Wednesday, May 14, 2008

ஔ - 3

10. அடுத்த சொல் ஒளடணம். "மிளகாய் சுள்ளென்று எரிக்கிறது என்று சொல்லுகிறோம், இல்லையா?" மிளகாய் போர்த்துகீசியரால் நம்மூருக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னால், நம்மூர் உணவுகளில் பெரிதும் மிளகே பயன்பட்டது. மிளகும் நம் நாவில் எரிக்கிற சுவையைக் காட்டும். எரிதல் என்பது சுவையோடு சூட்டையும் உணர்த்தும் சொல். "நாக்கு எரிகிறது, நாக்கு சுடுகிறது" என்ற இரண்டையும் இடம் மாற்றிச் சொல்வது பலமொழிகளில் உண்டு.

உருத்தல் என்னும் வினை எரிதல், சுடுதல் ஆகிய பொருள்களைக் கொடுக்கும். உருத்தலில் கிளைத்த உருமம் எனும் பெயர்ச்சொல் சூடு மிகுந்த பகலுச்சியைக் குறிக்கும். (தென்பாண்டி நாட்டில் புழக்கத்தில் இருக்கும் சொல்.) இதே வழியில் உருநம் என்பது சூடு. உருநத்தைப் பேச்சுவழக்கில் உண்ணம் என்று சொல்லுகிறோம். (கருநன் கண்ணன் என்று ஆனது போல). பெருமானர் பலுக்கலில் உண்ணம் வடபுலத் திரிவு கூடி உஷ்ணமாய் மாறும். இனி மீநிலைத் திரிவில் உஷ்ணம்>உஷணம்>ஔஷணம் என்றாகி, மிளகு, மிளகுச் சாறு போன்றவற்றைக் குறிக்கும். மீண்டும் அதைக் கடன் வாங்கி வழக்கம் போல் ஷகரத்தை டகரகமாக்கி, ஔடணம் என்று தமிழில் சொல்லுவார்கள். இப்படியெல்லாம் மாற்றாமல், தமிழ்வினையில் இருந்து உருவான உருநம்/ உண்ணம் என்பதையே பழகலாம்.

11. அடுத்த சொல் ஔடும்பரம்/ஔதும்பரம் என்பது; இது செம்பு/தாம்பரம்>தாமிரம் என்ற மாழையால் ஆன பொருளைக் குறிக்கும்.

தும்பரம் என்பது தாம்பரத்தின் இன்னொரு வெளிப்பாடு. தும்>தும்பு>துப்பு என்பது சிவப்பு, பவளம் ஆகியவற்றைக் குறிக்கும். துப்பு>துப்பம் என்பது செந்நிற அரத்தத்தைக் குறிக்கும். தும்பு>தோம்பு>(தாம்பு)>தாம்பரம் என்பதும் சிவப்பு, செம்பு ஆகியவற்றைக் குறிக்கும். சென்னைக்கு அருகில் உள்ள தாம்பரம் என்ற ஊர் சிவந்த நிலம். சிவந்த சேற்று நிறத்தில் நீரை அடித்துக் கொண்டு வரும் தென்பொருநையாறு தாம்பரப் பெருநை>தாம்பர பருணி>தாம்ப்ரபர்ணி என்று வடமொழிப் பலுக்கில் சொல்லப் படும். இது தமிழ்ச்சொல் வடபலுக்கில் மாறிய கதை. தாம்பரம்>தாம்பரை>தாமரை = சிவந்த மலர். ஒளிரும் தும்பரம் [ஒளிவிடும் செம்பு] ஒள்+தும்பரம் ஆகி, ஒட்டும்பரம்>ஔடும்பரம்>ஔதும்பரம் என்று ஆவது வடமொழித் திரிவின் இயல்பு.

12. அடுத்தது ஔத்திரி. மந்திரங்களை ஓதுபவர் ஓதி. இறைப் பாக்களை இறைத் திருமேனியின் முன்னே அழுத்தந் திருத்தமாய்ப் பாடி வழுத்துபவர் ஓதுவார். வடசொல் திரிவில் ஓதி என்பது ஹோத்ரி என்றாகும். மீண்டும் தமிழில் ஓத்திரி>ஔத்திரி என்று அது திரும்பி வழங்கும்.

(ஓதியின் தமிழ்மை பற்றி முன்பொரு முறை நான் எழுதியதை மறுத்து, ஒரு சில வடமொழி அன்பர்களும், அவர்களுக்கு அணைவாய் ஒரு கல்வெட்டு அறிஞரும், "ஆகா, எப்படி நீ சொல்லப் போயிற்று? உனக்கு வடமொழி தெரியுமா? வேதத்திலேயே சொல்லியிருக்கிறது. அதை மறுக்கிறாயோ?" என்றெல்லாம் மறுவினை செய்ததை முந்தைய இடுகைகளில் பார்த்துக் கொள்ளுங்கள். வடமொழியின் விதப்பான தன்மையை ஒருநாளும் நான் மறுத்தவன் இல்லை; அந்த மொழியும், ஆக்கங்களும் படிக்க வேண்டியவையே. ஆனால், இத்தனை நாள் மூடிமறைத்த தமிழின் முன்மையை ஊடே எடுத்துக் காட்டி, இழந்ததை மீட்கக் கூடாதா, என்ன?)

13. ஔதகம் = நீரோடு தொடர்புடையது. உலகில் பேரளவில் காலங் காலமாய் குடிநீர் கிடைத்தது மூன்று வகையில் என்பார்கள். அவை ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் என்றாகும். ஆற்றில் நீளுகின்ற காரணத்தால் அந்தப் பொருள் நீல்>நீர்>நீத்தம் என்று ஆயிற்று. அதே போல ஊறும் நீர் ஊற்று>ஊத்தம்>ஊத்தம்>ஓதம் என்று ஆயிற்று. [மிகுந்த மழையால், தரையில் ஊற்றுக்கள் காணப்படின், தரைமுழுதும் ஓதம் பரவிவிட்டது என்று நாட்டுப்புறங்களில் சொல்லுவார்கள்.] மழைநீருக்கும் வெவ்வேறு பெயர்கள் உண்டு. அதைப் போல நீரின் பல்வேறு சொற்களுக்கும் சொற்பிறப்புக் காணலாம். ஊத்தம் > ஓதம் போன்ற சொற்கள் வடபுலத் திரிவில் உதகம் என்று ஆகும். மேலை மொழிகளில் இருக்கும் water போன்ற சொற்களும் இந்த ஊத்தம்/ஓதத்தோடு தொடர்பு கொண்டவையே.

14. அடுத்தது ஒளதசியம். - பால், பழம், அமிழ்து; கீரம் என்று பல்வேறு சொற்களை அடையாளம் காடுவார்கள். அடிப்படைப் பொருள் பால் என்பதே.

உதசம் என்பது மாட்டின் முலைமடி. முன்னால் முல்லிப் பருத்து வந்து, முனையாய் நிற்பது முலை. மு என்னும் ஓரெழுத்து முன்னிற்பதைக் குறிப்பது போலவே, உ/ஊ என்னும் சுட்டும் தமிழில் முன்னிலையைக் குறிக்கும். அது, இது என்பது போல உது என்பது முன்னிலையில் இருக்கும் பொருளைக் குறிக்கும். (அண்மைக்கும் சேய்மைக்கும் நடுவில் இருப்பது முன்னிலை.) தமிழ்நாட்டுத் தமிழரிடம் முன்னிலைக் குறிப்பு பெரிதும் குறைந்து போனாலும், ஈழத்தாரிடம் இன்னும் மறையாது இருக்கிறது. இது போக, உதுத்தல் என்னும் வினை பருத்தற் செயலைக் குறிக்கும்.(உதுத்தலில் இன்னொரு நீட்சியான ஊதலும் பருத்த நிலையைக் குறிக்கும். "பாரு, ஊதிப் பருத்திருக்கிறான்.") உதசம் என்ற சொல் மாட்டின் பருத்த முலையைக் குறிப்பது வடமொழிப் பயன்பாடு. உதசத்தின் வழி கிடைக்கும் மாட்டின் முலைப்பால் உதஸ்யம் என்று வடமொழியில் ஆகும். அதைத் திரித்துக் கடன் வாங்கி ஔதசியம் என்று தமிழில் எழுதுகிறார்கள். பேசாமல் பால் என்றே சொல்லி விடலாம்.

15. அடுத்தது இரண்டு சொற்கள் ஒன்று, ஒளதா - அம்பாரி; யானை மேற்பீடம், இரண்டாவது. ஒளதாரியம் = உதாரம், மிகுகொடை, உதாரகுணம், பெருந்தன்மை.

இந்த இரு சொற்களுமே உயர்ச்சிப் பொருளில் எழுந்த இருபிறப்பிகள். உ/ஊ/ஒ/ஓ என்ற ஓரெழுத்தொரு மொழிகள் தமிழில் உயர்ச்சியைக் குறிக்கும். இவற்றில் பிறந்த சொற்களை எந்த அகரமுதலியின் வழியாயும் அறியலாம். அப்படி எழுந்த சொல் தான் உத்தம் = உயர்ந்தது. உத்தத்தின் நீட்சியாய் நாவலந்தீவின் நில அமைப்பைக் கருதி, அது வடக்கையும் குறிக்கும், உத்தம்>உதம்>ஓதம் என்ற வளர்ச்சியில் அம்பாரி, உயர்ந்த பீடம் போன்றவற்றைக் குறிக்கும். அதே போல உயர்ந்த குணம் உத்தாரம் எனப்படும். பின்னால் உத்தாரம்>உதாரம்>ஔதாரம்>ஔதார்யம் என்ற வளர்ச்சியில் மிகுந்த கொடை, பெருந்தன்மை போன்றவற்றைக் குறிக்கும்.

16. அடுத்தது ஒளபசாரிகம். உவம் என்ற முன்னொட்டைப் பற்றி மேலே சொல்லியிருக்கிறேன். ஒன்றின் உள்ளாக, இன்னொன்று அமையும் நிலை உவ நிலை. வகர, பகரப் போலியில் அது உப என்று வடமொழியில் ஆகும். சார்ந்தது எல்லாம் 'ஒன்றைப்போல் இன்னொன்று' என்னும் தன்மையை உணர்த்தும். தமிழ் ஈற்றில் சாரி, சார்வு, சார்பு, சாரம் என்று அமைவது போல் சாரிகம் என்று முடிவது வடமொழி முறை. அடிப்படைவேர் அப்படியே தமிழாகத் தான் (சார்) இருக்கிறது, ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது உப சாரிகம். மீண்டும் தமிழ் வேர்/தண்டு; வடபுலத்துப் புறனை.

உவசாரிகம்>உபசாரிகம்>ஔபசாரிகம்

17. ஔபத்யம் = புணர்ச்சி. பாலியல், கலவி, புணர்ச்சி பற்றிய பல்வேறு சொற்களைத் தமிழில் நேரடியாக ஓர் அவையில் சொல்ல முடியாத வழக்கத்திற்கு நாம் ஆளாகியிருக்கிறோம்; வளர்க்கப் பட்டிருக்கிறோம்; கூச்சப் படுகிறோம். இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் இந்தச் சொற்களை இளம் அகவையிற் தெரிந்து கொண்டு விடுகிறோம். ஓ----வில் தொடங்கும் புணர்ச்சி வினைச்சொல் நம்மில் பலருக்கும் தெரிந்ததே. அந்தச் சொல்லின் இடக்கர் அடக்கலாய் ஒவ்வுதல் = பொருந்துதல், புணருதல் என்ற சொல்லைக் காட்ட முடியும். இதன் பெயர்ச்சொல் ஒவ்வதம்>ஓவதம். இதில் வகரம் பகரமாகி, பின் ஔபத்தியம் என்று ஆகித் தமிழ்மூலம் மறைந்து கிடக்கிறது. ஓ----ல் வினையின் வழியாக ஓ----தம் என்ற சொல் நேரடியாகப் புணர்ச்சியைக் குறிக்கும்.

[பாலியற் சொற்கள் இல்லாது எந்த மொழியும் கிடையாது. இதைச் சொல்ல வடமொழிக்குப் போக வேண்டிய தேவையில்லை. இருந்தாலும் பலரும் செய்கிறார்கள். நேரடியாகத் தமிழில் சொல்லக் கூச்சப் பட்டு, சுற்றி வளைத்து வடமொழியைப் பயன்படுத்துவது பலநேரம் நடக்கிறது.

காட்டாக, "ஆதி வராகன்" என்ற என் பேராசிரியர் சொல்லுவார்" "என்ன பெயர்றா இது? முதற் பன்றின்னு ஒரு பெயரைப் போய் எனக்குப் பெரியவுங்க வச்சுட்டாங்க." நாங்கள் சிரிப்போம். இருந்தாலும் உள்ளே இருக்கும் சூழ்க்குமம் பார்த்தீர்களோ? யாராவது முதற்பன்றி என்று தமிழில் பெயர் வைத்துக் கொள்ளுவார்களோ? அதை வடமொழி இருபிறப்பியில் மாற்றி "ஆதிவராகன்" என்று சொல்லும் போது பலரும் ஏற்கிறார்களே, அது ஏன்? பொதுவாய் இது ஓர் உளவியற் சிக்கல்.]

அன்புடன்,
இராம.கி.

4 comments:

Anonymous said...

ஐயா, திசைகள் எப்போது தொடரும்? கடைசி இரண்டு பகுதிகளையும் மிகுந்த ஆவலுடன் பார்த்து கொண்டு இருக்கிரேன்.

FloraiPuyal said...

பதிவிற்கு தொடர்பில்லையெனினும் உங்களிடம் கேட்கத் தோன்றியதால் இம்மறுமொழி. சிந்து நாகரிக எழுத்துக்களை ஆய்ந்ததுண்டா? அல்லது ஆய்ந்து ஒரு கட்டுரை வெளியிடும் எண்ணமுண்டா? சிந்து எழுத்துக்களை ஆயும் பலரும் ( பார்ப்போளர் மற்றும் மகாதேவனார் உட்பட ) அவற்றை இன்றைய முழுமையுற்ற மொழிச்சொற்களாகவே பார்க்க முற்படுவதாகத் தோன்றுகிறது. குழந்தையின் மொழியறிவு வளர்ச்சியைப் போன்றே மனித மொழிகளின் வளர்ச்சியும் இருந்திருக்கும் என்பது என் கருத்து - அதாவது ஓரெழுத்தொருமொழிகளாக, ஓரசைச் சொற்களாக மெல்ல மெல்ல உருப்பெற்றிருக்கும் என நம்புகிறேன். மேலும் பண்டைய சீனச்சொற்கள் பலவும் நீங்கள் சுட்டும் தமிழ் வேர்ச்சொற்களை ஒத்திருப்பதையும் தமிழி எழுத்துக்கள் சில பழைய சீன எழுத்துக்களை ஒத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். தமிழகத்திலும் சிந்து எழுத்துக்கள் கிடைத்திருப்பது இச்சிந்து மொழி தமிழின் தொடக்க நிலையாக இருக்குமோ என ஐயுற வைக்கிறது.

வேர்ச்சொற்களை இனங்காட்டும் உங்கள் திறன் இவ்வாய்வுக்குப் பெரிதும் உதவும் என்று கருதுகிறேன். நேரமிருப்பின் இது பற்றி ஆய்ந்து சில கட்டுரைகள் வெளியிட வேண்டுமென்று கோருகிறேன்.

மேலும் உங்கள் கட்டுரைகளைத் தொகுத்து பொத்தகங்களாக வெளியிட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

//உண்ணம்//
'உண' என்றால் சிங்களத்தில் காய்ச்சல்

Anonymous said...

it is interesting and informative. it is a process of learning. your articles helps me to be in touch with the Tamil world.

salute sir.

Paranitharan