Saturday, January 10, 2009

பொத்தகத் தடை

நொச்சிப் போர்ச் சிந்தனைகள் சிலநாட்களாகவே என்னை ஆட்கொண்டிருக்கும் நிலையில், (இன்னும் என் கட்டுரைத் தொடரை முடிக்கவில்லை) நேற்றுப் பிற்பகல், 32 ஆவது சென்னைப் பொத்தக வியந்தைக்குப் போயிருந்தேன். [அங்கு சென்னைப் புத்தகக் காட்சி என்று தான் போட்டிருந்தார்கள்; அப்பாடா, ஒருவழியாய்க் ”கண்... ”தொலைந்து, ”காட்சி” மட்டும் நிலைத்ததை ”முன்னேற்றம்” என்றே எண்ணிக் கொண்டேன். ”தொழில் நுட்பத்தில்” தொழில் போய் “நுட்பியல்” என்று இந்தக் காலத்தில் ஆனதல்லவா? அது போல இங்கும் ஆயிற்று போலும் என்று எண்ணிக் கொண்டேன். இனி, எத்தனை நாட்கள் காட்சியை வைத்து exhibition காட்டுவார்களோ, தெரியவில்லை. சொல்லாக்கம் என்று சொன்னால், குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் நம் பழக்கம் மறையவே மறையாது போலும். சொற்களில் துல்லியம் பார்ப்பதை நம்மவர் என்று உணர்வார்களோ? fair என்பதும் exhibition என்பதும் ஒன்றல்லவே?]

சென்னைப் பொத்தக வியந்தை மிகவும் பெரியது. இந்த முறை 600க்கும் மேற்பட்ட தளிகள் (stalls). இரண்டாவது நாளென்பதாலும், நான் போன நேரம் பிற்பகல் என்பதாலும் அவ்வளவு கூட்டமில்லை. எனவே மெதுவாகப் பொத்தகக் கடைகளைத் துழாவ முடிந்தது. முதல் வரிசையில் ஏதோவொரு கடையில், திரு. குப்புசாமி செல்லமுத்து எழுதிக் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “பிரபாகரன்” என்ற வாழ்வரைப்(biography) பொத்தகம் 4 படிகளைப் (copies) பார்த்தேன். பொத்தகத்தைப் புரட்டிய நான், ஆர்வ மிகுதியால் அதை வாங்குவதற்கு விருப்பப் பட்டு, பின் பதிப்பகத்தின் பெயரைப் பார்த்துக் ”கிழக்குத் தளியிலேயே வாங்கிக் கொள்ளலாமே” என்ற எண்ணத்தில், முதலிற் பார்த்த கடையில் வாங்காது நகர்ந்து விட்டேன்.

அப்படியே மெதுவாகச் சென்ற போது, கிழக்குப் பதிப்பகம் பதிப்பாசிரியர் பா.ரா.வையும் பார்த்தேன். அவரைப் பார்த்து நாளாகி விட்டது என்பதால், முகமன் சொல்லி சற்று நேரம் உரையாடி நான் நகர்ந்தேன். அப்பொழுது அந்தப் பொத்தகம் பற்றி அவரிடம் எனக்குக் கேட்கத் தோன்றவில்லை.

நாலைந்து வரிசை தள்ளி கிழக்குத் தளிக்கு வந்து அங்கு தேடிய போது தான், அந்தப் பொத்தகம் அங்கு இல்லாததைக் கவனித்தேன். கடையில் இருந்த பணியாளர் ஒருவரிடம், பொத்தகத்தைக் குறிப்பிட்டுக் கேட்டால், அவர் மெதுவாகத் தணிந்த குரலில் “நேற்றுவரை அந்தப் பொத்தகம் இருந்தது; விற்றோம்; அப்புறம் அதை விற்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்” என்று சொன்னார். வியந்து போனேன். பெரும் செலவளித்து அச்சடித்துப் பொத்தகம் போடுபவர்கள் விற்காமல் இருப்பார்களோ? அப்படியானால் யாரோ ஒருவர் அந்தப் பொத்தகத்தை கிழக்குப் பதிப்பகத்தார் அங்கு விற்கக் கூடாது என்று தணிக்கை செய்திருக்கிறார்கள், அல்லது தடை செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். [பத்ரி தான் இதை விளக்க வேண்டும்.] அப்படியானால், முதல் வரிசைக் கடைக்காரர், கிழக்கில் இருந்து முன்னாலேயே மொத்த விற்பனையில் வாங்கி உதிரி விற்பனை செய்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். அவக்கரம், அவக்கரமாய், முதல் வரிசைக் கடைக்குப் போய்ப் ”பொத்தகம் இருக்கிறதா?” என்று மீண்டும் தேடினேன். இப்பொழுது அங்கும் பொத்தகப் படிகளைக் காணோம். வேறு உதிரி விற்பனைக் கடைகளில் தேடினால், அங்கும் காணோம்.

ஆக, வியந்தை முழுதும் அந்தப் பொத்தகம் இரண்டு மணிநேரத்திற்குள் திடீரென்று மறைந்திருக்கிறது.

என்னய்யா இது, கண்கட்டு வித்தையா? நான் சனநாயக நாட்டில் தான் வாழ்கிறேனா? நடந்ததைக் கண்டு சிரிப்பதா, சினமுறுவதா? வியல்ந்து கிடக்கும் இணையவெளியில் தேடினால் “பிரபாகரனின் வாழ்வரை” யாருக்கும் கிடைக்காமற் போகாதே?. அப்படி இருந்தும், அந்த வாழ்வரையை இந்தியத் தமிழர் வாங்கிப் படிக்கக் கூடாது என்று தடுப்பது யாரோ சில அதிகாரிகளின் விழைவு போலும்.

நினைத்துக் கொண்டேன்; ”இவர்களா, ஈழ விடுதலைக்கு, போர்நிறுத்தத்திற்கு, முயலுவார்கள்?” முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?

எனவே, என்னருமை ஈழத் தமிழர்களே! இனி இந்தக் கற்பனையைத் தூக்கிக் கடாசி எறியுங்கள். உங்கள் நாட்டிற் தமிழினம் அழிந்து பெரும் இழவு கூட்டிய பிறகு தான், இவர்கள் சாவுச் செய்தி கேட்க வருவார்கள். அதுவரை தமிழ்நாட்டுத் தமிழரை ஏமாளியாக்கி “இந்தாப் போகிறேன், அந்தாப் போகிறேன்” என்று பாவனை காட்டிக் கொண்டே இருப்பார்கள். ஒரு மண்ணும் செய்ய மாட்டார்கள். சிங்களனுக்கே குடைபிடித்துத் திரிவார்கள். இந்தச் செயலுக்கு பேராயக் கட்சியினரும் வால்பிடிப்பார்கள். பாவம், கலைஞர் ....... ஒருவேளை அவரும் இதிற் கூட்டோ என்னவோ?

ஆக, எந்தச் செய்தியையும் தெரிய விடாமல், பத்துப் பதினைந்து ஆண்டு காலம் ஒரு இனத்தின் கண்களையே கட்டி வைத்திருக்கிறார்கள்; வாய்ப்பூட்டு போட்டு இருக்கிறார்கள். இருபத்தைந்து அயிர மாத்திரியில் (கிலோ மீட்டரில்) ஓர் இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றித் தலைமை அமைச்சர் சென்னைக்கு வந்தும் மூச்சு விடமாட்டேன் என்கிறார், எங்கோ இருக்கும் காசாவில் மனித உரிமை பறி போவதை மட்டும் இவர் கண்டிப்பாராம்.

மலேசியப் பினாங்கு மாநிலத்தின் துணை முதலமைச்சர் சரியாகத்தான் வெளிநாட்டிந்தியர் மாநாட்டில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நமக்குத் தான் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லை.

வருத்தத்துடன்,
இராம.கி.

1 comment:

Vassan said...

நமக்குத் தான் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லை.

**

ஆம்! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

மகன், மனைவி, குடும்பம் என பிணைப்புகளில் இணைத்து,
பொறுப்புகள்/கடமைகள் உள்ள பெரும்பான்மையினரான எம்மால்
ஒன்றும் செய்ய முடியவில்லை.

மாய்ந்து,மாய்ந்து மனம் மட்டும் ஓலமிடுகிறது; இயலாமை நம்மை குறுக்கி
சின்னதாக்கிவிடுகிறது. இந்தியா என நினைக்கும் போது முழு ஏமாற்றம் மட்டுமே.

இயற்கையாக, மாற்றமில்லாமல் நிகழும் மாற்றம் மட்டும்தான்
நம்பிக்கை.