ்சமாய் இப்படிப் பல்வேறு குழுவினர் சேர்ந்து உருவானவரே நகரத்தார் ஆவர். 

தமிழகத்தின் இன்றுள்ள ஒவ்வொரு குமுகமுமே இப்படிக் கலப்பு உருவாக்கத்தில் ஏற்பட்டவர் தான். இது. ஈனியல் வழி பெறப்படும் அடிப்படைச் செய்தி. ”பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” எனுங் குறளை ஓர்ந்து பார்த்தால் அதில் ஆழமான பொருள் இருக்கிறது. கீழே 9 கோயில் நகரத்தாரின் வெவ்வேறு வகுப்பினரின் ஆண் குருமய ஈனியல் அடையாளத்தையும் அவர் தமிழகத்தில் உருப்பெற்ற கால ஆண்டுகளையும் கொடுத்துள்ளேன். இதில் பெறப்படும் முடிவுகளை வேறொரு கட்டுரையில் சொல்வேன். கீழுள்ளதில் வியப்பான குறிப்பு எதுவெனில் 23 வகுப்பினருக்கும் தனித்தனி ஈனியல் அடையாளங்கள் இருப்பதே..

இளையாத்தங்குடி: அரும்பாற் கிளையாரான பட்டினசாமி NRY H1a (48000); பெருமருதூர் 35000 NRY Ha-L1a; கிங்கிணிக்கூர் 35000 NRY Ha-L1a; ஒக்கூர் 25000 NRY HG J2a; கழனிவாசற் குடியார் 15000 NRY HG R1a1a; பெருஞ்சேந்தூர் (இவரின் ஈனியற் கணிப்பு இன்னும் தெரியவில்லை); சிறுசேந்தூர் (இவரின் ஈனியற் கணிப்பு இன்னும் தெரியவில்லை.)

மாற்றூர்: அரும்பாக்கூர் (55000) NRY HG F1; உறையூர் (48000) NRY H1a; மணலூர் 35000 NRY Ha-L1a; மண்ணூர் (இவரின் ஈனியற்கணிப்பு இன்னும் தெரிய வில்லை.); கண்ணூர் (இவரின் ஈனியற் கணிப்பு இன்னும் தெரியவில்லை.); கருப்பூர் 15000 NRY HG R2a; குளத்தூர் 10000 NRY HG O2a1

ஏழகப் பெருந்திரு எனும் வயிரவன் கோயில் சிறுகுளத்தூர் 25000 NRY J2b; வயிரவன் கோயில் கழனிவாசல் 25000 NRY J2b; வயிரவன் கோயில் மருதேந்திரபுரம் 25000 NRY J2b

திருவேட்புர் மருதங்குடி இரணியூர் 35000 NRY Ha-L1a;

திருவேட்பூர் மருதங்குடி பிள்ளையார்பட்டி 35000 NRY Ha-L1a

இலுப்பைக்குடி சூடாமணிபுரம் NRY H1a (48000)

சூரக்குடி புகழ்வேண்டிய பாக்கம் 35000 NRY Ha-L1a

நேமம் இளநலம் 25000 NRY HG J2a

வேலங்குடி கழனிநல்லூர் (இவரின் ஈனியற் கணிப்பு இன்னும் தெரியவில்லை.)

15000 - 55000 ஆண்டுகள் இங்கு விரவியிருந்த நகரத்தாரிடம் சில பழங்குடிப் பழக்கங்கள் மிஞ்சிக் கிடப்பதும், மாமன் (அம்மான் என்றும் எங்கள் பக்கஞ் சொல்வர்) உறவிற்கான சிறப்பு இன்றுங் குறையாதிருப்பதும் ஆழ்ந்து நோக்கத் தக்கன. [சிலம்பைப் படித்தால் இன்றும் சில பழமரபுகள் மாறாதிருப்பது புரியும்,] தமிழ் நாட்டில் எல்லாக் குமுகத்தாருமே மாமனுக்கு (அப்பாவையும் மீறி) ஏன் இவ்வளவு முகன்மையளிக்கிறார்?- என்பதும் வியப்பானது. 

கூர்ந்து காணின் நகரத்தார் திருமணங்களை முன்நடத்தும் உரிமைபெற்றவர் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஆன தாய்மாமன்களே. அதே பொழுதில் திருமணங்களில் அப்பாக்களுக்கு எனச் சில சிறப்புகள் உண்டு தாம். ஆனால் அவை சட்டபூருவச் செயல்களுக்கும் வாழ்த்துக்கும் மட்டுமே முகன்மையுறும். சடங்குகளில் அப்பா சற்று ஒதுங்கியே நிற்பார். நகரத்தார் திருமணச் செயற்பாடுகளை இன்றும் நிருவகிப்பது பெரும்பாலும் பெண்களே. திருமண வீட்டு ஆண்கள், பெண்கள் சொல்வதற்குத் தக்க, கூடமாட, நடந்து கொள்வார். அவ்வளவு தான். தாய்வழி உறவினரே திருமணங்களில் முன்னுரிமை பெறுவார். மொய்ப்பணம் எழுதுவதிலும் கூடத் தாய்மாமன் எழுதும் தொகையே அதிகமாகும்.

தமக்குள் ஆண் குருமய உறவுள்ளவர் அனைவரையும் நகரத்தார் பங்காளிகள் என்றழைப்பார். ஆணாதிக்கக் குமுகாயத்தில் சொத்திலும், குமுகப் பொறுப்பிலும் பங்கு கேட்க உரிமை பெற்றவர் பங்காளிகள். (சற்று தொலைவில் உள்ளவர் கோயிற் பங்காளிகள்.) எவ்வளவு உரிமை என்பது வெவ்வேறு குமுகங்களின் மரபைப் பொறுத்தது. பெண்களின் நீட்குன்றி வழியான உறவினர் அனைவரையும் தாயத்தார் எனவும் தாய பிள்ளைகள் என்றும் நகரத்தார் அழைப்பார். தாயத்தாருக்குச் சில விதப்பான உரிமைகள் உண்டு. உண்மையில் தமிழ்க் குமுகங்கள் அனைத்துமே ஒரு காலத்தில் பெண்வழிக் குமுகங்களே. ஆணாதிக்கம் ஏற்பட்ட பிறகே, தந்தைவழிக் குமுகங்களாய் நாம் மாறினோம். சொத்துடைமை ஏற்படாக் காலத்தில் தாயமே முகன்மை கொண்டது. சொத்து என்று வந்த பின்னரே பங்காளுமை, குமுகங்களில் பெரிதாயிற்று.

அப் பங்காளுமைக்குப் பின்னுங்கூட தாய உரிமைகள் இன்று வரை மறுக்கப் படவில்லை. தாய்க்கு, பாட்டிக்கு, பூட்டிக்கு, ஓட்டிக்கு மாறாய் அவரவரின் சோதரர் சடங்குகளில் முகன்றிருப்பார். அதாவது அம்மாவை முன்னிறுத்துவதாய் அம்மான் (அம்மாவின் சோதரன்) நின்றிருப்பார். நினைவு கொள்க. ஒருத்தி தன் மகளுக்கு மட்டுமின்றி மகனுக்கும் கூடத் தன் X பாற்குருமயத்தையும், நீட்குன்றிப் படிமத்தையும் அளிக்கிறாள். அதாவது என் அம்மாவைப்போலவே என் அம்மானும் இவற்றின் படியைத் தம் அம்மாவிடமிருந்து பெற்றிருப்பார். எனவே ஆணாதிக்கக் குமுகாயத்தில் பெண்ணுரிமையை மறைமுகமாய் நிலைநாட்டுவதாய் என் அம்மான் என் அம்மாவிற்குப் பகரியாவது இயற்கை. இனித் திருமணக் கொண்டாடல் என்றால் என்னவென்று பார்ப்போம்.

திருமணத்திற் கூடுவோர்க்கு நல்ல சாப்பாடு கொடுத்து விருந்து வைத்தலும், உறவினர் ஆடிப் பாடிக் குலவுவதும், மணமக்களுக்குச் சீரும் பரிசுகளும் தருவதுமே குமுகக் கொண்டாட்டமாகும். பழங்குடிக் காலத்தில், தாய்வழிக் குமுகக் காலத்தில், திருமணம் (பெண்ணைப் பெற்றவரும், பிள்ளையைப் பெற்றவருங் கொண்டாடுவது), இன்னொரு வீட்டில் தம் பெண் குடிபுகுதல், அப்படிக் குடிபுகுந்த வீட்டில் தம்பெண் பிள்ளை பெறுதல் போன்ற நல் நிகழ்ச்சிகளை தாயத்தார் சிறப்பாகக் கொண்டாடினார். ஏனெனில் பெண் வழியே குடி தொடரும் நிகழ்வுகள் அவையாகும். சொத்துரிமை, ஆணாதிக்கம் ஆகியவை ஏற்பட்ட பின்னுங் கூட இப்பழக்கத்தைத் தமிழர் தொடர்கிறார்.

சரி வேவெனுஞ் சொல்லிற்கு வருவோம். வணிக வருக்கம் என்பது முல்லை நிலத்திலேயே தமிழரிடை எழுந்து விட்டது. முல்லை வாழ்க்கையில் பழங் குடிகள் ஊர் வீட்டு ஊர் வந்து பெண்ணெடுப்பதும், கொடுப்பதுமான பழக்கம் இருந்திருக்கும். நம் வீட்டுப்பெண் இன்னொரு வீட்டிற்குக் குடிபுகுகிறாள் எனும் போது, பெண்ணின் மாமன், பெண்ணின் தாய்க்குப் பகரியாய், மாப்பிளை வீட்டிற்குச் சென்று குடிபுகற் சடங்கைக் கொண்டாடுவான். குடிபுகற் சடங்கைப் பெண்ணழைப்பு என்று நகரத்தார் சொல்வர். மாப்பிள்ளை வீட்டில் நடக்கும் இப்பெண்ணழைப்பிற்கு வரும் விருந்தினர் எல்லோருக்கும் பெண் வீட்டாரே விருந்து கொடுப்பதாய் ஓர் ஐதீகம் இதிலுண்டு  சாப்பாடெனில் வாழை இலையில் வெந்த சோறும், குழம்பும் (கத்திரிக்காய், பரங்கிக்காய் போன்றவை இருந்தால் இன்னுஞ் சிறப்பு), (பொரியல், மசியல், வதக்கல் முறைகளில் செய்யப்பட்ட) பல்வேறு காய்கறிகளும் பழங்களும் பாயசமும் இருக்க வேண்டும் தானே? இந்த வேவின் உள்ளார்ந்த பொருளாய், சாப்பாடு கொணர்வதே வெளிப்படுகிறது. எப்படி? .

வெள், வெட்கை> வெக்கை, வெள்> வெய்> வெய்யில், வெய்> வெய்யோன், வெய்> வெயர்> வெயர்வை> வேர்வை, வெய்> வே> வேகு, வேகு> வேகம் = கடுமை. வே> வெந்தை, வே> வேன்> வேனல்> வேனில், வே> வே> வேம்பு, வேம்>வேங்கை, வெய்ம்மை.வெம்மை, வெம்> வெம்பு> வெப்பு, வெள்> வெது> வெதும்பு> வெதுப்பு எனும் சொற்கள் எல்லாமே எரிதல், சூடு தொடர்பானவை. அரிசியை வேக வைக்காது நாம் சாப்பிட முடியுமோ? வேள்வு> வேவு என்பது வெந்த சோற்றுக்கு இன்னொரு பெயர். இதை வேள்வு= விருப்பம், வேய்வு= சூடிக் கொள்வது என்றெலாம் கருத்துமுதல் வாதத்தில் பொருள் சொல்ல முற்படுவது அவ்வளவு சரியென எனக்குத் தோன்றவில்லை. வேவு என்று சுடுசோற்றைக் குறிப்பது இச்சடங்கில் அரிசி கொண்டு வரும் கடகத்தால் புலப்படுகிறது.

இன்றும் ஐயனார் கோயிலிலும், குலதெய்வக் கோயில்களிலும் படைக்கும் போது கூடியாக்கி உண்ண, அண்டா, அண்டாவாய்ச் சோறு வடித்துப் போடுகிறாரே? அதில் மலை மலையாகக் குவிந்து கிடக்கும் சோற்றை அள்ள ஓலைக் குடல், கடகம் போன்றவையே பயன்படும். ஓலைக் கடகத்தில் சோற்றை அள்ளி விருந்து கொடுக்கும் போது தோளிலோ, தலையிலோ சுமக்க முயன்றால் சூடு தாங்கத் துண்டு வேண்டுமே? எல்லா வேவுக் கடகங்களிலும் பழங்குடிக் காலத்தில் சுடுசோறே இருந்திருக்கும். (இன்று சுடு சோற்றைக் கொணராது சடங்கிற்காக அரிசி தூக்கி வருகிறார்). சுடுசோற்றை உணர்த்தும் முகமாய் தலையில் சும்மாடு கட்டித் தலைக்கு மேல் கடகத்தைக் காட்டிப் பின் இறக்குவார். செல்வம் பெருகிய வீட்டில் ஓலைக் கடகம், வெள்ளிக் கடகமாகும்., மற்றோர் வீட்டில் துருவேறா எஃகிலான நிலைவெள்ளிக் (Eversilver) கடகமாகும். பெண்வீட்டு ஆண்கள் கடகத்தைத் தலையில் தூக்கி யிருக்க, மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் அதை இறக்குவர். சாப்பாட்டிற்குத் தேவையான பெரும்பாலான பொருட்கள் (வாழையிலை முதற்கொண்டு) வேவோடு வந்து சேரும். (இக்காலத்தில் பலரும் இந்த உடன்வரும் பொருட்களை மறந்து விடுகிறார். எல்லாம் அவக்கரமாகி விட்ட, செலவாகி விட்ட காலம். மரபுகள் கொஞ்சங் கொஞ்சமாய் குறைகின்றன, மாறுகின்றன, பொருள் புரியாது போகின்றன.) .       

இங்கே 3,4 வேவுகளை விளக்கவேண்டியுள்ளதால், முதலில் ஆயாள், தாய்/அம்மா, மகள் என்ற 3 தலைமுறைகளை விவரிக்கிறேன்.. (அம்மாவின் தாய் எங்கள் பக்கத்தில் ஆயாளென அழைக்கப் படுவாள்.) பெண்ணழைப்பு வீட்டில் பெண்ணின் அண்ணன், தந்தை, சுற்றத்தார் வேவு தூக்க, மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் வேவு இறக்குவார். இதைப் பால்வேவு (மாப்பிள்ளை வீட்டில் மணமாகிப் போகும் பெண் முதலில் பால்காய்ச்சினால் இது பால்வேவு), பொங்கல் வேவு (மாப்பிள்ளை வீட்டில் மணமாகிப் போகும் பெண் முதலில் சோறாக்கிப் பொங்கி வடித்தால் இது பொங்கல் வேவு) என்றும் கூறுவார்.

திருமணத்திற்கு முதல்நாளோ, திருமணத்தன்றோ நடக்கும் மாம வேவு திருமணப் பெண்ணின் தாயின் பொருட்டு, ஆயாள் வீட்டிலிருந்து வரும் தாய்மாமன் செய்வதாகும். திருமணவேவு என்பது பெண் வீட்டார் வேவு தூக்க, மாப்பிள்ளை வீட்டார் இறக்குவது. பிள்ளை பிறந்து சற்று வளர்ந்த பிறகு, பிள்ளையின் மாமன் விளையாட்டுப் பொருள்களுக்கான சீர்களுடன் வந்து சோதரியின் வீட்டில் நிகழ்த்துவது விளையாட்டுப் பெட்டி வேவு. எல்லா வேவுகளிலும் வேவுக் கடகங்களின் எண்ணிக்கை ஒற்றைப் படையாகவே இருக்கும், (இரு வேறு பிரிவினர் ஒன்றாகவேண்டும் சடங்கல்லவா? எனவே ஒற்றைப் படை) இதில் இரட்டைப் படை கூடாது. (இரள்தல் - பிரிதல். ஒரு நற்சடங்கில் கூடலே பெரிது, பிரிதல் எழக்கூடாது..). வேவைத் தூக்கி நிற்போருக்கும் இறக்குவோருக்கும் இடையே ஒரு சில்லேட்டு விளக்கும் இருக்கும். இருவரும் ஒரு நடுவீட்டுக் கோலத்தின் மேல் நிற்பார்.


இச்சடங்கு மண்டப வாசலில் நடக்கும் (வருவோர், போவோர் இருப்பதால் அங்கு காற்று சற்று அதிகமாகலாம். எனவே சடங்கில் வைக்கப்படும் விளக்கு அணைந்து விடக் கூடாது என்பதற்காக சில்லேட்டு விளக்கு வைப்பார் (சில்லேடு என்ற சொல் ஏற்பட்டவிதம் சிறப்பு. இற்றைக்கால கிளர்த் தகடுகளுக்கு -glass plates- முன்னால், சில குறிப்பிட்ட கொங்குநாட்டு மண்ணூறல் படிவங்களில் (mineral deposits) இருந்து பிரித்துப் பெறப்பட்ட சில்லேடுத் தகடுகளை பயன்படுத்தியே விளக்கின் சுவாலைக்கு அணைப்புக் கொடுப்பர். நாலு பக்கமும் சில்லேடுகள் பொருத்தப்பட்ட விளக்கு சில்லேட்டு விளக்கு. சில்லேடுகள் ஒளியை ஓரளவு கடத்தும். கொஞ்சம் மழுக்கும். இச் சில்லேடு மேலை மொழிகளில் போய் மீண்டும் வெள்ளையர் ஆட்சியில் நமக்குத் திருப்பி வந்தது..தோற்றுவாய் தெரியாத பலர் இச்சொல்லை மேலைச் சொல் என்பார். [slate (n.) mid-14c., from Old French esclate, fem. of esclat "split piece, splinter" (Modern French éclat; see slat), so called because the rock splits easily into thin plates. As an adjective, 1510s. As a color, first recorded 1813.] சில்லேட்டு விளக்குகள் நகரத்தார் திருமணங்களில் பெரும்பங்கு வகிக்கும்.

இறக்கப்பட்ட கடகங்கள் தூக்கி வந்தவராலும், இறக்கியவராலும் சேர்த்தே பூசையறைக்குக் கொண்டு போய் படையலாய் முன்னோருக்குப் (அவர் சார்பாய் ஒரு விளக்கு அந்த அறையில் இருக்கும்.) படைக்கப் பட்டுப் பின் விருந்திற்குக் கொள்வதாய்ப் புரிந்துகொள்ளப்படும்.

ஒரு காலத்தில் வெந்த சோறு வேவாகியது. இன்று வேகாத அரிசி அதற்குப் பகரியாகிறது.

அன்புடன்,
இராம.கி.

6 comments:

மீனாமுத்து said...

அருமை!
என்ன ஒரு விரிவான விளக்கம்🙏
ஓ...என்பதாக மனம் ஸ்தம்பித்து நிற்கிறது!

Anonymous said...

அருமை! சிறபான விளக்கம். சில்லேட்டு விளக்கும் மிகச் சிறப்பு. வேவுச் சோறு மிகப் பொருத்தம். மிக்க நன்றி அண்பன்.

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன் said...

அருமையானதொரு அறிவியல் விளக்கம்.

ந.குணபாலன் said...

கலியாணப் பேச்சுக்கால் நடக்கும் போது மாப்பிள்ளை வீட்டார் பெண்பிள்ளை வீட்டிற்கும், பேந்து பெண்பிள்ளை வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு ஓலைப்பெட்டியில் கொழுக்கட்டை, ஆலங்காய்ப்புட்டு எனப்படும் உழுத்தம்புட்டு கொண்டு போவார்கள் அந்தக் காலத்தில். அதை வேள்வு கொண்டு போதல் என்றார்கள்.
அந்த வேள்வு என்பதன் சரியான விளக்கத்தை இங்கு காண்கின்றேன்.

Anonymous said...

அருமையான விளக்கம். தந்தையை விட அம்மானின் முக்கியத்துவம் சிந்திக்கவைக்கிறது. நெறைய ஆங்கில வார்த்தைகளுக்கு சிந்திக்க வைக்கவும் தமிழ் பதங்கள் தெரிந்து கொண்டேன். ஒரு கருத்தில் வேறுபடுகின்றேன்: பெண் குழந்தையின் XX-இல் தந்தையின் X பங்குகொள்கிறது.

Anonymous said...

மகிழ்வுற்றேன்.. உடல் கறு அடிபடையிலயே கோவில் பிரிக்க. பட்ட அறிவியியல் இன்று தான் தெறிந்து கோண்டேன்.. மிக்க மகிழச்சியும் நன்றியும் ஐயா