Saturday, July 30, 2011

இலக்கியம் - இலக்கணம் - 4

”இலக்கு என்ற சொல் எழுத்து, குறியையும், இலக்குதல் என்பது எழுதல், குறித்தலையும் சுட்டும். இலக்கின் இன்னொரு நீட்சியாய் இலகை என்ற சொல் எழுந்து இலேகை>இரேகை என்று வடபுலத்திற் திரிந்து வடமேற்குச் சந்தத்திற் புழங்கும். லகரம் துணைக்கண்டத்தின் கிழக்குப் பக்கம் பெரிதும் பலுக்கப் பட்டதென்றால் மேற்குப் பாகதங்களில் அது ரகரமாகும். தெற்கே இரேகையை மீண்டும் கடன்வாங்கி பொதுவான வரைதலையும் சிறப்பாக கையிற் தெரியும் கோடுகளையும் குறிப்பார்கள்.”

”இரேகையின் இன்னொரு வளர்ச்சியாய் ஒருசில முத்திரைகள் இரேகை என்று சொல்லப் பெறும். இதே போல இலக்ஷணை என்ற சொல் அரச முத்திரைகளைக் குறிக்கும். நல்ல தமிழில் இவற்றை இலகை, இலக்கணை என்றே சொல்லிப் போகலாம். இவைதாம் ஆங்கிலத்தில் logo என்ற சொல்லிற்கு இணையான சொற்கள்.”

”இலக்குதல் என்ற வினை இலக்கிய கோட்டிற்கு நீண்டது போல இலக்கு என்ற சொல் கருவிக்கும் நீண்டது. எழுத்தாணி என்பதை நிகண்டுகளில் ஓலைதீட்டும் படை, கண்டம், ஊசி, இலேகை, எழுதுகோல், தூலிகை (துகிலிகை) என்பார்கள். கண்டம், ஊசி என்பன கூர்மைப் பொருளைக் குறிக்கின்றன. இல் என்ற வேரும் குறி என்ற கூர்மைப் பொருளைக் குறிக்கிறது. பின்னால் இல்>இலக்கு என்ற சொல் எழுது புலத்தில் இருந்து பொதுப்புலத்திற்கு விரியும்.”

”இன்றைக்குத் தென்பாண்டி நாட்டில் சாத்தாரப் பேச்சுவழக்கில் இலக்கு என்ற சொல் பொதுவான குறிப் பொருளைக் குறிக்கிறது. ’இன்னாரை இந்த இலக்கில் வைத்துப் பார்த்தேன்’, ’டேய், மாங்காயைக் கீழே விழுத்தாட்ட வேண்டுமானால் சரியான இலக்குப் பார்த்துக் கல்லெறி’ என்பவை தென்பாண்டிப் பேச்சுவழக்கு.”

ஐந்தாம் நூற்றாண்டுத் திருமந்திரம்

“புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்,
பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்து
இருந்த இலக்கில் இனிது இருந்தாளே”

- திருமந்திரம் ஆதார வாதேயம் இயல் 1172 ஆம் பாடல்

என்று சொல்லும்.

வெறிக்குறுங் கதுப்பின் வெள்ளெயிற்று எயிற்றியர்
செம்மணி கழற்றித் தேன் இலக்கு எறிதர

என்பது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லாடம் 100 ஆவது பாட்டு முதலிரண்டு வரிகள்.(தேன்கூடாகிய இலக்குப் பற்றிச் சொல்லும் வரிகள்.)

“எத்தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற” என்பது தேவாரம் (1,4,10) இலக்கின் நீட்சியாய் இலக்கம் என்ற சொல் குறளில் எழுந்து பெரிய இலக்கைக் குறிக்கும்.

இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையறாக் கொள்ளாதாம் மேல்

திருக்குறள் இடுக்கண் அழியாமை 627

”இலக்கம் என்ற சொல் குறிப்பொருளின் இன்னொரு வளர்ச்சியைக் குறிக்கும். இன்றைக்குச் சொல்லப்படும் digit என்பதற்கு இணையாக பத்தாம் இலக்கம், நூறாம் இலக்கம், ஆயிரமாவது இலக்கம் என்ற சொற்கள் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் எங்களுக்குச் சொல்லித் தரப் பட்டன. அதாவது எண்குறியீடு என்ற பொருளில் இது ஆளப்பட்டது. [first digit, 2nd digit, 3rd digit என்று சொல்லிக் கொடுக்கப் படவில்லை.]”

”இலக்குமி என்ற பெயர் மணிமேகலையில் முற்பிறவிப் பெயராய் வரும்.”

”இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்
பகுதி விகுதி பகுத்திடை நின்றதை
வினைப்பெயர் அல்பெயர்க்கு இடைநிலை எனலே”

- நன்னூல் பதவியல் நூற்பா 141

”என்பது நன்னூல். இதன் உருவாக்கம் பேரரசன் இராசராசன் காலத்ததாய் இருக்கலாம் என்பது ஆய்வாளர் முடிவு. இலக்கியம் இலக்கணம் என்ற இரு சொல்லையும் ஒரே அடியில் இணையாகக் கொடுத்தது இதுதான் முதல் எடுகோடு என்று நினைக்கிறேன்.”

”இலக்கின் இன்னொரு தொடர்ச்சி தான் இலக்கணம் என்ற சொல்லாகும். அண்ணுதல்> அணத்தல் என்பது பொருந்துதல். அண்ணம்> அணம் என்பது பொருந்தும் நிலை. ’முலை மூன்றணந்த சிறுநுதல்’ என்பது கல்லாடம் (13:12) இங்கு குறிகளின் அணத்தை விவரிக்கும் நிலை. அணங்கம் என்ற சொல்லே கூட இலக்கணத்திற்குப் பகரியாய் அகரமுதலிகளிற் சொல்லப் பட்டிருக்கிறது. அதே போல அணங்கியம் என்ற சொல் இலக்கியத்திற்குப் பகரியாய்ச் சொல்லப்படுகிறது.”

”இலக்கணத்தின் பொருள் இயல்பு, குறி (அடையாளம்), அழகு, ஒழுங்கு என்ற பல்வேறு பொருட்பாடுகளாகும்.”

”ஒருவர் பிறக்கும் போது சாதகத்தில் 12 கட்டங்களில் சந்திரன் இருந்த இடத்தைத் தொடக்க அடையாளமாக்கி இலக்கணம் சொல்லுவார்கள். இது வடமொழிப் பலுக்கில் lagnam என்றாகும் இதை ஒருவரும் lakshanam என்று சொல்ல மாட்டார்கள். எப்பேர்ப் பட்டவர் ஒலிப்பிலும் அப்படி நான் கேட்டதில்லை. lakshanam என்ற வடசொல்லோ, தமிழ்ப் பேச்சுவழக்கில் இயல்பு, அழகு, ஒழுங்கு என்ற பொருள்களைக் குறிக்கவே பயன்படும்.

இராமணின் தம்பி இலக்ஷ்மணன் இப்படிப் பொருள் வரும்படி அழைக்கப்படுவான். (எல்லா இலக்ஷணங்களும் பொருந்தியவன். தமிழில் இலக்குவன் என்று சொல்லுவோம்.”

”நல்ல தமிழிற் சொல்லும் போது lagnam, lakshanam என்ற இரண்டுமே இலக்கணம் தான். முதற் பயன்பாட்டில் இலக்கு - இடம் என்ற பொருளிலும், இரண்டாவது பயன்பாட்டில் இயல்பு, அழகு, ஒழுங்கு என்ற பொருளிலும் ஆளப்படும். வடபுல முறையில் இருவேறு ஒலிப்புக்கள் சொல்லப்பெறுவது நம்மை ஓர்ந்து பார்க்க வைக்கிறது. பொதுவாக ஒருசொல்லை வடமொழிக்குட் கடன்பெற்றாற் தான் இப்படி இருவேறு வழக்குகள் நிலைபெறும். தமிழ் வடமொழியில் இருந்து பெற்றதா? வடமொழி தமிழில் இருந்து பெற்றதா?”

”இலக்கணம் என்ற சொல் நன்னூல் 267 ஆம் நூற்பாவில்

இலக்கணம் உடையது இலக்கணப் போலி
மரூஉஎன் றாகும் மூவகை இயல்பும்
இடக்கர் அடக்கல் மங்கலம் குழூஉக் குறி
எனுமுத் தகுதியோடு ஆறாம் வழக்கியல்

என்று பயிலும். இலக்கணத்தின் இன்னொரு உருவமாற்றாய் நன்னூல் விருத்தியில் இலக்கணை என்ற சொல் புழங்கும்.”

இலக்கணம் என்ற சொல் நாலடியாரில்

”முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலுமென்
தீம்பாவை செய்த குறி”
- நாலடியார் 399 ஆம் பாட்டு

என்று வரும். அதே போல ஆசாரக் கோவையில்,

பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்
- ஆசாரக் கோவை 2 ஆம் பாட்டு

என்று இடம்பெறும். மிகவும் முகன்மையான குறிப்பு சிலம்பு கொலைக்களக் காதையில் பாண்டியனின் வீரர்கள் கோவலனைக் குறிக்கும் வகையில் அமைவது. முன்னால் இலக்குவனைச் சொன்னது போல், எல்லா இலக்கணங்களும் பொருந்தியவன் கோவலன். இவன் சிலம்பைத் திருடியிருக்க மாட்டான் என்று அவர்கள் கொல்லனிடம் சொல்லுகிறார்கள்.”

”சிலம்பு காணிய வந்தோர் இவரெனச்
செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம்
பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன்
கொலைப்படும் மகனலன் என்று கூறும்”

- சிலப்பதிகாரம் கொலைக்களக் காதை 16, 159-163

”ஆண்மகனுக்கு உரிய இலக்கணங்களோடு இருக்கிறவன் கோவலன். என்னுடைய வரலாற்று ஆய்வில் சிலம்பு என்பது கி.மு. 75 ஐத் சேர்ந்தது என்று நிறுவியிருக்கிறேன். சிலம்பின் காலம் - 1 என்ற தொடர்

http://valavu.blogspot.com/2010/05/1-2009-presentation.html

தொடங்கி சிலம்பின் காலம் - 12 என்ற முடிப்பு

http://valavu.blogspot.com/2010/05/12.html

என்பதில் முடியும். ஆக இலக்கணம் என்ற சொல் அதற்கு உரிய பொருளில் கி.மு.75 இல் இருந்திருக்கிறது. இதற்கும் முன்னே இலக்கணம் என்ற சொல் கி.மு.7 ஆம் நூற்றாண்டு தொல்காப்பியத்திலேயே இரண்டு இடத்தில் வருகிறது."

”ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய உயர்சொல் கிளவி
இலக்கண மருங்கில் சொல்லாறு அல்ல.”

- தொல்காப்பியம் சொல்லதிகாரம் கிளவியாக்கம் நூற்பா 510

”செய்யுள் மருங்கின் மெய்பெறர் நாடி
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல
வருவ உள எனினும் வந்தவற் றியலான்
திரிபின்றி முடித்தல் தெள்ளியோர் கடனே.”

- தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் நூற்பா 1499.

"தொல்காப்பியத்தைச் சான்றாகக் கூறுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. வையாபுரிப் பிள்ளையை ஆதாரமாய்க் காட்டித் ”தொல்காப்பியம் கி.மு.7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததில்லை, கி.பி.5 ஆம் நூற்றாண்டு” என்று சொல்லி அதை மறுக்க ஒரு சிலர் முயல்வர். [அவர் மறுப்பு, இவர் மறுப்பு என்று பல்வேறு மறுப்புச் சொல்வதெல்லாம் வெறும் தோற்றம் தான். அனுமார் வால் போற் தோன்றும் இந்தக் கூற்றுத் தொடர்பைப் பிடித்தால் முடிவில் வையாபுரிப் பிள்ளையிடம் தான் கொண்டு சேர்க்கும்.] இப்படி முயல்பவர் எவரும் வையாபுரியாரின் அறுதிக் கூற்றை (assertion) மீள்வாசிப்பு செய்ய மாட்டார்கள். வையாபுரியாரியாரின் தன்முனைப்புக் கூற்றே இவர்களுக்கு நிறுவிப்பு ஆகிவிடும்."

"வையாபுரியாரின் கூற்றை மிகத் தெளிவாக புலவர் இளங்குமரன் தன்னுடைய தொல்காப்பியப் பதிப்பில் (தமிழ்மண் வெளியீடு) ஆதாரம் காட்டி மறுத்திருப்பார். நான் மீண்டும் செய்ய வேண்டியதில்லை. எப்பொழுதெல்லாம் சங்க இலக்கியத்திற்கு முன்னே போக நாம் விழைகிறோமோ, அப்பொழுது வையாபுரிப் பிள்ளையைக் கொண்டுவந்து தொல்காப்பியரின் காலத்தைக் கேள்வியெழுப்புவது, சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. (நியூட்டனை மறுத்து ஐன்சுடீனுக்குள் போக பூதியலுக்கு 150/180 ஆண்டு காலம் ஆகிவிட்டது இங்கும் 150/180 ஆண்டுகள் ஆகவேண்டுமோ, என்னவோ? வையாபுரியாரின் தாக்கம் அவ்வளவு இருக்கிறது.)"

"அதே போல 'தொல்காப்பியருக்கு முற்பட்டு பதஞ்சலி இதைக் குறிப்பிட்டார், காத்தியாயனர் அதைக் குறிப்பிட்டார்' என்ற வாக்குவாதங்களும்,உரையாடலும், நிறுவிப்பும் வேறு இடத்திற் செய்யப்பட வேண்டியவை. எனவே இங்கு நான் அதைத் தவிர்க்கிறேன். தொல்காப்பியத்தின் பெரும்பகுதி கி.மு.7 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியது என்றே நான் கொள்கிறேன். அதில் அங்குமிங்கும் இடைச்செருகல்கள் இருக்கின்றன. ஆனால் இவ்விரண்டு நூற்பாக்களும் இடைச்செருகல் என்று யாரும் இதுவரை சொல்லவில்லை. அதே போல 'தொல்காப்பியத்தை ஒருவர் எழுதினாரா? அது பலர் எழுதிய தொகுதியா?' என்ற கேள்விக்குள்ளும் நான் போகவில்லை."

"'இலக்கணம் - இலக்கியம் என்றவை இரட்டைச் சொற்கள்' என்றால், இலக்கியமும் பழங்காலத்தில் இருக்க வேண்டும் என்றே நான் கொள்ளுகிறேன்.இரட்டைப் புலவரில் ஒருவரை விடுத்து இன்னொருவரைப் பார்த்து இருவருடைய இருப்பை மறுக்க முடியுமோ?"

"அப்ப இலக்கியம், இலக்கணம் என்ற இரண்டு சொற்களுக்கும் குறைந்தது 2000 ஆண்டு கால வரலாறு இருந்திருக்க வேண்டும் என்று சொல்றே!”

“ஆமாம் அண்ணாச்சி, இருந்திருக்க முடியும் என்று சொல்கிறேன். அதுதான் சொன்னேனுங்களே! சிலவற்றை ஏரணம் மூலம் ஓர்ந்து பார்த்துத் தான் சொல்ல முடியும். அவற்றின் இருப்பை நேரடியாகக் காட்டுவது கடினமான செயல். இலக்கணம் உறுதியாக் இருந்திருக்கிறது. இலக்கியமும் இருந்திருக்க முடியும்.”

“சரி தம்பி, எனக்கு நேரமாச்சு. நான் கிளம்புறேன். இன்னொரு சமயம் வேறெ தலைப்புலே உரையாடலைத் தொடரலாம்.”

அன்புடன்,
இராம.கி.

No comments: