www.tamilnet.com என்ற தமிழீழ வலைத்தளத்தில் Know the Etymology என்ற தொடர் வந்து கொண்டிருக்கிறது. அந்தத் தொடரில் இதுவரை 174 இடங்களின் சொற்பிறப்பு இனங்காட்டப் பெற்றிருக்கிறது. ஒரு முறையும் தவறவிடாது இத் தொடரை நான் படிப்பது வழக்கம். இதை யார் எழுதுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் பெரிதும் பாராட்ட வேண்டிய பணி அதுவாகும். ஈழம், இலங்கை ஆகியவற்றின் பல்வேறு இடப்பெயர்களை (சிலபோது மாலத்தீவுப் பெயர்களையும் கூட) ஆழமாக ஆய்வு செய்து சொற்பிறப்புக் காட்டும் இந்தப் பணி எண்ணியெண்ணி வியக்க வேண்டியவொன்றாகும். தமிழீழமும், அது இருக்கும் தீவும் எந்த அளவிற்குத் தமிழரோடு தொடர்புற்றது என்று நிறுவுவதற்கு இதுபோன்ற ஆய்வுகள் பயன்படுகின்றன. ”தமிழருக்கு அத்தீவில் இடமில்லை” என்று சிங்களவன் அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் தொல்லியலோடு சொற்பிறப்பியல் ஆய்வும் சேர்ந்து வரலாற்றை நிறுவும் வேலையைச் செய்யவேண்டியிருக்கிறது. [இடைச்சங்க, முதற்சங்க காலப் பழந்தமிழகத்தில் இலங்கைத்தீவு (அன்று அது தீவல்ல, நாக நாடு என்று பெயர்பெற்ற தீவக்குறை.) நம்மோடு தொடர்புற்றே இருந்திருக்கும் என்ற என் கருதுகோள் மேலும் மேலும் உறுதிப் படுகிறது.]
[இப்படி ஒரு தொடரை இற்றை இந்திய ஊர்ப்பெயர்களுக்கு யாரும் செய்து நான் பார்த்ததில்லை. பாவாணருக்கும், இளங்குமரனாருக்கும், இரா.மதிவாணருக்கும், ப.அருளியாருக்கும் பின்னால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் (குறிப்பாக பேரா. கு,அரசேந்திரன்) ஒருசிலர் மட்டுமே தமிழ்நாட்டில் உருப்படியான சொற்பிறப்பு ஆய்வு செய்கிறார்கள். சொன்னால் பலருக்கும் சினம் ஏற்படுகிறது. தமிழை வைத்து மேடையிலும், அரசியலிலும் பிழைப்போர் தொகை இன்று கூடிப்போய், தமிழுக்குப் பணி செய்வோர் தொகை குறைந்தே வருகிறது. நாட்பட நிலைத்து நிற்கும் அளவில், தமிழுக்கு பணி செய்வோர் தொகை அருகிப் போய், ஆ, ஊ என்று அலைபாயும் கூட்டம் மிகுத்து வருகிறது. (தமிழ் செம்மொழியாகிவிட்டது என்று கூத்தாடுவதே பெருமையாகி அதன் தொடர்ச்சியையும், எதிர்கால நிலைப்பையும் பற்றி நம்மில் யார் கவலைப்படுகிறோம், சொல்லுங்கள்?) ஏதொன்றையும் ஆழ்ந்து படிப்பதும், அறிவியல் வரிதியாய் ஆய்வு செய்வதும், எல்லை மொழிகளை அறிந்து, அவற்றைத் தமிழோடு பிணைத்து புதுப் பரிமானங்களைத் தமிழுக்குக் கொணர்வதும், தமிழியலோடு இன்னொரு நுட்பியலைப் பிணைத்து புதுப் பார்வை காட்டுவதும், ஆங்காங்கே முடிவு தெரியாத தமிழ்வரலாற்றுக் கேள்விகளுக்குத் தீர்வு சொல்வதும், அரிதாய் இருக்கிறது.]
அண்மையில் ”கூட்டம் பொக்குண, கற்பொக்குணை” என்ற பெயர்களின் சொற்பிறப்பை http://www.tamilnet.com/art.html?catid=98&artid=33209 என்ற 174 ஆம் பதிவில் ஆய்வு செய்திருந்தார்கள். அந்த வலைத்தளம் போய் பழைய பதிவுகளையும் படித்துப் பார்த்தால், நான் சொல்லுவதன் அருமை புரியும்.
இனிப் பொக்கணிக்கு வருகிறேன்.
புல்>புள்>பொள் என்ற வேர் தமிழில் துளைப்பொருளைக் குறிக்கும். பொக்கம், பொக்கணம், பொக்கல், பொக்கு, பொக்குள், பொக்குளம், பொக்கை, பொகுட்டு, பொங்கல், பொச்சம், பொச்சு, பொச்சை, பொட்டல், பொட்டி, பொட்டு, பொட்டை, பொத்தல், பொதும்பு, பொந்தர், பொந்து, பொய், பொய்கை, பொல்/பொல்லு, பொலுகு, பொழி, பொள்ளல், பொள்ளை, பொளிதல், பொற்றுதல், பொன்றுதல் என்று பல்வேறு சொற்களை இந்த வேர் உருவாக்கும். கூட்டுச் சொற்களையும், இரண்டாம் நிலைச் சொற்களையும், அவற்றின் கூட்டுக்களையும் சேர்த்தால் குறைந்தது 1000 சொற்களாவது தேறும். இப்படி எழும் எல்லாச் சொற்களின் உள்ளே துளைப்பொருள் அடியில் நின்று மற்ற வழிப்பொருள்களைக் குறிக்கும். [நான் ஒவ்வொரு சொல்லின் பொருளையும் கூறி விளக்கிக் கொண்டிருந்தால் கட்டுரை நீளும் என்று தவிர்க்கிறேன்.]
இவற்றில் ஒன்றுதான் பொக்கணி என்ற சொல்லாகும். அது நிலக்குழிவில் நிறைந்திருக்கும் நீர்நிலையைக் குறிக்கும். இதன் இன்னொரு திரிவாய் சிவகங்கை மாவட்டத்தில் இன்றும் புழங்கும் போகணி என்ற சொல் நீரை மொள்ளும் குவளையைக் குறிக்கும். (போகணி என்பது தமிழக அகரமுதலிகளுள் பதிவு செய்யப்படாத ஒரு சொல். பதிவு செய்யப்படாத வட்டாரச் சொற்கள் ஓரிலக்கமாவது தமிழிற் தேறும். அவற்றையெல்லாம் பதிவு செய்ய யார் முன்வருகிறார்கள், சொல்லுங்கள்? வேரிற் பழுத்த பலாவாய் இவையெல்லாம் பறிப்பாரற்றுத் தொங்குகின்றன.)
பொத்தகம்> புத்தகம்> புஸ்தகம் என்ற சொல், மீத்திருத்தம் பெற்று சங்கதத்துள் புகுந்து மீண்டும் தமிழுக்குத் திரிவாய் நுழைந்து பொத்தகம் என்ற தமிழ்ச்சொல்லையே போக்கடித்தது போல, பொக்கணி என்ற சொல் பொக்கணி> புக்கணி> புஷ்கணி> புஷ்க்ரணி என்றாகும். நாம் மீண்டும் அதைத் தமிழ்முறையிற் பலுக்கிக் கொண்டு புட்கரணி என்று சொல்லுவோம். பெருமாள் கோவில் திருக்குளங்கள் இன்று புஷ்கரணி என்றே அழைக்கப் படுகின்றன. அதன்வழி பொக்குணி என்ற தமிழ்ச்சொல் போயே போயிற்று. புஷ்கரணி என்று சொன்னாற்றான் பெருமாள் அருள் கிடைக்கும் என்று கூட மூடநம்பிக்கை எழுந்து விட்டது. [அதோடு மட்டுமல்லாது தாமரைக் குளம் என்று புதுப்பொருள் சொல்லி பூஷ் கரணி என்றெல்லாம் பொருந்தப் புகல்வார் இன்னொரு பக்கம் நம்மை ஏமாற்றவுஞ் செய்கிறார்கள். இது சங்கதச் சொற்பிறப்பு அகரமுதலியான மோனியர் வில்லியம்சிலும் தவறாகப் பதிவு பெற்றிருக்கிறது.]
பொக்கணி, பொக்குணை போன்ற தமிழ்ச்சொற்களுக்குச் சிங்கள இணை காட்டி Know the Etymology ஆசிரியர் தன் கட்டுரையில் இச்சொற்களின் தமிழ்மையை நிறுவுவார். சிங்களத்துள் பல பாலி மொழிச் சொற்கள் புதைந்துள்ளன. பாலி என்பது பாகதத்தின் இன்னொரு வார்ப்பு. பாகதம் சங்கதத்திற்கு முன்னது; வேத மொழிக்குப் பின்னது. பல சங்கதச் சொற்களுக்கு தமிழிணை காண வேண்டுமானால் பாகதம், பாலி அறிவது பயன்தரும். ஒருவகையில் பார்த்தால், தமிழிற் சொல்லாய்வு செய்யும் போது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் அறிவது எவ்வளவு துணை செய்யுமோ, அதே போலச் சிங்களம் அறிவதும் நமக்குப் பயன்தரும்.
அன்புடன்,
இராம.கி.
6 comments:
ஊர்களின் வேர் காணும் அத்தொடரை தமிழ்நுளை இணையத்தளத்தில் நானும் ஆர்வத்துடன் படித்து வருகிறேன். பொக்கணி என்ற சொல் ஈழத்தில் தொப்புள் எனப் பொருள்படும் வகையில் பயனாகின்றது. அதுவும் மீன் போன்றவற்றின் பொக்கணி எனப்படுவது ஈழத்துச் சிறார்களால் விரும்பி உண்ணப் படுவதாகும். பொக்கணியையும், சினையையும் கறியில் சுழியோடித் தேடி சிறார்களின் உணாத்தட்டில் இடுவார்கள் அம்மாக்கள். அது ஒரு காலம்!
பிரதாப்
ஆண்குறி பெண்குறிக்கு தமிழில் சொல்லே கிடையாது என்பதாக ஜெயமோகன் போன்றோர் சங்கத்தமிழை ஆ(ரா)ய்ந்து கண்டதாகச் சொல்கிறார்களே. உண்மையிலேயே அதற்குரிய தமிழ்சொற்கள் இருந்து வழக்கொழிந்துவிட்டதா ?
அன்புள்ள ராமகி,
பொக்கணி என்ற சொல்லை தெரிவித்ததற்கு நன்றி.
எங்கள் பழைய தென்னாற்காடு இப்போதைய விழுப்புரம் மாவட்டத்து சிற்றூர்களில் 50 ஆண்டுகளுக்கு முன் வீட்டில் போகணி என்ற சொல்லும் திரிபாக போவணி (போவணியில் தண்ணி கொண்டு வா என்றும்) பழக்கத்தில் பயனில் போகணி இருந்தது என் நினைவுக்கு வருகிறது.
தமிழ்ச் சொற்களை காக்க வேண்டிய கடமை தமிழ் மக்களுக்கு தேவையான கடமை.
இறைவன் அருளை வேண்டி வணங்கி முடிந்ததை செய்வோம். கெடுதிக்குத் துணை போகாமல் இருப்பதே பெரும் தொண்டாகும். கெடுதிசெய்யாமல் தவிர்ப்பவர்க்கு நன்றி கூறும் நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்.
வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
திசம்பர் 28, 2010.
’பொக்கணி’ என்பது நீர்நிலை என்னும் பொருளில் இலக்கியத்தில் எடுத்தாளப்பட்டுள்ளதா ?
தேவ்
நன்று
சிவகங்கை மாவட்டத்தில் பொச்சு என்ற வழக்குச்சொல் பெண் குறியை குறிக்கும் சொல்லாக பயன்படுத்த பட்டதை நான் அறிவேன் . அது கெட்ட வார்த்தையாக புழங்கப்பட்டது. இதை மேலேயும் குழி என்னும் பொருளில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment