Tuesday, May 13, 2008

ஔ - 2

8. அடுத்த சொல் ஔஷதம்>ஔடதம். இதையும் பார்த்த மாத்திரத்தில் பலரும் வடசொல் என்றே நினைத்துக் கொள்ளுகிறார்கள். இதுவும் ஓர் இருபிறப்பியே.

முன்னே சொன்னது போல், தமிழில் உய்தல் என்பது உயிர் வாழ்தலைக் குறிக்கும். உய்த்தல்/உய்வித்தல் என்பது உயிர் ஊட்டுதலைக் குறிக்கும். அந்த வகையில் உய்த்தம் = உயிர் கொடுக்கும் மருந்து ஆகும். இனி உய்த்தம்>உயத்தம்>உஷத்தம்>உஷதம்>ஔஷதம் என்ற திரிவில் மருந்து என்பதை வடமொழியிற் குறிக்கும். நாம் மீண்டும் இதைக் கடன் வாங்கி, (விஷயத்தை விடயம் ஆக்கியது போல) ஔஷதத்தை ஔடதம் என்போம். [அண்மைக் காலமாய், வலைப்பதிவுகளில் பலரும் விடயத்தைத் தவிர்த்து, விதத்தல் என்னும் தமிழ்வினையில் உருவான விதயத்தைப் புழங்குவது போல,] ஔடதத்திற்கு மாறாக, மருந்திற்கு இன்னொரு சொல்லாய் உய்த்தம் என்ற (நல்ல தமிழ்ச்) சொல்லைப் பயிலலாம். [மருந்து என்பது மரத்தில் இருந்து விதப்பாய்ப் பெற்ற பொருளை முதலிற் குறித்து பின்னால் பொதுமைப் பொருளைக் குறித்தது.]

உண்மையில் ஒவ்வோர் இருபிறப்பிச் சொல்லுக்குள்ளும் ஆழ்ந்து பார்த்தால், அழகு தமிழ்ச் சொற்களை அடையாளம் கண்டு, மீட்க முடியும்.

9. அடுத்த சொல்லான ஔடவம் என்பது இசைநூலில் வரும் ஒளடவ ராகத்தைக் குறிக்கும். இதைப் பற்றிய விளக்கம் நீண்டது. இருந்தாலும் இசை நுணுக்கம் கருதிப் பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன்.

ஆர் ஓங்கலிலும் (=ஏறு வரிசையிலும்; ஓங்கல் = உயர்ச்சி, வரிசை. ஓங்கல்>ஓகல்>ஓகணம் என்பது வடமொழித் திரிவில் உருவான சொல்.), அவல் ஓங்கலிலும் (இறங்கு வரிசையிலும்) 5 சுரங்கள் மட்டுமே ஒலிக்கும் பண்ணை, தமிழர் இசையில் திறம் என்று அழைத்தனர். இந்தக் காலத்தில் அதை ஔடவ ராகம் என்று கர்நாடக இசையார் அழைக்கிறார்கள். காட்டாக 'முல்லைத் தீம்பாணி' என்று இளங்கோவடிகளாலும், 'சாதாரி' என்று அடியார்க்கு நல்லாராலும் அழைக்கப்பட்ட திறப்பண் இன்று மோகனம் (ச ரி2 க2 ப த2) என்று அழைக்கப் படுகிறது. இதே போல செந்துருத்தி என்று அன்று அழைக்கப் பட்ட ஐஞ்சுரப் பண் மத்யமாவதி ( ச ரி2 ம1 ப நி1) என்று இன்று அழைக்கப் படுகிறது.

தமிழிசையில் 12 அரைத் தானங்கள் உண்டு. [குரல், மென் துத்தம், வன் துத்தம், மென் கைக்கிளை, வன் கைக்கிளை, மெல் உழை, வல் உழை, இளி, மெல் விளரி, வல் விளரி, மென் தாரம், வன் தாரம்]. இதில் குரலையும் (ச), இளியையும் (ப) நிலையாய் வைத்துக் கொண்டு மற்ற 10 அரைச்சுரங்களில் இருந்து ஏதோ ஐந்து அரைச்சுரங்களை உகந்தெடுத்து வரிசையாய் அமைத்த பண்களைப் பெரும்பண்கள் என்று தமிழிசையில் குறிப்பார்கள். (இப்படி 7 சுரத் தானங்களை வைத்து அமைப்பதில் மொத்தம் 2^5 = 32 பெரும்பண்கள் ஏற்படும்.) இந்தப் பெரும்பண்ணை 'முற்றும் பூரித்த பண்' எனும் பொருளில் சம்பூர்ண ராகமாய்க் கர்நாடக இசையில் மொழிபெயர்ப்பர். [200/300 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஒவ்வொரு தமிழிசைக் கருத்தும், சொல்லும், சங்கதம் வழி பெயர்க்கப் பட்டு, மூலம் சீரழிய, 'இசை என்பதே தமிழர்க்கு இல்லையோ?' எனும்படி ஆக்கி, கண்ணிற்கு முன்னேயே, ஒரு கண்கட்டு வித்தை ஆடப் பட்டது. ஓர் ஆபிரகாம் பண்டிதரும் விபுலானந்த அடிகளும் அதை மாற்றித் தமிழிசையைத் தேட வைத்தார்கள்.]

இனி, ஏழு சுரங்களுக்கு மாறாக ஆறு சுரங்களே ஏறு வரிசையிலும், இறங்கு வரிசையிலும் அமைப்பது பண்ணியல் எனப் பட்டது. வடமொழியில் இதைச் சாடவம் என்றார்கள். இது சாட் + அவம் = ஏழின் குறை = அதாவது ஆறு. சாட் (= சாத்) என்பது போன்ற இந்தையிரோப்பியச் சொற்கள் எல்லாம் ஐந்து -இரண்டு என்று சேர்த்துச் சொல்லுமாப் போல செய்துவம் என்பதன் திரிவாகவே அமைந்திருக்கின்றன.

செய் என்பது கையைக் குறிக்கும் சொல். தெலுங்கில் அது இன்னமும் உண்டு. நாம் வினையைச் செய் என்று வைத்துக் கொண்டு கையைப் பெயர்ச்சொல்லாய் வைத்திருக்கிறோம். செய்/கை என்பது ஐந்தைக் குறிக்கும். ஐந்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல்லாய்க் கையை மட்டுமே நகர்ப்புறத் தமிழர்கள் அறிந்து கொள்ளுகிறோம். இன்னும் அதிகமாய்ச் சில சொற்கள் உண்டு.

காட்டாக, கைத்த(ல)ம் என்ற தமிழ்ச்சொல் வடமொழியில் ஹஸ்தம் என்று போய் அதை மீண்டும் திரும்பக் கடன் வாங்கி அத்தம் என்று சொல்லுவார் உண்டு. அதற்கும் ஐந்து என்ற பொருட்பாடு உண்டு. இனிச் சந்தையில், வாழையிலை வாங்கும் போது "அடுக்கு 5 ரூவாய், 10 ரூவாய்" என்று எங்கள் பக்கம் சொல்லுவார்கள். இப்படி ஓர் அடுக்கு என்று சொல்லும் போது, அதில் ஐந்து இலை இருக்கிறது என்று பொருள். இதே போல, காரைக்குடி, கும்பகோணம் பக்கம் ஓர் அடுக்குச் சட்டி என்று சொன்னால், ஒன்றிற்குள் ஒன்றாய் ஐந்து சட்டிகளைக் கொண்ட அடுக்கைக் குறிக்கும். இன்னும் சில தமிழ்நாட்டுப் பகுதிகளில் பூட்டு என்ற சொல் ஐந்து உருப்படிகளைக் குறிக்கும். பூட்டியது என்பது கையை இணைப்பது; பொருள் நீட்சியில் பூட்டு எனும் பெயர்ச்சொல் கையைக்/ஐந்தைக் குறிக்கும். இதே போல, மாட்டுச் சந்தையில் ஆளப்படும் "வீச்சு" என்ற சொல்லும் ஐந்தைக் குறிக்கும். பச்சை, கடுவாய், வீச்சு போன்ற சொற்கள் வெவ்வேறு உருவாய்த் தாள்களைக் குறிக்கும்.

கை, அத்தம், அடுக்கு, பூட்டு, வீச்சு என்பன எண்ணுதி (quantity) வகையில் குறிக்க, ஒரு பிடி என்ற சொல் முகத்தல் அளவையில் ஒரு கைப்பிடி அளவை முதலிற் குறித்து, பின்னால் பொருள் நீட்சியில் ஐந்து என்ற எண்ணையும் குறிக்கும். (ஒரு பிடி = ஒரு கை; எனவே ஐந்து). இந்தப் பிடியின் இன்னொரு தோற்றமான பிண்டி என்ற சொல் பரத நாட்டியத்தில் ஒரு கையாற் செய்யப்படும் பாவனைகளைக் குறிக்கும். பிண்டிக் கைப்பாவனைகளில் (பிண்டி ஹஸ்தங்கள்) கட்டைவிரல் ஒரு தொகுதியாகவும், மற்ற விரல்கள் இன்னொரு தொகுதியாகவும் வேலை செய்யும். பிண்டியில் விரல்கள் ஒன்றை ஒன்று வித விதமாய்த் தொடும், அல்லது பற்றும், அல்லது பிடிக்கும். இதே போல் இரண்டு கைகள் சேர்ந்து செய்யும் பாவனைகளைப் பிணையல் என்று சிலம்பு சொல்லும்.]

ஐந்தின் பல்வேறு சொற்களைப் பார்த்த நாம், இனித் துவம் என்ற சொல்லுக்கு வருவோம். ஈர்தல்/இரள்தல் என்ற வினை வெட்டுதல் என்ற பொருளைக் கொடுக்கும். இந்த வினையில் பிறந்த பெயர்ச்சொல் ஈர்/இரண்டு என்பதாகும். அதே போல வெட்டுதற் பொருளில் இருக்கும் இன்னொரு தமிழ் வினை துமித்தல். இதில் பிறந்த பெயர்ச்சொல் துமம் என்றழைக்கப் படும். துமம் என்பது மகர, வகரப் போலியில் துவம் என்றாகி, வடபுலத்திற் போய் இரண்டைக் குறித்து நிற்கும். (துமம் / tomy என்ற சொல் மேலை மொழிகளில் வெட்டுதல், ஈர்தல், இரண்டு ஆகிய பொருட்பாடுகளைக் குறிக்கும். a- tom = துமிக்க முடியாதது. அணு என்ற சொல் நெருங்கியது, சுருங்கியது, செறிவானது என்ற பொருளைத் தமிழில் குறிக்க, அல் துமம் = a tom என்பது துமிக்க முடியாதது என்று கிரேக்க மொழியில் குறிக்கும். துமித்தலில் விளைந்த சொற்களைக் கூறினால் இங்கு பெருகும். துமம், துவம், two போன்றவைக்குப் பின் இருக்கும் தமிழ் மூலம் நாம் ஆழ்ந்து உணர வேண்டிய ஒன்று.)

செய்யும் துவமும் சேர்ந்து செய்துவம்>செவ்துவ்>செவ்த்>சாத் என்று வடபுலத்தில் ஏழை உணர்த்தி நிலைகொள்ளும். இதே சொல் செவ்த்>செப்த்>sept என்று மற்ற மேலை மொழிகளிலும் நிலை கொள்ளும். எண்களின் சொற்பிறப்பை இன்னொரு முறையில் விரிவாகப் பார்ப்போம்.

இனி, குறையைக் குறிக்கும் அவம் என்ற சொல் பற்றி மேலே ஔ = நிலம் என்னும் பொருட்பாட்டைக் குறிக்கும் போது பார்த்தோம். சாட் அவம் = சாடவம் = ஏழின் குறை = எனவே, ஆறு.

அடுத்தது ஔடவம். மோனியர் வில்லியம்சு அகரமுதலி ஒடவம்>ஔடவம் என்றே சொற்பிறப்பைக் காட்டினாலும் ஒடவம் எப்படி வந்ததென்று குறிக்கவில்லை. இது ஐஞ்சுரப் பண்ணைக் குறிக்கும் சொல். ஔடவத்திற்கும் ஐந்திற்கும் அப்படி என்ன தொடர்பு?

தமிழில் தொள்ளாயிரம் என்பது ஆயிரத்தில் குறைந்தது. அதாவது அதற்கு முந்திய அலகில் ஒன்று (அதாவது நூறு என்னும் அலகில் ஒன்று) குறைந்தது. இதே போல தொள் நூறு என்பது நூற்றிற்கு முந்திய அலகில் ஒன்று (அதாவது, பத்து என்னும் அலகில் ஒன்று) குறைந்தது. இங்கே கவனிக்க வேண்டிய வினை தொள்ளுதல் = குறைதல். அதே போல ஒல்லுதல்/ஒல்குதல் என்பதும் குறைதலைக் குறிக்கும். [ஒல்லியாகிப் போனான் - பருமனிற் குறைந்து போனான்.] ஒல்கிய பத்து ஒன்பது. பொதுவாய் தொள்ளியது/ஒல்கியது என்னும் போது முந்திய அலகில் ஒன்று குறைந்தது என்றே பொருள். [ஆயிரத்திற்கு முந்திய அலகு நூறு. நூற்றிற்கு முந்திய அலகு பத்து. பத்திற்கு முந்திய அலகு ஒன்று.] தொள்ளாயிரம், தொண்ணூறு, ஒன்பது போன்றவற்றின் வெளிப்பாட்டை இப்படியே புரிந்து கொள்ள வேண்டும்.

எண்ணுப் பெயர் வரிசையைச் சொல்லும் போது ஒரு பெரிய அலகில் இருந்து இரண்டு குறு அலகுகளைக் குறைக்கும் பழக்கம் தமிழில் இல்லை; ஆனால் தெலுங்கிலும் அதற்கு வடக்கிலும் உண்டு. காட்டாகத் தெலுங்கில், தொம்மிதி = பத்தில் ஒன்று குறைச்சல் = ஒன்பது. எனிமிதி = பத்தில் இரண்டு குறைச்சல் = எட்டு. இப்படி இரண்டு குறைத்தல் என்ற கருத்து வடமொழிப் பயன்பாட்டில் ஒல் துவம் > ஒள் துவம் >*ஒட்டுவம்>ஒடுவம்>ஒடவம் என்றாகும். [ஒல்லுதல் >ஒள்ளுதல் >ஒடுங்குதல் என்ற விரிவில் குறைதல் பொருள் தொடருவதை நோக்கலாம்.] ஒடவம் என்ற சொல் மேலும் திரிந்து ஔடவம் ஆவது வடமொழியில் உள்ள இயல்பான திரிவே. மொத்தத்தில் இரண்டின் குறைச்சல் என்ற பொருளோடு 'உள்ளே ஒரு தமிழ்வேர்; வெளியே வடமொழித் தோற்றம்' நம்மை மருட்டுகிறது. ஏழில் இருந்து இரண்டின் குறைச்சலாய், ஔடவம் பிறந்த கதை இது தான்.

கடைசியாக உள்ளது நந்நான்கு சுரங்களாய்ச் சேர்த்து அமைக்கும் சதுர்த்தம். இதைத் தமிழில் திறத்திறம் என்று சொல்லுவார்கள். சதுர்த்தம் என்ற எண்ணுப்பெயர் எழுந்த வகையை வேறொரு பதிவில் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

5 comments:

Anonymous said...

அய்யா,

தாங்கள் ஆங்கில சொற்களையும் வடமொழிச்சொற்களையும் தமிழ்ப்-படுத்தும் அழகே அழகு. ஆனால் என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால் இதை தமிழ் என்று சொல்லாமல் ஸ்வாஹிலி என்று அழைத்தால் நன்றாக இருக்கும். அல்லது வேறு ஏதாவது பெயர் சொல்லி அழையுங்கள் உங்களுக்கு புண்ணியமாகப்போகும்.

nayanan said...

//
ஒரு பிடி என்ற சொல் முகத்தல் அளவையில் ஒரு கைப்பிடி அளவை முதலிற் குறித்து, பின்னால் பொருள் நீட்சியில் ஐந்து என்ற எண்ணையும் குறிக்கும். (ஒரு பிடி = ஒரு கை; எனவே ஐந்து).
//

அன்பின் ஐயா,
வணக்கம்.

மிக அருமையாக இருக்கிறது. சுரம், திசைகள், ஒள என்ற இந்த தொடர்கள்
மிக உயர்ந்த கட்டுரைகள். மயக்கம் தரும் ஆழ்ந்த கட்டுரைகள்.

எங்கள் பக்கத்தில் (திருச்சி காவிரிக்கு யாமக்கரை ) வெள்ளரி வயலில்
சில்லறை வியாபாரிகளுக்கு விற்கையில் வெள்ளரியின் முகத்தல் அளவை "கை" எனப்படும்.

சாதாரணமாகச் சாப்பிடக்கூடிய
ஐந்து பிஞ்சுகள் ஒரு கைக்கு அடக்கமாக இருக்கும்.
அது ஒரு கை எனப்படும்.

முதிர்ந்த பிஞ்சுகள், குருட்டுப் பிஞ்சுகள் குத்து மதிப்பாகக் கொடுக்கப் படும்.

சென்னையில் கிடைக்கும் வெள்ளரிக்காய்களுக்கு இது பொருந்தவே பொருந்தாது;
அவை புடலங்காய் மாதிரி இருக்கின்றன :-)

அன்புடன்
நாக.இளங்கோவன்

R. said...

சிறப்பான பதிவு. பொருள் நிறைந்தது. உண்மையைத் தரும் பதிவு நல் உள்ளத்தோடு அனைவரும் ஏற்கத் தக்கது.
உங்கள் சீரிய பணி வளர்க. வாழ்க.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஹூஸ்டன்
மே 13, 2008

குமரன் (Kumaran) said...

தொள்ளாயிரம், தொண்ணூறு என்றாற்போல் தொன்பது என்றும் ஒரு எண் இருந்ததாகப் படித்த நினைவு. தொன்பது என்ற சொல்லும் ஒன்பதைத் தான் குறித்ததா? வடுகர் தொம்மிதி என்றாற் போல் தமிழர் தொன்பது என்றோமா?

Vijayakumar Subburaj said...

> தமிழில் தொள்ளாயிரம் என்பது ஆயிரத்தில்
> குறைந்தது. அதாவது அதற்கு முந்திய அலகில்
> ஒன்று (அதாவது நூறு என்னும் அலகில்
> ஒன்று) குறைந்தது. இதே போல தொள் நூறு
> என்பது நூற்றிற்கு முந்திய அலகில் ஒன்று
> (அதாவது, பத்து என்னும் அலகில் ஒன்று)
> குறைந்தது.


9 / 90 / 900 போன்றவைகளுக்கு ஏன் 10 / 100 / 1000 போன்ற எண்களைச் சார்ந்து பெயரிடப்பட்டுள்ளது? அந்தந்த எண்களுக்கான பெயர்களைத் தொலைத்து விட்டோம் என்று நினைக்கிறேன். :)