Tuesday, September 27, 2011

மாணிக்க வாசகர் காலம் - 2

அருளிச் செயல்களும், மாணிக்க வாசகரும்:

மாணிக்க வாசகர் கால ஆய்விற்குள் போகுமுன், நமக்குத் தெரிந்த மாணிக்க வாசகர் வரலாற்றை ஓரோவழி நினைவுகொள்வது நல்லது. தெரியாதவர் ”மாணிக்கவாசகர் வரலாறும், காலமும்” என்ற மறைமலை அடிகளார் பொத்தகத்தின் முற்பகுதியை ஒருமுறை படித்துக் கொள்க. மறைமலை அடிகள் சொன்னதை அப்படியே இங்கு விவரிக்காது, திருவாசகத்தில் இருந்தே சில அகக் குறிப்புகளையும், 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணக் கூற்றுக்களையும், ஓரளவு தொட்டுக்காட்ட முற்படுகிறேன்.

தேவார மூவர் எப்படி இறைவனாற் தடுத்தாட் கொள்ளப் பட்டாரோ அதே போல் மாணிக்க வாசகரும் இறைவனாற் தடுத்தாட் கொள்ளப் பட்டவரே. மாணிக்கவாசகர் பொருட்டு 4 திருவிளையாடல்கள் நடந்ததாய் திருவால வாயுடையார் புராணம் சொல்லும். இதற்குமுந்திய கல்லாடத்திலும் இவை உணர்த்தப்பெறும். மாணிக்கவாசகர் காலத்தை 9 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளுகிறவர் கல்லாடக்காலத்தையும் ஐயுற வைத்து நம்மை மேற்கொண்டு பேசவிடாது அடைக்கப் பார்ப்பர். நம் கருத்துப் படி கல்லாடமும் 9 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியதானாலும் இவருடைய அடைப்பின் காரணமாய் அச்சான்றுகளை இங்கு பயன்படுத்த இயலாதுள்ளது. நம்பியார் புராணப்படி, மாணிக்கவாசகருக்கென நடந்த திருவிளையாடல்கள் நான்காகும். அவை:

1. ஞானோபதேசஞ் செய்த திருவிளையாடல்
2. நரி குதிரையான திருவிளையாடல்
3. குதிரை நரியான திருவிளையாடல்
4. மண் சுமந்த திருவிளையாடல்

ஆகும். இவை போக மாணிக்கவாசகர் காலத்தையொட்டி, வேறு இறையன்பருக்கு நடந்ததாய் இன்னுமிரு திருவிளையாடல்களை நம்பியார் புராணம் வழியாக அறிகிறோம். அவை:

5. வரகுணனுக்குச் சிவலோகங் காட்டின திருவிளையாடல்
6. விடைக்குறி அம்பெய்த திருவிளையாடல்

ஆகியவையாகும். அதே புராணத்தை மேலும் ஆயும்போது, ”இன்னுஞ்சில திருவிளையாடல்கள் (குறிப்பாக விடைக்குறி அம்பெய்த திருவிளையாடலை அடுத்துவரும்

7. உலவாக்கோட்டை வைத்த திருவிளையாடல்,
8. மூர்த்தியாருக்கு அரசளித்த திருவிளையாடல்)

ஆகியவை மணிவாசகர் காலத்தைத் தொடர்ந்து அதற்கு அண்மையில் இருந்திருக்குமோ?” என்று நம்மை எண்ண வைக்கின்றன.

பொதுவாக, திருவிளையாடற் காலங்களுக்கு அண்ணிவரும் 12 ஆம் நூற்றாண்டுத் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணமே நாம் பெரிதும் கவனிக்க வேண்டியதாய் இருப்பதும், இதற்கு 6 நூற்றாண்டுகள் கழித்தெழுந்த பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் பல இடங்களில் ஏரணத்தால் முரண்படுவதும், அதில் விரியும் கதை நிகழ்வுகள் இட்டுக் கட்டப் பட்டது போற் தோற்றமளிப்பதும் ஆய்வுப் புலம் மிகுந்த அறிஞர்களாற் சுட்டிக் காட்டப்படுகிறது. இந்த ஆய்வு நெடுகிலும் நம்பியார் திருவிளையாடற் புராணத்தையே நாம் எடுகோளாய்க் கொள்ளுகிறோம். ஓரோ வழி மற்றவையும் துணை கொள்ளப் படுகின்றன.

மேலே கூறிய 8 திருவிளையாடல்களும், அவற்றோடு சேர்ந்தவைகளும் ”துயில் நேரத்தில் பிள்ளைகளுக்குச் சொல்லும் கட்டுக் கதைகள்” என்று தூக்கியெறிந்து மாற்றாடுவோரோடு நாம் இங்கு உரையாடவில்லை. இன்னுஞ் சொன்னால், இதுபோற் கதைகள் நடக்குமா, நடக்காதா என்ற கேள்விக்குள் நாம் போக விரும்பவில்லை. ”இவை யாருக்கு நடந்தன?” என்று மட்டுமே அலச விழைகிறோம்.

பொதுவாகத் தடுத்தாட்கொள்ளப் பட்ட செயல்களை அருளிச் செயல்கள் என்று பெரியோர் அகலப்படுத்திச் சொல்வார். அருளிச் செயல்கள் என்பவை மாந்த முயற்சிக்கு மீறியதாய்த் தோற்றங் காட்டுபவை. ஒருவனோ, ஒருத்தியோ, தன்னியல்பால் முடியாதவொன்றை தானே நடத்தியோ, அல்லது தனக்கு நடந்திருந்தாலோ, அவை அருளிச் செயல்கள் எனப்படும்.

மீமாந்தச் செயல்கள் எல்லாமே அருளிச் செயல்களெனச் சொல்லமுடியாது. காட்டாக, 1965 இந்தியெதிர்ப்பின் போது அரசுக் காவலர் தொடர்ந்தடித்த பிரம்படியின் வலியை ஏற்றோடிய இக்கட்டுரை ஆசிரியன் நேரிய காலங்களிற் தன்னால் ஒரு சிறிதும் தாண்ட முடியாத ஆறடிச் சுவரைத் தான் பெற்ற அடியின் வலியால் நரம்புகள் தூண்டப்பெற்று தாண்டியதையும், தன் சிறுபிள்ளை வாழ்வில் தன்மீறிய நிலையில் ஐயனார்கோயில் தீமிதிக்குள் ஓடி வெளிவந்த செயல்களையும் நினைவு கொள்கிறான். அவற்றை அருளிச் செயல்களென யாராவது சொல்ல முடியுமோ? சொல்ல முடியாது. அவை மீமிசையுணர்வில் நரம்பு தூண்டப்பெற்று நடந்துமுடிந்த செயல்கள். அது போல் மீமிசைச் செயல்கள் உலகிற் பலருக்கும் நடந்திருக்கின்றன.

அருளிச் செயல்கள் என்பவை மந்திர, தந்திரங்களால், மாகை (magic) முயற்சிகளால் அல்லாது, அதேபொழுது தன்னைமீறிய மாந்த முயற்சியால் நடப்பவை; நேரிய மாந்த விளக்கத்தில் நிறுவ முடியாதவை. தொல்காப்பியம் இவற்றை மருட்கை மெய்ப்பாட்டின் அடியிற் சேர்க்கும். இக்காலத்தில் நம்பும் மதம், நம்பா மதமென இருவேறு நெறிகளில் மாந்தர் மெய்யியற் புரிதலைக் கொண்டுள்ளார். இவ்விரண்டில் எது சரி, எது சரியில்லை என்ற வாதம் நமக்கு முகன்மையில்லை. அருளிச் செயல்களுக்கான விளக்கங்களை நம்பும் மதம் நம்மைப் படைத்தவரிற் தேடுகிறது. நம்பாமதம் அறிவுபூருவமான மீமாந்தத் தூண்டுதலிற் தேடுகிறது இங்குநாம் இக்கேள்விக்குள் போக முற்படவே யில்லை. ”இத்தகை அருளிச் செயல்கள் தமக்கு நடந்ததாய்க் குறிப்பிட்ட இறையன்பர்கள் கூறுகிறாரா?” என்பதே நம் முன்னுள்ள கேள்வியாகும்.

தேவார மூவருக்கு நடந்த அருளிச் செயல்களைக் கேள்வி கேட்காது ஏற்றுக் கொள்ளும் ஆய்வாளர், ”அதே இறையுறுத்தலை மாணிக்க வாசகரும் தன் வாழ்விற் பெற்றிருக்கலாம்” என்றேற்காது வேண்டுமென்றே சொற்சிலம்பம் ஆடுவதும், மாணிக்கவாசகரின் தகையை மறுத்துக் கொண்டிருப்பதும் நமக்கு என்னவகை என்று புரியமாட்டாதிருக்கிறது. அவர் சிலம்பம் ஆடுவதைத் தடுத்து நிறுத்திப் புரியவைக்க ஒரு சில அகச்சான்றுகள் திருவாசகத்திலிருந்தும், நம்பியார் திருவிளையாடலிலிருந்தும் கீழே தரப்படுகின்றன.

திருவாசகப் பதிக ஒழுங்கு:

திருவாசகத்தின் 51 பகுதிகளும் அவை எழுந்த வரலாற்றின் வழி இதுவரை ஒழுங்கு செய்யப் பட்டதாய் நமக்குத் தெரியவில்லை. ”இன்றைக்கு நாம் காணும் ஒழுங்கு எதன் அடிப்படையிற் செய்யப்பட்டது? யார் செய்தார்?” என்ற விவரங்களும் நம்மிடம் இல்லை. ”தேவாரத்திற்கு ஒரு நம்பியாண்டார் நம்பி இருந்ததுபோல் இதையும் யாரோவொருவர் ஒழுங்கு செய்தாரா?” என்று தெரியவில்லை.

மாணிக்க வாசகர் புத்தத் துறவி ஒருவருடன் வாதிட்டு வென்ற சமய நிகழ்வுக்குச் சின்னாட்கள் அப்புறம் யாரோவொரு முதியவராய் இறைவனே வந்து மாணிக்க வாசகரை வேண்டி திருவாசகப் பாடல்களை மீண்டுந் திருப்பிச்சொல்ல வைத்து ஓலையில் எழுதிக் கொண்டு போனாரென்றும். அதுபொழுது தான், “பாவைபாடிய நும் வாயால் ஒரு கோவை பாடுக” என்று கேட்டு, மாணிக்க வாசகரும் அவ்வண்ணமே பாட, திருக்கோவையாரையும் ஒரு சுவடியில் எழுதிக் கொண்டதாகவும், மறுநாள் காலையில் நடவரசன் திரு முன்னர் சிற்றம்பலக் கதவின் படிநிலையில் 2 ஓலைச்சுவடிகள் இருந்தன என்றும், காலையிற் சிற்றம்பலம் திறந்த தீக்கிதர் சுவடிகளைக் கண்டு வியந்து ஊராருக்குச் சொல்லிப் படிக்க முற்பட்ட போது “நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க” என்று சிவபுராணம் தொடங்கி திருவாசகம் முழுக்க ஓர் ஓலைச்சுவடியிலும், ”திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர் தில்லைக் ..........கொடிபோன்று ஒளிர்கின்றதே” என்று தொடங்கி திருக்கோவையார் இன்னோர் ஓலைச்சுவடியிலும் இருந்ததாகவும் இறுதியில், “இது அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து” என முடித்திருந்ததாகவும் ஒரு தொன்மம் உண்டு. ”மாந்தன் சொல்ல இறைவன் கைப்பட எழுதிய நூல்கள் திருவாசகமும், திருக்கோவையாரும்” என்று சிவநெறியிற் பெருமையுடன் சொல்வார்.

இத்தொன்மத்தை ஒருபக்கம் ஒதுக்கிவைத்துப் பார்த்தால், இன்றைக்கு நமக்குக் கிடைத்த திருவாசக ஒழுங்கு, காலவரிசைப் படி இல்லை என்பது விளங்கும். தவிர, இப்போது நமக்குக் கிடைத்துள்ள ஒரு சில பதிகங்கள் (குறிப்பாய்த் திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல், திருக்கழுக்குன்றப் பதிகம், திருப்புலம்பல், எண்ணப் பதிகம், திருப்படையெழுச்சி, பண்டாய நான்மறை, திருப்படையாட்சி, ஆனந்த மாலை, அச்சோப் பதிகம் ஆகியவை) குறைப் பதிகங்களாய் இருப்பதையும் காணமுடிகிறது. திருப்புலம்பல் என்ற பதிகத்தின் முதற்பாட்டு திருவாரூரனையும், இரண்டாம் பாட்டு பெருந் துறையானையும், மூன்றாம் பாட்டு குற்றாலத்தானையும் குறிக்கிறது. எல்லாத் தொகுதிகளும் பத்தின் மடங்குகளாய் இருக்கையில், திருவெண்பா மட்டும் பத்தின் மடங்காயின்றிப் 11 பாடலாய் இருப்பதும் சற்று நெருடலாய் அது இருவேறு பதிகங்களின் கலவையோ என்று எண்ண வைக்கிறது. திரு வாசகத்தின் கடைசியில்வரும் ஒவ்வொரு பதிகத்திலும் ஏதோவோர் ஒழுங்குக் குறைபாடு இருப்பது, ”இத்தனையாண்டுச் சுவடிக்காப்பில் திருவாசகச் சுவடிகளும் செல்லரிக்கப் பட்டனவோ?” என்று நம்மைக் கேள்வி கேட்க வைக்கிறது.

முடிவில் ”இதுபோற் குலைந்து போன ஏடுகளை யாரோவொருவர் தனக்குத் தோன்றியபடி சேர்த்ததால், இது இறைவன் எழுதிச் சேர்த்த ஒழுங்கல்ல” என்றே நாம் முடிவுசெய்கிறோம். இருந்தாலும் இப்பதிகங்களை ஒரு கால ஒழுங்கிற்குள் கொண்டுவர முடியாதா என்ற ஏக்கம் நமக்குள் வரத் தான் செய்கிறது. அப்படி ஓர் ஒழுங்கில் கொண்டு வர முயலும் போது மாணிக்க வாசகரின் மனவளர்ச்சி பற்றிய புரிதலும் நமக்குக் கூடுகிறது

அடுத்து ஒவ்வொரு திருவிளையாடலையும், அதனுள் வரும் கதைப் போக்கையும், வரலாற்றுச் செய்திகளையும், திருவாசகப் பதிக ஒழுங்கையும், நம் உரையாடல்களையும் தொடருவோம்.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Anonymous said...

'மாற்றாடு', First time I understand this word, even though I am using this word from my childhood days..