Saturday, August 14, 2010

புறநானூறு 2ஆம் பாட்டு - 5

இனி அடுத்த பகுதிக்குப் போவோம்.

பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே

இந்த 8 வரிகளுள் வடபுலத்து இனக்குழுக்களின் இடையுள்ள முரணும், வடபுலத்தரசர் ஒருசாரார்க்குச் சார்பாகச் செயற்பட்டதும், இந்தச் செவியுறையிற் குறிப்பாகத் தென்புலத்து அரசனுக்கு உணர்த்தப்பட்டுப் புதுவகை நயன்மை (justice) ஒன்று நிலைநாட்டப் படும். அதன் விளைவாக ஆட்சி நடத்தும் நெறி இங்கு மாறத் தொடங்குகிறது. ஆக, வேத நெறித் தாக்கம் என்பது உதியன் சேரல் காலத்தில் தமிழகத்தில் நன்றாகவே நுழைந்து விட்டது.

இவ்வரிகளைப் புரிவதற்கு இந்தியத் துணைக்கண்டத்துள் நடந்த பல்வேறு மாந்தப் பரவல்களை நினைவுகொள்ள வேண்டும். [கொஞ்சம் பற்றற்ற நிலையில் இச்செய்திகளை அணுகுங்கள். நான் இனச் (race) செய்திகளை எழுதவில்லை. இனக்குழுச் (tribal)செய்திகளைச் சொல்லுகிறேன்.]

கிறித்துவுக்கு முன்னாலிருந்த காலங்களில் இந்தியாவிற்குள் குறைந்தது 4 தடவையாவது வெவ்வேறு மாந்தக் கூட்டங்கள் நுழைந்திருக்கலாம் என்று இற்றை ஈன் அறிவியல் (genetic science) கூறுகிறது. [நான் இற்றைப் புரிதலைச் சொல்கிறேன். நாளைக்கு இன்னும் தரவுகள் கிடைக்கும்போது அறிவியல் முடிவுகள் மாறலாம்.]

இற்றைக்கு 55000/60000 ஆண்டுகளுக்கு முன், முதல் மாந்தப் பரவல் நடந்தது என்று சொல்லுவார்கள். ஆப்பிரிக்காவிற் தொடங்கி எத்தியோப்பியா, சோமாலியா வழியாக அரேபிய ஏமனுக்குள் நுழைந்து பின் அங்கிருந்து துபாய் இணைப்பு வழியாக ஈரானுக்குள் நுழைந்து அப்படியே கடற்கரை வழியாக, மகான் (இற்றை கராச்சிக்கு அருகில் உள்ள சிந்துதேசம்), குசராத், மராட்டியம் என்று மேற்குக் கடற்கரை வழியாக இந்தியாவில் நுழைந்து பின் தெற்கே கன்னடம், கேரளம், தமிழகம் வரை வந்து அங்கிருந்து கிழக்கு கடற்கரை வழியாக நகர்ந்து ஆந்திரம், கலிங்கம், வங்காளதேசம் போய், பர்மா, தாய்லந்துக் கடற்கரைகள் வழியாகத் தென்கிழக்கு ஆசியா, பாப்புவா நீயூ கினி, ஆசுத்திரேலியா வரை இந்தப் பரவல் நடந்து முடிவில் அங்குள்ள பழங்குடிகளாயினர். இவர்களை நெய்தலார் (coastal people) என்று சுருக்கமாய் அழைப்பார்கள்.

நெய்தலார் எச்சம் நம்மூரில் உண்டு. நம் பிரான்மலைக் கள்ளரும் இந்த எச்சத்தைச் சேர்ந்தவர் தான். நெய்தலாரை ஆண் குருமியங்களின் (male chromosome) அடிப்படையில் M180 என ஈனியலிற் சொல்வார். இந்தியாவைப் பொறுத்தவரை நெய்தலாரே முதல்மாந்தக் கூட்டத்தார். M130 என்பது இந்தியாவின் தென் கிழக்குப் பகுதி மாநிலங்களில் (கன்னடம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், ஒரிசா, சத்திசுகார், சார்க்கண்ட், பீகார், வங்கம் போன்ற மாநிலங்களில்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவரிடம் சற்று தூக்கலாய் உள்ளது. [உடனே மொழிக்குடும்பம் வேறு, இனம் என்பது வேறு என்று அச்சடிப்பு முழக்கம் செய்யச் சிலர் முன்வரலாம். ஆனால் விளக்கிச் சொல்ல வேறுவகை எனக்குத் தெரியவில்லை.] M130 என்போர் இந்தியரிடையே கிட்டத்தட்ட 10/15% இருக்கின்றனர். அவர் பெரும்பாலும் திராவிடமொழி பேசுபவராய், பழங்குடிகளாய் இருக்கின்றனர்.

இரண்டாம் பரவல் கிட்டத்தட்ட 30000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இவர்கள் இந்தியா, பாக்கிசுத்தானின் வடமேற்கே இருக்கும் கணவாய்கள் வழியாக நுழைந்து நம்மூர் குறிஞ்சி, முல்லை நிலங்களில் விரவியவர். இவரை ஆண்குருமியங்களின் அடிப்படையில் M20 என்று சொல்லுவார். M20 என்பது இந்தியாவெங்கணும் விரவிக்கிடக்கும் ஒரு ஈனாகும். இதை இந்திய ஈன் என ஆணித்தரமாகச் சொல்லலாம். நம்மில் பெரும்பாலோருக்கு இந்த ஈன் இருக்கிறது. இது இல்லாத இந்தியர் மிகவும் அரிதானவர்.

மூன்றாவது பரவல் கிட்டத்தட்ட 9000/10000 ஆண்டுகளுக்கு முன் முற்பட்டது. இவரும் இந்தியா, பாக்கிசுத்தானின் வடமேற்குக் கணவாய்கள் வழியாகத் தான் நுழைந்தனர். இவரை ஆண்குருமியங்களின் அடிப்படையில் M17 என்று சொல்வார். M17 என்பது இந்தியாவில் வடமேற்கு மாநிலங்களிலும், நடு மாநிலங்களிலும், மற்ற பகுதிகளில் உயர்சாதி மக்களிடமும் விரவியுள்ளது. M17 என்பது இந்தோ-இரோப்பிய மொழி பேசுகிறவரோடு தொடர்புடையது என்றும் சொல்லவேண்டும்.

நான்காம் பரவல் வரலாற்றுக்காலத்தில் கிட்டத்தட்ட 3500-4000 ஆண்டுகளுக்கு முன்நடந்தது. இவருக்கும் M17 காரருக்கும் ஈனளவில் வேறுபாடு உள்ளதாய்ச் சொல்லமுடியாது. சில பண்பாட்டு வேறுபாடுகளே தென்படுகின்றன. [நான்காம் பரவல் தொல்லியல், மாந்தவியலின்படி உணரப்பட்டது. ஈனியல் வழி உறுதி செய்யப் பட்டதில்லை. மற்ற 3 பரவல்களும் ஈனியலால் உறுதி செய்யப் பட்டவை. நான்காம் பரவலுக்கும் மூன்றாம் பரவலுக்கும் வேறுபாடு காண்பது கடினம் என்பதை நினைவு கொள்ளுங்கள்.] முன்றாம், நான்காம் பரவலாளர் இந்தியரில் 8/10% இருக்கின்றனர்.

இந்த நால்வேறு கூட்டத்தார் தம்முள் கலந்து உருவாகிய இனமக்களே இன்று இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் மக்களாவர். எவ்வளவோ கலந்து போன பின், ”இவர்தான் அவர்” என்று இந்தியருள் அடையாளங் காணுவது மிகவும் சரவல் எனினும் பாழாய்ப்போன சாதி முறைத் திருமணங்களால் கடந்த 4000 ஆண்டுகளில் ஒரு சில வேறுபாட்டுத் தன்மை அறியக் கூடிய அளவில் வேரூன்றி விட்டது. அதனால் ”இந்த ஈன்களின் பரவல் நாடெங்கணும் எப்படி விரவியுள்ளது?” என்று ஓரளவிற்குச் சொல்ல முடிகிறது.

நாலாம் கூட்டத்தார் இந்தியாவிற்குள் நுழைந்தபோது ஏற்கனவே நுண்கல் நாகரிகத்திலும் (neolithic culture), ஓரளவு பெருங்கற்படை நாகரிகத்திலும் (megalithic culture) இருந்த (M130, M20 ஆகிய இரண்டும் கலந்து கிடந்த) பழங்குடிகள் முல்லை, குறிஞ்சி நிலங்களிலும், மாட மாளிகைகள் கட்டி நிலைத்த நாகரிகத்தில் (M130, M20 நிறையவும் M17 கொஞ்சமுமாய்க் கலந்து கிடந்த) அன்றைய மேற்தட்டு மக்களும் (இவர்தான் மூன்றாம் கூட்டத்தை இன்றைக்குப் பகராளுமை - representation - செய்பவர்) இருந்தனர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

நாலாம் கூட்டத்தார் நுழைந்தபோது, மூன்றாம் கூட்டத்தார் இயற்கையூறுகள் காரணமாகத் தம் வாழ்விடங்களை இழந்து இந்தியத் துணைக்கண்டத்தின் மற்ற மருத, நெய்தல் நிலங்களுக்கு நகர்ந்து விட்டார். சிந்து சமவெளி நாகரிகம் அழிந்து போனது. மூன்றாம் கூட்டத்தார் மற்றவிரு கூட்டத்தாருடன் பெரும்பாலும் இணங்கிப் போய்க் கலந்துவிட்டனர்.

அப்படி மூன்றாம் கூட்டத்தார் கலந்ததின் பின் இந்தியாவில் நுழைந்த நாலாம் கூட்டத்தார் முல்லை நாகரிகத்திலேயே ஆழ்ந்திருந்தார். அவரின் வாழிடங்கள் மருதத்திற்கும் முல்லைக்கும் இடைப்பட்டதாய் இருந்ததாகவே, வேத நூல்கள் சொல்லுகின்றன. நகரம், அரண்மனை, பெரும் மாளிகைகள் என்று அவர் மேற்கட்டுமானம் கட்டுவதற்கு இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகவேண்டிய நிலையில் நாலாம் கூட்டத்தாரின் நகர்ச்சி இந்தியாவின் வடமேற்கிருந்து கங்கைச் சமவெளியை நோக்கி நடைபெற்றது. [அதன் வெளிப்பாடு வேதம், ஆரண்யம், ப்ராமணம், உபநிடதம், புராணம் என்று கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து கொண்டே போகும். இருக்கு வேதத்திற்கு அப்புறம் அவருக்கு எல்லாமே கங்கைச் சமவெளி நோக்கிய பயணங்கள் தான். அப்போது, ஆற்றுக்கு நெருங்கிய இடங்களைவிட்டால், கங்கைச் சமவெளி பெரிதும் காடாகவே விந்தியமலை வரைக்கும் இருந்தது. இன்னுஞ் சொன்னால் அன்றைக்கு ஆந்திரமும், சத்திசுகரும், பீகாரும், சார்க்கண்டும், மத்தியப் பிரதேசமும், உத்திரப்பிரதேசமும் கூடப் பெரும்பாலும் காடுகள் என்பதை உணரவேண்டும்.

நாலாம் கூட்டம் எனப்படும் ஆரியரும், அதற்கு முன்னிருந்த மூன்று கூட்டத்தாரும் தம்முள் ஓரளவு கலந்தார். ஆனால் சாதிப் பாகுபாடு ஏற்பட்டுப் போன காரணத்தால் இக்கலப்பு முழுமையடையவில்லை. அதனால் மேல் தட்டுக் கூட்டத்தில் நாலாம் கரையினரின் பண்புகள் கூடவும், கீழ்த்தட்டுக் கூட்டத்திலும், பழங்குடிகளிடமும் மற்று 3 கரையினரின் பண்புகள் கூடவும் கலந்து விரவின. புறனடைகள் (exceptions) இரண்டு தட்டுக்களிலும் உண்டு. வடபுலத்துப் பழக்கமாய் 4 வருணம் என்ற நிலைப்பாடு உருவாகி அது கொஞ்சங் கொஞ்சமாய் இந்தியாவெங்கணும் பரவத் தொடங்கியது. கொஞ்சங் கொஞ்சமாய்க் கீழ்த்தட்டு மக்களின் மொழிகள் மேற்தட்டு மக்களின் மொழியான இந்தோ-யிரோப்பியன் மொழிக்கு முன் சரியத் தொடங்கின. மொழிக்குடும்பங்கள் கலக்கத் தொடங்கின. முரண்பாடுகளும் பெருத்து வந்தன. வேதமொழியும் பழந்தமிழும் கலந்து பாகதங்களும், மற்ற திராவிட மொழிகளும் உருவாகின. வேதமொழி, பழந்தமிழ் ஆகிய இரண்டும் இரண்டு எல்லைகளாக, இரண்டுக்கும் நடுவில் பல மொழிகளின் பரம்பல் ஏற்பட்டது. தமிழுக்கு நெருங்கிய மொழிகள் திராவிட மொழிகளாயின. வேதமொழிக்கு நெருங்கிய மொழிகள் பாகதங்களாகின. சங்கதம் என்பது பாகதங்களுக்கு இடையே ஒரு கலவை மொழியாக, செந்தரப் படுத்தப்பட்ட படிப்போர் மொழியாக உருவாகியது. [சங்கதத்திலிருந்து பாகதம் உருவானது என்ற கொள்கையை நான் ஏற்பவனில்லை. எப்படி வழக்குத் தமிழில் இருந்து செந்தமிழ் உருவானதோ, அதுபோலச் செங்கதம் என்பது ஒரு புலவராக்கம். அதற்குமேல் அது ‘சுயம்பு, சிவசூத்திரம், உடுக்கையொலிகள், கிளியொலிகள் blah blah.....’ என்ற தொன்மத்தை நான் ஏற்பதில்லை.]

நூலறிந்த பெருமானரே முதலிற் சங்கதத்தை உருவாக்கினர். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் எனும் அறுவகைத் தொழில்களைச் செய்யும் வருணத்தோராய் அவர் அறியப்பட்டனர். முதல் வருணத்துப் பெருமானருள் முனிவர் என்ற கூட்டம் ஆரியக் குமுக நலத்திற்கு நல்லது என்று சொல்லி அவ்வப்பொழுது வேள்விகள் நடத்தி வந்தது. அந்த வேள்விகளில் விலங்குகளைப் பலி கொடுப்பது பெருத்து வந்தது. வேள்விச் செய்முறைகளின் அளவு இருக்க இருக்கப் பெரிதானது. அரசன் செய்யும் ஒவ்வொரு வேள்விக்கும் கொட்டிக் கொடுக்கவேண்டிய பொருட்கள் மலையாய்ப் பெருகின. முல்லைநிலத்து நாகரிகத்தில் இருந்து வந்த கீழ்த்தட்டு மக்கள் என்னதென்று செய்யத் தெரியாமல் வேள்விகளைப் பெரிய இடையூறாகக் கருதத் தொடங்கினர். ஒரு மாடு, இரண்டு மாடு பலிகொடுப்பதைப் “போய்த் தொலையட்டும்” என்று பலரும் அமைந்து போகலாம். ஆனால் அது 10, 100 என்று விரிவடையும் போது, பல்வேறு விலங்குகள் என்று அகலும் போது, ஆகுதியாகும் வெண்ணெய், கூலங்கள் இன்ன பிறவும் கூடும் பொழுது, ஊர்கள், ஊர்களையொட்டிய காடுகளில் இது அதிர்ச்சியையும், கலகத்தையும் கொண்டுவரத்தான் செய்யும்.

[இப்பொழுது சத்திசுகர், ஒரிசா, சார்க்கண்ட், வங்கம் போன்ற பகுதிகளில் பழங்குடியினருக்கும் வெளியிலிருந்து வரும் மக்களுக்கும் இடையில் ஏற்படும் தகறாறுகள், உள்நாட்டு வளங்கள் அந்த அந்த மக்களுக்குப் பயன்படாது வெளியாருக்குப் பயன்படுதல் போன்ற பொருளாதாரச் சுரண்டல்களை அன்றைய நாகரிக வழக்கங்களோடு சேர்த்துவைத்து எண்ணிப் பார்த்தால் நான் சொல்லுவதன் பரிமானம் புரியும்.]

புதுக் குடியேற்றத்தாருக்கும், பழங்குடியினருக்கும் இடையே முரண் ஏற்பட்டால் புதுக்குடியேற்றத்தாரின் வேள்விகள் பழங்குடியினரால் சிதைக்கப்படத்தான் செய்யும். அதன் விளைவால் பழங்குடியினர் அரக்கரென்று சொல்லப்படுவார்கள். பழங்குடித் தலைவர் அசுரர் தலைவர் எனப்படுவார். நான்காவது கூட்டத்தார் ஆரியர்/தேவர் என்று ஆவார். ஆரியர்கள்/தேவர்கள் செய்வதெல்லாம் அரசருக்குச் சரியாகவே தெரியும். நிலைமை அப்படி இருந்தது. தங்கள் வேள்விகள் தடுக்கப் படுவதால் தம் இனக் கூட்டத்துத் தலைவனை, தம் அரசனை, இந்த முனிவர்கள் வேண்டத்தான் செய்வார்கள். முனிவருக்கு இணங்கி அரசர்கள், தாங்களோ, தங்கள் படைத்தலைவரை அனுப்பியோ, பழங்குடியினருக்கு எதிராகப் போரிட வைத்து முனிவர்களின் வேள்விகளைக் காப்பாற்றுவார்கள். வேறு என்னத்தை வடபுலத்து அரசர் செய்திருக்க முடியும்? [கி.மு.1500-இல் இருந்து கி.மு.800 வரைக்குங் கூட it was always ”they and us” between the Aryas and the indigeneous ethnic locals in the Bharatvarsha.]

இத்தகைய வேறுபாடு தெற்கே கிடையாது. ஏனென்றால் கி.மு.600 வரைக்குங் கூடத் தெற்கே வேள்விகள் கிடையாது “அவர்களும் நாங்களும்” என்ற சிக்கல் கிடையாது. வெவ்வேறு மாந்தப் பரவல்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட நீண்ட காலக் கலப்பில் ஒருவருக்குள் இன்னொருவராய் ஆகிப் போனார்கள். முல்லை நிலத்துப் பழங்குடிகளுக்கும், மருத நிலத்து மக்களுக்கும் ஒரே வேந்தன் தான். அதன் விளைவால் ஒருவரைக் கொன்று, அவருடை பசுக்களைக் கவர்ந்து இன்னொருவர் வேள்வியில் ஆகுதியாக்குவது என்ற பேச்சிற்கே இடமில்லை. வெட்சிப் போரும், கரந்தைப் போரும் தென்னகக் குடிமக்களுக்குள் இருந்தன தான். ஆனால் அதற்கான வழிமுறைகளும், அதை ஒழுங்கு செய்யும் நெறிமுறைகளும் கூட வெட்சியார், கரந்தையார் இருபாலருக்கும் தெரிந்தன. இந்தப் போர்களைக் கையாளும் முறை தெரிந்திருந்த காரணத்தால் இருவேறு இனக்கூட்டத்து வெறுப்புச் சிக்கல்களை கி.மு.1000/800 களுக்கு அருகில் தென்புலத்து வேந்தர் பார்த்ததில்லை. There was law and order. There was no day-light robbery possible. There were ways and means to solve the issues. வடபுலத்து அரசருக்கோ establishing law and order என்பது முகன்மையான பணியாய் இருந்தது. Wherever new immigration takes place by forcible entry, law and order becomes a major issue.

இப்படி ஒரு காட்சியைத்தான் இராமாயணத்தில் விசுவாமித்திரன் வழியே நாம் அறிகிறோம். அவன் செய்ய நினைக்கும் வேள்வியைத் தாடகையும், அவள் மக்களும் செய்யவிடாது தடுக்கிறார்கள். தாடகை பக்கத்திலிருந்து எத்தனை விலங்குகள், உயிரினங்கள் வேள்விக்காகப் பிடித்து இழுத்துவரப்பட்டு முனிவன் ஆசிரமத்தில் அடைக்கப் பட்டன, கூலங்களைக் கொண்டுதரக் கட்டாயப்படுத்தப் பட்டார்கள் என்ற செய்தியை இராமயணம் நமக்குத் தெரிவிக்கவில்லை. தாங்கள் பாதிக்கப் படாமல், தாடகையும் அவள் மக்களும் விசுவாமித்திரன் வேள்வியைத் தடுக்கவேண்டிய காரணம் என்ன? ”அவர்கள் வேள்விக்கு ஊறுசெய்தார்கள், அவர்கள் கொல்லப்படவேண்டும்” என்று மட்டுமே ஆரியர் பார்வையில் இருந்து செய்தி தெரிவிக்கப் படுகிறது.

தருவணத்துள் யானியற்றும் தகைவேள்விக்கு
இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் செய்யும் அடைகாம வெகுளியெனும்
நிருதர் இடைவிலக்கா வண்ணம்
செருமுகத்துக் காத்தி

என்று (கம்பனில் சொல்லுவது போலத்) தயரதனிடம் கேட்டுப் பெற்று இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரன் கூட்டிவருகிறான். காட்டில் தாடகை வதைப் படலம் நடைபெறுகிறது. அதன் பின்

எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர்

என்று வேள்விப் படலம் சொல்லுகிறது. தாடகையின் மக்கள் மாரீசனும், சுபாகுவும் கொல்லப் படுகிறார்கள். விசுவாமித்திரன் வேள்வி காக்கப் படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் ”மத்திய தேசத்தில், ஆர்யா வர்த்தத்தில்” திரும்பத் திரும்ப நடக்குமானால், கண்ணினைக் காக்கும் இமை போல வேள்விகள் காக்கப் படுமானால், காடடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமானால், அடம் பண்ணிக் கொண்டிருந்த தாடகை வழியினர் அடங்கிப் போக மாட்டார்களா, என்ன? அப்புறம் விசுவாமித்திரன் போன்ற முனிவர்களின் ஆசிரமங்களிற் கிடக்கும் பெண் புள்ளிமான்கள் அங்குமிங்கும் அலைய வேண்டிய தேவையென்ன? பழங்குடிகள் எட்டிப் பார்க்கமுடியாத அளவிற்கு இமையம், பொதியம் போல் எதற்கும் அசையாத போர்த்தலைவர்கள் வழிநடத்தும் போர்ப்படைகள் வேள்வி நடக்கும் பர்ணசாலையைச் சுற்றி இருக்கும் போது எந்தப் பழங்குடிகள் உள்நுழைவர்? மான்கள் நன்றாகவே அமைதியாகத் தூங்கும். முத்தீ நன்றாகவே ஓம்பப்பட்டு வேள்விகள் இனிதே முடிவடையும்.

இன்னொரு செய்தியும் இங்கு சொல்லவேண்டும். முனிவர்கள் பெரும்பாலும் எந்த அரசனுக்கும் அடிபணியாத காட்டு இடைவெளிகளிலேயே இருந்திருக்கிறார்கள். They were on no-man's land like the pioneers in the American wild west. Just like the american Indians and European immigrants got into a conflict, here also conflict arose.

இத்தனை பின்புலத்திற்குப் பின் மேலேயுள்ள கடைசி 8 வரிகளுக்கு வருவோம். பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் தன் நாட்டை விட்டு ஆளில்லா நிலவெளிக்கு (no-man's land) வந்திருக்கிறான். யாரோ ஒரு கூட்டத்தாரைக் காப்பாற்றவேண்டும். அப்படிக் காப்பாற்றும் போது தன் நாட்டில் இல்லாத அதே பொழுது காடுகளில் வதியும் (தன் குடிமக்களைப் போன்ற இன்னொரு) இனக்குழுவோடு போரிடும் நிலைக்கு வந்து சேருகிறான். அவன் மனம் தடுமாறுகிறது. தான் செய்வது சரியா? ”யாரோவொருவருக்கு வாக்குக் கொடுத்ததற்காக, ஒரு பாவமும் செய்யாத வேற்று நாட்டுப் பழங்குடி மக்களோடு போருக்குப் போகிறோமே?” என்று கலங்குகிறான். ”இது சரிதான்” என்று வடபுலத்து நிகழ்வை எடுத்துக் காட்டி நயன்மை சொல்லப் பார்க்கிறார் முரஞ்சியூர் முடிநாகனார். It appears to be a perverted justification. But still we don't know the truth.

"என்ன நடந்தாலும் சரி கறந்த பால் புளித்தாலும், பகலே இருளாய் மாறிபோனாலும், இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் நால்வேத நெறி கூட மாறி போனாலும்,உன்னைச் சுற்றிய வீரர் மனந்திரியாது இமையமலை, பொதியமலை மாதிரி அசையாது உயர்ந்து விளங்கியிருக்கும் நிலையைப் பார்! அத்தகைய வரிசையில் ”எப்படி இளமான்களும் துயிலும் வகையில் ஆசிரம வேள்விகளைக் காக்கும் தொழிலை வடபுலத்தரசர் செய்கிறாரோ?” அது போல எம் அரசே! நடுக்கமிலாது நிற்பாயாக! அரச ஒழுங்கைக் காப்பாற்றுவாயாக!”

இந்த ஐந்து பகுதிகளில் பாட்டின் பொருளைச் சொல்லிவிட்டேன். வடநாட்டுத் தாக்கம் கூடிவரும் பருவத்தில் உதியஞ் சேரல் ஆண்டிருக்கிறான். இனக்குழுக்களின் மோதல் தெற்கிலும் தோன்றத் தொடங்கிவிட்டது. Southern Royalty was also getting into brahminised practices.

அன்புடன்,
இராம.கி.

3 comments:

Anonymous said...

//அறு வகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐ வகை மரபின் அரசர் பக்கமும்
இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்
மறு இல் செய்தி மூ வகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நால் இரு வழக்கின் தாபதப் பக்கமும்
பால் அறி மரபின் பொருநர் கண்ணும்
அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்”//
ஐய்யா இந்தப்பாடலின் பொருள் விளக்குங்கள். தொன்மையில் தமிழ் நிலத்தில் வருணப் பாகுபாடு பற்றி விளக்கவும்.

Anonymous said...

//கி.மு.600 வரைக்குங் கூடத் தெற்கே வேள்விகள் கிடையாது//
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியின் காலம் என்ன?

சேவற்கொடியோன் said...

மிக நேர்த்தியான அறிவியல்படியான விளக்கம் அய்யா. அருமையான கண்ணோட்டம்..