Monday, July 09, 2007

எற்றி நகரல்

டிங்டாங் டிங்டாங் டிங்டாங் கென்றே
திண்'னுன்னு கிணுக்குது கோயில்மணி;
எங்கள் பேரனோ எற்றி நகர்கிறான்,
எங்கள் வளவினில் வலமாக!

தாவி விழுகிறான்; மீண்டு எழுகிறான்;
தந்தனத் தந்தனச் ச(ல)ங்கையொலி;
கூவி அழைக்கிறேன் "இனிய, வா!"வென;
குடுகுடு என்றே காலசைப்பு;

கூறுவோர்களை குமிண்சி ரிப்பினால்
கொள்ளை கொள்கிறான்; என்ன,இது?
ஏறும் மடியினில், மீறி இரங்கலும்
எத்தனை முறைதான் செய்திடுவான்?

வாவிக் கொள்கிறேன்; விரல்க டிக்கிறான்;
வலிக்க வில்லையே? என்ன,இது?
நா,வி தழ்களும் நனையும் அண்ணமும்,
நக்கி உணருதல் எதனாலே?

ஊறும் எச்சிலில் ஒத்தை விரலையே
உறிஞ்சிச் சப்புவ தெதனாலே?
தேறும் பொதியெலாம் தேடி மெல்வதும்,
தெளிந்து அறிந்திட முயலுவதோ?

ஐம்பு லன்களால் உலகம் அறிவதில்,
ஆகும் ஊறு.ஒளி, சுவைக்காலம்;
செய்ம்பு லன்களில் ஓசை, நாற்றமோ,
சேரக் கூர்ந்திடும் வருங்காலம்!

அன்புடன்,
இராம.கி.

Friday, July 06, 2007

தாலி - 7

மஞ்சள் பற்றிப் பல செய்திகளை முன்னே கூறிய நான், ஒரு முகன்மையான மஞ்சட் காய்/பழம் பற்றிச் சொல்ல மறந்துபோனேன். வேறொன்றுமில்லை, மாங்காய்/மாம்பழம் பற்றித் தான் சொல்ல மறந்தேன். மாங்காய் மரத்தை மா என்ற ஓரெழுத்து ஒருமொழியால் இப்பொழுது குறிப்பிட்டாலும் அதற்கு அப்பெயர் எப்படி அமைந்தது என்பது ஆய்விற்குரிய கேள்வி. [அது இடுகுறிப் பெயராய் அமையமுடியாது. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே", "மொழிப்பெயர்க் காரணம் விழிப்பத் தோன்றா" என்ற தொல்காப்பிய நூற்பாக்கள் வெறும் இடுகுறிப் பெயர்க் காரணத்தை மறுக்கின்றன. பொதுவாக ஓரெழுத்தொரு மொழிகள் எல்லாமே (மனிதனோ, விலங்குகளாக எழுப்பிய) இயற்கை ஒலியாக இல்லையெனில், அவை ஈரெழுத்து அல்லது மூவெழுத்துச் சொற்களின் மரூஉ ஆகத் தான் ஆய்வில் தென்பட்டிருக்கின்றன.]

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

என்பது திருக்குறள் காமத்துப் பாலில் வரும் பாட்டு. அது என்ன "மாலும் என் நெஞ்சு"? என்றால், வேறு ஒன்றுமில்லை, மாலுதலுக்கு மயங்குதல் என்றே பொருள் உண்டு. ["அணங்கு என்று நினைப்பேனா? அழகிய மயில் என்று நினைப்பேனா? தங்கக்குழை போட்ட பெண் என்று சொல்வேனா? என் நெஞ்சு மயங்குகிறது" என்று சொல்லுகிறார் வள்ளுவர்.] சூரியன் மறைகிறான், அது வரை ஒளியோடு இருந்த பகல் இப்பொழுது மயங்குகிறது, வெய்யில் மஞ்சளாய் மாறி கொஞ்சம் கொஞ்சமாய் இருள் கூடுகிறது. (மயங்கலே மங்கலாகி, மஞ்சளாயிற்று என்று முன்னே சொன்னேன் அல்லவா?) ஒளியில் தொடங்கி இருளில் முடியும் நேரத்திற்கு, மாலுகின்ற நேரத்திற்கு, மாலை என்றே தமிழன் பெயரிட்டான்.

மால் என்று ஓர்ந்து பார்ந்தால் மழுங்குதல், மயக்கம், மங்கல், மஞ்சள், மையிருட்டு (= கருப்பு) என்ற பொருட்பாடுகள் அடுத்தடுத்து வந்து சேரும். மால்>மாலம் = மயக்கும் வித்தை, நடிப்பு; மால்>மான்>மான்றல் = மயங்குதல்; மாலை = பல பூக்கள் மயங்கிக் கலந்து கிடக்கும் தொடை. மாலின் நீட்சியாய் மாள் என்பதும், மாழ் என்பதும் அவற்றின் வளர்ச்சிச் சொற்களும் பொன்னைக் குறித்தும் வரும். [மல்>மால்>மாள்>மாழை = பொன், உலோகம்; மல்>மால்>மாள்>மாழ்>மாழை>மாசை = பொன், உழுந்து நிறை அளவுள்ள பொன் நாணயம்; மல்>மால்>மாள்>மாடு = பொன், சீதனம், செல்வம்; மல்>மால்>மாள்>மாடு>மாடை = பொன், உலோகம், அரை வராகன், ஒரு பழைய நாணயம் - மகத அரசில் புழக்கத்தில் இருந்தது] இது தவிர, மால்>மாழ்குதல் = மயங்குதல்; மாழாத்தல் = மயங்குதல்; மாழை = மருட்சி, மயக்கம் என்ற பொருட்பாடுகளும் மாழ் என்பதை ஒட்டி வரும். மள்>மாள்>மாளம் என்பது கத்தூரி மஞ்சளைக் குறிக்கும்.

இன்னும் நீட்சியாய், மாழை, மாந்தி, மாகந்தம் ஆகியவை மாமரத்தைக் குறிக்கும் சொற்களாகும். மாழை, மாந்தி, மாகந்தம், மா, மாங்காய், மாம்பழம் ஆகிய தொடர்புடைய வெவ்வேறு சொற்களை ஏரணமுறைப்படி பொருத்திப் பார்க்க வேண்டுமானால் *மால் என்ற அடிச்சொல் இருந்திருக்க வேண்டும். (*மால் என்பதற்கு மாறாய் *மா(ம்) என்ற சொல்லையும் கூட இங்கு ஓர்ந்து பார்க்கலாம். தமிழில் மகம் என்றாலும் ஒளி பொருந்திய, மஞ்சளான என்ற பொருட்பாடுகள் உண்டு. மகக் குழை என்றாலே, மாவிலை என்ற பொருளும் வந்து சேரும்; தவிர, மகரம் = மங்கிய சிவப்பு நிறம், மகவன் = இந்திரன், சிவன், மகவின் கோள் = வியாழன், மக உலகம் = மேல் ஏழு உலகினுள் ஒன்று என்று ஒளிப்பொருள் கிடைக்கும் சொற்களும் இது தொடர்பாய் உண்டு. இனி, மகன்>மான் என்று ஆவது போல, மகசி>மாசி என்று ஆவது போல, மகம்>*மாம் என்றும் ஆகலாம். *மாம் என்ற சொல்முடிவில் வரும் மூக்கொலியைத் தவிர்த்து மா என்றும் பலுக்கலாம்.)

*மால்>மாள்>மாழ்>மாழை
*மால் + ந் +தி = மாந்தி
*மால் + கு > மாகு>மாகந்தம்
*மால் > மா
*மால் +ந் +காய் = மாங்காய்
*மால் +ந் +பழம் = மாம்பழம்

"அதெப்படி *மால் என்ற சொல் இந்த மரத்திற்கு இருந்திருக்க முடியும்?" என்று சொற்பிறப்பியல் வழி கேட்டால், இதே போன்ற ஏரணம் இன்னொரு மரப்பெயரிலும் இருப்பதைத் தான் இணை காட்ட வேண்டியிருக்கிறது.

*தெல்+ந்+கு = தெங்கு
*தெல்+ந்+ஐ = தென்னை
*தெங்கின் காய் = தெங்கங்காய்
*தென்னையின் காய்>தென்னையங்காய்>தென்னங்காய்
*தெல்+ந்+காய் = தெங்காய்>தேங்காய்
*தெல்+கு = தெற்கு, வடமரம் (=ஆலமரம்) மிகுந்து இருந்த திசை வடதிசை ஆனது போல், தெல் மரம் மிகுந்து இருந்த திசை தெற்கு என்று ஆனது. தமிழில் கிழக்கும் மேற்கும் மலையை ஒட்டி ஏற்பட்டது போல வடக்கும் தெற்கும் மரங்கள் மிகுந்திருந்த காரணத்தை ஒட்டியே அமைந்தன.
*தெல்+ந்+திசை = தென்திசை
*தெல்>தெள்>தெளிவு = கள்

"சரி, மாலிற்கும் மஞ்சளுக்கும் புதலியல், உயிர்வேதியல் ஆகியவற்றின்படி என்னதான் தொடர்பு?" என்பது அடுத்த கேள்வி. [இந்த புதலியல் / உயிர்வேதியல் எல்லாம் பழந்தமிழனுக்குத் தெரியாது தான். ஆனால் பெயரிடுவதற்கு வாய்ப்பாய்ப் பட்டறிவும் கூர்ந்த அவதானிப்பும் அவனுக்கு இருந்திருக்க வேண்டும்.]

தமிழில் பல்வேறு காய்/கனிகள் தரும் மரங்களைக் குறிக்கிறோம். இவற்றிற்குப் பெயரிடும் போது, தமிழ் மாந்தர்கள், மரத்தில் இருந்து காய்/கனிகள் பெயரிட்டார்களா? காய்/கனிகளில் இருந்து மரத்திற்குப் பெயரிட்டார்களா என்பது ஆய்விற்கு உரிய கருத்து. இருக்கும் தமிழ்ச் சொற்களைப் பார்த்தால், பெரும்பாலும் (முற்றிலும் அல்ல.) காய்/கனியில் இருந்தே மரத்திற்குப் பெயரிட்டிருக்க வாய்ப்பு உண்டு என்று தோன்றுகிறது. (இன்னுஞ் சொன்னால் பழைய மாந்தனுக்கு காய்க்கும் கனிக்குமே வேறு பாடு தெரிய வாய்ப்பில்லாது இருந்திருக்கலாம்). அவன் காய்/கனியைப் பார்த்தால், அவனைக் கவர்வது அதன் உள் நிறமாகத் தான் இருக்க முடியும். மாவின் தளிர் இளமஞ்சள்; ஓரோவழி சிவப்பு ஊடுறுவிய மஞ்சள்; மாவின் காய் வெளிர் மஞ்சள்; அதன் கனியோ ஆழ்ந்த மஞ்சள். மற்ற பழங்களின் உள் நிறம் ஓரோவழி மஞ்சளாய் இருந்தாலும், மா ஒன்று தான் எல்லா வகை(variety)யிலும் உட்பகுதி மஞ்சளாய் இருக்கிறது. வேறொரு நிறத்தில் மாங்கனி/காய் இன்னும் காணப் படவில்லை.

பழுப்பு அல்லது சாம்பல் கருமை நிறமுடைய, Mangifera indica என்று புதலியலில் (botony) கூறப்படும், மாமரமானது திசம்பர் மாதத்தில் பூக்கிறது. பூக்கும் போது, ஒரு பூங்கதிரில் நிரவலாய் (average) ஆயிரம் மஞ்சள் பூக்கள் இருக்குமாம். இந்தப் பூங்கதிரில் ஆண்பூக்களும் பெண்பூக்களும் கலந்து இருந்தாலும் அவை ஒன்றிற்கு ஒன்று என்ற கணக்கில் இருப்பதில்லை. பெண்பூக்கள் மிகக் குறைவாயும் ஆண்பூக்கள் அதைப்போல ஆறு மடங்கிற்கு மேலுமாய் இருக்குமாம். இது தவிர பூங்கதிரில் இருந்து பூக்கள் உதிர்வதும் நடக்கும். முடிவில் ஒவ்வொரு கட்டத்திலும் பூக்கள் உதிர்ந்து ஒரு கிளைக்கு ஒரு கனி கூட நிரவலாய் அமைவதில்லை.

மஞ்சள் என்ற கருத்து மாமரத்தின் பல உறுப்புக்களில் தொடர்ந்தே வருகிறது. பூக்களில் இருந்து நீராவி மூலம் வடித்தெடுத்தால், 0.04% அளவில் பழுப்பு மஞ்சள் நிறத் தைலம் ஒன்றை எடுக்கலாமாம். எனவே, மஞ்சள் இல்லாமல் மாம்பூ இல்லை. துளிர் இலைகளில் அசுகார்பிக் காடி என்னும் சி உயிரூட்டு (ascorbic acid - Vitamin C) அதிகமாக உள்ளது. அசுகார்பிக் காடியும் மஞ்சள் நிறமானதே!. முதிர்ந்த இலைகளில் மாங்கிவெரின் (mangiferin) என்ற குளுகொசைடு (glucoside) உள்ளது. [முதிர்ந்த இலைகளைப் பொதுவாகக் கால்நடைகளுக்குத் தொடர்ந்து கொடுப்பதில்லை. ஏனென்றால் அவை கால்நடைகளின் குடலில் நச்சுப் பொருள்களாக ஆகி விடுகின்றன. ஓரோவழி முதிர்ந்த இலைகளை உண்ட பசுக்களின் சிறுநீர் மஞ்சளாகவே போகுமாம்.] இலைகளில் இருந்து 0.1% அளவில் வடித்தெடுக்கும் எண்ணெயும் கருஞ்சிவப்பு நிறத்திலேயே இருக்கும்.

மாங்காய் ஊறுகாயில் சிட்ரிக் காடி அதிகம் உள்ளது. (இதுவும் வெளிர் மஞ்சளே.) வட இந்தியாவில் புளிக்குப் பகரியாக ஊறுகாய் மாங்காய் சில இடங்களில் பயன்பெறுவது உண்டு. அறுவடையின் போது காய்களில் இருக்கும் காடித் தன்மை, பழுத்த பின்பு பெரிதும் குறைந்து விடுகிறது. அதே போல அசுகார்பிக் காடியும் குறைந்து விடுகிறது. பழத்தில் இருக்கும் மொத்தச் சருக்கரையும் பழுத்தபின் கூடுகிறது. (அதிலும் இனிப்புச் சருக்கரை - sucrose - அதிகரித்தால் சுவை மிகவும் அதிகமாகவே கிடைக்கும்.)

மாம்பழத் தோலியில் இருக்கும் குருத்திய வண்ணங்களும் (carotenoid pigments) பழுக்கும் போது அதிகரிக்கும். மாங்காயில் சி உயிரூட்டும் (vitamin C), அது பழுக்கும் போது குருத்தியமும் (carotene) நிறைந்திருக்கின்றன. நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகளில், மாம்பழமும் குருக் கிழங்கும் (carrot) குருத்திய (carotene) வண்ணங்களைத் தேக்கி வைத்திருப்பதால், மிகுந்த அழகுத் தோற்றம் காட்டுகின்றன. இந்தக் குருத்தியங்கள் பல வேறுபாடுகளுடன் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர்ந்த நரங்கை (orange) நிறம் வரை தோற்றம் காட்டுகின்றன. [பீட்டாக் குருத்தியம் - beta carotene - 30 நுல்லியன் கீழ்ப் பங்கு (நு.கீ.ப. parts per million) இருந்தாலே மஞ்சள் நிறம் ஏற்பட்டுவிடும்; கனிந்த மாம்பழத்தில் இது உண்டு. ஒரு சில வகைகளில், பீட்டாக் குருத்தியம் 30 ppmக்கும் மேலே இருப்பதனால், நரங்கை நிறம் சற்றுத் தூக்கியே தெரியும். தவிரக் கனிந்த பழத்தில், மேலும் நிறம் கொடுக்கும் சாந்தோவில் (xanthophyll) என்ற வண்ணமும் இருப்பது உண்டு.]

பீட்டாக் குருத்தியம் என்பது ஒரு மதிப்புமிக்க, அஃகன எதிர்ப்பிப் (anti-oxidant) பொருளாகும். அதோடு இந்த பீட்டாக் குருத்தியம், கண்பாதுகாப்பிற்கும், திசுக்களை வளர்ப்பதற்கும் உதவியான ஏ உயிரூட்டு (vitamin A) உருவாக்க பயன்படும். பீட்டாக் குருத்தியங்களில் இரண்டுவிதம் உண்டு. ஒருவிதம் இசைக் குருத்தியம் (cis-carotene) என்றும், மற்றது துரன் குருத்தியம் (trans-carotene) என்றும் கூறப்படும். இசை வகை என்பது மாம்பழத்திலும், துரன்வகை என்பது குருக்கிழங்கிலும் அதிகம் உண்டு. தவிரக் குருத்தியமானது, மாம்பழத்தில் சிறுசிறு எண்ணெய்ப் பொட்டுக்களாயும் (oil specks), குருக்கிழங்கில் சிறுசிறு படிமத் துகள்களாயும் (small crystals) இருப்பதால், அவை உடலில் சேர்மானம் ஆவது கூட மாறுபடும். பொதுவாய், சாப்பிடும் போது, குருக்கிழங்கிற் கிடைக்கும் பீட்டாக் குருத்தியத்தைக் காட்டிலும், மாம்பழத்தில் கிடைப்பது எளிதில் நம் உடம்பில் உட்செரிக்குமாம்.

மாம்பழ மஞ்சளின் கதை இதோடு முடியவில்லை. (பட்டுச் சேலை நிறங்களில் மாம்பழ மஞ்சள் என்றே ஒரு வண்ணத்தைக் காஞ்சிபுரத்தில் அடையாளம் காட்டுவார்கள்.) மாம்பழத்தின் கனிவு கூடிவரக் கூடிவர, மாம்பழத் தோலில் கருப்புத் திட்டுக்களும் கூடிவரும். கருமை கூடியிருந்தாலே மிகுந்து கனிந்துவிட்டது என்று பொருள் (மீண்டும் மாலை என்ற சொல்லை இங்கு எண்ணிப் பாருங்கள், மஞ்சள் கூடிச் சிறிது சிறிதாக இரவு கனிய, கருப்பு கூடும். மஞ்சள் நிறப் பட்டுச் சேலைக்கு கருப்பு நிற விளிம்பும் அழகு கூட்டித் தான் காட்டும்.)

கொஞ்சம் கூட ஐயப்பாடே கிடையாது, *மால்/*மாம் என்ற சொற்கள் மஞ்சள் நிறம் காரணமாகவே இந்த மரத்திற்குப் பெயராகி இருக்கின்றன. மாமை என்பது மஞ்சள்நிறம் அல்லது வெளிர்நிறம் (pale) கூடிய கருப்பைக் குறிக்கப் பயன்பட்ட சொல். அவன் சிகப்பா, கருப்பா என்றால் மாநிறம் என்று சொல்லுகிறோமே? அதன் பொருள் ஒளி கூடிய, களையான, கொஞ்சம் வெளிரிய முகம் என்று பொருள். பெண்ணாயிருந்தால் மஞ்சள் பூசி ஒளி கூட்டிக் கொள்கிறவள் என்று பொருள்.

மாமை என்ற சொல் வடபுலப் பலுக்கலில் ஆமையாகும். ஆம் என்பது மாமின் இந்திப் பெயர்; மற்ற வடபால் மொழிகளிலும் அதே பெயர்தான், அல்லது அதை ஒட்டிய பெயர். சங்கதத்தில் ரகரம் உள்நுழைத்து ஆம்ர என்று வரும். [ஆமை என்ற உயிரி, அதன் ஓடு போன்றவற்றை முன்குறித்த ஆழ்வார் பாடலில் நான் ஏன் ஏற்காது போனேன் என்று புரிந்திருபீர்கள்.]

பெரியாழ்வார் மாமை என்று சொல்லாமல் ஏன் ஆமை என்று தாலிக்கு முன்னால் சொன்னார் என்றால் பாட்டைப் பாருங்கள், மாமை என்று போட்டால், யாப்பு அந்த இடத்தில் சற்று இடிக்கும். ஆமை என்று சொன்னால் பாந்தமாய்ப் பொருந்திக் கொள்ளும். தவிர அவர் பட்டர்பிரான்; அவர் பேச்சு வழக்கில் அந்தக் காலத்திலும் வடசொற் கலந்து தமிழ் இயற்றுவது இயற்கை தான்.

அக்குவடம் உடுத்(து) ஆமைத்தாலி பூண்ட அனந்த சயனன்
தக்கமா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ!

"சங்குமணி மாலையும், மங்கலத் தாலியும் பூண்ட அறிதுயிலான், மணிவண்ணன், வாசுதேவன், தளர்நடை போட மாட்டானோ?" என்று சொல்லுகிறார் ஆழ்வார். வளர்ந்த ஆண், அதுவும் மனைவி அருகிருக்கத் தாலி போட்ட ஆண், தமிழர் மரபில் இருந்திருக்க வேண்டும்.!!

"தாலி ஒரு பெண்ணடிமைச் சின்னம்" என்பது ஆய்வில்லாத அவக்கரப் பேச்சு.

அன்புடன்,
இராம.கி.

(பி.கு. மாமரம் பற்றிய பல கட்டுரைச் செய்திகளை பி.எஸ்.மணி, என்.கமலா நாகராஜன் எழுதிய, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட 1994 ல் வெளியிட்ட "வளம் தரும் மரங்கள் - 5" என்ற பொத்தகத்தில் அறிந்து கொள்ளலாம். வளம் தரும் மரங்கள் என்ற ஐந்து பொத்தகத் தொகுதியுமே வாங்கிப் பேணவேண்டிய தொகுதி.)

Thursday, July 05, 2007

தாலி - 6

சென்ற இடுகையில், 6 மாதத்தில் இருந்து 8 மாதம் ஆகிய குழந்தை, தன் மழலைக்கு நடுவில், வாய்நீர் சிந்தி, ஐம்படைத்தாலியை நனைத்த காட்சியைக் கண்டோம். நம்மூர்த் தாய்மார்களின் அடுத்த எதிர்பார்ப்பு, "8 மாதப் பிள்ளை 8 நடை போடாதோ?" என்பதே. "தன் மகன் கண்ணனும் தளர்நடை நடக்க வேண்டும்" என்று தாய் யசோதை ஏங்குவதாக நாலாயிரப் பனுவலின் முதற் பத்தில் எட்டாம் பதிகத்தின் முதற்பாடலில் பெரியாழ்வார் கூறுகிறார். (பெரிய திருமொழி முழுதுமே அரிய சுவை கொண்டது; மாற்றுக் கருத்து கொண்டார் கூடப் பட்டர்பிரான் தமிழுக்கு இறங்கி வந்துதான் ஆகவேண்டும். :-))

செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல
நக்கசெந் துவர்வாய்த் திண்ணை மீதே நளிர்வெண்பல் முளையிலக
அக்குவடம் உடுத்(து) ஆமைத்தாலி பூண்ட அனந்த சயனன்
தக்கமா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ!

உண்மையான யசோதைக்கும், யசோதையைப் போல் பாவனை செய்கின்ற ஆழ்வாருக்கும் இடையே உள்ள ஒரு வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையான யசோதைக்கோ, "பின்னால் தன் மகன் என்னென்ன செய்வான், எப்படி ஆவான்" என்றெல்லாம் தெரியாது; ஆனால் கதைக்கு அப்புறம் வரும் ஆழ்வாருக்கோ எல்லாமே தெரியும்; தவிர "உலகத்துக்கே அருளும் பெருமாள், இங்கே தாரத்தில் இருந்து (தாரம் = உயர்ந்த நிலை. தாரப் பண் = இற்றைக்கால நிஷாதம்), அவலுக்கு (=கீழுக்கு, புவிக்கு) இறங்கி அவல்தாரமாய் (அவல் தாரம் > அவதாரம்), கண்ணனாய் வந்துள்ளார்" என்ற தொன்மத்தையும் தெரிந்தவர் பெரியாழ்வார். எனவே பெரியாழ்வார் பாடும் தளர்நடைப் பாட்டு, முன்னும் பின்னுமாய், வளர்ந்த நிலையும், குழந்தை நிலையுமாய்ப் பருவங்களையும், நிகழ்ச்சிகளையும், கலந்து கலந்தே தரும்.

இது போன்ற கலவைப் பாட்டுக்களை உரையாசிரியர்கள் கூட சற்று முன்பின்னாக மாறிப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. அப்படி உரை மாறிய பாட்டுத் தான் மேலே உள்ளது. மீண்டும் மீண்டும் மீள்வாசிப்பு செய்தால் ஒழியச் சரியான பொருள் நமக்குக் கிடைக்காது. (நான் சொல்லும் பொருளை, ஆழ்ந்த விண்ணவ நெறியில் தோய்ந்தவர்கள், "உனக்கென்ன தெரியும்" என்று தள்ளி ஒதுக்கலாம். பொதுவாகப் பெரியவாச்சான் பிள்ளைக்கு மாறி என்ன பொருள் சொன்னாலும் 'ஆழ்ந்து போன விண்ணவர்கள்' ஏற்க மாட்டார்கள்; வலுதியான - valid - சில காரணங்கள் பற்றியே நான் அவரிலிருந்து இங்கு மாறுபடுகிறேன்.)

மலங்கும் நேரமாகிய மாலை (தமிழர் வழக்கில் 18 மணியில் இருந்து 22 மணிவரை உள்ள நேரம் மாலை எனப்படும். 14 மணியில் இருந்து 18 மணி நேரம் என்பது எற்பாடு ஆகும்.) அப்பொழுது தான் தொடங்கி இருக்கிறது. செக்கச் சிவந்த வானம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கருத்துக் கொண்டு வருகிறது. கிடக்கை மட்டமான ஒரு மரத்து நுனிக்கொம்பு வழியே நிலவைப் பார்த்தால், அது சிறுபிறையாய் முளைத்துத் தோன்றுகிறது; அதே போன்ற காட்சியை ஆழ்வார் கண்ணனை வைத்து எடுத்துரைக்கிறார்.

"தாயைப் பார்த்து நகைக்கிறான் பிள்ளை; சிவந்த இதழ் திறந்து (செக்கர் வானத்திற்கு ஒப்பு), அதன் வாய் முரணைக்கு (நுனிக் கொம்புக்கு ஒப்பு) மேலே எழும் பல்வரிசை (சிறுபிறைக்கு ஒப்பு) முளைவிட்டு எழுந்து, ஒளி வீசுகிறது."

இதற்கு அப்புறம் "சங்குமணி மாலை (=அக்குவடம்) போட்ட கண்ணன் தளர் நடை போடமாட்டானோ?" என்று சொல்லிவிட்டுப் போகாமல், சட்டென்று பெருமாளின் பாற்கடல் தோற்றத்தை நினைவு கொள்ளுகிறார். முன்னால் சொன்னேனே, அதுபோல ஒரு பருவப் பிறழ்ச்சியில் ஆழ்வார் ஆழ்ந்து போகிறார். கண்ணனை எண்ணிப் பார்த்த கையோடு தொடர்ச்சியாய், "சங்குமணி மாலை போட்டு, ஆமைத் தாலிபூண்ட, முடிவற்ற அறிதுயில் கொள்ளும் தகை சிறந்த மணிவண்ணனை, வாசுதேவனை" நினைவு கூர்கிறார். இரண்டு காட்சிகளையும் பிணைத்து, "தாயார் அமர்ந்திருக்க அருகே கிடந்திருப்பவன் தானே கண்ணனாய் அவதரித்தான்" என்ற புரிதலில், பெருமாளையே தளர்நடை போட்டு வரும்படி பாட்டில் பெரியாழ்வார் கூப்பிட்டு விடுகிறார்.

இதைப் படித்த நமக்குக் கேள்வி சட்டென்று வருகிறது. நாலு பதிகத்தின் முன்னால் தானே (பெரிய திருமொழி 1.4.5)

எழிலார் திருமார்வுக்கு ஏற்கும் இவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுதுவ னாய்நின்றான் தாலேலோ!
தூமணி வண்ணனே தாலேலோ!!

என்று சொல்லி ஐம்படைத் தாலி போட்ட கண்ணனுக்கு, அதுவும் கொடைவள்ளல் குபேரன் (மேலே வரும் வயிச் சிரவணன்) தொழுது நிற்கத் தாலேலோ போட்டார்; இப்பொழுது எப்படி ஆழ்வார் வாக்கில் ஐம்படைத் தாலி திடீரென்று ஆமைத் தாலியாயிற்று?

"செக்கரிடை நுனிக்கொம்பில்...." என்ற பாட்டில் "அக்குவடம் உடுத்(து)ஐம்படையே பூண்ட அனந்த சயனன்" என்று சொன்னால் யாப்பு ஒன்றும் குறைபடப் போவதில்லையே? இருந்தாலும் ஆமைத்தாலி என்ற பயன்பாட்டை ஆழ்வார் ஏன் சொல்லுகிறார்? அது என்ன ஆமைத் தாலி? இங்கே ஏன் அது பேசப் படுகிறது? ஆமைத்தாலி என்பது ஐம்படைக்கு அப்புறம் ஆண்மகன் அணிகின்ற ஒரு தாலியா?

இந்தக் கேள்விச் சரங்களுக்கு இடையில், "தாலி பற்றிய பேச்சு வரும் பொழுதெல்லாம், இது காலம் காலமாக பின்பற்றப் படுவதாக சரடு விடுகிறார்கள். அதற்காகத்தான் இந்த பதிவு" என்ற மகாவின் முன்னிகையையும், "தேவையில்லாத தாலியும் உருப்படியான தகவல்களும்" என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கேள்வித் தொகுப்பையும் நினைவு கொள்வதைத் தவிர்க்க இயலாது. முற்போக்குச் சிந்தனையாரின் படி தாலி என்பது ஆண் பெண்ணுக்கு அணிவிக்கும் பெண்ணடிமைச் சின்னம் என்ற பரப்புரைக்கு மாறாய் இப்படி ஒரு கருத்து, அதுவும் ஆண்டாளின் தந்தையார் வெளியிடுவது நம்மைத் துணுக்குற வைக்கிறது.

"அய்யய்யோ? ஆண்மகன் தாலி போட்டிருந்தானா? அதுவும் தன் மனையாள் அருகிருக்க, இவன் தாலி போட்டிருந்தானா? அது என்ன முரண்? தாலியை எப்படி ஆண்மகனுக்கு அணிவிக்கிறார்கள்? என்னங்கடா இது கூத்து?"

ஆமை என்ற சொல்லைப் பற்றி ஒரு நீண்ட ஆய்வே செய்யாமல், "செக்கரிடை நுனிக்கொம்பில்...." என்ற பாடலின் மூன்றாவது வரிக்கருத்தைச் சட்டென்று பொருள் உணர முடியாது.

நான் சொல்லவரும் பொருள் உரையாசிரியர் கொடுத்த பொருளுக்கு மாறுபட்டது. இதைப் பலரும் ஏற்காது போகலாம். ஆனாலும் ஆழ்ந்து ஓர்ந்து பார்த்த பிறகு தான் சொல்லுகிறேன். மேலே கொடுத்துள்ள பெரிய திருமொழிக்கு உரை செய்யும் போது, உரையாசிரியருக்கும், பாடியவருக்கும் இடையே 600/700 ஆண்டுகள் ஆகிவிட்டன. பொதுவாய் உரையாசிரியர்கள் என்பவர்கள் ஆய்வாளர்கள் அல்ல. அவர்கள் காலத்தில், தங்களுக்குத் தெரிந்த செய்திகள், மரபுகள், பழக்க வழக்கங்களை ஒட்டி, அன்றிருந்த தொன்மங்களையும் கூடக் கொண்டுவந்து, உரை செய்திருக்கிறார்கள். அதனால், மூலத்திற்கும் உரைக்கும் இடையே கருத்துமுரண் ஏற்படலாம்; அது இயற்கை தான்.

காட்டாகத் திருக்குறளில் வரும் சமணக் கருத்தை பரிமேலகர் போன்ற விண்ணவ உரையாசிரியர் மாற்றிப் புரிந்து உரை செய்ய முடியும்; செய்திருக்கிறார். பரிமேலகர் காலத்தில் சமணம் பெரிதும் தமிழ்நாட்டில் வழக்கிழந்து போனது. மிகுந்த முயற்சியில்லாமல், சமணச் சொல்லாட்சிகளுக்கும், சொற்றொடர்களுக்கும் உரை சொல்லுவது கடினம். உரையாசிரியர் தம்மையும் அறியாமல் சிவநெறி, விண்ணவநெறி முறையில் உரை செய்ய முயலுவார். அதே போல ஆமைத் தாலி என்ற சொல்லின் பொருள் பெரியவாச்சான் பிள்ளையின் காலத்தில் பெரிதும் அறியப்படாமலே போயிருக்கலாம்.

எனவே, பெரியவாச்சான் பிள்ளை என்ற விண்ணவ நெறிக்காரர், ஆண் தாலி போட்டுக் கொள்ளும் பழக்கம் முற்றிலும் மாறிப் போன நிலையில், "இது ஏதோ இறைவன் பாற்கடலில் போட்டுக் கொண்ட நிலை" என்று உன்னிப் பார்த்து, ஆமை என்ற கடல்உயிரியோடு தொடர்புறுத்தி, ஆமையோட்டுத் தாலி என்ற தவறான புரிதலில் உரைசெய்யலாம். அது இன்றுவரை தொடர்ந்தும் வரலாம். இந்த உரைகளில் "ஆமையோடு" என்ற பொருட்பாடு "ஓடு" இல்லாமலே எப்படி வந்தது என்று எனக்குப் புரியவில்லை. தவிர ஆமையோட்டைப் பெருமாள் பாற்கடலில் அறிதுயிலின் போது ஏன் அணிய வேண்டும்? ஆமையின் சிறப்பு இங்கு என்ன? [கூர்ம அவதாரம் என்று சொல்வதெல்லாம் பொருந்தச் சொல்வதாகவே நான் கொள்ளுகிறேன். அதற்கான தரவுகள் பாடலில் இல்லை.]

பாட்டை ஆழ்ந்து படித்துப் பொருள் கொண்டால், ஆமை என்ற சொல்லிற்கு வேறு ஏதோ ஒரு பொருள் இருக்க வேண்டும் என்பது புலப்படும். அதைப் புரிந்து கொள்ளுமுன், மஞ்சள் நிறம் பற்றி நாம் இன்னொரு செய்தியைப் பார்க்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, July 03, 2007

தாலி - 5

தாலி என்ற சொல்லிற்குப் பலரும் "மணமகளுக்குத் திருமணத்தில் மணமகன் அணிவிக்கும் கலன்" என்றே விதப்பாகப் புரிந்து கொள்கிறார். ஆனால் அது மட்டுமே பொருட்பாடல்ல; வேறு சிலவும் இச்சொல்லிற்கு உண்டு. சரியாகச் சொன்னால், "வளமை (prosperity), பிறக்கம் (fertility)" ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், வெவ்வேறு பேர்கள், வெவ்வேறு ஆட்களுக்கு அணிவிக்கும் ஒரு கலனாகவே தாலி எனும் பொதுச்சொல்லைப் புரிந்துகொள்ள வேண்டும். தாலி எனும் பொதுச்சொல்லோடு வெவ்வேறு சொற்களை முன்சேர்த்து, 'மங்கலத் தாலி, ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலி), புலிப்பல் தாலி, புலிநகத் தாலி' என்றெலாம் பலவிதக் கூட்டுச்சொற்களை பழந்தமிழர் உண்டாக்கி இருக்கிறார்.

[இங்கே பேச்சுவழக்கில் பொதுமை/ விதுமைச் சொற்கள், ஓர் எழுகைச் சுற்றாக (helical) மாறிமாறி, எழும்விதம் பற்றிச் சொல்லவேண்டும். நெய்/எண்ணெய் பற்றிச் சொன்னபோது, முன்னே ஒருமுறை இதை விளக்கியிருக்கிறேன். விலங்குக்கொழுப்பின் வழியாக நெய்ப்பொருளை அறிந்திருந்த பழந்தமிழன், எள்ளைக் கடைந்தபோது வெளிப்பட்ட பிசிபிசுப்பு நீர்மமும், நெய்யைப் போலவே தோற்றமளிக்க, அதை எள்நெய்>எண்ணெய் என்று விதப்பாகச் சொல்ல முற்பட்டான். இவ்வழக்கில் நெய் என்பது முதலில் விதப்பாய் இருந்து, பின்னால் விலங்கு, நிலத்திணை ஆகிய இரண்டிலிருந்தும் பெறப்படும் பொருளுக்கு பொதுமைச் சொல்லாய் மாறிநிற்கும். அப்புறம் அந்தப் பொதுமையில் இருந்து, எள்நெய் என்ற சொல்லாட்சியில் இன்னொரு விதப்புச் சொல் உருவாகும்.

அடுத்த சுற்றில், எள்நெய்>எண்ணெய் என்னும் விதப்புச் சொல்லே இன்னொரு பொதுமைச் சொல்லாகி இன்னும் புதிய விதப்புச் சொற்களை உருவாக்கும். அதாவது, எள்ளில் இருந்து மட்டுமல்லாமல், கடலை, தேங்காய் போன்ற பொருட்களிலிருந்தும் எள்நெய்யைப் போன்றதொரு நீர்மத்தைப் பெறமுடியும் என்றவுடன் எண்ணெய் பொதுமையாகி கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் என்ற விதப்புச் சொற்கள் உருவாகி விடுகின்றன. இவ் வளர்ச்சியின் ஊற்றுமூலமான (origin) எள்நெய், நல்ல எண்ணெய் ஆகிவிடுகிறது.

இது போன்று, பேச்சு வழக்கில், ஓர் இயல்மொழியில் ஏற்படும் சொல்லாக்க முறைகளின் அடிப்படையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு கருத்தைக் குறிக்கும் ஓரகைச் (unique) சொற்கள் விதப்பாகத் தான் ஓர் இயல்மொழியில் முதலில் எழுகின்றன. பின்னால் இது போன்ற இன்னொரு விதப்பும் அதே கருத்தைச் சுட்டிக்காட்டும் போது, முன்னால் குறித்த விதப்புச் சொல் பேச்சு வழக்கில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பொதுமைச் சொல்லாகி விடுகிறது. அடுத்த சுற்றில், மேலும் ஒரு பெயரடையை அதற்கு முன்னால் கொணர்ந்து நிறுத்தி இன்னும் பல விதப்புச் சொற்கள் புடைத்து எழுகின்றன.

தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்; பின் செல்வம் படைத்தோரால் அம் மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான் தாலியின் அடையாளம் என்நாம் பொருள்கொள்ளக் கூடாது. மஞ்சள்தான் அதன் அடையாளம்.) அடுத்த வளர்ச்சியில் இன்னும் பல விதப்புப் பயன்பாடுகள் பெருகிய பின்னால், 'மணமகளுக்கு திருமணத்தில் மணமகன் அணிவிக்கும் கலனை' விதப்பாகக்' குறித்த 'தாலி' பொதுமைச் சொல்லாகி, நல்லெண்ணெய் போல், மங்கலத்தாலி எனும் விதப்புவழக்கை உருவாக்கியிருக்க வேண்டும்.

மற்ற விதப்புப் பயன்பாடுகளாய், 'ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலை), புலிப்பல் தாலி, புலிநகத் தாலி' போன்றவையும் புழக்கத்திற்கு வந்துள்ளன. அவற்றை முடிந்தவரையில் விளக்கமாய் இனிப் பார்ப்போம்.

முதலில் ஐம்படைத் தாலி. இது பெற்றோர் சிறுவருக்கு அணிவிக்கும் ஒருவகைத் தாலியைக் குறிக்கும். இந்தக் குறிப்பை இலக்கியங்கள் மூலமாகவும், 50, 60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நடைமுறையிலும் கூட நாம் அறியலாம். சங்கு, சக்கரம், வாள், வில், தண்டு (=கட்டை>கத்தை>கதை; இதைச் செண்டு என்று கூட இலக்கியங்கள் குறிக்கும். விழாக்களில் பூச்செண்டு கொடுப்பார்களே! அதன் வடிவத்தை ஓர்ந்து பாருங்கள்; கதை போல இருக்கும்), என ஐந்து விதமான படைக் கருவிகளின் சிறு போல்மங்களைச் செய்து அவற்றை ஒரு மஞ்சள் கயிற்றில் தொடுத்து ஐம்படைத் தாலி என்ற பெயரில் சிறுவருக்குப் பெற்றோர் அணிவிக்கும் பயன்பாடு புறநானூறு 77ம் பாட்டின் 7 ஆம் வரியிலும், அகநானூறு 54 ஆம் பாட்டின் 18 ஆம் வரியிலும், திணைமாலை நூற்றியைம்பதின் 66 ஆம் பாட்டில் 3வது வரியிலும், மணிமேகலையின் மூன்றாம் காதையில் 138 ஆம் வரியிலும், கலிங்கத்துப் பரணியின் 240 ஆம் பாட்டிலும் கூறப்பட்டிருக்கிறது.

புறநானூற்றின் 77ம் பாட்டு தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் செருவில் தேரூர்ந்து வந்துநின்ற காட்சியையும், பின்னர் பகைவரோடு பொருதி அவரைக் கொன்றவிடத்து அமைந்த தோற்றத்தையும் பற்றி இடைக்குன்றூர் கிழார் பாடுவதாகும். நெடுஞ்செழியனின் தந்தையும் (ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்) தாயும் (பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு), நெடுஞ்செழியனின் இளம் அகவையில் தவறிப் போக, இவன் தன் பகைவரோடு பதின்ம அகவையில் தலையாலங்கானத்தில் போரிட நேருகிறது. பையனாயும் அல்லாது, பெரியவனாயும் அல்லாது, ஒரு கலவையாய்க் காட்சியளிக்கும் இந்த நெடுஞ்செழியனின் தோற்றத்தைப் புலவர் இங்கே எடுத்துரைக்கிறார்.

"கிண்கிணி களைந்து கழலை இப்பொழுது தான் அணிந்திருக்கிறான்; சென்னியில் வேம்பின் தளிரும், உழிஞைக் கொடியும் இப்பொழுதுதான் குடுமி ஒழித்த முடியில் சூடிக் கொண்டிருக்கிறான்; வளையல் தவிர்த்த கைகளில் வில்லைப் பிடித்திருக்கிறான்; இப்பொழுது தேரின் மேல் நிற்கிறான்." என்று சொல்லிய புலவர் மேலும் சொல்லுகிறார்.

"................................................. தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே! பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனன்"

"மாலை அணிந்தருக்கிறான்; ஆனால் ஐம்படைத் தாலியைக் களையாது இருக்கிறானே! பால் இல்லாத உணவு இன்றுதான் உண்டிருக்கிறான்." என்று புலவர் சொல்லும் போது பதின்ம வயது வரை ஒரு சிறுவன் ஐம்படைத் தாலி அணிந்திருக்கும் நிலையை நுணுகி அறிகிறோம். பெரியவனாகிய பிறகு ஐம்படைத்தாலி களையப் படுவதும் கூட இங்கு குறிப்பால் உணர்த்தப் படுகிறது. இனி, அகநானூற்றில் வினைமுடித்து மீளும் தலைமகன் தன் தேர்ப்பாகற்குச் சொல்லுவதாய் வரும் பாட்டைப் பார்ப்போம்,

"முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி
வருகுவை ஆயின் தருகுவென் பால்" என
விலங்க அமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றி
திதலை அல்குல் எம் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே

இந்த வரிகள், மகனுக்காகப் பொய்சொல்லி நிலாவை அழைக்கும் தாய் நிலையைத் தேர்ப்பாகனுக்குத் தந்தை உரைப்பதாய்க் காட்சி காட்டும். "முகிழ்த்து ஒளிகாட்டும் மூன்றாம் பிறை நிலவே! பொன்னால் ஆன ஐம்படைத் தாலியை அணிந்திருக்கும் என்மகனோடு விளையாட நீயும் வந்தால் உனக்குப் பால்தருகிறேன் என்று புதல்வனுக்காக பொய்யுரைக்கிறாள் என் காதலி" - என்று சொல்லுகிறது இந்த வரிகள்.

ஆக பதின்மப் பருவத்திலும் இளைஞன் அணிந்து கொள்ளும் ஐம்படைத் தாலி, பால்குடிப் பருவத்திலேயே அவனுக்கு அணிவிக்கப் பட்டுவிடுகிறது. இனி திணைமாலை நூற்றைம்பதைப் பார்ப்போம். (இது சங்கம் மருவிய காலத்தில் கி.பி. 300-400 களில் எழுந்த நூல்)

வல்வருங் காணாய் வயங்கி முருக்கெலாம்
செல்வர் சிறார்க்குப்பொற் கொல்லர்போல் - நல்ல
பவளக் கொழுந்தின்மேற் பொன்தாலி பாஅய்த்
திகழக்கான்று இட்டன தேர்ந்து.

"செல்வச் சிறுவர்கள் அணியும் பொன்தாலியில் பொற்கொல்லர்கள் பவளம் இட்டுப் பொலிவித்தது போல, ஒளிவீசும் முருக்க மரத்தில் மலர்கள் பூத்திருக்கின்றன; பார்த்துக் கொள்ளம்மா! வேனிற் காலம் வந்தாயிற்று; இனிமேலும் நம் தலைவன் வேறிடத்தில் தங்கான்; உன்னைத் தேடி வந்துவிடுவான்" என்று தோழி தலைவிக்குச் சொல்லுகிறாளாம். இந்தப் பாட்டின் மூலம் செல்வச் சிறார்களின் தாலியில் சிவந்த பவளத்தைப் பொதிப்பதையும் நாம் அறிந்து கொள்ளுகிறோம். (மஞ்சளில் குங்குமப் பொட்டிடுவது இயற்கையில் நடக்கக் கூடியது தான். இன்றும் சில பெண்கள் கோயிலில் குங்குமத்தை எடுத்துத் தாலியில் இட்டுக் கொள்ளுகிறார்கள்.)

முடிவில் மணிமேகலையில் மலர்வனம் புக்க காதையில் 137-138 ஆம் வரிகள் முருகன் கோயில் திருவிழாவின் கால்கோள் காணப் புகும் தாய்மார்கள் தங்கள் செல்வச் சிறார்களை யானையின் முதுகில் வைத்துக் கொண்டு வரும் காட்சியைச் சொல்லுகின்றன. பொதுவாய் ஐந்து, ஆறு மாதத்தில் இருந்தே, பிள்ளைகளுக்கு வாய்நீர் கொட்டும். [ஏதொன்றையும் சுவையுணர்வால் அறியும் பருவம் அது.] காட்சியில் சொல்லப் படும் குழந்தைகள் பிறந்து எட்டுமாதம் ஆகியிருக்க வேண்டும். பேசத் தொடங்கும் நிலை. "எட்டு மாதத்தில் குளறிக் குளறி மெய்பெறாத மழலையிலும் வாய்நீர் கொட்டிக் கொள்வதால், அப்படிக் கொட்டும் வாய்நீர், பிள்ளைகள் போட்டிருந்த ஐம்படைத் தாலியை நனைக்கிறதாம்." என்ற பொருளில் இந்த வரிகள் அமைகின்றன.

"செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப"

ஆக, எட்டு மாதக் குழந்தை கூட, மணிமேகலைக் காலத்தில் (கி.பி.200) ஐம்படைத் தாலி போட்டிருக்கிறது. இதே போலப் பெரியாழ்வார் (கி.பி. 690-775), முதல்பத்து, திருத்தாலாட்டு 5 ம் பாட்டில் "எழிலார் திருமார்புக்கு ஏற்கும் இவையென்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு" என்று சொல்லித் தாலப் பருவத்திலேயே ஐம்படை அணிவதைச் சொல்லுவார். இன்னும் நிறைந்த முறையில் பெரிய திருமொழி 1:6:10 -இல், மங்கல ஐம்படை என்றே கூடச் சொல்லி மஞ்சள் நிறத்தோடு பெரியாழ்வார் ஐம்படைத் தாலியைத் தொடர்புறுத்திச் சொல்லுவார்.

ஆக, அகநானூற்றின் காலத்தை வைத்துப் பார்த்தால், தாலி என்ற சொல்லின் பொதுமைப் பயன்பாடு, 2400 ஆண்டுகளுக்கும் முந்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கி.மு.400 ல் இருந்து கி.பி.800 வரைக்கும் கிட்டத் தட்ட 1200 ஆண்டுகள் ஐம்படைத் தாலிப் பழக்கம் இருந்திருக்கிறது. அதற்கு அப்புறமும் இலக்கியச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியும். (அப்புறம் எப்படி பத்தாம் நூற்றாண்டில் தான் தாலி எழுந்தது என்று கூற்றுச் சரியாகும்?) இந்தக் ஐம்படைத்தாலிப் பழக்கம் 50 ஆண்டுகளுக்கு முன்வரைக்கும் கூட, சிவகங்கை மாவட்டத்தில் நகரத்தார் குமுகத்தில் ஆண் சிறாருக்கு எனத் தொடர்ந்து வந்திருக்கிறது. (இந்தக் காலத்தில் ஐம்படைத் தாலி என்பது தென்மாவட்டங்களில் வெறும் பொற்சங்கிலியாய் மாறிப் போனதும் உண்டு.)

பொதுவாய்த் தற்காப்புக் கலைகள் பயின்று வெளிவரும் வரை, தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் திறமை ஒரு இளைஞனுக்கு வரும் வரை, இந்த ஐம்படைத் தாலி என்பது அந்தக் காலத்தில் அணிவிக்கப் பெறும். இனிக் கலைகள் பயின்று வெளிவரும் நாள் என்பது எப்போது? அந்த நாளின் எச்சங்களும், சடங்குகளும் இன்று தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் மீந்து கிடக்கின்றன.

இதை அறிந்து கொள்ள மீண்டும் சிவகங்கை மாவட்டத்திற்கே அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ஒவ்வோர் ஆண்டின் கார்காலத்தில் (புரட்டாசி மாதத்தில்) ஒன்பான் இரவுகளுக்கு (நவராத்திரி) அப்புறம் வரும் பத்தாம் நாள் நிகழ்ச்சியில் ஐம்படைத் தாலி அணிந்த ஒவ்வொரு இளைஞரும் கிலுக்கி எடுத்து வாழையில் குத்தும் சடங்கு சிவகங்கை மாவட்டத்தில் உண்டு. (வடமொழியில் இந்த பத்தாம் நாளை விசயதசமி என்று சொல்லுவார்கள். சிவகங்கைப் பக்கமோ இதை மகார் நோன்பு என்பார்கள். காரைக்குடிக் கவிஞர் முடியரசன் இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். காரைக்குடியில் மகார்நோன்புப் பொட்டல் என்று ஊர்நடுவில் ஒரு பொட்டல் கூட இருக்கிறது. மக்கார்>மகார் என்ற சொல்லுக்கு இளையவர் என்ற பொருள் உண்டு. இளையவரில் இளம்பெண்களுக்கான சில சடங்குகள் பற்றி இங்கு நான் சொல்லப் போவதில்லை. கன்னி ஞாயிற்றில் கன்னியர் இறைவியை வழிபடுவது ஒருவகை. இங்கே நான் சொல்லப் புகுவது ஆண், பெண் என்ற இரு பாலருக்கும் பொதுவான இளையர் பற்றியது.)

ஒன்பான் இரவுகள் புரட்டாசி மாதம் அமையுவா (அமாவாசை) யில் தொடங்கி 10 ஆம் நாளில் ஊரில் உள்ள ஊருவலத் திருமேனிகள் (உர்ச்சவ விக்ரகங்கள்) அம்பு போடும் திருவிழா நடைபெறும். ஒன்பான் இரவின் முதல்நாளைக் கிளுக்கியெடுப்பு என்று சொல்லுவார்கள். கிளுக்கி என்பது குஞ்சம் வைத்த ஈட்டி/அம்பு போலத் தோற்றம் காட்டும் ஒரு படையாகும். இது செல்வநிலைக்குத் தக்க மரக்கிளுக்கியாக, பட்டுக் குஞ்சம் கட்டிய மரக்கிளுக்கியாக, இரும்புக் கிளுக்கியாக, வெள்ளிக் கிளுக்கியாக, ஏன் தங்கக் கிளுக்கியாகக் கூடவும் இருக்கலாம். மகார் நோன்பு விழா தொடங்கும் கிளுக்கியெடுப்பு நாளில் குடும்பத்தில் உள்ள இளையோர் (குறிப்பாக ஆண்பிள்ளைகள்) கையில் கிளுக்கியை எடுத்துக் கொண்டு சென்று கோயிலில் வழிபட்டுத் திரும்புவர்.

இந்தக் கிளுக்கி பள்ளிசெல்லும் சிறார்கள் ஒன்பானிரவுக் காலத்தில் ஒலித்துக் காசு திரட்டும் கிலுகிலுப்பையாகவும் பயன்படும். கிலுகிலுப்பை என்பது கிலிகெ (க), கிலுக(தெ); சிலிகெ (பட) என்று பல்வேறு மொழிகளில் கூறப்படும். கிளுக்கியின் அடிப்பொருள் குத்துதலே.

(குல்>குள்>கிள்; கிள்ளுதல் = குத்துதல்;
கிள்>கிள்ளி>கிளி = கூரிய அலகினால் கொத்தும் பறவை வகை; இதை மலையாளத்தில் கிள்ளு என்றும், கன்னடம், தெலுங்கில் கில்லு என்றும், தெலுங்கில் சிலுக்க என்றும் சொல்லுவார்கள்.
கில்<கீல்; கீலுதல்>கீளுதல் = கிழித்தல் (சூடா)
கெல்லுதல் = தோண்டுதல்
குற்றி = தண்டு;
குந்தம் = வேல்.
என்ற சொற்களை அறிந்தால் கிளுக்கியின் சொற்பிறப்பு புலப்படும்.)

கிளுக்கியை வைத்து மகார்நோன்பு - 10 ஆம் நாளில் வாழை மரத்தில் இளையோர் குத்துவார்கள். இங்கே வாழை மரம் என்பது விலங்குகளுக்குப் பகரியாய்ப் பயன்படுகிறது. (ஒரு காலத்தில் வேட்டைக்குப் போய் வெற்றிபெற்று விலங்கைக் கொன்று வந்ததை இங்கே நடாத்திக் காட்டுகிறார்கள். இவர்கள் வழிபடும் திருமேனிகளும் குதிரையில் எழுந்தருளி அம்பு போட்டு வெற்றியை விளம்பிக் காட்டுவதை ஓர்ந்து பார்க்கலாம்.)

காரின் கடைசிப் பாதி புரட்டாசி மாதம். இதில் வரும் ஒன்பது நாட்களைப் போலவே பின்பனியிலும் ஒன்பது நாட்கள் உண்டு. இந்தப் பின்பனிக் கால ஒன்பது நாட்களின் முடிவில் அந்தக் காலத்தில் பூந்தொடை விழா நடைபெறும். படைக்கலம் பயின்ற மழவ வீரர் அரங்கேறும் விழா என்பதே பூந்தொடை விழா எனப்படுகிறது. அகநானூறு 187-ல் படைக்கலப் பயிற்சி விழாவான பூந்தொடை விழா பேசப்படும். தொடை என்பது இங்கே அம்பு தொடுத்தலைக் குறிக்கும். போர் கருதித் தொடுக்காமல் பயிற்சி கருதித் தொடுப்பதனால் இது பூந்தொடை விழா ஆயிற்று. இளைஞர்களின் திறமை ஊரார் அறியச் பூந்தொடை விழா என்ற ஒன்றில் தான் சோதனை செய்யப்படும். அதைக் கொஞ்சம் விளக்கமாய்ப் பார்ப்போம்.

அந்தக் காலத்தில் ஆசான்கள் வழி நடந்த திண்ணைப் பள்ளிக் கூடங்களில் எண்ணும் எழுத்தோடு, களரிப் பயிற்று, வருமக்கலை, வில், வாள், சிலம்பம் போன்ற படைக்கலப் பயிற்சிகளும், பச்சிலை மருத்துவம் போன்ற இன்ன பிறவும் கூடச் சிறாருக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இந்தப் பயிற்சியைக் தொடங்கும் முகமாய் "கார்த்திகைப் புதுமைச் சடங்கை" நடத்தி, அதை ஊருக்குச் சொல்லி, பயிற்சிக் கூடத்திற்குப் பெற்றோர்கள் சிறாரை அனுப்பி வைப்பார்கள். குறிப்பிட்ட காலம் கலைகளைக் கற்ற இளையோர்கள், சில ஆண்டுகள் கழிந்த பின்னால், பின்பனிக் காலத்தில் வரும் ஒன்பான் இரவுகளுக்கு அடுத்த நாளில் நடைபெறும் பூந்தொடை விழாவில், தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்
புலம்புறும் கொல்லோ தோழி!

"பூந்தொடை விழாவின் முதல்நாளைப் போல புதுமணல் பரப்பிய திருநகர் முற்றம் தனிமையடையுமோ தோழி?"

இங்கே தொடை என்பது அம்பு தொடுத்தலைக் குறிக்கும். போர்கருதித் தொடுக்காமல் பயிற்சிகருதித் தொடுப்பதனால் புதிய தொடுப்பு இங்கே பூந்தொடை என்றாயிற்று. அதாவது "புதிய அம்பு தொடுக்கும் விழா, அம்பெய்கை" என்பது பூந்தொடை விழா ஆகும். பூ என்ற முன்னொட்டின் பொருட்பாட்டை இன்னும் இரு கூட்டுச் சொற்களின் மூலம் அறியலாம். பூங்குட்டி = ஈன்று சிறிது நேரமே (அல்லது நாட்களே) ஆன குட்டி; பூங்குழந்தை = பிறந்து சில நாட்களே ஆன குழந்தை. [தன் பயிற்சி அறிவைக் காட்டுதற்கு மாறாய், இளம் பிள்ளைகள் பள்ளிப்படிப்பு தொடங்கும் நாளாகவும் இந்தப் பத்தாம் நாள் அமையலாம்.]

பூந்தொடை விழாவையும் ஐம்படைத் தாலியையும் சேர்த்து எண்ணுமாப் போல, (பதின்ம வயது கூட அடையாத) இளைய வயதுக் கண்ணனை முன்னே காட்டித் தன்னை யசோதையாய் உருவகம் செய்து கொண்டு, பெரியாழ்வார் (கி.பி.690- 775) நாலாயிரப் பனுவலில் பெரிய திருமொழியில் இரண்டாம் பத்தில் ஆறாம் திருமொழியில் முதற்பாட்டில் சொல்லுவார்.

கண்ணன் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிற பையன்; மற்ற பிள்ளைகள் மாட்டு மந்தைகளை ஓட்டிச் செல்லுகிறார்கள்; தானும் போகவேண்டும் என்று அன்னையிடம் மாட்டுக்கோலைக் கேட்கிறான். "தான் பார்க்க வளர்ந்த பிள்ளை இப்பொழுது வீரக் கலைகளைக் கற்றுக் கொண்டாலும், வீட்டில் மாடுமேய்க்கும் கோல் எங்கிருக்கிறது என்று கூடத் தெரியாதிருக்கிறானே?" என்ற நக்கலோடு, குறும்புத் தனத்தோடு, "விளையாட்டு வில்லில் ஏற்றுதற்காய் வேலிக் கோலை ஒடித்து அம்பாக்கி, சின்ன ஐம்படைத் தாலியை (கொழுந்துத் தாலி - குழந்தைத் தாலி - பொன்நிறத் தாலி) பெரிய கழுத்தில் பூண்டு, தன் வாரி முடிந்த சிகையில் பின்பக்கமாய் மயிலிறகைச் செருகி, காலிகளை(கால்களால் இயங்கும் விலங்குகள் காலிகள்) ஓட்டிப் போக விரும்பும் இவனுக்கு, காக்கையே! கோலை எடுத்துக் கொண்டுவா! என் கருப்புப் பையனுக்குக் கோலை எடுத்துக் கொண்டுவா!" என்று கூரையில் கூடியிருக்கும் காக்கையைக் கூப்பிட்டு யசோதை பொய்விளையாட்டு ஆடுகிறாள். பாட்டில் கண்ணனைப் பற்றிய விவரிப்பு நம்மைக் கொள்ளை கொள்ளுகிறது. (வேறொன்றும் இல்லை, யசோதைக்கு தன் பிள்ளையின் பெருமை பிடிபடவில்லை.)

வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்தில் பூண்டு
பூலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு
காலிப்பின் போவார்க்கோர் கோல்கொண்டு வா
கடல் நிற வண்ணற்கோர் கோல்கொண்டு வா

ஐம்படைத் தாலி பற்றிய குறிப்புக்கள் சங்க காலம் தொட்டுப் பல இலக்கியங்களில் இருக்கின்றன. அவற்றை மேலும் எடுத்துச் சொல்லலாம்; கட்டுரை தான் விரியும். எனவே இனி, நாம் அடுத்த தாலி பற்றிப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.