"தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும்" என்ற என் இருபகுதிக் கட்டுரைக்கு வந்த பின்னூட்டில் மலேசியக் கணிஞர் நண்பர் முத்து நெடுமாறன்,
: "Even though they have mixed the scripts, they have kept the individual scripts' distinct orthographic identities. Period." என்று கூறி இருக்கிறீர்கள். இதை விளக்கும் ஆவணங்கள் (sample documents) ஏதாவது கிடைக்குமா? JPGஇல் இருந்தாலும் தாழ்வில்லை
என்று கேட்டிருந்தார். அவருக்கு விடை சொல்லும் முகமாக 3 ஆவணப்படங்களைக் கண்ணி(to scan)யெடுத்து கீழே இந்த இடுகையிற் போட்டிருக்கிறேன். இவை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “பல்லவர் செப்பேடுகள் முப்பது” என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்தக் காலப் புரிதலுக்காகச் செப்பேட்டின் மசிப்படியைப் (estampage) படமாக்காது அச்சுப்படியைப் (print copy) படமாக்கியிருக்கிறேன். மசிப்படியைப் பார்த்தாலும் அது அச்சுப்படி போலவே இருப்பதை நுண்ணித்துப் பார்ப்போர் உணரமுடியும்.
முதலாவது கண்ணை (scan - noun), என் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் ஏற்கனவே சொல்லப்பட்ட முதலாம் பரமேச்வர வர்மனின் கூரம் செப்பேடாகும். [முதலாம் பரமேச்வர வர்மன் இரண்டாம் மகேந்திர வர்மனின் மகன். முதலாம் நரசிம்ம வர்மனின் பேரன். இவன் ஆட்சிக்கு வந்த காலம் கி.பி.668-669.]
கூரம் செப்பேடு ஐந்தாம் ஏட்டின் முன்புறத்தில் கிரந்தவொழுங்கோடு (grantha orthography) எழுதப்பட்ட வடமொழிப் பகுதியின் 49 ஆம் வரியில் வடமொழிச் சொற்களுக்கு நடுவில் ”ஊற்றுக் காட்டுக் கொட்ட” என்றும் ”நீர்வெளூர்” என்ற தமிழ்ச் சொற்கள் தமிழ் எழுத்தொழுங்கோடு (Tamil orthography) எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். [படத்தை ஊன்றிக் கவனியுங்கள்.] அதாவது இது கலப்பு மொழி. ஆனால் கிரந்தவெழுத்து கிரந்த அடுக்குமுறையிலும், தமிழ் தமிழெழுத்திற்கான நீரொழுக்கு முறையிலும் எழுதப்படுகின்றன. [திரு. நா. கணேசன் சொல்வது போல் 7 தமிழ்க் குறியீடுகளை கிரந்த முன்மொழிவிற்குள் சேர்த்தால் இந்த மொழியொழுங்குகள் அப்படியே குதறிக் குலைந்து போகும். ]
இதைத்தான் நான் “:Even though they have mixed the scripts, they have kept the individual scripts' distinct orthographic identities” என்று சொல்லியிருக்கிறேன். (வீரமாமுனிவருக்கும் மிக முற்பட்ட) அந்தக் காலத்தியத் தமிழெழுத்தில், ஒற்றைக் கொம்பு நெடிலைக் குறித்தது என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொண்டால் சொல்லப்படும் கோட்டம்/ஊர்கள் “ஊற்றுக்காட்டுக் கோட்டம்”, “நீர்வேளூர்” ஆகியன என்பது புரிபடும்.
இனிக் கிட்டத்தட்ட இருநூற்றி இருபது ஆண்டுகள் தள்ளிக் கடைசியில் வரும் பல்லவத் தனித்த அரசனான அபராஜிதன் காலத்திற்கு (கி.பி.885-903) வருவோம். இது தொடர்பாக இரண்டாம் கண்ணைப் படத்தைக் காண வேண்டுகிறேன்.
இது தமிழெழுத்து விரவிவந்த வடமொழிப் பகுதியாகும். தமிழகத் தொல்லியற் துறை திருத்தணிகைக்கு அடுத்துள்ள வேளஞ்சேரி என்னுமிடத்தில் 1979 இல் கண்ட பல்லவர் செப்பேட்டில் வடமொழிப் பகுதியின் இரண்டாம் ஏட்டில் இரண்டாம் பக்கத்தில் முதல் வரியில் ”சிற்றாற்றூர” என்ற ஊர்ப்பெயர் சகரம் கிரந்தமாகவும், ரகரம் கிரந்தமாகும் “ற்றாற்றூ” என்ற றகரம் விரவிவரும் சொற்பகுதி தமிழ் எழுத்தொழுங்கிலும் வருவதைக் காணலாம். இங்கும் ஒரே சொல்லில் கிரந்தம் கிரந்தவொழுங்கிலும், தமிழ் தமிழெழுத்து முறையிலும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழின் சிறப்பு றகரம் தமிழ்முறையிலேயே எழுதப்பட்டிருப்பதே முற்காலத் தமிழர் தமிழெழுத்து முறையைச் சரியாகக் காத்தார்கள் என்பதற்குக் காட்டாகும்.
இதே போல அதே செப்பேட்டின் மூன்றாம் ஏட்டில் 1, 2 ஆம் வரிகளில் “குன்றவத்தன கோட்டம் தணியல் நாடு என்ற சொற்கள் சுற்றிலும் கிரந்தவெழுத்துக்களுக்கு நடுவில் தமிழெழுத்திலும், 8 ஆம் வரியில் மேலிருஞ்செறு என்று ஊர்ப்பெயர் “மேலிரி” என்ற பகுதி கிரந்தத்திலும் ”ஞ்செறு” என்ற பகுதி தமிழெழுத்திலும் கிரந்தச்செப்பேட்டுப் பகுதியில் வந்திருக்கும். மறுபடியும் கலவை எழுத்துநடை. இதனாலேயே 7 தமிழ்க்குறியீடுகளைக் கிரந்தத்திற் சேர்க்கக் கூடாது என்று கூறுகிறோம்.
மூன்றாவது கண்ணைப் படமாக அதே செப்பேட்டின் நாலாம் ஏடு முதற் பக்கத்துக்கு வருவோம். இது செப்பேட்டின் தமிழ்ப் பகுதியைக் குறிக்கிறது.
இதில் 4 ஆம் வரியில் “நின்றருளின ‘ஸுப்ரஹ்மண்ய’ர்க்கு என்ற சொல்லில் ’ஸுப்ரஹ்மண்ய” என்ற பகுதி கிரந்த முறையிலும், ‘ர்க்கு” என்பது தமிழ் முறையிலும் வருவதைக் கண்டால், [சந்த்ராத்தித்தர் என்ற சொல்லில் “சந்திராதித்த” என்பது கிரந்த முறையிலும், “ர்” என்பது தமிழ் முறையிலும் வருவதைக் கண்டால்,] ”தமிழ் தமிழாக இருந்தது. கிரந்தம் கிரந்தமாய் இருந்தது” என்பது புரியும். திரு. நா. கணேசன் சொல்வது போல் இரண்டையும் முட்டாள் தனமாய்க் கலந்து யாரும் “எழுத்துக் கந்தரகோளம்” பண்ணவில்லை.
நான் எடுத்துக் காட்டிய மூன்று கல்வெட்டுப் படங்கள் சொல்ல வந்த கருத்திற்குத் துணையாகப் போதும் என்று எண்ணுகிறேன். இக் கல்வெட்டுக்களை எல்லாம் ஒழுங்காகக் குறியேற்றம் செய்யவேண்டுமானால்
”தமிழ்-கிரந்தம் என்ற பெருங்கொத்துக் குறியேற்றம் வரவே கூடாது. அதே பொழுது 7 தமிழ்க் குறியீடுகள் சேர்க்காத கிரந்த வட்டம் மட்டும் தனியே SMP இல் குறியேற்றம் பெறுவதிற் தவறில்லை”
என்றே நான் எண்ணுகிறேன்.
மீண்டும் சொல்கிறேன்:
ஆயிரக் கணக்கான தமிழகக் கல்வெட்டுக்கள் இருமொழிக் கல்வெட்டுக்களாகும். அவை ஒழுங்காகக் கணிக்குள் ஏற்றப்பட வேண்டுமானால்
”கிரந்தத்தைத் தனியே வை; தமிழைத் தனியே வை. இரண்டையும் குறியேற்றத்துள் ஒன்றாக்கி உருப்படாமற் செய்யாதே”
என்று தான் அழுத்தமாகக் கூறவேண்டியிருக்கிறது.
அன்புடன்,
இராம.கி.
15 comments:
இந்தத் தொடரில் நீங்கள் எழுதியுள்ள மூன்று கட்டுரைகளும் மிக முக்கியமானவை. நன்றி.
Lot of effort taken to write this three part series. But overall very difficult to understand. (not able to specify where and how)
Funny idea, may be try to write in mix of Tamil and english.
Or Badri try to write in your style what you understand.
Would like to see the original estampages also if it is not too much trouble for you... :) Nice work BTW. Keep it going.
பயனுள்ள தொடர். மிக்க நன்றி.
ஐயா தாங்கள் குறிப்பிடும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட "பல்லவர் செப்பேடுகள் முப்பது" புத்தகம் எங்கே கிடைக்கும் தெரிந்துகொள்ளலாமா?
இராமகி
இந்த 3 தொடர்கட்டுரைகளும், தமிழ்மன்றத்தில் உங்கள் பதிலும் உங்கள் பார்வைகோணத்தை தெளிவாக காட்டுகிறன. உங்கள் விளக்கங்களும், காரணங்களும் வரவேற்கத் தக்கது
http://groups.google.com/group/tamilmanram/msg/2b1d99231fd05ab6?
வன்பாக்கம் விஜயராகவன்
மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்;
நன்றி
தேவ்
அன்பிற்குரிய பத்ரி,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
இராம.கி.
Dear Mr.Sudhar,
Perhaps you find it difficult that I have not wriiten in Manipavala style mixing Tamil and English. Normally I don't write in that style. If you had gone through my blog earlier, you would find it easy to follow my style.
Thank you for coming
iraama.ki.
Dear ThirumaNavaaLan,
In the reference given the estampages are given. If I had scanned those pages, it would have been even more difficult to read. But I vouch that estampages have been reproduced properly by these printed pages.
iraama.ki.
அன்பிற்குரிய அ.இரவிசங்கர்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய திருமணவாளன்,
பல்லவர் செப்பேடுகள் முப்பது - சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பதிப்பாக வந்திருக்கிறது.
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய வன்பாக்கம் விஜயராகவன்,
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
அன்பிற்குரிய தேவராஜன்,
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
அன்புடன்,
இராம.கி.
மிக முக்கியமாக தெளிவான கட்டுரைகள். இதைவிடத் தெளிவாக என்ன கூற வேண்டும் என்று புரியவில்லை. பல சான்றுகளைக் கொடுத்துள்ளீர்கள்.
1) இதைத்தவிர மேலும் குழப்பிய எழுத்துமுறைகள் இல்லவே இல்லையா. இல்லை போகப்போக அதற்கான சான்றுகள் வருமென்று நினைக்கிறீர்களா?
2) நா.கணேசன் கொடுத்த மயிலைப்புத்தகம் மட்டுமே இது போன்ற குழப்ப முறைகளை தாண்டிய எழுத்துமுறையா.
ஏனெனில் ஒரே ஒரு (மிகப்பெரிய) ஆதாரத்தை கொண்டு வந்தால் 75க்கான காரணங்கள் அப்படியே இருந்துவிடுமே?
நான் கேட்ட கேள்விகளுக்கான விடையை அடுத்த கட்டுரைத்தொடரில் காண்கிறேன்.
உங்கள் அரும்பணிக்கு மீண்டும் ஒரு தலைவணங்குகிறேன்.
Post a Comment