Thursday, September 29, 2011

மாணிக்கவாசகர் காலம் - 4

கதைத் தொடக்கம்:

மாணிக்க வாசகரும் மற்றோரும் தானைவேல் வாகைமாறனைச் சூழ்ந்து திருவோலக்க மண்டபத்தில் இருக்கும் போது குதிரைத் துறைக்காரன் தங்கள் அரசுக் குதிரைகள்
“சீதவெம்மை, வாதநோய், ஆதிவெப்பு, கண்டமாலை, கவுசி, மகோதரம், மண்டசாலம், வெஞ்சூலை, அலகுநோய், தண்டைநோய், பிரமேகம், தலைக்கனம்” எனப் பல்வேறு வாதைகளிற் பாதிக்கப் பட்டிருப்பதைச் சொல்லி, ”மற்ற குதிரைகளும் இது போல நோய்வாய்ப்படும் நிலையில் உள்ளன. புதுக் குதிரைகள் வாங்கினாற்றான் குதிரைப்படையைக் காப்பாற்ற முடியும்” என்று சொல்லுகிறான்.

நிலைமை சிக்கலாகிக் கிடக்கிறது. நாலைந்து குதிரைகள் அல்ல, கணக்கற்ற குதிரைகள் நோய்வாய்ப் பட்டிருக்கின்றன. ஒரு குதிரைப் படையே இல்லாது போகும் நிலை பாண்டிய நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த நாட்டின் மேல் (இது பெரும்பாலும் சோழநாடு. வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய திருவிளையாடலில் சோழன் தான் பாண்டியன் மேற் படையெடுத்து வருகிறான்.) படையெடுத்துப் போக விழையும் அரசன் நிலைமையின் கனத்தை உணருகிறான். தன் சொந்த நிலவறையிலிருந்து வேண்டிய செல்வம் எடுத்துப் போய் “தாவு மா இறங்கும் பட்டினத்திற்” குதிரைகளை வாங்கிவரச் சொல்கிறான்.

அரச கட்டளையைக் கேட்ட மாணிக்க வாசகர் (தன் சொந்தப் புரிதலில்) சோழநாட்டுப் பெருந்துறையில் குதிரைகள் வாங்கப் புறப்படுகிறார். அவர் ஏன் சோழநாட்டிற்குப் போகிறார்? - சற்று ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டிய கேள்வி. சோழநாட்டுப் பெருந்துறை பாண்டிய நாட்டுத் தொண்டியில் இருந்து வடக்கே 20/25 கி.மீ.தொலைவு கொண்டது. அது மிழலைக் கூற்றத்தில் (இற்றைக் காலப் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம்.) உள்ளது.

மிழலைக் கூற்றம் சோழருக்கும் பாண்டியருக்கும் இடையே மாறிக் கொண்டேயிருக்கும் பகுதி. ஆனால் அடிப்படையில் சோழநாடு தான். (தெள்ளுநீர் வெள்ளாறு பாய் திருமிழலை நாட்டுப் பெருந்துறை” என்பது சிவலோகநாயகி பொன்னூசலில் வரும் தொடர்.) பொதுவாகக் கோயிற் கல்வெட்டுக்களில் இத்தலம், ”மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம், பிரமதேசம், தனியூர், திருப்பெருந்துறையான பவுத்திர மாணிக்கச் சதுர்வேத மங்கலம்” என்று குறிப்பிடப் படும். புவுத்திரம் என்பதன் மூலம் கடலுக்கு அருகில் உள்ளது என்பது விளங்குகிறது.

பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் பிரிக்கும் எல்லையாறான வெள்ளாறு, கடலோடு கலக்குமிடத்திற்கு மிக அருகில் இன்றிருப்பது மணமேற்குடி என்னும் ஊராகும். அதற்கு மேற்கில் ஆற்றையொட்டி இருப்பதை மணலூர் என்று சொல்லுவர். [இந்த மணலூர் பற்றி ஆயவேண்டும். பாண்டியர் மணலூர் இதுதானோ என்ற ஐயம் இவ்வாசிரியனுக்கு உண்டு.] ஆற்றோடு நடந்தால் ஆவுடையார் கோயிலுக்கும் - திருப்பெருந்துறைக்கும் - கடலுக்கும் இடைப்பட்ட தொலைவு கிட்டத்தட்ட 22/23 கி.மீ தொலைவாகும்.

திருப்பெருந்துறை ஓர் இயற்கைத் துறைமுகம் அல்ல. மரக்கலங்கள் அங்கு அணைந்து, குதிரைகள் இறங்க வேண்டுமானால் அத்துறை, ஆற்றோடு சேர்ந்த ஆழம் பெரிதில்லாக் கடலும் ஆறும் சேரும் செயற்கைப் பெருங்கழியிற் தான் இருக்க முடியும். [பாண்டியரின் கடல்முகத் தொண்டியிலில்லாது ஆற்றின் கழிமுகத்தில் இருக்கும் சோழர் பெருந்துறையிற் குதிரைகள் இறங்கியது நம் கவனத்தை ஈர்க்கிறது. ஒருவேளை தொண்டியின் அலைகள் குதிரைகளை இறக்க முடியாத அளவு சரவல் தந்தனவோ, என்னவோ? ஞாவகப் படுத்திக் கொள்ளுங்கள். தொண்டியிற் கழிகள் கிடையாது.]

கழியும் துறையும் பொருளில் ஒன்றுதான். இதுபோலக் கோவும் பெருவும் ஒன்றுதான். பெருந்துறை தான் கோகழி, கோகழி தான் பெருந்துறை. கோகழி என்பதன் பொருளைப் பெருந்துறையிற் தேடாது கருநாடகத்திலும், திருவாவடுதுறையிலும் தேடிக் கொண்டிருப்பவர்கள் ஆள்வுடையார் கோயிலுக்கு வந்து, சுற்றியுள்ள ஊரின் நிலவமைப்பைப் பார்த்ததில்லை போலும். occam's razor என்ற சிந்தனைக் கூற்றையும் பற்றிக் கேள்விப் பட்டதில்லை போலும். கோகழி என்ற பெயரை திருவாசகப் பாட்டுக்களை அலசும் இடத்தில் இதுபற்றிப் பேசுவோம்.

மாணிக்க வாசகர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்று அவக்கரமாய்ச் சொல்லப் புகுவோர், மன்னர்களின் வலிமைகள், இன்மைகளைப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். மாணிக்கவாசகர் காலத்து அரசன், குலைந்துபோன குதிரைப் படையை மீண்டும் கட்டமுற்படும் வலிகுறைந்த அரசனாவான். அவன் காலத்துப் சோழன் கூட வலிந்தவன் இல்லை. அப்படி இருந்திருந்தால் பாண்டிய முதலமைச்சன் சோழநாட்டின் பெருந்துறைக்குள் சொந்தத் தோட்டத்திற் புகுவது போல் குதிரை வாங்க நுழைந்திருக்க முடியாது. தேங்காயைப் பிடித்து அமுக்கியது போல சோழன் மாணிக்கவாசகரைச் சிறைக்குள் கொண்டு போயிருப்பான். (நினைவு வைத்துக் கொள்ளுங்கள், பாண்டியன் குதிரைப் படையை மீளுருவாக்கப் புறப்பட்டவர் மாணிக்கவாசகர். வெறும் நாலைந்து குதிரை வாங்க வந்தவரல்ல. இந்தப் படை மீள்கட்டப் படாது தடுக்கவே சோழன் முனைந்திருப்பான்.)

இன்னொரு விதமாய் எண்ணிப் பார்த்தால், எல்லைப் பகுதிகளில் அதிகாரமில்லாச் சோழ அரசர் ஆண்ட காலம் அது போலும். குதிரை வாங்கப் புறப்பட்ட அடுத்த நாட்டுப் பேரமைச்சன் ஒரு மாதத்திற்கு மேலும் தங்கி சோழநாட்டிற்குள் எல்லைமீற முடிந்திருக்கிறது. அப்படியானால், பாண்டியன், சோழன் என்று இருவருமே வலிகுறைந்தவராய் இருந்த காலம் அது போலும். அப்படியானால் அது எந்த நூற்றாண்டு? ஒன்பதாம் நூற்றாண்டா? விசயாலயன் காலமா? இருக்க முடியாதே? தஞ்சை அல்லது பழையாறையில் இருந்து பெருந்துறைக்குச் சட்டென்று தாவி வரமுடியுமே? தஞ்சையில் இருந்து 90 கி.மீ. கூட இருக்காதே? பெருந்துறையில் பாண்டிய முதலமைச்சன் குதிரை வாங்கவந்த செய்தி சோழனுக்குத் தெரியாது போனதா? அல்லது அவன் வலிகுறைந்தவனா?

மாணிக்க வாசகர் பெருந்துறையில் இருந்த காலம் எத்தனை நாட்களோ தெரியாது; அவை ஒரு மாதங்கூட இருந்திருக்கலாம். அந்தக் காலத்தில் பெருந்துறையிலிருந்து மதுரைவரை இந்தப் பகுதிகள் எல்லாம் பெருங்காடு தான். கானப் பேர் என்ற பெயர் அந்தப்பேற்றை, அடர்த்தியை, உணர்த்துகிறது. சிவகங்கைக் காடுகள் அழிக்கப் பட்டது 19 ஆம் நூற்றாண்டிற்றான். அதுவரை உள்ளூர் ஆட்கள் கூட நுழையவொண்ணாப் பெருங்காடாய்த் தான் அது இருந்தது. சங்க காலத்தில் இருந்து அப்படித்தான். கானப்பேர் கடந்து கோட்டையைப் பிடித்தனாலேயே ஒரு சங்ககாலப் பாண்டியன், ”கானப்பேர் எயிற் கடந்த உக்கிரப் பெருவழுதி” என்று பெயர் பெற்றான். ஆக அவ்வளவு கடினமான காடு. காட்டிற்கு நடுவில் எங்கெல்லாம் ஊர்கள் எழுந்தனவோ, அங்கெல்லாம் கோயில்கள் எழுந்தன. திருப்பூவணம், திருக்கானப்பேர், திருப்புத்தூர், திருவாடானை, திருப்புனல்வாயில். எல்லாம் ஒரே பாதைக்கு அருகில் உள்ளவை தான். திருவுத்தரகோசமங்கை மட்டும் சற்று தள்ளியிருக்கிறது.

மாணிக்க வாசகர் மதுரையிலிருந்து திருக் கானப்பேர் வழியாக வந்து அங்கு இடைத்தங்கிப் பின் பெருந்துறை வருகிறார். நம்பியார் திருவிளையாடல் அப்படித்தான் சொல்லுகிறது. கானப்பேர் கானையம்பதி என்று 12 ஆம் நூற்றாண்டில் பெயர் பெற்றிருக்கிறது. காளையார் கோயில் என்பது அப்பொழுது கோயிலுக்கு மட்டுமே உரியபெயர். இன்று ஊருக்கும் அதே பெயர் தான். பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே அங்கு சுந்தரேசர், சோமேசர், காளையீசர் என்று மூன்று திருநிலைகள் இருந்திருக்கின்றன. அவை மூன்றும் எப்பொழுதெழுந்தன என்று சொல்லத் தெரியவில்லை. கானப்பேருக்கு கந்தவனம் என்ற பெயரும் இருந்திருக்கிறது. நம்பியார் புராணம் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ.வே.சா. ஒரு பொன்னே போலுங் குறிப்புக் கொடுக்கிறார். அதை அப்படியே தருகிறேன்.

----------------------
விக்கிரம சோழன் மகள் சுகந்த கேசியை மணம் புரிந்த வரகுண பாண்டியர், அவளுடைய அழகின் மிகுதியைக் கண்டு அத்தலத்திற் சிவபெருமானுக்கு அர்ப்பணஞ் செய்தனர் என்பதும் அவளுடைய கூந்தலின் நறுமணம் எங்கும் பரவியது பற்றி அத்தலம் சுகந்தவனம் அல்லது கந்தவனம் என்று பெயர்பெற்றது என்பதும் அத் தலபுராண வரலாறுகள்.
----------------------

இந்தத் தலபுராணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் உ.வே.சா. மூலம் நமக்குக் கிடைத்திருப்பது அருமையான செய்தி. திருக்கோவையாரிற் சொல்லப் படும் வரகுண பாண்டியனின் மாமன் பெயர் விக்கிரம சோழன் என்பதாம். ஆக வரகுணபாண்டியன் மேற் படையெடுத்து வந்தது அவன் மைத்துனன் தான். Typical Tamil behaviour. அண்ணன் தம்பி மாமன் மச்சான் சண்டைகள் இந்த நாட்டை எவ்வளவு அலைக்கழித்திருக்கின்றன?

நாமறிந்து ஒரு விக்கிரம சோழன் குலோத்துங்கனுக்குப் பின்னால் பொ.உ. 1118-1135 இல் ஆட்சி செய்திருக்கிறான். இவர்கள் சொல்லும் வரகுணனோ 9 ஆம் நூற்றாண்டு (பொ.உ.862/863). உறவுகள் கொஞ்சமும் பொருந்தவில்லையே? வேறொரு விக்கிரம சோழன் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்ததாய்த் தெரியவில்லையே? எல்லோரும் சேர்ந்து மாணிக்கவாசகர் காலத்தை 12 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளுவோமா? அன்றி அடம்பிடித்து 9 ஆம் நூற்றாண்டென்று சொன்னால் அந்தக் காலத்தில் இருந்த சோழன் விசயாலயன் ஆயிற்றே? (பொ.உ.848-881) என்ன செய்வோம்? விசயலாயனின் கடைசிப் பத்தாண்டுகளில் அவன் மகன் ஆதித்த சோழன் தானே நடைமுறையிற் சோழ அரசனாய் இருந்தான்?

யாரோவொரு பாண்டியன் வரகுணனாய் இருந்து அவன் காலத்துச் சோழ மாமன் விக்கிரமனாய் இருந்த காலம் பின் எது? அதைக் கண்டறியாமல் குத்துமதிப்பில் மாணிக்க வாசகர் ஒன்பதாம் நூற்றாண்டு என்று சொன்னால் எப்படி? வரலாற்றுப் பட்டகைகள் எல்லாம் ஒப்புக்குத் தானா? அவற்றின் அடிப்படையில் எந்த முடிவுங் கிடையாதா? உண்மையில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. கொடுத்திருக்கும் இந்தவொரு காளையார் கோயிற் புராணச் செய்தி போதுமே, ஒன்பதாம் நூற்றாண்டு வரகுணன் என்ற பொருத்தை சுக்குநூறாய் உடைத்தெரிவதற்கு.

உடனே நாம் நாணிக் கொள்வோமோ? கோயிற் புராணங்கள் கற்பனை என்று சொல்லி அவற்றை ஒதுக்குவோமோ? தம் கருதுகோளை உண்மை என்று சாதிக்க என்ன வேண்டுமானாலும் சொல்லுவது வரலாற்றியல் அறம் போலும் .:-)))))))

அன்புடன்,
இராம.கி.

2 comments:

Anonymous said...

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

Anonymous said...

கவுசி (as in 'avanukku enna கவுசி') is still in use in our village, yet I don't know what this means....