Monday, January 03, 2011

கண்ணெழுத்தும் வட்டெழுத்தும், கந்தெழுத்தும் - 1

”அறிவின் எதிரி அறியாமையல்ல; அது அறிந்ததாய் எண்ணிக் கொள்ளும் மயக்கம்
- விண்ணியல் அறிஞர் ச்*டீவன் ஆக்கிங்

”தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும்” என்ற தொடரை முடித்து, அடுத்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது ”கிரந்தவெழுத்து எப்படி எழுந்தது? அதன் பின்புலம் என்ன? இற்றைத் தமிழெழுத்து வடிவம் எப்பொழுது தோன்றியது? சங்க காலத் தமிழெழுத்தின் பெயரென்ன? அது நம் இலக்கியங்களிற் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? வட்டெழுத்து என்பது என்ன? அது எப்பொழுது புழக்கத்திலிருந்தது? ஏன் மறைந்தது? புள்ளியிட்ட தமிழியெழுத்து, வட்டெழுத்து, கிரந்தவெழுத்து என்ற மூவகை எழுத்துக்களுக்கும் இடையிருந்த ஊடாட்டு என்ன? - என்ற கேள்விகளுக்கு விடை சொல்லாது போனோமோ?” என்று தோன்றியது.

அதேபொழுது, ஒருங்குறி நுட்பியற் குழுவிற்கு முன், வந்த கிரந்த முன்மொழிவுகளை ஆழ்ந்து பயிலாது, வெறும் அரைகுறைப் புரிதலில், பொதுக்கைப் போக்கில் "கிரந்தம் x கிரந்த எதிர்ப்பு" என்று எளிமைப் படுத்தி, “தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால்” என அடம்பிடித்து வறளி பேசுவோர் ஒருசிலர் இருக்கிறாரே? அவருக்கு இது போன்ற எழுத்துப் பின்புலங்களைச் சொல்வது தேவையா? இவருக்குச் சொல்லி என்ன பயன் விளையும்?” - என்று ஓரோவழி சலித்தும் போனேன். தமிழ்க்காப்பில் தாம் மட்டுமே முன்னிற்பதாய் முழங்கும் ஒரு சிலர், ”ஆ., இராம.கி கிரந்தத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்” என்று முற்றிலும் அவதூறாய்க் கைதூக்கும் நேரத்தில், ”இக் கேள்விகளுக்கு விடையிறுத்து என்னாகப் போகிறது?” என்று தயங்கியும் நின்றேன். அப்புறம், இச் சலிப்பையும், தயக்கத்தையும் தூக்கியெறிந்து, சொல்ல வந்ததைச் சொல்லத்தான் வேண்டுமென முடிவு செய்தேன். புரியாத நாலு பேர் அறியாது தொல்லை கொடுப்பதாலேயே நமக்குத் தெரிந்ததைச் சொல்லாதிருக்க இயலுமோ?

இற்றைத் தொல்லியல் வளர்ச்சியில் சிந்து சமவெளி எழுத்துக்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியப் பொறிப்புகளிலேயே மிகவுந் தொன்மை வாய்ந்தவை, அசோகர் கல்வெட்டிற்கும் முந்தியவை, தமிழகத்திற்றான் கிடைக்கின்றனவாம். கொங்கு மண்டலக் கொடுமணலிற் கிடைத்த பானைப் பொறிப்புகள் கி.மு.4/5 ஆம் நூற்றாண்டுகளுக்குக் கொண்டு செல்லுகின்றனவாம். அவை அசோகருக்கும் முன்னால் குறைந்தது 100 ஆண்டுப் பழமை வாய்ந்தனவாம். இந்தக் கண்டுபிடிப்புகளின் முகன்மை இன்று இந்திய வரலாற்றையே மாற்றிப் போட்டிருக்கிறது. அந்தக் காலத்து தி,,நா. சுப்பிரமணியன், இந்தக் காலத்து கே.வி.இரமேஷ், கா.இராஜன் போன்றோர் தமிழி எழுத்துக்களில் இருந்தே அசோகனின் பெருமி எழுத்துக்கள் எழுந்திருக்கலாம் என்ற ஏரணங் காட்டி மாற்றுச் சிந்தனைக்கு நம்மை நகர்த்துவார்கள். அவர்களின் ஏரணம் இன்னும் ஆய்ந்து உறுதி செய்யப்படவேண்டியவொன்றாகும்.

[ஆனால், தொல்லியலையும், கல்வெட்டு எழுத்துக்களையும், தூக்கிப் போட்டு மிதிக்க முனைவோருக்கும், செஞ்சீனக் ”கலாச்சாரப் புரட்சி” போல் இடதுசாரி எக்கு வாதத்திற் (left wing extremism) தோய்ந்து, பழைய ஆவணங்களைத் தூக்கிக் கடாசுவோருக்கும், ”வரலாறா, வீசை என்ன விலை?” என்பவருக்கும் இந்த எழுத்துத் தோற்றங்கள் விளங்காது.]

இனிக் கட்டுரைக்கு வருவோம். என்னுடைய ”தொல்காப்பியமும் குறியேற்றங்களும்” என்ற தொடரின் 5-ஆம் பகுதியில் (http://valavu.blogspot.com/2006/11/5.html) பழம் எழுத்துமுறைகள் பற்றி ஒருசில பத்திகளிற் சொல்லியிருப்பேன். மேலும் அத்தொடரின் 6-ஆம் பகுதியில் (http://valavu.blogspot.com/2006/11/6.html) ஒரு படத்தொகுதியால் விளக்கியிருப்பேன். அவற்றைச் சில திருத்தங்களுடன் இங்கு மீண்டுந் தருகிறேன்.
-----------------------------------

கிடைத்துள்ள தமிழிப் பொறிப்புகளில் ஆறு வகைத் தமிழியை இதுவரை இனங் கண்டிருக்கிறார்கள். ஆறுவிதமான எழுத்து முறைகள் பின் வருமாறு:

1. முதல் முறை என்பது உயிர்மெய்களுக்கு இடையில் ஒரு சில இடங்களில் உயிரையும் மெய்யையும் தனித்து எழுதிக் காட்டிய முறை. இப்படி இருக்கும் கல்வெட்டுக்களில் ஒரே எழுத்து மெய்யாகவும், உயிர்மெய் அகரமாகவும், உயிர்மெய் ஆகாரமாகவும் தோற்றமளிக்கலாம். இடம்பார்த்து அவற்றில் மெய் எது, உயிர்மெய் அகரமெது, உயிர்மெய் ஆகாரமெது என்று கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. இந்த முறையில் மெய், உயிர்மெய் அகரம், உயிர்மெய் ஆகாரம் ஆகியவற்றின் இடையே வேற்றுமை காண்பது சரவலாய் இருக்கிறது. [மேலே வரும் படத்தொகுதியில் முதற் படம் முதல்முறையைக் குறிக்கிறது. சாத்தன் என்ற சொல்லைப் பாருங்கள்.]

2. இரண்டாம் முறையில் (இரண்டாவது படம்) மெய்யெழுத்து புள்ளியில்லாமல் இருக்கும். ஆனால், அகரத்தையும், ஆகாரத்தையும், ஒரே தோற்றம் போல், மெய்யெழுத்தை ஒட்டினாற்
போல் ஒரு சிறு கோடு போட்டுக் காட்டுவார்கள். இந்த முறையில் "கல்" என்பதற்கும் "கால்" என்பதற்கும் வேற்றுமை காணமுடியாது. அதாவது ககரத்திற்கும், காகாரத்திற்கும் வேறுபாடு தெரியாது; அவற்றை இடம் பார்த்துப் பொருள் புரிந்து கொள்ள வேண்டும். [இங்கே சாத்தன் என்ற சொல்லிற் சா-வும் த-வும் படத்தில் ஒரே மாதிரி இருப்பதைப் பாருங்கள்.]

3. மூன்றாம் முறையில் (மூன்றாம் படம்) மெய்யெழுத்திற்கும், அகரமேறிய மெய்க்கும் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியாகக் காட்டும். [படத்தில் த் என்பதற்கும், த என்பதற்கும் வேறுபாடு இல்லாததைக் கவனியுங்கள்.] மெய்யெழுத்தின் மேல் ஒட்டினாற் போல் ஒரு சிறு கோடு கொண்டு தோற்றம் காட்டுவது உயிர்மெய் ஆகாரத்திற்கு மட்டுமே அமையும். தமிழ் போன்ற மொழியில் இப்படி மெய்யெழுத்துக்கும், அகரமேறிய மெய்க்கும் ஒரே எழுத்து அமைந்தது அவ்வளவாகக் குழப்பம் தராது, ஏனென்றால் மெய்ம்மயக்கம் என்ற ஒழுங்கு இந்த மொழியில் இருந்தது. மாணிக்கம் என்ற சொல்லில் வரும் க் என்னும் மெய்யெழுத்துக்குப் புள்ளி இல்லாமல் இருக்கிறதென்று வையுங்கள். இருந்தாலும் நாம் படித்துவிடுவோம். ஏன்? க்க என்ற கூட்டில் முதலில் வருவது மெய் என்றும் அடுத்து வருவது அகரமேறிய மெய் என்றும் நமக்குப் புரிந்துவிடும். இனித் தஙகம் என்ற சொல்லில் வரும் ககரம் அகரமேறிய ககரம் என்றும், அதற்கு முன்னால் வருவது ஙகர மெய் என்றும் புரியும். இதே முறையில் க்க, ங்க, ட்க, ண்க, ம்க, ய்க, ர்க, ல்க, ழ்க, ள்க, ற்க, ன்க என்ற மெய்க்கூட்டுக்களில் பின்னால் வருவது உயிர்மெய் தான், மெய்யல்ல என்பது புரிந்துவிடும்.

இனிச் சக என்று தோற்றம் காட்டுவதில், தமிழ்மொழி என்ற காரணத்தால், அதை ச்க என்று படித்துவிட முடியாது. சக் என்பது சரியா என்றால் அடுத்து மூன்றாவதாய் வரும் உயிர்மெய்
க என இருந்தால் சரி, வேறு உயிர்மெய்யாக இருந்தால் சரியல்ல. இதே போல, மூன்றாம் எழுத்து க என இருந்தால், கக், சக், டக், ணக், தக், நம், பக், மக், யக், ரக், லக், வக், ழக், ளக், றக், னக் என்ற எழுத்துக் கூட்டுக்கள் சரியாகும். மொத்தத்தில் தமிழ்ச்சொற்கள் மட்டுமே பயிலும் போது, வடபுலத்துக் கடன்சொற்கள் புழங்காத போது, மெய்யெழுத்தும் அகரமேறிய மெய்யெழுத்தும் ஒரே போல் தோற்றம் அளித்தாலும், அவ்வளவு சரவல் தமிழுக்குத் தராது. ஆனால் கடன் சொற்கள், குறிப்பாகப் பாகதச் சொற்கள், கூடிவரும் போது, தமிழ் வரிகளைப் படிப்பது கடினமாகிக் கொண்டே வந்தது.

இதுவரை பார்த்த மூன்று முறைகளும் பாகதம் கலந்த தமிழை எழுதுவதிற் குழப்பமான முறைகள். இனி மூன்று தீர்வுகளைப் பார்ப்போம்.

4. பட்டிப்போரலு முறை. (நாலாவது படம்) இந்த முறையில் மெய்யெழுத்து புள்ளியில்லாமல் இருக்கும். அடுத்து, மெய்யெழுத்தின் மேல் ஒட்டினாற் போல் ஒரு சிறு கோடு கொண்டு உயிர்மெய் அகரத்தைக் குறிப்பார்கள்; உயிர்மெய் ஆகாரத்தில், மேலே சொன்ன சிறுகோடு, செங்குத்தாக கீழ்நோக்கி வளைந்து, இன்னொரு சிறுகோட்டையும் ஒட்டிக் காட்டும். இந்த முறையில் மெய்யெழுத்து, அகரமேறிய மெய், ஆகாரம் ஏறிய மெய் ஆகிய மூன்றிற்கும் உரிய வேறுபாடு இருக்கும். கல்வெட்டில் ஒரு குழப்பம் இருக்காது; [படத்தில் சா-வும், த் -ம் த- வும் வெவ்வேறாகக் காட்சியளிப்பதைப் பாருங்கள்.] ஆனாலும் இந்த முறை ஏனோ பரவாமல் போய்விட்டது.

5. வடபுலத்துப் பெருமி முறை: (ஐந்தாவது படம்) இந்த முறையில் இரண்டு தகரங்கள் ஒன்றின் கீழ் ஒன்றாய் அமைந்து மேலுள்ள தகரம் மெய்யையும், கீழுள்ள தகரம் உயிர்மெய் அகரத்தையும் குறிப்பதைப் பார்க்கலாம். சா என்ற எழுத்திற் சிறுகோடு வந்து தனித்து நிற்கும்.

6. தொல்காப்பிய எழுத்துமுறை: (ஆறாவது படம்) இந்த நிலையில் தான் ஆறாவது முறை வந்தது. இந்த முறை வந்த போது பாகதச் சொற்கள் தமிழுக்குள் ஓரளவு வந்து கொண்டிருந்திருக்க வேண்டும். இது போன்று பாகதம் நுழைவதால் வரும் குழப்பத்தைத் தவிர்க்க, இந்த ஆறாவது முறையில் மெய்யெழுத்தைக் குறிக்கப் புள்ளியிட்டார்கள்; புள்ளியில்லாத, வேறு குறியீடுகள் தொட்டிருக்காத, எழுத்து அகரமேறிய மெய் என்று ஆயிற்று, அதே போல, மேலே சிறு கோடு கொண்ட எழுத்து ஆகாரம் ஏறிய மெய்யாகக் கொள்ளப் பட்டது. இந்த ஆறாவது முறையைத் தான் தமிழ்ப் புலவோர் அறிமுகப் படுத்தினார்கள். அதைத் தொல்காப்பியர் ஆவணப் படுத்தினார். ஆவணப் படுத்திய முறையை மக்கள் ஏற்பதற்கு நெடுங்காலம் ஆயிற்றுப் போலும்.

மேலே சொன்ன ஆறு முறைகளும் ஒன்றின் பின் ஒன்றாய் எழுந்தவை அல்ல. அவற்றில் ஒருசில சமகாலத்தில் ஒன்றோடு ஒன்று இழைந்து இருந்தன. முடிவில் கொஞ்சம் கொஞ்சமாய் மற்றவை குறைந்து சங்க கால இறுதியில் தான் ஆறாம் முறை நிலைத்தது. இதில் முதல்வகை கி.மு. 1000 யை ஓட்டியது என்றும், இரண்டாவது வகை அதற்கு ஓரிரு நூற்றாண்டுகள் கழிந்தது என்றும். மூன்றாவது நான்காவது, ஐந்தாவது, ஆறாவது வகைகள் கி.மு.400, 500 களைச் சேர்ந்தது என்றும், நெடுங்காலம் புழக்கத்தில் இருந்தன என்றும் தெரிகிறது. கடைசி மூன்றும் தொல்லியல் (archeology) ஆய்வுகளின் படி பார்த்தால் சம காலத்திலேயே இருந்திருக்கலாம் என்றும், தமிழை முன்வைத்துப் பேசும் ஆய்வாளர்கள் சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில் தொல்காப்பிய காலம் (கி.மு.700-500) என்பது ஆறாம் வகைத் தமிழியின் காலத்தோடு ஒத்து வருகிறது.
--------------------------------------
மேலே சொன்ன ஆறு முறைகளைப் புரியும் வகையில், ஒருசில கல்வெட்டுக்களைப் படமாகப் பார்ப்போம். முதலிற் நாம் காண்பது மாங்குளம் கல்வெட்டாகும்.

இது பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தது. இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனா, அன்றி வேறு நெடுஞ்செழியனா என்று சொல்ல முடியவில்லை. [ஆனால் உறுதியாகச் சிலம்புக் காலத்து நெடுஞ்செழியனில்லை.] இக்கல்வெட்டின் காலம் கி.மு.2 ஆம் நூற்றாண்டு என்று ஐராவதம் மகாதேவன் கணிப்பார். நடன. காசிநாதன் போன்றோர் இதைக் குறைந்தது கி.மு. 3/4 ஆம் நூற்றாண்டு என்று சொல்லுவர். மேலுள்ள படத்தின் இன்றைய எழுத்துப் பெயர்ப்பு கீழ்வருவது போல் அமையும்.

கணிய் நந்த அஸிரிய்இ
குவ்அன்கே த’ம்ம்ம்
இத்தஅ நெடுஞ்சழியன்
பணஅன் கடல்அன் வழுத்திய்
கொட்டூபித்தஅ பளிஇய்

இந்தக் குறிபெயர்ப்பில், த’ம்மம் என்ற சொல்லில் வரும் த’ எனும் எழுத்து, பெருமியில் வரும் மூன்றாவது த -வைக் குறிக்கும். (கவனித்துப் பாருங்கள், இத்தனை பழைய கல்வெட்டிலேயே பெருமியும், தமிழியும் உடன் கலந்திருக்கின்றன. இந்தியத் துணைக்கண்டத்தில் பாகதமும் தமிழும் அருகருகே புழங்கின போலும். ஸகரம் முதல்வரியில் வருவது கூட இங்கு ஓர்ந்து பார்க்க வேண்டியதே.) இக் கல்வெட்டில் உயிர்மெய் அகரம் சிலபோது மெய்+ உயிர் என்று பிரித்து அடுத்தடுத்து வருவதையும், உயிர்மெய் நெடிலானது, உயிர்மெய் குறில் + உயிர் என்று பிரித்து வந்திருப்பதையுங் காணலாம். இந்தக் கல்வெட்டு மேலே சொன்ன மூன்று தீர்வுகளும் வாராத காலத்தில் எழுந்த முதல் எழுத்து முறையைச் சேர்ந்தது. இது போன்ற கல்வெட்டுக்கள் ஆகப் பழங் காலத்தன என்று கல்வெட்டாய்வாளர் சொல்கிறார்கள்.

அடுத்து இரண்டாவது எழுத்து முறைக்கான சான்றாய்ப் புகழூர்க் கல்வெட்டைச் சொல்லலாம். இது இரும்பொறைச் சேரர் மரபை ஒட்டியது.

இதை மிகவும் பிற்காலத்ததாய் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிற்கு ஐராவதம் மகாதேவன் சொல்லுவார். முன்னாற் சொன்ன ஆசீவகப் பின்புலத்தாலும், மற்ற வரலாற்றுக் காரணங்களாலும் இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பின்பகுதியாய் இருக்கவேண்டும். இதில் உயிர்மெய் அகரமும், ஆகாரமும் இடம் கருதிப் புரிந்து கொள்ளவேண்டிய குழப்பத்தில் இருக்கிறது.

மூன்றாம் எழுத்து முறைக்கான சான்றாய்ச் சம்பைக் கல்வெட்டைக் காணலாம். இது அதியன் நெடுமான் அஞ்சியின் காலத்தது.

இதன் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு என்று ஐராவதம் மகாதேவன் சொல்வார். மற்ற இலக்கியச் சான்றுகளோடு பொருத்திப் பார்த்தால், கல்வெட்டின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகக் கூட அமையலாம். மேலுள்ள படத்தின் இன்றைய எழுத்துப் பெயர்ப்பு கீழ்வருவது போல் அமையும்.

ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி இத்த பளி

இக் கல்வெட்டைக் கூர்ந்து பார்த்தால் உயிர்மெய் எழுத்தை உடைத்து எழுதும் பழக்கம் அதியமான் நெடுமான் அஞ்சி காலத்தில் அருகிவிட்டதை உணர முடியும். ஆனால் அகரத்திற்கும் ஆகாரத்திற்கும் இடையே தெளிவு இல்லாதிருக்கிறது. வாசகத்தை வைத்தே ”எது உயிர்மெய் அகரம், எது உயிர்மெய் ஆகாரம்?” என்று அடையாளங் காண வேண்டியிருக்கிறது.

பட்டிப் போரலுக் கல்வெட்டு பாகதத்தில் இருக்கும் காரணத்தால், அப்படத்தை இங்கு சேர்க்கவில்லை. அதேபோல, அடுக்குக் கட்டு முறை புழங்கிய அசோகரின் பாகதக் கல்வெட்டையும் இங்கு தரவில்லை. பல்வேறு இணையத் தளங்களிலும் இவற்றைத் தேடிக் காணமுடியும். மூன்றாவது படமாய் ஆனைமலைக் கல்வெட்டின் வாசகத்தைக் காணலாம்.

இவகுன்றதூ உறையுள் பதந்தான் ஏரி ஆரிதன்
அத்துவாயி அரட்ட காயிபன்

இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.2 ஆம் நூற்றாண்டு என்றே ஐராவதம் மகாதேவன் கூறுவார். ”அத்துவாயி” என்ற சொல்லை ”அற்றுவாயி” என்ற செந்தமிழ்ச் சொல்லின் பேச்சுவடிவாய்க் கொண்டால், அரட்ட காயிபன் என்ற பெயர் செயினத் துறவியைக் குறிக்காது ஓர் ஆசீவகத் துறவியைக் குறித்ததோ என்ற ஐயமெழுகிறது. அப்படி அமையுமானால், இக் கல்வெட்டின் காலம் மீளுறுதி செய்யப்படவேண்டும். கி.பி. 2 ஆம் நூற்றாண்டு என்பது ஆசீவகத்தையொட்டிப் பார்த்தால் மிகவும் பின் தள்ளியதாய்த் தெரிகிறது. இந்தக் கல்வெட்டிற் தான் முதன் முதலில் புள்ளியைக் கண்டதாய் திரு. ஜெபராஜன், கிவ்ட் சிரோமணி ஆகியோர் உறுதி செய்வர். கல்வெட்டுப் படத்தைப் பார்த்தால், ”அரட்ட” என்ற பெயர்ச்சொல்லின் டகர மெய்க்கு மட்டும் புள்ளியிருப்பது தெரியும். அதே பொழுது, கல்வெட்டின் ஊடே புள்ளியிருக்க வேண்டிய எல்லா இடங்களிலும் புள்ளியைக் காணோம் என்பது நம்மை ஓர்ந்து பார்க்கவைக்கிறது. ஒருவேளை புள்ளி பழகுவதும் பழகாமல் இருப்பதுமாய் இக்காலம் இருந்தது போலும்.

புள்ளி பெரிதும் புழங்கியதாய்க் குடுமியான் மலைக் கல்வெட்டைச் சொல்லலாம்.

இதன் வாசகம், “நாழள் கொற்றந்தய் ப[ளி]ய்” என்றமையும். இதிலும் புள்ளி முற்றிலும் புழங்கியதென்று சொல்லமுடியாது. இதன் காலம் கி.பி.3 ஆம் நூற்றாண்டு என்று ஐராவதம் மகாதேவன் சொல்லுவார்.

புள்ளி முற்றிலும் புழங்கியதாய்த் தேடும் போது ஐராவதத்தின் பரிந்துரைப்படி அது நாலாம் நூற்றாண்டு ஆகிவிடுகிறது. (ஐராவதம் மகாதேவனின் காலக் கணிப்பு பெரும்பாலும் கட்டுப் பெட்டியானது.) அப்படிப் புழங்கிய நேகனூர்ப்பட்டிக் கல்வெட்டின் படத்தைக் கீழே காணலாம்.

அதன் வாசகம்,

பெரும்பொகழ்
சேக்கந்தி தாயியரு
சேக்கந்தண்ணி சே
யிவித்த பள்ளி

என்றமையும். புள்ளிவைத்தெழுதும் பழக்கம் பிற்காலத்தில், 4/5 ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்துக்களிலும் புழங்கியிருக்கிறது.

இந்தக் கல்வெட்டுக்களையெல்லாம் ஒருசேர வைத்துப் பார்க்கும் போது, முன்னாலிருந்த மெய் / அகர உயிர்மெய்ச் சிக்கலுக்கு மூன்று தீர்வுகள் வரலாற்றில் எழுந்தது சரியாக விளங்கும்.

அவற்றில் பட்டிப்போரலு முறை ஏனோ இந்தியத் துணைக்கண்டத்தில் முன்னெடுக்கப் படாமலே போனது. அது நடந்திருந்தால் இந்தியாவெங்கணும் ஒரேவகையெழுத்து ஒருவேளை உருவாகியிருக்கலாம். ஏற்றுக் கொண்ட இருமுறைகளும் எழுத்தொழுங்கில் (orthography) வடபுலம், தென்புலம் என இருவேறாய் ஆகிப்போயின. தென்புலப் புள்ளி முறையின் (dot method) படி, எந்தக் குறுங்கோடும் போடாத எழுத்து அகர உயிர்மெய்யையும், புள்ளி போட்ட எழுத்து மெய்யையும் குறித்தன. வடபுல அடுக்குக் கட்டு முறையின் (stacking method) படி, ஒன்றின் கீழ் இன்னோர் உயிர்மெய்யைப் பொருத்தி மேலது மெய்யாகவும், கீழது உயிர்மெய்யாகவும் கொள்ளப்பட்டது.

வடபுல எழுத்து ஒரு பக்கமும், தென்புல எழுத்து இன்னொரு பக்கமுமாய்ச் சாதவாகனர் (கி.மு.230-கி.பி.220) நாணயங்களில் இருப்பதைப் பார்த்தால் அவர் ஆட்சியில் பாகதமும், தமிழும் அருகருகே ஆட்சி புரிந்திருக்க வேண்டும் என்பதும், 2000 ஆண்டுகளுக்கு முன்னே தமிழின் புழங்கெல்லை ஆந்திரம், கருநாடகம், ஏன் மராட்டியம் வரை கூட மொழிபெயர் தேயத்திற் பரந்திருந்தது என்பது புலப்படும். [சங்கத்தமிழ் இலக்கியத்தில் வரும் ”மொழிபெயர் தேயம்” என்ற சொல்லாட்சியை நாம் சரிவர உணர்ந்தோமில்லை.]

தக்கணத்தின் வடக்கே படித்தானத்தைத் (>ப்ரதிஷ்தான் அதாவது இன்றைய ஔரங்காபாதிற்கு அருகில்) தலைநகராய் நிலைகொண்ட சாதவா கன்னர் அரசு கி.பி. 220 அளவில் முற்றிலுஞ் சிதறியது. (அவ்வரசையும், அதற்குப் பின்வந்த அரசப் புலங்களையும் சரிவரப் புரிந்து கொள்ளாது தமிழர் வரலாற்றை நாம் மீள்கட்டமைக்க முடியாது.) அதன் பின், சாதவா கன்னரின் கீழிருந்த சிற்றரசர், படைத்தலைவர் ஆகியோர், “தடியெடுத்தவர் தண்டல்காரர்” என்ற கூற்றுப்படி, தனித்தனி அரசுகளை உருவாக்கிக் கொண்டார்கள்.

ஆப்ரர் என்பார் தமக்கு முன்னிருந்த சாதவா கன்ன அரசின் வடமேற்கையும் [ஆப்ரர் < ஆ புரர் = ஆவைப் புரந்தவர் என்ற சொல்லின் சங்கதத் திரிவு. இவர் ஆயர் = ஆய்ச்சர் = யாதவர் என்பவராவர், கன்னடத்தில் ஆப்ரா என்ற பெயர் இடைச்சியைக் குறிக்கும். வட இந்தியாவெங்கணும் ஆயர் (=ஆப்ரர், Ahir, Abhra) இன்று யாதவர் என்றே அழைக்கப்படுகிறார்.

தக்கணத்து ஆப்ரர் சிவநெறியையும், விண்ணவ நெறியையும், செயின நெறியையும் மாறி மாறிக் கடைப்பிடித்தனர். தமிழரை 300, 350 ஆண்டுகள் ஆண்ட களப்ரருக்கும் இவருக்கும் உள்ள தொடர்பைக் கீழே சில பத்திகள் கழித்துச் சுருக்கமாய்ப் பார்ப்போம்.], இக்குவாகு (>இக்ஷ்வாகு) என்பார் அதே அரசின் வடகிழக்கு ஆந்திரப் பகுதியையும், சேதி மரபினர் சாதவா கன்ன அரசின் (கன்னடத்துத்) தென்மேற்கையும், பல்லவர் இராயல சீமையைச் சேர்ந்த தென் கிழக்கையும் பிடித்துக் கொண்டனர்.

இந்த நால்வருள் எழுந்த அரசியற் போட்டிகளின் முடிவில் நிலைத்து எஞ்சியது ஆப்ரரும், பல்லவரும் மட்டுமே. சேதி மரபினர், தனித்து நிற்க இயலாது பின்னால் கருநாடத்தைச் சேர்ந்த கடம்ப மரபினுள் கலந்து போயினர். (காள ஆப்ரரின் வழிமுறையினர்தான் கி.பி. 9, 10 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த காளச்சூரி மரபினர்.) இக்குவாகு மரபினர் இராயல சீமையைச் சேர்ந்த பல்லவருக்கு முன்னால் நீடித்து நிற்க முடியவில்லை. மிகவும் தென்பாலி முகத்திருந்த தமிழகமும் சாதவா கன்னருக்குப் பின்வந்த அரசியற் சிக்கலிற் தடுமாறியது.

இந்த நாலு குடியினரும் தமிழி(ப் புள்ளி) எழுத்து முறையைக் கடைப்பிடிக்கவில்லை. பெருமி (அடுக்குக் கட்டெழுத்து) முறையையே அவர்கள் பின்பற்றி வந்தனர். அவர்கள் பகுதியிற்றான் பெருமி கொஞ்சங் கொஞ்சமாய்த் திரிந்து கிரந்த எழுத்தாய் மாறிற்று என்று ஊகிக்க வேண்டியிருக்கிறது. [சாதவா கன்னருக்கு வடக்கே பெருமி திரிந்து நாகரி போன்ற எழுத்துக்களைத் தோற்றுவித்தது.] கிரந்தம் என்றால் பலரும் பல்லவரையே முகன்மையாய் நினைக்கிறார்கள். அது தவறு. பல்லவர் கிரந்தத்தைத் தோற்றுவித்தவரில்லை. அதைப் பெரிதும் புழங்கியவராகும்.

கிரந்தத்தின் தோற்றம் சாதவா கன்னருக்குப் பின் வந்த ஆப்ரர், இக்குவாகு, சேதி, பல்லவர் என்ற நால்வர் தொடர்புற்ற, பழைய சாதவா கன்னருக்குப் பின்வந்த, அரசியற் புலத்தைச் சாரும். இன்னார் தான் கிரந்தம் தோற்றுவித்தவர் என்று எவரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. கல்வெட்டு, செப்பேடு போன்ற ஆவண ஆய்வுகள் ஆழமானால் ஒருவேளை விடை கிடைக்கலாம்.

இற்றை இந்தியாவில் புள்ளி முறையைக் கையாளும் ஒரே எழுத்து தமிழெழுத்து மட்டுமே. மற்ற எழுத்துக்கள் எல்லாம் அடுக்குக் கட்டு முறையையே பயன்படுத்துகின்றன. அடுக்குக் கட்டு முறையில் இடம்வலமாய் எழுத்துக்களை வரிசைப் படுத்துவதோடு, எங்கு மெய்யை ஒலிக்கவேண்டுமோ அங்கு எழுத்துக்களை மேலிருந்து கீழாய் அடுக்கிக் கட்டி உணர்த்துவர். அதாவது வடபுல ஆவணங்கள் (தமிழல்லாத தென்புல ஆவணங்களும் இதிற் சேர்ந்தவையே) இரு பரிமானப் பரப்புக் (two dimensional extent) கொண்டவை. 2 மெய்களுக்கு மேல், சொல்லிற் சேர்ந்துவராத தமிழ் ஆவணம் மட்டும் அப்படிப்பட்டதல்ல. புள்ளி பழகுவதால் தமிழாவணம் இடம்வலமாய் ஒரு பரிமானப் பரப்பிற் (single dimensional extent) மட்டுமே எழுதப்படுகிறது. எந்தத் தமிழாவணமும் இழுனை எழுத்தொழுங்கு (linear orthography) கொண்டதாகவேயிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

4 comments:

கோவி.கண்ணன் said...

// இனித் தஙகம் என்ற சொல்லில் வரும் ககரம் அகரமேறிய ககரம் என்றும், அதற்கு முன்னால் வருவது ஙகர மெய் என்றும் புரியும்.//

சென்ற மாதத்தில் இது குறித்து ஒரு இடுகை எழுதி இருந்தேன். பரவலாக பலரும் படித்தார்கள்.

K. Sethu | கா. சேது said...

அன்பிற்குரிய இராம.கி. ஐயா,

//இனிச் சக என்று தோற்றம் காட்டுவதில், தமிழ்மொழி என்ற காரணத்தால், அதை ச்க என்று படித்துவிட முடியாது. சக் என்பது சரியா என்றால் அடுத்து மூன்றாவதாய் வரும் உயிர்மெய்
க என இருந்தால் சரி, வேறு உயிர்மெய்யாக இருந்தால் சரியல்ல. இதே போல, மூன்றாம் எழுத்து க என இருந்தால், கக், சக், டக், ணக், தக், நம், பக், மக், யக், ரக், லக், வக், ழக், ளக், றக், னக் என்ற எழுத்துக் கூட்டுக்கள் சரியாகும்.//

ஓர் உடனிலை மெய்ம்மயக்கத்தில் மெய்யின் முன் அம் மெய்யின் அகரம் ஏறிய உயிர்மெய் மட்டுமல்லாமல் அதே மெய்யின் ஏனைய உயிர்மெய்களில் ஒன்று கூட வரலாம்தானே.?

காட்டுகள்: தமக்கை, மக்கு, விளக்கு....

எனவே தாங்கள் "மூன்றாம் எழுத்து க என இருந்தால்" எனக் குறிப்பிட்டவிடத்தில் "மூன்றாம் எழுத்து ககரத்தின் ஓர் உயிர்மெய்யெழுத்தாக இருந்தால்" எனக் குறிப்பிட வேண்டும் எனக் கருதுகிறேன்.

தாங்கள் விளக்கியதை நான் சரியாகப் புரிந்திருக்காவிடின் சுட்டிக்காட்டும்படி வேண்டிக் கொள்கிறேன்.

பக்தி, சக்தி போன்ற சொற்களில் இலக்கண மரபுகளில்லா மெய்மயக்கமான க் முன் தகர உயிர்மெய் காணப்படுவதிலிருந்து அவை தமிழ் சொற்கள் அல்ல மாறாக சங்கதத்திலிருந்து கொணரப்பட்டவை என நாம் கொள்ளலாமா?

கா. சேது

Anonymous said...

அருமையான இடுகைகள். கண்ணெழுத்து விளக்கம் அருமை. ஒரு சிறிய இடுகையையும் இடும் முன்னர் தாங்கள் செய்திருக்கும் பல நாள் ஆய்வுகள், புரிதல்கள்.., உழைப்பு.. ஒரு சிறிய கருத்தைக் கூட அம்பலத்தில் வைக்கையில் கூர்ங்கவனத்துடன் அதைப்பற்றிய பின்புல உள்ளுருமங்கள் சேகரித்துத் தெளிவுறுத்தும் பாங்கு வலையில் எழுதும் பலருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டியது.
சேதியர் பற்றிய செய்தி எனக்குப் புதிது. வனவதிக் கடம்பருடன் கலந்து போன அவரைப் பற்றி மேலுமறிய ஆர்வமாக உள்ளது.

பிரதாப்

Raju said...

>குன்னிப் போன எழுத்துக்கள், கூனிப் போய், குணகிப் போய் குணங்கிய தோற்றம் காட்டியதால் குணக்கு>கணக்கு என்ற பொருளும் எழுத்திற்குச் சரியென்று கொள்ளப் பெற்றது.

இராம்.கி ஐயா

கள் என்ற பன்மை சொல்லின் பிறப்பாக கணக்கு எனும் சொல் பிறந்து இருக்கணும். சங்கத்தமிழில் கணக்கு என்பது தொகை எனும் பொருள்தான். தமிழ் நெடுங்கணக்கு, மேல் கணக்கு கீழ்கணக்கு என்பன தொகைகள்தானே?.

கள் எனு சொல்லில் இருந்து சீட்டுக்கட்டு, வைக்கோல் கற்றை, நூல் கண்டு, மான் கணம், பூ கண்ணி என பல தொகுதி சொற்கள் பிறந்தன காண்க,

கணிதம் எனும் சொல் கணக்கு ஆச்சு என்று சொல்வோருக்கு இது நல்ல மறுப்பாகும்.