Saturday, July 30, 2011

இலக்கியம் - இலக்கணம் - 2

”என்ன தம்பி! இல்லுகிற சொற்கள் கூடுகின்றனவே? முடிவில் இலக்கிய இலக்கணம் வந்து விடுவாயா? இலக்கிய இலக்கணத்தை மறுக்க வேண்டுமென்றால் நீ காட்டுகிற சொற்கள் அத்தனையும் சேர்ந்து ஒரு மரபையே மறுக்க வேண்டுமாக்கும். அது கொஞ்சம் கடினம் தான்.”

”ஆமாம் அண்ணாச்சி, துளைத்தலிற் தொடங்கி பொருள் வளர்ச்சி ஏற்பட்டு ஒவ்வொரு சொல்லாக எழுந்த வரலாறு இருக்கிறதே அது மரம் போல. சும்மா இலக்கிய இலக்கணத்தை மட்டும் வெட்டிச் சாய்த்துவிட்டுப் போய்விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். கிடையாது ஒவ்வொரு இலையும், தளிரும், கொப்பும், கம்பும், கிளையும், சினையும், மரமும், வேரும் என்று உய்யும் ஒருங்கிய முழுமை (organic whole), ஆணிவேர் வரைக்கும் இருக்கிறது. மறுப்பதென்றால் இத்தனை சொற்களையும் மறுக்க வேண்டும். பொறுத்துப் பாருங்கள் அண்ணாச்சி!”

”சரி! பொறுமையாகப் போவோம். இகுதல் பற்றிச் சொன்னாய்”

”இகுதல் = மேலிருந்து கீழ் வருதல், இகுதலின் நீட்சியாய் ஈதல் எழும். இல்லாதவருக்குக் கொடுக்கக் கை இறங்குகிறது. ஈதலின் தொழிற்பெயர் ஈகை. வாயில் இகுந்துவரும் வாய்நீர் நாட்டுப் புறங்களில் ஈத்தா/ஈத்தை எனப்படும். பிள்ளை பெறுவதும் இகுதற் செயலே. கருப்பை வாயிலிருந்து பிள்ளை இறங்குகிறதல்லவா? ஒவ்வொரு பிள்ளையிறக்கமும் (=பிறப்பும்), நாட்டுப்புறங்களில் ஈத்து எனப்படுகிறது. "அவள் இவனை ஈன்றாள். இது எத்தனையாவது ஈத்து?". பிறப்பென்பது பிள்ளையின் பார்வையில், ஈத்தென்பது தாயின் பார்வையில், சொல்லப்படுவது. ஈனியல் என்ற சொல்லால் இன்றைக்கு genetics - யைக் குறிக்கிறோமே? ஆங்கிலம் போன்ற மொழிகளில் சொல்லப்பெறும் நிலத்திணை yield - களும் தமிழில் ஈத்தெனப்படுவதை அகரமுதலிகள் வாயிலாய் அறிந்து கொள்ளலாம்.”

”தம்பி, நீ சொல்லச் சொல்ல எனக்கு வியப்பு கூடிக் கொண்டே போகிறது.”

”இகுந்தது (=தாழ்ந்தது) ஈந்தது என்றும் வடிவங்கொள்ளும். இனி, இறக்கமான இடத்தைக் குறிக்க, ஈந்து>ஈந்தம் என்ற பெயரைத் தமிழில் உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், இக்கால அகரமுதலிகளில் அது பதியப் படவில்லை. இருந்த இடத்தைக் குறிக்கும் ”இருத்தம்” தமிழ் அகரமுதலிகளில் உள்ள போது, ஈத்தம் பதியப்படாதது நமக்கு வியப்பாகவே இருக்கிறது.”

”தம்பி, கிழக்கு என்ற சொல் பள்ளமான இடத்தைச் சுட்டுவதாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன்.”

”உண்மை. மனையடி சாற்றத்தில் மனை நிலத்தின் அமைப்பு விளக்குகையில், இருப்பதிலேயே உயரமாய் தென்மேற்கு மூலையும், அதற்கு அடுத்த உயரத்தில் வடமேற்கு, தென்கிழக்கு மூலைகளும், இருப்பதிலேயே பள்ளமாய் வடகிழக்கு ஈசான மூலையும் சொல்லப் பெறும். ஈத்து என்ற சொல், கிழக்கைக் குறித்தால் தான், ஈத்தானம்>ஈதானம்>ஈசானம் என்ற சொல் ஆகப் பள்ளமான வடகிழக்கைக் குறிக்க முடியும். [இது பற்றி மேலும் ஆய வேண்டும்; என்னால் உறுதியாக இப்பொழுது சொல்ல இயலவில்லை.] [தமிழ் அகரமுதலிகளில் இல்லாது, அதே பொழுது இருப்பவற்றில் இருந்து தருக்கம் வழியாக உன்னிக்கக்கூடிய சொற்கள் பலவும் உண்டு. ஈந்தம்/ஈத்தம் அப்படிப்பட்டது.]”

”தம்பி, நம்மூர் வடமொழி அன்பர்கள் இதையெலாம் ஏற்க மாட்டார்கள். ஈசானத்துட் புகுந்து அவர் அடிமடியை நீ குலைக்கிறாய்.”

”அவர்கள் பார்வை ஏற்கும்படியில்லை. அதனால் மறுக்கிறேன். மனையடி சாற்றமே தென்னிந்தியப் புவிக்கிறுவத்தை (geography) அடியாய்க் கொண்டது என்று நெடுநாள் ஐயமுண்டு. சரி, சொல்லவந்ததைச் சொல்லுகிறேன். ஈந்தம், ஈத்தம் ஆகியவை தமிழிற் பதியப் படாதிருக்க, வடபுலப் பலுக்கில் உருவான ஈந்தம்>ஐந்தம்> ஐந்த்ரம்> ஐந்திரம் என்பது மட்டும் தமிழ் அகரமுதலிகளில் பதிவாகி இருக்கிறது. எப்படிச் சிவம், சைவம் என வடபுலத் திரிவுற்றதோ, அதைப்போல, ஈந்தம், ஐந்தமெனத் திரிந்து வழக்கம்போல் ரகரம் நுழைந்து ஐந்திரத் தோற்றம் காட்டுகிறது. [மேலை மொழிகளில் east என்னும் சொல்லும் ஈத்து எனும் சொல்லுக்கு இணையாவது கண்டு என்னால் வியக்காது இருக்க முடியவில்லை. பொதுவாய் "த்து" என்னும் மெய்ம்மொழி மயக்கம் மேலைமொழிகளில் "st" என்றே உருப்பெறுகிறது. இதற்குக் கணக்கற்ற எடுத்துக்காட்டுகளுண்டு.]”

”என்ன தம்பி! இப்படியே இல்லி இழித்துக் கொண்டு போகிறாயே?”

”அது மட்டுமில்லை அண்ணாச்சி. பள்ளம் தொடர்புடைய வேறுசில பயன்பாடுகளும் உண்டு. காட்டாக, இலந்தது இலந்தி; அது இலஞ்சியாகிக் குளம் என்ற பொருளைக் குறிக்கும். இலஞ்சி மன்றம் என்று சிலம்பிலும், மணிமேகலையிலும் வருகிறது அல்லவா? இலந்தது இன்னும் வேறு வகையில் திரிந்து இலவந்தி>இலவந்திகை என்றாகி வெந்நீர் நிறைத்துக் குளிப்பதற்காகச் செயற்கையாய்ச் செய்யப் பட்ட குளத்தையும் குறிக்கும். "இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்" என்று ஒரு பாண்டிய மன்னனை புறநானூறு பேசும்”

”இதை ஏற்றுக் கொள்ளுவார்கள் என்று நினைக்கிறேன்.”

”பள்ளம் பற்றி வேறு விதம் பார்ப்போமா? எழுதுபொருளில் துளைத்த பின், எழுத்தாணியை தரதர என்று ’இழுக்கிறோமே’, அதுவும் இல்லிற் தொடங்கியது தான். இல்லுதல்>இல்லுத்தல்>இழுத்தல். இழுத்ததின் மூலம் கிடை மட்டத்தில் பள்ளம் பறித்துக் கொண்டே போகிறோம். அது கோடாக மாறுகிறது. இலுக்கிக் கோடு போவது நம் தமிழில் மட்டுமல்லாது இந்திய மொழிகள் பலவற்றிலும் பரவியிருக்கிறது. இழுத்தது எழுத்தாணியோடு மட்டும் நிற்கவில்லை. அதன் பொருள் விதப்புப் பயன்பாட்டிலிருந்து பொதுமைப் பயன்பாட்டிற்கு மேலும் விரியும்.”

”இல்லிலிருந்து இலுக்கா? சரிதான் எனக்குக் குலுக்கிருச்சு.”

”இலுக்குதலின் எதுகையாய் கிலுக்குதல்>கிலுக்கி என்ற சொல் எழும். இது, குத்திக் கிழிக்கும் கருவிக்கு சிவகங்கை மாவட்டச் சொல். ஒன்பான் இரவுகளுக்கு அடுத்த வெற்றித் திருநாளில் (விசய தசமியில்) கிலுக்கி/கிளுக்கி தூக்கிக் கொண்டு ஊர்ப்பிள்ளைகள் எல்லாம் வாழை மரத்திற் குத்தப் போகும். அண்ணாச்சி! மொழிச் சொற்களை நாட்டுப்புறப் பண்பாடோடு புரிந்து கொள்ள வேண்டும்.”

”உனக்கு இதே வேலை தம்பி, சுற்றிவளைச்சு சிவகங்கை மாவட்டத்தைக் கொணர்ந்து உங்கூரைச் சொல்லலைன்னா உனக்கு இருப்புக் கொள்ளாது”

”அப்படி இல்லையண்ணாச்சி! ஒன்பான் இராக்கள் தமிழருக்கு வேண்டப்பட்ட திருவிழா. அதில் இப்படியொரு பகுதியும் இருக்கென்று சொன்னேன். ஊர்ப்பாசம் இருக்கக் கூடாதா? ஒரேயடியாய்த் தூக்கி வைத்தாத்தான் அண்ணாச்சி தப்பு!"

"இலுக்குதல்/ இலுவுதல் எல்லாம் இப்படி எழுந்த வினைகள் தான். இலுவிக் கொண்டே போனது வடக்கே (இ)லிபி என்று ஆயிற்று. மகதத்திலே -அதாங்க பீகார், வங்காளத்துலே வகரம் பகரமாயிரும். அசோகர் காலத்துலே எழுத்து பரவியது தெற்கே தமிழகமும் வடக்கே மகதமும் தான். இந்திக்காரன் இன்றைக்கும் லிக் என்றுதான் இலுக்குவதைச் சொல்கிறான். துளையிற் தொடங்கிய இந்த வேர், சொற்பிறப்பு, இந்திய மொழிகளிற் தமிழிற் தான் இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் எழுத்து அசோகன் பெருமியில் இருந்து தான் முதலில் வந்ததாம். நான் என்ன சொல்ல?"

"அதான் சொல்லிட்டியே? அப்புறம் என்ன?"

"இந்திய எழுத்தின் தொடக்கம் கல்வெட்டு. அதன் தொடக்கம் நம்மூரிற்தான். 'அசோகர் கல்லை வெட்டினார்; மற்றோர் அதைப்பார்த்துப் பின்னால் எழுதினார்' என்று கீறல் விழுந்தாற் போற் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மகதத்தைப் பெரிதாய்ப் பேசுகிறவர்கள், அதே காலத் தமிழ்நாட்டைப் பெரிதாய்ச் சொல்வது இல்லை. அவன் பெரிய ஆள் தான். அதற்காக நாங்கள் ஒன்றும் சின்ன ஆள் இல்லை. வரலாற்றை வடக்கிருந்தே பார்த்துப் பழகிவிட்டோம், அண்ணாச்சி. ஒருமுறைதான் தெற்கிருந்து தொடங்கிப் பாருங்களேன். புதிய பார்வை கிடைக்கும்.

"புதிய பார்வையெல்லாம் யாருக்கு வேண்டும் தம்பி? 'அசோகர் சத்திரம் கட்டினார், சாவடி கட்டினார். சாலையின் இருமருங்கும் மரங்கள் நட்டார்' - என்று எழுதினால் வரலாற்றுத் தேர்வில் 2 மதிப்பெண்கள். இப்படிப் படித்தே வரலாற்றைத் தொலைத்தெறிந்தோம். இதைப் போய் நீ மாற்றி எழுதுங்கன்னு சொல்றே. தொலைச்சுருவாங்க தம்பி. தெற்கேயிருந்து தொடங்குவதாவது? தலைகீழாய்க் குட்டிக் கரணம் அடிச்சாலும் அது நடக்காது."

"அண்ணாச்சி! இப்படியே எத்தனை நாளைக்கு அடங்கிப் போறது? இத்தனைக்கும் இந்தியாவிலேயே ஆகப் பழம் பானைக் கீற்றுகள் தெற்கே கொடுமணலிலும், கொற்கையிலும் தான் அகழாய்விற் கிடைத்திருக்கின்றன. சிந்து சமவெளியை விட்டுப் பார்த்தால் ஆகப் பழைய எழுத்து எங்கே கிடைத்திருக்கிறது? வடக்கிலா? தெற்கிலா? தெற்கிற் கிடைத்தது அசோகர் கல்வெட்டிற்கும் முந்திய காலம் என்று இற்றை ஆய்வு மிகத் தெளிவாகச் சொல்லுகிறது.. அதே போல இலங்கை அநுராதபுரத்திலும் ஆகப் பழைய கல்வெட்டு பாகதத்திற் கிடைத்திருக்கிறது. எல்லாமே அசோகருக்கு முந்தியது அண்ணாச்சி. அப்புறம் என்ன அசோகன் பெருமி (பிராமி)? மண்ணாங்கட்டி. வரலாற்றை இனிமேலாவது மாற்றி எழுதுங்கள். செயினர் தமிழருக்கு எழுத்துக் கற்றுத் தரவில்லை. செயினர் இங்கிருந்து கற்றுப் போனார். இதையும் ஆய்வு மூலம் அறுதியிட்டுச் சொல்ல முடியும்."

"தம்பி, நீ என்ன கத்தினாலும் ஏற்கனவே நிலைச்சுப் போன நாட்டாமைக் காரர்கள் இதை ஏற்க மாட்டார்கள்."

"இன்றைக்கு ஏற்கவில்லையென்றால் எதிர்காலத்தில் ஏற்பார்கள் அண்ணாச்சி. ”உண்மையே வெல்லும்” என்று இந்திய அரசு வாசகம் சொல்லுகிறது. தமிழி / பெருமி எழுத்து தெற்கே பிறந்து வடக்கே போனது. இன்றும் ஒருசிலர் இதை மறுத்துக் கொண்டேயிருக்கலாம். ஏனென்றால் அவர்களுக்கு ஐராவதத்தோடு கல்வெட்டுப் படிப்பெல்லாம் முடிந்தது. ”அதுக்கு அப்புறம் ஒன்றுமே நடக்கவில்லை. ஐராவதம் சொன்னது தான் அவர்களுக்கு வேத வாக்கு”. ஆனால் திருச்சிப் பாலத்துக்கும் கீழே காவிரிநீர் புதிதாய் ஓடிக் கொண்டேயிருக்கிறது. கல்வெட்டியல், தொல்லியல் என்பது தொடர்ச்சியான படிப்பு. அகழாய்வாளார்கள் இல்லிக் கொண்டேயிருப்பார்கள். புதிய பழஞ் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. மீளாய்வு தொடர்கிறது."

"அப்ப, இழுத்தது எழுத்துன்னு சொல்றே!"

"உறுதியாச் சொல்கிறேன் அண்ணாச்சி. கல், களிமண், மரம், தோல், ஓலை எல்லாத்திலும் இழுத்தது எழுத்து. கீறியது கீற்று. (inscription என்று ஆங்கிலத்திற் சொல்கிறார்களே, அந்த scribe, graph என்பதும் கிறுவுவது தான். கீற்றுத் தான்.) வரைந்தது வரி."

அன்புடன்,
இராம.கி.

1 comment:

RaguC said...

அய்யா எத்தனை நுட்பமாய் ஆராய்கிறீர்.தமிழ்ன்னா மனப்பாடச் செய்யுள் என்று தான் நினைத்திருந்தேன்.அது வாழ்வியல் மொழி அப்படின்னு ஆராய,ஆராயத்தான் தெரியுது.