Tuesday, March 12, 2019

செம்புலப் பெயல் நீர்

கீழே வருவது ”திண்ணை” வலையிதழில் பதினைந்தாண்டுகள் முன் வெளி வந்தது. (Thursday July 1, 2004) அவ்வலைத்தளத்தில் இப்போதெலாம் சட்டெனப் பழங் கட்டுரைகளைத் தேடியெடுக்க  முடிவதில்லை. (தமிழுக்குப் பேரிழப்பு. அவ் வலைத்தளத்தார் ஏதாவது செய்து, பழையவற்றைக் காப்பாற்ற வேண்டும்.) புதிய திண்ணையில் வந்த கட்டுரைகள் மட்டுமே எளிதிற் கிட்டுகின்றன. இருப்பதும் அழிந்துபோகுமோ எனும் நிலையில் பழையன வற்றை அணுக்கமாய்ச் சேமிக்கவேண்டிய காரணத்தால் 01/09/2014 இல் தமிழ் உலகம், தமிழ் மன்றம், தமிழாயம் போன்ற கூகுள் குழுக்களில் பதிந்து வைத்தேன்.  அதுவுஞ் சிக்கலென, நண்பர் இளங்கோவன் தன் முகநூல் இடுகையில் ”என் திண்ணைக் கட்டுரை கிடைக்கவில்லை” என்றபோது, உணர்ந்தேன். நண்பர் கூகுள்குழு மடல்களைப் பார்த்திருக்கலாம். ”இக் கட்டுரை மேலுங் கிட்டாது போகவேண்டாம்” எனக்கருதி என் வலைப் பக்கத்திலே பதிகிறேன்.

நண்பர் மணிவண்ணன் மின்னியியல் சேமிப்புகளின் நிலையாமை பற்றி ஒரு காலத்தில் எங்களுக்குச் சொன்னதை இன்று நினைவுகொள்கிறேன். பழந்தமிழன் கல்வெட்டில் எழுதி வைத்தது சரிதான் போலும். அதன் அரை வாழ்வு (half life) 2500 ஆண்டுகளையும் தாண்டும். மின்னியியல் பதிவுகளின் (electronic embeddings) அரைவாழ்வு ஒரு நூகநொடி (micro second) வருமா? இது போல் பலவிடங்களிற் பதிவதே மின்னியியற் காலத்தில் ஆவணங்களைக் காப்பாற்றுவதற்கான மாற்று என்றும், பின் எளிதாகக்கிடைக்க அவை உதவும் என்ற நம்பிக்கையிலும் இதைச் செய்கிறேன். இப்போதெலாம் வலைத்தளங்களில், மடற்குழுச் சேகரங்களில், கருத்துக்களைச் சேமிப்பது முயற்கொம்பாகவே உள்ளது. எல்லாம் காசு, பணம், பேணுஞ்செலவுகள் (maintenance expenditures) பண்ணும் வேலை. ”இன்றிருப்பார், நாளையில்லை” என்று அல்லாடுவது மாந்தருக்கு மட்டுமல்ல மின்னியலுலகில் எழுத்து ஆக்கங்களுக்கும் உண்டு.

அன்புடன்,
இராம.கி.

-------------------------------------------
செம்புலப் பெயல் நீர்
இராம.கி.

செம்புலப் பெயல்நீரில் எனக்குக் கொஞ்சம் முரணுண்டு. பெரும்பாலானவர் (கலைஞரையும் சேர்த்து) செம்மண்ணில் பெய்தநீர் போல நெஞ்சங்கள் கலந்தன என்னும் போது, 'அது என்ன செம்மண்ணிற்கு மட்டுஞ் சிறப்பு?  ( இத்தனைக்கும் நான் செங்காட்டு மண்ணில் வந்தவன். பிறந்த மண்ணை விரும்பாதவனென எண்ணிவிடாதீர்.) கருமண்ணில், சுண்ணாம்பில் இன்னும் வேறுபட்ட மண்களில், ஏன் களியில் பெய்த நீர் கூடக் கலவாதோ? இங்கே கலப்பது செந்நிறமும், மழைநீருமா?  செம்புலம் என்பது செம்மண் தானா அல்லது வேறொரு பொருளுண்டா?  செம் என்ற முன்னொட்டுக்கு செம்மை மட்டும் பொருளல்லவே?  ஏனிப்படிச் செம்மையைச் சிவந்த நிறத்தோடு ஒப்பிட்டு நின்று போகிறோம்? இவ்வுவமை என்னதான் சொல்கிறது? நாயகனுக்கும் நாயகிக்கும் ஒன்றேபோல் உருவகங்கள் சொல்லப்பட்ட போது (யாய், ஞாய், எந்தை, நுந்தை, யானும் நீயும்) சொல்லவந்த உவமை மட்டும் மழைநீரையும் மண்ணையும் போல ஒப்பாத, சமலாத (dis-similar) ஒன்றை எடுத்துரைக்குமா?  பாணர் ஏனிந்த உவமையைச் சொன்னார்?

- என்ற கேள்விகள் மனத்தில் எழுகின்றன. குறிப்பிட குறுந்தொகைப்பாடல் குறிஞ்சித்திணையில் வருகிறது. குறிஞ்சி, மலையும் மலைசார்ந்த இடமுங் கொண்ட திணை. எல்லா மேட்டு நிலங்களும் செம்மண்ணாக இருப்பது இல்லை. தமிழ்நாட்டில் செம்பாறாங்கல் நிறைந்த ஒரு மலை/குன்றைப் பச்சை போர்த்திய குறிஞ்சித்திணையில் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. செம்மண் காடுகள் எங்களூரைப் போல சிவகங்கைப் பக்கமோ, பண்ணுருட்டி, நெய்வேலிப் பக்கமோ (இக்கால முந்திரிக்காடுகள் இருக்கும் இடமெலாம்) இருப்பதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. செம்மண்ணைக் காட்டி, குறிஞ்சித் திணை விவரிப்பு சங்க இலக்கியத்தில் வேறு எங்கணும் வந்ததாகத் தெரியவில்லை.

செம்புலம் என்பதற்கு செழிப்பான நிலம், போர்க்களம், பாலைநிலம், சுடு காடு என வேறுபொருள்கள் அகரமுதலியில் குறிப்பிடப் பட்டுள்ளன. செழிப்பான நிலம்  செம்மண் நிலமாகலாம்; இல்லாதும் போகலாம். செழிப்பு என்பது நிறைவை, வளத்தைக் குறிக்குஞ் சொல். போர்க்களமென்பது அங்கு சிதறிக் கிடக்கும் அரத்தத்தை மண்ணுக்குப் பொருத்திச்சொல்வது. பாலை நிலம் இயல்நிலையைக் குறிக்கும். மேலே சிவகங்கையைக் குறித்தேனே? எம் ஊர்கள் பாலை சேர்ந்தவையே. சுடுகாட்டுப் பொருள் எப்படி வந்ததென்று எனக்குத் தெரியவில்லை.

அதேபொழுது செம்பொருள், செம்போக்கு, செம்மல், செம்பொன், செந்தமிழ் போன்ற சொற்களில் சிவப்பென்ற பொருளே கிடையாது. செம்பொருள்= எந்தத் தாழ்நிலையுமில்லாது, மிக உயர்ந்த நிலையுமில்லாது உயர்ந்த பொருள்; செம்போக்கு= எங்கும் வளையாத நேரான சீரான போக்கு, செம்மல்= நேர் ஆனவன், சீரானவன், செம்பொன்= கலப்படமிலாத் தனிப் பொன். செந்தமிழ்= சீராக்கப்பட்ட தமிழ்; செங்கதம் = சீராக்கப்பட்ட பேச்சு (வடமொழி; இதைக் கலவைமொழி என்றபொருளில் சம்+கதம்= சங்கதம் என்று சொல்வாரும் உண்டு. ஞான சம்பந்தர் சங்கதம் என்றே மொழிவார்; சங்கதம் என்பது வடமொழிப் பலுக்கில் சம்ஸ்கிருதம் ஆகும்.)

இங்கு எல்லாமே ஏற்ற இறக்கமில்லாத நிரவல் தன்மையைத்தான் செம் எனும் முன்னொட்டுத் தெரிவிக்கும். அதேபோல செம்முதல் வினையும் பள்ளத்தைத் தூர்த்து நிரவலாக்குவதையும், முழுதும் கொள்ளாது கிடந்த பையை (bag) நிறைத்து வாயைத் தைப்பதையும், மூடுவதையும், மொத்தத்தில் சீர் ஆக்குவதையே குறிக்கும். ஆகச் செம்மையாதல் என்பது நேராதல், சீராதல் என்பவற்றைக் குறிக்கிறது. நன்செய், புன்செயிலுள்ள செய், மட்டப்படுத்தப் பட்ட, ஏற்றவிறக்கம் இல்லாச் சமதளத்தையே (வயலையே) குறிக்கிறது. செய்>செய்ம்>செம் என்றுதான் சொல்லாய்வின் படி அச்சொல் எழும். இச்சிந்தனையோடு குறிஞ்சியை அணுகுவோம்.  மலை, குன்றுப் பகுதிகளில் ஆங்காங்கே சமதளப் புலங்கள் இருப்பதுண்டு. அவை இயற்கையாகவோ, செயற்கையாகவோ (செய்யப் பட்டது) ஆகலாம்.

மழை துளிதுளியாகச் சாரல் சாரலாகப் பெய்கிறது. கீழே விழும் நீர் தான் விழும் புலத்தின் சாய்விற்கேற்ப பல்வேறு ஓடைகளாகப் பிரிந்தோடுகிறது. நம் கண்ணுக்குத் தெரிந்த திடலில் தாரையாகப் பெய்யும் மழை அத்திடல் மேலுங் கீழுமாக இருப்பின் ஓடைகளெலாம் ஒன்று சேர்வதில்லை. அவைத் தனித் தனியாகப் போகின்றன. மாறாக அத்திடல் சமநிலமாக (செம்புலமாக) இருப்பின் நீர்த்தாரைகள் ஒன்று கலந்து போகின்றன. எப்படி ஒரு ஏனத்தில் இருக்கும் நீர் ஒரே மட்டத்தை அடையுமோ, எப்படி ஓர் ஆறு ஒரே மட்டத்தை அடையுமோ, எப்படி ஓர் ஏரி ஒரே மட்டத்தை அடையுமோ, அதுபோல் எங்கிருந்தோ வந்த மழைநீர், இங்கு பெய்யும் தாரையும் அங்கு பெய்யும் தாரையும், ஒரே சமநிலத்தில் விழுந்தால் அவை கலந்து ஒரே ஓடையாகப் போகுமல்லவா? அதைத்தான் இங்கு பாணர் குறிப்பிடுகிறார் என்று நான் எண்ணுகிறேன்.

இது செம்புல நீருக்கு மட்டுமேயுள்ள சிறப்பு. சாய்புல நீரில் அச்சாய்வு ஒரு பக்கமாக இருக்குமானால் நிகழுந்தான். ஆனால் இயற்கையில் சாய்புலம் என்பது பல்வேறு சாய்வுகளைக் கொண்டல்லவா உள்ளது? சம நிலத்தில் தானே மழைநீர் கலந்து நிறைந்து சமநில வரம்பைப் பொறுத்து அதற்குரிய மட்டம் வரும்போது மகுந்து வழிகிறது. ஒரு செய்யை எண்ணிப்பாருங்கள்; வரம்பு வரும்வரை அதில் பெய்யும் நீர் கலந்து நிறையத் தானே செய்யும்? அதுபோற் குறிஞ்சியிலுள்ள சமநிலத்திலும் ஏற்படலாம் அல்லவா ? இப்படி எண்ணினால் சமலி (similie) சரியாகிறது. யாய்-ஞாய், எந்தை-நுந்தை, யான்-நீ, இதைப் போல் சமநிலத்தில் அருகருகே பெய்த மழைநீர்த் தாரைகள் (தலைவன் ஒரு தாரை, தலைவி இன்னொரு தாரை;) எங்கிருந்தோ வானத்தில் இருந்து வருகின்றன. இங்கே ஓடைகளாய்ச் செம்புலத்தில் கலக்கின்றன

'செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே '

ஆதலால், என்னருமைக் காதலியே! களவொழுக்கம் கொண்டோம் என்று கலங்காதே!

-------------------------------------------

1 comment:

venkatarangan thirumalai said...

இதை இப்படியும் பார்க்கலாமா? அபாரம்-தமிழின் வளமும் தங்களின் நுணுக்கமான விளக்கமும். நன்றி.