18, அடுத்தது ஒளபாசனம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல். ஒருகாலத்தில் இல்லறத்தில் ஈடுபட்டுள்ள எல்லாப் பெருமானரும் தங்கள் வீட்டில் வேள்வித் தீ வளர்த்தே ஆகவேண்டும்; அவர்கள் வீட்டு அடுப்பாங்கரையில் கங்கு கனன்று கொண்டே இருக்கும். இப்பொழுது, இதையெல்லாம் பின்பற்றுபவர்கள் அரிதிலும் அரிது.
வேள்வித் தீயைக் காப்பாற்றுதலை தீ ஓம்புதல் என்று தமிழில் சொல்லுவார்கள். ஓம்பாயனம் என்பது தமிழ்வினையைச் சங்கத ஈறு கொண்டு முடிக்கும் ஒரு பெயர்ச்சொல். காப்பற்றுதல் என்ற தொழிற்பெயரை உணர்த்தும். ஓம்பாயனம்>ஓம்பாசனம் ஆகி பெரும்பாலான தமிழர்கள் மெல்லின ஓசையை அவ்வப்போது பேச்சுவழக்கில் ஒலிக்காமற் போவது போல, ஓம்பாசனம்>ஓபாசனம் ஆகிப் பின் மேலும் திரிந்து ஔபாசனம் ஆகும். [தமிழ் ஓதியை வலிந்து மறுக்கும் ஹோத்ரிக்காரர்கள் இந்த ஓம்புதல் - ஔபாசனத்தை மறுக்கப் போகிறார்களா? தமிழ்வேரை இப்படி மறுத்துக் கொண்டே போனால், அப்புறம் வேள்வியை ஒட்டிய பல வடசொற்களின் சொற்பிறப்பையும் மறுக்க வேண்டும். தாத்தனைப் பேரனாக்கும் முயற்சியை என்று கைவிடுகிறார்களோ, அன்று தான் வடமொழிக் குழப்பத்திற்கு முடிவு காண முடியும்.]
19. அடுத்தது இரண்டு சொற்கள் ஒளரசன், ஒளரதன் - உரிமை மகன்; கணவனுக்குப் பிறந்த மகன். உள்ளே இருக்கும் தமிழ் வேர் உள் என்பது தான். இதற்கென்று உள்ளவன் உரியான், உரியன், உரிதன், உரயன், உரதன். உரிமைப் பொருள் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. உரயன்>உரசன்>ஔரசன், உரதன்>ஔரதன்.
20. அடுத்த சொல் ஒளரப்பிரகம். இங்கே ஒருவப் பெருகம் என்பது தன் உருமாற்றிக் காட்சியளிக்கிறது. 'ஒரு' என்பதைச் செம்மறியாடு என்று பிங்கல நிகண்டு குறிக்கும். பெருகம் என்பது மந்தையைக் குறிக்கிறது. ஒரு என்னும் சொல் ஒருவம் ஆகி பின் ஒருவப் பெருகம்>ஔரப்ரஹம் ஆகி ஆட்டுமந்தையைக் குறிக்கும்.
21. அடுத்தது ஒளருவவிரதி - நீரொன்றையே உட்கொண்டு தவஞ்செய்பவன். ஊற்று நீரை, ஊற்று என்றாலே அந்தக் காலத் தமிழில் அமையும் என்று முன்னே உதம் பற்றிச் சொல்லும் போது பார்த்தோம். ஊறுவது ஊறுவம். இனி ஏதோவொன்றை அடையும் விதமாகத் தன்னை வதைத்துக் கொள்ளுபவன் (தனக்குத் தானே வதம் செய்து கொள்ளுபவன்) வதி. வடமொழி வாய்பாட்டில் வதி வ்ரதி ஆகும், வதம் வ்ரதம் ஆகும். நாம் மீண்டும் அதைக் கடன் வாங்கி விரதி, விரதம் என்று சொல்லிக் கொள்ளுவோம்; நம்முடைய தமிழ்ச்சொற்களான வதை, வதி, வதம் ஆகியவற்றை விட்டுவிடுவோம். [இந்த அடிமைத் தனம் என்று போகும்?] ஊறுவ வதி >ஊருவ வதி>ஊருவ வ்ரதி>ஔரவ வ்ரதி என்ற வளர்ச்சி, கொஞ்சம் ஓர்ந்து பார்த்தால் புரிந்து போய்விடும்.
22. ஒளலியா - இசுலாமிய அடியார்கள். இதை விளக்க அரபு மொழிக்குப் போகவேண்டும். அதைச் செய்யாமல் தவிர்க்கிறேன். இசுலாமிய அடியார் என்றே சொல்லலாம்.
23. அடுத்தது ஔவியம். இந்தச் சொல்லைப் பற்றிய விளக்கமே, என்னை ஔ என்னும் பதிவுத் தொடரை எழுத வைத்தது.
ஔவியம் என்பது அவ்வியத்தின் போலி. இந்தப் பெயர்ச்சொல்லின் செயல்வினை (active voice) அவ்வுதல் என்றும், செயப்பாட்டு வினை (passive voice) அவ்வித்தல் என்றும் ஆகும். அதாவது, அவ்வியது அவ்வியம்>ஔவியம் என்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் "திருக்குறள் மெய்ப்பொருளுரை"க் கூற்றுப்படி, சங்க இலக்கியத்தில் ஆவணப் படாத இந்த 'அவ்வியம்' திருக்குறள் 167, 169 பாக்களிற் தான் முதன்முதலில் ஆவணப் பட்டிருக்கிறது. பின்னால் "ஔவியம் பேசேல்" என ஆத்திச்சூடியிலும், "ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு" என்று கொன்றை வேந்தனிலும் சொல்லப் பட்டிருக்கிறது.
அவ்வியம் என்ற சொல்லாட்சி குறளில் இருக்க, ஆத்திச்சூடியிலும் கொன்றைவேந்தனிலும் ஔவியம் என்றே பயிலப் படுகிறது. எனவே, 12 ஆம் நூற்றாண்டிற்கு அருகாமையில் 'அவ்'விலிருந்து ஔகாரப் போலி ஏற்பட்டிருக்கலாம். [அவ்வையார் என ஐந்து பேர் வெவ்வேறு காலங்களில் இருந்ததாகத் தமிழறிஞர் சொல்லுவார்கள்.] சிலம்பின் அடைக்கலக் காதை 122 ஆம் அடிக்கான அடியார்க்கு நல்லார் உரையிலும் கூடச் செவ்வியள் என்பவள் "ஔவியம் இல்லாள்" என்று சொல்லப் பட்டிருக்கும். [அடியார்க்கு நல்லாரின் காலத்தையும் 12 ஆம் நூற்றாண்டிற்கு அண்மையாகவே சொல்லுவார்கள்.] பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்திலும் [18 ஆம் நூற்றாண்டு] ஔவியம் என்ற சொல்லாட்சி இருப்பதாகத் தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக் கழகப் பெருஞ்சொல்லகராதியில் குறிப்பிட்டிருக்கிறார்கள்; ஆனால் அதன் மூலத்தில் என்னால் இப்பொழுது கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னால் தேட வேண்டும்.
அவ்வியச் சொல் வரும் குறள் அதிகாரத்தின் தலைப்பு அழுக்காறாமை. அதன் பொருள் தெரிந்தால் தான், அவ்வுதலின் பொருளைத் தேடுவது எளிதாக அமையும்.
ஆறுதல் என்பது வழிப் படுதலைக் குறிக்கும். [குறிஞ்சி, முல்லை நிலங்களை பழங்காலத் தமிழ்மாந்தன் கடக்க, ஆறுகளே வழி காட்டின. அதனால் ஆறு என்பதற்கு வழி என்ற பொருளும் தமிழில் உண்டு. ]
அழுக்கு என்பதைப் பலரும் மாசோடு (dirt) தொடர்பு படுத்துவார்கள். மாசு என்பது ஒரு வழிநிலைப் பொருள்; முதல்நிலைப் பொருள் அல்ல. இந்தச் சொல்லின் பொருள் புரிய வேறுவகையில் அணுக வேண்டும்.
அழுத்துதல் என்றவொரு பிறவினையை இன்றைக்குப் பயில்கிறோமே, அதை எப்படிப் புரிந்து கொள்ளுகிறோம்? காட்டாக, A என்னும் பொதி (body) B - என்னும் பொதியை அழுத்துகிறது; இதை B -யின் நோக்கில், தன்வினையாய், எப்படிச் சொல்லலாம்? B, A - ஆல் அழுங்குகிறது. அழுங்குதல் என்பது தன் வினை; அழுத்துதல் என்பது பிறவினை. ஒரு பொதி அழுங்க, அழுங்க, அதன் மேல் அழுத்தம் கூடிக் கொண்டேயிருக்கிறது என்று பொருள். அழுங்குவதால் அது அழுக்கு; அழுத்துவதால் அழுத்து. [அழுங்குதல் வினை தற்பொழுது மிக அரிதாகவே பயன்படுகிறது.]
அழுத்துதல் என்பது to press என்றே இந்தக் காலத்தில் புரிந்து கொள்ளப் படுகிறது. அதைப் பொதுமைப் படுத்தி, அறிவியல் மற்றும் பொறியியலில் 'அணுக்களை நெருங்கவைத்தல்' என்னும் ஆழ்பொருளில் துறுத்தல் என்னும் வினை ஆளப்படும். இது ஆங்கிலத்தில் உள்ள to stress என்ற வினைச்சொல்லிற்கு இணையானது. துறுத்தலுக்கு மாறாய் தகைத்தல் என்றும் சிலர் ஆளுகிறார்கள். [தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலச் சொல் அகரமுதலியிலும் 'தகைத்தல்' இருக்கிறது. இருந்தாலும், to tighten என்பதற்கே தகைத்தல் சரியாகும் என்பதாலும், ஐகாரம் பயிலும் தகைப்பைக் காட்டிலும், உகரம் பயிலும் துறுத்து பலுக்க எளிதாய் இருக்கும் என்பதாலும் நான் அதையே பரிந்துரைக்கிறேன். துறுத்திற்கு மாறாய் தகைப்பு நிலைத்தாலும், எனக்கு உகப்பே.]
அழுத்தப் பட்ட பொதி அழுங்குவதைப் போலத் துறுத்தப் பட்ட பொதியும் துறுங்கும் (to get strained). மூன்று விதமான துறுத்தங்களை, மாகனவியல் - mechanics - குறிக்கும். அவை திணிசுத் துறுத்தம் - tensile stress, அமுக்கத் துறுத்தம் - compressive stress, கத்தரித் துறுத்தம் = shear stress என்றாகும். அதே போல, நீளவாட்டுத் துறுங்கு [longitudinal strain; இதை மாகனவியலில் கணக்கிடும் முறையில் ஒருசில வரையறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். to stretch என்பதைக் குறிக்கத் துயக்குதல் என்ற சொல் பயின்று, நீளுதல் பொருளைக் கொடுக்கும். ஒரு நீளத்தின் துயக்கத் திரிவை (change in the stetch) நீளத்தால் வகுத்தால் கிடைக்கும் எண், நீளவாட்டுத் துறுங்கு என்று சொல்லப் படும்.], பருமத் துறுங்கு (bulk strain = பருமத் திரிவு / பருமன்), கத்தரித் துறுங்கு [shear strain = குறுக்குச் செகுத்தத் திரிவு (change in cross section) / குறுக்குச் செகுத்தம்(cross section)] என்ற மூன்று விதமான துறுங்குகளையும் மாகனவியல் பேசும்.
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் வரை (இதை இளகு எல்லை - elastic limit என்று சொல்லுவார்கள்) துறுத்தமும் (stress) துறுங்கும் (strain) நேர் வீதத்தில் (direct proportion) தம்மிடையே உறவு கொள்ளும் (இந்த நேர் வீதத்தை இளகுமை - elasticity, அல்லது இளகுக் குணகம் - elastic coefficient என்று சொல்லுவார்கள்). அழுக்கு ஆறுதல் என்பது to get strained. அழுக்காறு என்பது strained state.
அழுக்காற்றின் இயற்கையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றிலும் இருக்கும் மனச் சூழமைவு நமக்குள் ஓர் அழுத்தத்தை தொடர்ச்சியாய் ஏற்படுத்துகிறது. அதனால் நாம் அழுங்குகிறோம். நமக்குள் அழுக்காறு கூடுகிறது அல்லது குறைகிறது. அழுக்காறு என்பதை முற்றிலும் தவிர்த்தவர் இவ்வுலகில் யாருமில்லை; ஆனால் அதைக் கூட்டுவதும், குறைப்பதும், நம் கையில் இருக்கிறது. பொதுவாய்ப் பல உரைகாரரும், பல அகரமுதலியர்களும் அழுக்காற்றைப் பொறாமை என்றே சொல்லுகிறார்கள்.
அழுக்காறு, அவா, வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
என்ற 35- ஆம் குறளில் வரும் அழுக்காறு பொறாமையைக் குறிக்கிறது என்று பரிமேலகர் கூடச் சொல்லுவார். இந்தக் கருத்தோடு நான் மாறுபடுகிறேன். என் கேள்வி: அழுக்காற்றைப் பொறாமை என்றால், அப்புறம் அழுக்காறாமை என்பது என்ன? அழுக்காறாமை என்ற ஓர் அதிகாரமே குறளில் இருக்கிறதே? இரண்டும் ஒரே பொருளைக் குறிக்க முடியுமா?
ஓர்ந்து பார்த்தால், அழுக்காறு என்பது நாம் தொடர்ச்சியாய் அழுங்கிக் கிடக்கும் நிலை. அழுக்கின் வழி. "ஏதோ ஒரு விசை நம் மனத்தை அழுத்துவதால் ஏற்படும் அழுக்கு, தொடர்ச்சியாய்க் குறையாது நம்மிடம் இருக்குமானால், நம்மை அது அறம் செய்யவிடாது" என்றே 35 ஆம் குறளுக்கு நான் பொருள் கொள்ளுகிறேன். [அப்படி அழுக்கைக் குறைக்க ஒரு வழி, நம் மனப் பரப்பை விரித்துக் கொள்வதாகும். இதை விரிவாகக் கீழே பார்ப்போம்.]
அழுக்காறு mentally strained state என்றானால், அழுக்கு ஆறாமை என்பது என்ன என்பது அடுத்த கேள்வி. நாம் காணும் திண்மப் பொதிகளின் (solid bodies) துறுத்தம்-துறுங்கின் நடவுகையில் (stress-strain behaviour) இந்த இளகு எல்லை என்பது முகன்மையானது. அதாவது, எல்லையற்ற வகையில் எந்தவொரு பொதியும், துறுத்தத்தை (அழுத்தத்தை) ஏற்று துறுங்கிக் (அழுங்கிக்) கொண்டே இருக்காது. ஏதோ ஒரு எல்லையில் அதன் பொறுக்கும் கொண்மை (bearing capacity) மீறி, அதாவது பொறாது, தானே் சிதைந்து போகும். அந்த அழுக்கு ஆறா எல்லையைத் தான் அழுக்கு ஆறாமை என்று திருவள்ளுவர் சொல்லுகிறார்; (அதாவது the state of being unable to withstand or bear the stress). இதை வேறுவிதமாய்த் தமிழிற் சொன்னால் பொறாமை.
பொறுமையின் எதிர்ச்சொல் பொறாமை. ஆக, பொறாமை / அழுக்காறாமை என்பது ஓர் இளகு எல்லையைக் குறிக்கிறது. அழுக்காறு = mental strain அழுக்காறாமை = limit to the mental strain. திருக்குறளில் பயிலும் இந்தக் கலைச் சொற்கள் மனவியற் (psychology) பொருளையே கொண்டாலும், ஒப்பான முறையில் மாகனவியலிலும் - mechanics தம் நடைமுறை கொள்ளுகின்றன.
இனி அவ்வியம் என்பதற்கும் கூடப் பொறாமை, அதாவது பொறுக்காத தன்மை என்றே பலரும் பொருட்பாடு காட்டுவார்கள் [காட்டாகப் பரிமேலழகர், பாவாணர்]. என் கேள்வி: அழுக்காறு, அழுக்காறாமை, அவ்வியம் என மூன்றிற்கும் ஒரே பொருள் சொல்லுவது எந்த விதத்தில் சரி?. மற்ற உரைகாரர்களுக்கு மாறாகப் பாவலரேறு பெருஞ்சித்திரனார், தன்னுடைய 'திருக்குறள் மெய்ப்பொருளுரையில்' அவ்வுதல் என்பதற்குச் சுருங்குதல், குறுகுதல் என்ற பொருளைச் சொல்லுவார். [திருக்குறள் உரைகளைப் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் 'திருக்குறள் மெய்ப்பொருளுரையைக்' கட்டாயம் படிக்க வேண்டும். அது மிகச் சிறந்தவொரு கருவூலம். இதுவரை 4 பகுதிகளே வந்திருக்கின்றன. மற்ற பகுதிகளை (ஒரு சில கையெழுத்துப் பதிப்பாகவே இருந்து) முடிக்காமலேயே பெருஞ்சித்திரனார் இயற்கை எய்திவிட்டார். அண்மையில் முனைவர் மு.இளங்கோவன் திண்ணையில் பல்வேறு திருக்குறள் உரைகள் பற்றிச் சொன்னபோது இதைப் பற்றியும் சொல்லியிருப்பார். இதற்கு எதிர்வினையாற்றிய ஜடாயு திருக்குறள் மெய்ப்பொருளுரையைப் படித்திருப்பாரா என்பது ஐயமாய் இருக்கிறது. "திராவிடமா, போட்டு அடி" என்ற வெற்று முனைப்பில் இவரைப் போன்றவர்கள் இருக்கும் போது, அப்புறம் என்ன சொல்வது?]
பொறாமையையும், அவ்வியத்தையும் ஒன்று போலவே சொல்லுவதில், பெருஞ்சித்திரனார் போலவே, எனக்கும் ஒப்புதல் இல்லை. ஏனெனில் 'அவ்வித்து அழுக்காறு உடையான்' என்று குறள் 167 -இல் சொல்லும் போது, அவ்வித்தல் என்பதை அழுக்காற்றிற்கு முந்திய செயலாகவே வள்ளுவர் கூறுகிறார். அவர் கூற்றுப் படி, அவ்வித்தலும் அழுக்காறலும் உடன் ஒக்கும் செயல்கள் அல்ல.
அப்படியானால் அவ்வித்தல் என்பது தான் என்ன? மீண்டும் ஒப்புமை கருதி, மாகனவியலுக்கே போவோம்.
இப்பொழுது நம் எடுத்துக் காட்டு அலசலை, வெறும் அமுக்கு விசையைக் கொண்டே பார்ப்போம் [மற்ற திணுசு, கத்தரி விசைகளைக் கொண்டும் பார்க்கலாம். இருப்பினும் அமுக்கு விசையைப் புரிந்து கொள்வது எளிது, எனவே இந்த எடுத்துக் காட்டைத் தருகிறேன்.]
ஒரு பொதியின் மேல் 10 அலகுள்ள ஒரு விசை அமுக்குகிறது. அந்த விசைக்கு நேர் கீழுள்ள குறுக்குச் செகுத்தப் பரப்பு (cross sectional area) 5 சதுர அணுங்குழை (square inch). இப்பொழுது பொதியின் உள்ளே உணரப் பெறும் அமுக்குத் துறுத்தம் = 10/5 = 2 அலகு/சதுர அணுங்குழை என்றாகும். இதற்கு மாறாக அதே அமுக்கு விசையில் குறுக்குச் செகுத்தம் இரண்டு மடங்கானால், அமுக்குத் துறுத்தம் = 10/10 = 1 அலகு/சதுர அணுங்குழை என்று ஆகும் அல்லவா? இதே போல குறுக்குச் செகுத்தம் குறையக் குறைய அமுக்குத் துறுத்தம் கூடும். [நினைவு வைத்துக் கொள்ளுங்கள் ஒரு பொதியின் மேல் தாக்குவது அமுக்கு விசை (compressive force); ஆனால் பொதியின் உள்ளே உணரப் படுவது அமுக்குத் துறுத்தம (compressive stress). பொதியின் குறுக்குச் செகுத்தத்தைப் பொறுத்தே அந்தத் துறுத்தம் அமையும்.]
இப்பொழுது மீண்டும் அவ்வுதல் என்ற சொல்லுக்கு வருவோம். இதற்குக் குறுகுதல், சுருங்குதல், தட்டையாதல் என்ற பொருட்பாடுகள் உண்டென்று முன்னரே அவல்/அவம் பற்றி இந்தத் தொடரிற் பேசிய போது பார்த்தோம். அந்த முறையில் அவ்விய நெஞ்சம் என்று குறள் 169 ல் சொல்லுவதைக் குறுகிய நெஞ்சம் என்றே பொருள் கொள்ள முடியும். பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் அப்படியே தான் பொருள் கொள்ளுவார்.
[அவ்வுதலின் ஆதிப் பொருள் வெறும் ஒலிக் குறிப்புத் தான். 'அந்த வடையை அவ்வெனக் கடித்தான்'. அவ்வெனப் பல்லாற் கடிக்கும் குறிப்பு, மீந்திருக்கும் வடை குறைந்திருப்பதையும் உணர்த்துகிறது அல்லவா? நாளாவட்டத்தில் ஒலிக்குறிப்பின் பொருட்பாடுகள் பலவாகின. அவற்றுள் முகன்மையானது குறைதல், சுருங்குதல், கெடுதல், பள்ளமாதல் போன்றவையாகும். அவ்வுதல் என்பதன் இன்னொரு வெளிப்பாடான அம்முதல் என்ற வினைச் சொல் அம்மி என்ற ஓர் அடுப்படிக் கருவியை நமக்குக் காட்டும். அம்முதலின் நீட்சி அமுக்குதல் = to press. இதே போலத் தொம்முதல்> தும்முதல்> துமுக்குதல்> துவுக்குதல்> துவைத்தல் என்பதும் அடித்து அமுக்குதலைக் குறிக்கும். தேங்காய்த் துவையல் (=துகையல்)என்று சொல்லுகிறோமே, அதுவும் ஒரு அவையல் தான். அவல் என்பதும் அவையலில் உருவான பண்டம் தான். முதலிற் பருமனாய் இருந்தது இப்பொழுது தட்டையாய், சின்னதாய், ஆயிற்று.]
அவ்வுதலுக்கும், குறுகுதலுக்கும் உள்ள தொடர்பு நுணுகி அறிய வேண்டியதாகும். A -இன் ஆக்கம் B -இன் கண்ணுக்கெதிரே நடந்து கொண்டு இருக்கிறது. அதைப் பார்க்கப் பார்க்க, மற்றவர்கள் சொல்லச் சொல்ல, பட்டு அறிய அறிய, B யின் மன அழுத்தம் கூடிக் கொண்டே போகிறது. வெளியே தன்னைச் சுற்றிக் காணும் ஒரே விசையானது, தன் நெஞ்சம் குறுகக் குறுக அதிக மன அழுத்தமாய் உணரப் படும்.
இனி, நெஞ்சம் குறுகுதல் என்றால் என்ன? ஒருவர் பரந்த மனம் உள்ளவர், இந்னொருவர் குறுகிய நெஞ்சர் என்னும் போது என்ன பொருள் கொள்ளுகிறோம்?
உலகில் நடக்கின்ற போக்குகள், தான் சரியென்று நினைக்கின்ற போக்கிற்கு மாறி நடந்தாலும், அவற்றைப் பெரும்போக்காக எண்ணி முனிவு கொள்ளாமல் "தனக்கு உரிமை இருப்பது போல் மற்றோருக்கும் உரிமை உண்டு" என்று ஏற்றுக் கொண்டு, பொறுத்துப் போகிறவரை பரந்த மனம் உள்ளவர் என்கிறோம் இல்லையா? "தான் சொன்னபடி தான் நடக்க வேண்டும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்" என்று அடம்பிடிக்கிறவரை, "தான் சொல்லும் படியே மற்றவர் நடக்க வேண்டும்" என்று எண்ணுபவரை, குறுகிய நெஞ்சர் என்று சொல்லுகிறோம் இல்லையா? இப்படி உருவும் இல்லாத, பருவும் இல்லாத மனக் கொண்மையைத் தான் நெஞ்சப் பரப்பு என்று பேச்சு வழக்கில் சொல்லுகிறோம். இந்த நெஞ்சப் பரப்பு விரிய விரிய அழுக்காறு என்பது குறையும்; இந்த நெஞ்சப் பரப்புக் குறையக் குறைய அழுக்காறு கூடும். அழுக்காறு குறையக் குறைய அழுக்காறாமை (அழுக்காற்றின் இளகு எல்லை) இன்னும் கொஞ்சம் தள்ளிய அழுக்கில் ஏற்படும்.
இந்தப் புரிதலோடு, 167 ஆம் குறளைப் பார்த்தால்,
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டிவிடும்
என்பதன் பொருள் புரியும். "மனம் குறுகி அழுக்காறு உள்ளவனை, தன் மூத்தாளுக்குக் காட்டிவிட்டு திருமகள் விலகி விடுவாள்" என்ற பொருள் வரும். திருமகள் / மூத்தாள் என்ற தொன்மத்தை வள்ளுவர் ஏன் சொல்லுகிறார் என்ற கருத்தை நான் விளக்குவதைக் காட்டிலும் பெருஞ்சித்திரனார் விளக்குவதே சரியாய் அமையும். எனவே அதைத் தவிர்க்கிறேன். அவர் நூலில் பார்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்து 139 ஆம் குறளில்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
குறுகிய நெஞ்சத்தவனின் ஆக்கமும் செவ்வையானின் கேடும் பலராலும் நினைக்கப் படும். இங்கே விளக்கம் சொல்ல வேண்டியது அவ்வியத்தின் எதிர்ச்சொல்லான செவ்வியம் என்பது பற்றியே.
சென்னை அடையாற்றில் இருந்து கோட்டூர் புரத்திற்கு ஒரு செவ்வையான வழி இருக்கிறது. [இங்கே செவ்வையான வழி என்பது நேர்கோட்டு வழி என்று பொருளல்ல; proper / perfect road; எல்லோரும் பயன்படுத்தும், சரியாக இழைக்கப் பட்ட, தடைகள் ஏதுமில்லா, .......... வழி என்று பொருள்.] அதை விடுத்து குறுக்கு வழியில் தூய பாட்ரிக் பள்ளி, கோட்டூர் வழியாகத் தான் ஒரு பெரிய வண்டியில் போவேன் என்றால் மாட்டிக் கொள்ள வேண்டியது தான். செவ்வை>செவ்வியம் என்பதற்கு எதிர்ப்பொருள் கொண்டது அவ்வியம். இதனால் தான் அடியார்க்கு நல்லார் அடைக்கலக் காதையின் 122 ஆம் அடிக்கான உரையில் செவ்வியள் என்பவள் "ஔவியம் இல்லாதவள்" என்று சொல்லுகிறார். வள்ளுவரும் அவ்வியத்தானின் ஆக்கத்தையும் செவ்வியனின் கேட்டையும் ஒருங்கு சேர வைத்து அவற்றைக் குமுகாயம் என்றைக்கும் மறக்காது நினைக்கும் என்று சொல்கிறார்.
24. அடுத்த சொல் ஒளவை. இதற்குத் தவப்பெண், தாய், ஆரியாங்கனை, ஒளவையார் என்னும் புலவர் என்று பொருள் சொல்லுவார்கள். அம்மை என்னும் சொல் மகர, வகரப் போலியில் அவ்வை என்று சொல்லப் படும். செம்மை>செவ்வை என்று ஆவது போல இதைப் புரிந்து கொள்ளலாம். கோடா, தோடா, கன்னடம், குடகு, தெலுங்கு, கடபா, கோண்டி, சங்கதம், பாகதம், மராத்தி, கொங்கணி போன்ற மொழிகளிலும், இன்னும் பல்வேறு வடகிழக்கு மொழிகளிலும் அவ்வ என்ற சொல் அம்மையைக் குறிக்கும். தமிழிலும் பல காட்டுக்கள் இலக்கியங்களில் இருக்கின்றன. நண்ணிலக் கடலை (mediteranian sea) ஒட்டிய நாடுகளின் தொன்மக் கதையான ஆதாம் ஏவாள் என்பதும் கூட ஆதன் / அவ்வை என்னும் தமிழ் ஆளன்/ அம்மையை நினைவு படுத்தும்.
தாயைக் குறித்த சொல் தவப் பெண்ணைக் குறித்தலும், பின்னால் நீட்சியில் பெருமானர் வீட்டுப் பெரும்பெண்களைக் (ஆரியாங்கனை = ஆரியாங்க அன்னை) குறித்ததும் இயற்கையே.
அவ்வைக்குத் தாய் என்ற பொருள் போக உயரம் குறைந்தவள் என்ற பொருளும் உண்டு. அவ்வுதல் என்ற வினையை மேலே பார்த்தோம் அல்லவா? அவ்வன் = குள்ளன். அவ்வை = குள்ளச்சி. பொதுவாக நம் நாட்டுப் புறங்களில் பெயர் தெரியாத ஒருவரை, அவர் உயரம், நிறம், தோற்றம், அல்லது தொழிலை வைத்தே அடையாளம் சொல்லுவார்கள். நெட்டையன், கூளைச்சி, கருப்பன், வெள்ளையன், முறுக்கன், மீசைக்காரன் இப்படித்தான் ஒருவருக்கொருவர் முன்றாமவரைச் சொல்லுவது உண்டு. சங்க காலப் புலவரான அவ்வையார் ஒருவேளை குள்ளமான தோற்றம் உடையவராய் இருந்திருக்கலாம்.
அவர் பாடல்களைப் படிக்கும் போது அவர் அகவை கூடியவர் என்று சொல்ல முடியாது இருக்கிறது. ஆனால் அவர் அரசர்களுக்கு, குறிப்பாக அதியமான் நெடுமான் அஞ்சிக்கும், அவன் மகனுக்கும் நெருக்கமானவராய் இருந்திருக்கிறார். அரசனுக்குச் சரிக்குச் சரியாக உண்பதும், கள் மாந்துவதும் கூட நடந்திருக்கிறது. தன் அறிவுக் கூர்மையாலும், தமிழ்த் திறத்தாலும் இவர் இந்நிலையை அடைந்திருக்கலாம். இருந்தாலும் அவர் இயற்பெயரை எங்கும் அறிந்தோம் இல்லை. இவ்வளவு திறமுள்ளவர் குள்ளமாய் இருந்தது ஓர் அடையாளமாய் இருந்திருக்கலாம். இதற்கு மேல் ஒன்றும் சொல்ல நம்மிடம் தரவுகள் இல்லை. வெறுமே பெண் என்பதற்கு அவ்வை என்று அழைப்பார்களா என்பது என் கேள்வி. அதியமானுடன் அவர் செய்த கேளிக்கைகளை மீண்டும் படியுங்கள். அவ்வை என்ற சொல் ஔவையானது பிற்காலத்தில் ஏற்பட்ட போலி என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் சங்க காலத்தில் ஔ என்னும் எழுத்து பெரிதும் பயிலப் படவில்லை. கவ்வை = அலர், பவ்வம் = கடல், கவ்வுளி = பல்லி, நவ்வி = பெண்மான் போன்ற சொற்கள் எல்லாம் இது போலக் கௌவை, பௌவம், கௌளி, நௌவி என்று போலியாகி இருக்கின்றன [பெற்றோரைப் பற்றி - சொல்லாய்வறிஞர் ப.அருளி, தமிழ்ப் பல்கலைக்கழகம்]
25. கடைசிச் சொல் ஒளவைநோன்பு. இதுவும் அவ்வை நோன்பு என்பதன் போலியே. இது பெண்கள் மட்டுமே செயகின்ற ஒரு நோன்பு. இதைச் செவ்வாய் நோன்பு என்றும சில பகுதிகளிற் சொல்லுவார்கள். தமிழ்நாட்டு வட்டாரங்களில் விதம் விதமாய் இந்த நோன்பு் கொண்டாடப் படும். இந்த நோன்பிற்குள் எந்த ஆண்களையும் கலந்து கொள்ள விடமாட்டார்கள். இந்த நோன்பின் விவரிப்பைப் பெண்களாக வெளியே சொன்னால் தான் உண்டு. எனக்கும் ஆழமாய் இந்த நோன்பின் விவரம் தெரியாது; மிக மேலோட்டமான செய்திகளே தெரியும். எஅம்முடைய போகூழ், இது போன்ற செய்திகள் ஆவணப் படாமலே மறைந்து கொண்டிருக்கின்றன. என்ன செய்வது, வருத்தப்படத்தான் முடியும்.
அன்புடன்,
இராம.கி.
5 comments:
தெலுங்கில் ஒள / அவ் என்றால் ஆம்
:)
ஒளவியம்/அவ்வியம் என்பது பொறாமையை குறிப்பதை விட அதற்கு முந்தைய மன நிலையான குறுகிய மனத்தை/குறுகலைக் குறித்தது என்று விளங்கிக் கொண்டிருக்கிறேன். சரி தானா ஐயா?
ஒரு பெண்ணின் கூந்தலைத் தீண்டும் உரிமை உடையவனுக்கு மட்டுமே உண்டு என்றும் ஒளவையாரின் கூந்தலைத் தீண்டும் உரிமை அதியமான் நெடுமான் அஞ்சிக்கு இருந்ததாக ஒரு பாடல் சொல்கிறது என்றும் எங்கோ படித்திருக்கிறேன். ஒளவையாரைப் பற்றிய என் உளத்தோற்றத்திற்கு எதிராக இந்தக் கருத்து இருந்ததால் கொஞ்சம் துணுக்குற்றேன். நீங்கள் அவர் அகவையில் கூடியவராகச் சொல்ல இயலாதிருக்கிறது என்றும் அவர் அதியமானுக்கு நெருங்கியர் என்றும் சொன்னது அந்தக் கருத்தை நினைவூட்டியது. நீங்கள் அந்தக் கருத்தைக் கேள்விபட்டிருக்கிறீர்களா? அந்தக் கருத்தைப் பற்றிய தங்கள் கருத்து என்ன?
புரிந்து கொள்ள மிக பொறுமையாக படிக்க வேண்டி இருந்தது. ஆழமான பார்வை.
கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?
படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?
எண்ணாமல் எவரொருவரும் எப்பொருளையும், எச்செயலையும் ஆராயவோ, விளங்கிக்கொள்ளவோ, விளக்கவோ முடியாது. எண்ணங்களே அனைத்து அறிவியல்களுக்கும், இலக்கியங்களுக்கும், குழப்பங்களுக்கும், போரட்டங்களுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படையாகும். ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்பதில் பல கற்று, பல பட்டங்களையும், விருதுகளையும் அள்ளிச்சென்ற மாமேதைகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், மெய்ஞானிகளுக்கும் தெளிவில்லை. தெளிவில்லாத விஷயங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.
ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை? இக்கேள்வியில் மனித அறிவின் சூட்சுமம் பொதிந்துள்ளது. படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும் என்ற மூடநம்பிக்கையை இன்றைய கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும், சிந்திக்க முடியும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது.
கல்வித்தகுதி என்பதின் அடிுப்படையில் சமுதாயத்தில் ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து முன்னுரிமைகளும் சமூகக் குற்றமாகும். படித்தாவனால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியும் என்பதற்கு உள்ள ஆதாரங்கள் என்ன?
படிக்கத்தெரிந்தவர்களும், படிப்பறிவற்றவர்களும், கற்றவர்களும் ஒன்றைப்பற்றி எண்ணுவதென்ன என்பதை http://www.tamil.host.sk/ , http://tamil.isgreat.org போன்ற இணையத்தளங்கள் ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகள் எவையென்பதை அழகான தமிழில் சித்தரிக்கின்றன.
எனவே, ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை அல்லது உன்னைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்ற தலைப்பில் தாங்களறிந்த அறிஞர்களைக் கொண்டு ஒரு விவாத்தைத் தொடங்கினால் பல பயனுள்ள, மக்கள் மனதைக் கவரும் சூடான, சுவையான பல தகவல்களும், கருத்துக்களும் மக்களிடமிருந்து வெளியாகும். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?
- திருச்சிராப்பள்ளி ஷாம்ளின் ஜோஸஃபின்
அழுங்குதல் என்ற வார்த்தையை புதிதாக தெரிந்து கொண்டேன்.நன்றி.
அழுங்கி அழுங்கி சாவான் என்ற பிரயோகம் ஒருவன் தான் செய்த தவறை தானே நினைத்து நினைத்து தனக்குள்ளே அழுந்துவதைதான் குறிக்கிறதா?.
Post a Comment