Monday, September 26, 2011

மாணிக்க வாசகர் காலம் -1

வரலாற்று நிகழ்வுகளின் அக, புற ஒழுங்குகள்:

பொதுவாகக் கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும், உறவுக் (relative) கால நிலைகளே சொல்லப்பெறும்; அதாவது ”இந்த அரசன் பட்டம் ஏறியதிலிருந்து இத்தனையாவது ஆண்டு” என்றே காலங் குறிக்கப்படும். அவற்றிலும் பலவற்றில், அரசனின் பட்டப் பெயர், அல்லது குலப்பெயர் மட்டுமே இருக்கும், இயற்பெயர் வாராது. கலி (பொ.உ..மு.3101), விக்ரம (பொ.உ..மு.57), சக (பொ.உ 78) போன்ற முற்றாண்டுகள் (absolute years) அரிதாய் வரும். குறிப்பிட்ட ஓராண்டை அடிப்படையாக்கி, அதிலிருந்து நிகழ்வுகளைக் கணிக்கும் கணக்கு முறை தமிழர் மரபாய் இருந்ததில்லை.

[அது என்ன பொ.உ., பொ.உ.மு. என்று தடுமாறுகிறீரோ? வேறொன்றுமில்லை. காலச் சுருக்கங்களைக் கி.மு., கி.பி. என எத்தனை ஆண்டுகள் சொல்வது? இப்போதெல்லாம் ஏதொன்றையும் மதஞ்சாராது குறிக்கப் பலரும் விழைகிறாரே? தமிழிலும் பொது உகம் = common era = CE = பொ.உ; பொது உகத்திற்கு முன் = before common era = BCE = பொ.உ.மு. என்றுநாம் சொல்லிப் பார்க்கலாமே? என்ன சொல்கிறீர்? கி.மு., கி.பி. என்றே எழுதியவருக்குச் சில நாட்கள் கடினமாயிருக்கும். பழக்கம் கூடும்போது, இது ஒழுங்காகி விடும்.]

பொதுவாக உறவுக் காலநிலை கொண்ட கல்வெட்டில், உள்ளடக்கம், எழுத்தமைதி, பிற தொடர்புகளைக் கணக்கிட்டு, இன்னொரு கல்வெட்டோடு தொடர்புறுத்தி, இரண்டையும் ஒன்றன்பின் ஒன்றாக்கிக் காலவரிசைப் படுத்துவர். இதேபோல இலக்கியத்தில் இருந்து கல்வெட்டு, அல்லது கல்வெட்டிலிருந்து இலக்கியம், என்றும் தொடர்புறுத்திக் காலவரிசைப் படுத்துவதும் உண்டு. இக் காலக்கணிப்பில், உள்ளே பொருந்திநிற்கும் ஏரணம் (logic), ஒன்றிற்கொன்று ஒத்திசைவு (consistency) ஆகியவை முகன்மையாகும்.

தமிழாவணங்களை வரிசையாக்கி, உள்ளடக்கம், எழுத்தமைதி போன்ற வற்றை வேறெங்கிலும் கிடைத்த, வெளியாவணங்களோடு ஒப்பிட்டு, அவற்றிற்கு அறுதி முற்றாண்டு (பொ.உ./பொ.உ..மு.) கணித்திருந்தால், அதே ஆண்டுகளை நம் ஆவணத்துக்கும் பொருத்துவர். இப்படியாக, நம் காலக் கணிப்பு பலராலும் அறுதியாக்கப் பட்ட முற்றைப் புள்ளிகளால் (absolute markers) ஒழுங்கு செய்யப்படும்.

இதில் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. முற்றைப்புள்ளிகளும், கால ஒழுங்கும் ஒன்றிற்கொன்று முரணானவை. இவற்றில், ஒன்றை நெகிழ்த்தி, மற்றொன்றை அசைப்போம். இம்முரணியக்கச் செயற்பாட்டில் (dialectical movement), எடுகோள் (reference) முற்றாண்டுகளும் கூடச் சிலபோது அசைக்கப் படலாம். இதனால் நாம் ஒழுங்குசெய்த வரலாற்று நிகழ்வரிசை, புதிதாய்க் கிடைத்த ‘பழஞ் செய்திகளால்’, மாறலாம். இம்மீளாய்வில், குமுக வரலாற்று அகம், புறம் ஆகிய இரண்டுமே முகன்மையாய்க் கருதப்படும்.

இந்திய, தமிழக வரலாறுகளின் முற்றைப் புள்ளிகள்:

முன்சொன்ன முற்றைப் புள்ளிகளை இனிப் பட்டியலிடுவோம்.

1. வடநாட்டு முற்கால வரலாற்றின் முற்றைப் புள்ளிகள் :

அலெக்சாந்தர் படையெடுப்பு - பொ.உ..மு. 327
அசோகரின் பாறைக் கல்வெட்டு II, XIII இல் வரும் குறிப்பு - பொ.உ.மு.258 [Antiochus II Theos of West Asia (261-246 BCE), Ptolemy II Philadelphus of Egypt (285-247 BCE), Antigonus Gonatas of Macedonia (277-239 BCE), Magas of Cyrene in North Africa (282-258 BCE), Alexander of Epirus (272-255 BCE) or of Corinth (252-244 BCE). இதில் சோழன், பாண்டியன், சேரமான், அதியமான், தாம்பபன்னி அரசன் ஆகியோர் குறிக்கப் படுகிறார்]

2. தமிழக முற்கால வரலாற்றின் முற்றைப் புள்ளிகள்:

கலிங்க அரசன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு - பொ.உ.மு.172
சிங்கள அரசன் முதலாம் கயவாகு காமினியின் காலம் - பொ.உ. 171-193

3. பிற்காலப் பல்லவர், பாண்டியர் வரலாற்றின் முற்றைப் புள்ளிகள்

கங்க அரசன் மாதவ வர்மனின் பெனுகொண்டாச் செப்பேடு - பொ.உ.475
செழியன் சேந்தனின் இறப்புக் குறிக்கும் யுவாங் சுவாங் குறிப்பு - பொ.உ.640
சடைய வர்மன் முதலாம் பராந்தகனின் ஆனைமலைக் கல்வெட்டு = பொ.உ.770
இரண்டாம் வரகுணனின் ஐவர்மலைக் கல்வெட்டு = பொ.உ.870

4. பேரரசுச் சோழர், பாண்டியர் வரலாற்றின் முற்றைப் புள்ளிகள்

இவை பலவாறாகும். பொதுவாக இக்காலகட்டத்திற் குழப்பங்கள் குறைவு.

சமயக் காலமும் திருவாசகமும்:

மேலே கூறிய முற்றைப் புள்ளிகளுக்கு ஒத்து, வரலாற்றை ஆயும்போது, பல்லவருக்கு முந்திய தமிழக வரலாறு தொடர்பின்றிக் கூறுபட்டுக் கிடப்பதை உணரமுடியும். பெரும்பாலான ஆசிரியர் சங்க காலத்தை பொ.உ..மு.250 - பொ.உ.250 என்று அறவட்டாக வரையறுப்பர். (இன்னுஞ்சிலர் பொ.உ.மு.300 - பொ.உ 300 என்று அகலப்படுத்துவர்.) அண்மையில் சிலம்பின் காலம் பற்றிய கட்டுரையில், மகதத்தோடு போரிட்ட முதலாம் கரிகாலன் படையெடுப்பைப் பேசவேண்டி வந்தது. அச்செய்தியை நிறுவிச் சங்க காலத்தைப் பொ.உ..மு.500 இல் தொடங்கும் காலக் கணிப்பே சரியாக இருக்குமெனத் தெரிவித்திருந்தேன். சங்ககால இறுதியும் பொ.உ.175 க்கு அருகிலிருக்கக் கூடும்.

பொ.உ.175 இலிருந்து பொ.உ.300 வரை இடைவெளியைச் சங்கம் மருவிய காலம் என்று சொல்லலாம். இவ்விவரங்கள் நம்மிடம் குறைவாகவே உள்ளன. இதற்கப்புறமே களப்பிரர் (=களப்பாளர் = களந்தையரசர் = கலியரசர்) காலம் தொடங்குகிறது. ”களப்பிரர் யார்? பல்லவன் சிம்ம வர்மனும், பாண்டியன் கடுங்கோனும் பொ.உ.560-570 இல் களப்பிர அரசைத் தூக்கியெறிந்தது வரை எத்தகை அரசு இங்கிருந்தது? களப்பிரர், மைய அரசு கொண்டிருந்தாரா? அன்றி அவரின் பங்காளிகள் தனித்தனியே ஆண்டாரா? அரச விரிவு எப்படி நடந்தது? உட்கட்டுமானம், பண்பாடு, கலை, சமயங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றிற் களப்பிரரின் தாக்கமென்ன? - போன்ற வினாக்களுக்குத் துண்டுவிடைகளே நம்மிடம் உள்ளன. களப்பிரர் கல்வெட்டுக்களும், இலக்கியங்களும் அருகியிருப்பதால் அவர்காலம் இன்றும் ஆயப்படாத இடைவெளியாய்த் தோற்றுகிறது.

களப்பிரருக்குப் பின் சமயக்காலத்தில் பல்லவரும், பாண்டியரும் தமிழகத்திற் தலையெடுக்கிறார். சிவநெறியும், விண்ணவநெறியும் பெரு வேந்தரின் ஆதரவுபெற்றதால், முதலிற் புத்தமும், பின்னர் சமணமும், இங்கிருந்து தூக்கியெறியப் படுகின்றன. (சங்ககாலத்திற் சீரிய தோற்றங் காட்டும் அற்றுவிகம் (ஆசீவகம்) களப்பிரர் காலத்திற் கிட்டத்தட்ட அழிந்தது. அதன் எச்சம் பேரரசுச் சோழர் வரைக்கும் தொடர்ந்தது ஓரிரு துண்டுச் செய்திகளால் நமக்குத் தெரிகிறது.) சமயக்காலத்தின் பின், பேரரசுச் சோழர் (பொ.உ.848-1279) மிக்குயர்ந்த நிலையை அடைந்தனர்.

சமயக்காலத்திற் தேவார மூவரும், பன்னிரு ஆழ்வாரும் தமிழ்ச்சிந்தனையில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தினர். தேவாரமும் நாலாயிரப் பனுவலும் பெருந் தெய்வங்களைப் பாடுவது மட்டுமின்றி, மெய்யியலையும் குறிக்கின்றன. இவற்றோடு சேர்த்தெண்ணப்படும் நூலாய்த் திருவாசகமும், முற்றிலும் மெய்யியலைக் குறிப்பதாய் திருமந்திரமும் உண்டு.

மாணிக்க வாசகர் காலம் - இருவேறு கணிப்புகள்:

”திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற சொலவத்தால் இன்று பெரிதும் உணரப்படும் மாணிக்க வாசகரைத் தேவார மூவரோடு சேர்த்து ஆளுடைப் பிள்ளை, ஆளுடை நாயனார், ஆளுடை நம்பி, ஆளுடை அடிகள் என்று தொகுத்து சமயக்குரவர் நால்வர் என்று சிவநெறியிற் சொல்லுவர். இப்படி உரைப்பது 12 ஆம் நூற்றாண்டிலேயே பழக்கம் எனினும், எப்பொழுது இது தொடங்கியது என்று தெரியவில்லை.

இராசராசச் சோழன் காலத்தில் தேவார மூவருக்கு ஏற்பட்ட மறுமலர்ச்சி மாணிக்க வாசகருக்கு ஏற்படவில்லை போலும். இற்றை வரலாற்றாய்வில் அப்பர் காலம் பொ.உ. 580-661 என்றும், சம்பந்தர் காலம் பொ.உ. 640-656 என்றும், சுந்தரர் காலம் பொ.உ. 694-712 என்றும் உறுதியாய்ச் சொல்ல முடிகிற போது, மாணிக்கவாசகர் காலத்தைப் பலருந் தெளிவின்றியே சொல்கிறார்.

மாணிக்கவாசகர் காலம் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு முடிவு காணாச் சச்சரவாய் இருக்கிறது. அது இரண்டாம் வரகுணன் காலமா (குறிப்பாக விசயாலய, ஆதித்த சோழன் காலமா), அன்றிச் சங்கம் மருவிய காலமா என்று இரு வேறு அணியினர் இடைவிடாது வாதாடுகிறார். ஒரு சாரார் (இவருள் கல்வெட்டாளர், ஆதீனவழிச் சமய அறிஞர், படிம ஆய்வாளர் எனப் பலர் உண்டு.) 8-9 ஆம் நூற்றாண்டு என்றும், இன்னுஞ் சிலர் (மிகக் குறைந்தவர்) சங்க காலத்திற்குப் பிற்பட்டு, தேவார, களப்பிரர் காலங்களுக்கும் முற்பட்டு, மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்கம் மருவிய காலத்தில் மாணிக்க வாசகர் இருந்திருக்கலாம் என்பார். (இப்படிச் சொன்னவரில் மறைமலை அடிகள் குறிப்பிடத் தக்கவர்.)

மூவர் தேவாரம், நாலாயிரப் பனுவல் ஆகியவற்றினும் பார்க்க, திருவாசகம் அடிப்படையில் பெரிய நூலல்ல. மொத்தம் 51 பகுதிகள், 667 பாட்டுக்கள் (அவற்றிற் சில நெடும்பாட்டுகள், சில 10/11/20/100 கொண்ட தொகுதிகள்), 3348 அடிகள், 17043 சீர்கள் கொண்டது. இது தவிர 400 பாடல்கள் - 1600 அடிகள்- 8000 சீர்கள் அடங்கிய திருக்கோவையாரையும் மாணிக்கவாசகர் பாடியுள்ளார். திருவாசகம் போலன்றித் திருக்கோவையார் படித்துப் புரியக் கடுமையானது. (திருவாசகத்திற்குப் பிந்திய, 100 அகவற்பாக்கள் கொண்ட கல்லாடமும் இது போற் கடினமே.) இவையிரண்டும் அகப்பாடல் அடைப்பலகையில் (template) சமயப் பொருளை உள்வைத்துப் பாடப்பட்டவை.

சங்க இலக்கியமும் அன்றி, சமய இலக்கிய வகையும் அன்றி திருக் கோவையாரும், கல்லாடமும் தனித்தெழுந்தவை. பல திருக்கோவையார்த் துறைகள் சங்க இலக்கியத்திற் சொல்லப் படாதவை, பின்வந்த நூல்களிலும் இத்துறைகள் காணப்படவில்லை. விதப்பான சொல்லாட்சியும், துறை யாட்சியும், கட்டுக்கோப்பும் கொண்ட திருக்கோவையார் என்றவோர் இலக்கியக் கன்று (கன்று = வகை, genre) எழுந்தது ஒருவேளை இடைப் பெயர்வுக் காலமோ (transitional period) என்றும் ஆழ்ந்து படித்தோரை எண்ண வைக்கிறது. திருக்கோவையாரை 9 ஆம் நூற்றாண்டாய்க் கொள்ளுஞ் சிலர், இதற்கு மாறாகச் ”சம்பந்தர் காலத்து நெடுமாறனைத் தலைவனாய்க் கொண்ட, பாண்டிக்கோவையே திருக்கோவையாரின் போல்மம்” என்று ஆதாரமின்றி சொல்வர். இது இரு வேறு நூல்களையும் ஆழ்ந்து பயிலாது, போகிற போக்கிற் புகலுகின்ற கூற்றாகும்.

நின்றசீர் நெடுமாறன் பெற்ற வெற்றிகளைப் பிணைத்தெழுந்த பாண்டிக் கோவை ஓர் அகப்பாடற் கோவையாகும். பாண்டிக்கோவையிற் சமயத்தை நிலைநாட்டுங் கருத்துக்கள் கிடையா. [பாண்டிக்கோவை போல அமைப்புக் கொண்டவை அம்பிகாபதிக் கோவை, தஞ்சைவாணன் கோவை ஆகியவை யாகும்.] திருக்கோவையாரோ, தில்லைச் சிற்றம்பலவனையே பாட்டுடைத் தலைவனாய்க் கொண்டு, அவன் புகழ்விரிக்கும் அகப்பொருள் நூலாய் அமையும். பாண்டிக்கோவையையும், திருக்கோவையாரையும் ஒருசேரப் படித்தவர் அவற்றின் வேறுபாடுகளைத் தெள்ளிதின் உணருவர்.

திருக்கோவையாரில் வரும் துறைகள் பாண்டிக் கோவையிற் கிடையாது. இவ்விரு கோவையுள் எது முந்தியது, எது பிந்தியது என்ற கருத்தாடலை நூல்களுக்கு வெளியிருந்து சொல்ல முடியுமே, தவிர நூல்களுக்கு உள்ளிருந்து சொல்ல முடியாது. அப்படி உரைப்பது ஒருவகைத் தன்மயக் கூற்றாகவே (subjective statement) இருக்கும்.

இனி அடுத்தடுத்த பகுதிகளில் மாணிக்கவாசகர் காலத்தை 9 ஆம் நூற்றாண்டாய் நிறுவும் கணிப்புக்களில் முகன்மையானவற்றை அலசுவோம்.

முதலில்

மன்னவன் தெம்முனை மேற்செல்லும் ஆயினும் மால் அரி (ஏறு)
அன்னவன் தேர் புறத்து அல்கல் செல்லாது வரகுணனாம்
தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் மற்றைத் தேவர்க்கு எல்லாம்
முன்னவன் மூவல் அன்னாளும் மற்றோர் தெய்வம் முன்னலளே

என்று வரும் திருக்கோவையார் 306 ஆம் பாடலையும்,

புயல் ஓங்கு அலர் சடை ஏற்றவன் சிற்றம்பலம் புகழும்
மயல் ஓங்கு இருங் களி யானை வரகுணன் வெற்பின் வைத்த
கயல் ஓங்கு இருஞ்சிலை கொண்டு மன் கோபமும் காட்டிவரும்
செயல் ஓங்கு எயில் எரி செய்தபின் இன்றோர் திருமுகமே

என்று வரும் திருக்கோவையார் 327 ஆம் பாடலையும் எடுத்துக்கொண்டு, அவற்றில் வரும் வரகுணன் பெயரைப் பிடித்துத் தொங்கி, 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தகக் கோச்சடையனான வரகுணனோடோ, அன்றி அவன் பேரனான 9 ஆம் நூற்றாண்டு (பொ.உ.862) வரகுணனோடோ [இவனும் ஒரு சடைய வர்மனே, மாற வர்மன் அல்லன். இவன் தந்தை சீமாற சீவல்லபனே ஒரு மாற வர்மன்.] ஒரு சிலர் பொருத்திச் சொல்வார்.

இப்படிச் சொல்லுதற்கு எந்த வரலாற்றாதாரமும் கிடையாது. ஆனாலும் பலர் சொல்வார். வரகுணன் என்ற பெயர் மாணிக்க வாசகர் கால ஆய்வில் முகன்மையானது தான். ஆனால் எக்காலத்து வரகுணன் என்பதில் தான் வேறுபாடு. ஒன்பதாம் நூற்றாண்டென்று கூறுவோர் கருத்தாடல்களை முழுதும் படித்தாலும் அவை வெறும் கருதுகோள்களாகவே தெரிகின்றன. இதற்கு மாறாய்ச் சூளுரைப்பவரும் தம் கருத்தை அறுதியிட்டு எடுத்து வைத்ததாய்த் தெரியவில்லை. மொத்தத்தில் இப்பொருந்தாக் கூற்று, மூலநூல்கள் அன்றி, வழிநூல்களைப் படித்து தமிழாய்வுகளுக்குள் தாம்தூம் என்று குதிக்க விழையும் ஒரு சிலரால், அறிஞருலகில் சுற்றி வந்துகொண்டே யுள்ளது. பின்வரும் பத்திகளில் இக்கூற்றை விரிவாய் அலசுவோம்.

அதே போல ”தில்லையம்பல வாயிலிலே மாயவன் வரங்கிடக்கிறான்” என்ற பொருள் படும்படியான

புரங்கடந்தான் அடிகாண்பான் புவிவிண்டு புக்கறியா(து)
இரங்கிடெந்தாய் என்றிரப்பத் தன் ஈரடிக்கென் இரண்டு
கரங்கள்தந்தான் ஒன்றுகாட்டிட மற்றாங்கதும் காட்டிடென்று
வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றில் அம் மாயவனே

என்னும் திருக்கோவையார் 86 ஆம் பாடலையும் பிடித்துக்கொண்டு, 8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருமங்கையாழ்வார் காலத்தில் வாழ்ந்த நந்தி வர்மப் பல்லவன் திருப்பணியோடு தவறாகப் பொருத்தி, தில்லைத் திருச் சித்திரகூடம் உருவானதே 8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிற்றான் என்று கொண்டு அதை மாணிக்கவாசகர் காலமாய் பொருந்தக் கூறும் கூற்றுக்களையும் (அவற்றை மிகப் பெரியவர்கள் சொல்லியிருந்தாலும்) விரிவாகக் கீழே பார்ப்போம்.

இன்னுஞ் சிலர் ”தில்லைக் கூத்தனை மாணிக்கக் கூத்தன் என்று மாணிக்கவாசகர் சொல்கிறார். தில்லை நடவரசன் என்ற கருத்தீடு பேரரசுச் சோழர் காலத்தது; பல்லவர் காலத்திலும், அதற்கு முந்தியும் இது கிடையாது; நடவரசன் வேறு, நடேசன் வேறு” என்று எங்குமிலாப் புத்தாராய்ச்சி செய்து படிமவியலில் தென்படும் வரையறை வேறுபாடுகளைப் பென்னம் பெரிதாய்ப் பொதுவரலாற்றிற் பொருத்திக் காட்டி மாணிக்க வாசகரை ஒன்பதாம் நூற்றாண்டிற்குக் கொண்டு போவார். [மாணிக்கம், மணி என்ற பெயரடைகளைப் பயன்படுத்துவதில் மாணிக்க வாசகருக்குப் பெருத்த விருப்பம் இருந்திருக்கிறது என்பது உண்மை தான்.]

இவர் காட்டுகிற நுண்ணிய வேறுபாடுகளை எந்த இறையன்பர் தேடிக் கண்டுபிடித்தாரென நமக்குப் புரியவில்லை. ”இது ஏதோ வட்டம், நீள்வட்டம்” என இனங்காட்டிப் பிரித்து, ”ஒன்று இன்னொன்றைப் போலில்லை” என்று சொல்லிக் கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போல் தென்படுகிறது. நடவரசன் என்ற கருத்தீட்டிற்கு என்னென்ன வரையறைகள்  சொல்லப் படுகின்றனவோ, அவையெல்லாம் தேவார மூவரிடம் வெளிப்படும். மாணிக்க வாசகரிடமும் வெளிப்படும். பிறகு என்ன நடேசன், நடவரசன் வேறுபாடு? பல்லவர் காலத்திலும், அதற்கு முன்னேயும் நடவரசன் என்ற கருத்தீடு தெளிவுற்றதா? அன்றிப் பேரரசுச் சோழர் காலத்திற்றான் தெளிவுற்றதா? இதையும் வரும் பத்திகளில் விரிவாய்ப் பார்ப்போம்.

இன்னொரு வகை வாதம் திருவாசகப் பாடல்களின் யாப்பை ஓட்டியது. மாணிக்கவாசகர் பயன்படுத்திய யாப்புக்களில் ஒரேயொரு பா மட்டும் (திருப்படையாட்சி) பன்னிருசீர் ஆசிரிய விருத்தமாய்ப் புறனடையாக வந்திருக்கும். [அது திருவாசகத்தைச் சேர்ந்ததா, அல்லது இடைச்செருகலா என இதுவரை யாரும் ஆய்ந்து பார்த்ததில்லை. ஒரு சில பதிகங்கள் குறையாகவும், ஒரு சில, வேறு பதிகங்களின் கலப்போ என்று தோன்றும் படி இருக்கும்போது இந்த இடைச்செருகற் கேள்வியும் ஆய்வாளருக்கு இயல்பாய் எழுவது தான்.]

பன்னிருசீர் ஆசிரிய விருத்தமான ஒரு புறனடையைப் பிடித்துக் கொண்டு யாப்பிலக்கணக் கைச்சாத்து (signature) வாதம் செய்து, மாணிக்க வாசகர் பாடல்கள் ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் தான் எழமுடியும் என்பது அறிவியல் பூருவ வாதமாகத் தெரியவில்லை. ஆழ்ந்த ஆய்வில், முன்சொன்ன பன்னிருசீர் விருத்தத்தை புள்ளியியல் வெளியிருப்பு (statistical outlier) என்று தள்ளி, மீந்த பாடல்களில் மாணிக்கவாசகரின் கைச்சாத்தைக் கண்டுபிடித்தால் அது தேவார மூவருக்குக் காலத்தால் முற்பட்டுத் தான் அமைகிறது. Does the exception prove the rule?

இன்னும் வேறு வகை வாதம், ”மாணிக்க வாசகருக்காக நடந்த நரி-பரி திருவிளையாடலில் இறைவன் காட்டும் குதிரையாள் அரபு வணிகன் போல் தோற்றுகிறான். எனவே இசுலாம் எழுந்தபின் தான் மாணிக்க வாசகர் இருந்துள்ளார்” என்பதாகும். இதுவும் மூல நூல்களைப் பயிலாது மேம் போக்காய்ச் சொல்லும் வாதமாகும். ”கிடைத்த திருவிளையாடற் புராணங்களில், மிகப் பழையதான பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் இது போன்ற அரபு விவரிப்புக் கிடையவே கிடையாது” எனும் போது,

வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர்
பள்ளிக் குப்பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்

என்னும் அன்னைப்பத்து 7ஆம் பாடல் அரபுத் தோற்றம் காட்டாத போது, இதுபோல் நொள்ளை வாதங்கள் எப்படி எழுகின்றனவோ, அறியோம்.

இன்னொரு வாதம் திருவாசகம் போற்றித் திருவகவல் 54-58 ஆம் அடிகளை ஒட்டி எழும்.

மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழித்தடித்து ஆஅர்த்து
உலகா யதனெனும் ஒண்திறல் பாம்பின்
கலாபே தத்த கடுவிடம் எய்தி
அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும்

”மாயாவாதச் சண்டமாருதம் ஆர்த்து நிற்க, பல்வேறு வேறுபாடுகலோடு நிலைக்கும் உலகாய்தம் எனும் நஞ்சை எய்தி பெரும் மாயை சூழவும்” என்று இவ்வரிகள் பொருள் கொள்கின்றன. ”இதில் வரும் மாயாவாதம் ஆதி சங்கரரின் அல்லிருமையைக் (அத்துவிதத்தைக்) குறிக்கிறது; எனவே மாணிக்க வாசகர் ஆதிசங்கரருக்கு அப்புறம் வந்தவர்” என்ற வாதம் உள்ளீடு அற்றது. ஏனெனில் அல்லிருமை என்பது உலகாய்தமெனும் நம்பா மதத்தோடு சேர்ந்ததல்ல. மாயாவாதம் என்ற கருத்தீடு ஆதிசங்கரரின் மாயாவாதத்திற்கு முன்னரே, புத்த நெறியாளரிடையே ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் பல நூற்றாண்டுகள் முன்னதாகத் தோன்றியதாகும். உலகாய்தத்தின் ஒரு சில கூறுகளை (எல்லாக் கூறுகளையும் அல்ல) தன்நெறிக்குள் இணைவைத்துக் கூறும் நம்பா மதங்களுள் புத்த நெறியும் ஒன்று. மாயாவாதம் புத்த நெறி குறித்ததா, அத்துவிதம் குறித்ததா? - இதையும் விரிவாகக் கீழே பேசுவோம்.

கடைசியாக ஒரு வாதம். ”திருத்தொண்டத் தொகையில் மாணிக்க வாசகர் பெயரில்லையாம். எனவே மாணிக்க வாசகர் பிற்காலத்தவராம்”. இது எப்படி இருக்கிறதென்றால், திருவிளையாடற் புராணத்தில் நாவுக்கரசர், சுந்தரர் பெயர் காணப்படவில்லையே? அதனால் அவர் பிற்காலத்தவர் என்பது போல் உள்ளது. இந்த இன்மைவாதத்தின் உள்ளீடற்ற தன்மையையும் கீழே பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Anonymous said...

arumaiyana vilakkam nantri nanbare nantri thodarattum umathu saiva samayappanikal thanks