Monday, November 22, 2010

பெருமாள்

அண்மையில் கண்ணபிரான் இரவிசங்கர் ”பெருமாள் என்ற சொல் எங்கு, எப்பொழுது எழுந்தது?” என்று ஒரு மடற்குழுவில் ஐயம் எழுப்பியிருந்தார். திருமால் (=நெடுமால், மாயவன், நெடியோன்) என்ற சொல் தானே சங்க காலத்தில் இருந்தது? அது எப்படிப் பெருமாளாகப் பொதுவழக்கில் மாறியது? ஒருவேளை ஏதேனும் மரபு சார்ந்த குழு வழக்கில் பெருமாள் என்ற சொல் இருந்ததா? ஒருவேளை பேச்சுவழக்கில் மதில்>மதிள் போலப் “பெருமால்” பெருமாளாயிற்றா?- என்ற கேள்விகளும் அவர் கேட்பில் அடங்கியிருந்தன. ஆழமான கேள்வி. சட்டென்று விடை சொல்லிவிட முடியாது. கொஞ்சம் துழாவியபின் ஓரளவு கண்டுபிடிக்க முடிந்தது. அறுதியான முடிவிற்கு இன்னும் வரமுடியவில்லை. ”நமக்குத் தெரிந்ததைக் கோடி காட்டுவோம். இது சரியா, தவறா என்பதை மற்ற அன்பர்கள் தொடரட்டும்” என்று எழுதுகிறேன். (பெருமால்>பெருமாள் என்ற திரிவு நடந்திருக்க வாய்ப்பில்லை. நெடுமால் என்ற புழக்கம் இருந்திருக்கிறது. ஆனால் பெருமால் என்ற சொல்லை நான் சங்க இலக்கியத்தில் எங்கணும் கண்டதில்லை. யாரேனும் கண்டிருந்தாற் சொல்லுங்கள்.)

[”குழு வழக்கு” என்ற சொல்லை திருவிண்ணவர்கள் ”பரிபாஷை” என்றே தமக்குள் சொல்லிக் கொள்வது ஏன் என்றும் புரியவில்லை. ”இதற்குள் மெய்ப்பொருள் அடங்கியிருக்கிறது; பரிபாஷை என்றசொல்லை வேறு மாதிரிச் சொல்லக் கூடாது” என்று ”வியாக்கியானம்” பண்ணுவதும், ”meta language" என்று மொழிபெயர்ப்பதும், எனக்கு விளங்கவில்லை. இது போன்ற வியாக்கியானங்களால் குழுத்தன்மை தான் காப்பாற்றப் படும். நல்லதமிழ்ப் பயன்பாடு அழிந்து போகும்.

தமிழிற் பரிமாற்றம், பரிவட்டம், பரிவாரம் என்ற சொற்களுண்டு. பரிமாற்றம் என்பது ஒருவருக்கொருவர் தம்மிடையே கொடுத்துக்கொள்ளும் மாற்றம். ஒருவருக்கொருவர் என்னும் போது ஒரு குழுவில் அடங்கியவரைக் குறிக்கும். அதோடு பரி(வு)யுள்ளவர் ஒரு குழுவில் தான் இருப்பர். பரிதல் என்பது குழுவிற்குள் இருப்போர் மீது நேயம் (பரிவு) காட்டுதல் என்றே பொருள் கொள்ளும். பரி என்ற சொல் சுற்றி வளைத்து ஒரே கருத்தும் உறவும் கொண்ட குழுவைத்தான் குறிக்கும்.

பரிவட்டம் என்பது தலையைச் சுற்றிக் கட்டும் துணி வட்டம். இங்கு பரிதல் என்பது சுற்றுதல்.

பரிவாரம் என்பது அரசன் அரசியர்க்கு (இந்தக் காலத்தில் தலைவன்/தலைவியர்க்கு) எப்பொழுதும் உடனிருந்து பணி செய்பவர்களின் குழு/தொகுதி

”குழு வழக்கு” என்பது ”பரிபாஷை”க்கு நிகரான நல்ல தமிழ். அதைப் பயன்படுத்த விரும்பாது ”பரிபாஷை” என்ற இரு பிறப்பிக் கூட்டுச்சொல்லைப் பிடித்துத் தொங்குவர்க்கு என்ன சொன்னாலும் புரியப் போவதில்லை. அவர்கள் குழு வழக்கு அவர்களுக்கு என்று விட்டுவிடலாம். கொச்சை வழக்கு, நூல் வழக்கு எனவிருந்தால் குழு வழக்கு என்ற சொல் இருக்கக் கூடாதா, என்ன? திருவிண்ணவ மரபின் குழு வழக்கு - ஸ்ரீவைஷ்ணவச் சம்ப்ரதாயப் பரிபாஷை.]

முன்னாற் சொன்ன மடற்குழுவில் பேரா. இராசம் அவர்கள் குலோத்துங்க சோழன் உலாவில் இருந்தும் பல்வேறு பிற்காலச் சோழ, பாண்டிய, குறுநில மன்னர் கல்வெட்டுக்களில் இருந்தும் சில மேற்கோள்களைக் எடுத்துக் கொடுத்திருந்தார்கள். முழுமை கருதி அவற்றை அப்படியே இங்கு வெட்டியொட்டியிருக்கிறேன். அவர் சுட்டிய சான்றுகள் கி.பி.1035 வரைக்கும் போகின்றன. அதற்கும் மேல் எவ்வளவு காலம் போகும் என்பதை இதற்குக் கீழே பார்ப்போம்.

----------------------------------
குலோத்துங்க சோழன் உலா

சேயினும் நல்ல பெருமாள் திருத்தடந்தோள்
தோயினும் தோய மனம் துணியும்
ஆயினும் (கண்ணி 167)

..............................................ஓதிமமே
எங்கள் பெருமாளை இங்கே தருவான், நீ
உங்கள் பெருமானுழைச் செல்வாய் (கண்ணிகள் 202-203)

.......................................உலகில்
பெரிய பெருமாள் பெரும் பவனி வீதி
இரிய எதிர் ஏற்று இழந்தாள்
வரி வளை (கண்ணிகள் 207-208)

பழிச்சி வணங்கிப் பெருமாள் பவனி
எழுச்சி முரசு ஓர்ந்திருந்தாள் (கண்ணி 276)

..................................திரு உலாப்
போதும் பெருமாள் புகுதும் அளவும் இங்கு
யாதும் பயிலாது இருத்துமோ (கண்ணிகள் 301-302)

...................................பெருமாளும்
கொற்றக் குடைக்கீழ் வடமேருக் குன்று அனைய
வெற்றிக் களி யானைமேல் வந்தான் (கண்ணிகள் 329-330)

......................................... ஞாலத்தோர்
தெய்வப் பெருமாளும் சேவடி முன் குவித்துக்
கைவைத்து நின்றவளைக் கண்ணுற்றான் (கண்ணி 357-358)
++++++++++++++++++++++++++++++++++++++

கல்வெட்டுச் சான்றுகள் ”சாசனமாலை” என்ற கல்வெட்டுக்கள் அடங்கிய நூலில் தேடியபோது கிடைத்ததாக பேரா. இராசம் சொல்லியிருக்கிறார்கள்.

தென் ஆர்க்காடு ஜில்லா, திருக்கோவலூர்த் திருவிக்கிரமப் பெருமாள் கோயிலில் உள்ளது. (ராஜேந்திரன் 1, கி. பி. 1035-1036)

சரவணப்பெருமாள் பட்டர் "ரக்த காணிக்கை நிலம்: தெங்கால் புரவில் அம்மாபாகத்துக்குத் தெற்கு, மதுரை பாதைக்கும் குளத்துக்கரைக்கும் கிளக்கு, வீரப்பபிள்ளை தெப்பக்குளத்துக்கு
மேற்கு, தெப்பக்குளம் வாய்க்காலுக்கு வடக்கு, - இன்னாங்கெல்கைக்கு உள்ப்பட்ட திருத்தல் நிலம் ஒருமாவும், கிர்ஷ்ணாபுரம் குடியிருப்புக்கு மேற்கு, சுந்தரபட்டர் ஆண்டிச்செய்க்கி கிழக்கு, சரவணப்பெருமாள்பட்டர் திருத்தலுக்கும் வாய்க்காலுக்கும் தெற்கு, மதுரைப் பாதைக்கும் வடக்கு, இன்னாங்கெல்கைக்கு உள்ப்பட்ட ஊரடிநிலம் ஒருமாவும், ஆக ரெண்டுசெய்யும்..." (கர்நாடக நவாப்பு, கி. பி. 1793)

ராஜராஜன் - 3, கி. பி. 1231-32 தென் ஆர்க்காடு ஜில்லா, கூடலூர் தாலுகா திருவகீந்திபுரம் தேவநாயகப் பெருமாள் கோயிலில் உள்ளது.

இவை இவ்வூர் கணக்கு செருந்திவனப் பெருமாள் எழுத்து.
... ... ...
இவை விஞ்சத்தரையர் சைந்த்ராதன்மைக்கு இவை பெருமாள்ப் பிள்ளை எழுத்து.
... ... ...
இது அண்ண[ல்] வாயில் உதையப் பெருமாள் எழுத்து (ஜடாவர்மன் வீர பாண்டியன் - 2, கி. பி. 1266)

இவ் ஊரில் நாயனாற்குப் பங்கு இரண்டும், உகந்தருளப் பண்ணுகிற பெருமாளுக்கு பங்கு இரண்டும் ... இறையிலியாகவும்... (சம்புவராயன்)

...முத்தமிழ் மாலை முழுவதும் உணர்ந்த சித்திர மேழிப் பெரியநாட்டோம் வைத்துக்குடுத்த பரிசாவது -- ... எழுபத்தொன்பது நாட்டுப் பதினெண் பூமிச் சித்திர மேழி விண்ணகரான
திருவிடைகழி நின்றருளின பெருமாள் கோயில் அனாதியாக மேழித் திருத்தோரணமும் ஸ்ரீ பூமிதேவியும் ப்ரதிஷ்டை பண்ணி... (சித்திர மேழிப் பெரிய நாட்டவர், தென் ஆர்க்காடு ஜில்லா,
திருக்கோவலூரில் திருவிக்கிரமப் பெருமாள் கோயிலில் உள்ளது.)

இப்படிக்கு சொக்க ஞானசம்பந்தன் பெருமாள் எழுத்து (ஸுல்தான் ஆட்சிக்காலம். திருச்சிராப்பள்ளி ஜில்லா, திருமெய்யம் தாலுகா, ராங்கியம் பூமீச்வரர் கோயிலில் உள்ளது.)

முன்னாள் பெருமாள். எம்மண்டலமும் கொண்ட பெருமாள். சுந்தர பாண்டிய தேவர் நாளில்... (இராஜநாராயண சம்புவராயர், கி. பி. 1342)

...பணிமாருமிடத்து பெருமாளுக்கு முதலியார்க்கும் பதியிலார் முன்பும் தேவரடியார் இவர்கள் பின்புமாக பணிமாரக் கடவார்களாகவும்... ... ... (இராஜநாராயண சம்புவராயர், கி. பி. 1342)

...உடையார் விக்ரமபாண்டீச்வரமுடைய நாயனார் தேவதானமும் நயினார் திருவிருந்த பெருமாள் திருவிடையாட்டமும், ஸ்ரீக்ருஷ்ணன் திருவிடையாட்டமும்...முகந்தானத்து நாராயண
ஸ்ரீபாதங்கள் மடப்புறமும்... இராசகுலரா ... காலுக்கு நயினார் திருவிருந்த பெருமாள் திருவிடையாட்டமான ஆகவராம...துக்கும்...(அரிகேஸரி பராக்கிரம பாண்டியன், கி. பி. 1452)

பெருமாள் அரிகேஸரி தேவர் என்று திருநாமம் உடைய பொன்னின் பெருமாள் பராக்ரம பாண்டிய தேவர்... எங்கள் கர்த்தர் பெருமாள் அரிகேஸரி தேவர் என்று திருநாமமுடைய பொன்னின் பெருமாள் பராக்ரம பாண்ட்ய தேவர் ...(அரிகேஸரி பராக்கிரம பாண்டியன், 1462)

பெருமாள் சீபத்மனாப பெருமாளுக்கு நாம் கல்ப்பித்த சங்கர நாராயண மார்த்தாண்டன் பூசை னடக்கும் சீபத்மநாபன் திருமடத்தில் பூசைக்கும் நமக்காரம் உள்பட்ட வகைக்கும்...(முதலியார் ஓலைகள், கி. பி. 1467)

அறந்தாங்கி அரசு அச்சமரியாத பெருமாள். அலவிலஞ்சாத பெருமாள், ... ஆட்டுக்கு ஆனை வழங்கும் பெருமாள், ஏழுநாளையில் ஈழந்திறை கொண்ட பெருமாள்,கோன் பாட ...யாத
பெருமாள், ... ஏகப் பெருமாள் தொண்டைமானார் புத்திரன் ...(கிருஷ்ணதேவ மஹாராயர், கி. பி. 1518)

+++++++++++++++++++++++++++++++++++

இனி நாம் கண்ட சான்றுகளுக்கு வருவோம். மேலே கொடுத்த சான்றுகளுக்கும் முற்காலத்தில் ஒரு சான்றைத் திருப்பதி-திருமலையிற் காணலாம். இதைத் திருமலைக் கோயிலில் முதற்சுற்றாலையின் வடக்குச் சுவரில் பல்லவ அரசன் பார்த்திபேந்திர பல்லவன் காலத்துக் கல்வெட்டிற் பார்க்கலாம். இந்தக் கல்வெட்டின் காலம். கி.பி.966 ஆகும். கல்கியின் ”பொன்னியின் செல்வனில்” வல்லவரையன் வந்தியத்தேவனோடும், கந்தமாறனோடும் சேர்ந்து சோழ இளவரசன் ஆதித்திய கரிகாலனுக்குத் தோழனாய் வரும் பார்த்திபேந்திர பல்லவன் தான் இவன். சுந்தரசோழன் காலத்தில் சோழருக்கு அடங்கிய அரசப் பொறுப்புக் கொண்ட இவனுக்கும் கீழ்ப்பட்ட சத்திவிடங்கக் காடவராயன் என்பவன் மனைவியாகிய சாமவை என்னும் பெருந்தேவி மூலவருக்குச் சில திருவாபரணங்களும், வெள்ளியால் ஊருலவர் திருமேனியும் படைத்து ஊருலவருக்கு மணவாளப் பெருமாள் என்றும் பெயரிட்டு திருப்பணி செய்திருக்கிறாள். (காலப்போக்கில் இப்பொழுது திருமலையில் 4 ஊருலவத் திருமேனிகள் உண்டு.) கிரந்தமும் தமிழும் கலந்த அந்தக் கல்வெட்டில் இருந்து கூடியமட்டும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். [இது திருமலை-திருப்பதித் தேவத்தானம் 1998 இல் வெளியிட்ட “Early Inscriptions" என்ற நூலில் 13-14 ஆம் பக்கங்களில் இருக்கிறது.]
------------------------------------
1. ஸ்வஸ்திஸ்ரீ கோப்பாத்ரமஹேந்த்ரபன்மருக்கு யாண்டு 14 வது சத்திவிடங்கனாகிய ஸ்ரீகாடபட்டிகள் தேவியார் பல்லவப்பேற்க்கடையார் மகள் சாமவையாகிய காடவன் பெருந்தேவியேன்
ஸ்ரீவேங்கடத்து எழுந்தருளி நின்ற பெருமானடிகளுக்கு கர்ம்மார்ச்சனை கொண்டருளி திருவி(ள்)ளங் கோயிலில் எழுந்தருளுவித்த வெள்ளித் திருமேனியின் திருமுடி-

2. யில[ழுத்தின] வயிரம் 23 ம் பருமுத்து 16 நாயகமான மாணிக்கம் 2 ம் தடவிக் கட்டின மாணிக்கம் 3ம் ஆக மாணிக்கம் 5 னால் திருமுடி ஒன்றும் திருக்காதில் பொன்னின் மகரம் இ[ர]ண்டும் பவழத்தின் கோப்பு ஒன்றும் திருக்கழுத்தின் மாலையிலேறின வயிரம் 14 ம் மாணிக்கம் 3 ம் பருமுத்து 11ம் நேர்முத்து பல[வும்] இட்டுக் கட்டின மாலை [4]ம் பொன்னின்
உதரபெந்த[ன]ம் 1 ம் திருவரைப்பட்டிகை 1 க்கு ஈடுக்கட்டின மாணிக்கம் 4 னால் பட்டிகை 1 ம் பாகுவலையம் 2 க்கு தடவிக் கட்டின மாணிக்-

3. கம் 2 ம் தடவிக் கட்டின மாணிக்கம் 2 கட்டின திருச்சந்தம் 4 ம் திருக்கழுத்தின் வளையில் 4 ம் திருக்காலுக்கழுத்தின காறை 2 ம் இடையிட்ட பொன்னின் மணியும் பவழமும் முத்தும்
ஆக உரு 52 பாதசாயலம் 2 ம் வெள்ளிப்ரபையில் ஏறின நாயகமான மாணீக்கம் [1] இத்தனை ஆபரணங்களும் இட்டு செய்த பொன் 47 கழஞ்சும் இத்தனையும் கொண்டு அபிஷேகமும்
செய்வித்து எழுந்தருளுவித்த மணவாளப்பெருமாளுக்கு ஸ்ரீவேங்கட கோட்டத்து திருக்குடவூர்நாட்டு திருச்சுகனூர் சபையார் பக்கலும் மடமுடை-

4. ய இலக்ஷுமணநம்பி பக்கலும் பொன்குடுத்[து] விலை கொண்டு திருவிளங்கோயில் பெருமாளுக்கும் பொன் கொடுத்து இறை இழித்திக்கொண்ட நிலமும் சபையார் பக்கல் கொண்ட
நிலமும் நந்தி எரிப்பட்டியும் மடுப்பூட்டையும் இலக்ஷுமணநம்பி அடைகொண்ட நிலமும் மதுசூதன் ஆவியரையும் புருஷோத்தமன் பட்டியும் ஆக மூன்று பட்டி நிலமும் கடிகைக் கோலால்
அளந்து பதினறுசாண்கோலால் மூவாயிரம் குழி விலை கொண்டு சபையாற்கும் தேவ[ற்]கும் விலை பொன் குடுத்து இறை இழித்[தி] மணவாளப் பெருமாளுக்கு நிமந்த-

5. த்துக்கு வைத்தபடியாவது நிமந்தம் நானாழி அரிசி திருவமுதும் திருனந்தாவிளக்கு ஒன்றும் இரண்டு அயநசங்க்ராந்தியும் இரண்டு விஷுசங்க்ராந்தியும் திருமஞ்சனம் புகுவிப்பதற்கும் புரட்டாதித் திருநாள் எழுந்தருளிப் பொதுகைக்கு [விழா]வெழுந்தருளுமன்றுமதன் முன்பும் இரண்டுநாள் திருவிழா எழுந்தருளுவிப்பதா[க]வும் சித்திரை முதலாக திருமுளையட்டி
ஒன்பதுநாள் திருவிழாவெழுந்தருளிவிக்கவும் இத்தனையுஞ் செய்விப்பார் திருவேங்கடத்து மாடாபத்தியஞ் செய்வாரேயாகவும் இந்நிலம் இறைகாத்து விட சபையார் இரக்ஷிப்பாராகவும்
இப்பரிசு சந்த்ராதித்தவரை நிற்பதாக

6. செய்தேன் சத்திவிடங்கனாகிய காடவன் பெருந்தேவியார் பல்லவப்பேற்க்கடையார் மகள் சாமவையாகிய காடவன் பெருந்தேவியேன் இத்தன்மம் இரக்ஷிப்பார் ஸ்ரீபாதம் என் தலைமேலது ஸ்ரீவைஷ்ணவர்கள் இரக்ஷை [.] இவை சாத்தந்தை எழுத்து.
------------------------------------

இதே போல சென்னையிலிருந்து மாமல்லபுரம் போகும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் இருக்கும் திருவிடவெந்தை வராகப் பெருமாள் கோயிற் கருவறைடின் வடக்கு அடித்தானத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டும் அங்கிருக்கும் மணவாளப் பெருமாள் பற்றிச் சொல்கிறது. கல்வெட்டின் காலம் கி.பி. 979. [இது தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி III பகுதி III இல் 125 ஆம் கல்வெட்டாக வெளியிடப்பட்டிருக்கிறது.]

1. ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரிபன்மர்க்கு யாண்டு ஆறாவது ஆமூர் கோட்டத்துப்
2. படுவூர் நாட்டு திருவிடவந்தை ஊரோங் கையெழுத்து. சோணாட்டு
3. வடகரை இந்நம்பர்கி[ழா]ந் நக்கன் ஏநாதி கையா[ல் யா]ங்கள் கொ[ண்டுகடவ] பொ
4. ந் முப்பதின் கழஞ்சு இப்பொந் கொண்டுகடவோம் இப்பொன் முப்பதின் கழஞ்சு பொந்நுக்கு இ(வ்)வுர்-
5. ருடைய மணவாளப் பெருமாளுக்கு நந்தாவிளக்கு ஒன்றிநுக்கு நிச்சம் உழக்கெண்ணைப்படி தொண்ணூ-
6. ற்று நாழி எண்ணை அட்டுவோமாகவும் ஒட்டிக்குடுத்து பொந் கொண்ட்டோ-
7. ம் இப்பொந்நால் எண்ணை சந்த்ராதித்தவர்க் கட்டுவோமாகவும் பொன் கு-
8. டுத்து பொலியூட்டு சொல்லப்பெறாதோமாகவும் ஒட்டிக்குடுத்தோ[ம்] ]ஊ]-
9. ரோம். இதற்றிறம்பில் உண்டிகையும் பட்டிகையும் காட்டி தந்மாஸனத்திலே நிச்-
10. சம் நாலேகாற்காணம் படுவோமாகவும் அ[ன்]றாள் கோவுக்கு நித்தம் மஞ்சாடி
11. பொன் மந்றுபாடு இறுப்போமாகவு[ம்] இத்தண்டமு[ம்] மன்றுபாடும் இறுத்-
12. து இவ்வெண்ணை முட்டாமைத் திருவுண்ணாழிகை வாரியர் வசமே எரி-
13. க்க அட்டுவோமாக இட்டுக்குடுத்தோ[ம்] [ஊ]ரோம்.

இதே திருவிடவெந்தைக் கோயிலில் கி.பி.960 ஐச் சேர்ந்த பார்த்திபேந்திர பல்லவனின் கல்வெட்டும் இருக்கிறது. அதிலும் மணவாளப் பெருமாள் பற்றிய குறிப்பு வருகிறது. [இது தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி III பகுதி III இல் 186 ஆம் கல்வெட்டாக வெளியிடப்பட்டிருக்கிறது.]

1. ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டியநைத் தலைகொண்ட கோவிராஜ மாராயர்க்கு யாண்டு எட்டாவது ஆமூர்க் கோட்டத்துப் படுவூர் நாட்[டுத் தேவதாநத் தி]ரு-
2. விடவந்தை ஸபையோமும் ஊரோமும் கைய்யெழுத்து. தலைசயநப் புறமாகிய தைய்யூர் வைய்யொடுகி[ழா]ந் வைகுனடிகளும் இவந் தம்பி தாழி எருமாநும்
3. இவ்விருவரும் திருவிடவந்தை ஸ்ரீவராகஸ்[வாமி]களுக்கு அட்டுவித்த திருமேநி மணவா[ள]ப்பெருமாளுக்கு ஈவிருவருங் குடுத்த பொந்.............[சு இப்] பொந்(ப்) ப[தி][னை]ங்க-
4. ழஞ்சும் (இப்பொன்) கொண்டு கட[வோம்] இப்பொந்னுக்குப் பலிசை அட்ட இதற்க்கு சந்த்ராதித்தவற் நிசதி அஞ்ஞாழிப்படிக்கு அட்ட ஆண்டுதொறும் அளக்க-
5. க்க்[ட]வ நெல்லு ஐம்பத்தறுநாடி கு[ட்டை] நெல்லும் பங்குநி சித்திரையுமகப்பட ஈரமும் பதரும் நீக்கி துய்வாக்கி எண்ணாழிக் காலா[ல்] அட்டுவோ[ம்]மா-
6. நோம் [அ]ட்டாத ஆண்டுதொறும் ஐம்பத்தறு நாடி குட்டை நெல்லுங் கைக்கொன்உ அளந்து குடுக்கக் கடவோமாநோம் இதற்றிறம்பில் த[ன்மா]ஸநமுதலாக-
7. த் தாந்வேண்டு கோவு[க்]கு நி[ச]தி [அ]ரைக்கால் பொந் மந்றப்பெறூவதாகவும் இத்தண்டப்பட்டும் இந்னெல்லு வழுவாமே அளந்து குடுப்பதா-
8. கவூம் இதற்க்கஹிதஞ் சொன்னார் கெங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவங் கொள்வார் கொள்ளவும் இத்தநம் ரக்ஷி-
9. ப்பார் ஸ்ரீபாதம் எந் தலைமேலநவாக இப்பரிசு ஒட்டிக்குடுத்தோம் முற்சொல்லப்பட்ட திருவிடவந்தை ஸபையோமும் ஊரோமும் ஆக இரண்டு திறத்தோம்.

மேலே சொன்ன மூன்று கல்வெட்டுக்கள் மூலம் கி.பி.960க்கு வந்துவிட்டோம். இனி இதற்கும் முன்னால் போகமுடிகிறது. அது முதற் பராந்தகன் ஆதித்த சோழன் காலத்தது. அது திருக்கோவலூர் வட்டத்தைச் சேர்ந்த கீழூர் வீரட்டனேசுவரர் திருக்கோயிலில் உள்ள சுற்றாலைப் பாறையில் இருக்கும் கல்வெட்டாகும். அது சற்று சிதைந்து காணப்படுகிறது. [எனவே கல்வெட்டை இங்கு நான் பெயர்த்து எழுதவில்லை.] இதில் 7வது வரியில் “பெருமாளுக்கு” என்ற சொல் வருகிறது. அதை இறைவன் திருமேனியைக் குறித்ததா, மாந்தரைக் குறித்ததா என்று சொல்லமுடியவில்லை. முதலாம் ஆதித்த சோழனின் காலம் கி.பி.871-907 ஆகும். இந்தக் கல்வெட்டு அவன் ஆட்சியின் 13ஆம் ஆண்டில் வெட்டப்பட்டிருக்கிறது. அதாவது கல்வெட்டின் காலம் கி.பி. 884 ஆகும். [இது தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி IV இல் 927 ஆம் கல்வெட்டாக வெளியிடப்பட்டிருக்கிறது.]

ஆக ஒன்பதாம் நூற்றாண்டு வரை வந்துவிட்டோம். இதற்கு முன்னால் விசயாலயன் காலமும், பல்லவர் காலமும் தான் ஆய்வு செய்யவேண்டும். என்னிடம் இந்தக் கல்வெட்டு விவரங்கள் இல்லை. இவை இருப்பவர் தேடிப் பார்க்கலாம்.

இனிப் பெருமாள் என்ற சொல்லிற்கு வருவோம். பல்லவர் காலத்தில் இருந்தே (களப்பாளர் காலம் ஆயவேண்டும்.) இறைவன்/இறைவி, அரசர், அரச குடும்பத்தார், அரசகுடும்பத்திற் பிறந்து அரசு பெறாது வாழும் பெரியோர் ஆகியோர் பெருமானடிகள் என்று தான் அழைக்கப்பட்டனர். அது நிலவுடைமைக் குமுகாய வழக்கம். எப்படி நம்பூதிரிகளை அவர்கள் இவர்கள் என்று அழைக்கக் கூடாதோ, ”திருமேனி” “அத்தேகம்” என்று மிகப் பணிந்து அழைக்க வேண்டுமோ அதுபோல இந்தத் தலைவர்கள் பெருமான் அடிகள் என்று அழைக்கப் பட்டார்கள். அதாவது ”ஸ்ரீபாதம்” என்று வடமொழியில் அழைக்கும் முறை. அந்தப் பாதங்களை வணங்குதல் முறை என்றே உணரப்பட்டது. சரணாகுதி மரபும் இந்த நிலவுடைமைக் குமுகாயத்தில் தான் விண்ணவநெறியில் எழுந்தது. சரணாகுவதற்கு பாதம்/ அடிகள் முகன்மையானதல்லவா? இந்த அடிகள் என்ற பயன்பாடு சிலம்பிலேயே தொடங்கிவிட்டது. ஆணாதிக்கக் குமுகாயத்தில் வளர்ந்த கோவலனை மதுரையில் மாதரி வீட்டில் ”அடிகள்” என்றுதான் கண்ணகி அழைப்பாள். இளங்கோ அடிகள் என்பதை வைத்து அவர் துறவி என்று சொல்வதைக் காட்டிலும் பெருந்தனக்காரர்/அரச குடும்பத்தார் என்பதே பெரிதாக இருந்திருக்கலாம்.

இந்தப் பெருமானடிகளின் சுருக்கமாய்த்தான் பெருமான் என்றசொல் எழுந்தது. ஆலமர் செல்வனைச் சிவபெருமான் என்றழைப்பது இப்படித்தான். (இன்னொரு வகையில் இறைவனைப் பெருமானர் (=பார்ப்பனர்) கூட்டத்தோடு ஒன்றுபடுத்தி அழைக்கும் போக்கும் உள்ளமைந்து இருந்தது. பல்லவர், பேரசுச் சோழர் காலத்து நிலவுடைமைக் குமுகாயத்தில் பெருமானர் பெரும்பங்கு கொண்டவர். ஊர் ஊராகச் சதுர்வேதி மங்கலங்கள் கொடுக்கப்பட்டன. இறைவன் பெயர் பெருமான் ஆகியது வியப்பில்லை.

அடுத்து பெருமாள் என்னும் சொல்லிற்கு வருவோம். இதுவும் பெருமானடிகள் என்பதன் இன்னொரு வகைச் சுருக்கம் தான். முதலில் ஊருலவத் திருமேனிகளுக்கு ஏற்பட்டுப் பின்னால் மூலவருக்கும், மாந்தருக்கும் பயன்பட்டது போலும். [மணவாளப் பெருமாளுக்கும் திருமலை சீனிவாசப் பெருமாளுக்கும் கல்யாண வேங்கடேசருக்கும், உறையூர் அழகிய மணவாளனுக்கும், திருவரங்க ஊருலவரின் அழகிய மணவாளன் என்ற பெயருக்கும், திருவிடவந்தை நித்ய கல்யாணப் பெருமாளுக்கும் இருக்கக் கூடிய தொடர்பை இன்னொரு கட்டுரையிற் பேசுவோம். இங்கு பேசினால் பொருள் விலகிப் போகும்.] அடிகள் எப்படிப் ஆட்சியைக் குறித்ததோ அதே போல ஆள், ஆளி, ஆளன், ஆள்வான், ஆண்டவன் போன்றவை ஆட்சி செய்யும் தலைவனைக் (ruler) குறித்தன. ஆளன்>ஆடன்>ஆதன் என்று வளர்ச்சி பெற்றதையும் பாவாணர் வழி சொற்பிறப்பியலால் உணரலாம். ஆள், ஆளி, ஆளன், ஆடன், ஆடவர் போன்ற சொற்களை உரையாசிரியர் பல இடங்களில் வெறும் ஆண்மக்கள் என்றே பொருள் கொண்டிருக்கின்றனர். அதைக் காட்டிலும் சில இடங்களில் ஆட்சி செய்பவர் என்று பொருள் கொள்ளுவது இன்னுஞ் சிறப்பான பொருளைத் தரும். காட்டாக புறம் 187 ஔவையார் பாடிய

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!

என்ற பாடலில் ஆடவர் என்ற சொல்லிற்கு ruler என்னும் பொருள் கொண்டால் ஆழமான பொருள் கிடைக்கும். அதே போல பெருமாள் என்ற சொல்லில் ஆள் என்பதற்கு மாந்தன், ஆண் என்ற பொருள் கொள்ளாது பெரும் ஆள் = பெருமாள் (big ruler) என்ற பொருள் கொண்டால் நம்மை ஆளும் தலைவனைக்/இறைவனைக் குறித்தது புரியும். இது விதப்பாக விண்ணவத்திலும், பொதுவாக மற்ற இடங்களிலும் இறைவர், மாந்தர் ஆகியோரைக் குறித்திருக்கிறது. பெருமாள் என்ற சொல் சங்க இலக்கியத்தில் ஏற்பட்டிருக்க வாய்ப்புக் குறைவு. அது நிலவுடைமைக் குமுகாயம் கொஞ்சங் கொஞ்சமாய்த் தோன்றிக் கொண்டிருந்த காலம். வளர்ந்து ஓங்கி நின்ற காலமல்ல. அது ஓங்கி உயர்ந்தது பேரரசுச் சோழர் காலத்திற்றான் ஆகும். இருந்தாலும் பல்லவர், களப்பாளர் காலத்து ஆவணங்களை ஆழ ஆய்வது சரியான விளக்கத்தை அளிக்கும்.

பெருமானடிகள் என்ற சொல் முற்றிலும் மறைந்த காலம் எப்பொழுது என்றும் நான் ஆய்ந்து பார்க்கவில்லை. யாராவது செய்து பார்ப்பது வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவும்.

ஆள்வான் என்ற சொல்லின் நேர் எதிரானது ஆழ்வான் என்ற சொல்லாகும். தலைவன் ஆள்வான், அடிமை ஆழ்வான். இதையும் விளக்கத் தொடங்கினால் விண்ணவத்தின் சரணாகுதிக் கொள்கை முற்றிலும் புரியும். சரணாகுதல் குரங்கு முறையா, பூனை முறையா என்பதில் தான் வேறுபாடு கொள்ளமுடியும். [தென்கலை, வடகலை வேறுபாடு மெய்ப்பொருள் அடிப்படையில் அதில் மட்டுமே தென்படும்.]

காலம் மாறிவிட்டது. குமுகாயங்களும் மாறிவிட்டன. நிலவுடைமை ஒருபக்கம் அழிந்து கொண்டிருக்க முதலியம் வந்து சேர்ந்து விட்டது. இந்த மாற்றங்களையும் மீறி பெருமாள், ஆண்டவன் போன்ற சொற்கள் இப்பொழுது புழங்குகின்றன. புதுப் பொருட்பாடு பெருகின்றது. எந்த மாந்தனையும் பெருமாள் என்று மிகு மரியாதை வைத்து அழைப்பதாகத் தெரியவில்லை. [பெருமாள் என்ற இயற்பெயர் சில மாந்தருக்கு இருக்கலாம்.] இறைவனுக்கு மட்டுமே, கூறிப்பாக விண்ணவனுக்கு மட்டுமே, இந்தக் காலத்திற் பெருமாள் என்ற சொல் பயில்கிறது.

அன்புடன்,
இராம.கி.

16 comments:

Vijayakumar Subburaj said...

மால் / மாள் - மா + ஆள் :-)

வளம் (வலம்) - இடர்பாடு (இடம்)

தமிழ் said...

ந‌ன்றி அய்யா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முதலில் நெஞ்சார்ந்த நன்றி இராம.கி ஐயா!
அட, சின்னப் பையன் கேக்குற கேள்வி தானே-ன்னு ஒதுக்காம, அங்கு கேட்ட கேள்விக்கு, இங்கு பதில் உரைத்தமைக்கு!

இதற்கு முன்னர்
1. வேங்-கடம்
2. திரு-மால்
3. நாரணம்
போன்ற அழகிய தமிழ்ச் சொற்களின் வேர்கள் பற்றி உங்களைக் கேட்டுள்ளேன்! தாங்களும் ஆய்ந்து அழகான பதிவுகள் இட்டிருந்தீர்கள்!

இந்த முறை, உங்களை நான் நேரடியாகக் கேட்கா விட்டாலும், என் கேள்வியில் உள்ள தேடலைப் புறந்தள்ளாது, தாங்களும் உடன் தேட முயன்றது மகிழ்ச்சி அளிக்கிறது!
அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பதிவினூடே,
பரிபாஷை = குழு வழக்கு
சரணம் = பெருமானடிகள்
போன்ற தமிழ்ச் சொற்களைத் தந்தமைக்கும் நன்றி!

தமக்குள்ளே பரிந்து பேசும் பேச்சுக்கு, பரி-பாஷை என்னாது, கவின் தமிழில் குழு வழக்கு என்று கேட்கவே இனிமையா இருக்கு! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒவ்வொரு கால நூற்றாண்டாகப் பகுத்துக் கொண்டு, ஏரண-அறிவியல் முறையில் (Logical Reasoning & Scientific Analysis) ஆய்ந்துள்ளீர்கள்! பேரா. இராஜம் அவர்களுக்கும் நன்றி, பின்னாளைய உலா இலக்கியங்களில் இருந்து சான்று காட்டியமைக்கு!

ஆக,
* ஆடவரில் சிறந்தவன்
* ஆட்களில் சிறந்தவன்
* காக்கும் அரசரில் சிறந்தவன்
என்ற முறையில் பெரும்+ஆள் புழங்கத் துவங்கியது என்பது புலனாகிறது! புரிகிறது!

என் கேள்விகளை இன்னும் சற்று கூர் செய்கிறேன்!

1. நம்மை ஆளும் தலைவனை/ இறைவனைக் குறித்து = பெருமாள் என்றால்...அது ஏன் திருமாலுக்கு மட்டுமே "பெரிதும்" உரித்தானது? யாரால் இப்படி ஒரு சமூகப் பலுக்கல்?

எ.கா: "நாதன்" என்ற சொல், இன்றும் பல கடவுளர்க்கும் புழங்குகிறது அல்லவா? நாதன் = தலைவன்!

சுவாமி+நாதன் = முருகன்,
செகன்னாதன் = திருமால்,
விசுவ+நாதன் = சிவபிரான்,
என்று அனைவருக்கும் "நாதன்" புழங்குகிறது! அது போல் "பெருமாள்" என்று மற்ற கடவுளர்க்கு அதிகம் புழங்கக் காணோம்! அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில கவிஞர்கள், "பெருமாள்" என்று இதர தெய்வங்களைக் குறித்தாலும், பொது மக்கள், மிகுந்த செல்வாக்கோடு, "பெருமாள்" என்று ஒருவனையே குறிக்கிறார்கள் என்றால், அதன் பின்னணி என்ன?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

2. சங்க இலக்கியத்தில் மாயோன், மால், திருமால் என்றே பலுக்கிய வழக்கம்...
பின்னாளில், நிலவுடைமைக் குமுகாயம் கொஞ்சங் கொஞ்சமாய்த் தோன்றிய காலத்தில், ஆட்சி-அரச செல்வாக்கால், இப்படி மாறிப் போனது புரிகிறது...

அந்த நிலவுடைமை அரசர்கள், தங்களைப் பெருமாள் என்று சொல்லிக் கொண்டது வரை புரிகிறது! ஆனால், அதைத் திருமால் என்னும் தெய்வத்தின் மேல் மட்டும் ஏற்ற வேண்டிய காரணம் என்ன? ஒட்டு மொத்த பொது மக்களும் எப்படி இதற்கு மாறினார்கள் என்பதை எண்ணி மிகவும் வியக்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆழ்வார்கள் கூட "பெருமாள்" என்ற சொல்லை ஆண்டதில்லை!
ஆனால் "பெருமான்" என்று ஆண்டுள்ளனர்!

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து, அடியீர், வாழ்மின் வாழ்மின் என்று அருள்
கொடுக்கும்
படிக் கேழ் இல்லாப் ***பெருமானை***, பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துள், திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார்! வீற்றிருந்து, பெரிய வானுள் நிலாவுவரே!
- நம்மாழ்வார்

பொதுவாக, வைணவத்தில் ஒரு வழக்கம் உண்டு! திருமாலின் பெயரை விட, அவன் அடியார்க்கும், அவன் அமைந்திருக்கும் திருத்தலத்துக்கும் அதிக மதிப்பு! தலத்தின் பெயரையே இறைவன் மேல் ஏற்றி விடுவது வழக்கம்...
* அரங்கன்
* திரு-வேங்கடமுடையான்
* சிங்க வேள் (குன்றம்)
* மால் (இருஞ் சோலை)
* வடபெருங் கோயில் உடையான் (திருவில்லிபுத்தூர்)

இதனால், மாயோன்/திருமால் என்ற சங்க கால வழக்கு, இலக்கிய/குழு வழக்குகளில் கொஞ்சமாய்க் கொஞ்சமாய்க் குறைந்து, ஊரின் பேரே அவனுக்கும் ஆளத் துவங்கியது போலும்!

அதே போல் தான், "பெருமாள்" என்றும் ஆளத் துவங்கினார்களோ? அப்படி ஆண்டது நிலவுடைமைக் குமுகாயம் என்றாலும், அந்தக் குழு வழக்கையும் தாண்டி, "பெருமாள்" என்று அத்தனை மக்களும் ஒட்டு மொத்தமாய் ஏற்றுக் கொண்டது தான் வியப்பு!

நாம் யாரும் "திருவேங்கடமுடையான்" என்று குழு வழக்காகப் பேசுவதில்லை! ஆனால் "பெருமாள்" என்ற குழு வழக்கு மட்டும், மக்கள் மத்தியில் பரவியது எப்படியோ? ஆய்வுகள் செய்தால் இன்னும் புலனாகும்!

இலக்கியத்தில் சிவன், இன்றும்....சிவன் கோயில் தான்!
இலக்கியத்தில் முருகன், இன்றும்....முருகன் கோயில் தான்!
ஆனால் தொல்காப்பியப் பழமை கொண்ட "திருமால்"....இன்று "பெருமாள்" கோயில்!
- எப்படி? எப்படி? யாரால், எப்படி, இப்படி ஒரு ஒட்டுமொத்த சமூக மாற்றம்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆழ்வார்கள் கூட "பெருமாள்" என்ற சொல்லை ஆண்டதில்லை!
ஆனால் "பெருமான்" என்று ஆண்டுள்ளனர்!

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து, அடியீர், வாழ்மின் வாழ்மின் என்று அருள்
கொடுக்கும்
படிக் கேழ் இல்லாப் ***பெருமானை***, பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துள், திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார்! வீற்றிருந்து, பெரிய வானுள் நிலாவுவரே!
- நம்மாழ்வார்

பொதுவாக, வைணவத்தில் ஒரு வழக்கம் உண்டு! திருமாலின் பெயரை விட, அவன் அடியார்க்கும், அவன் அமைந்திருக்கும் திருத்தலத்துக்கும் அதிக மதிப்பு! தலத்தின் பெயரையே இறைவன் மேல் ஏற்றி விடுவது வழக்கம்...
* அரங்கன்
* திரு-வேங்கடமுடையான்
* சிங்க வேள் (குன்றம்)
* மால் (இருஞ் சோலை)
* வடபெருங் கோயில் உடையான் (திருவில்லிபுத்தூர்)

இதனால், மாயோன்/திருமால் என்ற சங்க கால வழக்கு, இலக்கிய/குழு வழக்குகளில் கொஞ்சமாய்க் கொஞ்சமாய்க் குறைந்து, ஊரின் பேரே அவனுக்கும் ஆளத் துவங்கியது போலும்!

அதே போல் தான், "பெருமாள்" என்றும் ஆளத் துவங்கினார்களோ? அப்படி ஆண்டது நிலவுடைமைக் குமுகாயம் என்றாலும், அந்தக் குழு வழக்கையும் தாண்டி, "பெருமாள்" என்று அத்தனை மக்களும் ஒட்டு மொத்தமாய் ஏற்றுக் கொண்டது தான் வியப்பு!

நாம் யாரும் "திருவேங்கடமுடையான்" என்று குழு வழக்காகப் பேசுவதில்லை! ஆனால் "பெருமாள்" என்ற குழு வழக்கு மட்டும், மக்கள் மத்தியில் பரவியது எப்படியோ? ஆய்வுகள் செய்தால் இன்னும் புலனாகும்!

இலக்கியத்தில் சிவன், இன்றும்....சிவன் கோயில் தான்!
இலக்கியத்தில் முருகன், இன்றும்....முருகன் கோயில் தான்!
ஆனால் தொல்காப்பியப் பழமை கொண்ட "திருமால்"....இன்று "பெருமாள்" கோயில்!
- எப்படி? எப்படி? யாரால், எப்படி, இப்படி ஒரு ஒட்டுமொத்த சமூக மாற்றம்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆழ்வார்கள் கூட "பெருமாள்" என்ற சொல்லை ஆண்டதில்லை!
ஆனால் "பெருமான்" என்று ஆண்டுள்ளனர்!

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து, அடியீர், வாழ்மின் வாழ்மின் என்று அருள்
கொடுக்கும்
படிக் கேழ் இல்லாப் ***பெருமானை***, பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துள், திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார்! வீற்றிருந்து, பெரிய வானுள் நிலாவுவரே!
- நம்மாழ்வார்

பொதுவாக, வைணவத்தில் ஒரு வழக்கம் உண்டு! திருமாலின் பெயரை விட, அவன் அடியார்க்கும், அவன் அமைந்திருக்கும் திருத்தலத்துக்கும் அதிக மதிப்பு! தலத்தின் பெயரையே இறைவன் மேல் ஏற்றி விடுவது வழக்கம்...
* அரங்கன்
* திரு-வேங்கடமுடையான்
* சிங்க வேள் (குன்றம்)
* மால் (இருஞ் சோலை)
* வடபெருங் கோயில் உடையான் (திருவில்லிபுத்தூர்)

இதனால், மாயோன்/திருமால் என்ற சங்க கால வழக்கு, இலக்கிய/குழு வழக்குகளில் கொஞ்சமாய்க் கொஞ்சமாய்க் குறைந்து, ஊரின் பேரே அவனுக்கும் ஆளத் துவங்கியது போலும்!

அதே போல் தான், "பெருமாள்" என்றும் ஆளத் துவங்கினார்களோ? அப்படி ஆண்டது நிலவுடைமைக் குமுகாயம் என்றாலும், அந்தக் குழு வழக்கையும் தாண்டி, "பெருமாள்" என்று அத்தனை மக்களும் ஒட்டு மொத்தமாய் ஏற்றுக் கொண்டது தான் வியப்பு!

நாம் யாரும் "திருவேங்கடமுடையான்" என்று குழு வழக்காகப் பேசுவதில்லை! ஆனால் "பெருமாள்" என்ற குழு வழக்கு மட்டும், மக்கள் மத்தியில் பரவியது எப்படியோ? ஆய்வுகள் செய்தால் இன்னும் புலனாகும்!

இலக்கியத்தில் சிவன், இன்றும்....சிவன் கோயில் தான்!
இலக்கியத்தில் முருகன், இன்றும்....முருகன் கோயில் தான்!
ஆனால் தொல்காப்பியப் பழமை கொண்ட "திருமால்"....இன்று "பெருமாள்" கோயில்!
- எப்படி? எப்படி? யாரால், எப்படி, இப்படி ஒரு ஒட்டுமொத்த சமூக மாற்றம்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//விண்ணவநெறியில் எழுந்தது. சரணாகுவதற்கு பாதம்/ அடிகள் முகன்மையானதல்லவா? இந்த அடிகள் என்ற பயன்பாடு சிலம்பிலேயே தொடங்கிவிட்டது. ஆணாதிக்கக் குமுகாயத்தில் வளர்ந்த கோவலனை மதுரையில் மாதரி வீட்டில் ”அடிகள்” என்றுதான் கண்ணகி அழைப்பாள்//

அடிகள்,உண்க! அமுதம் ஈங்கென
-ன்னு சிலம்பின் வரி-ன்னு நினைக்கிறேன்!

//அடிகள் எப்படிப் ஆட்சியைக் குறித்ததோ அதே போல ஆள், ஆளி, ஆளன், ஆள்வான், ஆண்டவன் போன்றவை ஆட்சி செய்யும் தலைவனைக் (ruler) குறித்தன//

ஆள், ஆடவன், ஆண்டவன் என்பதெல்லாம் ஒரு வேர்ச்சொல் பிறந்த பெயர்களா ஐயா?

//எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!//

- இது நல்ல ஒப்பு நோக்கு! மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி-ன்னு சொல்லுறாப் போலவே இருக்கு!

தேடல் தொடர்கிறது! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதைத் திருமலைக் கோயிலில் முதற்சுற்றாலையின் வடக்குச் சுவரில் பல்லவ அரசன் பார்த்திபேந்திர பல்லவன் காலத்துக் கல்வெட்டிற் பார்க்கலாம்.

வந்தியத்தேவனோடும், கந்தமாறனோடும் சேர்ந்து சோழ இளவரசன் ஆதித்திய கரிகாலனுக்குத் தோழனாய் வரும் பார்த்திபேந்திர பல்லவன் தான் இவன்//

பதிவிலே திருமலை-திருப்பதிக் கோயில் கல்வெட்டுகள், மற்றும் இன்னும் பல கல்வெட்டுச் சான்றுகள் காட்டியமையும் சிறப்பு! நன்றி ஐயா!

கல்வெட்டு மற்றும் மெய்க்கீர்த்திகளில், அரசரை, ஏதோ நடமாடும் தெய்வம் போல் எழுதி இருப்பது வழக்கம் தான்! அந்தக் கல்வெட்டு மொழிநடையே தனித்துவம் வாய்ந்தது! அதில் இப்படி "பெருமாள்" என்று சில மன்னர்களைக் குறித்து வைத்துள்ளனர் போலும்! ஆனால் அவ்வாறு சொன்னது கல்வெட்டு மட்டுமே! பொது மக்கள் மன்னரைப் "பெருமாள்" என்று அழைக்கும் வழக்கம் இருந்ததா என்று தெரியவில்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பெருமால்>பெருமாள் என்ற திரிவு நடந்திருக்க வாய்ப்பில்லை//

நானும் அப்படியே கருதுகிறேன் ஐயா!

//நெடுமால் என்ற புழக்கம் இருந்திருக்கிறது. ஆனால் பெருமால் என்ற சொல்லை நான் சங்க இலக்கியத்தில் எங்கணும் கண்டதில்லை. யாரேனும் கண்டிருந்தாற் சொல்லுங்கள்//

"பெருமால்" என்ற சொற் புழக்கம் சிலப்பதிகாரத்திலும் உண்டு! ஆனால் அவை மாயோனாகிய திருமாலைக் குறித்துச் சொல்லப்பட்ட சொல்லாக எங்கும் இல்லை! "பெருமால்" = அடர் கருப்பாக மட்டுமே பலுக்கப்படுகிறது!

திருமால் குன்றத்துச் செல்குவிர் ஆயின்
**பெருமால்** கெடுக்கும் பிலமுண் டாங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியோடு
- மதுரைக் காண்டம்

அதே போல் யானை ஒன்றினைப் பெருமால் களிறு என்றும் சிலம்பு சொல்கிறது அல்லவா?

ஒருநூற்று நாற்பதி யோசனை விரிந்த
பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று
- வஞ்சிக் காண்டம்

"பெருமான்" என்ற சொல்லையும் கலித்தொகையில் கண்ட ஞாபகம்...
பெருமான் பரத்தைமை ஒவ்வாதி-ன்னு வரும்!

அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ் said...

ஐயா ,
கட்டுரையை முழுவதுமாய் இன்னும் படிக்க வில்லை

பெருமாள் என்னும் சொல்லிற்கு பெரும் + ஆள்,

மேலும் பிரம்மா என்னும் சொல் கூட பெருமாள் என்பதன் நீட்சியே, பிர (சம்ஸ்கிருத சொல் ) என்னும் துவங்கும் எல்லா எழுத்துக்களும் பெரும் என்னும் தமிழ் சொல்லின் மருவிய சொற்களே என தம் "தமிழும் சமஸ்கிருதமும்" என்னும் நூலில் தகுந்த மேற்கோள்களோடு நிறுவுகிறார் பேராசிரியர் மா சோ விக்டர் அவர்கள். இது குறித்து தாங்களின் கருத்தை அறிய ஆவலாய் உள்ளேன்

ஆதிரை

http://thooyatamizh.blogspot.com/

Anonymous said...

பெருமள்ளர் என்பதே பெருமாள் ஆனது

chendrn said...

பெருமள்ளர் என்பதே பெருமாள் ஆனது

Pari said...

இவர் யார்?' என்குவைஆயின், இவரே,
ஊருடன் இரவலர்க்கு அருளி, தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை,
படு மணி யானை, பறம்பின் கோமான்
5
நெடு மாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்; இவர் என் மகளிர்;
அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே.
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி,
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை,
10
உவரா ஈகை, துவரை ஆண்டு,
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்!
தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே!
ஆண் கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய
15
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!
யான் தர, இவரைக் கொண்மதி! வான் கவித்து
இருங் கடல் உடுத்த இவ் வையகத்து, அருந் திறல்
பொன் படு மால் வரைக் கிழவ! வென் வேல்
உடலுநர் உட்கும் தானை,