Saturday, June 28, 2008

பொருதும், கும்மாளமும் விளையாட்டும்

"தமிழில் sports & games என்பதை எப்படிப் பாகுபடுத்துவது?" என்று திரு. பாலா சுப்ரா 3/8/2004 அன்று அரையர் குழும்பில் (Rayar kaapi Klub) முன்பு கேட்டிருந்தார். அப்பொழுது அதற்கு ஆராயர் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்.

"என்ன பாலா கலாய்க்கிறீர்களா?
ஸ்போர்ட்ஸ் = விளையாட்டு
கேம்ஸ் = ஆட்டம்
இதிலென்ன சந்தேகம்?"

ஆராயரின் அந்த மடலைப் படித்த பின்னால் தொடர வேண்டும் என்று முதலில் எண்ணியிருந்தேன். பின் மறந்து விட்டேன். ஒரு முறை முடியாது கிடக்கும் குறை மடல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது, முடித்து விடலாம் என்று தோன்றியது. எனவே இந்த மடலைப் பின்னால் அரையர் குழும்பிற்கு அனுப்பினேன். இப்பொழுது set என்பதற்கு ஒரு வலைப்பதிவர் தமிழ்ச் சொல்லைக் கேட்டதைப் படித்து விட்டு, பழையதைத் தேடி மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.
----------------------------------------
ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலியில் கீழே உள்ளவாறு கொடுத்திருக்கிறது.

sport - c.1400, from Anglo-Fr. disport, from O.Fr. desport "pastime, recreation, pleasure," from desporter "to divert, amuse, please, play" (see disport). Meaning "game involving physical exercise" first recorded 1523. Sense of "stylish man" is from 1923. Verb meaning "to wear" is from 1778. Sportsmanship is from 1745.

sport என்பது சண்டை, போர் ஆகியவை செய்யாத காலங்களில் போர்ச் செயலுக்குப் பகரியாகவே (substitute) எழுந்தது. மற்போர் என்பதில் 2 பேர் பொருதுகிறார். வாட் போரிலும் இருவர் பொருதுவார். பொருதல் என்ற வினையே பின்னால் போர் எனும் பெயர்ச் சொல்லை உருவாக்கிற்று. sport என்பதும் ஒருவகைப் பொருதலே. (என்ன, இது வல்லடி - violence இல்லாத போர்) பொருது என்றாலும் தமிழில் அது பெயர்ச்சொல் தான். sport என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் பொருது என்பதாகும்.

sportsman = பொருதாளன். /பொருதர்
sportswoman = பொருதாளி 
sportsperson = பொருதாளர் / பொருதர்
sportsmanship = பொருதாண்மை / பொருதுமை
sportive = பொருதாக

விளையாட்டு என்ற சொல்லை sports க்கு இணையாக வைத்துக் கொண்டால் மேலே உள்ளது போல் தொடர்புள்ள சொற்களைச் சொல்வது இடரும். 

இனி, game என்பதற்கு கீழுள்ளதை ஆங்கில வழியில் அறிகிறோம்.

game (n.) - O.E. gamen "joy, fun, amusement," common Gmc. (cf. O.Fris. game, O.N. gaman, O.H.G. gaman "joy, glee"), regarded as identical with Goth. gaman "participation, communion," from P.Gmc. *ga- collective prefix + *mann "person," giving a sense of "people together." Meaning "contest played according to rules" is first attested c.1300. Sense of "wild animals caught for sport" is c.1290; hence fair game (1825), also gamey "having the flavor of game" (1863). Adjective sense of "brave, spirited" is 1725, from the noun, especially in game-cock "bird for fighting." Game plan is 1941, from U.S. football; game show first attested 1961.

கும்முதல் என்ற வினை தமிழில் குழுமுதல் பொருளில் வரும். கும் என்பது தமிழில் கூட்டப் பொருள் தரும் முன்னொட்டு. வடமொழியில் இது சம் ஆகும். கும்மித்தலும், கும்மியாட்டம் போன்றவையும் நம் களிப்பைத் தெரிவிக்கும் செயல்கள் தாம். கும்மாளம் என்பதும் கும்மிக் களிக்கும் செயல் தான். "ஆட்டமும் கும்மாளமுமாய்" என்று சொல்கிறோம் அல்லவா? ஆட்டம் என்பது ஒரு act. "இக் கும்மாளத்திற்கு நான் வரவில்லை; இவ் ஆட்டத்திற்கு நான் வரவில்லை" என்று சொல்வதையும் நினைவு கூருங்கள்.

ஆட்டம் என்ற சொல் இக்காலத்தில் மிகவும் பொதுமைப் பொருள் பெற்று விட்டது. அதைக் குறுக்கி மீண்டும் விதப்பாக game என்பதற்குக் கொண்டு வருவதைக் காட்டிலும் (நானும் அவ்வாறு செய்துள்ளேன். இருந்தாலும் துல்லியம் பார்த்தால் அச்சொல்லை game ற்கு இணையாகச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.) கும்மாளத்தைச் சுருக்கிக் கும்மை என்றே game ற்கு இணையாகச் சொல்லலாம். சொல்வதற்கு ஒரு மாதிரியாய் இருந்தால் கும்மாளம் என்பதையே கூடப் புழங்கலாம். நாளாவட்டத்தில் பழகிவிடும். கும்மாளம் என்பது மகிழ்வுக்காக உள்ளது என்ற நல்ல உள்ளுணர்வும் கூட அதில் இருக்கும்.

gamesman = கும்மாளன். / கும்மைக்காரன்
gameswoman = கும்மாளி / கும்மைக்காரி
gamesperson = கும்மாளர் / கும்மைக்காரர்
gamesmanship = கும்மாளுமை /

அப்பொழுது விளையாட்டு என்பது என்ன? அது ஒரு field event. விளை என்பது தென்பாண்டி நாட்டில் விளைந்து முடிந்த வயற்காட்டில் உள்ள தட்டை நிலத்தை ஆகுபெயராய்க் குறிக்கும். 135-150 நாட்களுக்குப் பின் எந்த விளை நிலமும் தரிசாய்த் தானே கிடக்கும்? அங்கு தான் பொதுவாய் நாட்டுப்புற விளையாட்டுக்கள் நடைபெறும். விளையாட்டு இடம் விளைக்கு அருகில் உள்ள மேடாகவும் இருக்கலாம். குமரி, நெல்லை மாவட்டங்களில் களியக்கா விளை, திசையின் விளை என்றெல்லாம் ஊர்களின் பெயர் இருப்பதையும் எண்ணிப் பார்க்கலாம். விளை என்பது field என்பதைத்தான் குறிக்கிறது. விளையில் ஆடுவது விளையாட்டு - வேறு ஒன்றுமில்லை.

Sports consists of field events and games. பொருதுகள் என்பவை விளையாட்டுக்களையும், கும்மைகளையும் உள்ளடக்கியவை.
individual field event = தனியாள் விளையாட்டு.
team field event = தொகுவ விளையாட்டு (தொகுவம் = கூட்டம், குழு, தொகுதி; a group consists of many teams = ஒரு குழு பல தொகுவங்களைக் கொண்டது.)

களித்தல் = to enjoy; களிப்பு என்பது enjoyment. களியாடுதல் என்பது to involve in enjoyment.

அன்புடன்.
இராம.கி.

8 comments:

Anonymous said...

//இப்பொழுது set என்பதற்கு ஒரு வலைப்பதிவர் தமிழ்ச்சொல்லைக் கேட்டதைப் படித்துவிட்டு, பழையதைத் தேடி மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.
//


ஐயா, அப்படியே set-க்கும் இணையான தமிழ்ச் சொல்லைக் கூறுங்கள்.

இராம.கி said...

அன்பரே!

http://podian.blogspot.com/2008/06/set.html

என்ற வலைப்பதிவில் நான் இட்ட பின்னூட்டை இங்கு கொடுத்துள்ளேன். உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும் என எண்ணுகிறேன்.
-------------------------------------
set = கொத்து;
set theory = கொத்துத் தேற்றம்.

பல ஆட்டங்கள் சேர்ந்தது ஒரு கொத்து.

"சான்யா 7க்கு 6 என்ற ஆட்டக் கணக்கில் முதற் கொத்தை வென்றார். இருப்பினும் சிறுசிறு தவறுகளால், வலுவிழந்து, இரண்டாவது கொத்தில் எதிராளியிடம் தோற்றுப் போனார். மீண்டும் பெரும்பாடுபட்டு மூன்றாவது கொத்தை வென்றார்."

கொத்து எ்னும் போது அதனுள்ளே ஓர் ஒழுங்கு இருப்பது சட்டென்று நமக்குப் புரிபடுவதில்லை. ஆனாலும் ஏதேனும் ஒன்று கொத்தின் எல்லா உறுப்புக்களையும் இணைக்கும். அந்த உறவு ஒன்றைச் சொன்னால் கொத்தின் கட்டுமானம் புரிந்து போகும்.

தமிழில் "ஒரு கொத்து மாங்காய், ஒரு பூங்கொத்து, ஒரு கொத்து வீடுகள்" என்னும் போது நம்மையறியாமல் கணிதத்தில் வரும் set என்பதையே நாம் உணருகிறோம்.

கணம் என்னும் போது அடுத்துறும் பாங்கு(இதற்கு அடுத்தது அது; இதற்கு முந்தையது, பிந்தையது என்னும் associative property) பெறப்படும். இதை ஒழுங்குப் பாங்கு (order property)என்றும் சொல்லுவர். எனவே இந்தக் காலக் கணிதத்தின் set theory இல் கணம் அடிப்படைத் தொகுதி ஆகாது.

கொத்து என்பது ஒரு விதப்பான தொகுதி. தொகுதி என்பது பொதுமையான collection என்பதற்குச் சரி வரும்.

set (கொத்து),category (கட்டுக் கூறு),ring (வளையம்),group (குழு)
போன்றவை ஏற்கனவே 30, 40 ஆண்டுகளாய் உயர்கணிதத்தில் பயன்படும் தமிழ்ச் சொற்கள்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

ஐயா, பார்ப்பனீயம் என்கிற சொல் எப்படி உருப்பெற்றது என்பதைச் சொல்வீர்களா?

இராம.கி said...

அன்புடையீர்,

உங்களுடைய கேள்வி இடுகைக்குத் தொடர்பில்லாதது. ஆனாலும் உங்களின் ஆர்வம் கருதி விடையளிக்கிறேன்.

பார்ப்பனியம் என்ற சொல் தமிழில் உண்டு. ஆனால் பார்ப்பனீயம் என்று இழுத்து உரைப்பது பிழைபட்டது. இயம் என்ற சொல் கொள்கைப் பொருள் கொண்டது.

பார்ப்பார் என்பது தமிழ்க் குமுகாயத்தின் பகுதியான ஒரு சாராரைக் குறிப்பது. அந்தச் சொல்லின் வேர் பால்>பார்ப்பு என்பதே. பார்ப்பு என்பதற்கு இங்கு பொருள் வெண்மை என்பதே. மிக விரிவாக முனைவர் இரா. மதிவாணன் http://www.keetru.com/anaruna/jul06/mathivaanan.php என்ற கட்டுரையில் இந்தச் சொற்பிறப்பு பற்றி விளக்கியிருப்பார். அங்கு பார்த்துக் கொள்ளுங்கள். இந்தச் சொல் பார்ப்பாரின் வெளிறிய நிறம் கருதி அந்தக் காலத்தில் ஏற்பட்ட சொல். இந்தக் காலத்தில் மேலையரை வெள்ளைக்காரர் என்று சொல்வது போல், அந்தக் காலத்தில் வடக்கே இருந்து பல்வேறு காலகட்டங்களில் குடியேறியவரை பார்ப்பார் என்று நிறத்தை வைத்து அழைத்தார்கள். அவர்களுக்கும் தமிழருக்கும் ஊடே ஏற்பட்ட பல்வேறு கலப்பில் அவர்கள் தமிழரோடு பின்னால் கலந்து போனார்கள். இன்றைக்கு அவர்களும் தமிழரே.

(அவர்களின் கோத்திரங்கள், சாகைகள், வகைகள், எப்பொழுது தெற்கே வந்திருக்கலாம், எப்படி வந்திருக்கலாம், என்ற வரலாற்றை ஓரளவு விளக்கமாய் அளித்தது பேரா. ந. சுப்பிரமணியன். The brahmin in the Tamil Country. 1989, Ennes Publications Madurai. படிக்க வேண்டிய பொத்தகம். இந்தக் காலத்தில் அந்த ஆய்வைத் தொடர ஆட்களைக் காணோம். அதே பொழுது நம்பூதிகள் பற்றித் தெளிவான செய்திகளை இணையத்தில் குறித்திருக்கிறார்கள். தேடிப் பாருங்கள்)

அந்தணர் என்ற சொல்லிற்கும் பார்ப்பார் என்ற சொல்லிற்கும் இடையே பலரும் குழம்புவது உண்டு. அந்தணரில் பார்ப்பார் உண்டு. அதே பொழுது பார்ப்பார் எல்லோரும் அந்தணர் இல்லை. அந்தணர் என்பது வேறு வரையறை, வேறு சொற்பிறப்பு, வேறு விளக்கம். பார்ப்பார் அல்லாதோரும் அந்தணர் என்று குறிக்கப் படலாம்.

பெருமானர் என்ற தமிழ்ச்சொல் வடமொழியில் ப்ராமன என்று திரியும். ஒரு சிலர் இதைத் தலைகீழாகப் புரிந்து கொண்டு தருக்கம் பண்ணுவார்கள்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

தொடர்பில்லாத இடுகைக்கானப் பின்னூட்டத்தில் எனது ஐயத்தைக் கேட்டிருந்தாலும், அதைக் கருத்தில் கொள்ளாமல், தாங்கள் தந்த விளக்கத்திற்கும் கீற்றுக் கட்டுரையின் சுட்டிக்கும் மிக்க நன்றி ஐயா!

- சுந்தர்

Anonymous said...

Vilai - Vilaiyaattu - a nice derivation.
Aru.Tamilan

Anonymous said...

Games ஆட்டம் என்றால்
Match க்கு இணையான தமிழ் சொல் அறியலாமா?

றிசாந்தன் said...

ungalin mail id yinai thara mudiyuma?