Saturday, November 27, 2010

பெருமாள் - தொடர்ச்சி

முதலாம் ஆதித்த சோழன் வரைக்கும் வந்த நாம் அதற்குச் சற்று முன்னும் சேரர் வழி பார்த்தாற் போகமுடியும். முதலாம் ஆதித்த சோழனின் காலம் கி.பி. 871-907. இவனுக்குச் சமகாலத்துச் சேர அரசர் இருவர். ஒருவர் (ஸ்)தாணு இரவி கி.பி. 844-885. இன்னொருவர் (ஸ்)தாணு இரவியின் மகன் இராமவர்மன் கி.பி. 885-917. இராமவர்மனின் மகள் ஆதித்த சோழனின் மகனான முதற் பராந்தகனுக்கு மணம் செய்துவிக்கப் பட்டாள். (ஸ்)தாணு இரவி காலத்தில் சோழருக்கும் சேரருக்கும் இடையே நல்லுறவே இருந்தது. [இராசராசன், இராசேந்திரன் காலத்திற் தான் உறவு பாழ்பட்டது. சேரர் குலம் அழிந்தது. அதன் விளைவே தமிழரோடு தொடர்பறுத்த கேரளம் உருவாகியது. சோழப் பேரரசு என்ற கருத்தீடே கேரளம் என்ற இன்னொரு மாற்றுக் கருத்தீடு ஏற்படக் காரணம் ஆகியது. இல்லாவிட்டாற் முப்பெருந் தமிழகம் என்ற கருத்தீடு நிலைத்திருக்கும்.]

(ஸ்)தாணு இரவியின் பாட்டன் குலசேகர வர்மன் (கி.பி.800-820). பின்னாளில் குலசேகர ஆழ்வார் என்று போற்றப்பட்ட விண்ணவப் பெருந்தகையாவார். இவருக்குத் தான் சேரமான் பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. பல்வேறு சேரர் குடும்பக் கிளைகள் சேரல நாடெங்கணும் குறு அரசுகளை நிருவகித்த காலத்தில் அவர்களையெல்லாம் தம் அதிகாரத்தாலும், உறவாலும், ஒறுத்தலாலும் ஒன்று சேர்த்து ஒரு வலுவான ஒருங்கிணைந்த சேர நாட்டை உருவாக்கிய பெருமை குலசேகரரையே சாரும். இவருடைய தலைநகர் கொடுங்களூர் எனப்படும் மகோதய புரம் (பழைய வஞ்சிக்கு அருகில் இருந்த ஊர்.) எல்லாச் சேரமான்களுக்கும் மேலே பேரசராக [பேரரசர் என்ற பொருளை அப்படியே தரும் சொல் தான் பெரும் ஆள் (big ruler) = பெருமாள்] ஆகி மீண்டும் அவர் நாட்டைக் கட்டியதாகக் கேரளோத்பத்தி என்னும் வரலாற்று நூல் பகரும். இவர் கொல்லியையும், கோழியையும், ஆண்டதாகவும் கொங்கு நாட்டைக் கைப்பற்றியதாகவும், கூடலின் தலைவனாக இருந்ததாகவும் தன் பாசுரங்களில் கூறிக் கொள்கிறார். கோழி என்னும் உறையூரைக் கைப்பற்றியது விசயாலயன் (கி.பி.848-881) தஞ்சாவூரைக் கைப்பற்றியதற்கு முன்னால் இருந்திருக்க வேண்டும். பெரும்பாலும் அழிந்து கொண்டிருந்த பல்லவரிடமிருந்து உறையூரை குலசேகரர் கைப்பற்றியிருக்கலாம். கூடல் என்பது மதுரையைக் குறிக்கும். இவர் காலத்தில் பாண்டியரும் வலுக் குறைந்தே இருந்தனர்.

அப்பேர்ப்பட்ட சேரமான் பெருமாள் தம் அரசு துறந்து விண்ணவ நெறியில் ஆழ்ந்து ஆங்காங்கே விண்ணவக் கோயில்களுக்குச் சென்று இறைவனைப் பற்றித் திருமொழி பாடினார். அதனாற்றான் அவருடைய திருமொழி, விண்ணவ நாலாயிரப் பனுவலில் பெருமாள் திருமொழி (பேரரசர் திருமொழி) என்று சொல்லப்பட்டது போலும். அவருக்கு முன்னால் பெருமாள் என்ற சொல் இருந்ததா என்று இதுவரை தெரியவில்லை. ஆனால் பெருமாள் என்ற பட்டம் ஒருங்கிணைந்த சேரல அரசை உருவாக்கிய குலசேகரருக்கு முற்றும் பொருந்தும்.

சேரமான் பெருமாள் குலசேகரர், தன் மகன் இராசசேகர வர்மனைப் பட்டத்திற்குக் கொண்டுவந்து (கி.பி.820-844) ஆழ்வார் பணியை மேற்கொண்டிருக்க வேண்டும். இருபத்து நாலு ஆண்டுகள் ஆண்ட இராசசேகர சிம்மனோ தானுமே அரசு துறந்து அதே பொழுது தன் தந்தையின் நெறிக்கு மாறாய்ச் சிவநெறியிற் சேர்ந்து பணி செய்திருக்கிறான். [பழஞ்சேரர் சிவநெறியாளரே. செங்குட்டுவன் நிலையைச் சிலம்பில் அறியலாம்.] இராச சேகரனுக்குப் பின் அரசு செய்தவன் தான் மேலே சொன்ன அவன் மகன் (ஸ்)தாணு இரவி (கி.பி.844-885). இராச சேகர வர்மன் தான் பின்னாளில் தேவார மூவரில் கடைசியான சுந்தரமூர்த்தியாருடன் சேர்ந்து கைலாயம் வரை போன சேரமான் பெருமாள் நாயனார். சேரமான் பெருமாள் என்ற பட்டம் தந்தையிடம் இருந்து மகனுக்கு ஒட்டிக் கொண்டது போலும். இருவேறு நெறிகளில் இறைப்பணி செய்து பேர்பெற்ற மன்னர்கள் சேரமான் பெருமாள்கள். பெருமாள் என்ற சொல்லின் மதஞ்சாராப் பொருள் ஆட்சி கருதியே ஏற்பட்டிருக்க வேண்டும்.

(ஸ்)தாணு இரவி சிவநெறியாளனாய் இருந்த போதும் அரசு துறக்கவில்லை. ஆனால் அவர்களின் குலத்திற்குச் சேரமான் பெருமாள் என்ற பட்டம் நிலைத்துப் போனது. குலசேகரருக்குத் தான் முதலில் பெருமாள் என்ற பட்டம் ஏற்பட்டதா? அவருக்குமுன், வேறு யாருக்கும் இருந்ததா? - என்பது ஆய்விற்குரியது. அதே போல கி.பி.800க்கு வந்து சேர்ந்த நாம் ”பெருமாள்” என்ற சொல்லின் வரலாற்றை (குறைந்தது 1210 ஆண்டுகள்) அதற்கு முன்னும் தேடவேண்டும். [ஒருவேளை பல்லவரின், பாண்டியரின், களப்பாளரின் காலத்தில் இருந்ததா என்று தேடவேண்டும்.]

இராம வர்மனின் மகன் கோதை இரவி வர்மன் காலத்தில் (5 தலைமுறைகளில்) முழுக் கேரளமும் சேரமான் பெருமாள் குலத்தினருக்கு அடிபணிசேரர்ந்தது. பழைய சேரரின் விரிவு வந்து
சேர்ந்தது.

அன்புடன்,
இராம.கி.

6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குலசேகர வர்மன் (கி.பி.800-820). பின்னாளில் குலசேகர ஆழ்வார் என்று போற்றப்பட்ட விண்ணவப் பெருந்தகையாவார். இவருக்குத் தான் சேரமான் பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது//

* குலசேகர ஆழ்வார் = குலசேகரப் "பெருமாள்"
* அவர் பாடிய பாசுரம் = "பெருமாள்" திருமொழி...
* அவர் அதிகம் பாடிய இறைவடிவம் = அரசன் = இராமன் = இராமனைப் பெருமாள் என்று குறிப்பதே வைணவக் குழு வழக்கு! அவனை ஒட்டி, அவன் தம்பி இலக்குவன் = இளைய பெருமாள், வேடன் குகன் = குகப் பெருமாள்!

//அவருக்கு முன்னால் பெருமாள் என்ற சொல் இருந்ததா என்று இதுவரை தெரியவில்லை//
//இராச சேகர வர்மன் தான் பின்னாளில் தேவார மூவரில் கடைசியான சுந்தரமூர்த்தியாருடன் சேர்ந்து கைலாயம் வரை போன சேரமான் பெருமாள் நாயனார்//

ஓ...குலசேகராழ்வார், சேரமான் பெருமாள் நாயனாருக்கும் முற்பட்டவரா?

//சேரமான் பெருமாள்//

சேரர்களுக்குப் பெருமாள் என்ற பின்னொட்டு, சோழ அரசர்கள் சிலரை "பெருமாள்" என்று சில கவிஞர்கள் குறித்தது...
இது போல் பாண்டிய மன்னர்களில் யாரேனும் "பெருமாள்" உள்ளார்களா, ஐயா?

ஏன் கேட்கிறேன் என்றால், இடைச் சங்க, கடைச் சங்க காலத்தில் பாண்டியர்களின் ஆளுமை அறிந்ததே! அவர்களைப் "பெருமாள்" என்று உரையாசிரியர்களோ, கவிஞர்களோ யாரேனும் குறித்துள்ளார்களா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அங்கொன்றும், இங்கொன்றுமாக "பெருமாள்" என்ற சொல் சிவபிரானுக்கும், மற்றும் சமண/பெளத்தத்திலும் நூல்களில் மட்டும் குறிப்பிட்டுள்ளது!

ஆனால் அவை எல்லாம் ஏகோபித்த "மக்கள் வழக்கு" அல்ல!
சைவ, சமண, பெளத்த சமயங்களில், இந்தச் சொல்லின் புழக்கம், ஒரு கைப்பிடி
அளவே! அதுவும் இப்போது சுத்தமாகக் கிடையாது!

திருமால்" என்ற ஒரு சொற் புழக்கமே, 100% மாறிப் போய்,
"பெருமாள்" என்றே ஒட்டுமொத்த பொதுமக்களும் வழங்குகிறார்கள்! - இப்படி ஒரு சமூக மாற்றம்/சமூகச் செல்வாக்கு எப்படி ஏற்பட்டது?, அதற்கான காரணிகள் என்ன? என்பது தனித்த ஆய்வாக இருக்கும்-ன்னு நினைக்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நம் சந்தக் கவி அருணகிரியும், "பெருமாளே" என்று பல திருப்புகழ்களை முடித்தது ஒரு உயர்ந்த நோக்கத்துக்காக! நல்லிணக்கதுக்காக! அவர் காலத்தில் (15th CE) "பெருமாள்" என்ற சொல் திருமாலைக் குறிக்க
ஆரம்பித்து விட்டது!

இருந்தாலும், துணிந்து அந்தச் சொல்லைப் புழங்கினார்! ரஹீம் = கருணை மிக்கவன்! ஆனால் நம்மவர்கள் "ரஹீம்" என்று ஈசனையோ, முருகனையோ, பெருமாளையோ புழங்குவார்களா? :)

ஆனால் அருணகிரி "பெருமாளே" என்று துணிந்து புழங்கினார்! வேறு எந்த முருகக் கவியும், அவருக்கு முன்போ-பின்போ, அப்படிப் புழங்கியதில்லை!

அதே போல் வள்ளியின் காலைத் தொட்டவா - பாதம் வருடிய மணவாளா என்றும் அவர்
ஒருவரே பாடுவார்! அருணகிரியின் உள்ளம் வித்தியாசமானது! -
http://iniyathu.blogspot.com/2009/12/blog-post.html

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இதில் இன்னொரு கோணமும் உண்டு!

சங்க இலக்கியம் "முருகன்" என்று மொழிகிறது! அது இன்னி வரைக்கும் "முருகா" என்றே இருக்கிறது!

ஆனால் சங்க இலக்கியம் "பெருமாள்" என்று சொல்லாமல், "திருமால்" என்றே மொழிந்தது! ஆனால் ஏனோ, "திரு" நின்ற அளவிற்கு, "மால்" நிற்கவில்லை! :) ஏதோ ஒரு கால கட்டத்தில் பொது மக்கள் "திருமால்" என்பதை "பெருமாள்" என்றே
அழைக்க விரும்பினர் போலும்!

முருகன் என்ற சொல் நின்ற அளவு, திருமால் என்ற சொல் நிற்கவில்லை! இது என் ஆருயிர் முருகனுக்கே உள்ள பெருமை! :)
ச்ச்சும்மா சொன்னேன்!ஒரு அற்ப சந்தோஷம் தான்! :)

ஆனா, உண்மை என்ன-ன்னா, முருகன் என்ற சொல்லுக்கும் முன்னால், சேயோன் என்று தான்
முருகனும் சுட்டப்படுகிறான்!
தொல்காப்பியரும் மாயோனைச் சொல்லி விட்டுச், சேயோனைச் சொல்கிறார்!

* "சேயோன்" என்ற சொல், "முருகன்" என்று பெரும்பான்மை வழக்காக மாறியது! ஆனால் சங்க காலத்திலேயே மாறி விட்டது போலும்!

* "மாயோன்/திருமால்" என்ற சொல், சங்க காலம் முழுதும் மாறாமல், அப்படியே வழங்கி வந்தது! "பெருமாள்" என்று பின்னர் தான் மாறியது!

ஆக, சங்க காலத்தில், தமிழ் மக்களிடம் அதிகம் மாறாத சொல், "திருமால்" தான்! :)

எது எப்படியோ...மாற்றம் என்பது மானிட தத்துவம்!
பொது மக்கள் புழக்கமே இறுதியானது! உறுதியானது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இராச சேகரனுக்குப் பின் அரசு செய்தவன் தான் மேலே சொன்ன அவன் மகன் (ஸ்)தாணு இரவி (கி.பி.844-885). //

இராம.கி. ஐயா
இன்னும் ஒரே ஒரு கேள்வி :)

கி.பி 844 என்றால், அப்போது "பெருமாள்" என்ற சொல் புழக்கத்தில் வந்து விட்டது என்றல்லவா ஆகிறது!
* இராசசேகர வர்மன் = சேரமான் பெருமாள் நாயனார்!
* அவர் அப்பா குலசேகரன் = குலசேகரப் பெருமாள் (குலசேகராழ்வார்)

இப்படி "பெருமாள்" என்ற சொல் புழக்கத்தில் வந்து விட்டாலும், ஆழ்வார் அதைப் பாடலில் குறிக்கக் காணோமே! தன்னையே குலசேகரப் "பெருமாள்" என்று மற்றவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்றால், தன்னிலும் பெரும்+ஆளான திருமாலை, அவர் "பெருமாள்" என்று எங்கும் குறிக்கக் காணோமே!

ஒரு வேளை மன்னவர்களை மட்டுமே குறித்த கால கட்டமா? இறைவனுக்கு அந்தப் பெயர் இன்னும் புழங்காத கால கட்டமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஐயா

ஆய்வினை தமிழோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், மலையாள அகரமுதலியில் "பெருமாள்" என்று தேடிப் பார்க்கலாம் என்றும் நினைக்கிறேன்! மலையாள நாட்டில் "பெருமாள்" என்று இன்னும் புழங்கப்படுகிறதா?

தெலுங்கில் "பெருமாளு" என்ற பேச்சை நண்பர்கள் வீட்டில் கேட்டுள்ளேன்! ஆனால் அது பிற்காலத்திய புழக்கமாகவே இருக்க வேண்டும்!

தெலுங்கு அகரமுதலியில் இதோ:
పెరుమాళ్లు (p. 0797) [ perumāḷlu ] perumāḷḷu. [Tel.] n. A name for Vishnu, విష్ణువు. "పెన్నదాటితే పెరుమాళ్లసేవ." (prov) పెరుమాకోయిల or పెరుమాళ్లకోయిల perumāḷḷa-kōyila. n. Conjeveram. కాంచీపురము.