நேற்று மக்கள் தொலைக்காட்சியில் 'சிரிப்போ சிரிப்பு' என்ற நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். [நல்ல தமிழுக்காகவே இந்தத் தொலைக்காட்சி பலராலும் விரும்பிப் பார்க்கப் படுகிறது.] நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பல்வேறு காட்சியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார், ஏதோ ஒரு சென்னைத் தெருவின் முச்சந்தியில் நிகழ்ச்சி நடந்தது.
தொகுப்பாளினி துவங்கச் சொன்ன பின்னால், [காட்சியாளர் கவனத்தை தன் பேச்சினால் அவர் வேறு திசையிற் திருப்பினாலும் கூட,] இடைவிடாது, கூட நேரம் சிரிக்கிறவருக்கு அங்கேயே பரிசு. நிகழ்ச்சி மிகுந்த சுவையாரமாய் போய்க் கொண்டிருந்தது. கொஞ்சமும் அசராமல் நல்ல தமிழில் தொடர்ந்து பேசி, தொகுப்பாளினி திறமையாய் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். ஆண்கள், பெண்கள் எனப் பலராலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தொடர்ந்து சிரிக்க இயலாமல், விரைவில் ஓய்ந்து போனார்கள்.
இந்த வரிசையில் ஓர் இளைஞன், 20 அகவை இருக்கும் என்று நினைக்கிறேன். தொகுப்பாளினி நல்ல தமிழில் பேசிக் கொண்டிருக்க, தமிங்கிலத்திலேயே பேச முற்பட்டான். தொகுப்பாளினி 'ஆங்கிலத்தில் பேசாமல், தமிழிலேயே பேசுங்கள்' என்று அவனை நினைவுறுத்திச் சிரிக்கச் சொன்னார். அவன் தொடங்கும் போது, கடிகையில் நேரம் கணிக்கவும் முற்பட்டார். மற்றவர்கள் அளவிற்குச் சிரிக்க முடியாமல், இளைஞன் குறைந்த நேரத்திலேயே நிறுத்தி விட்டான். "என்ன இது உங்களால் 17 விநாடிகள் கூடச் சிரிக்க முடியவில்லை, என்னவாயிற்று உங்களுக்கு?" என்று தொகுப்பாளினி வினவியபோது, அந்த இளைஞன் கேட்கிறான்.
"17 விநாடின்னா என்ன?"
பின்னால் இருந்து அவன் தோழன்: "டேய், 17 செகண்டுடா"
நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த எனக்குச் சட்டென்று சம்மட்டியில் அடிப்பது போல் இருந்தது.
தமிழ் இளைஞர்கள், அதுவும் சென்னைக்காரர்கள், எந்த அளவிற்குத் தமிழை விட்டுப் விலகிப் போயிருக்கிறார்கள்? விநாடி என்ற சொல் கூடத் தெரியவில்லை எனில், அப்புறம் விநாழிகை எங்கே தெரியப் போகிறது? நுணுத்தம், மணி என்பதெல்லாம் புரியவா செய்யும்?
ஆக, நம் கண் முன்னே, இளம் தலைமுறையினரிடம் தமிழ் மொழி மெல்லச் செத்துக் கொண்டிருக்கிறது. ஒரு தலைமுறையையே நாம் தொலைத்திருக்கிறோம். இந்த முட்டாள் தனத்தில் "செம்மொழி என்ற பீத்தல் வேறு, தமிழ்(ல்) வாழ்(ல்)க என்ற வெற்றுக் கூச்சல். கெட்டது குட்டிச்சுவர்."
ஒருபக்கம் கோவமும், இன்னொரு பக்கம் வருத்தமும், மொத்தத்தில் ஏமாற்றமும் ஒருங்கே வருகிறது. இதற்கா 1967-இல் பேராய ஆட்சியைத் தூக்கி எறிந்து கழக ஆட்சியைக் கொண்டுவந்தோம்.? கல்விக் கொள்கையிலும், நடைமுறையிலும், எங்கேயோ நம் குமுகாயம் உறுதியாய்த் தவறியிருக்கிறது. பணம், பணம் என்று எங்கும் சீரழிந்து, "உள்ளதும் போச்சுறா தொள்ளைக் காதா" என்று ஆயிற்றே!.
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?
அன்புடன்,
இராம.கி.
45 comments:
எனது வருத்தத்தையும் பதிவு செய்கிறேன்.
கழக ஆட்சியை கொண்டு வந்து தமிழ்நாட்டை சீரழித்த கூட்டமா?
தமிழ் தெரியவில்லை என்றால் என்ன??உங்க தலைமுறை தான் தமிழ் தமிழ்ன்னு சும்மா மயங்கி போனா அதுக்கு இளைய தலைமுறையை ஏன் குத்தம் சொல்றீங்க..
மொழி என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனமே அதற்க்கு போய் இவ்வளவு முக்கியதுவமா பெரியவரே?
உங்களுக்கு சரியானது என்பது அடுத்தவருக்கு தவறாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாமலா இருக்கும். போங்க புலம்ப்பாம அடுத்த வேலையை பாருங்க
என்ன இராமகி, ரொம்ப மனச விட்டுடாதிங்க. உங்க ஆதங்கம் நியாயமானதுதான் ஆனாலும் யார் என்ன செய்ய இயலும்?
எல்லாமே அரசியல் ஆகிவிட்டது
இந்த நாட்டில்.
மக்கள், சமுதாயம், மொழி என்பது யாரின் உண்மை கவலை?
பணம், பதவி, செல்வாக்கு அடுத்து வாரிசு இது தான் நம் தலைவர்களின் கவலை.
நல்லப் பதிவு. பல கருத்துக்களில் உடன்படுகிறேன்.
உங்கள் கவலை புரிகிறது.. நிறைய மாணவர்களுக்குத் தமிழ் தெரிவதில்லை..
சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் என் நெருங்கிய சொந்தக் காரப் பையனை பதினோராம் வகுப்புக்காக மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளியில் சேரச் சொன்னேன்.. அவன் சொன்ன காரணம் எனக்கே அதிர்ச்சிதான்.."எனக்குத் தமிழ் தெரியாது மாமா..என் முதல் மொழியே ஹிந்தி தான்" என்றான்..
கவலைக்கு மருந்தாக இந்த ஜெயஸ்ரீ என்ற மராத்திப் பெண்ணைப் பற்றிப் படிங்க.. தமிழில் வெளுத்த் வாங்குறாங்க..
உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்..
http://vetripadigal.blogspot.com/2008/04/blog-post_03.html
சொல்ல வேண்டிய செய்தியைச் சொல்லி இருக்கிறீர்கள்!
மொழி வெறும் கருத்துப் பரிமாற்றக் கருவி என்பது மேலோட்டமான முழுமையற்ற சிந்தனை கலவாத நுட்ப நோக்கற்ற கூற்று!
பிரான்சு, சீனா, உருசியா முதலான நாடுகளில் தாய்மொழிக்குத் தரும் முதன்மையையும் காப்பு ஏற்பாடுகளையும் வீணானவை எனக் கூறத் துணிவது அறிவுடைமையாகுமா?
தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டாவா?
உங்கள் உளத்தாக்க முற்ற உணர்வோடு ஒன்றுகிறேன்.
நன்றி கூறுகிறேன்!
பாராட்டுகிறேன்!
அன்பன்,
த.ந.
ஐயா, திட்டாம கொஞ்சம் விநாழிகை, நுணுத்தம் போன்ற சொற்களின் பொருளைச் சொல்லிடுங்க. நன்றி.
ஐயா,
தமிழர்கள் மட்டுமல்ல, வீம்புக்கு பிறமாநிலகாரர்கள் மொழி வெறியில் இருந்தாலும் தூய தாய்மொழியில் பேசுபவர்கள் குறைவே.
இன்றைக்கு ஊடகங்களின் பங்கினால் பல்வேறு மொழி நிகழ்ச்சிகளை காணும் படி அமைந்துவிட்டது. அதனால் மொழிக்கலப்பு இயற்கையாக அமைந்துவிட்டது. பிறமொழி கலக்காமல் பேசவேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த மொழியிலும் குறைவே.
ரொம்ப நல்லா சொன்னீங்க.... இப்போதைக்கு ஊரைவிட்டு வெளியே வந்தவர்களும் சிறு பகுதி தமிழார்வலர்களும் தவிர்த்து மற்றவர்களுக்கு இது தேவையற்ற பேச்சாகவே படும்..
தமிழைக் கொல்வதிலும் துவம்சம் செய்வதிலும் பெரும்பங்கு தொலைக்காட்சி தொகுப்பாளர்களுடையதே.செம்மொழி வேண்டும் தொலைக்காட்சியின் மானாடும் மயிலும் ஆடும் ஒரு நிகழ்ச்சியை நோக்கினாலே இது விளங்கும்.நிகழ்ச்சிகளின் தலைப்பில் தமிழ் மணக்க விரும்பியவர்கள் தொகுப்பாளர்கள் ,நடுவர்களின் நாவிலும் மணக்கச் செய்திருக்கலாம்
//மொழி என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனமே அதற்க்கு போய் இவ்வளவு முக்கியதுவமா பெரியவரே?//
அனானி சகோதரரே உங்க கூற்றுக்கு உடன்படுகிறேன்.தகவல் தொடர்புக்கான சாதனமாகவே இருக்கட்டும்.நாம் வாழும் மண்ணின் சொந்த தாய் மொழி கூட அறியாமல் இருப்பது குறைந்தபட்சம் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது தப்பில்லையா?
அய்யா,
ரொம்ப உணர்ச்சி வசப்படுகிறீர்கள். அமெரிக்காவிலும் ஆங்கிலத்தை தப்பும் தவறுமாக எழுதும் ஆங்கிலேயர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி ஒருவரும் உங்கள் அளவுக்கு கவலைப் படவில்லை. ஏளனமும் செய்யவில்லை.
தலை முறையையெல்லாம் யாரும் தொலைக்கவில்லை. ஒரு அனானி சொன்னதைப் போல சாதாரண ஜனங்களுக்கு மொழி என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே. மொழி ஆராய்ச்சி செய்பவர்கள் அதை செய்து விட்டுப் போகட்டும். சாதாரண மக்களை விட்டு விடுங்கள். உங்களுடைய இந்த பதிவுக்கே ஒரு விளக்க பதிவு தமிழில் போட வேண்டிய நிலைமை வரலாம். எளிய மொழியில் எல்லோருக்கும் புரிகிற மாதிரி எழுதினால் அது அனைவரையும் சென்றடையும்.
அது சரி "உள்ளாதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா" என்பது பழ மொழி அதை "உள்ளதும் போச்சுறா தொள்ளைக் காதா" என்று ஏன் எழுதுகிறீர்கள்?
அன்பிற்குரிய வேளராசிக்கு,
உங்கள் வருத்தத்தைப் புரிந்து கொள்ளுகிறேன்.
அன்புடன்,
இராம.கி.
பெயரில்லாத இளைஞனுக்கு,
இதைச் சொல்லுவதற்குக் கூட உங்களுக்குப் பெயரில்லாத நிலை வேண்டுமா? சரவணன், என்ன கொடுமை இது? :-)
எந்தக் கருத்தையும் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கோடு சொல்லலாம் நண்பரே! இதற்கெல்லாம் வலைப்பதிவுகளில் பெயரில்லாமை தேவையில்லை.
'கழக ஆட்சியை கொண்டு வந்து தமிழ்நாட்டை சீரழித்த கூட்டமா?' என்று வாக்கியத்தில் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை. எனவே அதற்கு மறுமொழியைத் தவிர்க்கிறேன்.
தமிழ் தெரியவில்லை என்றால் தமிழன் தற்குறியானான் என்று அருத்தம். அதுகூடவா உங்களுக்குப் புரியவில்லை? தமிழே தமிழனுக்கு முகவரி, அடையாளம்.
புரியாத இளைஞரே!
தமிழைத் தொலைத்தவன் சிந்திக்கத் தெரியாமற் போகிறான். ஊரெல்லாம் தான் பார்க்கிறோமே? உருப்படியாகத் தமிழும் தெரியாமல், ஆங்கிலமும் பேசத் தெரியாமல், வெறுமே குண்டுசட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டு இருக்கும் நிலை பரவலாய் இருக்கிறதே! தமிழைச் சரிவரப் பேசத் தெரிந்தவன் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளுவான்; உலகில் எந்த மூலையிலும் வலம் வருவான்.
மொழி என்பது வெறும் செய்தி பரிமாற்றுக் கருவியல்ல. [அப்படி எவனோ ஒரு முட்டாள் சொல்லி அதையும் உங்களைப் போன்றோர் நம்பிக் கொண்டு சிந்திக்க மறுக்கிறீர்களே, அதுதான் சோகம். கல்வி உளவியல் துறையில் இருக்கும் எவனும் அப்படிச் சொல்ல மாட்டான். தாய்மொழியில் தளம் போடாமல் எந்த மேற்கட்டுமானமும் செய்யமுடியாது, நண்பரே! உலகில் குடியேற்றக் கட்டகத்தில் (colonial system) சிக்கிக் கொண்ட அடிமைகளைத் தவிர எந்த மடையனும் இப்படிச் சொல்ல மாட்டான்.]
மொழிக்கு உள்ள முகன்மை அறியாமல் நீங்கள் பேசுகிறீர்கள். சிந்தனைக்கு அடித்தளமே மொழி தான். முடிந்தால் கீழே உள்ள இடுகைகளைப் படியுங்கள்.
http://valavu.blogspot.com/2008/02/blog-post_20.html
http://valavu.blogspot.com/2006/03/blog-post_22.html
http://valavu.blogspot.com/2007/04/blog-post.html
http://valavu.blogspot.com/2005/05/blog-post_23.html
http://valavu.blogspot.com/2006/09/blog-post_18.html
http://valavu.blogspot.com/2004/06/blog-post_15.html
தமிழ் அறியாத தமிழர் தொகை இன்று கூடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் தமிங்கிலர் என்று தம்மை அறிவித்துக் கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை. மலையாளம் பிறந்தது போல் இன்னொரு கிளைமொழி பிறக்கும் நாள் வந்தாலும் வரும்.
எனக்குச் சரியானது என்பது அடுத்தவருக்கு தவறாக இருக்கும் தான். ஆனால் இந்தப் புலனத்தில் தமிழர் ஒன்றுபடாவிட்டால் அப்புறம் எல்லாமே போய்த் தொலையும். அதனால் தான் இப்படிப் புலம்புகிறேன். மேலும் அந்தப் புலம்பலால் எனக்கு வெட்கமில்லை.
கொஞ்சம் கொஞ்சமாய்ச் சூடேறச் சூடேற வெந்நீர்த் தொட்டிக்குள் இருந்து தவ்வித் தப்பிக்கத் தெரியாத தவளையாய் உங்களைப் போன்ற தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் சூடு வெகுவாக ஏறுமுன் தவ்வித் தப்பிக்கத் தெரியவேண்டும். உள்ளே தங்கிப் போய் வெந்து போவது உங்கள் உகப்பு.
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய கரிகாலன்,
என் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டதற்கு நன்றி.
"பணம், பதவி, செல்வாக்கு அடுத்து வாரிசு இது தான் நம் தலைவர்களின் கவலை" - ஒத்துக் கொள்ளுகிறேன். ஆனால் அவர்களுக்கு உண்மையை நெஞ்சில் உறைக்க வைக்க நாம் முயல வேண்டும் அல்லவா?
அன்பிற்குரிய rapp,
உடன்பாட்டிற்கு நன்றி.
அன்பிற்குரிய சீமாச்சு,
உங்கள் உறவுப் பையனைப் போலப் பலர் சென்னையில் இருக்கிறார்கள். ஜெயஸ்ரீ பற்றிப் படித்தேன். ஆறுதலாய் இருந்தது. உங்களால் முடிந்த மட்டும் இந்த அவல நிலை பற்றி உங்களைச் சுற்றியிருப்போரிடம் பேசுங்கள். சிறுதுளி பெருவெள்ளம்.
அன்பிற்குரிய தமிழநம்பி,
தங்கள் கனிவிற்கும், பாராட்டிற்கும் நன்றி. அறியாமல் பலரும் தாய்மொழியைக் கருவியென்று சொல்லிக் கொண்டு அலைகிறார்கள். "கர்த்தரே! இவர்களை மன்னியும்" என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
அன்புடன்,
இராம.கி.
அய்யா அவர்களுக்கு வணக்கம்
நேற்று திரு மா வளவனும் ஜக்கி வசுதேவும் பேசும் நிகழ்ச்சியை காண நேரிட்டது . அப்பொழுது வாசு தேவ் அவர்கள் சமஸ்க்ரிதம் யோகிகள் உருவாக்க பட்டது என்றார் .. எனக்கு தெரிந்த
நமது மொழியும் வட மொழியும் நெருங்க்ய தொடர்பில் உள்ளன ..யோகிகளில் (சித்தர்கள் ) பெரும்பாலோனர் நம்மவர்களே ... ஒரு வேளை வட மொழியை உருவாக்கியது தமிழர்களோ என்று எனக்கு ஒரு
எண்ணம்
மீன்துள்ளி செந்தில்
நாகரிகம் என்றால் அது ஆங்கிலம் என்ற மாயைதான் காரணம்
அன்பிற்குரிய இலவசக்கொத்தனார்,
நான் ஏன் உங்களைத் திட்ட வேண்டும்? என்னால் முடிந்த மறுமொழியைத் தருகிறேன்.
ஒரு நாளைக்கு 24 மணி என்பது அறவட்டாக (arbitrary) மேலையர் பிரித்தது. மணியை minutae prima என்று 60 நுணுத்தங்களாகவும் (இந்தையிரோப்பிய மொழிகளில் மகரமும் நம் மொழியில் நகரமும் அப்படியே போலிகள். மணியை 60 ஆய் நுணுத்தது நுணுத்தம்.) நுணுத்தத்தை மேலும் 60 ஆய் (minutae seconda) இரண்டாம் முறையும் மேலையர் செகுத்தார்கள். செகுத்தது செகுத்தம் (second). செகுத்தலும் பகுத்தலும் ஒன்றுதான்.
1 மணி = 60 நுணுத்தங்கள் = 60 மணித்துளிகள்
1 நுணுத்தம் = 60 செகுத்தங்கள் = 60 நொடிகள்.
நுணுத்தம் என்பதை 60 ஆண்டுகளுக்கு முன்னால் மணித்துளி என்ற சொல்லால் தமிழில் குறித்தார்கள். அது கேட்பதற்கு நன்றாய் இருந்தாலும் துளியை இன்னும் பகுத்தபோது என்று சொல்லும் போது சிந்தனைக்குச் சரியாய் வராது. [துளியைப் பகுத்தால் துளிதான் கிடைக்கும்.] எனவே second என்ற சொல்லிற்கு இணையாக நம்மூர்ச் சிந்தனையில் இருந்து எழுந்த விநாழிகை (விநாடி) என்ற சொல்லையும் நொடி என்ற சொல்லையும் பலர் பயின்றார்கள். நாளாவட்டத்தில் நம் கணிப்பு முறை மறந்து மேலையர் பொருளைக் குறிக்குமாறு இந்தச் சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ( இந்த ஆளுகையில் நொடி என்ற சொல்லாற் குழப்பம் வராது. ஆனால் விநாடியால் குழப்பம் வரும்.) அந்தத் தொகுப்பாளினி விநாடி என்ற சொல்லையே second என்ற பொருளிற்கு இணையாகப் பயின்றார். ஆனாலும் ஆய்வு நோக்கில் பார்த்தால் விநாடியை second ற்கு இணையாகப் பயில்வது தவறே.
எப்படி எற்பாட்டைத் தொலைத்து மாலையை முன்னே தள்ளி யாமத்தைக் கூட்டி நாம் இப்பொழுது சிறுபொழுதுகளிற் குழப்பம் செய்கிறோமோ அப்படியே அது அமைந்து போகிறது.
இனி நம்முடைய நாவலந்தீவின் காலப் பிரிப்பிற்கு வரலாம். நம்மவர் ஒரு நாளை 60 நாழிகைகளாகப் பிரித்தார்கள். பிறகு ஒரு நாழிகையை மேலும் 60 விநாழிகைகளாகப் பிரித்தார்கள். விநாழிகைக்குக் கீழும் துடி, கணம் போன்ற காலப் பகுப்புகள் உண்டு. அவற்றை நான் இங்கு கூறவில்லை.
நாழிகை என்ற சொல் நாழிகை வட்டிலால் வந்தது. நாழிகை வட்டிலின் ஒருவகை நீர்க் கடிகை, இன்னொரு வகை மணற் கடிகை. நாளம் என்றால் துளை, தூம்பு, tube. அரத்த நாளம் என்று சொல்கிறோம் இல்லையா? ள வும் ழ வும் போலிகள். இரண்டு குடுவைகளை எடுத்து அவற்றை ஒரு சிறு தூம்பின் மூலம் ஒன்றோடு ஒன்று இணைத்து வைத்திருப்பார்கள். மேலே உள்ள குடுவையில் நீரோ, மணலோ கொட்டி வைத்திருப்பர்கள். கொஞ்சம் கொஞ்சமாய் நீர் அல்லது மணல் மேலே உள்ள குடுவையில் இருந்து கீழே உள்ள குடுவைக்கு வரும். தூம்பின் குறுக்கு விட்டத்தை மிக நுணுகியதாய் வைத்து மேற்குடுவையில் இருந்து கீழ்க் குடுவைக்கு மாறும் நேரத்தை வேண்டும் என்னும் வகையில் அமைக்க முடியும். பொதுவாக ஒரு நாழிகை நேரத்தில் மேற்குடுவை வெற்றாகி கீழ்க்குடுவை நிறையுமாறு வைத்தது ஒரு செந்தரப் படுத்தலில் அமைந்தது. அடுத்த நாழிகையில் கீழ்க் குடுவை மேலாகும், மேற்குடுவை கீழாகும். இப்படி மாற்றுவதற்கென்றே ஒவ்வொரு அரசவையிலும் ஆட்கள் இருந்தார்கள். அவர்களுக்கு நாழிகைக் கணக்கர் என்று பெயர். அந்தக் காலத்தில் நேரம் பார்த்துச் சொல்லுவதே ஒரு பெரிய வேலை. வடக்கே ழகரம் டகரமாக ஒலிக்கப் பெறூம். எனவே நாழிகை நாடிகையாயிற்று. விநாழிகை விநாடி(கை)யாயிற்று.
இது போக நிமையம் என்ற சொல் நொடியைக் குறிக்கும் இணைச்சொல்லாய் இருந்தது. அது வடக்கே நிமிஷம் ஆகி, தவறாக minute ஐக் குறித்தது. நாம் மீண்டும் அதைக் கடன் வாங்கி நிமிடமாக்கினோம். சரியான வேர்ப்பொருள் பார்த்தால் நிமிடம் என்ற சொல்லை நாம் பொருள் தவறிப் பயன்படுத்துவது புரியும்.
குழப்பங்களைத் தவிர்க்க வேண்டுமானால், மேலையர் முறையையும் நம் முறையும் தனித்து வைத்து சொற்தடுமாற்றம் இல்லாமற் புழங்க வேண்டும். இதெல்லாம் தொடக்கப் பள்ளிக் கல்வியில் இரண்டாவது மூன்றாவது வகுப்பில் சொல்லிக் கொடுக்க வேண்டியவை.
மேலையர் முறை
1 நாள் = 24 மணிகள்
1 மணி = 60 நுணுத்தங்கள்
1 நுணுத்தம் = 60 செகுத்தங்கள்
தமிழர் முறை
1 நாள் = 60 நாழிகை
1 நாழிகை = 60 விநாழிகைகள்
இரண்டிற்குமான இணைப்பு
1 நாழிகை = 24 நுணுத்தம்
இப்பொழுது சொல்லுங்கள்; மொழி என்பது வெறும் செய்தி பரிமாறும் கருவியா? அல்லது ஓர் இனத்தின் நாகரிக அடையாளமா? "நம் நாகரிகத்தைத் தூக்கியெறிவேன், மேலையர் நாகரிகம் மட்டுமே கற்பேன்" என்பது ஒரு சிலரின் உகப்பு.
அன்புடன்,
இராம.கி.
ஊடகங்களும்,வழி காட்டவேண்டிய
தலைவர்களும் தங்களின் பணியில்
இருந்து விலகும்போதே இந்த நிலை
ஏற்படுகிறது
//மிகுந்த சுவையாரமாய் போய்க் கொண்டிருந்தது//
சுவையாரம் - இந்த சொல்லை ரசித்தேன்.
அன்பிற்குரிய கோவி.கண்ணன்,
மற்ற மொழிக்காரர்களுக்கும் இந்தச் சிக்கல் உண்டு என்பதை நானும் அறிவேன். பல்வேறு மொழி நிகழ்ச்சிகளைக் காணுவதால் இது நடப்பதல்ல, நம்முடைய கவனக் குறைவால்,
சோம்பலால், நடப்பது. நான் நாளைக்கே இதை மாற்றவேண்டும் என்று சொல்லவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் முயலவேண்டும். நம் மொழியைப் பயன்படுத்துவதில் ஒரு பெருமிதம்
வேண்டும். அடிமைத் தனம் கூடாது. கேவலமாய் நினைக்கக் கூடாது. பல மொழிக்காரர்களும் அப்படி நினைப்பதில்லை. இந்தியர் மட்டும் நம்முடைய குடியேற்ற நினைப்பு அவலத்தால்
அப்படி நினைக்கிறோம்.
நம் கண்முன்னே வீடு பற்றி எரிகிறது. நாம் "அது எரியட்டும், வேறு வீடு போய்க் கொள்வோம்" என்றால் எப்படி?
அன்பிற்குரிய கயல்விழி முத்துலெட்சுமி,
தேவையற்ற பேச்சாகக் கருதுபவர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். பெரும்பான்மை மக்களிடம் இதை வலியுறுத்துங்கள். தமிழரிடையே தமிழிலேயே பேசுவோம். அதுவும் நல்ல தமிழில்
பேசுவோம். பிறசொற்களைக் கூடிய வரையில் தவிர்ப்போம்.
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய கண்மணி,
நீங்கள் மிடையங்களின் (media) பங்களிப்பை மட்டும் சொல்லுகிறீர்கள். நான் கல்வித் துறையின் பங்களிப்பையும் சொல்லுகிறேன். தமிங்கிலத்தின் தொடக்கம் கல்வித் துறையில் இருக்கிறது.
70களில் ஆங்கிலவழிக் கல்வி என்பது இங்கொன்றும் அங்கொன்றுமாய்ப் பெரும்பாலும் சென்னையில் மட்டுமே இருந்தது. கிட்டத் தட்ட 98/99 விழுக்காடு மாணவர்கள் தமிழிலேயே
படித்தார்கள். இப்பொழுது பணத்தை வாங்கிக் கொண்டு இந்த 40 ஆண்டு காலத்தில் மடைதிறந்த வெள்ளமாய் ஆங்கிலவழிப் பள்ளிக் கூடங்கள் பட்டிகள், ஊர்கள் தோறும் தொடங்கப்
பட்டிருக்கின்றன. ஆங்கிலம் இல்லையென்றால் எதிர்காலமே இல்லையென்று நம்மைப் பித்தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பல தமிழரும் நம்பிக் கொண்டு தம் பிள்ளைகளை
ஆங்கிலவழியில் படிக்க வைக்கிறார்கள். நாடு கானல்நீரை உண்மையான ஊற்று என்று நம்பிப் போய்க் கொண்டிருக்கிறது. மடிக்குழைப் பள்ளிகளைக் (matriculation school) கைவைத்தால்
ஒழிய, கல்வித் திட்டத்தை மாற்றினால் ஒழிய, தமிங்கிலம் ஒழியாது.
மேலே கருத்துரைத்த பெயரில்லாதவரோடு, நீங்களும் "மொழி என்பது செய்தி பரிமாற்றக் கருவி" என்று ஒருப்படுவீர்களானால் நான் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. அந்தக் கூற்று
பொய்யானது, வெற்றானது. எந்த ஆதாரமும் இல்லாத அந்தக் கூற்றை ஒரு கல்வியியல், மொழியியல் அறிஞரும் சொல்வதில்லை.
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய அமரபாரதி,
உணர்ச்சி வசப்படவில்லை. நெஞ்சிற் பட்டதைச் சொன்னேன். [நான் எங்கே ஏளனம் செய்தேன்? கவலைப் பட்டது தப்பா?] தப்பும் தவறுமாகப் பேசுவதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால், உண்மையிலேயே அந்த இளைஞனுக்கு விநாடி என்றால் என்னவென்று தெரியவில்லை. அதற்கு யார் காரணம்? நான் அந்த இளைஞனைத் தனிப்படக் குறை சொல்லவில்லை.
குமுகாயத்தில் தவறியிருக்கிறோம் என்றுதான் சொன்னேன். கல்விமுறையில் நாம் தடுமாறியிருப்பதையே சொல்லத் தோன்றியது.
நீங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறீர்களா, வெளிநாட்டில் இருக்கிறீர்களா, என்று எனக்குத் தெரியாது. தமிழ்நாட்டில் தமிழின் நிலைமை இன்று தவிப்பதாகவே தோன்றுகிறது. இப்படியே
போனால் தமிங்கிலர் கூடித் தமிழர் என்பவர் முற்றிலும் குறைந்தே போவார். இதைக் கண்டு கவலைப் படாமல், மகிழ்ச்சிப் படவா சொல்லுகிறீர்கள்? வீடு தீப்பற்றி எரிகிறது என்று
சொல்லுகிறேன்; சாம்பலாகட்டும் என்று அமைந்து போவதா? நீங்கள் எல்லாம் அப்படியா இருப்பீர்கள்? தீயை அணைக்க மாட்டீர்களா? தலைமுறை ஒன்று கிட்டத்தட்டத் தொலைந்துதான்
போனது. ஆங்கிலவழிப் பள்ளிக் கூடங்கள் பெருத்துப் போனதும் தமிழ் பேசத் தங்கக் காசு கொடுப்பதும் இன்று நடப்பது தானே? நமக்குள் நோய் இருப்பது கூடத் தெரியாமல் பேச
முன்வருகிறீர்களே? புள்ளிவிவரங்களை எல்லாம் நீங்கள் பார்ப்பது இல்லை போலும்.
"சாத்தர்களுக்கு மொழி என்பது செய்தி பரிமாறும் கருவி" என்று சொல்லுவது வடிகட்டின பொய். மொழி என்பது சிந்தனைக்கு அடிப்படையானது. மொழிக்கு மீறிய சிந்தனையில்லை.
கொஞ்சம் கல்வியியல், உளவியல், மொழியியல் பற்றிய அடிப்படைகளைத் தேடிப் படித்து புரிந்து கொள்ளுங்கள். அமரபாரதி என்பது புனைப்பெயரா, இயற்பெயரா என்று அறியேன்.
ஆனால் ஒரு அறிவுய்தித் தோற்றம் காட்டுகிறீர்கள். எனவே, அறிவைத் தேடித்தான் பாருங்களேன்? மொழி ஆராய்ச்சி என்பது எங்கோ அந்தரத்தில் தொங்குவதில்லை; second
என்பதற்கு தமிழில் அடிப்படைச் சொல் தெரியாமல் பல தமிழர் இருக்கிறார்கள் என்பது நடைமுறையில் உண்மை. அதைப் புரிந்து கொள்ள நீங்கள் மறுத்தால், நான் என்ன செய்யட்டும்?
அந்த மறுப்போடு, சொல்லவருவதைக் குழப்பி, "மொழியாராய்ச்சி, அது, இது" என்று திசை திருப்பி, "இந்த பதிவுக்கே ஒரு விளக்க பதிவு தமிழில் போட வேண்டிய நிலைமை வரலாம்.
எளிய மொழியில் எல்லோருக்கும் புரிகிற மாதிரி எழுதினால் அது அனைவரையும் சென்றடையும்" என்று குசும்பு வேலையும் செய்து எழுதுகிறீர்கள். நான் எழுதியது உங்களுக்குப் புரிந்து
தானே பின்னூட்டுப் போடுகிறீர்கள். அப்புறம் என்ன எளியநடை?
எது எளிய நடை? வெறுமே சொற்களை வைத்துப் பம்முவதற்கு மாறாய் எளிய நடை என்பதை விளக்கி உங்கள் பதிவில் ஒரு இடுகை போடுங்களேன். எங்களைப் போன்றோர் படித்துத்
தெரிந்துகொள்ளுகிறோம்.
"உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா" என்பது உங்கள் பக்கத்துச் சொலவடையாய் இருக்கலாம் "உள்ளதும் போச்சுறா தொள்ளைக் காதா" என்பது எங்கள் பக்கத்துச் சொலவடை.
நொள்ளைக் கண்ணைக் குறிக்கும் போது தொள்ளைக் காதைக் குறிக்கக் கூடாதா, என்ன?
நீங்கள் சொல்லுவது மட்டுமே சரியென்று ஏன் எழுதுகிறீர்கள்?
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய மீன்துள்ளி செந்தில்,
சங்கதம் (என்ற சமஸ்க்ருதம்) என்ற மொழி பாகதம் (என்ற ப்ராக்ருத்) மொழியின் திருத்திய வடிவம். பேச்சுத் தமிழுக்கும் செந்தமிழுக்கும் உள்ள உறவு போல அதைப் புரிந்து
கொள்ளவேண்டும். மொழி என்பது மக்களால் உருவாவது; யோகிகள் என்று யாரும் தனித்து வந்து திடீரென்று எதையும் உருவாக்குவது இல்லை. தமிழும் அப்படி உருவானது இல்லை.
அது ஓர் இயல்மொழி.
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
அன்பிற்குரிய புருனோ,
"நாகரிகம் என்றால் அது ஆங்கிலம் என்ற மாயை" என்று சொல்லியிருக்கிறீர்கள்; ஒருப்படுகிறேன்.
அன்பிற்குரிய திகழ்மிளிர்,
"ஊடகங்களும்,வழி காட்டவேண்டிய தலைவர்களும் தங்களின் பணியில் இருந்து விலகும்போதே இந்த நிலை ஏற்படுகிறது" என்று எழுதியிருந்தீர்கள். அவர்களை விடுங்கள்.
தனியாட்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்? நம்மால் முடிந்த அளவு நல்ல தமிழில், பிறசொல் கலவாமல், எழுத மாட்டோமா? பயில மாட்டோமா? அப்புறம் என்ன நம்
பிள்ளைகளுக்கு விட்டுப் போகிறோம்?
அன்புடன்,
இராம.கி.
மதிப்பிற்குரிய அய்யா,
இது போன்ற நெஞ்சு சுடும் நிகழ்வுகளை நமது வாழ்வில் ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம்.
இது போன்ற மொழிச் சீர்கேட்டுக்கு நம் குமுகாயம் பொருள் முதல் வாதத்தை தனது வாழ்வின் தலையாய நெறியாகக் கொண்டதே காரணம். ஒரு பொறியியல் கல்லூரியில் நுழைவதற்கு ஒரு மாணவன் கணிதம், வேதியியல், மற்றும் இயற்பியலில் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என்கின்ற நிலை இருக்கும் போது, ஒரு வேளை அம்மாணவன் மொழிப் பாடத்தில் ஆர்வமும் திறமையும் உடையவனாக இருந்தாலும் கூட அவனது சுற்றத்தார் அவனது நிலைப் பாட்டைச் சிதைத்து விடுகின்றனர். தமிழகத்தில் மொழிப் பாடத்தை உயர் கல்வியாகக் கற்பவர்களில் குறைந்து எண்பது விழுக்காடு பேர் வேறு வழியில்லாமல் படிக்கின்றார்கள்.
தமிழகத்தின் ஒவ்வொரு பள்ளியிலும் பணி புரியும் அனைத்து ஆசிரியர்களும் மனம் வைத்தால் மட்டுமே இன்னும் சில ஆண்டுகளில் மாணவர்களிடையே மொழி ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். இன்னும் தொழிற் கல்வி தவிர பிற துறைகளிலும் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும்.
தமிழ் ஆர்வலர்கள் அனைத்துத் துறைகளிலும் இருப்பது ஒரு வகையில் நன்மையே. இது கலைச் சொல் உருவாக்கத்தில் பெரும் உதவியாய் இருக்கும்.
நன்றி...
இராம.கி அய்யா,
கன்னடம்,மலையாளம்,தெலுங்கு இவையெல்லாம் தமிழ்த்தாய் ஈன்றெடுத்த குட்டிகள் என்று சொல்கிறார்களே;தமிழ்த் தாய் தமிழ் குட்டி போடமாட்டாங்களா?அது ஏன்?
அன்பிற்குரிய இரண்டாவது பெயரில்லாதவருக்கு,
சுவையாரம் என்பது சுவாரஸ்யத்திற்கு இணையாக மீட்டெடுக்கப் பட்ட சொல். சுவை என்பது வடக்கே சுவ என்றே பலுக்கப் படும். சுவையாரம்>சுவாரயம் (metathesis) >சுவாரசம்>சுவாரஸ்யம் என்ற திரிவில் அப்படி அமையும். சுவ என்ற சொல்லுக்கு வடமொழியில் வேரில்லை.
சொவ்வுதல்/சவ்வுதல் என்பது பல்லால் குதப்பும் செயல். "என்ன அது சவசவன்னு குதப்பிக்கிட்டே இருக்கான்?" என்று சொல்லுகிறோம் இல்லையா? சொவ்வுதல் என்ற சொல் வெறும் ஒலிக் குறிப்பில் உருவான சொல். ஒரு பொருளை வாயில் போட்டுக் குதப்பிச் சவட்டும் போது அது soft ஆகிறது. மெல்லுவது என்பதில் இருந்து மெது என்ற சொல் எழுந்தது போல சொவ்வுதலில் இருந்து சொவ்வை என்ற சொல் எழும். அதுவும் soft என்ற பொருளை முதலில் குறித்திருக்க வேண்டும். இப்படி வாயில் போட்டுச் சொவ்விய பின்னால் அதன் taste நமக்குத் தெரிகிறது. தமிழிலும் சொவ்வுதல்>சொவ்வை>சுவை என்ற சொல் அப்படியே எழுந்தது. சவ்வுதலைப் போல சப்புதல் என்பதும் ஒலிக்குறிப்பில் எழுந்த சொல் தான். சப்புதலுக்கும் சுவைக்கும் இருக்கும் உறவை நான் சொல்ல வேண்டியதில்லை.
சுவை + ஆரம் = சுவையாரம் = சுவை நிறைந்தது.
மெல்லுவதன் மூலமாய் எழும் ஆவிகளின் மணத்தை மூக்கு உணருகிறது. smell என்ற மேலைச்சொல்லின் சொற்பிறப்பு மூலத்தையும் படியுங்கள். தமிழில் மெல்லுவது>மொல்லுவது>மொள்ளுவது>மள்ளுவது என்றும் திரியும். மள்நம் = மணம்.
மொள்ளுவதன் மூலம் ஒலி ஏற்படுகிறது. மொள்>மொழி என்ற சொல்லும் அப்படி ஏற்பட்டது தான்.
நம்முடைய சொல்வளம் மிகப் பெரிது. அதை முறையாக அறிந்து கொள்ளத்தான் நம்மிற் பலர் அணியமாக இல்லை.
அன்புடன்,
இராம.கி
அன்பிற்குரிய அருள்மொழி,
உண்மைதான். நான் பார்த்தது பலவிடத்தும் நடப்பது தான். அதே பொழுது, பொதுமக்கள் பலரும் தட்டிக் கேட்காது இருப்பதால் இது போன்ற பயன்பாடுகள் கூடிக் கொண்டே போகின்றன. பொறுத்தது போதும் என்றே நான் சொல்லுகிறேன். நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் தமிங்கிலப் புழக்கத்தைக் குறைக்குமாறு இடைவிடாது சொல்ல வேண்டும். சிறுதுளி பெருவெள்ளம்.
மொழிப்பாடத்திற்கு அழுத்தம் இல்லாது போவது பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். தமிழ் படிப்பதால் பயனுண்டு என்று மக்களுக்குப் புரியவைக்கும் வரை இது போன்ற நடப்புகள் எழத் தான் செய்யும். கூடவே தமிழ் படிக்காமல் தமிழ்நாட்டில் எந்த மாணவரும் தேர்ச்சி பெறமுடியாது என்பதை பள்ளி, கல்லூரி போன்றவற்றில் கட்டாயமாக்கவேண்டும். நாம் தமிழ் சொல்லித் தரும் முறையையும் மாற்ற வேண்டும். பழைய செய்யுளை உருப்போட்டு ஒப்பிக்கச் சொல்லுவதில் பயனில்லை. இன்னும் தமிழ் சொல்லிக் கொடுப்பதில் திண்ணைப் பள்ளிக்கூட, குருகுல முறையே பின்பற்றப் படுகிறது. அதை முற்றிலும் மாற்ற வேண்டும். தமிழைப் படிப்பதில் ஆர்வம் ஏற்படும்படி ஆசிரியர்கள் தான் செய்யவேண்டும். 1960-70 களில் இருந்தபடி தமிழாசிரியர் மதிக்கக் கூடிய பெரியவராய் அமையவேண்டும். பட்டிமன்றம், கவியரங்கம், மேடைப் பேச்சு என்று தமிழாசிரியர்கள் அலைவதை தமிழாசிரியர்கள் தவிர்க்க வேண்டும்; பள்ளி/கல்லூரி நிருவாகங்களும் கட்டுப் படுத்த வேண்டும். அவர்களுக்கான சம்பளங்களும் மறுபார்வை செய்யப் படவேண்டும். தமிழாசிரியர் கூட்டமைப்பு ஒன்று ஏற்பட்டு, அவர்களின் குமுகாயப் பொறுப்பையும் உணர்த்த வேண்டும்.
மொழிப்பாடத்தில் ஆர்வம் குறைந்து போவதும், பெற்றோர் அதைத் தணிப்பதும், சம்பாரிப்பு கருதித்தான். பொறியாளர் அளவுக்கு ஓர் ஆசிரியருக்கும் சம்பளம் இருக்குமானால் இது மாறும். ஆசிரியரின் பொறுப்பு/வேலைக் கடினம் பொறியாளர்களின் பொறுப்பு/வேலைக் கடினத்திற்கு ஒன்றும் குறைந்ததல்ல. குமுகாயத்தில் தமிழ் ஆசிரியர் என்பவர் இன்று கேலிப்பொருளாய் இருக்கிறார். (அதற்கு அவர்களே பெரும்பாலும் காரணம். தமிழாசிரியர்கள் பற்றி நான் எழுதத் தொடங்கினால் அது விரியும். மேடைப் பேச்சு என்பது இவர்களைச் சீரழித்திருக்கிறது. ஆனால் அவர்கள் உணருவதாகத் தெரியவில்லை. கூடவே திரைப்படச் சீரழிப்பு. ஒரு தமிழாசிரியரே முட்டாள் தனமாய் ஒரு திரைப்படத்தில் நடித்து இந்தக் கேலித் தனத்தைக் கூட்டியிருக்கிறார்.) அதுவும் மாறவேண்டும். முன்னே சொன்னது போல் தமிழாசிரியர் மதிக்கக் கூடிய பெரியவராய் அமையவேண்டும். அப்பொழுதுதான் மொத்தமாய் இந்த நிலை மாறும்.
தமிழ் ஆர்வலர்கள் அனைத்துத் துறைகளிலும் இருப்பது நன்மை தான்.
அன்புடன்,
இராம.கி
மூன்றாவது பெயர் தெரியாதவருக்கு,
உங்கள் தமிழ்த்தாய் உங்களைப் போன்ற தமிழ்க் குட்டியை ஈன்றுதானே இருக்கிறார்கள்? அப்புறம் என்ன?
[இது எல்லாத் தமிழருக்கும் பொருந்தும்.]
அன்புடன்,
இராம.கி.
திரு இராம. கி. அவர்களே,
உங்கள் முறையில் எல்லா சொற்களுக்கும், வேர், கிளை, இல்லை என்று ஆராய்ச்சி செய்து தமிழ் பேசுவது/எழுதுவது என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லாதது. அப்படி ஒவ்வொருவரும் செய்யப் புகுந்தால் ஒவ்வொருவரும் தன்னுடைய 'தனித் தமிழை' தான் உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். எல்லோரும் ஒரே வேரை நோண்டிக்கொண்டிருக்கவோ, ஒரே கிளையைப் பிடித்துத் தொங்கிகொண்டிருக்கவோ, ஒரே இலையைப் பறித்துக் கொண்டிருக்கவோ போவதில்லை. உங்கள் தனித்தமிழ் உங்களுக்கு மட்டும்தான் புரியும்.
ஆகவே பேசவும், எழுதவும் கைகூடும் மொழிநடையைத் தான் அனைவரும் கையாளுவர். அதுதான் பிறருக்கும் புரியும். மொழியின் முதன்மைப் பயன்பாடு தொடர்பாடல், அடுத்து அத்தொடர்பாடல் அம்மொழி பேசுபவரின் கலாச்சாரத்தை உள்ளடக்கியிருத்தல். சராசரி மனிதர்களின் தொடர்பாடலில் பரிமாறிக்கொள்ளும் விஷயமே முக்கியம். எந்த புதிய விஷயமும், அத்துறை அறிஞர்களால் தம் எழுத்துக்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதனூடே புதிய சொற்களும் புகுத்தப்பட்டு, அக்கருத்தாக்கமும், அதனோடு தொடர்புடைய சொற்களும் மீண்டும், மீண்டும், எழுதப்படுகையிலே பிரபலமாகி சமூகத்தால் உள்வாங்கப்பட்டு, சாதாரண மக்களாலும் கையாளப்படும் பொது அறிவாக மாறும். உங்களைப்போன்ற சொல் உற்பத்தித் தொழிற்சாலைகளால் மொழிக்கோ, சமூகத்திற்கோ எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை. உங்கள் எழுத்து நடையும், உற்பத்தி செய்யும் சொற்களும் எந்த நாளும் பரவலாகப்போவதில்லை. ஒன்றுக்கும் உதவாத சொற்களை உற்பத்தி செய்து கடைபரப்பி கூவிக்கூவி விற்றாலும், உங்களைப் போன்ற ஒருசில தமிழ்க்காவலர்களாக தாங்களாகவே நினைத்துக்கொள்ளும் சிலரைத்தவிர வேறு எவரும் கவலைப்படப் போவதில்லை. நீங்களும், உங்களையொத்த தமிழ்ப்பித்தர்களும் இப்படியே புலம்ப்பிக்கொண்டிருக்க வேண்டியது தான். உங்களுக்கு தமிழ் மொழிக்கும், சமூகத்துக்கும் பணி செய்ய வேண்டுமென அக்கறையிருந்தால் "செயற்கைச் சொல்லுற்பத்தித் தொழிற்சாலையை" மூடிவிட்டு, நீங்கள் கற்ற துறையில் கல்லூரி/உயர்நிலைப் பள்ளிக் கல்வி கற்றவர்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய மொழியில் எழுதத் துவங்குங்கள்.
//உங்களுக்கு தமிழ் மொழிக்கும், சமூகத்துக்கும் பணி செய்ய வேண்டுமென அக்கறையிருந்தால் "செயற்கைச் சொல்லுற்பத்தித் தொழிற்சாலையை" மூடிவிட்டு, நீங்கள் கற்ற துறையில் கல்லூரி/உயர்நிலைப் பள்ளிக் கல்வி கற்றவர்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய மொழியில் எழுதத் துவங்குங்கள்//
அனானி அய்யா,
செயற்கை சொல்லுற்பத்தி ஆலையை மூடுவதற்கு முன்,இது வரை இந்த தொழிற்சாலை எத்தனை சொற்களை உற்பத்தி செய்திருக்கிறது,எவ்வளவு விறபனை ஆகி உபயோகத்திற்கு வந்திருக்கிறது போன்ற ஆய்வு நடத்தி,பிறகு முடிவு எடுப்பதே சரியாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
பாலா
//"செயற்கைச் சொல்லுற்பத்தித் தொழிற்சாலையை" மூடிவிட்டு, நீங்கள் கற்ற துறையில் கல்லூரி/உயர்நிலைப் பள்ளிக் கல்வி கற்றவர்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய மொழியில் எழுதத் துவங்குங்கள்.//
இராமகி ஐயா,
மேலே அனானி இட்ட மறுமொழி உண்மையிலேயே சிரிப்பை வரவழைத்தது. உங்களைப் போன்ற தனித்தமிழார்வளர்கள் தமிழை சீர்படுத்தவில்லை என்றால் அண்ணார் இவ்வளவு தூய்மையான தமிழில் இங்கு பின்னூட்டமிட்டு இருப்பாரா ? என்று நினைத்தேன். சிரிப்பே வந்தது. அவர்கள் அவர்களை அறியாமலேயே பேசுகிறார்கள் ! நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்பவரும் அல்ல.
:)
கோவி கண்ணன்,
//தனித்தமிழார்வளர்கள் தமிழை சீர்படுத்தவில்லை என்றால் அண்ணார் இவ்வளவு தூய்மையான தமிழில் இங்கு பின்னூட்டமிட்டு இருப்பாரா ?//
உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து எனக்கும் சிரிப்பு தான் வருகிறது. இருந்தாலும் நான் தூய தமிழில் தான் எழுதியிருக்கிறேன் என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. தனித்தமிழ் உதவியில்லாமலேயே நல்ல தமிழ் எழுத முடியும் என்பதை உங்களை அறியாமலேயே சொல்லியிருக்கிறீர்கள். என்னுடைய நடை இராமகி அவர்களின் மொழி நடையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. முக்கியமாக செயற்கைத்தன்மை கிடையாது. செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட விதயம், மிடையம், நுணுத்தம், செகுத்தம் போன்ற இன்னும் நூறு ஆண்டுகளானாலும் வெகுஜனப் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பில்லாத சொற்களின் தேவையில்லாமல் என்னால் நல்ல தமிழில் எழுத இயலும்.
பெயரில்லாதவரின் மறுமொழியை ஒட்டிய எனது சிந்தனை...
நாம் பொது மக்கள் பயன்பாட்டு வழக்கு என்று எதைக் குறிப்பிடுகிறோமோ அது கல்லாதார் பேசும் மொழியாக இருக்கிறது. கற்றவரின் மொழி நன்கு திருத்தமுற்றதாகத் தான் இருக்கும். அது புரியவில்லை என்றால் கற்றுக்கொள்ளத் தான் வேண்டும். இல்லையெனில் நாம் கற்றவர் என்று சொல்வதன் பொருள் யாது?
மேலும் நமது எழுத்து மொழி நடை இத்தனை திருத்தமுற்றிருப்பதற்குக் காரணம் மணிப்பிரவாளம் மற்றும் ஏனைய சமற்கிருதம் கலந்த நடைகளில் இருந்து தமிழ் மீட்டெடுக்கப்பட்டதே காரணம். இத்தகைய மீட்டெடுப்பைச் செய்தவர்கள் தனித்தமிழ் அறிஞர்களேயாவர். ஆதலின் அத்தகு ஆர்வமுடையோரை இகழ்தல் தகாது. அவர்களது ஆய்வு முறைகளில் நமக்கு ஒப்புதல் இல்லையெனில் அவற்றின் பால் விவாதிக்கலாமே யொழிய, அவர்களது பணிகளை இழித்துரைத்தல் ஆகாது.
இராம கி அய்யா என்ன சொல்கிறார்... 'மொழிக் கலப்படத்தைக் குறைக்கச் சொல்கிறார்' - இதனோடு நம் சோம்பலால் நமது பேச்சோடு கலந்துவிட்ட ஆங்கிலச் சொற்களுக்கு அவரால் இயன்ற தமிழ் வடிவம் காட்ட முயற்சிக்கிறார். ஒரு வேளை அவர் பரிந்துரைக்கும் சொல்லிலும் அதன் விளக்கத்திலும் உங்களுக்கு ஒப்புதல் இருந்தால் பயன்படுத்தவும். இல்லையெனில் விட்டுவிடவும்.
இங்கு யாரும் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை.
நன்றி...
பிரசாத் அவர்களே,
மொழித்தூய்மை வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆங்கிலம், வடமொழிச் சொற்களுக்கு பதிலாக தூய தமிழ்ச் சொற்கள் தற்கால பேசசுவழக்கிலோ அல்லது பழந்தமிழ் இலக்கியத்திலோ இருந்தால் பயன்படுத்தச் சொல்வதிலும் பிரச்சினையில்லை. ஆனால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்களுக்கும் வேர் சரியில்லை, கிளை சரியில்லை என்று புதிதாக எந்திரத்தனமான சொல் உருவாக்கிக் குட்டையைக் குழப்புவதில் தான் பிரச்சினை. இந்த இடுகையில் அப்படியான முயற்சி தான் என்னை பின்னூட்டமிடத் தூண்டியது. தொலைகாட்சியில் ஒரு இளைஞனுக்கு வினாடி என்றால் தெரியவில்லை என்று கவலைப்படுவது வேறு. அதற்கப்பால், இதுவே தெரியவில்லை என்றால் நுணுத்தம், செகுத்தம் எல்லாம் எப்படித் தெரியபோகிறது என்று புலம்புவது வேறு. நிமிடம், வினாடி என்ற தமிழொலியுடன் இயைந்து வரும் சொற்கள் அன்றாடப் பயன்பாட்டில் உள்ளபோது, இந்த நுணுத்தம், செகுத்தம் போன்ற புதிய வெங்காயங்கள் எல்லாம் எதற்கு? இதேபோல போன இடுகையில் விளையாட்டு, ஆட்டம் போன்றவற்றிற்கு பதிலாக உற்பத்தி செய்துள்ள முயற்சியையும் கவனிக்கவும். இதேபோல விஷயம் என்ற சொல்லில் ஷவுக்கு டவை இட்டு விடயம் என்று பலரும் எழுதுகின்றனர். திடீரென்று இப்போது வந்து விதயம் என்று வேர், வெங்காயம் என்று ஆராய்ச்சி செய்து மாற்ற வேண்டியதன் அவசியம் என்ன. வலையுலகில் நாலைந்து பேர்கள் தவிர வேறு யாரும் இதை பயன்படுத்தபோவதில்லை. பதிலின் நீட்சியைக் கருதி நிறுத்திக்கொள்கிறேன்.
மீண்டும் சுருக்கமாக, பிறமொழிச் சொற்களுக்கு பதிலாக நல்ல தமிழ்ச் சொற்களை எடுத்துக்கொடுப்பதை வரவேற்கிறேன். ஆனால் ஏற்கனவே இருக்கும் தமிழ்ச் சொற்களுக்கும் புதிதாக செயற்கையான சொற்களை முயற்சிப்பதை கடுமையாக எதிர்க்கிறேன். கருத்துரீதியாக எதிர்ப்பது குற்றமில்லை. "வேணும்னா எடுத்துக்கோ. வேணாம்னா விட்டுடு" என்ற உபதேசம் எல்லாம் வேண்டாம். இதெல்லாம் மொழியாராய்ச்சி என்ற பெயரில் சராசரி வாசகர்களை மிரளவைக்கும் முயற்சிகள். இத்தகைய பழமைவாதமும், தூய்மைவாதமும் தான் இளைய சமுதாயத்தினரை தமிழ் மொழியிலிருந்து மென்மேலும் அந்நியப்படுத்துகிறது. வெறுமனே அரசியவாதிகளை குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை.
/தனியாட்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்? நம்மால் முடிந்த அளவு நல்ல தமிழில், பிறசொல் கலவாமல், எழுத மாட்டோமா? பயில மாட்டோமா? அப்புறம் என்ன நம்
பிள்ளைகளுக்கு விட்டுப் போகிறோம்?
அன்புடன்,
இராம.கி./
உண்மை தான்
தாங்கள் சொல்லுவது
அதுதான் அடியேனின் அவாவும்
அய்யா பெயர் சொல்ல விரும்பாதவரே,
நான் எனது பட்டறிவின் படி உண்மையெனக் காண்பது இதைத்தான் - 'மொழித் தூய்மையைப் பேணுபவர்களாலோ, அல்லது அவ்வாறான முயற்சிகளால் வெறுப்படைந்தோ யாரும் தமிழை விட்டு விலகிச்செல்லவில்லை. மொழியில் ஆர்வம் காட்டுவதால் ஒரு காசுக்கும் பயனில்லை என்ற பொருட் பயன் கருத்தினால் மட்டுமே விலகல் நடக்கிறது. இதே போன்று அயல் நாடு செல்பவர்கள் TOEFL/IELTS போன்ற ஆங்கில மொழித்திறன் தேர்வுகளுக்கு மாங்கு மாங்கென்று சொற்கலஞ்சிய அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்நாடுகளில் வசிக்கும் இளங்கலை படித்த மாணவனுக்குக் கூட இத்தனை சொல்லறிவு இருக்குமா என்பது ஐயமே. இதற்கெல்லாம் காரணம் பயன் கருதும் மனப்பான்மையே.'
ஆனால் இதனை நான் காணவில்லை - //இதெல்லாம் மொழியாராய்ச்சி என்ற பெயரில் சராசரி வாசகர்களை மிரளவைக்கும் முயற்சிகள். இத்தகைய பழமைவாதமும், தூய்மைவாதமும் தான் இளைய சமுதாயத்தினரை தமிழ் மொழியிலிருந்து மென்மேலும் அந்நியப்படுத்துகிறது.//
தங்களுடைய மேற்கண்ட சொற்றொடரும் கீழே காண்பதும் முரண்பட்டு இருப்பதைக் காண்கிறேன்.
//மொழித்தூய்மை வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆங்கிலம், வடமொழிச் சொற்களுக்கு பதிலாக தூய தமிழ்ச் சொற்கள் தற்கால பேசசுவழக்கிலோ அல்லது பழந்தமிழ் இலக்கியத்திலோ இருந்தால் பயன்படுத்தச் சொல்வதிலும் பிரச்சினையில்லை.//
மொழித்தூய்மைக்கும் தூய்மை வாதத்திற்கும் என்ன வேறுபாடு? இங்கு தாங்கள் குறிப்பிடும் 'பழமை வாதம்' என்பது என்ன? தாங்களே பழந்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறீர்கள்.
பலவேறு கால கட்டங்களில் வேர்ச்சொல் ஆய்வின்றி தமிழில் உருவாக்கப்பட்ட பல கலைச் சொற்கள் இருக்கின்றன. அவற்றை அப்படியே உள்வாங்கிக் கொண்டு சொற்பெருக்கம் செய்வதில் முரண்பாடுகள் உள்ளன. எனவே ஆய்வுகள் தேவையாக உள்ளன. பயன்பாட்டில் உள்ளவை பிழையுள்ளவை எனில் குறைந்தது கலைச்சொற்களாவது பிழையில்லாமல் உருவாவது எதிர்காலத்திற்கு நல்லது என நான் கருதுகிறேன்.
நன்றி...
//தமிழைச் சரிவரப் பேசத் தெரிந்தவன் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளுவான்; உலகில் எந்த மூலையிலும் வலம் வருவான்.//
இக்கருத்துடன் முழுமையாக உடன்படுகின்றேன்.
"தாய் மொழியை ஒழுங்காக கல்லாதவன் எந்த மொழியையும் முறையாகக் கல்லான்." என்பதை நான் எனது அனுபவமூடாக அறிவேன். ஏனெனில் நான் ஒரு பகுதி நேர மொழி ஆசிரியன்.
உயர்திரு நண்பர் அவர்களுக்கு நான் என் வெண்பா எழுதலாம் வாங்க தளத்தில் வெண்பா விளையாட்டைத் துவங்கியுள்ளேன். ஈற்றடிக்கு வேண்பா எழுத தங்களை அன்புடன் வரவேற்கிறேன். நன்றி
இராம.கி, தங்களது பதிவுகளை இன்றே ஒட்டுமொத்தமாக முழுமையாக படித்தேன். உங்களது கருத்துகள் அனைத்துடனும் நான் ஒத்துப்போகவில்லை என்றாலும் இது போன்ற கருத்துகள் தமிழில் வெளியிடப்படுவது மகிழ்ச்சிக்குரியது.
நீங்கள் பரிந்துரைக்கும் சொற்கள் பல ஏற்கனவே வழக்கில் இருக்கும் சொற்களுக்கு நெருக்கமுடையதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, சுற்றி வளைத்து உருவாக்கப்படுவது போல் இருப்பதாக பலர் உணர்வது தங்களுக்கு தெரியும் என நினைக்கின்றேன். இது சொற்களுக்கு ஒருவித செயற்கைத்தன்மையை கொடுத்துவிடுகிறது.
இராம.கி, மேலும் பெயரிலியாக பலர் சொன்ன கருத்துகளையும் ஓரளவுக்கு ஆமோதிக்க வேண்டியுள்ளது. யதார்த்த நிலைமையையும் ஓரளவுக்கு கருத்தில் கொள்வது அவசியம்.
இளைஞர்களிடைய ஆங்கில புழங்குவது இன்றைய நிலையில் காலத்தின் கட்டாயம். தூய தமிழ் பேசினால் ஒருவரின் நட்பு/குடும்ப வட்டாரத்தில் அவனை அரை லூசு என்று கூறிவிடுவர்!. இது போன்ற Peer Pressure இருக்கும் நிலையில் இளைஞர்கள் தூய தமிழில் உரையாட வேண்டுமென நினைப்பது யாதார்த்தம் அல்ல. நான் எனது நண்பனிடம் "நாளைக்கு நீ இரு சக்கர வாகனத்துல வீட்டுக்கு வா" என்றால் அவர் ஜென்ம ஜென்மத்துக்கும் என் விட்டுக்கு வர மாட்டான்
இங்கு பின்னூட்டம் இட்டிருக்கும் பலர் எழுத்தளவில் ஆங்கிலக்கலப்பற்ற மொழியை ஆண்டாலும் எத்தனைப்பேர் நட்பு வட்டாரத்திலோ அல்லது குடும்பத்தாரிடமோ ஆங்கிலக்கலப்பற்ற தமிழை கையாள்கின்றனர். மின்விசிறியை அணை என்றும் குளிர்சாதனப்பெட்டியை திற என்றும் எத்தனைப்பேர் சொல்வர் ?
சமுதாய கண்ணோட்டம் மாறாமல் தூய தமிழ் பேசு என்பது கருத்தளவில் சரி என்றாலும் யதார்த்தத்துக்கு அவை ஒத்து வராது. நீ மாறினால் சமுதாயம் மாறும் என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு. இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆனாலும் இந்தியா/தமிழகம் மாறப்போவதில்லை.
சீனர்களைப்போலோ கொரியர்களைப்போலோ ஆங்கிலம் பேச வேண்டும் என்பதற்காக நாக்கை அறுத்து அறுவைசிகிச்சை செய்யாததுதான் குறை. அது வரையில் நாம் சந்தோஷப்பட வேண்டும்.
மாறாத சமுதாயத்துக்கு மத்தியில் அவர் கண்ணோட்டத்தில் "ஒரு மாதிரியாக" தெரிவதை சமுதாயத்துடன் ஒட்ட ஒழுகுவதுதான் நடைமுறை.
இதை விடுத்து இளைஞர்களை குறைகூறுவது என்ன நியாயம் என புரியவில்லை :(
Dear Rama.Ki
In one of your posts you have stated that coconut is not from India. But all the latest research indicates otherwise. The some of the oldest coconut fossils (20 Million Years Ago) have been discovered in southern India (Tamil Nadu, Kerala, Sri Lanka), with the oldest ever fossil found in Kulna. Therefore I cannot comprehend why you state that the coconut is a outsider to India or even Tamil Nadu.
It has been proven beyond any doubt that coconut has been in India for over 20 million years, so I am very sure that you are mistaken in for beliefs.
சுவையாரம் என்பது 'interesting' என்பதற்கு ஈடாக வருமா நண்பரே? அப்படியென்றால் 'intriguing' என்பதற்கு எந்த சொல்லைப் பாவிக்கலாம்?
கழகக் கட்சிகள் மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தமிழர்கள் மெய்மறந்து இந்திய நடுவண் அரசினை எதிர்பார்த்து அரசியல் செய்து, இந்திய நடுவண் அரசில் நிலைதங்கும் கூட்டமாக மாறிவிட்டார்கள்.
கழகக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரித்திருக்க வேண்டும். ஆனால் கழகக் கட்சித்தலைவர்கள் பணத்திற்கு விலைபோய் தமிழினத்தையை இந்திய நடுவண் அரசிடம் அடைமானம் வைத்துவிட்டார்கள்.
தமிழரை ஆதரிக்கும் அரசு இல்லை, தமிழ் மக்களிற்கு வாழ்வுறுதி அளிக்கும் அரசு இல்லை, தமிழ் பேசினால் வரவேற்கும் தமிழருக்கான, தமிழரின் அரசு இல்லை, அது தமிழகத்தில் இல்லவே இல்லை.
நாடு என்கிற வீடு இல்லாமல் மொழியோ, இனமோ நெடுநாள் வாழமுடியாது, தமிழ்நாடு என்று பொய்யான ஒரு அரசின்கீழ் தமிழர்கள் தமிழோடு தனித்துவத்துடன் நிம்மதியாக வாழ்வது என்பது கானல்நீர்தான்.
வினோத் சொன்னது,
"""நீங்கள் பரிந்துரைக்கும் சொற்கள் பல ஏற்கனவே வழக்கில் இருக்கும் சொற்களுக்கு நெருக்கமுடையதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, சுற்றி வளைத்து உருவாக்கப்படுவது போல் இருப்பதாக பலர் உணர்வது தங்களுக்கு தெரியும் என நினைக்கின்றேன். இது சொற்களுக்கு ஒருவித செயற்கைத்தன்மையை கொடுத்துவிடுகிறது."""
உண்மைதான். நீங்கள் பயன்படுத்தும் புதிய (?) தமிழ் சொற்கள் ஆங்கில சொற்களை போன்றே இருக்கின்றன. மேலும், அந்த ஆங்கில சொற்களையே பயன்படுத்தி வந்துவிட்டதால், தமிழ் சொல்லைப் பார்க்கும் போது வேறுபட்டுத் தெரிகிறது.
"""மொழி என்பது மக்களால் உருவாவது; யோகிகள் என்று யாரும் தனித்து வந்து திடீரென்று எதையும் உருவாக்குவது இல்லை. தமிழும் அப்படி உருவானது இல்லை.
அது ஓர் இயல்மொழி."""
தமிழின் ஒழுங்கமைவைக் கவனிக்கும் போது அது ஒருவரால் உருவாக்கப் பட்ட மொழி என்றே தோன்றுகிறது.
Iyya,
Ungalin minanjal mugavariyai tharungal nan silla karuthukkalai thangalodu pagiravendum.
anbarasu
e-mail: anbarasu.arasu@gmail.com
தங்களது பார்வைக்கு
http://news.bbc.co.uk/2/hi/europe/7608860.stm
அன்புடன்,
மணிவேல்
Post a Comment