Thursday, August 12, 2010

புறநானூறு 2ஆம் பாட்டு - 1

அண்மையில் ctamil மடற்குழுவில் புறநானூற்றின் 2 ஆம் பாடலை முன்னுறுத்தி, அதில் வடபுலக் கருத்துக்கள் மிகுத்திருப்பதாகவும், அக்கருத்துக்களைத் தமிழர் பெரிதாய்க் கருதிப் பின்பற்றியதாகவும், தமிழருக்குச் சொந்தமான பண்பாட்டுத் துலக்கம் கிடையாது போலவும், எல்லாமே pan-Indian culture with regional variations என்று ஒரு சாராரும், ”அப்படியில்லை, ஒன்றிற்கொன்று வளமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட இருவேறு தனிப் பண்பாடுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்தன; இரண்டுஞ் சேர்ந்தது தான் இந்தியப் பண்பாடு” என்று இன்னொரு சாராரும் தம் கருதுகோள்களின் அடிப்படையில் உரையாடல் எழுப்பினார்கள். [நான் உரையாடல்களை அப்படியே சொல்லுக்குச் சொல் இங்கு எடுத்துக் கொள்ளவில்லை.]

இதுபோன்ற உரையாடல்கள் காலகாலமாய் நடப்பவை தான்.

பல வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் இன்னும் ”துபாஷிகள்/பண்டிதர்கள்” சொன்னதை வேதவாக்காய் எடுத்துக் கொண்டு, “வடக்கு மேடு, தெற்கு பள்ளம். மேட்டிலிருந்து பள்ளத்திற்கு நீரோட்டம்” என்ற பார்வையை எத்தனை நாட்களுக்குக் கொண்டிருப்பார்களோ? - தெரியாது. Tamil culture and practices are derived from the north என்ற புரிதலையும் என்று மாற்றிக் கொள்வார்களோ? - தெரியவில்லை. தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியை வேறு இந்திய நடுவண் அரசினர் கொடுத்துத் தொலைத்துவிட்டார்கள். :-) அதைக் கண்டு பலருக்கும் பற்றிக் கொண்டு எரிகிறது. வேறொன்றும் இல்லை. It is an un-deserved recognition என்ற முணுமுணுப்பும், ”எல்லாம் அரசியற் செல்வாக்கால் அடைந்துவிட்டார்கள்” என்ற பொருமலும் ஆங்காங்கே எழுகிறது.

“அடிப்படையில் வடமொழியும் தென்மொழியும் ஒன்றிற்கொன்று நெடுங்காலம் உறவாடியவை தான். இங்கிருந்து அங்கு சில கூறுகளும், அங்கிருந்து இங்கு சில கூறுகளும் ஊடுறுவது இயற்கை தான்” என்ற பார்வையை நடுநெறியாளர் ஒருநாளும் மறைத்ததில்லை. மறந்ததுமில்லை. இப்படி ஒருபக்கச் சார்பாகவே பார்க்கும் பார்வை, 19 ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கி, 21 ஆம் நூற்றாண்டு வரையிலும் மாறாதிருப்பதை எங்களைப் போன்றவர்கள் மறுத்துச் சொல்லி வந்தோமேயொழிய, எல்லாமே தமிழ் என்று எக்காளம் இட்டதில்லை. ஆனாலும் எம் கருத்தைத் தனித்தமிழ்த் தீவிரவாதிகள் (pure Tamil extremists), பொதுக்கைவாதிகள் (fascists) என்று சாயம் பூசுவது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. [இப்படிச் சாயம் பூசுவதே வழக்கமாகிப் போன ஒரு மடற்குழுவில் இருந்தே நான் அகன்றிருக்கிறேன்.] மாற்றுக் கருத்தாய் எதை வைத்தாலும் அதை ஒதுக்கித் தள்ளி மேலை நாட்டுத் தமிழறிஞரை ஒருபாற் கோடவைப்பது தொடர்ந்து நடக்கிறது. ”வடக்கே, இதோ என் சாஷ்டாங்க சரணம், நமஸ்காரம்” என்றபடி தாசானு தாசர்களாய் ஆகிப்போனது இன்று நேற்று நடப்பதல்ல.

[யாரோ ஒருவர் அழகாகச் சொன்னார்: காசுமீரத்தில் நாலுபேர் இறந்தால் இந்திய நாளிகைகளில் “நாலு இந்தியர் இறந்தார்” என்று வரும். இராமேசுரக் கடலில் நாலுபேர் இறந்தால் இந்திய நாளிகைகளில் “நாலு தமிழ் மீனவர் இறந்தார்” என்று வரும், ஏதோ இவர் இந்தியர் இல்லாதது போலச் சொல்லப்படும். இந்த மனப்பான்மை இன்று நேற்று ஏற்பட்டதில்லை. இல்லையென்றால் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுடப்பட்டதற்குப் பொங்காத இந்தியர் மும்பை 2611 என்று மட்டும் குதிப்பது ஏன்?]

அரசியலை ஒதுக்கிவைத்து சங்க இலக்கியத்திற்கு வருவோம்.

கால காலமாக தமிழக வரலாற்றைக் கீழிறக்கித் தள்ளுவதே வேலையாக ஒரு சாரார் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேதத்தைத் தூக்கி வைக்கவேண்டிய பணியிருக்கிறபோது, ”எல்லாமே சங்கதம் தான்” என்று முழக்கம் செய்யவேண்டிய நிலை இருக்கும் போது, தெற்கே ஒரு பண்பாடு இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுப் பழமையானது என்று சொல்ல எப்படி மனம் வரும், சொல்லுங்கள்? அதன் காரணமாய் வையாபுரியாரைத் துணைக்கொண்டு சங்க இலக்கியத்தின் காலத்தை தவறாகப் பொருத்துவது மாறவேயில்லை;

[வையாபுரியாரின் தற்சார்புக் கருத்துக்களை மறுத்து இவர்கள் எவருமே கேள்வி எழுப்பியதில்லை. வையாபுரியார் முடிவுகளை மேல்நாட்டறிஞர் கமில் சுவலபில் கூட மறுத்ததில்லை. இன்று கமில் சுவலபில்லின் முன்னெடுப்புகளை மற்ற மேலைத் தமிழறிஞர் யாரும் மறுப்பதில்லை. ஹெர்மன் டீக்கன் மட்டும் இப்போது ஒருசிலருக்கு எதிராளியாகத் தெரிகிறார்.] சங்க கால வாழ்க்கை முறையை இன்னும் Burton Stein வரையறுத்தபடி Segementary State ஆகவே பார்ப்பதும் மாறவில்லை. [Burton stein கருத்தை நொபுரு கராசிமா மட்டும் வன்மையாக மறுத்திருக்கிறார்; ஆனால் அவர் தன் ஆய்வுக்கு உட்பட்ட பெருஞ்சோழர் காலத்தோடு இயற்கையாக நிறுத்திக் கொள்வார். நானறிய யாரும் சங்க கால மூவேந்தர் அரசுகள் எப்படிப் பட்டவை, அவற்றின் அரசியற் பொருளாதாரம் என்ன? - என்று ஆய்ந்து பார்க்க முன்வந்ததில்லை.],

தமிழ்நாட்டு ஆய்வாளர்களோ, ஆழங் காண மறுத்து ”வைரமுத்துவின் திரையிசைப் பாடல்கள், சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகத் திறம், புதுக்கவிதையும் லிமெரிக்கும்” என்று விளிம்புநிலை ஆய்வுகளிலேயே கவனஞ் செலுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஆய்வுப் பட்டத் தலைப்புகளைக் கேட்டால் நமக்குக் கண்ணீர் வடிக்கத் தான் தோன்றும். ஏதோ 200 ஆய்வுநூற் பக்கங்களை நிறைத்துவிட்டாற் போதும் என்றாற் போல் எத்தனை நாட்களுக்கு சவலைப் பிள்ளையாய், மூளியாய், மூடமாய்த் தமிழாய்வுகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்குமோ தெரியவில்லை. இத்தனைக்கும் புதிய தரவுகள் தொல்லியல் வழி வந்து கொண்டிருக்கின்றன. கல்வெட்டியல் மூலம் எழுந்து கொண்டிருக்கின்றன. நாணயவியல் புது வரலாறு படைக்கிறது. ஆனாலும் தமிழக வரலாற்றைச் சங்க இலக்கியத்தை புத்தொளி கொண்டு மீண்டும் ஆய்வு செய்ய தமிழியலில் யாரும் அணியமாய் இல்லை. இல்லையென்றால் அச்சடித்தாற் போல் ”சிலப்பதிகாரம் கி.பி.2 ஆம் நூற்றாண்டிற்கு அப்புறம் எழுந்தது” என்று கீறல் விழுந்த இசைத்தட்டைப் போல தமிழறிஞரில் 99.9% பேர் இன்னியம் பாடிக் கொண்டு இருப்பார்களா?

ஏன் சங்க இலக்கியத்தில் மீளாய்வே நடப்பதில்லை என்றும் எனக்குப் புரிவதில்லை. இத்தனைக்கும் சங்க இலக்கியத்தில் 50% க்கும் மேலான பாடல்கள் பாலைத்திணையில் உள்ளனவே? அதில் பெரும்பாலும் மொழிபெயர் தேயம் தாண்டி பாடற் தலைவர் வடக்குப் போனதாகச் செய்திகள் வருகின்றனவே? அப்படி வடபுலத்தில் எங்கேதான் வணிகம் செய்யப் போனார்கள்? வடுகர் என்பவர் யார்? தமிழரின் பொருளியல் எதன் அடிப்படையில் இயங்கியது? இது வெறும் கொள்ளையடிப்புப் பொருளாதாராமாகவே இயங்கியதா? [அப்படியும் சிலர் எண்ணிக் கொள்கிறார்கள்.] இவ்வளவு காசுகள் (உரோம நாட்டுக் காசுகளும் சேர்த்து) கிடைத்துள்ளனவே? மணிகள், முத்துகள் இங்கு கிடைத்துள்ளனவே? இவையெல்லாம் எங்கே செலாவணியாகின? வடக்கே இருந்த மகதத்திற்கும் தமிழகத்திற்கும் இடையாட்டம் இல்லாது போனதா? மகதத்தோடு உறவு கொள்ளாத தமிழகம் இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.காலங்களில் இருந்துவிட முடியுமா? வம்ப மோரியர் என்றால் மோரியருக்கும் முந்தியவராய் சங்ககாலத் தமிழர் இருந்திருக்க வேண்டும் அல்லவா? அப்படியானால் சங்க இலக்கியத்தின் காலம் குறைந்தது மோரியருக்கும் முன்னால் என்ற ஆய்வு கூட நம்மிடம் இல்லாது போனது எப்படி? ஏன் தீவுக்குள் முடங்கிப் போனவராய் நம்மை எண்ணிக் கொள்கிறோம்? வடபுலத்தாரும், மேல்நாட்டாரும் நம்மை ஒரு தொங்குசதையாகவே (appendage) பார்க்கிறார்களே ஏன்? Are we so worthless? Every thing here was a derived one? Don't we see a conspiracy in it?

மகதப் பேரரசு அளவிற்கு இல்லாவிட்டாலும் அதற்கு எதிராய்ச் சூளுரைத்து, தம் பொருளியலையும் அரசியலையும் தனித்து நிலைநாட்டிக் கொண்டு மூன்று பயிர்த்தொழில் அரசுகள் (feudatory states) இங்கு இருந்தன என்பதையும், கூடவே வேடுவச் சேகர (hunter-gatherer) குமுகாயக் கூறுகளும் இங்கு இருந்தன என்பதையும், அந்தப் பின்புலத்திற் பார்த்தால் தான் சங்க இலக்கியமும் பழந்தமிழ் வரலாறும் புரிபடும் என்று யார் இந்த வறட்டுவாதிகளுக்குச் (dogmatists) சொல்வது? சங்க இலக்கியத்தின் காலம் கி.மு.600-கி.பி.200 என்று விரித்து உணருவது எப்போது? ”மகத அரசுகள் எப்போதுமே தமிழக அரசுகளுக்கு பகையாய், அதே பொழுது போட்டியரசுகளாய் இருந்தன” என்ற வரலாற்று உண்மையை யார் உணர்த்துவது?

இப்படிக் கேள்வி மேற் கேள்விகள் நமக்குள் அடுத்தடுத்து எழுகின்றன. விடை காண்பதற்குத் தான் ஆட்களைக் காணோம். வையாபுரியார் சொன்னது இன்றுவரை மேலைத் தமிழறிஞரிடம் அப்படியே அடிபிறழாமல் இருக்கிறது. நம்முடைய மாற்றுக் கருத்துக்கள் பொதுக்கைக் (fascist) கருத்துக்களாகவே புரிந்து கொள்ளப்படுகின்றன. நாம் என்ன சொல்ல முடியும்? Am I a fascist?

இதற்கிடையில் காவிரியில் எத்தனையோ ஆடிப்பெருக்கும் வந்தாயிற்று. ஆடி அமையுவாவும் (அமாவாசையும்) வந்தாயிற்று.

நானறிந்த வகையில் புறநானூற்று 2 ஆம் பாடலுக்கு என் விளக்கத்தை அடுத்த பகுதியிற் தருகிறேன். இதை ஏற்பதும் ஏற்காததும் படிப்போர் உகப்பு.

அன்புடன்,
இராம.கி.

0 comments: