Thursday, July 05, 2007

தாலி - 6

சென்ற இடுகையில், 6 மாதத்தில் இருந்து 8 மாதம் ஆகிய குழந்தை, தன் மழலைக்கு நடுவில், வாய்நீர் சிந்தி, ஐம்படைத்தாலியை நனைத்த காட்சியைக் கண்டோம். நம்மூர்த் தாய்மார்களின் அடுத்த எதிர்பார்ப்பு, "8 மாதப் பிள்ளை 8 நடை போடாதோ?" என்பதே. "தன் மகன் கண்ணனும் தளர்நடை நடக்க வேண்டும்" என்று தாய் யசோதை ஏங்குவதாக நாலாயிரப் பனுவலின் முதற் பத்தில் எட்டாம் பதிகத்தின் முதற்பாடலில் பெரியாழ்வார் கூறுகிறார். (பெரிய திருமொழி முழுதுமே அரிய சுவை கொண்டது; மாற்றுக் கருத்து கொண்டார் கூடப் பட்டர்பிரான் தமிழுக்கு இறங்கி வந்துதான் ஆகவேண்டும். :-))

செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல
நக்கசெந் துவர்வாய்த் திண்ணை மீதே நளிர்வெண்பல் முளையிலக
அக்குவடம் உடுத்(து) ஆமைத்தாலி பூண்ட அனந்த சயனன்
தக்கமா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ!

உண்மையான யசோதைக்கும், யசோதையைப் போல் பாவனை செய்கின்ற ஆழ்வாருக்கும் இடையே உள்ள ஒரு வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையான யசோதைக்கோ, "பின்னால் தன் மகன் என்னென்ன செய்வான், எப்படி ஆவான்" என்றெல்லாம் தெரியாது; ஆனால் கதைக்கு அப்புறம் வரும் ஆழ்வாருக்கோ எல்லாமே தெரியும்; தவிர "உலகத்துக்கே அருளும் பெருமாள், இங்கே தாரத்தில் இருந்து (தாரம் = உயர்ந்த நிலை. தாரப் பண் = இற்றைக்கால நிஷாதம்), அவலுக்கு (=கீழுக்கு, புவிக்கு) இறங்கி அவல்தாரமாய் (அவல் தாரம் > அவதாரம்), கண்ணனாய் வந்துள்ளார்" என்ற தொன்மத்தையும் தெரிந்தவர் பெரியாழ்வார். எனவே பெரியாழ்வார் பாடும் தளர்நடைப் பாட்டு, முன்னும் பின்னுமாய், வளர்ந்த நிலையும், குழந்தை நிலையுமாய்ப் பருவங்களையும், நிகழ்ச்சிகளையும், கலந்து கலந்தே தரும்.

இது போன்ற கலவைப் பாட்டுக்களை உரையாசிரியர்கள் கூட சற்று முன்பின்னாக மாறிப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. அப்படி உரை மாறிய பாட்டுத் தான் மேலே உள்ளது. மீண்டும் மீண்டும் மீள்வாசிப்பு செய்தால் ஒழியச் சரியான பொருள் நமக்குக் கிடைக்காது. (நான் சொல்லும் பொருளை, ஆழ்ந்த விண்ணவ நெறியில் தோய்ந்தவர்கள், "உனக்கென்ன தெரியும்" என்று தள்ளி ஒதுக்கலாம். பொதுவாகப் பெரியவாச்சான் பிள்ளைக்கு மாறி என்ன பொருள் சொன்னாலும் 'ஆழ்ந்து போன விண்ணவர்கள்' ஏற்க மாட்டார்கள்; வலுதியான - valid - சில காரணங்கள் பற்றியே நான் அவரிலிருந்து இங்கு மாறுபடுகிறேன்.)

மலங்கும் நேரமாகிய மாலை (தமிழர் வழக்கில் 18 மணியில் இருந்து 22 மணிவரை உள்ள நேரம் மாலை எனப்படும். 14 மணியில் இருந்து 18 மணி நேரம் என்பது எற்பாடு ஆகும்.) அப்பொழுது தான் தொடங்கி இருக்கிறது. செக்கச் சிவந்த வானம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கருத்துக் கொண்டு வருகிறது. கிடக்கை மட்டமான ஒரு மரத்து நுனிக்கொம்பு வழியே நிலவைப் பார்த்தால், அது சிறுபிறையாய் முளைத்துத் தோன்றுகிறது; அதே போன்ற காட்சியை ஆழ்வார் கண்ணனை வைத்து எடுத்துரைக்கிறார்.

"தாயைப் பார்த்து நகைக்கிறான் பிள்ளை; சிவந்த இதழ் திறந்து (செக்கர் வானத்திற்கு ஒப்பு), அதன் வாய் முரணைக்கு (நுனிக் கொம்புக்கு ஒப்பு) மேலே எழும் பல்வரிசை (சிறுபிறைக்கு ஒப்பு) முளைவிட்டு எழுந்து, ஒளி வீசுகிறது."

இதற்கு அப்புறம் "சங்குமணி மாலை (=அக்குவடம்) போட்ட கண்ணன் தளர் நடை போடமாட்டானோ?" என்று சொல்லிவிட்டுப் போகாமல், சட்டென்று பெருமாளின் பாற்கடல் தோற்றத்தை நினைவு கொள்ளுகிறார். முன்னால் சொன்னேனே, அதுபோல ஒரு பருவப் பிறழ்ச்சியில் ஆழ்வார் ஆழ்ந்து போகிறார். கண்ணனை எண்ணிப் பார்த்த கையோடு தொடர்ச்சியாய், "சங்குமணி மாலை போட்டு, ஆமைத் தாலிபூண்ட, முடிவற்ற அறிதுயில் கொள்ளும் தகை சிறந்த மணிவண்ணனை, வாசுதேவனை" நினைவு கூர்கிறார். இரண்டு காட்சிகளையும் பிணைத்து, "தாயார் அமர்ந்திருக்க அருகே கிடந்திருப்பவன் தானே கண்ணனாய் அவதரித்தான்" என்ற புரிதலில், பெருமாளையே தளர்நடை போட்டு வரும்படி பாட்டில் பெரியாழ்வார் கூப்பிட்டு விடுகிறார்.

இதைப் படித்த நமக்குக் கேள்வி சட்டென்று வருகிறது. நாலு பதிகத்தின் முன்னால் தானே (பெரிய திருமொழி 1.4.5)

எழிலார் திருமார்வுக்கு ஏற்கும் இவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுதுவ னாய்நின்றான் தாலேலோ!
தூமணி வண்ணனே தாலேலோ!!

என்று சொல்லி ஐம்படைத் தாலி போட்ட கண்ணனுக்கு, அதுவும் கொடைவள்ளல் குபேரன் (மேலே வரும் வயிச் சிரவணன்) தொழுது நிற்கத் தாலேலோ போட்டார்; இப்பொழுது எப்படி ஆழ்வார் வாக்கில் ஐம்படைத் தாலி திடீரென்று ஆமைத் தாலியாயிற்று?

"செக்கரிடை நுனிக்கொம்பில்...." என்ற பாட்டில் "அக்குவடம் உடுத்(து)ஐம்படையே பூண்ட அனந்த சயனன்" என்று சொன்னால் யாப்பு ஒன்றும் குறைபடப் போவதில்லையே? இருந்தாலும் ஆமைத்தாலி என்ற பயன்பாட்டை ஆழ்வார் ஏன் சொல்லுகிறார்? அது என்ன ஆமைத் தாலி? இங்கே ஏன் அது பேசப் படுகிறது? ஆமைத்தாலி என்பது ஐம்படைக்கு அப்புறம் ஆண்மகன் அணிகின்ற ஒரு தாலியா?

இந்தக் கேள்விச் சரங்களுக்கு இடையில், "தாலி பற்றிய பேச்சு வரும் பொழுதெல்லாம், இது காலம் காலமாக பின்பற்றப் படுவதாக சரடு விடுகிறார்கள். அதற்காகத்தான் இந்த பதிவு" என்ற மகாவின் முன்னிகையையும், "தேவையில்லாத தாலியும் உருப்படியான தகவல்களும்" என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கேள்வித் தொகுப்பையும் நினைவு கொள்வதைத் தவிர்க்க இயலாது. முற்போக்குச் சிந்தனையாரின் படி தாலி என்பது ஆண் பெண்ணுக்கு அணிவிக்கும் பெண்ணடிமைச் சின்னம் என்ற பரப்புரைக்கு மாறாய் இப்படி ஒரு கருத்து, அதுவும் ஆண்டாளின் தந்தையார் வெளியிடுவது நம்மைத் துணுக்குற வைக்கிறது.

"அய்யய்யோ? ஆண்மகன் தாலி போட்டிருந்தானா? அதுவும் தன் மனையாள் அருகிருக்க, இவன் தாலி போட்டிருந்தானா? அது என்ன முரண்? தாலியை எப்படி ஆண்மகனுக்கு அணிவிக்கிறார்கள்? என்னங்கடா இது கூத்து?"

ஆமை என்ற சொல்லைப் பற்றி ஒரு நீண்ட ஆய்வே செய்யாமல், "செக்கரிடை நுனிக்கொம்பில்...." என்ற பாடலின் மூன்றாவது வரிக்கருத்தைச் சட்டென்று பொருள் உணர முடியாது.

நான் சொல்லவரும் பொருள் உரையாசிரியர் கொடுத்த பொருளுக்கு மாறுபட்டது. இதைப் பலரும் ஏற்காது போகலாம். ஆனாலும் ஆழ்ந்து ஓர்ந்து பார்த்த பிறகு தான் சொல்லுகிறேன். மேலே கொடுத்துள்ள பெரிய திருமொழிக்கு உரை செய்யும் போது, உரையாசிரியருக்கும், பாடியவருக்கும் இடையே 600/700 ஆண்டுகள் ஆகிவிட்டன. பொதுவாய் உரையாசிரியர்கள் என்பவர்கள் ஆய்வாளர்கள் அல்ல. அவர்கள் காலத்தில், தங்களுக்குத் தெரிந்த செய்திகள், மரபுகள், பழக்க வழக்கங்களை ஒட்டி, அன்றிருந்த தொன்மங்களையும் கூடக் கொண்டுவந்து, உரை செய்திருக்கிறார்கள். அதனால், மூலத்திற்கும் உரைக்கும் இடையே கருத்துமுரண் ஏற்படலாம்; அது இயற்கை தான்.

காட்டாகத் திருக்குறளில் வரும் சமணக் கருத்தை பரிமேலகர் போன்ற விண்ணவ உரையாசிரியர் மாற்றிப் புரிந்து உரை செய்ய முடியும்; செய்திருக்கிறார். பரிமேலகர் காலத்தில் சமணம் பெரிதும் தமிழ்நாட்டில் வழக்கிழந்து போனது. மிகுந்த முயற்சியில்லாமல், சமணச் சொல்லாட்சிகளுக்கும், சொற்றொடர்களுக்கும் உரை சொல்லுவது கடினம். உரையாசிரியர் தம்மையும் அறியாமல் சிவநெறி, விண்ணவநெறி முறையில் உரை செய்ய முயலுவார். அதே போல ஆமைத் தாலி என்ற சொல்லின் பொருள் பெரியவாச்சான் பிள்ளையின் காலத்தில் பெரிதும் அறியப்படாமலே போயிருக்கலாம்.

எனவே, பெரியவாச்சான் பிள்ளை என்ற விண்ணவ நெறிக்காரர், ஆண் தாலி போட்டுக் கொள்ளும் பழக்கம் முற்றிலும் மாறிப் போன நிலையில், "இது ஏதோ இறைவன் பாற்கடலில் போட்டுக் கொண்ட நிலை" என்று உன்னிப் பார்த்து, ஆமை என்ற கடல்உயிரியோடு தொடர்புறுத்தி, ஆமையோட்டுத் தாலி என்ற தவறான புரிதலில் உரைசெய்யலாம். அது இன்றுவரை தொடர்ந்தும் வரலாம். இந்த உரைகளில் "ஆமையோடு" என்ற பொருட்பாடு "ஓடு" இல்லாமலே எப்படி வந்தது என்று எனக்குப் புரியவில்லை. தவிர ஆமையோட்டைப் பெருமாள் பாற்கடலில் அறிதுயிலின் போது ஏன் அணிய வேண்டும்? ஆமையின் சிறப்பு இங்கு என்ன? [கூர்ம அவதாரம் என்று சொல்வதெல்லாம் பொருந்தச் சொல்வதாகவே நான் கொள்ளுகிறேன். அதற்கான தரவுகள் பாடலில் இல்லை.]

பாட்டை ஆழ்ந்து படித்துப் பொருள் கொண்டால், ஆமை என்ற சொல்லிற்கு வேறு ஏதோ ஒரு பொருள் இருக்க வேண்டும் என்பது புலப்படும். அதைப் புரிந்து கொள்ளுமுன், மஞ்சள் நிறம் பற்றி நாம் இன்னொரு செய்தியைப் பார்க்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Vijayakumar Subburaj said...

ஆமைவடைக்கும் ஆமைக்கும் என்ன சம்பந்தம்? :)