Wednesday, December 31, 2008

கொலை

"கொலையைப் பற்றி ஒரு நாள் எழுதுவேன்" என்று கனவிலும் நான் நினைத்ததில்லை. ஆனால் பேராசிரியர் முத்து என்பவர் அமெரிக்காவில் இருந்து ஒருமுறை அதைப் பற்றிக் கேட்க, நான் எழுத வேண்டியதாயிற்று. இப்பொழுது பழையதைக் கிண்டிக் கொண்டிருந்த போது, இதை வலைப்பதிவில் போடலாமே, பலருக்கும் தெரிவிக்க வேண்டிய செய்தி தானே என்று தோன்றியது. இப்பொழுது சிறு சிறு மாற்றங்கள் செய்து அதை இங்கு இடுகிறேன்.

ஒவ்வொரு மொழிக்கும் விதப்பான (special) சில சொல்லாட்சிகள் உண்டு. இந்தச் சொல்லாட்சிகள் அந்தந்த மொழி பேசும் மக்களின் தனித்த சிந்தனையாலும், குமுகச் சிந்தனையாலும் ஏற்படுகின்ற சில புதிய பொருட்பாடுகளை (meanings) முன்வைத்து புழக்கத்திற்கு வருகின்றன. இந்தச் சொல்லாட்சிகள் எழுந்தமுறை மிக எளிதாகவே இருக்கலாம். இருப்பினும் இரண்டு வெவ்வேறு சொற்களை ஓரிடத்தில் அடுத்தடுத்துப் பொருத்தும் போதோ, அல்லது ஒரு அடிப்படையில் தோன்றிய கருத்தை இன்னொரு நிகழ்விற்கு உருவகம் செய்யும் போதோ, புதிய பொருட்பாடு அந்த மொழிக்கென வந்து விடுகிறது.

இரண்டு சொற்களைப் பொருத்தி முற்றிலும் புதிதான ஒரு பொருட்பாடு கொள்வதற்கு தமிழில் ஒரு எடுத்துக்காட்டைக் கீழே கொடுக்கிறேன்.

"உங்கள் பெற்றோருக்கு நீங்கள் எத்தனையாவது பையன்?" இந்த வாக்கை எப்படி முயன்றாலும் ஆங்கிலத்தில் நேரடியாகச் சொல்ல முடியாது. கொஞ்சம் சுற்றி வளைத்துத்தான் சொல்ல முடியும். இந்த "எத்தனையாவது" என்ற சொற்கூட்டில் "எத்தனை" என்பதையும் "ஆவது" என்பதையும் தனித்தனியே ஆங்கிலத்தில் பெயர்க்க முடியும். ஆனால் சேர்ந்து வரும் போது ஒரு புதிய பொருட்பாடு வருகிறது பாருங்கள். அதைத் ”தமிழுக்குரிய விதப்பு” என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? (இது போல ஆங்கிலத்தில் இருந்து தமிழில் பெயர்க்கும் போதும் சில இடையூறுகள் உண்டு.)

உருவகத்தால் வரும் புதிய பொருட்பாட்டிற்கும் இங்கே ஒரு எடுத்துக் காட்டைக் கொடுக்கிறேன்.

எதிர்பாராத தன்னேர்ச்சி (accident) ஒன்று நாம் போகும் சாலையில் நடக்கிறது; ஒருவர் சாகக் கிடக்கிறார். அவருக்கு மூச்சு இருக்கிறதா என்று இன்னொருவர் பார்க்கிறார். கூட்டத்தில் நிற்கும் மற்றொருவர் சென்னைத் தாழ்நிலை மக்களின் பேச்சுவழக்கில், "இன்னாபா, மெய்யாலுமே பூட்டானா?" என்று கேட்கிறார். . உயிர் போவதை "போய்விட்டார்" என்ற சொல்லால் தமிழில் இப்படி உணர்த்துவதை எவ்வளவு தலை கீழாக நின்றாலும் ஆங்கிலத்தில் கொண்டுவர முடியுமோ? இத்தனைக்கும் ஆங்கிலத்தில் இதற்கு "gone" என்ற நேரடிச் சொல் இருக்கிறது. தமிழ் மொழிக்கென்ற உருவகம் இங்கே உள்ளடங்கி நிற்பதை நாம் உணருகிறோம் அல்லவா? (இதே போல ஆங்கிலத்தில் சொல்லும் ஒரு மொழியை அப்படியே தமிழில் பெயர்க்க இயலாத நிலைகள் உண்டு.)

குமுகச் சிந்தனையில் கிளரும் பொருட்பாட்டிற்கு தொல்காப்பியத்தில் வரும் ஒரு கூற்றையே எடுத்துக் காட்டாகக் கூறலாம்:

ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே
தா என் கிளவி ஒப்போன் கூற்றே
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே

இப்படி, சொல்லுபவன் நிலையைப் பொருத்துச் சொல் தொடுக்கும் பழக்கம் மேலை மொழிகளில் பெரும்பாலும் கிடையாது.

சரி, பேராசிரியர் முத்துவின் கேள்விக்கு வருவோம். ”murder என்பதைத் தமிழில் சொல்ல முடியுமா?” என்று முதலில் கேட்டிருந்தார். அதற்கு விடையாக நான் சில சொற்களைக் குறிப்பிட்டு இருந்தேன். உடனே அவர்
---------------------------------------------------------
தமிழில் "murder" என்ற சொல்லுக்கு இணையான சொல் என்று ஒரு சொல்லைக் கூற முடியுமா? இருக்க வேண்டிய அவசியமோ, இல்லாதது ஒரு குறையோ அல்ல. தமிழ் மொழி தமிழர் பண்பாட்டை ஒட்டியே இருக்கும். கொல்வது என்ற செயலே (வஞ்சத்தினாலோ, தற்காப்புக்காகவோ, வேட்டையிலோ, அறியாமலோ, விபத்தினாலோ) குற்றமாகக் கருதப்பட்டால், ஒரு சொல்லே போதும்; ஒரு மனிதப்பிறவி மற்றொரு மனிதப்பிறவியை, வஞ்சனையால் கொல்வது மட்டுமே குற்றமெனக் கருதப்பட்டால் (இன்றைய தமிழ்ச்சமூகம் மற்றும் மேல்நாட்டுச் சமூகப் பண்பாட்டுப் படி) அப்போது, அந்தச்செயலைக் குறிக்க ஒரு தனிச்சொல் வேண்டும். உதாரணமாக, "Indira Gandhi was assasinated" என்பதைத் தமிழில் "இந்திரா காந்தி கொல்லப்பட்டார்" என்றும், "My cat killed a mouse" என்பதை, "என் பூனை ஒரு எலியைக் கொன்றது" என்றும் ஒரே விதமாகக் கூறுகிறோமே அன்றி, வித்தியாசமாகக் கூறுவதில்லையே! தமிழ் இலக்கியத்தில் இவ்விரு செயல்களும்- உதாரணமாகக் கம்ப இராமாயணத்தில் இராமன் வாலியைக் கொன்றதையும், மனுநீதிச்சோழனின் மைந்தன் தேர் ஓட்டி பசுங்கன்றை மாய்த்ததையும்- வேறு வேறு சொற்களால் வருணிக்கப் பட்டிருக்கின்றனவா?
-----------------------------------------------------------------------------------------

என்று மீண்டும் விரிவாகக் கேட்டிருந்தார். நண்பர் சிரீவாசும் அந்தச் சொற்களுக்கு விளக்கம் கேட்டிருந்தார்.

Cambridge International Dictionary of English என்ற ஆங்கில அகரமுதலியில் murder என்பதற்கு the crime of intentionally killing a person என்றே போட்டிருக்கிறது. ஆனால், இந்தச் சொல்லின் வரலாற்றை இலத்தீன், இந்தோயிரோப்பியன் வரை போய்ப் பார்த்தால் அங்கே வெறும் இறப்பு என்ற பொருட்பாடு தான் இருக்கிறது. (The ultimate source of murder is the Indo-European base *mor-, *mr- 'die' (source also of English mortal). "வேண்டும் என்றே கொலை செய்தல்" என்ற இந்தக் காலத்துப் பொருட்பாடு அந்தக் காலத்தில் இல்லை. எங்கேயோ இடைப்பட்ட காலத்தில் (பெரும்பாலும் 19-ம் நூற்றாண்டில்) ஏற்பட்டிருக்கலாம். அந்த *mor- என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த மற்ற சொற்களான mortality, mortuary, போன்றவற்றைப் பார்த்தாலும் வெறும் இறப்பு என்ற பொருட்பாடே உள்ளே தொனித்து நிற்கிறது. "*mor- என்ற வேரின் பொருள் என்ன? அது எப்படிப் பிறந்தது?" என்ற விளக்கம் அங்கு இல்லை.

தமிழில் இறத்தல், சாவு, மடிதல் போன்றவை வளைவு என்ற அடிக் கருத்தில் எழுந்தவை. (இன்னும் சில சொற்கள் துண்டாகிப் போன கருத்தில் எழுந்தவை.) ஒருவன் உயிராற்றலை இழந்து சாய்ந்து போனால் அதைச் சாய்வு>சாவு என்கிறோம். சாவு>சவத்தல்>சவம்; சாதல்>சவத்தல்>செத்தல் என்றெல்லாம் அது திரியும். மடிதல் என்பதும் நிற்க முடியாமல் மடங்கிப் போதல் என்றே பொருட்பாடு கொள்ளும். மடிதல்>மரித்தல் (டகரமும் ரகரமும் தமிழில் போலியாகி நிற்கும்)>மரணம், இறத்தல் என்பதும் சரிதல் என்ற பொருளே கொள்ளும். இறக்கம் = சரிவு. சாய்வும் சரிவும் தமிழில் ஒன்றுதானே!

மடிதல்/மரித்தல் என்ற சொல்தான் இந்தையிரோப்பியச் சொல்லடியான mort என்பதோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படியானால், மரிப்பு = mortality' மரித்துறை = mortuary (சவ அறை) என்ற சொற்கள் சரியாக இருக்கும்.

மேலே கூறியது போல், இந்தச் சொற்களில் எல்லாம் இறப்பு என்ற கருத்து இருக்கிறதே ஒழிய கொலை என்ற கருத்து உடன் வரவில்லை. பிறகல்லவா "வேண்டும் என்ற கொலை"?

கருத்து வளர்ச்சியில் சொற்கள் விளைவதை ஒரு படி முறை போலப் பார்க்க வேண்டும். முதலில் இறப்பு; "பிறகு எதனால் இறப்பு?" " கொலையால் இறப்பு". அடுத்த கேள்வி: "வேண்டும் என்ற கொலையா?" இது மூன்றாவது படி.

இந்த மூன்றாவது படியைத் தமிழில் ஒரே சொல்லில் சொல்லவியலாது. ஒரு சொற்தொகுதியால் மட்டுமே சொல்ல முடியும். அந்தக் கொலையில் இட்டம் (இழ்+தம் = இட்டம். இழ்+ஐ = இழை>இழைவு; இழைத்தல் என்பது ஈடுபாட்டோடு செய்தல். இட்டத்தை இஷ்டம் என்று வடமொழியில் சிலர் மாற்றுவது உண்டு. ஈடுபாடு = intention) இருக்க வேண்டுமானால் மரியிழைத்தல் என்று சொல்லலாம். இருப்பினும் "வேண்டும் என்றே செய்த கொலை" என்று நீட்டிச் சொல்வதே தமிழுக்குப் பழக்கப் பட்டது. கீழே இருப்பது ”முயன்றால் புழக்கத்திற்குக் கொண்டுவரலாம்” என்று பரிந்து
உரைப்பது.

"இந்த மரியிழைப்பைச் செய்தவர் யார்? (who comitted this murder?) மரியிழையர் = murderer; இல்லையென்றால் வேட்கொலையன் (வேள் = வேண்டுதலின் அடிச்சொல்) என்று கூடச் சொல்லலாம். வேட்கொலை = murder.

இனி நண்பர் சிரீவாசின் கேள்விக்கான விடை:

காட்டு விலங்காண்டிக் காலத்தில் இருந்து இயல்பாக இந்த நாவலந்தீவில் கிளைத்த மொழி தமிழ். நாகரிகம் அடையாத காலத்தில் இருந்தே இங்கு ஒலியும் சொல்லும் கருத்துக்களை ஒட்டி ஒன்றன் பின் ஒன்றாகக் கிளர்ந்தன; ஆனால் மெதுவாக நூற்றாண்டுக் கணக்கில் வளர்ந்த மொழி. இதில் எந்தக் கருத்தில் இருந்து எந்தக் கருத்து கிளைத்தது என்பதை தட்டுத் தடவி மொழியியலார்கள் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக கொல்லுதல் என்ற வினை அறுதப் பழங்காலத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும். மாந்த நூலார் சொல்லும் படி, தம் உயிர் வாழ்வே முதன்மை என்ற நிலையில், தனக்குப் போட்டியான யாரும் ஒழிக்கப் படவேண்டியவர்கள் என்ற போக்கில், மாந்தர்கள் ஒருவரை ஒருவர் கல்லாலும் மரத்தாலும் உணவைத் தேடும் வேட்டையில், அடித்துக் கொன்று திரிந்திருக்க வேண்டும். பின் நெடுநாட்கள் கழித்து, உலோகம் கண்ட பிறகு, உலோகமே மரக்கருவிகளையும், கற்கருவிகளையும் போல அமைந்தாடி (imitate)க் காட்டத் தொடங்கினாலும், சொல்வரலாறு அடித்தளத்தைக் காட்டிக் கொடுக்கிறது. பெரும்பாலான அடிதடிச் சொற்களும், கொல்லுதற் சொற்களும் உலோகத்தைப் பயன்படுத்தும் முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதையே தமிழ்ச் சொல் வரலாறு காட்டுகிறது.

காட்டாக,

மரத்தின் அடியில் இருந்து பிறந்த வினை அடித்தல்.
மரத் தாளில் இருந்து பிறந்த வினை *தாள்க்குதல்>தாக்குதல்.
மரக் காலில் இருந்து பிறந்த வினை *கால்த்துதல்>*காத்துதல்>காதுதல். (போட்டு காத்திட்டான்யா>போட்டுக் காச்சிட்டான்யா!)

மரத்தின் அடி பெருத்துத் தட்டித்துக் கிடந்ததால் அது தட்டு>தட்டி>தடி; இது மூங்கிலுக்கே சிறப்பாக வந்த பெயர். மூங்கில் தட்டை, மூங்கில் தடி என்ற சொற்கூட்டுகளைப் பார்த்தால் இது புரியும். தமிழன் நாவலந்தீவிலே தன் நாகரிகம் அறியா நிலையில் திரிந்தான், வேறு எங்கிருந்தும் வரவில்லை என்பதற்கு "மூங்கில்அடி"ச் சொற்களே கூட ஆதாரம் ஆகும்; இவையே இந்த வன்சொற்களின் மூலம் வெளிப்படுகிறது. மூங்கில் என்னும் நிலத்திணை நடுவண்நிலக் கரை (mediteranian and middle east countries) நாடுகளில் இருந்ததாகப் புதலியல் (botany) சொல்லவில்லை. மூங்கிலின்
பயன்பாடு பழந்தமிழ் மாந்தனின் வாழ்வில் மிகவும் அதிகம். மூங்கில் தடியால் தட்டலாம். தடி தறியாகும். பின் தறித்தலையும் தரும். தறித்தல் = அடித்தல். இன்னும் கொஞ்சம் நீண்டு, தட்டு தண்டாகும்; தண்டு என்னும் விதப்பான பெயர் பின் பொதுமை நிலைக்கு வந்து மற்ற மரங்களின் தண்டிற்கும் பெயர் கொடுக்கும். மாந்தரின் கணக் கூட்டம் வளர, வளரத் தண்டில் இருந்து தண்டனையும் எழும்.

அடிதடியில் தொடங்குகிற கருத்து, சோர்வுக்கும், தளர்ச்சிக்கும், சாய்வுக்கும், சரிவுக்கும் நீண்டுப் பின் முடிவில் இறப்பிற்கும் ஆகப் பொருட்பாடு நீளுவது தமிழின் இயற்கை. இந்த வன்முறையில் குத்துவது, வெட்டுவது, அடிப்பது எனப் பல்வேறு வகைகளில் தாக்குதல்கள் இருக்கும். கற்கருவிகளும், மரக் கருவிகளும் ஒரே நேரத்தில் மாந்தனுக்குப் பயன்பட்டிருக்க வேண்டும். ஆனாலும், கல்லை வைத்து மாந்த நாகரிக வளர்ச்சிக்குக் காலம் சொன்ன மாந்த நூல் கட்டையையும் தடியையும் அவ்வளவு பெரிது படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை.

நான் முன்னே சரமிட்ட சொற்களுக்குக் (series of words) கூடிய மட்டும் விளக்கம் தருகிறேன்.

முதற்சொல் எருக்குதல்:

கல்லாலும் கூர்மையான மரத்தாலும் குத்துவது மட்டும் அன்றி ஈர்தலும் செய்ததால் தான் இரண்டு என்பதற்கே இந்த இல்>ஈல்>ஈர் என்பது அடிப்படையாகியது. இல்லுதல் = குத்துதல், புள்ளியிடுதல்.
இல்>ஈல்>ஈர்>ஈர்து>இருடு, இரடு, இருது, இரண்டு
இல்>ஈல்>ஈள்>ஈள்+து>ஈட்டு+ஐ>ஈட்டி (இட்டி என்றும் இதைச் சொல்லுவர்.)
இல்>ஈல்>ஈர்தல்>ஈர்க்குதல்>எருக்குதல்= இரண்டாக வெட்டுதல், தாக்குதல்; குத்திக் கிழிப்பதாலும், தடியால் அடித்தும் இரண்டாக்கலாம். முடிவில் எருக்குதல் என்பதற்குக் கொல்லுதல் என்றும் பொருள் வந்தது.

அடுத்த சொல் எற்றுதல்.

எல் என்பது பெருமை, திரட்சி என்ற கூட்டுப் பொருளின் வேர். எல்லாம், எல்லோரும் என்று சொல்கிறோம் அல்லவா? இங்கே எல்லுதல் = திரளுதல், சேர்த்தல் என்ற அடிப்படைப் பொருள் புலப்படுகிறது.
எல்+து = எற்று = திரண்ட மரம்
எற்றுநூல் = மரக் கோட்டம் பார்க்கும் நூல், மரம் அறுக்க அடையாளம் காட்டும் நூல்.
எற்று>எறு>எறுழ் = தண்டாயுதம், தடி, செந்நிறப் பூவையுடைய குறிஞ்சி நிலத்து மரவகை.
எற்றுதல் = கொல்லுதல்

[இங்கே ஒரு சின்ன இடைவிலக்கு (diversion).

தமிழில் சில விதப்பான மரங்களே கூட அடிதடி வினைகள், கருவிகளைத் தோற்றுவித்தனவோ என்று தோற்றுகிறது. கடம்புக்கு அடிச்சொல் கடு. கட்டை என்ற சொல் கடம்பின் தொடர்பால் வந்ததோ என்று தோன்றுகிறது. யா மரத்தை ஆச்சா மரம் என்றும் சால மரம் என்றும் சொல்வதுண்டு; இதன் தொடர்பால் சால்>சால்+து = சாற்று என்று வந்ததோ?; "அவனைப் போட்டுச் சாத்திட்டாங்கப்பா" என்ற சொல்லாட்சியை எண்ணிப் பாருங்கள்.

மூங்கிலுக்கே தட்டை என்ற சிறப்பான பெயர் உண்டு. மேலே சொன்னேன். "தடிச்சுப் போச்சு" என்ற வழக்கையும் நோக்குங்கள். மூங்கிலின் குருத்தான பிரம்பை வைத்து அடித்தால் தடிக்காமல் வேறு என்ன செய்யும்? கிள்>கிளை>கிழி எல்லாமே மூங்கிலுக்குரிய மற்ற சொற்கள். இதே போல கழி என்பதும் மூங்கிலுக்கான சிறப்புச் சொல். "போட்டுக் கிழிகிழின்னு கீழ்ச்சிட்டான்ய்யா"; (துணிக்குக் கிழி என்று பெயர் வந்தது நாகரிகம் வந்ததற்குப் பின் இருக்க வேண்டும்.)

புளியம் விளாறை வைத்து விளாத்துதல், விளாசுதல் என்றாகும்.

குருந்த மரம் குந்தம் என்றும் சொல்லப் படும். திரண்டு இருக்கும் ஆயுதம் குந்தம் என்று சொல்லப் படும்.

அத்தி மரத்தின் இன்னொரு பெயர் அதம். அதம் பண்ணுதல் என்பது அடிதடி செய்தல்.

அதே போல இங்கே எற்றிற்கும் எறுழுக்கும் உள்ள தொடர்பை மேலே பாருங்கள்.

நான் பலகாலம் சொல்வதுண்டு. விதப்பான சொற்களே (specialized words) பொதுவான கருத்துக்களுக்கு (generic ideas) வித்திட்டன.]

எறியல் = கோடரி (கோடு= மரக்கிளை; மரக்கிளையை அரிவது கோடரி)
எற்றுதல் = திரண்ட மரத்தால் அடித்தல், உதைத்தல், தாக்குதல் (விட்டேற்று என்பது கோலைக் குறிக்கும்)
எற்றியது= அடித்தது; இங்கே மரத்தை உயரத் தூக்கிக் கீழே இறக்குகிறோம் அல்லவா? இந்தக் கருத்தில் இருந்து மேலும் வளர்ந்த கருத்துத்தான் எறிதல்; பின் அது கல்லெறிவிற்கும் பயன்பட்டிருக்க வேண்டும்.

ஒழித்தல் என்ற சொல் அடுத்தது.

உல் = தேங்காய் உரிக்கும் கருவி, கழு, மரம்
உல்லடைப்பு = மரத்தால் ஆற்றிற்கு இடும் அணை.
உல்>உல்லு>உல்லேற்றுதல் = கழுவேற்றுதல் = பிரஞ்சுப் புரட்சியில் இருந்த guilletine போல, ஆனால் மாறுபட்ட ஆயுதம். இதில் கழு நிலைத்து நிற்கும். கொல்லப் பட வேண்டிய ஆள் (man to be murdered; அய்யா முத்து, தமிழில் இபடித்தான் கொல்லப் பட வேண்டிய ஆள் என்று சுற்றி வளைத்தே சொல்ல வேண்டும்.) மேலே இருந்து தூக்கி எறியப் படுவார். கழுவேற்றப் பட்ட சடலம் பின் கோட்டையில் சார்த்தப் பட்டுத் தொங்கிக் கிடக்கும். இதற்கு ஆங்கிலத்தில் spiking என்று சொல்லுவார்கள். கீழை நாடுகளில் எல்லாம் கழுவேற்றுதல் தான். (சப்பான் நாட்டிலும் இதுதான்.
Shogun புதினத்தைப் படித்திருக்கிறீர்களோ?)
உல்லு>உல்லக்கு>உலக்கு=குத்துதல்
உலக்கு>உலக்கை = குத்துகிற மரம், கருவி, தடி, தண்டு
உலக்கு>உழக்குதல் = மிதித்தல், உழுதல், கொன்று திரிதல்
உல்லு>உல்லித்தல்>உலித்தல்(> உலைத்தல்>)*உழித்தல்>ஒழித்தல் = கொல்லுதல், அழித்தல்

மூன்றாவது சொல் காதுதல்:

கல்>கால்>கால்தல் = ஊன்றுதல், இயங்குதல்
கல்>கர்>கரு>கருவி = கூர்மையான ஆயுதம் (கற்கருவி என்பது இப்படித்தான் வந்தது. முதலில் கொல்லப் பயன்பட்ட கருவி பின் கையில் பிடித்தவைக்கெல்லாம் உள்ள சொல்லாகப் பொருள் நீட்டம் கொண்டது.)

கள் = கூட்டப் பொருள்.
கள்>களி>கழி= மூங்கில்; மூங்கில் கூட்டமாகத் தான் வளரும். பின் தனித்து ஒடித்த மூங்கிலுக்கும் கழி என்றே பெயரிடப்பட்டது. அந்தக் காலத்துத் திண்ணைப் பள்ளிக் கூடச் சட்டாம்பிள்ளைகள் பிரம்புக் கழி இல்லாமல் இருப்பது இல்லை.
கள்>களை>கழை = மூங்கில்
வேளாண்மையில் பயிரோடு சேர்ந்ததும் கள். அந்தக் கள்ளை நீக்கினால் தான் பயிர் வளரும்.
களை = நீக்கு, அழி. கூட்டத்தில் இருந்து நீக்கப் படுகிற மாந்தர்களும் களையெடுக்கப் பட்டார்கள்.

கள்+து> கட்டு = கூட்டம், சேர்ப்பு, இணைத்தது, பெருத்தது
கட்டு+ஐ>கட்டை = பெருத்த தண்டு
கட்டு>கண்டு=திரண்டது, வெட்டப் பட்டது (கண்டம் துண்டமாக என்பது இரட்டைக் கிளவி. உப்புக் கண்டம் என்பது உப்புப் போட்டு உலரவைக்கப் பட்ட கறித் துண்டு; கற்கண்டு = திரண்டு, கண்டு கண்டாய் வெட்டப் பட்ட வெள்ளைச் சருக்கரை.)
கட்டு>கடு>கடு+அப்பு>கடப்பு = பெருத்த மரம். (மதுரையை அடுத்தவனம் கடம்ப வனம். ஒரு வேளை மிகப் பழங் காலத்தில் வெண்கடம்பு தமிழகத்தில் மிகவும் கூடுதலாய் இருந்ததோ, என்னவோ? இல்லாவிட்டால் இந்த அளவு சிவநெறியிலும், சங்க இலக்கியத்திலும் கடம்பு இவ்வளவு பேசப் படவேண்டிய காரணம் என்ன?)
கடப்பு>கடம்பு>கதம்பு = கடம்ப மரம்
கடு>கடுவு>கதுவு = பெருத்த தடியால் அடி, தாக்கு

கடு என்ற கடம்ப மரம் விதப்பில் இருந்து பொதுமையாகி காட்டையே குறித்தது. பொதுமைப் பொருளில் நிலைத்தது. இதே போல கடு என்பது காட்டிற்கு மட்டும் அல்லாது கூடிக் கிடந்த மலைத் தொகுதியையும் குறித்தது.
கடு>கடம் = காடு,மலை

கடம் ஆர்ந்து (நிறைந்து) கிடந்தது கடாரம்; இன்றைய மலேசிய நாட்டின் கெடா மாநிலம். தமிழன் நாகரிகம் அடைந்து வரலாற்றுக் காலத்தில் சில குறிப்பிட்ட ஆண்டுகள் ஆட்கொண்ட நாடு. இதே போல யா மரம் அடர்ந்து கிடந்த நாடு யாவகம்>ஜாவகம்= Java. இந்தோனேசியாவின் முகன்மையான தீவு. இதைச் சாலித் தீவு என்றும் சொல்வது உண்டு. மேலே சொன்னது போல் யா மரம், சால மரம் என்றும் அழைக்கப் பட்டது. இரண்டு பெயர்கள் அந்தத் தீவிற்கு; இரண்டிற்குமே தமிழ் மூலம் தான். ஆனாலும் "இங்கெல்லாம் வடமொழியே பரவியது; தமிழா, அது எங்கே?" என்று கேட்பவர்களும் உண்டு.

கடு>கடினம்
கடிதல் = காலால் உதைத்தல்
கடு>கடவுதல், கடாவுதல், கடத்துதல் = அடித்தல், ஒரு விலங்கை அடிக்க முற்பட்டு ஓங்கிக் கொண்டே போக அது ஓடத் தொடங்குகிறது. எனவே செலுத்துகிற கருத்து அடிக்கிற கருத்தில் இருந்து பிறக்கிறது. இங்குதான் கடாவுதலில் உள்ள நெட்டொலியின் பொருட்பாடு புரிய வேண்டும். ஒரு கருத்தில் இருந்து இன்னொரு கருத்துப் பிறக்கும் நேரத்தில் நெட்டொலி துணைக்கு வரும். அதை நீட்டிப் பாருங்கள்; அடிக்கப் போனது விலங்கைச் செலுத்துவதில் கொண்டுவந்து சேர்ப்பதைக் காட்சியில் பார்ப்பீர்கள்.

கதுவு>கதவு>கதா = பெருத்த தண்டு
கது+ஐ>கதை = பெருத்த தண்டு (வீமனின் ஆயுதம்)
கதா>கதாவு>காது = பெருத்த தண்டால் அடி, தாக்கு

கது>கந்து = மரத்தூண், தெய்வத்தூண் (மரத்தில் தெய்வப் படிமத்தைச் சிறிதாகக் கீறி குறிஞ்சி மாந்தன் வழிபட்டிருக்க வேண்டும். "கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்து" என்பது மணிமேகலை.)
கந்து>கந்தன் = முருகன் (கந்திற்கும், கடம்பிற்கும் உள்ள தொடர்பைப் போல இன்னொரு சொல்லான மரா = கடம்பு என்பதில் இருந்து பிறந்த சொல் மராகன்>மருகன்>முருகன்; முருகு= அழகு என்பது முதற்பொருள் அல்ல; வழிப் பொருள். கந்தைச் சுற்றிப் படர்ந்த கொடி வள்ளி. கொடியைப் பெண்ணாகவும், கந்தை ஆணாகவும் உருவகம் செய்திருக்கிறார்கள். முருகன் தமிழ்க் கடவுள் என்று சொல்லுவது, இந்த நாகரிகம் புரியாக் காலத்தில் எழுந்த இறையுணர்வால் தான்.)
கந்து = பற்றுக் கோடான தூண்
கந்து+அழி = கந்தழி = தனக்குப் பற்றுக் கோடானதையே அழிக்கும் நெருப்பு

[கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன முன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

என்று தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியலில் சொற்றம் (சூத்திரம்) 1034-ல் வரும் கந்தழி நெருப்பையே குறிக்கிறது. கொடிநிலை மாறாது என்பது நிலைத்து நிற்கும் சூரியனையும் வள்ளி என்பது வளர்ந்து குறையும் நிலவையும் குறிக்கிறது. சூரியன், நெருப்பு, திங்கள் மூன்றும் கடவுள் வாழ்த்தைப் பாடும் போது வரவேண்டியவை என்று தொல்காப்பியர் சொல்கிறார். இவை முதலானவை என்பதால் தான் சோழர் குலம் சூரிய குலம் என்றும், பாண்டிய குலம் திங்கட்குலம் என்றும் சேரர்குலம் அழற் குலம் (அழல்= நெருப்பு; அழனி>அக்னி) என்றும் கருதப் பட்டது.]

கல்>கள்ளில் இருந்து திரட்சிப் பொருளில் பிறந்த மற்றொரு சொல் கம்பு

நாலாவது சொல் கோறல்:

அகத்தியத்தில் நண்பர் அரி சிலம்பில் உள்ள "கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று" என்ற வரியை எடுத்துக் காட்டினார் குல்>கோல் (குல்லில் இருந்து பிறந்தது தான் குத்து) கோல் வளைந்தது. கோலைக் கொண்டவன் கோன். செங்கோல் நேரான, வளையாத கோல்.

கோல் என்பது ஆட்சியையே குறித்தது. கடுங்கோல் என்பது வளைந்த ஆட்சி. "தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா?" என்ற சொலவடையில் தண்டல்காரன் தடி வைத்திருத்தலை உணர்த்துவதைக் காணலாம். கோல் என்பது காட்டு விலங்காண்டி காலத்தில் உயிரைக் காக்கும் ஆயுதம் அல்லவா?

கோல்>கொல்
கோல்+து>கோறு = தண்டால் அடி

கொல்லுக்கும் kill க்கும் உள்ள இணையை நாம் வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஐந்தாவது சவட்டல்

சவளி என்ற தலைப்பில் உள்ள புலவர் இளங்குமரன் கட்டுரையை தமிழ் உலகத்தில் முன்பு இட்டிருந்தேன். மறுபடியும் அதைச் சொல்வதில் இந்தக் கட்டுரை நீண்டுவிடும். சவள்/சவளம் என்பதெல்லாம் தண்டாயுதங்களைக் குறிக்கும். தண்டாயுதத்தால் அடிப்பது சவட்டுதல்.

ஆறாவது படுத்தல்:

அடி, தாள், கால் போல படுவது என்பது படிவது, பதிவது, பாதம் என்றெல்லாம் பொருள் நீளும். படுத்துவது என்பது ஒருவனை கீழே வீழ்த்துவது. பட்டுவது படுவாகும். படு+ஐ = படை எனக் கிளரும். படை என்பது முதலில் தண்டாயுதம் தான். பிறகுதான் மற்றவை எல்லாம்.

மடிவித்தல்

சாய்வித்தல் மடிவித்தலாகும். இது எளிதாகப் புரியும் என்பதால் விடுக்கிறேன்.

மாய்த்தல்

மாய் = இருள்; மாயோன் = இருளன்; திருமால், இறப்பு என்பது அசைவைக் குறித்துப் பின் மறைவையும் குறிக்கிறது. மாய்த்தல் என்பது இருளுக்குள் போகச் செய்வது. இது கொஞ்சம் நாகரிகம் வந்த காலத்தில் தான் பொருள் நீட்சியில் ஏற்பட்டிருக்கக் கூடிய சொல்.

முருக்கல்

கடுவில் இருந்து காதுதல் பிறந்தது போல மராவில் இருந்து பிறந்த சொல் முருக்கல். இன்னொரு மரத்திற்கும் முள் முருக்கு, புனைமுருக்கு, புரச மரம், பலாச மரம் என்றெல்லாம் பொருள். புரசைவாக்கத்தின் பெயர்க் காரணத்தை முன்பு தமிழ் உலகத்திலோ, அகத்தியரிலோ சொல்லியிருந்தேன்.

வீட்டுதல்

வீழ்த்துதல் வீடுதல் என்றும் ஒலிக்கப் பெறும் பொருள் வெள்ளிடை மலை எனத் தெரிகிறது.

இன்னும் விரிவாகச் சொல்லலாம். இத்தோடு தவிர்க்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

6 comments:

அபுல் கலாம் ஆசாத் said...

இனிய இராம.கி. அய்யா,

விவரமான கட்டுரை. கொலை என்னும் சொல்லுடன் தொடர்புள்ள பல தமிழ்ச்சொற்களை அறியத்தந்தீர்கள். நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்

Indian said...

நன்றி ஐயா.

Vijayakumar Subburaj said...

வெறும் அறிவாளால் வெட்டினால் கொலை, அதில் ஒரு எலுமிச்சை சொருகி, அதன் பின் வெட்டினால் வதம். :)

Anonymous said...

"பிஸ்மில்லாஹு ரஹ்மான் ரஹீம்" சொல்லி வெட்டினாலும் அது் கொலையல்ல. அது பறகத்

மாதங்கி said...

நல்லதொரு பதிவு.

எனக்கு சில ஐயங்கள்
இருக்கின்றன.

குதிரைகள் நடை மற்றும் ஓட்ட வேகத்தைச்
சொல்ல

walk, trot, canter, gallop

போன்ற சொற்கள் இருக்கின்றன.

ஆங்கிலத்தில்
போன்ற சொற்கள் இருக்கின்றன. தமிழிலும் இது போன்ற சொற்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.

நேரம் இருப்பின் சொல்ல முடியுமா?

Anonymous said...

நேரம் இருக்கவில்லைப் போலிருக்கிறது...