Tuesday, November 30, 2010

தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் - 2

கிரந்தம் என்பது ஓர் எழுத்துமுறை, அது தனி மொழியல்ல. முன்பே சொன்னபடி, அது தமிழெழுத்திலிருந்து தான் தொடங்கியது. (இற்றைத் தமிழெழுத்தே கிரந்த எழுத்தில் இருந்து தொடங்கியது என்று சொல்லுவது ஒருசிலரின் தலைகீழ்ப் பாடம். அதன் முறையிலாமையைப் பற்றி நாம் அலசப் போனால் வேறெங்கோ இழுத்துச் செல்லும். எனவே அதைத் தவிர்க்கிறேன்.)

பல்லவர் காலத்திற்றான் சங்கதம் எழுத உதவியாய்க் கிரந்தம் பெரிதும் புழங்கியது. நாகரியில், சித்தத்தில் கிடைக்காத பழங்கால ஆவணங்கள் கூடக் கிரந்தத்திலேயே எழுதப் பெற்றிருக்கின்றன. [அதர்வண வேதமே கிரந்தத்திற் தான் முதலிற் கிடைத்தது என்று சொல்லுவார்கள்.] ஒருவகையிற் பார்த்தால் சங்கத மொழி ஆவணங்களுக்கு நாகரி அளவிற்குக் கிரந்தமும் முகன்மையானதே. இது போக இன்னொரு பயன்பாட்டையும் இங்கு சொல்லவேண்டும். தமிழும் வடமொழியும் கலந்த 50000 க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் ஈரெழுத்துப் பாணியில் மணிப்பவள நடையில் எழுதப்பட்டு வந்திருக்கின்றன. கிரந்தத்தின் இன்றையப் பயன்பாடாக 3 பயன்களைச் சொல்லுகிறார்கள். அதைச் சில பத்திகள் கழித்துக் கீழே பார்ப்போம்.

கணியில் கிரந்த எழுத்துக்களைக் குறியேற்றம் செய்வதையொட்டி அண்மையில் நடந்திருப்பவை இரு வேறு முன்மொழிவுகள். இவற்றில் முதல் முன்மொழிவு ”நீட்டித்த தமிழ்” எனும் தலைப்பில் திரு. ஸ்ரீரமண சர்மா கொடுத்தது. இரண்டாவது முன்மொழிவு கிரந்த எழுத்துக்களைத் தமிழோடு ஒட்டினாற்போல அல்லாது தனியிடத்திற் குறியேற்றம் செய்வதற்காகத் திரு. நா. கணேசன், திரு. ஸ்ரீரமண சர்மா, இந்திய நடுவணரசு என மூவரால் அடுத்தடுத்துக் கொடுக்கப்பட்டது. இவற்றைப் புரிந்து கொள்வதற்குத் தோதாகக் கொத்துத் தேற்றத்தை (set theory) நாடுவோம்.



ஒரு தாளில் ஒன்றோடொன்று குறுக்காய் வெட்டினாற்போல் இரண்டு பெரிய வட்டங்கள் போட்டிருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இவ்விரு வட்டங்களுக்கும் பொதுவாய் ஒரு பொதுவில்லையும், அதன் இருபக்கங்களில் இரு தனிப்பிறைகளும் இருப்பதாக இவ்வமைப்பைப் புரிந்து கொள்ளலாம். ஒரு தனிப்பிறையைத் தமிழ்ப்பிறை என்றும், இன்னொன்றைக் கிரந்தப்பிறை என்றும் சொல்லலாம். இந்திய நடுவண் அரசு ஒருங்குறிச் சேர்த்தியத்திற்குக் (Unicode Consortium) கொடுத்த கிரந்த முன்மொழிவின் அடிப்படையில், பொதுவில்லையில் 41 குறியீடுகளும் தமிழ்ப்பிறைக்குள் 7 குறியீடுகளும் கிரந்தப் பிறைக்குள் 41 குறியீடுகளும் உள்ளன. மூன்று பகுதிகளும் சேர்ந்து மொத்தம் 89 குறியீடுகள் ஆகும்.

இந்த 89 குறியீடுகளை இந்திய நடுவணரசு கொடுத்திருக்கும் முன்மொழிவின் பட்டியல் வழி பார்த்துக் கொள்ளலாம். கிரந்த எழுத்துக்கள் எப்படி இருக்கும், குறியீடுகள் என்னென்ன என்று அறிவதற்காகக் கீழே வரும் படம் கொடுக்கப்படுகிறது.


கிரந்தப் பிறைக்குள் இருக்கும் 41 குறியீடுகளில் 14 குறியீடுகள் வேத ஒலிப்புக்களைக் குறிக்கும் மீக்குறிகளாகும் (diacritics). அவற்றை ஒதுக்கினால், கிரந்தப்பிறையில் உள்ள குறியீடுகள் 27 மட்டுமே. ”மாவோடு மா” என்று ஒப்பிட்டால் கிரந்தப்பிறையில் இருக்கும் குறிகள் 27 என்றே கொள்ளவேண்டும்.

பொதுவில்லையில் ஏற்கனவே தமிழிற் புகுந்து பதுங்கிக் கொண்ட [ஜ், ஸ், ஷ், இன்னொரு வகை z - (U+0BB6) இது என் கணியில் போடவராது, மேலும் ஹ் என்ற] 5 கிரந்த எழுத்துக்களும் அடங்கியுள்ளன. [ஸ்ரீ, க்ஷ் என்னும் கூட்டெழுத்துக்கள் இக்கணக்கெடுப்பில் இல்லை. அவற்றை நடுவணரசின் கிரந்த முன்மொழிவின் படி, பொதுவில்லையில் சேர்க்கவில்லை.]

ஆக,

தமிழ்-கிரந்தப் பொதுவில்லையில் இருக்கும் குறியீடுகள் = 41
தனிக் கிரந்தப்பிறையில் இருக்கும் குறியீடுகள் = 27
தனித் தமிழ்ப்பிறையில் இருக்கும் குறியீடுகள் = 7
கிரந்த வட்டத்தில் இருக்கும் குறியீடுகள் = பொதுவில்லைக் குறியீடுகள் + தனிக் கிரந்தப்பிறைக் குறியீடுகள் = 41+27 = 68
தமிழ் வட்டத்தில் இருக்கும் குறியீடுகள் = பொதுவில்லைக் குறியீடுகள் + தனித் தமிழ்ப்பிறைக் குறியீடுகள் = 41+7 = 48 (இதிற்றான் ஏற்கனவே நுழைந்த 5 கிரந்த எழுத்துக்கள் உள்ளன.)
தமிழ்-கிரந்தம் இரண்டும் சேர்ந்த பெருங்கொத்தில் இருக்கும் குறியீடுகள் (வேதக் குறியீடுகள் தவிர்த்து) = 27+41+7 = 75

இங்கே Superset என்பது கிரந்தம்-தமிழ் ஆகிய இரண்டும் சேர்ந்த பெருங்கொத்து. இப் பெருங்கொத்தை இரு வழிகளில் அடையலாம். முதல் வழியில், கிரந்தத்திற் (68) தொடங்கித் தமிழ்க் குறியீடுகளை (7) சேர்த்தால் மொத்தம் 75 கொண்ட பெருங்கொத்து வந்துசேரும். இரண்டாம் வழியிற் தமிழிற் (48) தொடங்கி கிரந்தத்தைச் (27) சேர்த்தாலும் அதே 75 கொண்ட பெருங்கொத்துத் தான் வந்து சேரும். எந்த வழியில் வந்து சேருகிறது என்பது முகன்மையில்லை. இரண்டுவழியிலும் ஒரே பெருங்கொத்துத் தான் வந்து சேரும் என்பது முகன்மையானது.

இதை விளங்கிக் கொள்ளாமல், “கிரந்த எழுத்துகளில் ஏற்கனவே சில தமிழ் எழுத்துகள் இருக்கின்றன; அவற்றை என்கோடு செய்யும்போது மேலும் ஐந்து எழுத்துகளை என்கோடு செய்வதில் என்ன சிக்கல் ? அடுத்தது, தமிழ் எழுத்துகளைச் சேர்த்து கிரந்தத்தை ஒரு சூப்பர் செட் ஆக உருவாக்க நினைக்கிறார்கள் என்று சொல்கிறீர்களே தமிழை ஏன் அப்படியொரு ’சூப்பர் செட் ’ஆக உருவாக்கக்கூடாது ? என்று கேட்டேன். அதற்கு யாரும் திருப்தியான பதிலை அளிக்கவில்லை” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார் தமிழ்மன்றம் மடற்குழுவில் கேட்டிருந்தார். இந்தக் குறியீடுகள் பற்றிய முழுவிவரம் புரிந்திருந்தால் இப்படியொரு பூஞ்சையான மேலோட்டக் கேள்வி அவரிடமிருந்து எழுந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.

இன்னொன்றும் இங்கு சொல்லவேண்டும். எந்தச் சங்கத ஆவணம் உருவாக்குவதற்கும் கிரந்த வட்டத்தில் இருக்கும் 68 குறியீடுகள் மட்டுமே முற்றிலும் போதுமானவை. இக்குறியீடுகளை வைத்துத்தான் 1500 ஆண்டுகள் காலமும் ஏராளமான சங்கத ஆவணங்களை உருவாக்கியிருக்கிறார்கள். 75 குறியீடுகள் கொண்ட பெருங்கொத்தை அவர்கள் இதுநாள் வரை நாடியதேயில்லை. [அப்படி நாடியதாக பேரா. கி. நாச்சிமுத்து, நா. கணேசன் போன்று சிலர் சொல்லும் கூற்றுக்கள் ஆழ்ந்து ஆராய்ந்தால் ஆதாரமற்றவை என்பது புலப்படும்.]

அதே பொழுது, 68 குறியீடுகள் கொண்ட கிரந்த வட்டத்தால் தமிழ் ஆவணங்களை எழுதவே முடியாது. 48 குறியீடுகள் கொண்ட தமிழ் வட்டத்தால் மட்டுமே எழுத முடியும்.

இங்கே வட்டங்களுக்குள் இருக்கும் என்று குறிப்பிட்ட எண்ணிக்கைகளையும் மற்ற விவரங்களையும் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொண்டு மேற்கொண்டு கட்டுரைப் படிக்குமாறு வாசகர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இது புரியாமல் கட்டுரையில் வேறெதுவும் புரியாது. நடுவணரசின் முன்மொழிவில் கொடுக்கப்பட்ட கிரந்தக் குறியீட்டுக் கட்டப் படத்தையும் கூர்ந்து பார்ப்பது தேவையானது.

இனி ஒருங்குறிச் சேர்த்தியத்தின் முன் வந்து சேர்ந்திருக்கும் “நீட்டித்த தமிழ்” என்ற முன்மொழிவையும், மூன்று பேர் கொடுத்த கிரந்த முன்மொழிவையும் மேலே சொன்ன வட்டங்களின் வழிப் புரிந்து கொள்வோம்.

1. (48 குறியீடுகள் கொண்ட) தமிழ்வட்டத்தோடு (27 குறியீடுகள் கொண்ட) கிரந்தப்பிறையைச் சேர்த்து (75 அடங்கிய) ஸ்ரீரமண சர்மாவாற் கொடுக்கப் பட்ட “நீட்டித்த தமிழ்” என்ற பெருங்கொத்து முன்மொழிவு. [இதை ”நீட்டித்த தமிழ்” என்றது தவறான பெயர். உண்மையில் இது தமிழ்-கிரந்தம் என்னும் ஈரெழுத்துக் கலவையை, அதாவது நாம் முன்னாற் சுட்டிக் காட்டிய பெருங்கொத்தை, வேண்டுகின்ற முன்மொழிவாகும்.]

2. (68 குறியீடுகள் கொண்ட) கிரந்த வட்டத்தோடு (7 குறியீடுகள் கொண்ட) தமிழ்ப்பிறையையும் சேர்த்து (75 அடங்கிய) நா. கணேசனால் கொடுக்கப்பட்ட பெருங்கொத்து முன்மொழிவு. [இதுவும் ஈரெழுத்துக் கலவை அடங்கிய பெருங்கொத்தை வேண்டும் முன் மொழிவாகும்.]

3. (68 + 4 குறியீடுகள் கொண்ட) கிரந்தவட்டம் மட்டுமே அடங்கிய ஸ்ரீரமண சர்மாவின் கிரந்த முன்மொழிவு. [அதாவது இவர் 7 குறியீடுகள் கொண்ட தமிழ்ப்பிறையில் இருந்து 4 குறியீடுகளை மட்டும் எடுத்துக் கொள்கிறார். இதை பேரா. தெய்வசுந்தரம் என்னிடம் ஆழ்ந்து உணர்த்தியதை இங்கு நான் சொல்ல வேண்டும்.]

4. ஸ்ரீரமண சர்மாவிற்கும் நா. கணேசனுக்கும் இடையே ஏற்பட்ட வேறுபாட்டின் தீர்வாக, இந்திய நடுவணரசால் மீண்டும் (68 குறியீடுகள் கொண்ட) கிரந்த வட்டத்தோடு (7 குறியீடுகள் கொண்ட) தமிழ்ப்பிறையும் சேர்த்துக் கொடுக்கப்பட்ட (ஈரெழுத்துக் கலவையாய், 75 குறியீடுகள் அடங்கிய) பெருங்கொத்து முன்மொழிவு.

இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது 1, 2, 4 ஆகிய முன்மொழிவுகள் தாம். அதன் மூலம் கிரந்தப் பெருங்கொத்துள் எல்லாத் தமிழ்க்குறியீடுகளையும் பொருத்தித் தமிழெழுத்துக்களை ஓர் உட்கொத்தாக்கும் (subset) சூழ்க்குமமும், பெருங்கேடும் அடங்கியிருக்கின்றன.

இந்த நாலு முன்மொழிவுகளில் முதல் முன்மொழிவு (ஸ்ரீரமண சர்மாவின் ”நீட்டித்த தமிழ்”
முன்மொழிவு) தமிழக அரசின் கவனத்திற்கு வருவதற்கு முன்னால், தனி மாந்த மறுப்புகளிலேயே (பலரும் மறுப்பளித்தனர்; நானும் உத்தமம் என்னும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் வழி மறுப்பளித்திருந்தேன்), கூடவே உத்தமம் அளித்த மறுப்பிலேயே, ஒருங்குறி நுட்பியற் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு ஸ்ரீரமண சர்மாவின் முன்மொழிவு மறுக்கப்பட்டு திருப்பியனுப்பப் பட்டது. இம்முன்மொழிவு திருப்பியனுப்பப் பட்டதில் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனின் நுட்பியல் மறுப்பு முகன்மையான காரணம் வகித்தது. அதைச் சற்று விளங்கிக் கொள்ளுவோம்.

ஸ்ரீரமண சர்மா அனுப்பிய ”நீட்டித்த தமிழ்” முன்மொழிவில் நாலு ககரம், நாலு சகரம். நாலு டகரம், நாலு தகரம், நாலு பகரம், சங்கத உயிர் ருகரம், சங்கத உயிர் லுகரம் போன்றவையும் இன்னும் சிலவும் மேற்குறிகள் (superscripts) போட்டுத் தனியிடம் கேட்கப் பட்டன. (ஸ்ரீரமண சர்மாவின் ”நீட்டித்த தமிழ்” முன்மொழிவிற்கான விளக்க ஆவணத்தில் ஒரு ஒப்பீட்டுப் பட்டியல் இருந்தது. அதை மூன்று படங்களாக கீழே வெட்டி ஒட்டியுள்ளேன். அந்தப் படத்துள் வரும் ஆங்கில விளக்கம் திரு.ஸ்ரீரமண சர்மாவே தந்தது.






மேலேயுள்ள மூன்று படங்களிலும் திரு.சர்மா நுழைக்கவிரும்பும் எழுத்துக்கள்/குறியீடுகள் உள்ள கட்டங்கள் சற்று சாம்பல் நிறத்தில் வண்ணம் தீட்டியிருப்பதைக் கவனியுங்கள். இந்த எழுத்துக்கள்/குறியீடுகள் தான் கிரந்தப்பிறைக்கென உள்நுழையும் 27 குறியீடுகள்.

இப்படி ஒருசில எழுத்துக்களுக்கு மேற்குறிகள் போட்டு எழுதுவது ஒன்றும் புதியமுறையல்ல. இதற்கு முன்னரே 40, 50 ஆண்டுகளாய் அச்சில் செய்யப்பட்டது தான். இப்பொழுது BMP இல் இருக்கும் தமிழெழுத்துக் குறியீடுகளையும், எல்லா ஒருங்குறி வார்ப்புக்களிலும் இருக்கும் மேற்குறி வாய்ப்பையும் பயன்படுத்திச் சரம் சரமாய் க1, க2, க3, க4........ரு’, லு’ என்று கணிவழியாகவும் வெளியிட முடியும்.

இம் மேற்குறிகளைக் கணித்திரையில் வெளியிடும் போது, கி2, கீ2, கு2, கூ2, கெ2, கே2, கை2, ஆகிய எழுத்து வரிசைகளில் மேற்குறி ஒழுங்காய் வந்துவிடும். கா2, கொ2, கோ2, கௌ2 ஆகிய நாலு வகை எழுத்து வரிசைகளில் மட்டும் தான் ஒருவகைச் சிக்கல் ஏற்படும். அதாவது, காலுக்கும் ஔகாரக் குறிக்கும் அப்புறம் தான் மேற்குறிகளை மைக்ரொசாவ்ட் கணியில் இடமுடியும். அதேபொழுது ஒருசில நுணுகிய மாற்றங்களுக்கு அப்புறம் ஆப்பிள் கணியில் மேற்குறியை இட்டு அதற்கு அப்புறம் கால் குறியையும், ஔகாரக் குறியையும் இடமுடிகிறது.

இந்தச் செய்து காட்டலின் மூலம் ”இது குறியேற்றம் அளவிற் செய்ய வேண்டிய மாற்றமேயல்ல. இயக்கச் செயலி (operating system) மூலம் நடைபெற வேண்டிய / நடைபெறுத்தக் கூடிய மாற்றம்” என்று மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் தெளிவாக நிறுவித்துக் காட்டினார். ”இப்பொழுது இருக்கும் BMP தமிழ்க் குறியேற்றத்தையும், சாத்தாரமாய் (= சாதாரணமாய்) எந்தக் கணியிலும் இருக்கும் மேற்குறிகளையும் கொண்டு ”நீட்டித்த தமிழில்” ஸ்ரீரமண சர்மா கேட்கும் எல்லாக் குறிகளையும் கணித்திரையிலும், கணியச்சியிலும் (computer printer) கொண்டுவந்து காட்டமுடியும்” என்னும் போது ”நீட்டித்த தமிழ்” என்ற முன்மொழிவே சுத்தரவாகத் தேவையில்லை என்றாகிறது. ஸ்ரீரமண சர்மாவின் ”நீட்டித்த தமிழ்” என்னும் முதல் முன்மொழிவு அதனாலேயே அடிபட்டுப் போகிறது.

இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில், இன்னொரு பக்கம் “ஐயய்யோ, ஒருங்குறித் தமிழில் 27 கிரந்த எழுத்துக்களை நுழைக்கிறார்கள்” என்று சில தமிழறிஞர் கூக்குரலிட்டது ஒருவகையில் தவறான புரிதலே. தமிழ் எழுத்துக்கள் இப்பொழுதிருக்கும் ஒருங்குறி அடித்தளப் பட்டியில் (BMP) யாருமே கிரந்தத்தை நுழைக்கவில்லை. தமிழெழுத்து அங்கு அப்படியே தான் இருக்கிறது. இந்த முன்மொழிவு ஏற்கப்பட்டு BMP தமிழ் நீட்டிக்கப் பட்டிருந்தாற்றான் அந்தக் கூக்குரலுக்கு ஓரளவு பொருளுண்டு. [In that case, we would have ended up with Tamil being encoded two times with disastrous consequences. Luckily this hasn't happened. We should never allow that to happen.]

தவிர, BMP இல் இருக்கும் தமிழெழுத்தில் எந்த மாற்றமும்.செய்யாது, மேற்குறி கொண்டு சர நுட்பத்தால் (sequence technique) கிரந்த ஆவணம் உருவாக்கிச் சங்கதம் எழுதினால் (அதாவது ’க3ங்க3’ என்பது போலத் தமிழெழுத்தையும், மேற்குறியையும் கொண்டு யாரேனும் எழுதினால்) நாம் கூக்குரலும் எழுப்பவியலாது. அது முற்றிலும் சட்ட பூருவமான ஒழுங்கான படியாற்றம் (application) தான். BMP இல் இப்பொழுது இருக்கும் தமிழ் எழுத்துக்களை இப்படிப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வதற்கு நமக்கு எவ்வுரிமையும் கிடையாது. உணர்ச்சி வசப்படாமல், ஆழ்ந்து ஓர்ந்து பார்த்து, தமிழார்வலர்கள் அமைதி அடையவேண்டும் என்று மட்டுமே வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆகவே, முத்து நெடுமாறனின் ”செய்து காட்டுகை (demonstration)” மூலம் தெளிவு பெற்ற ஒருங்குறி நுட்பியற் குழு ”ஸ்ரீரமண சர்மாவின் நீட்டித்த தமிழ் என்னும் முதல் முன்மொழிவை இனிமேல் ஏற்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்றே தமிழ்க் கணிஞர்கள் இப்பொழுது எண்ணுகிறார்கள். தவிர, மீண்டும் 2011 பிப்ரவரி 26க்கு முன் இதை வலியுறுத்தியும் அவர்கள் எழுதுவார்கள்.

இனி மேலே சொன்ன 2,3,4 ஆகிய கிரந்த முன்மொழிவுகளுக்கு வருவோம். இதில் தான் தமிழில் இருந்து ஏழு குறியீடுகளை (எகர உயிர், ஒகர உயிர், எகர உயிர்மெய்க்குறியீடு, ஒகர உயிர்மெய்க்குறியீடு, ழகரம், றகரம், னகரம்) கிரந்த முன்மொழிவிற்குள் திரு. நா. கணேசன் சேர்த்திருந்தார். ஸ்ரீரமண சர்மா எகர உயிர், ஒகர உயிர், எகர உயிர்மெய்க்குறியீடு, ஒகர உயிர்மெய்க்குறியீடு ஆகிய 4-யை மட்டும் சேர்த்திருந்தார். ழகரம், றகரம், னகரம் ஆகியவற்றை விட்டுவிட்டார்.]

திரு. நா. கணேசன் 7 தமிழ்க் குறியீடுகளைக் கிரந்தத்துட் சேர்ப்பதற்குக் கூறிய காரணங்கள் எவ்வாதாரமும் இல்லாது பொய்யாகக் கூறப்பட்டவையாகும்.

எங்கோ சென்னையில் இருக்கும் “சம்ஸ்க்ருத க்ரந்த லிபி ஸபா” என்ற பதிப்பகம்/அச்சகம் திவ்யப் ப்ரபந்தத்தை கிரந்த லிபியில் எப்பொழுதோ வெளியிட்டதாகக் கூறி (அதாவது, கிரந்த எழுத்துமுறைக்குள் இவ்வெழுத்துக்கள் இருந்ததாகக் கூறி) வெறுமே கையால் எழுதிய சான்றுகளைக் காட்டித் தன் முன்மொழிவைத் திரு.நா.கணேசன் அனுப்பியிருந்தார். (இங்கே லிபியென்றவுடன் கிரந்த அடுக்குக் கட்டு முறையை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் சொன்ன கையெழுத்து எடுத்துக் காட்டில் அந்தக்காலத் தமிழெழுத்துப் போலும் புள்ளி வைத்த ஒகரக் குறில் இருந்ததாம். இன்னோர் எடுத்துக் காட்டையும் இங்கு புரிவதற்காகச் சொல்ல முடியும். ”வாழ்க்கை” என்ற தமிழ்ச் சொல்லை அடுத்தடுத்து இடம்வலமாய்ப் போட்டிருந்தால் அது தமிழெழுத்து முறை. ”வா”வுக்கு அடுத்தாற் போல் ழ, க, கை போன்றவற்றை ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்குக் கட்டு முறையிற் போட்டிருந்தால் அது கிரந்தப் பதிப்பு முறை.)

நண்பர் நா. கணேசன் தமிழ்ச் சிறப்பு எழுத்துக்களை கிரந்த முறையில் ”சம்ஸ்க்ருத க்ரந்த லிபி ஸபா” பதிப்பித்ததாக எந்த ஆதாரமுமின்றிப் புகலுகிறார். இதுவரை எங்கு தேடிப் பார்த்தும் அப்படி ஒரு ”ஸபா” முகவரியைச் சென்னையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதோடு, திரு. கணேசனும் உருப்படியான ஆதாரங்கள் தரவில்லை. எந்தக் கேள்விக்கும் மடற்குழுக்களில் அவர் இப்போது மறுமொழி சொல்ல மறுக்கிறார். அதே பொழுது, கீறல் விழுந்த இசைத்தட்டுப் போல ”தேவாரம், நாலாயிரப் பனுவல் போன்ற திராவிட நூல்கள் கிரந்த லிபியில் எழுதப்பட்டன” என்று வெற்றாகச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.

அப்படிக் கிரந்த எழுத்தில் அவை எழுதப்பட்டு இருந்தாலும், எத்தனை ஆவணங்கள் அப்படியெழுந்தன? - என்ற கேள்வி நம்முள் இயற்கையாகவே எழுகிறது. இதுபோன்ற எழுத்திற்கான வரலாற்றில் ஆதாரங்கள் பல இருக்கவேண்டாமா? வெறுமே ஒற்றை ஆதாரத்தை வைத்துக் கொண்டு மேம்போக்கிற் பேசிவிட முடியுமா? எங்கோ சென்னையில் எழுந்த ஒரு பதிப்பு, 10 கோடித் தமிழ் மக்களின் எழுத்து மரபைக் குலைக்கலாமா? ”தமிழ் ஆவணங்கள் கிரந்தத்தில் எழுதப்பட்டதாய்ப் பரவலான புழக்கம் இருந்ததா, இல்லையா” என்று நிறுவ வேண்டாமா? இப்படி ”மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான்” என்று சொல்லி தமிழெழுத்து மரபைக் குலைக்கலாமோ? “இது ஓர் அண்டப் புளுகோ? ஏமாற்றோ?” என்ற ஐயம் நமக்கு உறுதியாக எழுகிறது.

பொதுவாக அவருடைய முன்மொழிவு உள்ளிடற்று மொக்கையாகக் காணப்பட்ட காரணத்தால், சங்கதப் பயன்பாட்டுச் சான்றுகளை அவர் சரியான முறையில் விளக்காத நிலையில், ஆழ்ந்து அறிவார்ந்த முறையில் எழுதப்பட்ட ஸ்ரீரமண சர்மாவின் கிரந்த முன்மொழிவு (மேலே குறிப்பிட்டிருக்கும் மூன்றாம் முன்மொழிவு), ஒருங்குறி நுட்பியற் குழுவின் கவனத்திற்குப் போயிருக்கிறது.

இன்னொரு வேறுபாடும் கணேசன் (2), சர்மா (3) ஆகியோரின் கிரந்த முன்மொழிவுகளுக்கு உண்டு. கணேசனின் முதல் கிரந்த முன்மொழிவு, தமிழ் இப்பொழுது இருக்கும் அதே அடித்தளத் தட்டில் (BMP) கிரந்தத்திற்கும் இடம் ஒதுக்கும் படி கேட்டிருந்தது. ஸ்ரீரமண சர்மாவோ (3) துணைத் தளத் தட்டில் (SMP) தான் கிரந்தத்திற்கு இடம் கேட்டிருந்தார். (
(பின்னால் கணேசனும் தன் இறுதி முன்மொழிவில் SMP - க்குப் போய்விட்டார்.)
கணேசனின் முதற் கிரந்த முன்மொழிவு சர்மாவின் கிரந்த முன்மொழிவைக் காட்டிலும் தாக்கம் வாய்ந்தது. சர்மாவின் முன்மொழிவு ஒருவகை உள்ளமைத் தனம் (realistic character) கொண்டது. இரண்டு முன்மொழிவுகளையும் படிப்போருக்கு இது இயல்பாகவே விளங்கும். Sriramana's proposal was much more substantive, clear and transparent.

2, 3 ஆகிய இரு முன்மொழிவுகளுக்கும் இடையே இருந்த முரண்பாடுகளைக் கண்டு இவற்றைச் சரிசெய்ய வேண்டி, ஒருங்குறி நுட்பியற் குழு இந்திய நடுவணரசின் உதவியை நாடியது. இவ்வுதவி நாடல் தமிழக அரசின் கவனத்திற்கு வராது போனது. நடுவணரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் இரு கிரந்த முன்மொழிவுகளையும் ஒரு குழுவைக் கொண்டு சரிசெய்து ஒரு பொது கிரந்த முன்மொழிவை (4) உருவாக்கியது. அதுவும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வில்லை.

[கிரந்தம் என்ற எழுத்துமுறை தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்ற அளவில், ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், அதைக் கணிக்குள் குறியேற்றம் செய்வதற்கு முன், ஞாயமாக, நடுவணரசு தமிழக அரசைக் கேட்டிருக்க வேண்டாமா? ஏற்கனவே பரவலான புழக்கத்தில் இருக்கும் தமிழ்க் குறியேற்றத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லாது கிரந்தத்தைக் குறியேற்றம் செய்யவேண்டிய கட்டாயத்தில், இந்திய நடுவணரசு தமிழக அரசின் கருத்தை உறுதியாகக் கேட்டிருக்க வேண்டும். என்ன காரணமோ, தெரியவில்லை, அது கேட்கவில்லை; மொத்தத்தில் நடுவணரசு அதிகாரிகள் இதில் கோட்டை விட்டுவிட்டார்கள்.]

தற்செயலாக செபுதம்பரில் தனிமாந்த முயற்சிகளில் இந்தக் கிரந்த முன்மொழிவுகள் (2,3,4) பற்றி விவரமறிந்த தமிழ் நுட்பியலார் ஒரு சிலர் நாளும் பொழுதும் இல்லாக் காரணத்தால், பொது இடங்களிற் கத்தி முழக்கமிட்டு ”மேலும் காலநேரம் வாங்க வேண்டும்” என்று முயலும்போது தான் ஆசிரியர் வீரமணியை நாடுவது பயன்தரும் என்று தெளிவானது. இதில் பேரா. இ.மறைமலையும், நண்பர் இ.திருவள்ளுவனும் பெரிதும் உதவினார்கள். பாராட்டப் படவேண்டிய முயற்சி. ஐயா வீரமணியின் இடையீட்டால் தமிழக முதல்வர் கலைஞரின் கவனத்திற்கு இதைக் கொண்டுவந்து, அற்றை அமைச்சர் ஆ. இராசாவின் கவனத்திற்கும் கொண்டுவந்து நடுவண் அரசும் ஒருங்குறி நுட்பியற் குழுவும் உடனடியாய் எந்த முடிவும் எடுக்காது 2011 பிப்ரவரி 7 வரை தள்ளிப் போடும்படி செய்ய முடிந்தது.

இனிக் கிரந்தம் என்ற எழுத்திற்கு உரியதாகச் சொல்லப்படும் மூன்று பயன்பாடுகளைப் பார்ப்போம்.

1. முதற் கூற்று - கிரந்தத்தைக் குறியேற்றுவதால் பழைய கல்வெட்டுக்கள், செப்பேடுகளைக் கணிமைப் படுத்தி அலச முடியும் - என்பது.

இந்தப் பயன்பாடு உண்மைதான். தமிழர் வரலாற்றைப் பொறுத்தவரை ஞாயமான தேவையும் கூட. காட்டாகப் ”பெருமாள் என்ற சொல் எப்பொழுது எழுந்தது?” என்று ஆயும் போது முன்னோர் ஆதாரங்களை வைத்துக் கொண்டு, கண் வலிக்க ஒவ்வொரு கல்வெட்டாய்ப் படிக்கும் முறையில் இரண்டு வாரங்களில் கி.பி.800 அளவில் முதலாம் ஆதித்த சோழன் கல்வெட்டில் தான் பெருமாள் என்ற சொல் முதலிற் பயன்பட்டிருக்கிறது என்று என்னால் தமிழ்ப்பகுதியை மட்டும் வைத்துக் கண்டுபிடிக்க முடிந்தது. நான் கல்வெட்டுக்களின் கிரந்தப்பகுதியைப் படிக்கவில்லை. இதற்கு மாறாய், இக்கல்வெட்டுக்களைக் கணியேற்றம் செய்திருந்தால் ஒரு கால்மணி நேரத்திற்குள் எந்த ஆண்டில் இச்சொல் எழுந்தது என்று கண்டுபிடித்துச் சொல்லியிருக்க முடியும். இப்படிக் கல்வெட்டுக்களை ஆய்வதற்குத் தமிழெழுத்துக்கள் மட்டுமல்லாது கிரந்தமும் குறியேற்றம் செய்யப்படுவது நன்மை பயக்கும்.

இதே போல ”அப்பர் காலத்தில் இருந்த அரசன் யார்? யார் அவரை சமய மாற்றத்திற்குத் துன்புறுத்தினார்?” என்ற ஆய்ந்தறிய பல்லவ அரசன் மகேந்திர வர்மனின் திருச்சிராப்பள்ளி மலைக் குகைக் கல்வெட்டில் இருந்த ”குணபர” என்ற கிரந்தக் கீற்றே 1950 களில் இருந்த ஆய்வாளர்களுக்குப் பயன்பட்டது. [பார்க்க. மயிலை சீனி வேங்கடசாமியாரின் நூல்கள்.]

இந்தக் காலத்தில் கிரந்த-தமிழ்க் கலவைக் கல்வெட்டுக்களை எல்லாம் கணிக்குள் ஏற்றியிருந்தால் இது போல எத்தனையோ வரலாற்று உண்மைகளை குறைந்த நேரத்தில் நிறுவ முடியும். அதற்கு உதவியாய்க் கிரந்தம் குறியேற்றப் பட்டால் பெரும் வாய்ப்புத் தான்.

ஆனால் இதைச் செய்யக் கிரந்தக் குறியேற்றத்தில் 75 குறியீடுகள் இருக்க வேண்டுமா? 68 குறியீடுகள் இருக்க வேண்டுமா? - என்பது உடனே எழும் கேள்வி. முன்னே சொன்னது போல்
கிரந்தமும், தமிழும் கலந்தே கணக்கற்ற கல்வெட்டுக்கள் எழுந்திருக்கின்றன. முழுக்க முழுக்க சங்கதப் பகுதியிலும் கூட தமிழ்ச்சொல் தமிழெழுத்தால் எழுதப் பட்டிருக்கிறது.

காட்டாகப் பல்லவர்களின் கூரம் செப்பேட்டில் “ஊற்றுக்காட்டுக் கோட்ட”, “நீர்வேளூர்” போன்ற சொற்களும், உதயேந்திரம் செப்பேட்டில் “வெள்ளாட்டூர்”, “கொற்ற” என்ற சொற்களும் வடமொழிப் பகுதியில் தமிழெழுத்திலேயே எழுதப்பட்டுள்ளன. (பார்க்க: தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி -1 ச. கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் தமிழாய்வகம், 2002. பக்கம் 108) பாண்டியரின் தளவாய்புரம் செப்பேட்டில் கேஷவன் என்ற சொல் வடமொழிப் பகுதியில் ஷகரம் தவிர்த்து கே, வ, ன் என்ற எழுத்துக்கள் தமிழாகவேயிருக்கின்றன. இதே போல வேள்விக்குடிச் செப்பேட்டில் தமிழ் ஒகரமும் மற்ற கிரந்த எழுத்துக்களும் கலந்து வடமொழிப் பகுதி வருகிறது. (செய்தி நண்பர் மணிவண்ணன் மூலம் அறிந்தது.)

அதாவது இது போன்ற கல்வெட்டுக்கள், செப்பேடுகள் எல்லாம் ஒருவிதமான ஈரெழுத்துக் கலவையிலேயே ஆனால் அந்தந்த எழுத்தொழுங்கோடு (orthography) எழுதப் பட்டுள்ளன. அப்படியானால் பழங் கல்வெட்டுக்களையும், செப்பேடுகளையும் வரலாற்றிற் கண்டது, கண்டபடியே வெளியிட்டுப் பாதுகாக்க வேண்டுமானால், கிரந்தம் என்பது 68 குறியீடுகளோடு மட்டுமே குறியேற்றப் பட வேண்டும்; இந்த 7 தமிழ்க்குறியீடுகள் கிரந்தக் குறியேற்றத்துள் போகவே கூடாது என்ற முடிவிற்கே நாம் வர வேண்டியிருக்கிறது.

அதற்கு மாறாக, 68+7 குறியிடுகளோடு கிரந்தக் குறியேற்றம் போனால் ”கல்வெட்டில் எது தமிழ், எது கிரந்தம்?” என்று அடையாளம் காண்பதிற் பெருஞ்சரவல் வந்துவிடும். [கணியில் ஏற்றப்படும் ஆவணங்களை அலசுவது பற்றியும், புள்ளிமுறை - அடுக்குமுறை பற்றிய முன்னாற் காட்டிய அலசலையும் இங்கு நினைவு கொள்ளுங்கள். நடுவணரசின் குழுவினர், நா. கணேசன் போன்றோர் இந்தச் சிக்கலை உணராமலோ, அல்லது அவர்களின் உண்மைக் குறிக்கோளைச் சொல்லாது மறைத்தோ, 7 தமிழ்க் குறியீடுகளைக் கிரந்த முன்மொழிவிற்குள் கொண்டுவருகிறார்கள். ஸ்ரீரமணசர்மா போன்றவர்கள் 4 தமிழ்க் குறியீடுகளைக் கிரந்த முன்மொழிவிற்குள் கொண்டுவருகிறார்கள். இதன்மூலம் இருவருமே பெருங்கேடு விளைவிக்கிறார்கள்.)

சுருக்கமாய்ச் சொன்னால், பழம் பதிப்பாளர்கள் எல்லோரும் “கிரந்தத்தைக் கிரந்தமாகக் கையாண்டிருக்கிறார்கள்; தமிழைத் தமிழாகக் கையாண்டிருக்கிறார்கள். ஒன்றின் எழுத்தொழுங்கு இலக்கணம் இன்னொன்றிற்குள் போகவேயில்லை. Even though they have mixed the scripts, they have kept the individual scripts' distinct orthographic identities.” Period.

ஒருசில தமிழார்வலர் , “பழங்காலத்துக் கல்வெட்டுக்களை வரலாற்றுக் காரணமாய்க் காப்பாற்ற வேண்டுமானால், அவற்றை ஒரு jpg file ஆக ஆக்கிக் கொள்ளலாமே? எதற்காகக் கிரந்தத்தைக் குறியேற்றம் செய்ய வேண்டும்?” என்று கேட்கிறார்கள். இது குறியேற்றக் கேள்வியை ஆழமாய் அலசாதோர் கூற்று.

நண்பர்களே! நாம் கிரந்தத்தை விரும்புகிறோமா? இல்லையா? - என்பதல்ல கேள்வி. 1500 கால கிரந்த இருப்பில் நம் வரலாறும் அடங்கியிருக்கிறது. உலகில் எங்கெங்கோ இருக்கும் சான்றுகளில் நம் வரலாற்றைத் தேடி நாம் அலையும் போது, அருகே நம்மோடு இருக்கும் சான்றுகளிற் தேட மாட்டேம் என்று சொல்லுவது பித்துக்குளித்தனம் இல்லையோ? [கல்வெட்டுக்களை நம்புகிறோம், நம்பாமற் போகிறோம் - அது வேறு செய்தி; அலசல் செய்ய வழியிருக்க வேண்டுமில்லையா?]

“ஐயய்யோ! அவை கிரந்தம் கலந்து இருக்கின்றனவே?” என்று நாம் வருத்தப்பட்டுப் பயனில்லை. தமிழர் வரலாறு சங்க காலத்தோடு முடிந்து திடீரென்று 20 ஆம் நூற்றாண்டிற்குக் குதித்து வந்துவிடவில்லை. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தக்
கலப்பு ஆவணங்களை நாம் அலச வேண்டியிருக்கிறது.

இந்தக் கலப்பு ஆவணங்களை கண்வலிக்க நொபுரு கராசிமாவும், சுப்பராயலுவும் அவரைப் பின்பற்றியோரும் அலசி அலசி ஆய்ந்துதான் ”பேரரசுச் சோழர் காலம் இப்படியிருந்தது” என்று நமக்கெல்லாம் சொன்னார்கள். அவர்கள் படித்த கல்வெட்டுக்கள் 10 விழுக்காடு கூடத் தேராது. படிக்காத கல்வெட்டுக்கள் இன்னும் 90 விழுக்காட்டிற்கும் மேல் இருக்கின்றன.

தவிர, jpg file யை வைத்துக் கொண்டு நாம் அழகு வேண்டுமானாற் பார்க்கலாம்; நெடுங்காலம் காப்பாற்றலாம். ஆனால் சற்று முன்னால் சொன்னது போல் “பெருமாள், குணபர” போன்ற சொற்களை 10000, 20000 கல்வெட்டுக்களிடையே புகுந்து அலச முடியாது. ஆழமாய் எந்த ஆவண அலசலும், கல்வெட்டு அலசலும், வரலாற்று அலசலும் செய்ய முடியாது.

இன்னும் எதிர்காலத்தில் கண்வலிக்கத் தாளில் இருந்து / jpg கோப்பிலிருந்து படித்துக் கொண்டு இருக்கவேண்டுமென்றால் 1000 கராசிமாக்கள் வந்தாலும் முடியாது. அவற்றைக் கணிமைப்படுத்தி அலச முற்பட்டாற் தான் ஒரு 20 கராசிமாக்களை வைத்து இன்னும் 20 ஆண்டுகளுக்குள்ளாவது 100000 கல்வெட்டுக்களை அலசி, (படியெடுக்கப்படாது எண்ணெயிலும், அழுக்கிலும், வண்ணத்திலும் அழிந்து கொண்டிருக்கும் 200000 கல்வெட்டுக்களையும் மற்ற கோயில்களில் இருந்து படியெடுத்து அலசி) 1500 ஆண்டு வரலாற்றை ஓரளவு ஒழுங்கு செய்யமுடியும். எண்ணற்ற தமிழ் வரலாற்றுக் கேள்விகள் இன்னும் விடைதெரியாமற் கிடக்கின்றன.

Keeping the copies of inscriptions as jpg files is a pretty useless proposition. Encoding the copies of the inscriptions has a much better use.

2. அடுத்து, - கோயிற் குருக்களாக ஆகமம் படிப்பவர்கள், வேத பாடசாலையிற் படிப்பவர்கள், வடமொழி ஆவணங்களைப் படிக்க விழைபவர்கள் ஆகியோருக்குச் சங்கத மொழிபடிக்கும் எழுத்தாகக் கிரந்தம் பயன்படும் - என்னும் கூற்று.

இதுவும் உண்மைதான். கிரந்தம் என்பதன் இன்றையத் தேவை, சங்கதத்தில் உள்ள பழையதைப் படிப்பதற்கும் அது பற்றி அலசுவதற்கு மட்டுமே. ஆங்கிலத்தில் இதை didactics - கற்றுக் கொடுப்பியல் - என்று சொல்லுவார்கள். அதற்குக் கிரந்தம் பயன்படத் தான் செய்கிறது. ஆனால் அப்படிப் படிப்பவர் எல்லோரும் ஏற்கனவே தமிழ் எழுத்தையோ, மற்ற திராவிட எழுத்தையோ உறுதியாக அறிந்திருப்பர். அவர்களுக்குப் பாடமொழியாக தமிழ் அல்லது மற்ற திராவிட மொழிகளேயிருக்கும்.

கிரந்தம் என்பது பழைய நூல்களை, ஆவணங்களைப் படிப்பதற்குப் பயன்படும் ஓர் எழுத்து. சங்கத ஆவணங்களைப் படிப்பதற்கு 68 குறியீடுகள் கொண்ட கிரந்தக் குறியேற்றம் முற்றிலும் போதும். தேவைப்பட்டால் கிரந்தமும் தமிழெழுத்தும் கலந்த கலவையெழுத்து (முன்னாற் செப்பேடுகளில் வந்தது போல், இப்பொழுது ஒருசிலர் தமிழெழுத்தும் ஆங்கிலவெழுத்தும் கலந்து எழுதுவது போல்) வெளியீடாகப் பாடநூல்கள் இருக்கலாம். இந்தக் காலத்தில் ஆங்கில எழுத்தும், தமிழ் எழுத்தும் கலந்த ஒரு சில பாடநூல்கள், பொது அறிவு நூல்கள், வெளிவருவதில்லையா? இதற்காக 7 தமிழ்க் குறியீடுகளை கிரந்தக் குறியேற்றத்துள் நுழைக்க வேண்டிய தேவை கொஞ்சங் கூட இல்லை.

3. மூன்றாவது கூற்று - எதிர்காலத்தில் கிரந்தத்தின் வழி தமிழ்மொழி ஆவணங்களை எழுத்துப்பெயர்ப்பு/குறிபெயர்ப்புச் (transliteration/transcription) செய்யமுடியும் - என்பதாகும்.

இது ஒரு முட்டாள் தனமான, (இன்னொரு வகையிற் சொன்னால் குசும்புத் தனமான) ஏமாற்றுத் தனமான பயன்பாடு. இற்றைக் காலத்தில் யாருக்கும் கிரந்தம் என்பது அறிவுதேடும் முதலெழுத்து வரிசையல்ல. அவர்களுக்குத் தமிழ் அல்லது வேறு ஏதோவொரு மொழியெழுத்து முதலெழுத்து வரிசையாக இருக்கிறது. அதை வைத்துத் தான் நாட்டின் எந்த நடப்புச் செய்தியையும் அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

கிரந்தம் படிப்பது முகனச் (modern) செய்திகளை அறிந்து கொள்வதற்கில்லை. கிரந்தத்தில் புதுச் செய்திகள், கட்டுரைகள், கதைகள், துணுக்குகள் வருவதில்லை. பழைய ஆவணங்களைப் படிப்பதற்கும் அதையொட்டி அலசி ஆய்வதற்கு மட்டுமே கிரந்தம் பயன்படுகிறது. அதற்கு 68 குறியீடுகள் கொண்ட கிரந்தக் குறியேற்றம் போதும். எழுத்துப்பெயர்ப்பு / குறிபெயர்ப்பு என்ற சிலரும் (நடுவணரசின் முன்மொழிவும்) சொல்வது வெற்றகப் பயன்பாடு (vaccuous use) வெறுமே சொலவமாடல் (sloganeering). உண்மையான பயன்பாடல்ல. நடுவணரசு இப்படி ஒரு பயன்பாட்டைச் சொல்வது உண்மை நிலை அறியாது கூறும் கூற்று. Let us state clearly that nobody is trying to revive Grantha as a living script useful among masses.

ஆக மூன்றில் இரண்டே உண்மையான பயன்பாடுகள். எழுத்துப்பெயர்ப்பு/குறிபெயர்ப்பு என்பது ஏற்கத் தகுந்த பயன்பாடல்ல. முதலிரண்டு பயன்பாடுகளுக்காக கிரந்தத்தைக் குறியேற்றுவதில் தவறில்லை. என்னைக் கேட்டால் 7 தமிழ்க் குறியீடுகளைச் சேர்க்காது, 68 குறியீடுகளை மட்டுமே கொண்ட கிரந்தவட்டத்தை ஒருங்குறியில் குறியேற்றம் செய்யலாம்.

”கிரந்தமே ஒருங்குறிக்குள் வரவேண்டாம்” என்று வல்லடியாக ஒருசிலர் சொல்ல முனைவது ”போகாத ஊருக்கு வழி தேடுவது” ஆகும். அதைச் சொல்ல நமக்கு உரிமையும் இல்லை. We can only talk about the impact of Grantha on Tamil Unicode. We can never say that Grantha should not be encoded. There are clear demarcation to what we can say. In other words, we need to have some realistic objective; i.e. to stop the possible impact of grantha in SMP to Tamil in BMP.

இன்னும் நுட்பியல் வேலைகள் பலவும் செய்ய வேண்டியிருக்கின்றன. நுட்பியற் காரணங்களைப் பட்டியலிட்டு தமிழக அரசிற்கும், நடுவண் அரசிற்கும், ஒருங்குறி நுட்பியற் குழுவுக்கும் அறிக்கை அனுப்பவேண்டும். குறைந்தது சனவரிக் கடைசிக்குள் அதைச் செய்யவேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

பி.கு. இந்தக் கட்டுரை எழுதி இங்கு வெளியிட்ட பின் படித்துப் பார்த்த ஒருசிலர் இது தங்களுக்குப் புரியவில்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். நான் எங்கு புரியவில்லை என்று சொல்லும்படி கேட்டிருந்தேன். அவர்களிடம் இருந்து பின்னூட்டு வருவதற்குள் ”ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம்” என்ற புலநெறிக்குத் தக்க, நான் சொல்ல வந்த கருத்தைப் படமாக்கி அதில் ஆங்கிலத்தில் ஒரு சில குறிப்புச் சொற்களும் சேர்த்து நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் தனிமடலில் அனுப்பியிருந்தார். [தமிழில் இந்தச் சொற்களை மொழிபெயர்த்துப் போடுவது ஒன்றும் பெரிய வேலையில்லை. இருந்தாலும் அவர் அனுப்பியதை அப்படியே வைத்து] அதை இப்பொழுது கட்டுரையின் ஊடே சேர்த்திருக்கிறேன். இது கட்டுரையின் புரிதலை எளிதாக்கும் என்று எண்ணுகிறேன். நண்பர் கண்ணபிரான் இரவிசங்கருக்கு என் நன்றிகள்.

அன்புடன்,
இராம.கி.

26 comments:

Anonymous said...

இதை கொஞ்சம் எல்லாருக்கும் புரியற மாதிரி எழுதினா நல்லா இருக்கும்.என்ன சொல்ல வர்றீங்கண்ணே புரியல.

யோசிப்பவர் said...

அனானி சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை. சொல்லும் வாதத்தை வலுவாக வைக்க, சொல்வது புரியும்படி இருக்க வேண்டாமா?!

தவறான புரிதலானால் மன்னிக்கவும்.

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கும், யோசிப்பவருக்கும்,

பொத்தாம் பொதுவாகப் புரியவில்லை என்று சொல்லுவதற்கு மாறாக எதுவரை புரிகிறது, எது புரியவில்லை என்று சொன்னீர்களானால், சற்று விளக்கம் தருவதற்கு வாய்ப்பாக இருக்கும். என்னால் முடிந்த விளக்கத்தைத் தருவேன்.

அன்புடன்,
இராம.கி.

அமர பாரதி said...

இராம.கி அய்யா அவர்களே,

இந்த கட்டுரை யாருக்காக என்பதில் உள்ள குழப்பமே பெயரில்லாதவர் மற்றும் யோசிப்பவரின் கேள்வியாக இருக்கிறது. இந்த கட்டுரையின் டார்கெட் ஆடியன்ஸ் (தமிழ் படுத்த முடியவில்லை மன்னிக்க) தினமும் பதிவுகள் வாசிக்கும் மக்கள் அல்ல என்று நினைக்கிறேன். மொத்தத்தில் நான் தெரிந்து கொண்டது நா.கணேசன் சரியான (தேவையான) முதிர்ச்சியின்மையால் அலங்கோலம் செய்கிறார் என்பதே).

”சம்ஸ்க்ருத க்ரந்த லிபி ஸபா” பற்றிய கேள்விக்கு பதிலளிக வேண்டிய தார்மீக கடமை அவருக்கு இருக்கிறது. இந்த மாதிரியான அடிப்படை கேள்விகளுக்கி சரியான ஆதாரம் கொடுக்காமல் இருந்தால் அவர் சொல்வது புளுகு என்றே கருத இடமிருக்கிறது. இந்த கட்டுரையை உரிய இடத்தில் தாங்கள் சேர்ப்பிக்க வேண்டுகிறேன்.

தகடூர் கோபி(Gopi) said...

இராம.கி ஐயா,

விரிவான கட்டுரைக்கு நன்றி.

கட்டுரை கொஞ்சம் புரிந்துகொள்ள இலகுவாக இல்லை என்றாலும், உள்ளடக்கம் கணமானது என்பதால் இன்னும் எளிதாகவும் சுருக்கமாகவும் எழுத இயலுமா என்று தெரியவில்லை.

தெளிவான அறிதலுக்கு பின் நானும் இது குறித்து ஒரு கட்டுரை எழுத எண்ணியுள்ளேன்.

ஒரு ஐயம்: நடுவன் அரசு அளித்த நான்காம் முன்மொழிவு கிரந்தத்தை SMP - துணைப் பன்மொழி தளத்தில் சேர்க்கக் கோருகிறதா அல்லது BMP - அடிப்படைப் பன்மொழி தளத்தில் சேர்க்கக் கோருகிறதா?

தகடூர் கோபி(Gopi) said...

மற்றொரு ஐயம்: “நீட்டித்த தமிழ்” கோரும் முதல் முன்மொழிவு அதை BMP யில் சேர்க்கக் கோரியதா அல்லது SMP யில் சேர்க்கக் கோரியதா?

சுப.நற்குணன்,மலேசியா. said...

அன்பின் ஐயா, வணக்கம்.

இரண்டு தொடர்களையும் படித்தேன். தொழில்நுட்பம் சார்ந்த செய்தியை உள்வாங்குவதில் கொஞ்சம் இடர்படுகிறேன். அதற்குக் காரணம், அத்துறைசார் அறிவு எனக்குப் போதாமைதான் என்பதையும் உணர்கிறேன். இருப்பினும், இன்னும் ஆழமான புரிதலுக்கு முயன்றுகொண்டிருக்கிறேன்.

இவ்வகை செய்திகள் பொது வாசிப்புக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால், துறைசார்ந்தவர்களுக்கு கற்கண்டல்லவா? இந்த நெடிய ஆய்வுக்காகத் தாங்கள் செலவிட்ட சத்தியும், நேரமும், உழைப்பும் நினைக்க நினைக்க நெகிழத்தக்கது ஐயா.

இப்படியான செய்திகளை எழுதுவோர் அரிதிலும் அரிது. தங்களின் அரிய பணிக்கு தலைதாழ்ந்த வணக்கம்.

Muthu said...

அன்புள்ள இராம.கி, அருமையான கட்டுரை. உங்கள் உழைப்புக்கு நன்றி. மேலோட்டமாக மட்டுமே புரிந்துகொண்டு உணர்ச்சி வயப்பட்டு எழும் நணபர்களுக்கு இது நல்ல விளக்கமாக அமையும் என நம்புகிறேன்.

ஒரு விளக்கம் தேவை : "Even though they have mixed the scripts, they have kept the individual scripts' distinct orthographic identities. Period." என்று கூறி இருக்கிறீகள். இதை விளக்கும் ஆவணங்கள் (sample documents) ஏதாவது கிடைக்குமா? JPGஇல் இருந்தாலும் தாழ்வில்லை.

அன்புடன்,

~ முத்து.

Sridhar Narayanan said...

நல்ல கட்டுரை. //1500 கால கிரந்த இருப்பில் நம் வரலாறும் அடங்கியிருக்கிறது.// மிகச் சரி.

வழக்கம் போல அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நிறைய சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைத்தது. பகிர்தலுக்கு நன்றி!

Unknown said...

படித்த வரை, புரிந்த வரை, நீங்கள் சொல்வது சரியென்றே தோன்றுகிறது. ஆனால், மேற்படி கட்டுரை, மக்களை அடைய இன்னும் புரிகிற மாதிரி இருந்தால் பரவாயில்லை.... சொல்வதற்கு மன்னிக்க!

//நாம்தான் தமிழுக்கான BMP பகுதியில் முட்டாள் தனமாய்ச் சேர்த்து வைத்திருக்கிறோம். அணுக்குறிப் புள்ளிகளே (atomic code points) இருக்க வேண்டும் என்ற ஒருங்குறியின் விதி அடிப்படையில் பார்த்தாலும் அவை ஒதுக்கியெறியப்பட வேண்டியவையே.] ஆகத் // ஆகத் என்று பத்தி முடிகிறது, ஏன்? அனேகமாக, இதுக்கு அப்புறம் தான் என் கவனம் சிதறத் தொடங்கியது.

//மேற்குறி கொண்டு சர நுட்பத்தால் (sequence technique) கிரந்த ஆவணம் உருவாக்கிச் சங்கதம் எழுதினால்// புரியலை அய்யா:-(

இராம.கி said...

அன்பிற்குரிய கெக்கெ பிக்குனி,

நீங்கள் குறிப்பிட்டிருந்த இரண்டு இடத்தையும் இப்பொழுது பாருங்கள், புரியும் என்று எண்ணுகிறேன்.

மேற்குறி போட்டு எழுதுவதென்பது superscript போட்டு எழுதுவது. தமிழில் கங்கை என்று எழுதுவதை ஆங்கிலத்தில் ganga என்று எழுதுகிறோமே? அந்த ga ஒலிப்பைத் தமிழ் க - வை வைத்துக் கொண்டு பக்கத்தில் 3 என்ற மேற்குறி போட்டுக் காட்டுவார்கள். இந்த நுட்பம் இப்பொழுதும் செய்யக் கூடியது தான். அதைத்தான் அங்கு சொன்னேன். (blogspot வலைப்பதிவுகளில் மேற்குறி போடவராதது இன்னொரு சிக்கல்.)

இன்னும் படித்துப் பாருங்கள்.

அன்புடன்,
இராம.கி.

தருமி said...

கண்ண பிரானின் படம் மிகச் சிறப்பாக மேலும் உங்கள் கருத்தைப் புரிய வைத்தது.

அடுத்து நாம் இதற்காகச் செய்ய வேண்டியவை நடந்து வருகிறதா என்று அறிந்து கொள்ள மிக்க ஆவல்.

V. Dhivakar said...

There were many many (in thousands) inscriptions are needed to be explained properly. People who cry foul, do not realise the actual necessity of Grandha' unicodification.

Your article is in right direction.

ரியோ said...

ஒரு சந்தேகம்,
இப்படி பழைய கல்வெட்டுக்களை ஆராய்வதற்காக கிரந்தத்தை ஒருங்குறியில் ஏற்ற வேண்டுமா? மக்களின் பயன்பாட்டில் உள்ள மொழிகளைத்தான் ஒருங்குறியில் ஏற்ற வேண்டுமென்று நினைக்கிறேன்.

இல்லாவிட்டால், ஒவ்வொருவரும் பழங்கால எழுத்து வடிவங்களையும், பலதரப்பட்ட சித்திர எழுத்துக்களையும் அவரவர் சரித்திரத்தை ஆராய்வதற்கு ஒருங்குறியேற்றினால் என்னவாகும்!!!

cheena (சீனா) said...

அன்பின் இராம,கி

நல்லதொரு கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இரு இடுகைகளையும் படித்தேன். புரிந்து கொள்வதில் சற்றே சிரமம் இருக்கிறது. தூய தமிழ்ச்சொற்கள் அதற்கான புழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்கள் தெரியாத காரணத்தால் - புரிந்து கொள்ள சற்றே சிரமமாக இருக்கிறது. இருப்பினும் இடுகையின் அடிப்படை நோக்கம் நன்றாகவே புரிகிறது. கேயாரெஸ்ஸின் பட விளக்கம் எளிதில் இடுகையின் உட்கருத்தினைப் புரிந்து கொள்ள உதவுகிறது. பிப்ரவரி 26 - 2011 வரை பொறுத்திருக்கலாம். ஆனால் அதற்குள் ஆவன செய்ய வேண்டுமே ! உரியவர்கள் அதற்கான செயலில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

நன்றி நன்றி அன்பின் இராம.கி
நட்புடன் சீனா

minolai said...

What is your point?
Be precise and dont worry what happened in pallava's etc
What we want now?

Writing methods have changed quiet a bit form pallava days. we have to design for the computer era. some adjustments and innovative improvements are must to write easily with computers. Now rewrite your story based on this idea.

minolai said...

What is your point here?
Be precise
Let us not worry what happened in pallava's days. Look forward. Writing methods have changed a lot in recent days. Let us accept what is good for typing( computer or mobile writing) we need a writing tool that works for the future. we have to propose that. Everything else is just bunch half baked ideas.

இராம.கி said...

அன்பிற்குரிய அமரபாரதி,

இந்தக் கட்டுரை உங்களைப் போன்ற ஆர்வலருக்காக எழுதப்பட்ட ஒன்றே.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய சுப.நற்குணன்,

என்னால் முடிந்தவரை சொல்லவேண்டிய செய்தியைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். ஒருங்குறி, குறியேற்றம், முன்மொழிவுகள் - எனவற்றைத் தெரியாதோருக்கு, என் கட்டுரை சரவலாய் இருக்கலாம். இதற்கும் மேல் எளிமைப்படுத்தினால் இன்னும் நீண்டுவிடும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய முத்து,

இந்தப் பின்னூட்டு நீங்கள் தான் அனுப்பியது என்று முதலிற் தெரியாது இருந்து விட்டேன். பின்னால் அறிந்து இன்னொரு பகுதியில் நீங்கள் கேட்ட ஆவணங்களை கண்ணியெடுத்துப் (scan) போட்டிருக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய ஸ்ரீதர் நாராயணன்,

உங்கள் கனிவிற்கு நன்றி

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய தருமி,

என் கருத்தைப் புரிந்து கொண்டதற்கு நன்றி. இரவிசங்கரின் படம் பெரிதும் துணை செய்திருக்கிறது.

நாம் செய்யவேண்டியது தமிழக அரசின் சிறப்புக் குழுவிற்குச் செய்திகளையும், கருத்துக்களையும் சொல்லி பிப் 26 க்குள் ஒரு பொதுக்கருத்து ஏற்படும் படி செய்வது தான்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

Dear Dhivakar,

Thank you for the understanding

iraama.ki

இராம.கி said...

அன்பிற்குரிய ரியோ,

மக்கள் பயன்பாட்டில் இருக்கும் மொழியெழுத்துக்கள் பலவும் ஏற்கனவே ஒருங்குறிக்குள் வந்துவிட்டன. இப்பொழுது அவ்வளவு பயன்படாத, ஆனால் ஆவணப்படுத்த வேண்டிய எழுத்துக்கள் கவனத்துள் கொண்டுவரப்படுகின்றன. அதில் கிரந்தம், சிந்துசமவெளி, சுமேரியன், போன்ற எழுத்துக்களும் அடக்கம். இது நடப்பது இயற்கையே.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய சீனா,

தங்கள் கருத்திற்கு நன்றி. பேச்சுவழக்காய்க் கலப்பு மொழியில் எழுதாது, கூடிய மட்டும் நல்ல தமிழில் எழுதுவது என் எழுத்துநடை. நாலுதடவை என் கட்டுரைகளைப் படித்துவந்தால் அந்த நடை உங்களுக்குப் பழக்கமாகி விடும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

Dear MInolai,

After hearing the entire Ramayana, one listener, it seems, asked the story teller whether Rama was the uncle of Seetha. You are presently at that stage.

I don't think you have understood anything of what I have wriiten. Perhaps this is a subject that is of no interest to you.

Thank you very much for having come over here.

iraama.ki.