போரியலில் குறிக்கோள் என்பது மிகவும் முதன்மையானது. “இந்த நிலத்தைப் பிடி, இவர்களைச் சாய், இந்தக் கோட்டைகளை வீழ்த்து, முடிவில் இதை அடை” என்றவாறு ஒரு படையணி (battalion) அல்லது அரணத்தின் (Army) முன்பாகக் குறிக்கோள்கள் வைக்கப் படுகின்றன. அந்தப் படை/அரணம் இருக்கும் இடத்தில் இருந்து, அவர்கள் முன்வைத்த குறிக்கோளை அடைய அரண வல்லுநர்கள் தடவரைகளை ஏற்படுத்தித் தருகிறார்கள். ”இது தான் உங்களுக்குச் சரியான தடம், இந்த வழியில் போங்கள், உங்கள் குறிக்கோளை உறுதியாய் அடையலாம்” என்று ஒரு
பருந்துப் பார்வையில் வானில் இருந்து நிலத்தைப் பார்த்தாற்போல் ஒரு கோடு வரைவது தான் தடவரையாகும். strategy என்று ஆங்கிலத்தில் இதைச் சொல்லுவார்கள். Strategy என்பதை ஒரு பாதை போல உருவகிக்கலாம். (யுத்த உபாயங்கள் என்று மணிப் பவளத்தில் சொல்லுவார்கள்.) ஒரு வினையைச் செய்வதற்கு முன்னால் தடவரைகள் வரையப் படுகின்றன.
கணிதத்தில் இடப்பியல் (topology) என்ற பிரிவு ஒன்று உண்டு. அதில் சொல்லுவது போல ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் போக கணக்கற்ற பாதைகள் உண்டு. அதே போல ஒரு குறிக்கோளை அடையவும் கணக்கற்ற தடவரைகள் இருக்கும். அதில் எந்தத் தடவரை சிறப்பானது, நேர்த்தியானது என்பது பல்வேறு காரணங்களால் நடைமுறையில் அறுதி செய்யப் படுகிறது. [நாம் இருக்கும் புள்ளி நமக்குக் கொடுக்கப் பட்டது. நம் குறிக்கோள் நாம் போகவேண்டிய புள்ளியை நிருணயிக்கிறது. போகவேண்டிய புள்ளி நம் தடவரையைப் போட, பெரிதும் உந்துகிறது.]
அந்தத் தடவரையின் படி ஒருவரோ, ஒரு குழுவோ, ஒரு படையோ, ஒரு படையணியோ முன்னே சென்று குறிக்கோளை அடைவதற்கு ”இதை முதலில் செய், இதை அடுத்து ஆற்று, மூன்றாவதாக இப்படி நகர்....” என்று செய்யவேண்டிய ஆற்றங்களை (actions) வரிசையாய் அடுக்குகிறார்களே அதற்கு அடுவரை (tactics) என்று பெயர். [tactics என்ற சொல் tassein (Gk) - arrangements என்ற சொல் - பொருளிலேயே பிறந்திருக்கிறது. design என்ற சொல் கூட tassein (Gk) - arrangements என்பதிற் பிறந்தது தான். (அதை அடவுகள் என்று மொழிபெயர்க்கலாம்.) அடுக்குதல் என்பது to arrange என்றே தமிழில் பொருள் கொள்ளும். tactics என்பது ஒரு பயண நிரலைப் போல அமையும். ஒரு நிரலை விதம் விதமாய் நாம் மாற்றி அடுக்கலாம் அல்லவா? தந்திரோபாயங்கள் என்று மணிப்பவளத்தில் அறிவுய்திகள் (intelligentia) இதைக் குறிப்பார்கள். மணிப்பவளத்தைத் தூக்கிக் குப்பையிற் போட்டு நல்ல தமிழுக்கு வருவோமே? நாம் செய்வதும் செய்ய வேண்டியது என்னவென்று அப்பொழுதாவது விளக்கமாய்ப் புரியும்.] இந்த அடுவரையை அரண வல்லுநர்கள் சொல்லுவதில்லை; படைத்தளபதியே இடம், பொருள், ஏவல் பார்த்து அமைத்துக் கொள்ளுகிறார்.
பொதுவாக எந்த அடுவரையிலும் கொஞ்சம் நீக்குப் போக்கு உண்டு. ஆற்றங்கள் நடக்கும் பாங்கிற்கு ஏற்ப அடுவரையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும்; சற்று பிறழும்; சிலபோது முன்பின்னாகும்; ஏன், புது வடிவம் கூட எடுக்கும். ஆனால் தடவரையில் இது போன்ற பிறழ்ச்சிகள் நெடுகவும் நடந்தால் அப்புறம் அது தடவரை ஆகாது. குடவரை (=கோணவரை) ஆகிப் போகும் ”முதற் கோணல் முற்றுங் கோணல்” என்பது நினைவிருக்கிறதா? அப்படிப் பிறழ்ந்து கொண்டே இருந்தால், போக வேண்டிய ஊருக்கு நாம் போய்ச் சேர மாட்டோம். ”போகாத ஊருக்கு வழி கேட்கக் கூடாது” என்ற சொலவடையும் உங்களுக்கு ஞாவகம் வருகிறதா?
குறிக்கோள் - தடவரை - அடுவரை என்பது ஒரு தொகுதி. போரியல் நிகழ்வுகளை இந்தத் தொகுதியை வைத்தே புரிந்து கொள்ள முடியும். .
எந்தப் போருக்கும் குறிக்கோளாய் மூன்றை மட்டுமே தமிழ்ப் புறத்துறை இலக்கணம் சொல்லுகிறது. ஒன்று மாற்றானின் செல்வத்தைக் கவர்ந்து கொள்ளல். ஒரு காலத்தில் செல்வம் என்பது மாட்டு மந்தைகளே. மாட்டு மந்தைகளைக் கவர்ந்து கொள்ளுவது வெட்சிப் போர், கவர்ந்ததை மீட்டுக் கொள்வது கரந்தைப் போர். அண்மைக் காலத்தில் நடந்த வெட்சி - கரந்தைப் போராகக் குவைத்திற்கும் ஈராக்கிற்கும் இடையே நடந்த போரைக் குறிக்கலாம். ஈராக்கின் பாறைநெய்ச் (petroleum) செல்வத்தை நிலத்திற்கு அடியில், வளைந்த குழாய் போட்டுச் சுரண்டி, குவெய்த் கவரத் தொடங்கியது. ஈராக் அதைத் தடுத்துத் தன் செல்வத்தை மீட்டுக் கொள்ளப் பார்த்தது. முடிவில் அமேரிக்கா, இரோப்பா போன்ற சண்டியர்களின் உறுதுணையால் வெட்சியார் வெற்றி பெற்றார்கள். கரந்தையார் தோற்றார்கள். வளைகுழாய் நுட்பியலில் இன்றைக்கும் இராக்கின் பாறைநெய் குவெய்த்தால் கவரப் பட்டே வருகிறது. [பலநேரம் வெட்சிப் போர் கமுக்கமாய், ஊமைக் குசும்போடு, ஆளரவம் அற்று இருக்கும். கரந்தைப் போர் பெரும் ஆரவாரத்துடன் நடக்கும். உடனே பார்வையாளர் கரந்தையார் தான் போரைத் தொடங்கினார்கள், அவர்களே கெடுதிக்காரர்கள் என்று எண்ணத் தொடங்கிவிடுவார்கள். கடைசிவரை வெட்சியாரின் வேட்கை சாடப் படாமலே போகும். இங்கும் எல்லோரும் இராக்கையே சாடிய நிலையில், குவெய்த் கண்டனத்திற்கு உள்ளாகவே இல்லை.]
அடுத்த வகைப் போரை வஞ்சிப் போர்.என்று தமிழ்ப் புறத்துறை இலக்கணம் சொல்லும். மண் நசையால் (விருப்பத்தால்) ஒருவன் இன்னொரு நாட்டை போரால் கவருவது. இந்தப் போருக்குக் கணக்கற்ற எடுத்துக் காட்டுக்கள் உண்டு. [சொல்லப் போனால் வஞ்சிப் போர் மிகவும் பரவலானது. முன் நடந்த இரண்டு உலகப் போர்களும் கூட வஞ்சிப் போர்கள் தான்.] நம் முன்னே இப்பொழுது நடந்து கொண்டு இருக்கும் ஈழப் போரும் ஒரு வஞ்சிப் போர் தான்.. சிங்களனுக்குத் தமிழ்மண் வேண்டும். தமிழரைத் துரத்தியடித்து, அவர் நிலத்தில் சிங்களரைக் குடியேற்றி நாட்டின் மக்கள்
பரம்பலை (distribution) அவன் மாற்ற விழைகிறான். இதற்கு அவன் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க அவன் அணியமாய் இருக்கிறான். தமிழன் என்ற இனம் அழிந்தால் தான் சிங்களனுக்கு நிலம் கிடைக்கும் என்றநிலையில், ”தமிழன் இறந்தாலும் சரி, அகதியாய் ஓடிப் போய் நிலம் விட்டு நகர்ந்தாலும் சரி,” சிங்களனுக்கு ஏற்கை தான். இந்த நிலையில் தமிழரின் குறிக்கோள் என்ன? ”தமிழ்மண் உரிமையை எக்காலத்தும் விட்டுக் கொடுக்கக் கூடாது; முடிந்தால் அகலவே கூடாது” என்பது தானே?
இதற்கான தடவரையில் புலிகள் போயிருந்தால், ”ஏன் 7 ஆண்டுகளாய் சமதானம் பார்த்தார்கள்?” என்று என் சிந்தனைக்குப் புரிபடவில்லை. சமதானத்திற்கு முன் அகன்று கொண்டே போய், விரிந்த நிலப்பரப்பைத் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் அவர்கள் கொண்டுவந்தார்களே? அதை முற்றிலுமாய் முடித்து தமிழருக்கான முழு நிலத்தையும் தங்கள் வசம் கொண்டு வருவதில் ஏன் சுணக்கம் ஏற்பட்டது? - விளங்கவில்லை.
இந்த 7 ஆண்டுகளில் பல செய்திகளைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனாலும் அடிப்படைக் கேள்வி அப்படியே நிற்கிறது.
நான் போரியலாளன் அல்லன். அதே பொழுது தமிழர் வெல்ல வேண்டும் என்று நினைக்கும் பார்வையாளன். யாராவது விளக்கமாய்ச் செறிவாய்ச் சொன்னால் தெரிந்து கொள்வேன்.
இன்னும் சில சிந்தனைகள் நொச்சிப் போரை ஒட்டி இருக்கின்றன. அடுத்தடுத்துச் சொல்லுகிறேன். .
அன்புடன்,
இராம.கி.
பி.கு. தமிழ்ப் புறத்துறை இலக்கணம் சொல்லும் மூன்றாவது வகைப்போர் தும்பைப் போர். அது வலிமையை உணர்த்து முகத்தான் ஒருவன் செய்வதும் அதை எதிர்த்து மற்றொருவன் போரிடுவதும் ஆகும். அமெரிக்கா, ஈராக்கின் மேல் தொடுத்ததும், ஆப்கனித்தான் மேல் தொடுத்ததும் தும்பைப் போர்கள். அந்த வகைப் போர்கள் இப்பொழுது நம் உரையாடலுக்குள் உள்ளாத காரணத்தால் அவற்றைப் பற்றி இங்கு பேசவில்லை.
2 comments:
//இதற்கான தடவரையில் புலிகள் போயிருந்தால், ”ஏன் 7 ஆண்டுகளாய் சமதானம் பார்த்தார்கள்?” என்று என் சிந்தனைக்குப் புரிபடவில்லை. சமதானத்திற்கு முன் அகன்று கொண்டே போய், விரிந்த நிலப்பரப்பைத் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் அவர்கள் கொண்டுவந்தார்களே? அதை முற்றிலுமாய் முடித்து தமிழருக்கான முழு நிலத்தையும் தங்கள் வசம் கொண்டு வருவதில் ஏன் சுணக்கம் ஏற்பட்டது? - விளங்கவில்லை.//
யாழ்ப்பாணத்தைப் புலிகள் கைப்பற்றி அங்கிருந்த 30,000 சிங்கள அரணமும் இறக்கும் சூழல் ஏற்பட இருந்த போது இந்தியாதான் புலிகளை மிரட்டி புலிகள் மேற்கொண்டு முன்னேறினால் தாங்கள் வருவோம் என்று சதி செய்தார்கள். அன்றே கிடைக்க வேண்டிய தமிழ் ஈழம் கிடைக்காமல் போனதற்கு இந்திய நடுவண் அரசினதும் குள்ள நரித்தனமும் அதை அனுமதிக்கும் தமிழ்நாட்டு மக்களின் சோம்பலும் இனப்பற்று அற்ற கையாலாதனமும்தான் காரணம்
அன்று தனது கப்பற்படையைத் தயார்நிலையில் வைத்துக்கொண்டு புலிகளை மிரட்டிய இந்தியா இன்றும் தமிழர்களுக்கு எதிராக மறைமுகமாகவும் நேராகவும் செய்மதிக் கண்காணிப்பு, ஆயுத வழங்கல் தடை, குண்டுகள் கவண்கள் உதவி, வானொற்றி, வானூர்தி உதவி, தடந்தகை உதவி, அரசியல் உதவி, நிதி உதவி போன்று பல உதவிகளைச் செய்கிறான்.
அதற்கு உங்களைப் போன்ற தமிழ்நாட்டு மக்களும் வரி செலுத்திவிட்டு புலிகளை மட்டும் வினவுகிறீர்கள். 47 கோடி ஈழத்தமிழர் நிவாரண உதவியில் 45 கோடியைக் கலைஞர் ஏப்பமிட்ட செய்திகூட விளங்காது உங்களைப் போன்ற பலர் உறங்குநிலையில் தமிழகத்தில் நடந்து திரிகிறீர்கள் திட்டமிட்ட ஈழத்தமிழர் அழிப்பாலும் மலையகத் தமிழர் வெளியேற்றத்தாலும் சிங்களக் குடியேற்றத்தாலும் தமிழர்கள் தொகை அருகியேவிட்ட நிலையில் போதிய ஆளணியில்லாமல் போரிடும் ஆற்றலைத் தமிழினம் இழக்கும்வரை இந்தியாவின் குள்ளநரித்தனம் தொடர்ந்த வண்ணமே இருக்கும். உலகமே அணிதிரண்டு ஈழத்தமிழர்களைத் துடைத்தழிக்க கங்கணம் கட்டியுள்ளார்கள். இந்த வேளையில்கூட தமிழகம் வெறும் பார்வையாளர்களே இருந்து தமிழின அழிப்பிற்கு உடந்தைபோகின்றது என்பதே வேதனையான விடையம்.
பதிவுக்கு தொடர்பில்லாத கேள்வி
sincere என்ற ஆங்கில வார்த்தைக்கு ஈடாகக் கூறக்கூடிய தமிழ் வார்த்தை எது? அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று கூறினால், எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Post a Comment