Sunday, January 04, 2009

நொச்சிப் போர் எழுப்பிய சிந்தனைகள் - 1.

நொச்சி வீழ்ந்தால் என்ன? நொச்சியில் இருந்து உழிஞைக்கு மாறிக் கொள்ள முடியாதா, என்ன? நொச்சியும் உழிஞையும் மாறிமாறி ஏற்படும் செருநிலைக் (battles) குறியீடுகள்; அவ்வளவு தான். அவை மண்ணாசைக்காக எழும் நீண்ட வஞ்சிப் போர் அல்ல, இடைநிலைப் போக்குகள். நீண்ட வஞ்சி இனியும் தொடரும், வாகையில் முடியும் வரை. எங்கள் தம்பி வாகை சூடத்தான் செய்வான். அடச்சே, போங்கடா!

புறம் 271 ல் வெறிபாடிய காமக் காணியார் என்னும் புலவர், நொச்சித் திணையில் செருவிடை வீழ்தல் என்னும் துறையில்

நீரறவு அறியா நிலமுதல் கலந்த
கருங் குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல்
தொடலையாகவும் கண்டனம் இனியே
வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்துப்
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே

என்று பாடியிருப்பார். இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்தாற் போன்று ஒரு விவரிப்பு.

நொச்சியைப் புதலியற் (Botany) துறையில் Vitex nigundo L. என்பார்கள். (நீர்க் குன்றி என்ற தமிழ்ச்சொல் தான் nirgundi>nigundo என்று ஆகியிருக்கிறது. நொச்சிச் செடி முற்றிலும் ஒரு தமிழ்நிலத்துச் செடி.) ஒரு குறுமரம் என்றே சொல்லத் தக்க நொச்சிச்செடி சமவெளிகளிற் கிட்டத்தட்ட 4 மாத்திரி உயரத்திற்கும், மலைப் பகுதியில் 6 மாத்திரி உயரத்திற்கும் கூட வளரும். எங்கெல்லாம் ஈரம் மிகுந்திருக்குமோ, அங்கு, குறிப்பாக ஆற்றோரங்களில், நொச்சிச் செடி வளரும். காமக் காணியார் பாட்டின் “நீரறவு அறியா நிலமுதல் கலந்த” என்ற முதல்வரி, இந்த அறிவியல் அவதானிப்பைச் சட்டென்று உணர்த்துகிறது. நீரறவு என்பது நீர்க்குறை. நீரறவு அறியா நிலம் என்னும் போது நீர்வளம் குறையாத நிலத்தைக் குறிக்கிறது. நொச்சிச் செடி நஞ்சைப் பகுதியில் (அதாவது மருத நிலத்தில்) வேலியாகக் கூட வளர்க்கப் படுகிறது. எனவே வேலிக்கு உவமையாய் நொச்சி திகழும்.

நொச்சியிலை 7-12 நுறுமாத்திரி (செண்டிமீட்டர்) நீளமும், 2-3 நுறுமாத்திரி அகலமும் கொண்டு ஈட்டி வடிவில், கண்ணை ஈர்க்கும் பசிய நிறத்தில், இருக்கும். மயிலின் தாளைப் போல இலை இருப்பதால் அதை மயிலடி இலை என்று கூட விவரிப்பது உண்டு. இலைக் காம்புகள் ஒன்றரை நுறுமாத்திரி இருப்பதால் இலைகளைத் துணி போலப் பின்னுவது எளிது. நொச்சித் தழையாடையை மருதநிலத்துப் பெண்கள் தம் இடுப்பில் அகன்ற அல்குலை மூடும் வகையில் அணிந்து கொள்வார்களாம். பருத்தித் துணிக்கு மேல் அணிந்து கொண்டிருக்கலாமோ, என்னவோ? இலைகளின் பசியநிறம் கண்களை ஈர்த்ததைப் பல சங்கப் பாடல்கள் சொல்லியிருக்கின்றன. ”கண் ஆர் குரூஉத் தழை, மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல் தொடலையாகவும்” என்று மேலே வரும் சொற்றொடரும் அதே செய்தியைச் சொல்கிறது. தொடலை என்பது இலைகளை நெருக்குப்பத்தையாய்த் துணிபோற் பின்னிக் கட்டுவதாகும்.

நொச்சிப் பூவின் இயற்கை நிறம் கருநீலம் செறிந்த செவ்வூதா. பூங்கொத்துக்கள் 25 நுறுமாத்திரி அளவில் பூத்துக் குலுங்கும். சமவெளியில் சனவரி - ஏப்ரல் மாதங்களிலும், மலைப்புறத்தில் சூலை - அக்டோபரிலும் பூக்கும். குரல் என்பது கொத்து. நொச்சிக்கே உரிய மணம் செடிக்கு அருகில் போனாலே கமழ்ந்து தெரியுமாம். செடிப்பட்டை, சிறு இளம் கிளைகள், பூங்கதிர்கள், மற்றும் இலையின் கீழ்ப்புறம் ஆகிய எல்லாமே சாம்பற்பொடி தூவியது போல் இருக்குமாம்.

சங்க இலக்கியங்களில் நொச்சியைக் குறிக்கும் குறியீடாகக் ”கருங்குரல் நொச்சி, மாக்குரல் நொச்சி, மணிக்குரல் நொச்சி, மணிஏர் நொச்சி, ஒண்குரல் நொச்சி” என்று பூங்கொத்தோடு கூட்டியோ, ”தாழ்வின் நொச்சி, தடவுநிலை நொச்சி, கூழை நொச்சி” என்று செடியின் குள்ளத் தன்மை பற்றியோ சொல்லுகிறார்கள். குள்ளப் பெண் கூளி, குள்ளி என்றும் தமிழில் குறிக்கப் படுகிறாள் இல்லையா? குள்ளச் செடியும் அப்படிக் குறிக்கப் படலாம் தானே? குள்ளிநொச்சி மிகுந்த இடம் குள்ளிநொச்சி> கிள்ளிநொச்சி> கிளிநொச்சியாகப் பேச்சுவழக்கில் சொல்லப் படுவது வியப்பில்லை. நான் சொல்லும் களம் புரிகிறதோ?

மருதநிலத்தில் நஞ்சை வேலியாக நொச்சிச் செடி வளர்க்கப் பட்டது என்று பார்த்தோமல்லவா? அதனால் வேலி/மதில் என்பதற்கே நொச்சி ஒரு குறியீடு ஆனது. மருதநிலத்தில் தானே மதில்களும் அரண்களும், கோட்டைகளும்.பரந்து கிடக்கின்றன. அரண்களைக் காக்கும் போர் நொச்சிப் போர். நொச்சிப் போராளிகள் நொச்சிப்பூ தொடுத்த மாலையைக் கழுத்திற் போட்டுக் கொள்ளுவார்கள். மேலே பாட்டின் ஆறாவது வரியில் தெரியல் என்ற சொல் வருகிறதே அது இந்த மாலையைக் குறிக்கும். அரணைத் தகர்க்க வருபவரை உழிஞையார் (உழிஞைப் பூ அணிந்தவர்) என்றும், அரணைக் காப்பவரை நொச்சியார் என்றும் தமிழிலக்கணம் சொல்லும்.

பாட்டில் வரும் மைந்தன் என்ற சொல் போராளியைக் குறிக்கிறது. மைந்து என்பது வலிமை. மறம்புகல் மைந்தன் = போரில் பொருதும் போராளி..

இப்பொழுது பாட்டின் பொருளைப் பார்ப்போமா?

”நீர்வளம் குறையா நிலத்தோடு ஒன்றி, கருநீலப் பூங்கொத்தோடு காட்சியளிக்கும் நொச்சிச் செடியின் (கண் நிறைத்துத் தோற்றும்) தழையைத் தொடலையாக்கி, தம் அழகிய அகன்ற அல்குலை மூடி மகளிர் அணிந்துகொள்வதை முன்பு இனிதாய்ப் பார்த்திருக்கிறோம். போரில் புகுந்த மகன் இறந்து கிடக்கும் இப்பொழுதோ, அச்சம் தரும் குருதியில் முழுதாய்த் தோய்ந்து, நிறம் மயங்கிக் கிடக்கும் நொச்சி மாலையை ஊன் என்று கருதிப் பருந்து கவ்வ விழைவதைப் பார்க்கிறோம்.”

என்ன சொல்ல வருகிறார், புலவர்? ”முன்னால் நொச்சித் தழையாடை உடுத்த காட்சியை இனிது கண்டோம்; இப்பொழுது எங்கள் போராளி நொச்சிமாலை குருதியில் நிறம் மாற, பருந்து கவ்வ வருவதைப் பார்க்கிறோம்”. ”மேலது கீழாய் கீழது மேலாய், இந்த நிலை இனியும் மாறும்” என்பது உடன் வரும் உள்ளுறைப் பொருள் ஆகும். புலவர் சொல்லிய முரண்தொடையால் இந்தப் பொருள் பெறுகிறோம். ஏனென்றால்,

“தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என்றலும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே ....”

- கணியன் பூங்குன்றன், புறம் 192.

அன்புடன்,
இராம.கி.

6 comments:

தமிழன்-கறுப்பி... said...

சரியான நேரத்தில் சரியான பாடல்...!

தமிழ் said...

சரியாகச் சொன்னீர்கள்

Jayakumar said...

நன்றி அய்யா!

Vijayakumar Subburaj said...

வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி உழிஞை நொச்சி தும்பை வாகை

Chithan Prasad said...

வணக்கம் இராம.கி ஐய்யா
தங்களுடைய தைப் பொங்கல் குறித்தான கட்டுரையை , தங்களுடைய இணையத் தளக்குறிப்புடன் யுகமாயினி இதழில் பயன்படுத்தி கொள்ள அனுமதிப்பீர்களா? தங்களுடைய மின்னஞ்சல் முகவரி தெரியாததால் இங்கு என்னுடைய விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டியதாயிற்று.தங்கள் மறுபடிக்கு காத்திருக்கும் சித்தன்

இராம.கி said...

நாள் சுணங்கி மறுமொழிப்பதற்கு மன்னியுங்கள். வேறு கவனத்தில் இது மறந்து போயிற்று. தைப் பொங்கல் குறித்தான கட்டுரையை , யுகமாயினி இதழில் பயன்படுத்தி கொள்ள என் அனுமதி உங்களுக்கு உண்டு.