Tuesday, August 16, 2011

மாணிக்க வாசகர் காலம்: உ.வே.சா. கூற்று

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் என்பது செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பியாரால் இயற்றப்பட்டது. அச்சில் இதன் முதற் பதிப்பு 1906 இல் ஏறியது. பின்னால் இதன் பதிப்புகள் 1927 இலும், 1972 இலும் வெளிவந்துள்ளன. இதன் முதற் பதிப்பாசிரியர் மகாமகோபாத்தியாய டக்டர் உ.வே. சாமிநாதையர் ஆவார். (1927 ஆம் ஆண்டு பதிப்பும், 1972 ஆம் ஆண்டுப் பதிப்பும். EFEO புதுச்சேரியைச் சார்ந்த திருமிகு ழான் சேவியாரால் எனக்குக் கிடைத்தன. அவருக்கு என் நன்றி உரித்தாகும்.)

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் எனும் இந்நூல் உத்தர மகா புராணம் என்னும் வடநூலின் பகுதியான சார சமுச்சயம் என்பதிலிருந்து மொழிபெயர்த்துச் செய்யுள் நடையாக இயற்றப் பெற்றது அப்புராணத்தில் வரும் இந்திரன் பழி தீர்த்த திருவிளையாடலில் வரும் “ஓதரிய” என்ற 35 ஆம் செய்யுளாலும் நூலின் கடைசியில் வரும்“அம் பதுமத்தார்” என்று நூற்சிறப்புப் பாயிரச் செய்யுள் முதலியவற்றாலும் விளங்குகின்றது. இந்நூலின் செய்யுள் தொகை 1753. இது பழைய திருவிளையாடல், வேம்பத்தூரார் திருவிளையாடல், திருவிளையாடல் எனவும் வழங்காநிற்கும்.

இதன் காலம் பெரும்பாலும் கி.பி.12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி ஆகலாம் என்றே உ.வே.சா. கணிக்கிறார். எல்லோரும் அறிந்த இன்னொரு திருவிளையாடற் புராணம் என்பது இற்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன் பரஞ்சோதி முனிவரால் ஸ்ரீ ஹாலாஸ்ய மாகாத்மியம் எனும் வடநூலிலிருந்து செய்யுள் நடையாக இயற்றப் பெற்றது இதன் செய்யுள் தொகை 3363. இக்காலத்தில் எல்லோராலும் இதுவே மிகுதியாகப் பாராட்டிப் படிக்கப் பெற்று வருகிறது.

பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடலுக்கும், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்திற்கும் வேறுபாடுகள் மிகுதியுண்டு. இரண்டிற்கும் இடையே குறைந்தது 550-600 ஆண்டுகள் காலவேறுபாடும் உண்டு. இந்த வேறுபாடு அறிந்த, இரண்டையும் ஒப்பிட்டு ஆய்வு செய்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் வேம்பத்தூரார் திருவிளையாடற் பதிப்பில் மாணிக்க வாசகர் காலம் பற்றி ஓர் ஆய்வுக் குறிப்பு தந்துள்ளார். அது படித்து உணரத் தக்கது.

கீழே அக்குறிப்பைத் தட்டச்சித் தந்துள்ளேன். மாணிக்க வாசகர் காலம் பற்றிய என் ஆய்வுக் குறிப்புகளை இனிக் கொஞ்சங் கொஞ்சமாகத் தருவதாகவும் உள்ளேன். அதற்குச் சில நாட்கள், மாதங்கள் கூட ஆகலாம். அரைகுறை ஆய்வாளர் (அவர் நம்நாட்டவராயினும் சரி, மேல்நாட்டவராயினும் சரி) பெருத்துப் போன நிலையில், ஒருமுறைக்கு இருமுறை ஒவ்வொன்றையும் சரிபார்த்து ஏதொன்றையும் சொல்ல வேண்டியுள்ளது. எந்தவொரு ஆய்வும், வெறுமே இரண்டாம் நிலை ஊற்றுகைகளை மட்டும் பாராது, மூல நூல்களைப் படித்தும், மற்ற ஒத்திசை நூல்களோடு ஒப்பிட்டும், தனக்கென்று ஓர் ஏரணக் கட்டுக் கோப்பை உருவாக்கிச் செய்யவேண்டியதாகும். தொல்காப்பியர் சொல்லும் 32 உத்திகளும் எந்தவோர் ஆய்வு நூலிற்கும் பொருந்தும்.

இறையருள் கூடின் என் பணியாற்றுவேன். இனி உ.வே.சா. உங்கள் முன் தன் கருத்தையுரைக்கிறார்:

--------------------------------------

ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்,

திருநாவுக்கரசு நாயனார்க்குக் காலத்தால் முற்பட்டவரென்பது

திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்கள்

திருவாரூர்
பண் -காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

1.நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல்லானும் விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தனைமுன் னோட முன்பணிந் தன்பர்க ளேத்த
வரவரைச் சாத்திநின் றானு மாரூ ரமர்ந்தவம் மானே

தனித் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

11. குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்
குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார்
சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார்
தென்றனெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார்
பராபரனென் பதுதமது பேராக் கொண்டார்
பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி
யிராவணனென் றவனைப்பே ரியம்பக் கொண்டா
ரிடருறுநோய் தீர்ந்தென்னை யாட்கொண் டாரே

மேற்கூறிய இரண்டு பாடல்களுள், முதலாவதிலுள்ள, ‘நரியைக் குதிரை செய்வானும்’ என்பதற்குப் பொருளும் சரித்திரமும் வெளிப்படை.

இரண்டாவதிலுள்ள ‘குடமுநந் தீசனைவா சகனாக் கொண்டார்’ என்பதற்குப் பொருளும், அதிலுள்ள சரித்திரமும் இங்கே ஆராய்தற் பாலன. இந்த வாக்கியத்திற்கு, (சிவபெருமான்) குடமுழா வாசிக்கும் திருநந்தித் தேவரை ஸ்ரீ மாணிக்க வாசகராக அவதரிக்கும் படி திருவுளத்திற் கொண்டருளின என்பது பொருள்; குடமுழா - ஒருவகை வாத்தியம்; வாசகன் - ஸ்ரீ மாணிக்க வாசகர்.

பண்டைக் காலத்திற் பூமியிற் பௌத்த மதம் அதிகரித்த பொழுது வேதாகம ஒழுக்கம் குன்ற, அக்குறையை அகற்றக் கருதிய தேவர்களுடைய பிரார்த்தனைப் படி, சிவாஞ்ஞையால் திருநந்தித்தேவர் ஸ்ரீ வாதபுரத்தில் ஸ்ரீ சம்புபாதாசிருதரென்னும் பிராஹ்மணோத்தமருக்கும் அவர் பத்தினியார் சிவஞானவதியாருக்கும் புத்திரராக அவதரித்து அருளினரென்பது, திருப் பெருந்துறையின் வடமொழிப் புராணமாகிய ஸ்ரீ ஆதிகைலாஸ மஹாத்மியம், 39 ஆம் அத்தியாயத்திலும், ஸ்ரீ மாணிக்கவாசகருடைய வடமொழிச் சரிதமாகிய ஸ்ரீ மணிவாக்கிய சரித்திரம், 6 ஆம் அத்தியாயத்திலும் விரித்துக் கூறப்பெற்றிருத்தலின், இதற்கு இதுவே பொருளென்று தெரிகின்றது.

இதனால், ஸ்ரீ மாணிக்கவாசகஸ்வாமிகள், திருநாவுக்கரசு நாயனார்க்கு காலத்தால் முந்தியவரென்று நமக்கு புலப்படுதல் காண்க.

மேற்கூறிய வடநூல்களிரண்டையும் ஆராய்ந்து தெளியும் வண்ணம் நல்ல சமயத்தில் அனுப்பிய திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த ஸ்ரீ ஆளுடையார் கோயில் டிரஸ்டி ஸ்தானீகத்திலிருந்த ஸ்ரீ சுந்தரலிங்கத் தம்பிரான் அவர்களுடைய பேருதவி ஒருபொழுதும் மறக்கற் பாலதன்று.

-------------------------------
மேலிருப்பது உ.வே.சா.வின்  பதிப்பில் உள்ள கூற்று. (அவருடைய கூற்றை என்நடைக்கு மாற்றாது, அப்படியே தந்துள்ளேன்.)

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Vanthiyan said...

அய்யா பதிவிற்கு ஒவ்வாத கேள்வி
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13710:2011-03-21-11-09-16&catid=25:tamilnadu&Itemid=137
இதைப்பற்றி தங்கள் கருத்தை அறிய ஆவலாய் உள்ளேன்....

..........வந்தியன்